அண்மையில் புத்தரின் 'மனம்' பற்றிய படங்களுடன் அமைந்த ஒரு ஆங்கில நூலைப் படித்தேன் - சுவைத்தேன். யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற வேண்டுமல்லவா?
அதனால்தான் இத்தொடர்!
வாழ்க்கையில் கவலை, துன்பம் - இவை நம்மிடமிருந்துதானே உருவாகி நம்மைப் பாடாய்ப்படுத்துகின்றன.
அவைகளைத் தவிர்க்க என்ன வழி? இக் கேள்வி முதலில் சிக்கலாகத் தெரியும்; சிந்தித் தால், அது அவ்வளவு சிக்கலானது அல்ல; எளி மையானதுதான் என்பதும் புரியும்.
நம் பக்குவத்தைப் பொறுத்த - நமது உள்ளத்தின் பயிற்சியைப் பொறுத்த ஒன்றே அது என்பதை எளிய முறையில் புத்தர் விளக்கு கிறார்!
எப்படி? இதோ படியுங்கள்:
புத்தர் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, இந்தப் பூமியில், புத்தியின் - பகுத்தறிவின் முக்கியத்துவத்தையும், பெரும் பயனையும், ஜாதி, பெண்ணடிமை என்ற பிறவி பேதத்தால் பிளவுப்பட்டுக் கிடந்த மனித குலத்திற்கு 'ஒன்றே மனித குலம்' என்று சமத்துவம், சகோதரத்து வத்தையும் (அறிவு), சுதந்திரத்தையும் போதித்த ஒரு புரட்சியாளர்!
அவர் கண்டது பகுத்தறிவு வாழ்க்கை நெறி - ஒரு மார்க்கம் - பிற்காலத்தில் அதை ஒரு மதமாகவே ஆக்கிவிட்டனர்!
அவரது அறிவுரைகளின் தொகுப்புதான் 'தம்மபதம்' என்ற அறவுரைக் கொத்து.
"முன்னோர்கள் எழுதினார்கள் என்பதற் காகவே ஏற்காதே!
முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற் காக எதையும் சிந்திக்காமல் ஏற்காதே!
முன்னோர்கள் நடந்தார்கள் என்பதற்காக ஏற்றுக் கொள்ளாதீர்!"
என்று கூறிய புத்திமார்க்கத்தைப் பரப்பி சித்தார்த்தனாகப் பிறந்தவர், புத்தராக ஆனார்.
தந்தை பெரியார் விளக்கினார், "புத்தியைப் பயன்படுத்துபவன் எவனோ அவனே புத்தன். சித்தார்த்தன் அப்படித்தான் புத்தனாக ஆகியிருக்க முடியும்" என்றார்!
புத்தரின் போதனைகளில் மிக முக்கியமானது மனத்தை ஆளுதல் - ஒழுங்குபடுத்துதல் (Mind Management) ஆகும்.
தம்மபதம் ஒன்று: அதில் கூறுகிறார்.
நமது இயல்பு என்பதன் வழிதான் நமது சிந்தனைகள் - எண்ணங்கள்.
எப்படி நாம் எண்ணுகிறோம் - அப்படியே ஆகிறோம்?"
இதைக்கூறிய புத்தர், இரண்டு விஷயங்கள் இதில் நம்முடைய தேர்வுக்குரியதாக நம்முன் உள்ளன.
1. எதிர்மறையான சிந்தனையால் (Negative thoughts) நமது மனதை நிரப்பினால் அதன் விளைவு துன்பமே மிஞ்சும்.
2. ஆக்கப்பூர்வ சிந்தனையால் (Positive thoughts) நம்மனம் நிரம்பினால் அது இன்பத்தைத் தரும்.
வெறுப்பு, உணர்ச்சித் தூண்டுதல் (Temptations) சுயநலம் - போன்றவை எதிர்மறைக் கான எடுத்துக்காட்டுகள்.
மற்றவர்களுடன் நாம் உறவு கொண்டுள்ளது, அவை எப்போதும் இணக்கமாக அமைவ தில்லை. அப்படி முரண்பட்ட நிலை தோன்றும் போது, எதிர்வினை எண்ணங்கள் நம்மை அறியாமலேயே நம்மை ஆட்கொண்டு விடு கின்றன.
'அவன் என்னிடத்தல் கோபப்பட ஏது மில்லை
'என்னை காயப்படுத்தினான்'
'என்னை ஏமாற்றிவிட்டான்'
இப்பிரச்சினை ஏன் பெரிதாகிறது - உங்கள் மனதை வாட்டுகிறது? அதையே சதா நினைத் துக் கொண்டு மனதில் தேக்கி வைப்பதுதான் முக்கிய காரணம்!
அதை அப்படியே - அப்போதே அலட்சியப் படுத்தி - மனதைவிட்டு அகற்றிவிட்டு - மறந்து விட்ட சம்பவமாக்கி, அடுத்த பணியைச் செய் யத் துவங்கினீர்களானால் உங்கள் மனம் என் றும் துன்பத்தில் திணறாது!
சாதா சர்வ காலமும் அதையே நினைத்துக் கொண்டு வாழ்வதனால், நமது வாழ்க்கை ஒரு துன்பச் சுமையாய் - "வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களாக்கி விடுகிறது!"
மன்னிக்கவும், மறக்கவும் தெரிந்த மனிதர்கள் - அதை வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டு வாழுபவர்களைத் துன்பம், துயரம் ஒருபோதும் துளைக்கவே முடியாது!
அது வெறுப்பை விளைத்தவனுக்கு ஏற்படும் நன்மையை விட நமக்கே அதிக பயனைத் தரும்.
இதை விளக்க ஒரு உவமையைச் சுட்டுகிறார். "உடம்பில் சேரும் அழுக்கை அப்புறப்படுத்திக் குளித்து - மனமகிழ்ச்சி பெற்றவுடன் அழுக்கும் அகலுகிறது - மனமும் தூய்மையாகி விட்ட உடலால் ஒரு புத்துணர்வுக்கு ஆளாகிறது அல்லவா - அதுபோல!
நோயின் வலி எப்படி நமது சிகிச்சை முடிந்தபிறகு தொடராதோ அதுபோல, எனது மனம் போல் அமைவதே வாழ்வு. அது நம்மிடத்தில் உண்டு. பிறர் தருவதில்லை!"
(தொடரும்)
*வாழ்வியல் சிந்தனைகள்*
*-கி.வீரமணி*
- விடுதலை நாளேடு, 6.6.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக