பக்கங்கள்

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

சின்னக் கலைவாணர் விவேக்கின் இறவாப் புகழும்; மறவாப் பாடமும்!


‘‘சின்னக் கலைவாணர்'' என்று கலைஞர் தந்த செல்லப் பெயரால் உலகத்தை வலம் வந்த நகைச்சுவை நாயகன் - பகுத்தறிவு, சமூக அக்கறை என்பதை நோக்கமாக்கி அதை சொல்லும் முறையில் சிரிக்க வைத்து சிந்திக்கச் செய்த சீலர் நம் அருந்தோழர் விவேக் அவர்கள் மறைவு என்பது பேரதிர்ச்சியால் நம்மை உலுக்கிய அண்மைக்கால இழப்பாகும்!

அவரது நகைச்சுவை நடிப்பில்  பாடம் எடுக்கும் ஒரு பேராசிரியர் ஒளிந்திருப்பார். லாவகமாக சிரித்துக் கொண்டே நையாண்டியை பக்குவமாக பகுத்தறிவுப் பாடமாக்கி வகுப்பெடுப்பார் திரை உலகு மூலம்!

அவரது இழப்புக்கு அகிலமே கண்ணீர் வடிக்கும் நிலையில், அவர் கலை உலகின் ஈடு இணையற்ற - கலைவாணருக்கு அடுத்தபடி சீர்திருத்தக் கருத்துகளை  சிரிப்புமூலம் கலந்து தந்து சிந்திக்க வைத்த தொண்டு என்றென்றும் மறக்க முடியாத ஒன்று. நடிகவேள் ராதாவின் பாங்கு ஒரு தனி ரகம்!

'இயற்கையின் கோணல் புத்தி' என்பார் இதை தந்தை பெரியார் - பற்பல நிகழ்வுகளின் போது!

60 ஆண்டுகள் நிறையவடையாத முடிவடையாத நிலையில் இப்படி ஒரு பேரிழப்பை எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. படத்தில் நடித்தார்; இன்று பாடமாகி விட்டார்! 

அவருக்குப் புகழ் மாலைகள் செலுத்தும் அதே நேரத்தில், அவரது படத்தை - மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்த அந்த உடன் பிறவா சகோதரனை நினைக்கும்போது பலரும் பல பாடங்களை கற்க வேண்டும்.

1. அவர் ஒரு சிறிய கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, தனது அறிவு, ஆற்றல் திறமையில் உயர்ந்த ஒரு கிராமவாசி. பிற்படுத்தப்பட்ட சமூகத்தவருக்குத் தகுதி இல்லை; திறமை இல்லை என்ற புரட்டை தனது உழைப்பாலும், அறிவுத் திறத்தினாலும் உடைத்து உலகுக்கு காட்டி உயர்ந்த உத்தமத் தோழர்!

இது முதல் பாடம் - உழைத்தால் கிராமப் பிறப்போ, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரென்பதோ ஒரு பொருட்டல்ல; கல்வியில் பகுத்தறிவும் இணைந்தால், அவர் உலகப் புகழ் எய்துவர் என்பது அப்பாடம்!

இரண்டாவது, வளர்ந்த பின்பும் எவரிடமும் அவர் காட்டிய அன்பும், பண்பும் எப்போதும் எவரும் கற்க வேண்டிய மற்றொரு பாடம்;

மூன்றாவது, அவரது அருமை மகனை பறி கொடுத்தபோதும் அந்த துயரத்தில் மனம் நொறுங்கி மூலையில் ஒதுங்கி விடவில்லை. முனைப்புடன் வாழ்ந்து, தனது துயரக்  கடலை உள்ளடக்கி, நம்மை வாய்விட்டு சிரிக்க வைத்து நோயற்றுப்போக உழைத்தார்! சோதனைகளை எதிர்கொள்ள கற்க வேண்டிய விடயம் இது.

தானுண்டு தன் சம்பாத்தியமுண்டு, தன் பிள்ளை, தன் பெண்டு என்று சின்னதோர் கடுகு உள்ளத்தோடு வாழாமல், தொல்லுலக மக்கள் எல்லாம் நமது உறவுகள் என்ற பெரு நோக்கோடு, தொண்டறம் பேண - சமூகச் சிந்தனையை அப்துல்கலாம் அவர்களிடத்தில் கொண்ட ஈடுபாடு மூலம் பெற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு பாடமாக பலருக்கும் கற்றுக் கொடுப்பதை தனது இறுதி மூச்சடங்கும் வரை செய்த சமூகப் பாதுகாவல் படைத் தளபதி என்ற பாடம் நாம் அனைவரும் குறிப்பாக, கலை உலகில் கோடிகளில் புரளுவோர் கற்க வேண்டிய பொதுநலப் பாடமாகும்.

அதனால்தான் மக்கள் கண்ணீர் கடலில் நீந்தி அவர் தனது இறுதிப் பயணத்தை நடத்தும் நிலை ஏற்பட்டது!

பொதுத் தொண்டு - சமூகத் தொண்டு செய்வோரை சரித்திரம் மறக்காது!

மகுடம் சூட்டி மகிழ்ந்து கொண்டாடும் என்ற பாடத்தைப் பலருக்கும் இவர் பாடமாக நமக்கும் வரலாறாக பாடம் எடுத்துக்காட்டுகிறார்.

இவையும் தாண்டி உறுத்தலான மற்றொரு பாடம் - இவ்வளவு அறிவு ஆற்றல் நிறைந்த ஒரு கூர்மதியாளர் எப்படி 100 சதவிகித (பிளாக்) அடைப்பு இருதயத்தின் இடதுபுறக் குழாயில் ஏற்படும் அளவுக்கு அலட்சியமாய் தன் உடல் நலத்தைப்பற்றிக் கவலைப்படாமல் இருந்திருப்பார் என்பது புரியாத புதிராக இருக்கிறது!

50 வயது தாண்டும் எவரும் இந்த அறிவியல், மின்னணுவியல் யுகத்தில் அடிக்கடி உடற்பரிசோதனைகளை - குறிப்பாக இதயப் பரிசோதனையை ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது முழுமையாக நடத்திக் கொள்ளத் தவறவே கூடாது! என்பது முக்கிய பாடம்!

சிலர் நெஞ்சு வலி வரும்போது அது வாயுத் தொல்லை (Gas)  என்று அலட்சியப் படுத்திடுவதும், தனது பணிகளுக்கே முன்னுரிமை தந்து உடல் நலப் பாதுகாப்பைப் பின்னுக்குத் தள்ளுதலும் சர்வ சாதாரணம்!

இதய வலி ஏற்படும் போது ஈ.சி.ஜி. எடுத்து பார்த்துக் கொண்டு சிலர் திருப்தி அடைந்து விடுகின்றனர்.

மருத்துவர் அறிவுரைகளின்படி கூறுவதானால் அதுபோதாது; அதற்கு மேலும் முக்கிய 'எக்கோ' என்ற   Electrocardiogram  பரிசோதனையை இதய நிபுணர்களை வைத்து செய்துகொள்வதும் - தேவைப்பட்டால் 'ஆஞ்சியோ' (Angio) பரிசோதனை (நெருக்கடி ஏற்பட்டபின் செல்லுவதைத்  தவிர்த்து)  வழக்கமான கால அவகாசத்தோடு சென்று பரிசோதித்து, மருத்துவர், இதய மருத்துவர் ஆலோசனையை ஏற்று தவறாமல் மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் கற்க வேண்டிய பாடம்  என்பதே! 

நிகழ்ந்த தவறு புரியவில்லை  என்றாலும், கலையுலகம் முதல் சமூகம் வரை அனைவரும் கற்க வேண்டிய - கடைப்பிடிக்கவேண்டிய பாடம் உடல் நலப் பாதுகாப்பு!  அதனையும் நமக்கு கற்றுக்  கொடுத்து புரிய வைத்திருக்கிறார்.

அவர் புகழ் என்றும் மறையாது - அவர் தரும் பாடங்கள் நம்மை உயர்த்தும் என்பது உறுதி!

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

கோலி (கலர்) சோடாவும் - நினைவில் வரும் நிகழ்வுகளும்! (1),(2)


சில நாள்களுக்குமுன் ‘பொதிகை' தொலைக்காட்சியில் கோலி சோடா கலர் உற்பத்தி, தற்போதுள்ள மக்களிடையே அதற்குக் கிடைக்கும் வரவேற்பு - இவைபற்றி சோடா பேக்டரி உரிமையாளர், தொழிலாளத் தோழர்கள், நுகர்வோர் ஆகிய பலரின் பேட்டி - இவற்றை வைத்து சுவையான ஒரு காட்சிக் கதையை (எபிசோட்) தயாரித்து ஒளிபரப்பினர் - பாராட்டத்தக்க முயற்சி!

இன்றுள்ள இளைய தலைமுறைக்கு ‘7-அப்பும்', ‘ஃபேண்டாவும்', ‘பெப்சி கோலாவும்'தான் பெரிதும் தெரியும்.

நமது குடிசைத் தொழில் போன்ற ஏழை, எளிய நடுத்தர வாழ்வாதாரங்களை எப்படி பன்னாட்டுப் பெருமுதலாளிகள் ‘காலி' செய்துவிட்டனர் என்ற கோணத்தோடு பார்த்தால், இதுபோன்று ‘காலியான' பல பொருள்களும், இல்லத்தரசிகளின் வாழ்வாதார வகைகளும் கொண்ட பட்டியல் மிகவும் நீளும்!

அக்காலத்தில் - எனது மாணவப் பருவ நினைவுகளை - மலரும் நினைவுகளாகக் கொண்டு ஒரு 70 ஆண்டு பின்னே சென்று, யோசித்தால், ‘ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே' என்று எத்தனையோ சங்கதிகள் அணிவகுத்து வருகின்றன!

பெரிய சினிமா தியேட்டர்கள் சில ஊர்களில் ஒரு சிலவே. கிராமப்புறங்களில் எல்லாம் ‘டெண்ட் கொட்டகை'தான். தற்காலிக லைசென்ஸ் வாங்கி நடத்தி சினிமா திரையில் காட்டுவதும், தரை டிக்கெட், பெஞ்சு, கேலரி முதலிய வகையறாக்கள்.

அங்கேதான் அந்தக் குரல், ‘இண்டர்வெல்' - இடைவெளியில் சோடா - கலர் - கொஞ்சம் ஒஸ்தி ‘கிரஷ்' என்ற புது வகை பாட்டிலில்! (விலை கூடுதல்).

கோலி சோடாதான் மிகவும் ‘பாப்புலர் பிராண்ட்' அக்காலத்தில்! கலர் சோடா உண்டு; சர்க்கரை (சாக்ரின் போட்ட) சோடாவும் உண்டு; சோடா கலர் - சத்தம் உண்டு - சிறு பையன்கள் ஒரு சின்ன கிரேட் பெட்டியைத் தோளில் தூக்கிக் கூவிக் கூவி விற்பார்கள்!

கோலி சோடாவை உடைத்துக் குடிப்பது, கலர் சோடாவை கிராமத்திலிருந்து அந்நாளில் வருவோர் பெருமிதத்துடன் வாங்கிக் குடிப்பதும் பழம் பெருமைகளில் ஒன்று.

பேச்சாளர்களாகிய எங்களது தோழன் இந்த கோலி சோடாதான்!

உரத்த குரலில் பேசிக் கொண்டே இருக்கும்போது, தொண்டை விக்கிக் கொண்ட நிலையில், கோலி சோடாதான் ‘ஆபத்பாந்தவன்!'

சேலம் மாநாட்டு மேடையில் மேஜையில் ஏறி இடைவேளையில் பேசிய எனக்கு, அறிஞர் அண்ணா அவர்களே (பரிதாபப்பட்டு) சோடாவை உடைத்துக் குடிக்கத் தந்தது என் வாழ்நாளில் யாம் பெற்ற பேறு!

பல கூட்டங்களில் மேடையோடு, அப்போது ஒலிபெருக்கி அபூர்வம். ஆனால், கோலி சோடாதான் எங்கள் தோழன் - மேடையில் எப்போதும் இருக்கும்.

‘வெண்ணிலாவும் வானும் போல' என்ற வரிகள்போல, ‘அக்காலப் பேச்சாளரும் கோலி சோடாவும் போல!' என்று கூறலாம்!

மேடையில் நடைபெற்ற வேடிக்கை நிகழ்வு ஒன்றை நமது மூத்த திராவிடர் இயக்கத் தலைவர்கள் சொல்லி சொல்லி சிரிப்பது உண்டு.

குடந்தை கே.கே.நீலமேகம் அவர்கள் அக்கால திராவிடர் இயக்க மூத்த முன்னோடிகளில் ஒருவர். (அதே ஊரில் (குடந்தையில்) ‘கே.கே.என்.' என்ற

கே.கே.நீலமேகம், ‘வி.சி.' என்ற வி.சின்னதம்பி, ‘பி.ஆர்.பி.' என்ற பி.ஆர்.பொன்னுசாமி (சேர்வை) மூவரும் பிரபலமானவர்கள்) அவர் மேடைகளில் ஆவேசமாகப் பேசுவார்.

‘‘இரண்டாம் உலக யுத்த நேரம் அது - அந்தக் கொடுங்கோலன் ஹிட்லர் இங்கிலாந்து நாட்டின்மீது குண்டுபோட்டு அழிக்க முயற்சித்தபோது, பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் என்ன செய்தார் தெரியுமா?'' என உரத்த குரலில் மக்களைப் பார்த்துக் கேட்டுக்கொண்டே,

(‘‘சின்னதம்பி அண்ணே ஒரு சோடா தாங்களேன்'' என்பார்) இதை அண்ணா உள்பட பலரும் சொல்லி சொல்லி சிரிப்பார்கள்!

திராவிடர் இயக்கத்தை வளர்த்தவர்களில் கோலி சோடா, கலர் தயாரிக்கும் தொழில் நடத்தியோர் (அக்கால தொழிலதிபர்கள்(?)) பலர் உண்டு!

கலைஞர் அவர்களை நாடகங்கள் எழுதத் தூண்டி நடிக்கவும் வைக்க முழுக் காரணமான நாகைத் தோழர் ஆர்.வி.கோபால் அவர்கள் ‘‘ராயல் சோடா பேக்டரி'' என்று வைத்திருந்தார். அது சிறப்பாக நடந்தது! அதன் வருவாய் மூலம் கழகத்திற்கும் தொண்டு செய்த பெருமகன். ‘நாகை திராவிட நடிகர் சபா' என்று உருவாக்கி, அதன்மூலம்தான் ‘சாந்தா அல்லது பழனியப்பன்', ‘போர்வாள்' போன்ற பல நாடகங்கள் அரங்கேறி நடந்தன. புதுச்சேரியில் பல வாரங்கள் நடந்தன. (அப்போதுதான் மாநாட்டு நிகழ்ச்சியில் கலைஞர் தாக்கப்பட்டது).

(தொடரும்)

கோலி (கலர்) சோடாவும் - நினைவில் வரும் நிகழ்வுகளும்! (2)

மன்னார்குடியில் உள்ளிக்கோட்டை சு.பக்கிரிசாமி சோடா பேக்டரிதான் எங்களது - பேச்சாளர்களது தங்குமிடம் - ஓய்வு இல்லம் - சு.ப. அவர்களுடன் சைக்கிளில், ஹேண்ட் பாரில் முன்னே அமர்ந்து, அவரது ‘பீடிப் புகை'யின் நெடிய வாடையை எப்படியோ சகித்துப் பிரச்சாரத்திற்குச் சென்றுள்ளேன்.

சோடா எப்படி தயாரிக்கிறார்கள் என்பது அங்கெல்லாம் பார்த்து பலவற்றைத் தெரிந்து கொண்டோம்!

பழனியில் திராவிடர் கழகத் தோழர் சோடா பேக்டரி முத்துச்சாமி அவர்கள்தான் இயக்கம் வளர்த்தத் தோழர்; தமிழரசனை மிகவும் ஊக்கப்படுத்தி, துணை நின்றவர்!

இப்படி ஒரு நீண்ட பட்டியலே உண்டு!

அந்தக் காலத்திலேயே இந்த கோலி சோடாவுக்குப் பெருத்த போட்டி (பெரும் கார்ப்பரேட் முதலாளித்துவ போட்டி). ஸ்பென்சர் சோடா - சென்னையில் தயாரித்து ரயிலில் பல ஊர்களுக்குப் போகும்போது - ரயில் நிலையங்களுக்குச் சென்று சில்லறை வியாபாரிகளான வெற்றிலைப் பாக்குக் கடைக்காரர்கள் பணம் கொடுத்து வாங்கி வருவர்! அக்காலத்தில் ‘‘அந்தஸ்தின் சின்னம்'' (Status Symbol)  அது!

அதற்குப் போட்டியாக திருச்சி வின்சென்ட் சோடாவும் வணிகத்தில் வந்து நின்றது.

ரயிலில் ஸ்பென்சருக்குப் பதிலாக ஷி.ஷி. சார் (Char)என்ற சோடாவும் வந்தது!

பிறகு விருதுநகர் காளிமார்க் போன்றவை எல்லாம் வந்தன!

கோலி சோடா தாகத்திற்குப் பேச்சாளர்களுக்கு உதவுவதை, நம் நாட்டில் போர் ஆயுதமாகவும்கூடக் கையாண்ட கதையை சொல்லாமல் விட்டால் நியாயமல்ல.

சோடா புட்டியை வீசி எறிந்து கூட்டத்தில் கலவரம் செய்தல், சோடா பாட்டில் வீச்சு, கல் வீச்சு என்றெல்லாம் செய்திகள் வேகமாக வரும்.

பெரும் கூட்டத்தைக் கலைத்து கலவரம் உண்டாக்க இந்த கோலி சோடா பாட்டில்கள் பெரிதும் கலவரக் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டதும் உண்டு!

(பிறகுதான் சைக்கிள் செயின் அது இணைத்துக் கொண்டது போலும்!)

கோலி சோடா பாட்டிலில் உள்ள குண்டு உள்ளே போக - உடைக்க ஒரு தனி மரக் கருவி உண்டு. ஆனால், பலர் தங்களது கட்டை விரலைக் கொண்டே உடைத்து ‘வீர'த்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் உண்டு!

இந்த சோடாவை உடைத்துக் கொண்டு வரச் சொல்லும் சொலவடையை நகைச்சுவைக் காட்சிக்கே ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் தேவக்கோட்டை ரஸ்தாவில் அந்நாளில் தயாரித்து வெகு ஜோராக ஓடிய ‘சபாபதி' சினிமாவில் பயன்படுத்திக் கொண்டார்!

பணியாளரான, அக்கால பிரபல நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினத்திடம் சோடாவை உடைத்துக் கொண்டு வரச் சொன்னதை, அப்படியே அட்சரம் பிசகாமல் செய்து, ‘‘சுக்கு நூறாக உடைத்தே'' கொண்டு வந்து சிரிக்க வைப்பார்!

செரிமானத்திற்கு ‘ஜிஞ்சர் பீர்' என்ற இஞ்சிச் சாறு கலந்த சோடா மிகவும் பயன் தரும். முக்காலணா, ஒரு அணா சோடா விலை எனக்குத் தெரியும் - அக்காலத்தில்!

உவமைகளுக்குக்கூட சோடா பயன்பட்டது!

பொங்கிய சிலரின் ஆர்வம் உடனே குறைந்து விடுவதைப்பற்றி ஒப்பிட்டுக் கூற, அவர் செயலில் தொடக்கத்தில் வேகம் இருக்கும் - அப்புறம் மறைந்துவிடும் - ‘உடைத்த சோடா புட்டி கேஸ் மாதிரி' என்று கூறுவதுண்டு!

பேச்சாளர்களுக்கு சோடா உடைத்துத் தரும் பழக்கம் இப்போது குறைந்தே போய்விட்டது! அவர்களும் ‘அது வேண்டாங்க, கேஸ்  (Gas) அதிகமாகுங்க' என்று சொல்லி அவரவர் பருகுவதற்குக் கையோடு காபி, தேநீர், வெந்நீர், தண்ணீர் கொண்டுவந்து விடுகிறார்கள். இப்போதுதான் பாட்டில் தண்ணீரும் வந்துவிட்டதால்,  Carbonated Aerated Water என்பதைத் தவிர்க்கவும் செய்கிறார்கள்!

என்றாலும், கிராமத் திருவிழாக்களில் இன்னமும் கதாநாயகன் கலர் சோடாதான்! பலரை வாழ வைத்த, தொண்டை வறளாது காப்பாற்றிய சோடா வாழ்க!

இப்பொழுது மீண்டும் கோலி சோடா புழக்கத்திற்கு வருகிறது!

வியாழன், 15 ஏப்ரல், 2021

"என்ன வினோதம் பாரு! எவ்வளவு ஜோக்கு பாரு!!" (1,2)


ஏப்ரல் 6ஆம் தேதி - இரண்டு நாள் முன்பு ஒரு வகையாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற்று முடிந்தது

தமிழ்நாடு 'பகுத்தறிவு பூமிஎன்ற பெயர் பெற்ற பண்பட்ட பூமியானாலும்கூடதேர்தலில் அதன் கீழிறக்கம் கடந்த சில ஆண்டுகளாக மிக வேகமாகச் சென்று ஒரு பெரும் தலைகுனிவை ஏற்படுத்துவதுநமக்கெல்லாம் வேதனையாகவும்வெட்கமாகவும் உள்ளது!

ஜனநாயகம் மறுபுறத்தில் 'பணநாயகஅவதாரம் எடுத்தே வாக்காளர்களை 'ஆட் கொள்ளும்அவலம்மிக மோசமாக உள்ளது.

தேர்தல் கமிஷன் என்பது ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டதுபோல - தேர்தல் - "கமிஷன்Election - "Commission" என்று சொல்லும் பரிதாப நிலைக்கு  - கையறு நிலைக்கு - தள்ளப்பட்டுள்ளது!

கண்டும் காணாது நடந்து கொண்ட நிலையில்கூடசில அதிகாரிகளின் சோதனையில் சிக்கிய பணம் மாத்திரம் ரூபாய் 450 கோடி அளவில்!

தங்கமாகசிக்கியது சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பில் என்பது பணநாயக அவதாரம்மறுபுறத்தில் 'தங்கமான தேர்தல்' - வாக்குகள் என்ற நிலைக்கு "உயர்ந்து" - "வளர்ந்தோங்கிநிற்கிறது!

நம் நாட்டுத் தேர்தலில் சூறையாடப்படுவது ஏழைஎளியகீழ் அடுக்குநடுத்தர மக்கள் - ஆகியவர்களின் நாணயமும்நேர்மையும் கூடத்தான்வாக்குகள் மட்டுமில்லை!

சுயமரியாதை மண்ணில் வேட்பாளர்களின் சுயநலம் சுயமரியாதையையே காணாமற் போகச் செய்து விட்டதுஇம்முறை பல கட்சி வேட் பாளர்களும் நடந்து கொண்ட கேலிக்கூத்தான 'வித்தைகள்மூலம் ஜனநாயகப் பாடம் படித்த வர்கள் தலை கவிழ்ந்துக் கொள்ள வேண்டிய "அவசியமானம்ஆங்காங்கே பரவலாகி, 'வைரலாகிவெளிச்சம் போட்டு விட்டது!

ஒரு வேட்பாளர் வயலில் இறங்கி நாற்று நாட்டு "பொதுச் சேவைசெய்கிறார்!

இன்னொரு வேட்பாளர் சாயாக் கடையில் "டீ போட்டு சேவைசெய்து வாக்கு சேகரித்தார்!

அடுத்தவர் - டீ போட்டுசமைத்துப் பரிமாறும் சேவை செய்கிறார்சட்டசபைக்கு போவதற்கு இதுவா தகுதி?

"தொண்டில்இந்த எம்.எல்.வேட்பாளர் களுக்கிடையே எவ்வளவு போட்டா போட்டி பார்த்தீர்களா?

இன்னொரு வேட்பாளர் ஒரு அம்மணி துணி துவைப்பதை அவர் கையிலிருந்து வாங்கிதானே துணி துவைத்து அந்த மூதாட்டியின் சிரம பரிகாரத்தைச் செய்து விளம்பரம் தேடுகிறார்!

இதனைவிட ரூபாய்களைக் கொடுக்க முடியாத படி ஒரு புது வித்தை - ஆர்.கேநகர் இடைத் தேர்தல் கண்டுபிடித்த "டோக்கன்வித்தைஅங்கிங்கெனாதபடி எங்கும் பரவலாகிமளிகைக் கடைகள் முன்பு  கூட்டம் - "அதற்கும் எங்கள் கடைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லைஎன்று ஒட்டுப் போட்ட பின் நீட்டிய டோக்கனுக்குப் பதிலாக கிடைத்தபோது மிஞ்சியது ஏமாற்றமே!

மாசில்லா நெஞ்சத்தோடு கையில் காசில்லா வேட்பாளர்கள் தேர்தலைதனது கொள்கைதொண்டுமக்கள் பணிநேர்மையை மட்டும் முன்னிறுத்திமூலதனமாக்கித் தேர்தலில் நின்று வென்று விடுவது இனி ஒரு போதும் சாத்தியப்படாது என்பது ஒரு சரித்திர உண்மை ஆகி விட்டது!

'எதுவும் தவறல்லஎன்ற அளவுக்குப் பொது ஒழுக்கச் சிதைவு உச்சத்தைத் தொடுகிறது!

19.12.1973 அன்று தியாகராயர் நகரில் தந்தை பெரியார் ஆற்றிய கடைசி சொற்பொழிவில் இந்த கீழிறக்கத்தைத் தொலைநோக்கோடு படம் பிடித்துப் பேசியுள்ளார்அதனைப் படித்துப் பாருங்கள்.

ஜனநாயகப் பாசாங்குத்தனம் பற்பல அவ தாரங்களை எடுக்கிறது!

கட்சி மாறுவதில் பச்சோந்திகள் நமது வேட்பாளர்களைக் கண்டு வெட்கப்படுகின்றன - தோற்றுப் போகின்றன.

ஒரு மணி நேரத்தில் கட்சி மாறிதேர்தலில் வேட்பாளராக மாறும் டிக்கெட் வாங்கும் கலை ராக்கெட் வேகத்தில் அரங்கேறுகிறது!

இப்படிப் புலம்பினால் போதுமா? "எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டினிலேஎன்ற பாட்டின் வரிகளில் ஒரு திருத்தம் -

எத்தனைக் காலந்தான் ஏமாறுவர் இந்த நாட்டிலே!

,தாழ்ந்த தமிழகமேஉனது மானமும்மதிப்பும் பாழாய்ப் போன ஜனநாயகத்தில் இப்படியா சந்தி சிரிப்பது?

மாற்றுவழி கண்டுபிடிக்கப்பட்டு உண்மை ஜனநாயகத்தை நடத்த வழி காண்பது அவசரஅவசரம்.

"என்ன வினோதம் பாரு! எவ்வளவு ஜோக்கு பாரு!!" (2)

பொது ஒழுக்கச் சிதைவை மிக வேகப்படுத்து வதற்கு இப்போதைய தேர்தல்கள் மிக முக்கிய பங்கு பாத்திரம் வகிக்கின்றன!

பல்லிருந்தும் கடிக்க முடியாதபடி உள்ளது தேர்தல் ஆணையம், ஏன் என்று புரியவில்லை.

தங்களுக்கு வாக்குப் போடுவதற்கு பணம் தரவில்லை என்று சாலையில் அமர்ந்து "சாலை மறியல்" நடத்தினார்கள் என்ற செய்தி எதைக் காட்டுகிறது? எவ்வளவு அசிங்கம் இது! அந்த மக்கள் மீது குற்றம் ஒரு புறமிருந்தாலும் அவர்களை அந்த உத்தரவாதம் தந்து தானே அழைத்து ஏமாற்றும் நிலை!

அதற்குமுன் பெருந் தலைவர்களின் கூட்டம் பெருங் கூட்டமாகக் காட்சியளிக்க காசு - பணம் - குவார்ட்டர் - பிரியாணி கொடுத்து கால்நடை களை அடைத்துக் கொண்டு வருவதுபோல, அழைத்து வந்து கூட்டம் முடிந்த பின்போ, முன்போ 'பணம் பட்டுவாடா' செய்யும் அரிய சேவையை உள்ளூர் தளகர்த்தர்கள்  செய்வது எத்தகைய கேவலமான நடைமுறை?

எல்லோரும் நிர்வாணமாக வசிக்கும் நாட்டில் கோவணம் கட்டியவன்தானே "பைத்தியக் காரன்?" அதுபோன்ற நிலை. முந்தைய தேர்தல் களில் தலைவர்கள் பேச்சைக் கேட்க, கட்டுச் சோறு மூட்டையுடன் இரவெல்லாம் வந்து காத்திருந்து கேட்டுத் திரும்பும் நடைமுறை "அந்த நாள் ஞாபகம்" ஆகிவிட்டது!

திருநள்ளாற்றில் சனீஸ்வர பகவானிடம் பாவம் போக்கும் "புனிதஸ்தலத்தில்" தங்கக்காசு பிரதமர் மோடி உருவம் பொறித்ததுடன் - பா.ஜ.க. சின்னம் + ரூபாய் நோட்டுகள் கொடுத்தவரை தேடுகிறார்களாம் - தேடுகிறார்களாம் - தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.

'எந்தாடா ஆச்சரியம்!' அது மட்டுமா?

ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்று பத்திரிகைகளை சொல்லுவார்கள்.

அவற்றின் யோக்கியதையைக்கூட இத் தேர்தல் மிகவும் கேலிக்குரியதாக்கி விட்டது.

கடைசி நாளுக்கு முன்னாள் மூன்று நான்கு பக்க விளம்பரமாக எதிர்க்கட்சியை பற்றி ஆளுங்கட்சி கூட்டணி. முழுப் பக்க விளம்பரம் கொடுப்பது தவறில்லை. ஆனால் அதை விளம் பரமாக வாசகர்கள் புரிந்துகொள்ள முடியாதபடி, ஏதோ வழக்கமாக அந்த செய்தித்தாளின் செய்திகள் என்று 'சட்'டென்று பார்த்து வாசகர்கள் ஏமாறும் வண்ணம் ஒரு 'புதுடெக்னிக்'குடன் நடந்தது மோசடித்தனத்தின் முழு வீச்சு அல்லவா?

'பத்திரிகை தர்மம்', 'பத்திரிகை தர்மம்' 'பல்லவி, அனுபல்லவி, 'சரணம் பாடும் இவர்கள் இப்படி தங்களது ஒழுக்கத்தையும்  நாணயத்தையும் பொதுச் சந்தையில் - வாசகர்களிடம் விலைக்கு விற்கலாமா?

மிக மிக வேதனை -

இப்படிப்பட்ட பத்திரிகைகள் 'அய்ந்து நோய்களில் ஒன்று என்று கூறிய தந்தை பெரியார் முன்னோக்கு எப்படி அனுபவத்தால் கனிந்தது பார்த்தீர்களா?

ஏற்கெனவே பழமொழிகள் உண்டு.

"நாய் விற்ற காசு குரைக்காது

கருவாடுவிற்ற காசு நாறாது'

வருமானம் கருதி

தங்கள் பெறுமானத்தை இழப்பது

நியாயம் தானா?

இதுதானா தேர்தல் தந்த வெகுமானம் -

ஜனநாயகத்தின் சன்மானம்?

நிலையிலிருந்து தவறிய பத்திரிகையாளர்களே மீண்டும் இப்படி சறுக்காதீர்!

அறிவுடையாரின் 'சாபத்திற்கும்' கண்டனத் துக்கும் ஆளாகாதீர்!

உண்மைகளைச் சொல்லித்தானே தீர வேண்டும்!

காசேதான் கடவுளடா, என்பதா கொள்கை?

யோசிக்க; யோசிக்க!

கொடுப்பனவும், கொள்வனவும் - இரு வழிப்பாதைகள்


நமது வாழ்க்கை மிகவும் எளிதாகவும், ஏற்றம் தருவதாகவும் அமைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? பகட்டு, படாடோபம் - இவற்றை ஒழித்த ஒழுக்கமான வாழ்க்கைதான் நிம்மதியான வாழ்க்கையாகும்!

பிறரைப் பார்த்து ஒப்பீட்டு  வாழ்க்கை வாழ நாம் ஒரு போதும் ஆசைப்படுவது கூடாது;

நமது வருவாய்க்குட்பட்ட, அளவு அறிந்து வாழ்தல் அவசியம்.

இதற்குச் சரியான திட்டமிடல் அவசியம்.

ஒவ்வொரு மாதத்திலும் 'பட்ஜெட்'டில், இன்றி யமையாத செலவுகளுக்குப் போதிய ஒதுக்கீடு - எதிர்பாராத செலவு  ஏற்படக் கூடும் என்பதால் அதற்கென ஒரு சிறு அளவு ஒதுக்கீடும் முக்கியம் தான்.

அரசாங்கம் வரவு - செலவு ('பட்ஜெட்') திட்டத்தில் செலவு முதலில்!

வரவு கண்டுபிடிப்பது, ஏற்பாடு செய்தல் பிறகே.

ஆனால் தனிமனிதரின் 'பட்ஜெட்'டில் வரவு முதலில் - அதற்கேற்ப செலவு திட்டமிடலில். இது ஓர் அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண் டிய உண்மை!

திருவள்ளுவர் சொன்ன

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை

போகாறு அகலாக் கடை (குறள் - 478).

வரவைப் பெருக்குவதற்கு முதல் வழி என்னதென வள்ளுவர் கூறுவதுதான்!

ஓட்டைகளால் நம் செலவுகள் பெருகாமல் தடுத்தாலே கூடுதல் வரவுக்குச் சமம் அல்லவா?

அனாவசியச் செலவுகள்

ஆடம்பரச் செலவுகள்

பிறர் மெச்ச நாம் பொருள் வாங்கி 'ஷோகேஸ்' வைக்கும் அருவருப்புச் செயல்கள் மூலம் ஆகும் செலவுகளைத் தவிர்க்கலாமே!

சேமிப்பு - சிறு அளவாவது இருப்பது -  எவ்வளவு நெருக்கடியிலும் பழக்க வேண்டியது முக்கியம்! முக்கியம்!

10 ரூபாய் வரவில் 1 ரூபாய் சேமிப்பு என்று ஒதுக்கி வைத்துவிட்டு அதை மறந்துவிட வேண்டும்.

கம்பெனிகளில் ரிசர்வ் பண்டு (தனி ஒதுக்கீடு நிதி) -

அதில் கை வைக்கக் கூடாது அல்லவா?

"விதை நெல்லை எடுத்து விருந்தாளிக்கு ஆடம்பர விருந்து வைப்பவன் விவேகி யாவானா?"

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கவும் நினைக்கக் கூடாது. பிறகு அதுவே "பேராசை பெரு நட்டம்". உள்ளதும் போச்சே என்ற ஓலமே மிச்சம்!

அன்றாடச் செய்தியில் அங்கம் வகிக்கும் -

சீட்டுப் போட்டு ஏமாந்தோர்!

அதிக வட்டி ஆசையில் கைப்பொருள் இழந்த பரிதாபத்திற்குரிய மூத்த குடிமக்கள்!

இரட்டிப்பு (Double Money) பணம் தருவது என்ற 'மயக்க பிஸ்கட்டுக்கு' பலி!

இப்படி எதிலும் படாமல், நேர்வழியில் சம் பாதித்துவரி ஏய்க்காமல் வரி கட்டி, சட்டப்படி பணம் இருப்பை வைத்துச் செலவழிப்பது நல்ல 'பட்ஜெட்' - சீராக்கும் வழி முறை!

மருத்துவ செலவு - என்பதற்கு ஒரு பங்கு அவசியம் ஒதுக்க வேண்டும்.

கல்விக்கு எப்படி ஒதுக்குதல் முதலீடோ அது போலத்தான்!

நல்ல உடல் - நல்ல உள்ளம் - நல்ல நலவாழ்வு முக்கியம்! அல்லவா?

நல்ல புத்தகங்களை வாங்கிப் படிக்க ஒரு பங்கு குறைந்த அளவேனும் நிதி ஒதுக்கீடு செய்க!

வாய்ப்பிருந்தால் வருமானத்தில் ஒரு சிறு பகுதியேனும் - தொண்டறம் மூலம் உண்மையான வறியோரின் தேவைக்கு உதவுதல் அல்லது சிறந்த அறக்கட்டளைகளின் தொண்டை ஊக்கப் படுத்தவே நிதி தரலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே!

ஏமாறுவதற்கு அல்ல! அல்லவே அல்ல!!