ஜீன்ஸ், க்ரோமோசோம்ஸ் என்ற மரபு அணுக்கள் கண்டுபிடிப்பு மனித குலத்தின் எதிர்காலத்தையே தலைகீழாக மாற்றிவிடும் நிலையை உருவாக்கிவிட்டது. மனிதர்களில் இனி நான்கு வகைப் பிரிவினர்தான், மரபு அணு அறிவியல் ஆய்வுப்படி, இருப்பார்கள்.
A.C.G.T. என்ற நால்வகைப் பிரிவினர்தான் அறிவியல் மனிதவியல் ரீதியாக இருப்பார்கள்; மனித உடலில் ஏற்படும் நோய்களை -இல்லாமல் செய்யும் வண்ணம் 23 மரபு அணுக்கள் விந்தைகள் புரியும் விற்பன்னர்களாகிவிடும்.
மரணம் என்பது எதிர்காலத்தில் தடுக்கப்பட்டுவிடும்.
வாழ்வது எளிது, மாளுவது-மறைவது கடினம் என்ற விசித்திரத்தை நோக்கி உலகம் இன்று வேக நடை- வீறு நடை போடத்துவங்கியுள்ளது!
இதற்கு முன்னால் புதினங்கள் தீட்டிய அறிவியல் அறிஞர்கள் கண்ணோட்டத்தில் எப்படிப்பட்ட கற் பனைகள் கனிந்து வந்தனவோ அவைகள் நடைமுறை உண்மைகளாய் நானிலத்தில் நடனமாடத்துவங்கி விட்டன!
கடவுள், ஆத்மா, முற்பிறப்பு, எழு பிறப்பு என்பவைகள் எல்லாம் 'பொய்யாய், பழங்கதையாய்', கனவாகிப் போய்விட்டனவே!
நீண்ட ஆயுளைத் தரக் கடவுளுக்கு மனுப் போட்டு - பிரார்த்தனை மூலம் லஞ்சம் தரும் போக்குக்கு இனி இடமே இல்லை! வெளிச்சத்தைக் கண்ட இருள் இடந் தெரியாமல் ஆகிவிடுவதைப்போல, இந்த மரபு அணுப்புரட்சி (Genome) இதுவரை மனிதகுலம் சந்தித்த புரட்சிகளிலேயே சிகரத்தில் நிற்கும் சிந்தனை வயப்பட்ட செயலாக்கப் புரட்சி எனலாம்.
ஆங்கில நாளேட்டில் வெளிவந்த ஒரு பெட்டிச் செய்தி. அதை அப்படியே தருகிறேன். படியுங்கள்.
தினமும் ஒரு மாத்திரை சாப்பிட்டு, 110 வயது வரை உயிர் வாழ்வீர்!
நரைமுடி, வலிக்கும் மூட்டுகள், சுருங்கிய தோல் ஆகியவை வயது முதிர்ந்தவராக ஆகிக்கொண்டு வருவதில் உள்ள பெருந்துன்பங்கள், முதுமை அடை வதைத் தடுக்கும் அல்லது குறைந்த அளவு தாமதப் படுத்தும், அற்புத மருந்தைக் கண்டுபிடிக்க பழங்காலத்து ரசவாதிகளும், இந்நாள் அறிவியலாளரும் சோதனை களை மேற்கொண்டனர். அதனைத் தாங்கள் கண்டு பிடித்துவிட்டதாக ரஷ்ய அறிவியலாளர்கள் உரிமை கொண்டாடுகின்றனர்.
மனிதனின் வாழ்க்கையினை, 110 வயது வரை வைத்திருக்கும், முதுமையின் நோய்களை வராமல் நிறுத்தி வைக்கும், ஒரு கன்றின் உடல் உறுப்புகளிலிருந்து எடுக்கப்படும் புதுவகையான உயிரின ஒழுங்குமுறைப் பொருட்களை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள உயிரின ஒழுங்குமுறை முதுமை நோயியல் ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் அறிவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். நீண்ட ஆயுள் கொண்ட வாழ்க்கை யினை நீடிக்கச் செய்வதுடன், இவ்வேதியியற் பொருட் கள் மனித இனப்பெருக்க சுழற்சி முறையினை விரிவு படுத்தி, மனிதர்களின் செயலாற்றுத் திறன் நிறைந்த ஆண்டுகளைக் கூட்டுகிறது எனவும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
விளாடிமிர் காவின்சன் என்ற முதுமைநோய் ஆய்வியலாளர் தனது ஆய்வுக் குழுவினை கடந்த 25 ஆண்டுகளாக வழிநடத்திச் சென்று, எலிகளின்மீது பல தொடர்ந்த சோதனைகளைச் செய்ததன் மூலம், இப்புதிய வேதியியற் பொருட்களின் ஆற்றலை நிரூபித்துள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள முதுமை நோயியல் உலகக் கருத்தரங்கில் தங்களது ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்தனர். ‘‘நானும் எனது தோழர்களும் எலிகளின்மீது மேற்கொண்ட எண்ணற்ற சோதனைகள், இம்மருந்தினை உட்கொண்டபின், விலங்குகளின் சராசரி ஆயுட்காலம் 30 முதல் 40 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது என்பதை நிரூபித் துள்ளன. அதனை மனிதர்களின் வயதாக மாற்றிக் கணக்கிட்டால், 60 முதல் 70 வயது வரை ஆயுளைப் பெருக்கம் செய்ய இயலும் எனக்கூறலாம்." என்று ஆய்வு அறிக்கையில் குறிப்பட்டுள்ளனர்.
எலிகளின் மீது வெற்றிகரமாக இந்த மருந்தினை சோதித்த பின்னர், தானாக விரும்பி முன்வரும் மனிதர் களுக்கு இம்மருந்து அளிக்கப்பட்டது, எந்தவிதமான பக்க விளைவுகளும் இன்றி மருந்து வெற்றிகரமாக செயல்பட்டது நிரூபிக்கப்பட்டது. ரஷியாவின் எரிசக்தி ஏகபோக நிறுவனமான காஸ்ப்ரோம், வெற்றிகரமான சோதனைகளுக்குப்பின், இந்தப் புதிய மருந்தினைத் தனது பணியாளர்களுக்கு அளிக்கத் தொடங்கி உள்ளது. காஸ்ப்ரோமின் உடல்நலத்துறைத் தலைவர் செர்ஜி ஓகோன்டிகோவ், மருந்தினைப் பயன்படுத்தியவர்கள் அனைவரும் நல்ல பயன் பெற்றுள்ளனர் என்று கூறினார். -
இந்தப் புது மாத்திரையை மனிதன் விழுங்கிவிட்டால் அதுவே அவனுக்கு 110 ஆண்டு ஆயுள் வளர்ச்சிக்கு வழிவகுத்துவிடுகிறது என்பது மனித குலத்தை மகிழ்ச்சிக் கடலில் தள்ளும் செய்தி அல்லவா?
மனித ஆயுள் வளர்ச்சிக்கும், கடவுளுக்கும் இனி வரும் உலகில் எந்தவித சம்பந்தமும் இருக்காது என்று தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்துச் சொன்ன அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள்தான் எத்தகைய அறிவியல் சிந்தனையாளர் பார்த்தீர்களா?
பரிசோதனைக் குழாய் குழந்தை என்பதைக்கூட அவர் 65 ஆண்டுகளுக்கு முன்பே உரைத்ததுதான்! அதனால்தான் அவரது மண்டைச் சுரப்பை உலகம் தொழுகிறது!
- கி.வீரமணி
-விடுதலை,1.12.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக