பக்கங்கள்

வெள்ளி, 27 மே, 2016

புத்தியின் சிகரத்தை எட்ட 6 வழிகள்!

புத்தியின் சிகரத்தை எட்ட 6 வழிகள்! (1)
- கி.வீரமணி
மனிதர்களுக்கு உள்ள ஆறாவது அறிவைப் பயன்படுத்தினால் நல்ல அறிவாளியாக அவர்கள் திகழக்கூடும்.
பிறக்கும் எவரும் முட்டாள்கள் அல்ல; பயன்படுத்தாமை காரணமாகவே அறியாமையில் - இருட்டில் சிலர் தடுமாறு கிறார்கள்.
அதில் மேலும் சிறந்து அனுபவங் களையும், சூழ்நிலைகளையும் தம்வயப் படுத்தி, பாடம் கற்று, நிலைமையை எளிதில் புரிந்து செயல்பட்டு வெற்றிக் கனியைப் பறிப்பவர்கள் புத்திசாலி மனிதர்கள் ஆகிறார்கள்!
எல்லா அறிவாளிகளான (Intelligent) மக்களும் புத்திசாலிகளாக (Wise people) ஆக இருப்பதில்லை.
அறிவாளிக்கும், புத்திசாலிக்கும் இடை யில் உள்ள நுண்ணிய பிரிவுக்கோடு மிகவும் துல்லியமானது!
அறிவாளி தன் அறிவை மட்டுமே பயன்படுத்தும் இயந்திர மனிதன்.
புத்திசாலி அந்த அறிவை, அனுபவப் பாடங்களில் தோய விட்டு எதையும் முடிவு செய்யும் தனித்தன்மை வாய்ந்த வன்.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு திரைப்படத்தில், நகைச்சுவை அரசர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ் ணன் அவர்கள் ‘‘புத்திமானே பலவான் ஆவான்’’ என்ற ஒரு மொழியை, நிகழ் வுகள் மூலம் புரியச் செய்து நகைச்சுவை மூலம் பாடம் நடத்துவார்!
எனவே, எல்லா அறிவாளிகளும் புத்திசாலிகள் ஆவதில்லை; காரணம் அவர்கள் சமயோசிதமாக நடந்து, வெற்றி காணத் தெரியாதவர்கள்.
எனவே, “அறிவாளிகள்’’ முதல் கட்டம்; புத்திசாலிகள் அதற்கு அடுத்த கட்டமாக.
தங்கு தடையின்றி புத்தியை முழுக்கப் பயன்படுத்தியதால்தான் “சித்தார்த்தன்’’ - “புத்தர்’’  ஆனார் என்று எளிமையாக விளக்கினார் தந்தை பெரியார். புத்தியைப் பயன்படுத்துகிறவன் அனைவரும் புத்தரே என்றார்!
அறிவு (Knowledge)  - அறிதல்
புத்தி - அறிந்ததோடு நில்லாமல் நிலைமைக்கேற்ப அதை வளர்த்துப் பயன் பெறல் - அறிவின் முதிர்ச்சி (Wisdom)
1980 ஆம் ஆண்டுகளில் ஜெர்மனி யில் “புத்திசாலிகளாக உயரும் திட்டம்’’(Wisdom Project) ஒன்றை வரையறுத் தார்கள்!
புத்திசாலித்தனத்தை எவ்வகையில் பெறலாம் - அறிவை விரிவு செய்தல் என்பதை மூன்று துறைகள்மூலம் பெறலாம் என்று பகுத்தனர்.
1. தத்துவார்த்த அறிவின்மூலம்
2. நடைமுறை அறிதல் மூலம்
3. மிக நேர்த்தியாக பிரச்சினைகளைத் தீர்க்கும் தீர்வுகள்.
இதில் பிரச்சினை சீரிய முறையில் நிறைவு செய்து வெற்றி பெறுவது; பல் வேறு பழைய கடந்த கால அனுபவங் கள்மூலம் கற்றுக் கொள்ளும் திறமை; அடக்கம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத் துவதன்மூலம் பெறும் பலம். தோல்வி களிலிருந்து வெளியே வந்து அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம், வெளிப்படைத் தன்மை - முதிர்ச்சி - மற்றவர்கள் உங்களை உண் மையில் நீங்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வாய்ப்பளித்தல்; அதோடு மனித சுபா வத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளும் தன்மை.
இதில் மற்றவர்களின் துன்பம், துயரம் இவைகளை  “ஒத்தறிவு’’ (Empathy) கொண்டு பார்த்தல், தனி நபர்களுடையது மட்டுமல்ல; மற்றவர்களின் கலாச்சாரத் தன்மைகளைப் புரிந்துகொள்ளல்.
இவை மனிதர்களை புத்திசாலிகளாக (Wise people)   ஆக்கிட உதவுபவை ஆகும்!
பொதுவான இந்த முன்னுரையுடன் இனி உரிய செய்திக்குப் போகலாமா?
1. மேற்சொன்ன அத்தனையும் உங் களிடம் இருக்கிறதா, இல்லையா? என்று கண்டுபிடிப்பதில் நேரம், காலத்தைச் செலவழிப்பதைவிட, பின்வரும் ஆறு வழிமுறைகளைப் பயன்படுத்தினால், புத்திசாலிகளாக நீங்கள் தானே மாற முடியும் என்ற அந்த ஜெர்மனி புத்தி ஆய்வுத் திட்டத்தினர் விளக்குகின்றனர்.
என்ன அந்த ஆறு அம்சங்கள்?
1. சமூகத்தில் கலந்து உறவாடல் (Being Social)
பல மனிதர்களுடன் கலந்து பழகிடும் பழக்கமுடையவர்கள், தனித்திருப்பவர் களைவிட அதிக புத்திசாலித்தனம் உடையவர்களாக ஆக முடியும். கார ணம், அவர்கள் பலரிடம் பழகும்போது கற்ற பாடங்களும் அனுபவங்களுமாகும்.
பல புதியவர்கள், தங்களது புது அனுபவங்கள், புதுத் தகவல்கள் - இவை களைத் தருதல் காரணமாக - நம்முடைய அறிவை விரிவாக்கிட பெரிதும் அந்த சமூக உறவுகள் நமக்குப் பயன் அளிக் கின்றன.
மற்றவர்களாக நீங்கள் அவர்களிடம் பழகுவது என்பதைவிட, உங்களை நீங்கள் மேலும் புத்திசாலியாக்கிக் கொள்ள  அத்தகைய நட்புறவு - பழகுதல் பயன்படும்.
நவில்தொறும் நூல்நயம் போலும்                     பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு (குறம் 783)
“பண்புடையாளர் தொடர்பு’’ என்ற வள்ளுவர் இதே கருத்தை வலியுறுத்து கிறார்!
எனவே, பழைய நண்பர்களோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள்; நல்ல புதிய நண்பர்களோடு பழகுவதைத் தவிர்க் காதீர்!
2. திறந்த மனத்தினராகவே இருங்கள்!
புத்திசாலித்தனம் என்பது ஒரு பிரச்சினையில் பல்வேறு கோணங் களையும் புரிந்துகொள்ளும் திறமை யேயாகும். அதேநேரத்தில், நம்முடைய சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு அடிமையாகிவிடாமல் இருப்பது மிகவும் முக்கியம்; சொந்த உணர்வுகள் நம்மை சூழுமேயானால், பிரச்சினைகள் சரிவர (Objective) ஆக நடுநிலையில் நின்று புரிந்துகொள்ள முடியாதல்லவா? எனவே தான், அது முக்கியம்!
திறந்த மனம் என்பதன் சரியான பொருள் என்ன தெரியுமா? பிறர் நிலை யில் நம்மைப் பொருத்தி உணரும் “ஒத்தறிவு’’ ’ (Empathy)
வின்படி அவரவர் நிலை, சூழ்நிலைக்கேற்ப இருக்கும்; அதை நம் அளவுகோலால் அளந்துவிடக் கூடாது என்பதுதான் அந்த “ஒத்தறிவின்’’ சிறப்பு.
ஒரு செயலை இவர் செய்யாமல் இருந்திருந்தால், அது சரியாக, இவ்வளவு தொல்லைக்கு இடம் ஏற்பட்டிருக்காதே என்று நம் நிலையில் நின்று தீர்ப்புக் கூறுவது மிக எளிது. ஆனால், அவர வரின் நிலைப்பாடு என்ற வட்டத்திற்குள் நின்று பார்த்தால் அவரது செயலை நாம் சரிவரப் புரிந்துகொள்ள முடியும்!
ஒரு நோயாளியின் மனவேதனையும், மருத்துவம் பார்க்கும் மருத்துவரின் மனநிலையும் ஒன்றாகிவிட முடியுமா?
மருத்துவர் நோயாளி நிலைக்கு மாறினால்தான் சரிவர உணர முடியும்! வலிக்கு மாத்திரை சாப்பிடுங்கள் என்று கூறுவது மருத்துவரின் அறிவுரை. வலியினால் துடிக்கும் நோயாளியின் அனுபவம் தனி அல்லவா?
ஒவ்வொரு நாளும் நம்மை வருத்திய துன்பங்களை எழுதி வைத்தல் ஒரு நல்ல பழக்கமாகும். (பின்னால் அதைப் படிக் கும்போது கிடைக்கும் இன்பத்திற்குத்தான் இணை ஏது?).
ஒவ்வொரு நாள் இறுதியிலும் அதிலிருந்து வெளிவர புதிய புத்தாக்கச் சிந்தனைகள் ஒவ்வொரு பிரச்சினைக்கும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுக்கு வியப்பு தரும் “ஓகோ’’ இப்படி ஒரு வழி இருக்கிறதா இப்பிரச்சினையைத் தீர்க்க என்று எண்ணி ஆறுதலோ, மகிழ்ச்சியோ அடைவீர்கள்!
(தொடரும்)


3. “நான் தவறிழைத்திருக்கக் கூடும்’’
அதிபுத்திசாலியாக உள்ள ஒரு மனிதன் புரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான ஒன்று வாழ்க்கையில், திடீரென்று ஒரு வளைகோடு (Curves) வந்துவிடும் - எதிர்பார்க்காத நேரத்தில்.
அதனால் தடுமாறி நாமே - தவறான முடிவுகளும், தீர்வுகளும்கூட  கண்டிருப் போம். அது தவறு என்று பிறகு புரியும்போது உடனே அதை ஏற்று “ஆம், எனது முடிவு தவறுதான்; நான் அதை மீண்டும் திரும்பச் செய்யாமல் சுட்டிக்காட்டியவருக்கு நன்றி கூறுவது’’ புதிய புத்திசாலித்தனத்தின் நிரந்தர வைப்பு நிதியாக்கிக் கொள்ள மிகுதியும் வழிவகுக்கும்!
அது உங்கள் புகழை, பெருமையைக் கெடுத்துவிடுமோ என்று அஞ்சாதீர்கள்; மாறாக, உங்கள் புகழை மேலும் ஜொலிக்கச் செய்யும்!
ஏனெனில், புத்திசாலி மனிதர்களின் வளர்ச்சியே, தனது தவறை மறைக்காது ஒப்புக்கொள்ளுதலும், அடுத்த முறை அதே தவறைச் செய்யாத உறுதிக்கே அது அடித்தளம் இடும் என்பதை மறவாதீர்!
“புத்திசாலித்தனம் எப்போதும் அறிவிற்குள்ள எல்லை இவ்வளவுதான் என்று அறிய ஒரு வாய்ப்பைத் தரும்’’ என்றார் நீட்ஷே என்ற அறிஞர். நம் எல்லை இவ்வளவுதான் என்று புரிந்து கொள்ளுவது மிகப்பெரிய அனுபவப் பாடம் அல்லவா?
எனவே, எனது அறிவின் எல்லை அவ்வளவுதான்; அதனால்தான் இப்படித் தவறிழைக்க நேர்ந்தது; அந்த எல்லையை நான் புரிந்துகொண்டதால் இனிமேல் அத்தவறு நேராதபடி எனது அனுபவம் எனக்கு ஆசானாகி, கற்றுக் கொடுக்கும் என்று உணருவீர்கள் அல்லவா?
4. புதுச் செய்திகளை அறிதலும் -
புதிய முயற்சிகளில் ஈடுபடுதலும்!
நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான ஈடுபாடுகளும், சுவைத்தலும், வழமையாக இருக்கும்.
எப்பொழுதும் விருப்பமானவற் றிலேயே திரும்பத் திரும்ப ஊறித் திளைப்பதிலிருந்து, சற்று மாறுபட்ட புதிய துறைகளிலும் நாம் கவனம் செலுத்தி, புதியவற்றைக் கற்றுக் கொள்ளவோ அல்லது குறைந்த பட்சம் அறிந்துகொள்வதோ கூட நமது புத்திசாலித்தனத்தின் எல்லையை மேலும் விசாலமாக்கக் கூடும்!
எனது நண்பர்கள் - பலதரப்பட்ட அறிஞர்கள், வல்லுநர்கள் கூறும் பல பு
திய, அரிய, வியக்கத்தக்கச் செய்தி, எனக்கு சிலவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள பெரிதும் உதவிடுகிறது என்பது அனுபவம்!
ஒரே வகையான புத்தகங்களையே கூட நான் தொடர்ந்து படிப்பதிலிருந்து சற்று விலகி புதிய செய்திகள் - கருத்தாக்கங் களைக் கொண்ட எனது கொள்கைக்கு மாறுபட்ட நூல்களைக்கூட வாசிப்பது, எனது அறிவுக்கு - புத்திசாலித்தனம் என்று கூறத் துணிவில்லாவிட்டாலும் - உரம் போடுவதாக அது அமைந்து, மனதை வளப்படுத்துகிறது!
புதிய கண்ணோட்டம், புதிய வெளிச் சங்கள் கிடைக்கின்றன.
இப்படி புதிய முயற்சியினால் சளைக் காமல் துணிவுடன் ஈடுபடுதல், நம்மை மேலும் இளமையாக்குகிறது!
கணினியைப் படிப்பதற்கு மாணவப் பருவம் சிறந்தது என்றாலும், யாரும் - எந்த வயதினரும் முயன்றால், கற்றுக்கொள்ளலாமே!
நம் பேரப் பிள்ளைகளே நமக்கு “குமரகுரு’’க்களாகி சொல்லிக் கொடுக் கிறார்கள். அங்கே நாம் மாணவர்கள்; அவர்கள் நமது பெருமைக்குரிய ஆசிரி யர்கள்! இல்லையா?
5. தன்னை உணர்தல்
(Self awareness)
நம்மைப்பற்றி நாம் பற்பல நேரங் களில் சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளுகி றோமே தவிர, உண்மையான சுய மதிப்பீட்டினைச் செய்து, நமது பலம் எது? நமது பலவீனம் எங்கே? என்று ஆராய்ந்துள்ளோமா? வாழ்க்கையில் நாம் பல்வேறு அனுபவங்கள்மூலம், பல படிப்பினைப் பெறுகிறோமே அவற்றை நினைவில் நிறுத்தி சிந்திப்பது உண்டா? பல நேரங்களில் இதற்கு விடை இல்லை என்பதுதான்!
இப்படி ஒரு புது முயற்சியில் ஈடுபடுங்கள்!
உங்கள் வாழ்வில் ஏற்பட்ட மூன்று வெற்றிகளையும், மூன்று பெரிய தோல்வி களையும் எழுதிப் பாருங்கள்.
அவற்றிற்கு அடுத்து, பக்கத்திலேயே - அவைகள் ஏற்பட, காரணமான நிகழ்வு களையும் எழுதுங்கள். அதன்பின் அதி லிருந்து நீங்கள் கற்ற பாடம் என்ன? அதையும் குறியுங்கள்.
இப்போது பெருமையோ, துயரமோ, வெட்கமோ இன்றி, அவற்றை அந்த முறை களை கற்று, அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களையும் மனதில் பதிய வைத்து படிப்பினைகளாக்கிக் கொள்ளுங்கள்.
தன்னை வெல்வான் தரணியை வெல்வான் என்றார் அறிஞர் அண்ணா!
தன்னை அறிந்தவன் தகுந்ததோர் நிலையிலிருந்து என்றும் தாழான்; வீழான்!
6. உங்களைச் சுற்றி என்ன நிகழ்கிறது? என்பதை அறியுங்கள்!
பற்பல நேரங்களில் நமக்குவரும் செய்திகள், ஒரு டிராமா போலவோ, தவறாக சித்தரித்தோ, மிகவும் வருத்தமும், சோகமும் கலந்தவைகளாகவோகூட வரக்கூடும்!
மிகவும் நிதானத்துடன், எல்லாக் கோணங்களிலும் சிந்தித்தும், ஒருபுறமே சாய்ந்துவிடாது - முடிவு எடுக்கும் பக்கு வத்தை நாம் கற்றுக்கொள்ளாவிடில் - நாம் தவறு இழைக்க வாய்ப்பு நேரிடும்.
இது, நகரத்தில் தொடங்கி, நாடு, உலகம் வரை எதற்கும் பொருந்தக்கூடிய பொது உண்மையாகும்!
செய்தித் தாள்களைப் படியுங்கள், தொலைக்காட்சி செய்திகளைக் கேளுங்கள், செய்திகளைப்பற்றிய கட்டுரைகளையும் படியுங்கள்; வெறும் தலைப்புகளை மட்டும் படித்து மூடிவிடாதீர்கள்!
இந்த உலகில் வாழ, இவ்வுலகைப் புரிந்துகொள்ள, உங்கள் பார்வையை விசாலமாக்கி பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து, உலகின் பல நிகழ்வுகளையும் அறிந்து, எடை போட்டு தெளிவுபடுத்திக் கொண்டால், அங்கே புத்திசாலித்தனம் ஆளுமை கொண்டு விட்டது என்பது திட்டவட்டமாகும்.
-விடுதலை,6,7.4.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக