பக்கங்கள்

ஞாயிறு, 29 மே, 2016

பொது வாழ்வில் உள்ளோர் கற்க வேண்டிய பாடங்கள் இவை!



இன்று திராவிடப் பெருந்தகையாள ரும், தென்னிந்திய நல உரிமைச்சங்கம் ஷி.மி.லி.தி. என்ற நீதிக்கட்சியைத் தோற்று வித்தவர்களில் ஒருவருமான தியாகராயப் பெருமானின் 165ஆவது பிறந்த நாள் இன்று!

அவரது பண்பு நலன்களை மனித நேய மாண்பு, எளிமை, தூய தொண்டறம் பற்றிபலரும் அறிய வேண்டியவை ஏராளம் உண்டு!

மயிலாடுதுறை நண்பர் திராவிட இயக்க ஆய்வு எழுத்தாளரான (‘திராவிடப் பித்தன்’ என்ற புனை பெயரும் இவருக்குண்டு) கோ.குமாரசாமி அவர்கள் 1985ஆம் ஆண்டில் எழுதி, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள திராவிடப் பெருந்தகை தியாகராயர்  வாழ்க்கை வரலாற்று - நீதிகட்சி அந்நாளைய அரசியல் - வரலாறு என்ற இவைகளை உள்ளடக்கி எழுதியுள்ள நூலைப் படித்தேன்.

எவ்வளவு அரிய தகவல்கள்!

எத்தகைய கொள்கை உறுதி, வசதியுள்ள நிலையிலும் மிக எளிமை, எல்லோர்க்கும் உதவுதல், எக்காரணம் கொண்டும் சுயமரியாதையை இழக்கா திருத்தல் - இவைகளைப் போதிக்கும் கல்விக் களஞ்சியம் போன்றது. அப் பெருமானின் வாழ்வு!

இதோ அந்நூலில் உள்ள சில பகுதிகள் அவர்தம் பண்பு நலன்களைப் படம் பிடித்துக்காட்டுவன,

“தியாகராயரிடம் காணப்பட்ட குணங் களில் சிறப்பான குணம் ஒன்று உண்டு!

அவர் எவரையும் துச்சமாகவோ அல்லது குறைவாகவோ மதிக்கத் துணிவதில்லை!

வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி எவரையும் எப்போதும் இன்முகம் காட்டி வரவேற்று இருக்கை தந்து பேசுபவர். பேசுவதைக் கேட்பவர்.
அவரைப் பார்க்கச் செல்லு வோர் ஆண்டியேயாயினும் அவ்வாண்டி யையும் அவர் அலட்சியம் செய்ய மாட்டார். அன்னவரையும் உடன் அமரச் செய்து, வினாவி தக்கது சொல்லி, உதவி வேண்டின் அவ் வுதவியையும் அளித்து அனுப்பி வைப்பார்.

மேற்கண்டதற்கு இணை யான மற்றொரு சிறப்புக் குணமும் காணப்பட்டது தியாகராயரிடம். ஏதேனும் உதவியைக்கோரி, தம்மிடம் வருபவர்களை இன்றுவா, நாளைவா என்று கூறி அலைய விடுவதில்லை. உட னுக்குடன் தக்கது செய்தும் கூறியும் அவர்களை அனுப்பி வைப்பார்.

நம்மைப் பெரிய மனிதர் என்று புகழ்கின்றார்களே! இந்தக் காரி யத்தைச் செய்தால் பிறர் நம்மைப் பரிகசிப்பார்களே! நம் எளிமையைக் கண்டு ஏளனம் செய்வார்களே! என் றெல்லாம் நினைப்பதில்லை தியாகராயர். நம் காரியத்தை நாம் செய்வதில் தாழ்வு என்ன இருக்கிறது! சிறுமை என்ன இருக்கிறது! என்று கூறுவார். அவரது எளிய வாழ்க்கை அவர் காலத்து மக்களுக்கு ஒரு பாடமாக அமைந்திருந்ததெனின், அது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

லார்டு வில்லிங்டன் சென்னை கவர்னராக இருந்த சமயம். அப்போது தியாகராயர் சர் பட்டம் பெற்ற பெரிய மனிதர். சென்னை நகர சபையின் தலைவர் - சட்டசபை அங்கத்தினர். ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருந்த நீதிக் கட்சியின் தலைவர். அப்போது வில்லிங்டன் ஒரு புதுமையான சங்கத்தைத் துவக்கி நடைமுறையில் இயங்கி வரும்படி செய்திருந்தார். அச் சங்கத்திற்கு சனிக்கிழமை சங்கம்: என்பது பெயராம். இச்சங்கத்தின் சார்பில் சென்னை நகரப் பெரும் பிரமுகர்கள் ஒவ்வொருவரின் பங்களாவிலும் ஒரு வட்டமேசை கூட்டம் கூடும். கவர்னர் - பல பிரமுகர்கள் அக்கூட்டங்களில் கலந்து கொள்வார்கள். பல பொருள்கள் குறித்துப் பேச்சு நடைபெறும் - விருந்துகள் நடை பெறும் கேளிக்கைகளும் இடம் பெறும்.
இப்படிப்பட்ட வட்டமேசை கூட்டம் ஒன்று சர்  - தியாகராயர் பங்களாவில் நடந்தது. கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. தியாகராயரும் தயாராகிக் கொண்டிருந்தார். அங்கிருந்த ஒரு பையனைக் கூப்பிட்டார். தான் அணிந்து கொள்வதற்கு ஒரு சொக்காய் எடுத்து வரும்படி கூறினார். அந்தப் பையனும் ஒரு சொக்காய் எடுத்து வந்து கொடுத்தான். அதனை அணிந்து கொள்ளப் போனார். அது ஒரிடத்தில் சிறிது கிழிந்திருந்ததைக் கண்டார். உடனே அந்தப் பையனைக் கூப்பிட்டார். ஊசியும் நூலும் கொண்டு வரச் சொன்னர். ஊசியும் நூலும் வந்தன. கிழிந்த இடத்தைத் தைக்கத் தொடங்கிவிட்டார்!

அந்தச் சமயம் ஒரு பிரமுகர் வந்து சேர்ந்தார். அவர் பெயர் ‘மோப்பரப்பா’ என்பதாகும். ராவ்பகதுர் பட்டம் பெற்றவர். ‘மதராஸ் ரயில்வே’ செக்ரட்டரியாக உத்தியோகத்திலிருந் தவர். சென்னை நகர சபையிலும் அங்கத்தினராக இருந்து வந்தவர். தியாகராயர் தைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் வியப்பில் ஆழ்ந்துவிட்டார். சில விநாடிகள் சென்றன. அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை.

வேறு சொக்காய் எடுத்துவரச் சொல்லுவது தானே என்று கூறினார் மோப்பரப்பா.

இதற்கு என்னவாம்! கொஞ்சம் கிழிந்திருக்கிறது. தைத்துவிட்டால் சரியாகிவிடுகிறது என்றார் தியாகராயர்.

நீங்கள் தைக்கிறீர்களே! வேறு யாரையாவது விட்டுத் தைக்கச் சொல்லக் கூடாதா?

வேறு ஒருவரைத் தைக்கச் சொல்லு வதாவது, என் சொக்காயை நானே தைத்துக்கொள்வதில் தவறென்ன?

என்னிடம் கொடுங்கள்! நான் தைத்துத் தருகிறேன்! பெரிய மனிதர்கள் இதையெல்லாம் செய்வது கவுரவமாக இருக்காது!

நீங்கள் ஏன் தைக்க வேண்டும்? நானே தைத்துக் கொள்ளுகிறேன். பெரிய மனிதர்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யக் கூடாது என்று யார் சொன்னது? அவரவர் காரியங்களை அவரவர் செய்து கொள்வது தான் பெரிய மனிதர்களுக்கு கவுரவம்!

இப்படியாகக் கூறியவாறே சொக் காயைத் தைத்துச் சரிசெய்துவிட்டார் தியாகராயர். அந்தச் சொக்காயை அணிந்து கொண்டுதான் வட்டமேசைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்!

எவ்வளவு பெரிய மனிதர்களாயினும் அவர்களது சொந்த வேலையை அவரவர்களே கவனிப்பது சிறந்தது; அது அவர்களது கவுரவத்தைக் குறைத்திடாது! இப்படிப்பட்ட உயர்ந்த எண்ணத்துடன் வாழ்ந்த பெரியாராவார் தியாகராயர்!

- இவ்வுண்மையை வலியுறுத்த மேலும் ஒரு நிகழ்ச்சியை இவண் குறிப்பிடலாம்
.
ஒரு சமயம் தியாகராயர் வெளியே நடந்து சென்றார் மழை பெய்தது. குடை ஒன்றை எடுத்துக் கொண்டார். நடந்தார். காத்திருந்தோர் பலர்  குடைபிடிக்க முன்வந்தனர். ஒருவரையும் குடை பிடிக்க விடவில்லை தியாகராயர். ஒருவனுக்கு மற்றொருவன் குடைபிடிப்பது கெட்ட பழக்கம்! நானே குடை பிடித்துக்கொண்டு செல்வதால் என்னுடைய கவுரவம் குறைந்து விடாது! அப்படிக் குறைந்துவிடுமென்றால் குறைந்துதான் போகட்டுமே! யாருக்கு வேண்டும் அப்படிப்பட்ட கவுரவம்! என்று கூறித் தாமே குடை பிடித்துச் சென்று தம் வேலையை முடித்துவிட்டு வந்து சேர்ந்தார்.”

மேலே காட்டப்பட்டவை ஒரு பெருங் குதிருக்குள் உள்ள சில பொறுக்கு நெல் மணிகளே; இப்படி ஏராளம் உண்டு.

இன்றைய பொது வாழ்க்கைத் தலைவர்கள் அக்கால நீதிக்கட்சித் தலைவர்களான டாக்டர் நடேசனார், சர்.பிட்டி தியாகராயப் பெருமான், டாக்டர் டி.எம்.நாயர் போன்றவர்களின் அரிய தனி வாழ்க்கைத் தியாகத்தினையும் பண்பாட்டினையும், ஒழுக்க வரலாறு களையும், அறிந்து நீதிக்கட்சி என்ற திராவிடர் இயக்க தலைவர்களின் விழுமியம் பொங்கும் விவேக வாழ்க் கையினையும் புரிந்து கொண்டு அதில் ஓரளவாவது கடைப்பிடித்தல் விரும்பத் தக்கது.

பொதுவாழ்வின் பாடங்கள் அவை அல்லவா?
- கி.வீரமணி
-விடுதலை,27.4.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக