பக்கங்கள்

திங்கள், 24 ஜூன், 2019

மாவீரன் பகத்சிங்கும் - தந்தை பெரியாரும்!



80 ஆண்டுகளுக்கு முன்பே, தந்தை பெரியார் அவர்கள் 'குடிஅரசு' வார ஏடு துவக்கி 5 ஆண்டுகளுக்குள் இரண்டு புத்தக வெளியீட்டுப் பதிப்பகங்களையும் நடத்தி, ஏராளமான நூல்களை வெளியிட்டு, மக்களுக்கு அறிவு கொளுத்தினார்.

தமிழ்நாடு அறிந்திராதவைகளை, முற் போக்குக் கருத்துக்களை - எளிய தமிழாக்கம் மூலம் வெளிநாட்டு, வடநாட்டு அறிஞர்களின் நூல்களையெல்லாம்கூட சிறுசிறு வெளியீடு களாக வெளியிட்டார்!

கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை அறிக்கை (Communist Manifesto - Marx and Engels)  மார்க்ஸ், ஏங்கல்ஸ் எழுதியதை பச்சை அட்டைக் குடிஅரசில் வெளியிட்டார்!  (4.10.1931, 11.10.1931, 18.10.1931, 1.11.1931 ஆகிய 'குடிஅரசு' இதழ்களில் வெளியிடப்பட்டன)

அவர் சோவியத் ரஷ்யாவுக்கு 1932இல் செல்வதற்கு முன்பே வெளியிட்டார் என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய அதிசய உண்மை!

அதுபோல டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் லாகூர் ஜாட் -பட் - தோடக் மண்டல் ஆண்டு விழாவின் நிகழ்த்தப்படாத ஆங்கில உரையை தமிழில் மொழிபெயர்த்து, 1934இல் 'ஜாதியை ஒழிக்கும் வழி"  (The Annihilation of Caste) எனும் நூலினை 4 அணா விலையில் வெளி யிட்டுப் பரப்பினார். தமிழ்நாட்டு வாசகர்கள் அதன் மூலமே அம்பேத்கர் பற்றி அறிமுகமாகும் நல்வாய்ப்பும் கிடைத்தது!

23லு வயது வரை வாழ்ந்து புரட்சிகர இளைஞனாக இந்த தேசத்திற்குத் தன்னைப் ஒப்படைத்துத் தூக்கு மேடையை முத்த மிட்டவன் இளைஞன் மாவீரன் பகத்சிங்!

அவர் சிறைச்சாலையில் எழுதிய ஒரு முக்கிய ஆங்கில நூல் - "நான் ஏன் நாத்திகன் ஆனேன்?"

பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து, மிகவும் உணர்ச்சியும், அறிவும் பொங்கும் ஒரு அற்புதமான தலையங்கத்தை எழுதியவர் தந்தை பெரியார்! (29.3.1931 'குடிஅரசு')

காந்தியார்கூட பகத்சிங்கை ஆதரிக்காத நிலையில், காங்கிரசை விட்டு வெளியேறி  சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார் பகத்சிங்கைப் பாராட்டி எழுதியதோடு,

சிறையில் பகத்சிங் எழுதிய "நான் ஏன் நாத்திகன் ஆனேன்?" என்ற நூலை ஆங்கில அரசு தடை செய்த நிலையில் - தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் மூலம் தமிழில் மொழி பெயர்த்து, 'குடிஅரசு' வெளியீடாக வெளியிட்டு பரப்பினார்கள் 1934இல் -

அந்த நூலைத் தடை செய்ததோடு, பிரிட் டிஷ் அரசு குடிஅரசு ஏட்டின்மீது  ஆசிரியர் - பதிப்பாளர் என்ற முறையில்  ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள்மீதும், மொழிபெயர்ப் பாளர் என்ற முறையில் தோழர் ப. ஜீவானந்தம் மீதும்   வழக்குப் போட்டு கைது செய்தது.

பல்லாயிரக்கணக்கில் பரவியது அந்நூல்! இது பழைய செய்தி. ஆனால் இதுபற்றிய  ஒரு புதிய தகவல் இப்பொழுது  கிடைத்திருக்கிறது!

22.6.2019 அன்று தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினரும், திமுகவின் நாடாளுமன்றக் குழு பொருளாளரும், மேனாள் மத்திய இணை நிதியமைச்சருமான தோழர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் அவர்கள் டில்லியிலிருந்து திரும்பி வரும் போது வாங்கிப் படித்த ஒரு நூலினை எனக்கும் வாங்கி அனுப்பி, தொலைப்பேசியில் அதன் முக்கியத்துவம் பற்றியும் கூறினார்!

'The Bhagat Singh Reader' - Edited by Chaman Lal

- என்பது 2019இல் வெளியாகி உள்ளது. மாவீரன் பகத்சிங் எழுதிய கட்டுரைகள், நூல்கள் (பல மொழிகளில்) எல்லாவற்றையும் தொகுத்து ஒரே நூலாக வந்துள்ளது.

அதில்  நூலுக்கு அறிமுக உரை எழுதிய தொகுப்பாசிரியர் சமன்லால் அவர்கள்,

"It is not only in the recent times that Bhagat Singh has been described as a socialist or Marxist revolutionary; the papers in those days also described him as such! There is an interesting true story relating to 'Why I am an Atheist', which was first published in the 27 September 1931 issue in the 'People' weekly, edited by Lala Feroze Chand. Comrade P. Jeevanandam was asked to translate this essay in Tamil by E.V. Ramaswamy, popularly known as Periyar, as early as in 1934, which was published in his journal 'Kudiyarasu', with Periyar's own tribute to Bhagat Singh. During the 1947 Partition, issues of the 'People' could not reach India for many years; this essay was banned later by the British colonial government. During those times, someone retranslated this essay from Tamil to English, which still continues to be in circulation on many websites and from this, many further translations were done! Websites like Marxist-Leninist.org continue with the retranslated version; and in Pakistan some translations in Punjabi were done from the retranslated version. The original version of the 'People' is now preserved at the Nehru Memorial Museum and Library, and has been reproduced in a scanned format in my book 'Understanding Bhagat Singh', published in 2013."


"இந்த 'நான் ஏன் நாத்திகன் ஆனேன்?' என்று தந்தை பெரியார் மொழிபெயர்த்து வெளி யிட்டது -  அக்காலத்தில் 'பீப்பிள்' ('People') என்ற 1931 செப்டம்பர் 27ஆம் தேதி  (27.9.1931) வெளியான ஆங்கில வார ஏட்டில் லாலா பெரோஸ் சந்த் என்பவரால் வெளியிடப்பட்டதை தோழர் ப. ஜீவானந்தத்தை வைத்து தமிழில் மொழிபெயர்த்து பெரியார் ஈ.வெ. ராமசாமி வெளியிட்டார்! அதோடு 'குடிஅரசில்' பகத்சிங்கின் தியாகத்தை - கொள்கை உணர்வைப் பாராட் டியும் எழுதியிருந்தார். அக்கால பிரிட்டிஷ் அரசால் அது தடை செய்யப்பட்டதால், 1947இல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் காரண மாக ஏற்பட்ட பல சூழ்நிலையில்  'People' என்ற இந்த வார ஏட்டில் பகத்சிங் எழுதியதை  கண்டுபிடிக்க இயலாத நிலை.

தமிழில் தந்தை பெரியார் வெளியிட்ட 'நான் ஏன் நாத்திகன் ஆனேன்?' நூலிலிருந்து ஆங்கிலத்திற்கு மீண்டும் மொழி பெயர்த்து, அதையே சுற்றுக்கு அனுப்பி, வெளியிட்ட நிலையும் ஏற்பட்டது!

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வெளியிட்ட இந்நூல் கிடைத்ததால், மீண்டும் ஆங்கில மொழி பெயர்ப்புக்கு வாய்ப்பு ஏற்படாது என்றும், அந்த ஆங்கில மொழிபெயர்ப்புதான் இன்றும் இணையதளங்களிலும் பயன்படுத்தப் படுகின்றன" என்றும் முற்பகுதியில் சமன்லால் குறிப்பிட்டுள்ளார்.

"இப்போது 'மூலம்' (Original)  கிடைத்து நேரு நினைவு மியூசிய - நூலகத்தில் உள்ளது. அதை மறுபடியும் ஸ்கேன் செய்தே, 'UnderStanding Bhagat Singh' என்று 2013 இல் எனது நூல் வெளி வந்துள்ளது" என்று குறிப்பிடுகிறார்!

தந்தை பெரியார் ஒரு தொலைநோக்காளர் என்பது இதிலிருந்தும்கூட விளங்குகிறது அல்லவா?

அருமை நண்பர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் - அவர் எனக்கு ஓர் அருமையான புத்தக நண்பரும்கூட - அவர்களுக்கு மிக்க நன்றி!

- விடுதலை நாளேடு, 24.6.19

வெள்ளி, 21 ஜூன், 2019

நெஞ்சுவலியா? இதோ ஓர் ஆலோசனை!



கோவையில் உள்ள பிரபல மருத்துவமனை K.G. மருத்துவமனை.

அதன் தலைவர் டாக்டர் K.G. பக்தவத்சலம் அவர்கள் ஆவார்கள்.

சிறந்த மாமனிதர். எவரிடமும் பான்மை யோடும், வாஞ்சையோடும், அன்போடும் பழகக் கூடியவர்.

பல ஆண்டுகளுக்கு முன் கோவையில் எனக்கு இதய நோய் தாக்குதல் ஏற்பட்டபோது சிகிச்சை தந்து காப்பாற்றிய பெருமகன் அவரும், அவரது மருத்துவமனை டாக்டர்களும்.

பொதுவாகவே மருத்துவமனை அறிவுரைகள் பயனுறு வகையில் வழங்கி, மக்கள் நலம் காக்கும் மருத்துவ மாமணி அவர்.

அவர் பேசி, Whatsapp இல் ஒரு 'வீடியோ' வந்தது. ஒவ்வொருவருக்கும் பயனுறு அறிவுரை. எவரும் எளிதில் செய்யக்கூடிய நடைமுறைக்கு உகந்தது.

அதை அவர் பேசியபடியே தருகிறோம். படித்துப் பயன் பெறுங்கள்.

"வணக்கம் சார்!

என்ன சார், சட்டைப் பாக்கெட்டில் கைவிடு கிறீர்கள்?

ஓ! நான் சொன்னபடி,  'லோடிங் டோஸ்' வைத்திருக்கிறீரா?.

இந்த லோடிங் டோஸ் என்பது மாத்திரை களாகும்.

அந்த மாத்திரைகள் உயிர்க் காக்கும் மாத்தி ரைகள்.

மூன்று விதமான மாத்திரைகள் அதில் இருக்கின்றன. எல்லா மாத்திரைகளும் சேர்த்து 40 ரூபாய்க்குள்தான் அடக்கம்.

1.Disprin 325 mg-1 Tablet
2. Atorvastatin 80mg- 1 Tablet
3. Clopitab 150mg- 2 Tablet


இந்த மூன்று மாத்திரைகளும் சேர்ந்து 40 ரூபாய்தான்!

உயிர்க் காக்கும் உத்தமமான மாத்திரைகள். இதற்குப் பெயர் லோடிங் டோஸ்.

ஆர்ட் அட்டாக் வருகிறது; நெஞ்சு வலிக்கிறது. டாக்டரைப் பார்ப்பதற்கு இரண்டு மணிநேரம் ஆகும் அல்லவா! அப்பொழுது இந்த மாத்திரையை பாக்கெட்டில் வைத்திருந்தால் சாப்பிடலாம்.

யாருக்கு ஆர்ட் அட்டாக் வரும்?

Who will get Heart Attack?
Who are all the people? who are the vulnerable people?
Those who Smoke
Those you High Blood Pressure?
Those people you have Diabete Mellitus
Those you High Cholesterol
Bad Cholesterol அதிகமாக இருந்தால்  Heart Attack வரும்.


புகைப் பழக்கம் இருந்தால் Heart Attack வரும்.

நீரிழிவு நோய் இருந்தால் Heart Attack வரும்.

40 வயதிற்குமேல் Heart Attack வரும்.

அதிகமாக மனக்கவலை இருக்கிறதா, Heart Attack வரும்.

நெஞ்சு வலி வரும்பொழுதே, வாயுத் தொல்லை இருக்கும்பொழுதே, வலி கைக்குப் போகும்பொழுதே, தலைசுற்றும் பொழுதோ

மருத்துவரைப் பார்ப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்குமேல் ஆகலாம். அல்லது நீங்கள் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் பொழுதே மேற்கண்டவைகள் நிகழ்ந்தால், உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், நெஞ்சு வலி வந்துவிடு கிறது - அல்லது விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள், அப்பொழுது உங்களுக்கு நெஞ்சு வலி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர் சொல்கிறார். விமானப் பணிப்பெண்ணோ, பேருந்து நடத் துனரோ மாத்திரை கொடுப்பார்களா?

அப்படியென்றால், மேற்சொன்ன லோடிங் டோஸ் மாத்திரைகளை உங்களுடைய சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்தால், அதை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரைக் கொண்டு மாத்திரைகளைப் போட்டீர்கள் என்றால், ஒருமூன்று மணி நேரத்திற்கு உங்களுடைய உயிருக்கு ஆபத்து இல்லை.

நீங்கள் கேட்கலாம், சார் நாங்கள் டாக்டர் இல்லையே! நெஞ்சு வலி வந்திருக்கிறது என்று எப்படி கண்டுபிடிப்பது? என்று கேட்கலாம்.

உங்களுக்கு நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் இருக்கிறது, புகைப் பழக்கம் இருக்கிறது, வயது 40 ஆகிறது. ஏற்கெனவே நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந் தீர்கள். உங்களுக்கு  Heart Attack வருவதற்கான வாய்ப்பு நூறு சதவிகிதம் இருக்கிறது. அப்படி யென்றால்,   Heart Attack வந்த சமயத்தில் மருத்துவமனைக்கு வருவதற்கு ஒரு மூன்று மணிநேரம் ஆகும்.

லோடிங் டோஸ் மாத்திரையை நீங்கள் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்தால், அதை நீங்கள் சாப்பிட்டிருந்தால், உங்களுடைய வலி குறையும். மருத்துவமனைக்குச் சென்று, மருத்து வம் ஆரம்பிப்பதற்கு கொஞ்சம் நேரம் ஆனாலும், இரண்டு மணிநேரம் உங்களுக்கு போனஸ் டைம் கிடைக்கிறது. அந்த லோடிங் டோஸ் உங்களைக் காப்பாற்றும்.

It is the First Aid Tablet
It will give you time for you to reach good hospital
This is life saving Tablet


அமெரிக்காவில் உள்ளவர்கள் எல்லோரும் இந்த மாத்திரைகளை சட்டைப் பாக்கெட்டில் வைத்திருப்பார்கள்.

நம்முடைய சட்டைப் பாக்கெட்டில் பேனா, பாக்கெட் டைரி, கிரெடிட் கார்டு, அடையாள அட்டை போன்றவற்றை வைத்திருக்கிறோம் அல்லவா, அதுபோன்று லோடிங் டோசை பாக் கெட்டில் வைத்திருந்தீர்கள் என்றால், உங்களுக் குப் பயன்படுகிறதோ இல்லையோ, மற்றவர் களுக்கும் பயன்படும்.

நெஞ்சுவலி வந்தவர்களுக்கு அந்த மாத்தி ரைகளைக் கொடுத்தீர்கள் என்றால், அவருக்கு உதவிகரமாக இருக்கும்.

Loading Dose is the Subject
Loading Dose Saves Life


வாழ்த்துகள், நன்றி!"

நன்றே செய்வோம்; அதை இன்றே செய் வோம்'' என்பதற்கு ஏற்ப அந்த அறிவுரையை செயல்படுத்துங்கள் - நமக்கு மட்டுமல்ல -மற்றவர் களும்கூட பயன்பெறக் கூடும் அல்லவா?

- விடுதலை நாளேடு, !9.6.19

புதன், 19 ஜூன், 2019

புத்தரின் பகுத்தறிவு வாழ்க்கை நெறி (6)



புத்தருடைய வாழ்க்கை நெறியில் - முதுமை என்பதைவிட முதிர்ச்சியே முக்கியத்துவம் பெறுகிறது!  வயதாவது என்பது நாம் பிறந்த அன்றே துவங்கிய இயற்கை நிகழ்வு.

நம்மை முதுமை தாக்குவதற்கு முன்பே, நமது வாழ்வின் குறிக்கோள், நோக்கம் என்பதை நோக்கிய நம் பயணம் வெகு சீராக அமைதல் வேண்டும்.

முதுமையின் காரணமான செயலற்ற தன்மைதான் மரணம்! உற்சாகத்துடன், பயணம் செய்பவர் களுக்கு தூரம் தொலை தூரமாகத் தெரியாது; களைப்பு, சோர்வு, சலிப்பு, உற்சாகமின்மையோடு நடப்பவ ருக்கோ, ஓடுபவருக்கோ தான் சாலைகள் வெகு நீண்டதாகத் தெரியும் - இல்லையா?

எப்படி ஒரு விவசாயி தனது பயிர் களுக்குப் பாய்ச்ச வேண்டிய நீரை பாத்தி கட்டி, பகுத்துப் பிரித்து, அனைத்து நாற்றுக்களுக்கும் நீர் வசதி கிடைக்கப்படும் நிலையை உருவாக்குகிறாரோ, அதுபோலத் தான், நல்ல புத்திமான் தனது இலக்கில் சரியாக பயணிக்க வேண்டியவற்றைப் பகுத்து அறிந்து எண்ணவோட்டத்தை செலுத்திவெற்றியை அடைகிறார்!

நல்ல தச்சன் எப்படி மரங்களை சரியாக அறுத்து திட்டமிட்டு செதுக்கி, விரும்பும் பொருட்களை கலைநயத்தோடு செய்கிறாரோ, அதுபோல கூர்மையான புத்தியைச் செலுத்து வோர் தங்கள் மனதைச் சிந்தவிடாமல்  செயலாகச் செதுக்கி வெற்றி பெறுகிறார்கள்!

பக்குவமற்ற - சரியான முதிர்ச்சியற்ற மனிதன் என்பவன் இயல்பாகவே சுயநல வாதியாக அமைந்து விடுகின்றான்!

சுயநலம் - முதலில், பரிசு பெற்றவனைப் போல அவர் மகிழ்வு கொள்ளச் செய்து - இறுதியில் மன அமைதியை இழந்து, துன்பம், துயரம் எல்லாவற்றிற்கும் ஆன படுகுழியில் நம்மைத் தள்ளி விடுகிறது என்பதே மனித வாழ்வின் அனுபவம் ஆகும்!

சிறந்த புத்திசாலியும், பாராட்டத்தகுந்த, போற்றத்தக்க குணங்களைக் கொண்ட குணவான்களாகவும் வாழ்வில் எப்போதும் திகழ வேண்டும் என்று விரும்பும் ஒருவர் அதை அடைய வழி என்ன?

இதோ புத்தர் விடையளிக்கிறார்! அதோடு எளிய வழி முறையும்கூட கூறுகிறார்!

"எப்போதும் உழைத்துக் கொண்டே இருங்கள்! பயனற்ற வார்த்தைகளை ஒரு போதும் பேசாதீர்கள்!!"என்கிறார் புத்தர்.

நன்மை, தீமை, இன்பம், துன்பம் போன்ற ஒன்றுக்கொன்று எதிர்மறையான வாய்ப்பு களும், நிகழ்வுகளும் வாழ்க்கையில் ஏற்படும் போதெல்லாம் ஒரேவித மனநிலை - தந்தை பெரியார் கூற்றை நாம் முன்பே சுட்டிக் காட்டியுள்ளோம்! "வாழ்க" என்ற போதும் மகிழாதே! துள்ளாதே! ஒழிக என்ற போதும் கலங்காதே! - கண்ணீர் விடாதே! புன்னகை யோடு சம மனநிலையோடு அவைகளை ஏற்கப் பழகிக் கொள்ளுங்கள்!

அது அவ்வளவு எளிதல்ல. நீண்ட கால மனப்பயிற்சி, பக்குவம், முதிர்ச்சி காரண மாகவே சாத்தியப்படும்!

என்னைப் பொறுத்தவரை, அதிகமான மகிழ்ச்சி செய்தி வரும்போது, அதன் விளைவு கண்டு மகிழும் அதே நேரத்தில், அடுத்து வரவிருக்கும் துன்ப, துயர அதிர்ச்சி செய்திகளுக்கும் ஆயத்தமாகவே இருப்பேன்!

தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவ னாக விழுமிய பலன்களில் இதுவும் ஒன்று!

இமயமே பெயர்ந்துவிழப் போகிறது சற்று நேரத்தில் என்ற செய்தி வந்தால் - பதறுவதனால் அதை சரிப்படுத்தித் தடுத்திட முடியுமா?

விழுந்தபிறகு ஏற்படுத்திய சேதாரத்திற்கு மீள் நடவடிக்கையை எப்படி மேற்கொள் ளுவது? எதற்கு முன்னுரிமை? என்று பகுத் தறிவுக்கு முழு வேலை கொடுத்து, பட்டறிவினையும் துணை கொண்டு, ஒத்தறிவு மனப் பான்மையுடன் அணுகி, நம்மைக் காப்பாற்றிக் கொள்வதைவிட, நம் சமுதாயத்தை, நாட்டை, சக மக்களை அதன் தீய விளைவிலிருந்து மீட்டெடுக்க நமது எளிய பங்கு எப்படி அமைய வேண்டும் என்பதுதானேசரியான அணுகு முறையாக இருக்க முடியும்.

அனுபவத்தில் வெற்றியையும் அது தந்தது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு - டெல்லி பாம் நொலியில் பழைய பெரியார் மய்யம் அநியாய மாக சட்ட விரோதமாக இடித்ததும்; அதை எதிர்கொண்டு மீண்டும் புதிய பெரியார் மய்யம் எழுந்ததும் தான்  இல்லையா  தோழர்களே!

- விடுதலை நாளேடு, 13.6.19

புத்தரின் பகுத்தறிவு வாழ்க்கை நெறி (5)

புத்தர் அறிவுறுத்துகிறார்:



"கட்டுப்பாடான ஒழுங்கு முறையோடு இயங்கும் உள்ளத்திற்கும், ஒழுங்கற்று, கட்டுப் பாடின்றி செயல்படும் உள்ளத்திற்கும் - மனதிற் கும் உள்ள வேறுபாடு பற்றி ஒவ்வொருவரும் சிந்தித்து உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒழுங்கற்ற மனதினால் ஏற்படக் கூடிய கேடுகள் - நம் வாழ்வில் மிக மிக அதிகம்; எந்த அளவு அந்தக் கேடுகள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் எதிரிகளும், உங்களை மனதார வெறுப்பவர்களும் எவ் வளவு கேடு செய்வார்களோ அதைவிட பன்மடங்கு உங்களுக்கு உள்ளே இருந்தே ஏற்படக் கூடும்; மற்றவர்கள் வெளியே இருந்து கேடு செய்யும் பகைவர்கள்; செம்மையற்ற மனமோ உள்ளிருந்தே கெடுக்கும் என்பதை அறிக.

அதே நேரத்தில் முறை யாக கட்டுப் பாட்டுடன், ஒழுங்கு முறைக்கு உட்பட்டு இயங் கும் மனம் செய்யும் நன்மை களே அநேகம்! அநேகம்!!



உங்கள் தாய் - தந்தையர் உங்கள்பால் அக்கறை கொண்டு செய்யும் நன்மை களை விட மிக அதிகமான பங்களிப்பு மேலே காட்டிய ஒழுங்குடன் இயங்கும் மனதின் சிறப்புக் காணிக் கையாகும்! யாருக்கும் கெடுதி செய்யாத அறி வார்ந்த நற்செயல்கள் நல்ல பூக்களின் நறுமணவாசம் எப்படி வீசிக் கொண்டே உள்ளதோ, அது போன்று அதன் விற்பனை மற்றவர்களிடையே பரப்புவது உறுதி!

இதன் பயனுறு நல்ல விளைவுகள் அடுத் தடுத்த தலைமுறைகளையும் நல்வழிப்படுத்த உதவும் என்பதே முக்கிய கருத்து - மூதுரை என்பதாகும்.

தேனீக்கள் மலர்களிலிருந்து தேனைச் சேகரிக்கின்றன; பிறருக்கு அவை தொல்லை கொடுப்பதில்லை. (பிறர் அவைகளைத் தொந் தரவு செய்து அவைகளின் உழைப்பைச் சுரண்டி திருட முயலும்போதுதானே அவை தங்களது உடமையை, உழைப்பை, உரிமையை நிலை நாட்ட தங்களிடமிருக்கும் ஆயுதத்தைப் பிரயோகப் படுத்தி - கொட்டுகின்றன! தேன்கூட்டைக் கலைக்க முயலும் மனிதர்களைத் தங்களின் எதிரிகளாகக் கருதி எதிர்த்துப் போர் புரிய முற் படுவது எப்படி தவறாகும்?)

அவை தேனைச் சேகரிக்கும் போது, செடிகளுக்குக்கூட தொந்தரவு இல்லாமல் அல்லவா மிக லாவகமாகத் தேனைச் சேகரிக் கின்றன! - இல்லையா?

அதுபோல இயற்கையை தொந்தரவு செய்யாமல் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்" என்றார்.

2500 ஆண்டுகளுக்கு முன்னரே சுற்றுச் சூழலை மனிதர்கள் பாதுகாக்க உரிய மிக முக்கிய அறிவுரை அல்லவா இது!

பலர் எதை போதிக்கிறார்களோ அதை அவர்கள் வாழ்வில் கடைப்பிடிப்பதே இல்லை. சொல்வதை செய்யாத சோரம் போன அந்த மனித வாழ்வு எப்படிப்பட்டது தெரியுமா?

புத்தர் அறிவுச் சாட்டையை - தனது புத்தி கூர்மையால் கடிதோச்சி மெல்ல எறிகிறார்!

"பல வண்ண வண்ண மலர்களுக்கு மணம் இல்லை என்றால் எப்படியோ அப்படித்தான் அத்தகையவர்கள் வாழ்வு. காலையில் பூத்து மாலையில் மடிந்து விடும் வாழ்வு.

ஆனால் சொன்னதை செய்வது, போதிப் பதை சாதிப்பது, கொள்கைகளைப் பின்பற்றுவது வண்ணங்களுடன் எளிதில் மாறாத நறுமணம் உள்ள மலர்களைப் போன்றது" என்கிறார்!

இந்த உவமை நயத்தில்  ஆழ்ந்த கருத்து ஒன்று உண்டு; வண்ணங்கள் பார்த்த பிறகே ஈர்ப்புக்குரியவை; மனமோ, நற்வாசனையை பார்க்காமலே எட்டு திசையிலும் பரவி காணுமுன்பே ஈர்த்து அனுபவிக்க மக்களைக் கூட்டும் அல்லவா! பார்க்காமலே ஈர்ப்பதுதான் புகழுக்கு முன்னுரை; புரிந்து கொள்வோம்.

(புத்தர் வருவார்)

 - விடுதலை நாளேடு, 11.6.19

புத்தரின் பகுத்தறிவு வாழ்க்கை நெறி (4)



புத்தரது அறவுரைக் கருத்துக்களைக் கொண்ட தொகுப்பான 'தம்மபதம்' என்ற நூலில் இப்படிக் கூறுகிறார்:

"புத்திமான் ஆன ஒருவன், தனது எண் ணங்களை எங்கே அது  செல்ல வேண்டுமோ அங்கே செலுத்தத் தயங்க மாட்டான்.

பயிற்சியால் பண்படுத்தப்பட்ட (கட்டுப்பாட் டால் பதப்பட்ட) அவனது சிந்தனை - எண்ண வோட்டம் அவனுக்கு நல்ல உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் என்பது உறுதி.

யாருடைய மனம் அமைதியற்று, நிலையற்று கண்ட இடங்களில் எல்லாம் தாவுகிறதோ, எந்தக் குறிக்கோளுமின்றி அலைபாய்ந்து அல்லாடு கிறதோ அவர்கள் ஒருபோதும் புத்திமானாக  (Wise Person) இருக்க முடியாது!

புத்திமான் மனிதனின் மனம் - உள்ளம் எப்போதும் அமைதியாகவும், ஒரே நிலையில் உறுதியாகவும் நிற்கும் - எந்த சூழ்நிலையிலும்!

அத்தகைய மனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் நல்ல அல்லது கெட்ட நிகழ்வுகள், இன்ப - துன்பங்களில்கூட மனதை ஒரே சீரானதாகவும், பதற்றமற்றதாயும் வைத்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றவர்களாகவே இருப்பார்கள்!

இக்கட்டான நேரங்களில்கூட அத்தகைய புத்திமான்கள் (wise) பயத்திலிருந்து விடுபட்ட வர்களாகவும், எதையும் சந்திக்கத் தயாரான மனநிலை உள்ளவர்களாகவே திகழுவார்கள்.

இன்பம் - துன்பம், ஒரு செயலில் வெற்றி - தோல்வி - மகிழ்ச்சி - துயரம் - எது வந்தாலும் இதனை சம நிலையிலேயே வைத்துப் பார்த்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவார்கள்!" என்கிறார் புத்தர்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் பல முறை பேசியுள்ளார்.

"நீங்கள் வாழ்க, வாழ்க என்று என்னை வாழ்த்தும் போது, நான் ஒருபோதும் மகிழ்ந்த தில்லை. காரணம் - இந்த வாழ்த்துக்களைவிட என்னை 'ஒழிக' 'ஒழிக' என்று கூறி வைபவர்கள் - அதிகம். அதற்காக நான் பெரிதும் வருத் தப்பட்டு மூலையில் முடங்கிவிட வேண்டிய நிலை அல்லவா வரும்!

எனவேதான் நான் வாழ்க என்பதிலும் மகிழ்வும் கிடையாது; ஒழிக என்று சொல்லும் போதும் வருத்தப்பட்டதுமில்லை; இரண்டும் எனக்கு ஒன்றுதான்!" இதுதான் புத்தர் கூறிய சமனியப் பார்வை! இது புத்திமான்களின் பக்குவம் மிகுந்த வாழ்க்கை முறையாகி விட்டால் அவர்களை யாரும் எதுவும் ஒன்றும் செய்துவிட முடியாதல்லவா?

புத்திமான் ஆன ஒருவன் எப்படி வில்லையும், அம்பையும் எடுத்து வில் வித்தையால் இலக்கை மட்டுமே பார்த்துத் தனது வில்லினால் நாணேற்றி  அம்பை எய்துகிறோனோ அதுபோல உங்கள் வாழ்வில் இலக்கை நோக்கி மட்டுமே எண்ணங்கள் பாயப்படும்; மற்ற திசைகளில்  உங்கள் கவனத்தைத் திருப்பினால் இலக்குப் பார்வை தடுமாறும்; திசைமாறும்!

இலக்கு நோக்கிய வில்லாளனுக்கு அது மட்டும்தான் தெரிய வேண்டும். அப்போதுதான் வெற்றி வாய்ப்பு இவனுக்கு வர முடியும்.

ஒரே நேரத்தில் பற்பல விடங்களில் நமது சிந்தனைகள்  - எண்ணங்கள் - பாயத் தொடங்கு மானால் - சிதறுமானால் அதிலும் வெற்றி அடைய முடியாது!

தீய சிந்தனைகள் - எதிர்மறை எண்ண வோட்டங்கள் புக முடியாத எஃகு கோட்டையாக உங்கள் மனங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்!

சபலங்கள் இடைஇடையே குறுக்கிடும்; உறுதியற்ற மனம் - ஊசலாடும் உள்ளம் - நம் வைராக்கியத்தினை உரசிப் பார்த்தால் அது பொசுக்கப்பட்ட குப்பையாக்கப்படவேண்டும்.

தெளிவும், அச்சமற்றத் துணிவும் ஒருபோதும் மனங்களை ஊசலாட வைக்க முடியாது.

எனவே சரியான இலக்கைத் தேர்வு செய்து அம்பை ஏவுங்கள். அம்புகள் வளைந்து செல்லாது (புராணங்களின் புளுகுகளில்தான் அப்படி ஒரு கற்பனை) உண்மை வாழ்வில் எந்த அம்பும் நேர்கோட்டில் தான் செல்லும் - அது போல மனம் செல்லட்டும்!

-  விடுதலை நாளேடு, 9.6.19