பக்கங்கள்

சிங்கப்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிங்கப்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 ஜனவரி, 2019

சிங்கப்பூர் அரசின் சிறந்த முன்னோடித் திட்டம்!



சிறிய நாடாக இருந்தாலும் சிங்கப்பூர் நாட்டின் அரசு - மக்கள் நலம் பேணும் சிறப்புக்குரிய ஆட்சியைப் பெற்றுள்ள நாடாகும்.

"கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகம்" (Controlled Democracy) என்பதும்கூட வரவேற்க வேண்டிய ஒன்றுதான்!

பொதுவாக ஆட்சிகள் என்பவை 17,18ஆம் நூற் றாண்டுகளில் வெறும் (Police State) சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதுதான் முக்கிய வேலை என்பதாக இருந்தவை.

ஆனால் 19ஆம் நூற்றாண்டு இறுதி - 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இந்தக் கருத்து, மாற்றத்திற் குள்ளாகியது;  மக்கள் நலம் பேணுவது (Welfare State) அரசின் கடமைகளாக மாறி விட்டன.

இப்போது கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் - இத்தகைய வாக்குறுதியின் தொகுப்புகளாக வெளி வருகின்றன.

லீக்வான்யூ (Leekuan yew) நவீன சிங்கப்பூரின் தந்தை. அவரது மக்கள் செயல் கட்சி (People's Action Party) தான் தொடர்ந்துவெற்றி பெற்று ஆட்சி அமைத்து வருகின்றது. பலம் பொருந்திய எதிர்க்கட்சிகள் இல்லை - சில தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகள் இருந்த போதிலும்கூட!

மக்கள் தேவை - மனோபாவம் - அறிந்து தூய்மைக்கு முன்னுரிமை தந்து - கையூட்டு (லஞ்சம்), ஊழல் அற்ற ஆட்சியாக சிங்கப்பூர் அரசு தொடர்கிறது.

அமைச்சர்கள் அதிக சம்பளம் பெறும் அரசியல் விற்பன்னர்கள். வெளியில் "கை நீட்ட வேண்டிய அவசி யமில்லாத" வகையில் அதிக ஊதியம் அவர்களுக்கு!

சென்ற ஆண்டு பட்ஜெட்டில் உபரி கண்ட தொகையிலிருந்து குடி மக்களுக்கு 28 ஆயிரம் டாலர் வரை ஆண்டு வருமானத்துடன் சொத்து ஒன்று மட்டும் உள்ளவர்களின் வங்கிக் கணக்கில் 300 டாலர்களும், ஒரு லட்சம் டாலருக்குள் ஆண்டு வருமானத்துடன் சொத்து ஒன்று மட்டும் உள்ளவர்களின் வங்கிக் கணக்கில் 200 டாலர்களும், ஒரு லட்சம் டாலருக்கும் மேல் ஆண்டு வருமானத்துடன் 2 அல்லது கூடுதலாக சொத்துள்ளவர்களின் வங்கிக் கணக்கில் 100 டாலரும் அளிக்கப்பட்டுள்ளது. வியப்பிலும் வியப்பு இது!

சுற்றுச்சூழல், புதுப்புது மக்கள் நலத் திட்டங்கள் குடியிருப்பு வசதிகள் குடி மக்களுக்கு, இத்தியாதி... இத்தியாதி...

மாணவ - மாணவிகள் எடையை அங்கே அவ்வப்போது பள்ளிகளின் ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்; பெற்றோர்களுக்குத் தகவல் (Optimum)  எவ்வளவு சீரான எடை என்பதை  அறிவித்து அதற்குரிய  ஏற்ற இறக்கம் உட்பட கண் காணிக்கப்பட்டு வரும் நல்ல முறை!

அண்மையில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட Fitness - Fitbiz  உடல் சீராய்வு பற்றி நாம் கையில் கட்டிக் கொண்டிருக்கும் கடிகாரம் நாம் ஒவ்வொரு நாளும் எத்தனை அடிகள் நடந்தோம்; நமது இதயத் துடிப்புப் பதிவுகள் இப்படி பல அம்சங்களை நமது செல் போன்களிலே, அய்.பேட் (I-Pad) இணைத்து அதுவே - நவீன மின்னணுவியல் கடிகாரம் நமது இரத்த அழுத்தம் குறைந்தாலோ, அதிகம் கூடினாலோ எச்சரிக்கை மணி அடிப்பதுபோல டாக்டருக்கு தகவல் போய்ச் சேரும் அளவுக்கு அதுவே செய்கிறது.

ஆப்பிள் கைகடிகாரம் ஈ.சி.ஜி. (ECG) படம் உட்பட எடுத்து டாக்டர்களுக்கு அனுப்பிவிடுகிறது. அவரது கவனத்திற்குச் சென்று விடும். இதுபோல வேறு சில கம்பெனிகளும் செய்துள்ளன.

ஆச்சரியமாக இல்லையா? மிச்சியோ காக்கு (Michio kaku) என்ற (அமெரிக்க - ஜப்பானியர்) அறிவியல் பேராசிரியர்  தான் எழுதிய ஒரு நூலில்  Chip-அய்த் தாங்கள் அணியும் 'டை'யிலோ, அல்லது காலில் உள்ள (Shoes) 'ஷூ'விலோ இணைத்து விட்டால் டாக்டருக்கு நபர்களின் இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம் குறைந்தால் கூட தெரிவித்துவிடும். அவரது டாக்டருக்கு அதை இணைத்து விட்டால் என்று கூறினார். அது நடைமுறை சாத்தியமாக கையில் கட்டும் கைக் கடிகாரத்திலேயே பொருத்தப்பட்டு தனி நபர்கள் வாங்கிக் கட்டிக் கொண்டு நடந்தால் - எல்லாம் பதிவாகி, உடல் நலம் பற்றிய முக்கியத் தகவல்களைப் பதிவு செய்து விடும். இப்போது சிங்கப்பூர் அரசு தனது குடிமக்கள்  "தொங்கு சதை", "அமர்வு நாற்காலி - உருளைக்கிழங்கு" போல இருக்கிறார்கள் பலர் என்பதால் - நடைபயிற்சி மற்றும் ஆரோக்கிய வாழ்வு வாழ ஒவ்வொரு பகுதியில் இதயத் துடிப்பு, ரத்த ஓட்டம், எடை நிதானம் பற்றிய தகவல்களை பதிவு செய்ய கைகடிகாரம் இலவசமாக குடிமக்களுக்கு அனுப்பி  அவர்களை உற்சாகப் படுத்துகிறது.

சரியான உடல் எடை, நடை பேணுவோரில் சிறந்தவருக்கு இலவசப் பொருள்களை NTUC என்ற தொழிற்சங்கம் நடத்தும் பண்ட விற்பனைச் சாலையில் பெற்றுக் கொள்ள வவுச்சர்களை (Coupons) யும் தந்து ஊக்கப்படுத்துகிறது!

மருத்துவமனைகளில் நோயாளிகள் குறையவும், மக்கள் ஆயுள் நீளவும் நல்ல ஊக்கப்படுத்தும் அருமையான ஏற்பாடு அல்லவா இது!

இங்குள்ள அரசுகள் இதுபோன்ற மக்கள் நலத் திட்டங்களைத் தரக் கூட வேண்டாம்; 'HIV' இரத்தத்தை கர்ப்பிணிகளுக்கு ஏற்றிடாத அளவுக்குக் கவனமாக இருந்தாலேகூட போதும்; என்னே கொடுமை! எவ்வளவு அலட்சியம்! வேதனையோ வேதனை இது!

'சிங்கப்பூர் சிறிய நாடு' என்ற சமாதானம் எடுபடாது. ஆரோக்கிய வாழ்வு, சுற்றுச்சூழல் தூய்மையை - ஏட்டளவில் பாராட்டி நாட்டளவில் செயல்படுத்து வோமாக.

நாட்டு மக்களின் விழிப்புணர்வும், ஒத்துழைப்பும் அடிப்படையானவை என்பதும் முக்கியம் தானே!

- விடுதலை நாளேடு, 4.1.19

வியாழன், 14 ஜூன், 2018

சிங்கப்பூர் பற்றிய ஒரு சிறந்த தேன் கூடு இதோ!

கடந்த 68 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வாழும் மூத்த பத்திரிக்கையாளர் - மூத்த எழுத்தாளர் - இலக்கியவாதி - திரை கலைத்துறை விமர்சகர் 80 வயதினைத் தாண்டிய மதிப்பிற்குரிய அய்யா ஏ.பி.ராமன் அவர்கள்.

எல்லாப் பொது நிகழ்ச்சிகளின் அழைப்பை ஏற்று, பார்வையாளராக இருந்து, அது பற்றிய சுருக்கமான செய்தியையும் விருப்பு வெறுப்புக்கு இடந்தராமல் எழுதிடுவார் இணையத்தில்!

இவ்வளவு பரந்த அனுபவமும், சிறந்த ஞானமும் உடைய திரு. ஏ.பி.இராமன் அய்யா அவர்கள் 'சிங்கையில் தமிழும் தமிழரும்' என்ற தலைப்பில் எழுதிய நூலின் பிரதியை சிங்கப்பூர் கவிதா மாறன் மூலம் அனுப்பினார். நன்றியுடன் பெற்றோம்.

படித்தேன் - சுவைத்தேன் - இந்நூல் ஒரு கொம் புத்தேன் என ஆற்றொழுக்கான நடையில், எடுத்தவுடன் கீழே வைக்க இயலாது ஒரே மூச்சில் படித்துவிட்டேன்!

இந்நூலுக்கு இவருக்குத் துணையாகவும், தூண்டுகோலாகவும் இருந்தவர் திருமதி சவுந்திர நாயகி வைரவன் அவர்கள் ஆவார்கள்.

சிங்கப்பூரின் அறிஞர்கள் திருவாளர்கள் கேசவ பாணி (தலைவர், சிங்கப்பூர் இந்தியர் சங்கம்), ஆர்.இராஜாராம் (தலைவர், சிங்கப்பூர் வளர் தமிழ் இலக்கியம்), அவ்விருவரின் முகவுரைகளும், சிங் கையில் தமிழ் மணம் என்ற தலைப்பில் சிறந்ததோர் பீடிகை உரையாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் (N.U.S.) - பின் சிம் (SIM) பல்கலைக் கழகத்தில் பேராசிரியர், முனைவர் சுப.திண்ணப்பன் அவரின் அரிய கட்டுரையும் இந்நூலுக்கு அணி சேர்த்து ஒளி வீசச் செய்கின்றன.

என்னுரை என்ற தலைப்பில் புத்தக ஆசிரியரின் மிக அருமையான கருத்தோட்டம் பளிச்'சிடுகிறது.

இது ஓர் ஆய்வு நூல் அல்ல. நானும் ஓர் ஆய்வாளன் அல்லன்.

சிறந்த ஆய்வாளர்களின் நூல்கள் பலவற்றைப் படித்த பின் எழுதப்பட்ட நூல் இது.

1950லிருந்து சிங்கப்பூரில் வளர்ந்து வாழும் என் நேரிடை வாழ்வனுபவங்களைப் பின்னிப் பிணைந்த  சம்பவங்களும், அதனை சுற்றிச் சூழும் விவரங் களும் இதன் பொருளடக்கம்.

ஒரு கிராமம் எப்படி உலகம் புகழும் நகரமாகி யது? ஆள் அரவமில்லாத சதுப்புக்காடு உலகத் தொழில்மயபூமியாக ஏன் விளங்குகிறது? இந்தியாவின் தென்கோடித் தமிழரும், அவர்களின் உயிர் மூச்சான தமிழும் சிறப்பாக இங்கே எப்படி விளங்க முடிகிறது? இதை விளக்க முயற்சிப்பது என் நோக்கம்.

இதுதான் ஒருவிதத்தில் என் ஆய்வுப் பொருளும் கூட!

தமிழின் ஊற்றகம் தமிழ் நாடு. அங்கே ஊறிய தமிழ்தான், தமிழன் வாழும் பூமியெல்லாம் பீறிட்டுப் பாய்ந்து ஓடுகிறது. அந்த வற்றாத நீர் ஊற்றிலிருந்து நனைந்து புறப்பட்ட தமிழ் இனம், இன்று தாம் வாழும் நாடுகளில் எல்லாம் தமிழைக் கொண்டு போய் சேர்க்கபடாத பாடுபடுகிறது.

சிங்கப்பூரில் தமிழ் வளர்ந்த வரலாறு சுவையானது. சீனர், மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாட்டில் எதிர்நீச்சல் போட்டு வளர்ந்த மெ ழி தமிழ்! இது, மற்ற பெரும்பான்மையினர் மனமுவந்து நமக்குத் தந்த மிகப் பெரிய சலுகையும்கூட.

இன்று நாம் தமிழைப் போற்றுகிறோம். தாய் மொழிக்குப் பெருமை சேர்க்கிறோம். அதிகாரத்துவ மொழியாக விளங்கும் தமிழை, அடுத்த தலை முறையினருக்கும் உரிமையாக்கும் முயற்சியில் நாம் இறங்கியுள்ளோம். அதற்கு நமக்கு இன்று முன்னின்று உதவுவது நம் அரசாங்கம்!

- இவ்வாறு சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ்ப் பாதுகாப்புக்கும் பெரிதும் அரசு துணை நிற்கிறது! தூண்டுகோலாக இருந்து துணை புரிந் துள்ளது.

நவீன சிங்கப்பூரின் தந்தையாக போற்றப்படும் மேனாள் பிரதமர் மதியுரை மந்திரி (Mentor Minister) ஆக நீண்டகாலமிருந்து வழிகாட்டி இரண்டாம், மூன்றாம் நிலை தலைவர்களையும் உற்பத்தி செய்து சிங்கப்பூர் ஒரு உலக மய்யம் எல்லாவற்றிற்கும் என்ற நற்பெயர் ஈட்டியுள்ள சிங்கப்பூர் வளர்ச்சி அபாரமான ஒன்று என்பது உலகம் அறிந்ததோடு, பாராட்டி, அதனைப் பின் பற்றவும் முயலுகின்றன.

லீக் குவான்யூ (Lee Kuan Yew) அவர்கள் 70 விழுக் காட்டிற்கு மேற்பட்டோரின் சீன மொழியையும் தேசிய மொழி - ஆட்சி மொழியாக ஆக்குங்கள் என்று பலரும் யோசனை கூறியதோடு பெரும் அழுத்தத்தையும் தந் தனர். லீக்குவான்யூ அவர்கள் அதற்கு இணங்காமல் மலாய், சீனம், தமிழ், ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் வணக்கம் ஆரம் பித்து ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சி, வானொலி எல்லாவற்றிலும் 4 மொழிகளில் வணக்கம் கூறிடும் நிலை அங்கே உண்டு.



நாடாளுமன்றத்தில் 4 மொழிகளிலும் ஒரே நேரத்தில் (Simultaneous Translation) மொழி பெயர்ப்பு வசதிகளைச் செய்து தந்துள்ளனர்.

லீக் குவான்யூ அவர்கள் தான் எழுதிய "இரு மொழிக் கொள்கைகள்" பற்றிய நூலில்,

சீன மொழி பேசுவோர் பெரும்பான்மை என்பதால் அதை ஆட்சி மொழியாக்கிட பலரும் சொன்ன யோசனையை நான் ஏற்கவில்லை; காரணம் பெரும்பான்மை - சிறுபான்மை பிரச் சினை வந்துவிடும்.

ஆங்கிலம் ஆட்சி மொழியானால், அதனால் ஏற்படும் வசதிக்குறைவு, மற்ற அத்தனை மொழி பேசுவோருக்கும் சம ஈவு அளவில் பிரித்துக் கொடுக்கப்படும் வாய்ப்பு உண்டாகுமே என்ற தொலைநோக்குடன் எழுதியுள்ளார்!

தமிழர்கள் எண்ணிக்கை 8 சதவிகிதம்தான் என்றாலும், 70 சதவிகித சீனர்களுடன் சமஉரிமை யைப் பெற்று பிரச்சினைக்கு இடமன்றி வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றனர்.

சிங்கப்பூர் பற்றி 19 தலைப்புகளில் அரிய தகவல் களஞ்சியமாக, ஆவணமாக பதிவு ஆகி உள்ளது. நவில்தோறும் நூல் நயம் - பயில்தொறும் பண் புடையாளரால் எழுதப்பட்டுள்ளது!

ஆய்வு நூல் அல்ல என்பது ஓரளவு உண்மை தான் - அத்தகுதி இதில் உள்ளது? அதேநேரத்தில் ஒரு "சாய்வு நூலும்" அல்ல?

- விடுதலை நாளேடு, 13.6.18