பக்கங்கள்

வியாழன், 3 செப்டம்பர், 2026

உணவு நிறுவன வரலாறு – உழைப்பின் மேன்மைக்கு ஒரு வழிகாட்டி நூல் (2)

 


முக்கியத் திருத்தம்

நேற்றைய ‘விடுதலை’யில் (2.9.2026) ‘வாழ்வியல் சிந்தனைகளில்’  ‘கே.எஸ். ஆனந்தராஜா’வாக ‘வாழ்வில்   வெற்றி பெற்ற அய்யா  திருப்பதி ராஜா’ என்று திருத்தி வாசிக்குமாறு வேண்டுகிறோம். தவறுக்கு வருந்துகிறோம்.

(ஆ–ர்)

தன்னம்பிக்கை மிக்க மாமனிதராக அவர் மாத்திரம் அல்ல; அவரது அங்கமான அவரது துணைவியார் அம்மா திருமதி முத்துலட்சுமி இராஜா அவர்களும், ஒரு மனதாகிய வாழ்விணையர்கள். அவர்களின் வாழ்வில் எவ்வளவோ தொடர் தோல்விகள் – பலப்பல முயற்சிகள், ஏற்பாடுகள்! விவசாயம், வியாபாரம் என்ற பல பரிசோதனைகள்!

நம்பிக்கையுடன் இறங்கியும், எதிர்பார்த்தபடி எதுவும் அமையாமல், இருந்த பொருளையெல்லாம் இறுதியில் இழக்கும்  அளவுக்குச்   சென்று  –கழுத்தில் அணிந்திருந்த காசுமாலையேக்கூடப் பட்ட கடனுக்கு ஈடாக்கப்பட்டநிலையில் அவரது இணையரான அந்த அம்மையார் தன் கணவரின் செயலுக்கு வருந்திடவில்லை; சபித்துச் சங்கடப்படும் சாதாரண சராசரி மனப்பாங்கைக் காட்டிடவில்லை. மாறாக, தனது கணவரின் விடா முயற்சிக்குத் தளராத் தன்னம்பிக்கைக் கொடுத்து நிரந்தரத்  துணையாக இறுதி மூச்சுவரை இருந்துள்ளதைப் படிக்கும்போது இவர்கள் வாழ்விலும், தாழ்விலும், ‘மலைகுலைந்தாலும் மனங் குலையாத’ மாண்புக்குரிய மகத்தான வாழ்வியல் வழிகாட்டிகள்  என்பதைப்   புத்தகத்தைப் படிக்கும் எவரும் புத்தி பெற வைப்பதாக இருக்கிறது!

நூலின் முக்கியப் பாடம் சோம்பலை விரட்டியடித்து நம்பிக்கை இழக்காத நாணயம்  ….

நேர்மையுடன், எவர் உதவி செய்தாலும் அவரை செய்நன்றி குன்றாது, நினைவில் வைத்து, மறக்காமல் அவர்களிடம் நன்றிகாட்டத் தவறாத நற்பண்பு –  அவை மட்டுமின்றி, தனது பணித் தோழர்களின் உதவியை; உழைப்பை, துளியளவு சிறப்பானது என்றாலும், மலையளவு போன்றதாக அவர்களை ஊக்கப்படுத்தி ‘விசுவாச நிதி’யை வைப்பு நிதி போல் பெருக்கிடும் – வாழ்க்கையில் மற்றவர்கள் கற்றுக் கொண்டு உயர முற்பட வைக்கும் அரியவிஷயங்கள். அய்யா இறுதி இலக்கை அடைந்த,   ஒப்பிலா உத்தம தொழில் வல்லுநராக உயர்ந்த, என்றும் மறக்க இயலாத ‘ஆனந்த ராஜா’வாகத் தொழில் முயற்சியாளர்களுக்குக் கற்றுத் தரும் கல்வி வள்ளலாக அவரது, தடங்கல்களும், தோல்விகளும் நிறைந்த முட்பாதையில் – கைப்புண்களை விட, அவர் பெற்ற மனப் புண்களைப்பற்றி படிக்கும்போது நம்மையறியாமலேயே கண்கள் பனிக்கச் செய்கின்றன!

புத்தகம் முழுவதும் புத்தாக்கத்திற்கு முந்தையதாகக் கடந்த கரடுமுரடான சரிவுகளும், ஏமாற்றங்களும்பற்றிப் பலப்பல… செய்திகள்!

பெற்றோர்களின் குடும்ப வறுமை, நிதி வாய்ப்பின்மைப் அனுபவக் குறைவு காரணமாக, பள்ளியில் படிக்கும் மாணவப் பருவத்தில் பெற்றோர்களும், தனது வகுப்பில் உள்ள சகமாணவர்களின் கேலி, கிண்டல்களையே பெரிதாக எண்ணி,   முழுவதும் வளராப் பருவம் என்பதால், குடும்ப நிலை புரியாமல், தற்கொலை வரைத் தோல்வியின் விளம்பிற்கு அவரை வேதனைகள் விரட்டிச் சென்ற நிலையிலிருந்து தேறினார்; மாறினார் அய்யா திருப்பதிராஜா என்ற திண்மையாளர்!

நூலில், ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய ஒரு முக்கிய நிகழ்வு:  ‘பெங்களூருக்கு குடிபெயர்ந்த குடும்பம்’’ என்ற தலைப்பில் உள்ள பகுதியில் சொல்லப்பட்ட ஒரு முக்கிய நிகழ்வு இதோ!

படியுங்கள்! ஒரு சாதாரண நிகழ்வுதான் – ஆனால் அது ஏற்படுத்திய விளைவு  –  திருப்பம் இன்றைய வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு அடிப்படைக் காரணமான விவரங்களாகும்.

‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி,  பயன் தந்ததால் தான் அடையாறு ஆலமரம் போன்ற ‘‘அடையாறு ஆனந்தபவன்’’ வளர்ந்தோங்கி வருகிறது!

அது நூலில் ஒரு சிறு குறிப்பு மட்டும்தான்.

அப்பகுதி இதோ:

‘‘குழந்தைகளை பெங்களூரிலிருந்த பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார் ராஜா. அங்கும் ஃபீஸ்கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. வெகு சிரமப் பட்டு கடனை உடனை வாங்கிதான் சமாளித்தார் ராஜா. பெங்களூருக்கு வந்த பின்பும் தனக்கென்று ஒரு நட்பு வட்டத்தை ஏற்படுத்தி இருந்தார். ஸ்ரீனிவாசா ஸ்வீட்ஸ் கடையின் பில்டிங் சொந்தக்காரர் விஸ்வநாத், இடது மூன்றாவது கடையான பெங்களூர் ஒயின்ஸ் வெங்கடப்பா, மற்றும் ஜிக்கன்னா மேஸ்திரி கோவிந்த ராஜன் ஆகியோருடன் மிகவும் சிநேகமாகப் பழகி வந்தார்.

ஆத்திர அவசரத்துக்கு கடன் வாங்கிக் கொள்வார்; சொன்ன தேதியில் தவறாமல் கடனைத் திருப்பிக் கொடுத்து விடுவார். ஒரு நாள் சீனிவாசராஜா சோகமாய் அப்பாவின் அருகே வந்து நின்றார்.

என்ன சத்யா? உம்முனு இருக்கே… உனக்கு என்ன வேணும்?

அப்பா! யூனி ஃபார்ம் எல்லாமே கிழிஞ்சு போச்சு, ஒண்ணுகூட உருப்படியா இல்ல… புதுசு வாங்கித் தாங்கப்பா…

சரி நாளைக்கு கண்டிப்பா வாங்கித் தந்துடறேன். சொன்னபடியே மறுநாள் ஜவுளிக்கடைக்கு மகனை அழைத்துச் சென்றார் ராஜா. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு உயர்தரத்தில் துணி எடுத்தார்.

அப்பா… பத்தாதுப்பா… இதையே துவைச்சு துவைச்சுப் போட்டா… சீக்கிரமா நைஞ்சு கிழிஞ்சுடுதுப்பா… அதனால் கூடுதலா ரெண்டு செட் வாங்கிக் குடுங்களேன். செல்லமகன் சத்யா ஆசையாய் ஏக்கத்துடன் கேட்டதும் ராஜாவால் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை.

சரி! உன் இஷ்டம் சத்யா!

இன்னும் ரெண்டு செட் துணி குழந்தைகளுக்கு தேவைப்படுது… என்று ராஜா கூறியதும்.. கடைக்காரர் உயர்தரத் துணியைக் கிழித்து மடித்து தயாராக வைத்து விட்டார். பில் வந்ததும்  ராஜாவுக்கு திக்கென்றிருந்தது. கையில் சொற்பப் பணமே இருந்தது. இனி என்ன செய்வது? துணியை வேறு கிழித்து வைத்து விட்டார்கள். வேண்டாம் என்று திரும்பக் கொடுத்து விட முடியாதே! இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டோமே? ஒரு கணம் யோசித்தார் ராஜா. பசங்களா… நீங்க இங்கேயே உட்கார்ந்திருங்க… நான் உடனே வந்துடறேன். வேற எங்கேயும் போயிடக்கூடாது. வர்ற வரைக்கும் இந்த இடத்திலேயே இருக்கணும்… சரியா சத்யா? என்று உத்தரவிட்டு விட்டு, சைக்கிளை மிதித்துக் கொண்டு வேக வேகமாய் எங்கோ சென்றார். சிறிது நேரம் கழித்து சோர்வாய் வியர்த்து வழிய வந்த ராஜா, பில்லுக்குரிய பணத்தைக் கட்டி விட்டு குழந்தைகளுடன் ஜவுளிக்கடையை விட்டு வெளியேறினார்.

குழந்தைகளின் மனம் கோணி விடக் கூடாது என்பதற்காக எங்கெங்கோ ராஜா அலைந்து திரிந்து பணத்திற்காக ஏற்பாடு செய்து கொண்டு ஜவுளிக்கடைக்கு விரைந்து வந்திருந்தார்.

சீனிவாசராஜாவுக்கு குஷி பிடித்துக் கொண்டது. உயர்தரத்துணியில் மூன்று செட் யூனிஃபார்ம் கிடைத்து விட்டதே? ஆசைப்பட்டதை அப்பா மறுக்காமல் வாங்கி கொடுத்து விட்டாரே? உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது. அம்மா… பாரும்மா… யூனிஃபார்ம் மூணுசெட்டா அப்பா வாங்கித் குடுத்துட்டாரே? விலை உயர்ந்த துணிம்மா… தொட்டுப் பாரேன் என்றார் சீனிவாசராஜா.

இப்படி ஆளுக்கு மூணு செட் துணி வாங்கிக்கிட்டு வந்திருக்கீங்களே? நீங்க ஆசைப்பட்டது கிடைச்சிச்சுன்னு சந்தோஷப் படறீங்களே? இதை உங்களுக்கு வாங்கித் குடுக்கறதுக்கு… அப்பா எவ்ளோ சிரமப் பட்டாருன்னு யோசிச்சுப் பார்த்தீங்களா? இந்தப் பணத்துக்காக அவரு எங்கேயெல்லாம் அலைஞ்சாரோ? பாவம்டா உங்கப்பா! யாருகிட்டே கடன் வாங்கினாரோ? சத்யா! நீ விவரமான பிள்ளை… பொறுப்பில்லாம நீ இப்படி நடந்துக்கலாமா? ஃபீஸ் கட்ட முடியலைன்னு உனக்குத் தெரியுதுல்ல, உனக்கு பள்ளிப்படிப்பு அவசியமா சத்யா? படிச்சுதான் முன்னுக்கு வரணும்னு அவசியம் இல்லையே? நல்லா கவனம் செலுத்தி வச்சுத் தொழிலைக் கத்துக்கிட்டா, தொழிலில் சாதிச்சு முன்னுக்கு வரலாமே? உன்னால நிச்சயமாக முடியும்னு நம்பு! எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்குப்பா… உன் அப்பாவை பார்த்தியா…! சரக்குப்போடும் போது தீக்காயங்கள் பட்டிருக்கு… அவரோட நெஞ்சு, வயிரெல்லாம் காயமாகிக் கிடக்கிறது நீ பார்க்கலையா? பாவம் அப்பா! அடுப்பில் தினமும் வெந்து சாகிறார். கூடமாட இருந்து உதவு… சரக்கு போடறதுக்கு நீ கத்துக்கோ… என்று அறிவுரை கூறினார் முத்துலட்சுமி.

தாயார் கூறியதை ‘வேத வாக்காக’ எடுத்துக் கொண்டார் சீனிவாசா ராஜா, தனது படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். எஸ்.எஸ்.எல்.சி. படிப்போடு நின்று விட்ட சீனிவாசராஜா அப்பாவின் அருகிலிருந்து கூடமாட உதவினார். ஒரே வாரத்தில் சரக்கு போடுவதற்கு கற்றுத் தேர்ந்து விட்டார்.

அந்த நாளில் அடுப்புக்கு கோக் கரி போட்டு எரிப்பார்கள். அதிலிருந்து வரும் கொடிய புகையை சுவாசித்தால்… உடல் நலத்துக்கு கடுமையான தீங்கை விளைவிக்கும். அடுப்பு எரியும் போது, அதிலிருந்து திடீர் திடீரென்று சிறு சிறு அக்னி கண் தெரித்து விழும்… தவறி மிதித்துவிட்டால் ஜிவ்வென்று காலில் பதம் பார்த்துவிடும். காலில் மிதித்தாலே அந்த வேதனையைத் தாளவே முடியாது. நெஞ்சிலும் வயிற்றிலும் தெறித்து விழுந்தால்… எந்த அளவுக்கு வலிக்கும்? என்பதை உணர்ந்தார் சீனிவாசராஜா.

ராஜாவின் சிவந்த உடலில் பட்டிருந்த அநேக தீக்காயங்களைப் பார்த்த போது.. அவரது இதயம் கசிந்தது. அப்பாவின் அருகில் இருந்து… சரக்கு போடக் கற்றுக் கொண்ட சீனிவாசராஜாவுக்கு அப்போது வயது பதினைந்து தான்.. பெரிய மகன் வெங்கடேச ராஜா கடையைப் பார்த்துக் கொண்டார். இவர்கள் இருவரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் ராஜாவுக்கு சிறிது ஓய்வு கிடைக்கத் தொடங்கியது. நான்காவது கடையில் இருந்த மோகனும், இது புறத்தில் மூன்றாவது கரையிலிருந்த சதீஷும் குடும்ப நண்பர்களைப் போல பழகத் தொடங்கினார்கள். சீனிவாசராஜா அந்த குரூப்பில் சேர்ந்து கொண்டார். நேரம் கிடைக்கும் போது தங்களது கடையில் ஒன்று கூடியும் அல்லது அவர்களது கடைக்குச் சென்றும்… அரட்டை அடித்துப் பொழுது போக்குவார்கள்.’’

நூலைப் படியுங்கள் – பெற்றோரிடம் ‘பக்தி’ பற்றியும், அக்குடும்பத்தின் பக்தி பற்றியும்கூட பற்பல விவரங்களை அறியலாம். இந்நூலில் அவர்களது ‘‘உழைப்பின் வாரா உறுதியாக உளவோ’’ என்ற உறுதிப்பாடும் ஈடுபாடும்தான் எடுத்துக்காட்டானவை.

‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ உழைப்பு எப்போதும் உயர்த்தும் – என்றும் எவரையும் கைவிடாது!

அடையார் ஆனந்தபவன் ‘ஆனந்தராஜாக்களின்’ அளப்பரிய சாதனை!

அடையார் ஆனந்தபவன் வெற்றி என்ற அறைகூவல் என்பது ஒரு இனிப்பின் வெற்றி மட்டுமல்ல; கசப்பின் களிப்பும்கூட!

இந்நூலுக்கு பிரபல தொழிலதிபர்  பி.ஆர். இராம சுப்ரமணியராஜா (ராம்கோ குரூப்)  தந்துள்ள முன்னுரை அணி செய்வது கூடுதல் சிறப்பு!

(நிறைவு)

--விடுதலை நாளேடு, 3.9.26

புதன், 2 செப்டம்பர், 2026

உணவு நிறுவன வரலாறு – உழைப்பின் மேன்மைக்கு ஒரு வழிகாட்டி நூல் (1)

 

சுவாசிக்கும் உயிர்க் காற்றும், ( பிராண வாயும்)  உண்ணும் உணவும், இயற்கை தரும் ஊக்கமும் மனித வாழ்வின் உடல் நல பாதுகாப்புகள் ஆகும்!

இன்றைய அதிவேக வாழ்க்கை முறையிலும், குடும்பங்களில் ஆண், பெண் அனைவரும் பணிகளுக்குச் செல்லும் வளர்ச்சி நிலை வாழ்வு காரணமாகவும், வீட்டிலேயே சமைத்து உண்ணும் உணவுப் பழக்கம் பெரிதும் மாறி வருகிறது!

இப்படி வெளியில் உணவுப் பண்டங்களை –  உணவகங்களில் வாங்கி சாப்பிடும்போது அது நமது உடல் நலத்திற்கு கேடு செய்யாத வகையில்அமையும் உணவுகள், சிற்றுண்டி, பேருண்டி, நொறுக்குத் தீனி எவையானாலும் உணவகங்களில் வாங்கிச் சாப்பிட வேண்டிய  நிர்பந்தம் தவிர்க்க முடியாதவைகளாக உள்ளன.

அதற்கு நல்ல சுகாதார முறையில் தயாரிக்கப்பட்ட, சுவைகுன்றாமல் எப்போது தயாரிக்கப்பட்டது, எது நாள் வரை அவற்றைப் பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு ஊறுநேராது என்பதுபோன்ற தகவல்களை, விற்கப்படும் பொருள்மீதே அச்சிட்டு வழங்குவது, அன்றாடம் தயாரிப்புகளிலும் மிகவும் கவனம் செலுத்தி வளர்ந்தோங்கியுள்ள ‘‘பிரபல’’ புகழ் வாய்ந்த உணவகங்களில் முதன்மை வரிசையில் முன் நிற்பது ‘அடையாறு ஆனந்தபவன்’ என்ற மிகச் சிறந்தஉணவுத் தயாரிப்பு நிறுவனமாகும்.

நம் நாட்டு எல்லையைத் தாண்டி உலகத்தின் பல்வேறு முக்கிய பெரு நகரங்களில் இந்தஉணவகம், உண்ணுவோரின் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கின்றன என்பதைக் கடந்த சுமார்  2 ஆண்டுகளாக அறிந்து, வியந்து, மகிழ்ந்து ஒன்றாக ‘அடையாறு ஆனந்தபவன்’ என்ற ‘மாடல் உணவகம்’ அமைத்து காட்சி அனுபவத்தையும்,  சுவையும், சுகாதாரமும் இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு வாடிக்கையாளர்களை வரவேற்று உபசரிப்பதை நேரில் கண்டு, உண்டு, உணர்ந்தேன்.

ஆஸ்திரேலியாவின் முக்கிய பெரு நகரங்களான ‘சிட்னி’ (Sydney)  ‘மெல்பேர்ன்’ (melbourne) ஆகிய உலகப் புகழ் வாய்ந்த நகரங்களில் அந்தந்த கிளைகளுக்கே தோழர்களுடன் சென்று பசியாறி திரும்பியபோது  பெருமிதம் கொள்வேன். காரணம் நானும் அடையாறு வாசி அல்லவா!… சுமார் 60 ஆண்டுகளுக்குமேல்! என்பதால் மட்டுமல்ல, எளிய நிலையில் இருந்து கடும் உழைப்பால் பல சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டி, வாழ்வில் ஏற்பட்ட இடுக்கண்கள், தடைகளைத் தாண்டி  தளராத தன்னம்பிக்கை, தயங்காத தொடர் உழைப்பாக, வெற்றியோடு தன்னடக்கம், உணவில் புதிய புதிய ஆய்வு முறைகளைப் புகுத்தி, வாடிக்கையாளர்களை ‘சுண்டி’ இழுக்கும் வழக்கமான தொழில் முறையையும் தாண்டி, புதுப்புது ‘உத்திகளை ஆய்வு நோக்கில் செய்து, தொழிலில் வெற்றி மேல் வெற்றி என்பதைக் கண்டு வரும் உலகம் வியக்கும் அந்த உழைப்புக் குடும்பத்தின் சாதனைகளை, தொழில் தொடங்குவோர், தொழிலில் பல சோதனைகளையும், இக்கட்டுகளும், இடர்களும் சுழன்றடிக்கும் ‘சுனாமிகள்’ போல் வந்தாலும் மனந்தளராது, தொடர்ந்து முயற்சி, விடா முயற்சி என்ற பந்தயக் குதிரைகள் மீதேறி சலிப்பற்று சவாரி செய்து ‘இலக்கு ஒன்று மட்டுமே எமது குறி’ என்று உழைப்புத் தேனீக்களாக அடையாறு ஆனந்தபவன் நிறுவனத்தின் –  அந்த ஆலமரத்தின் வெற்றிக்கு வேராகவும், விழுதாகவும்  உள்ளவர்கள்பற்றி அறிந்தால், அதுவே இன்றைய, நாளைய இளைய சமூகத்தின் தொழில் தொடங்கி நடத்துவதில் வெற்றியடைவது எப்படி என்று ‘தவிக்கும்’ பலருக்கும் வழிகாட்டும் கலங்கரை வெளிச்சம்போல், அந்த நிறுவனங்கள் போற்றுதலுக்குரிய மதிப்புறு, தமிழ்த்திரு கே.எஸ். ஆனந்தராஜா’வாக ‘வாழ்வில்   வெற்றி பெற்ற அய்யா  திருப்பதி ராஜா’  அவர்களைப் பற்றிய ஒரு நூலை – ‘இனிப்பின் வெற்றி’என்ற தலைப்பில் எழுத்தாளர் லட்சுமி பிரபா அவர்கள் எழுதியதை படித் தேன் – மகிழ்ந் தேன். இது பலரும் கற்க வேண்டிய ஒரு தொழில் உலகத்திற்கான பாட நூல், ‘எழுத்துத் திலகம்’ என்ற பட்டம்  இந்த நூலாசிரியருக்கு மிகவும் பொருத்தம் என்பதை மறுக்க வொண்ணாத ஒன்று.

‘தந்தை மகற்காற்றும் நன்றி’ –

‘மகன் தந்தைக்காற்றும் உதவி’

என்ற குறளாசானின் குறிப்புகளுக்கு  ஏற்ப அவரின் தந்தையை தமது வழிகாட்டி, ஆசான் எனக் கொண்டு, தந்தை சொல் மிக்க ‘மந்திர’மில்லை என்று நடந்ததோடு, தடம் மாறாது; ‘தம்மின், தம் மக்கள், அறிவுடைமை’ என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் அவரதுஅன்பு மகன்கள் – பெருமைமிகு உழைப்புத் தேனீக்களான கே.டி. சீனுவாசராஜா, கே.டி.வெங்கடேசராஜா ஆகியோர்தம் ஆளுமை   அறிவும், செறிவு நிறைந்த துணிவும், கனிவும் பாராட்டிப் போற்றத்தக்கவை.

மேலும் பல செய்திகள் நாளை.

(தொடரும்)

-விடுதலை நாளேடு, 2.9.26


(:திருத்தப்பட்டது- வலை பூ பதிவாளர்)

வாழ்வில், குறிப்பாக பொதுத் தொண்டில் கற்க வேண்டிய பாடம் இதோ!

 

கடந்த 26.8.2026 அன்று மேனாள் அமைச்சரும், சட்டப் பேரவைத் தலைவருமான க. இராசாராம் அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. திராவிட இயக்கத்தில் வளர்ந்து (கடைசியில் அவர் திசைமாறிப் போய்) வைதீக உணர்வுக்கு ஆளானவர் என்ற நிலை – பழைய ‘திருவாசக மணி’யான கே.எம்.பாலசுப்ரமணியன், சொ. முருகப்பா போன்ற சிலரது பட்டியலில் சேர்க்க வேண்டியவராகி விட்டாரே
க. இராசாராம் அவர்கள் என்ற வருத்தம், அவரைப் பற்றியது என்றாலும், கடந்த கால அவரது தொண்டு – நற்தொண்டு என்ற நிலையில், அவரது விழாவில் கலந்துகொண்டோம். அவர் தந்தை பெரியாரிடம் நெருக்கமாக இருந்து கற்றுக் கொண்டதை ‘ஒரு சாமானியனின் நினைவுகள்’ என்ற அவரது நூலில் அவர் பதிவு செய்துள்ளார்.

அந்தத் தலைப்பே அவர் தந்தை பெரியாரிடம் கற்றுக் கொண்ட பாடத்தின் விளைச்சல் என்றே சொல்ல வேண்டும்.

அதில் சில முக்கியப் பதிவுகளாகியுள்ளவை என்றும் அய்யாவின் அரிய சிந்தனை எப்படி எல்லா தலைமுறை பொது வாழ்வுக்கும் பயனளிக்கும் பாடம் என்பதால் இன்றைய ‘வாழ்வியல் சிந்தனைகள்’ தொடரில் அதைப் பதிவு செய்கிறேன்.

lll

‘‘இருட்டறையில் உள்ளதடா உலகம்!

சாதி  இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே!’’

என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

‘இருட்டிலே வாழும் தமிழர்களை வெளிச்சத் துக்குக் கொண்டு வர வேண்டும்’ என்பது தான் தந்தை பெரியாரின் கொள்கை.

கப்பலில் அய்யாவுடன் பயணம் செய்யும்போது ‘‘உங்கள் முயற்சி நம் நாட்டில் சுலபமாக ஏற்க மறுக்கப்படுகிறது; அதே நேரத்தில்  அய்ரோப்பா கண்டத்தில் மாறுதல்கள் சுலபமாக நடந்து விடுகிறதே!’’ என்று கேட்டேன்.

‘‘அய்ரோப்பா கண்டத்தில் புரட்சிகள் ஏற்படுவ தற்குக் காரணம் அது பாறை போன்ற ஒரு பூமி. அங்கே ஒரே மதம் – சாதிகள் இல்லை. எனவே, மக்கள் மத்தியில் எந்தக் கட்டடத்தையும் சுலபமாக அஸ்திவாரம் அதிகம் இல்லாமல் கட்டிவிட முடிகிறது.

நமது பூமி களிமண் பூமி போன்றது – சாதிகளால் பிளவுபட்டது.

இவர்களை முதலில் நாம் ஒன்று சேர்க்க வேண்டும். இப்படி நிறைய வேலைகள் இருக்கின்றன. அதனால்தான் இங்கு புரட்சி எதையும்  சுலபமாக உருவாக்க முடியவில்லை.

நம் அளவுக்கு இந்த முயற்சியில் வேறு யாரும் வேகமாக இறங்கவில்லை. நம்மால் ஆனவரை முயல்வோம்.’’ என்றார்.

lll

‘‘தந்தை பெரியாருடன் பயணித்தவர்கள் ஏதாவது ஒரு கருத்து வேற்றுமையால் பிரிந்து போய் இருந்தார்கள். இதற்கான காரணங்களைக் கப்பலில் அய்யாவிடம் கேட்டேன். கருத்து வேற்றுமைக்கான காரணங்கள் மிகவும் சாதாரணமானவை.

உதாரணத்திற்கு பெரியார் – ‘‘பொது வாழ்வுக்கு வருபவர்கள் எவரும் தன் சொந்த வசதிக்கு மேல் வாழாமல், ஊரான் உழைப்பில் வாழும் சுகத்தையும் விரும்பாமல் இருக்க வேண்டும்.

பொதுவாக மற்றவர்கள் பார்த்து பொறாமை கொள்ளும்படி வாழக் கூடாது. மூட்டை சுமப்பதைக் கூட சுமக்க முடியாததால்தான் தூக்காமல் விடுகிறேனே தவிர, அதை இழிவாகக் கருதி அல்ல’’ (‘‘மூட்டை தூக்கும் போது பாரத்தினால் கஷ்டப்பட்டு இருக்கிறேனே தவிர, நான் ஒரு போதும் வெட்கத்தினால் கஷ்டப்பட்டது இல்லை.’’) என்று சொல்பவர்!

எவ்வளவு அருமையான வாழ்வியல் பாடம்! பொது வாழ்விற்கு வருகிறவர்களுக்கு சிறந்த கலங்கரை வெளிச்சம்!

தந்தை பெரியாரின் இந்த ‘பத்தியத்தை’ கடைப்பிடிக்க முடியாதவர்கள் பலரும் பயணத்தி லிருந்து பாதை மாறி, வசதி என்ற வசந்தத்தை நோக்கி தேன் குடிக்கச் செல்லும் வண்டுகளாகி விடுகின்றனர்.

அவர் வைத்த கடினமான பத்தியங்களில் தேறியதால்தான் பயணம் முழுவதும் எந்தப் பிரச்சினையும் இன்றி தேறினேன்.’’

lll

‘‘அய்யாவிடம் பணியாற்றியதில் நான் பொது வாழ்வுக்கான பயிற்சி முழுவதும் பெற்றேன்.

  1. வருபவர்களை மதித்து வரவேற்றல்.
  2. மனந்திறந்து பேசுதல்.
  3. முடிந்த உதவிகளை உடனடியாகச் செய்தல்.
  4. ஒருவரது ஆற்றலைக் கண்டு, மனந்திறந்து பாராட்டுதல்.
  5. பொது வாழ்வில் நீண்ட காலம் இருப்பதற்கு சிக்கன வாழ்வு – ஆடம்பரமற்ற வாழ்வு தேவை என்பனவற்றையெல்லாம் அய்யாவிடம் கற்றேன்.

தந்தை பெரியார் சிறைப் பறவை. அநீதியைக் கண்டு சீற்றம் கொள்ளும் தன்மை கொண்டவர்.

அரசியல், சமுதாயக் கருத்துகளில் தனக்கெதிரான கருத்துக் கொண்டவர்களை நாகரிகத்தோடு எதிர்ப்பவர்.

தனக்கு நண்பராக இருந்தாலும் தன் சமுதாயத் திற்குக் கேடு செய்கிறார் என்று உறுதியாகத் தெரிந் தால், நட்பைக்கூட ஒதுக்கி வைத்து, துணிச்சலாக எதிர்ப்பவர். அதற்காக அவர் யாருடனும் விரோதியானதும் இல்லை.

அவரோடு தமிழ்நாடு முழுவதும் பலமுறை சுற்றியபோது இந்தப் பாடங்களை அவரிடம் கற்றேன்.

பிரதமரோ, முதலமைச்சரோ அல்லது நீதிபதியோ, அவர்களின் பதவிபற்றி அஞ்சாமல் அவர் தன் கருத்துகளைக் கூறி வந்ததை நான் அருகில் இருந்து பார்த்துப் பார்த்து பலமுறை வியந்து போய் இருக்கிறேன்.’’

lll

‘‘ராஜாஜி என்றழைக்கப்படும் திரு.சி. இராஜ கோபாலாச்சாரியாரிடம் க. இராசாராம் நன்கு பழகியவர். அவரது  (இராஜாஜி) மகன் சி.ஆர். நரசிம்மனை நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் தோற்கடித்தவர் க. இராசாராம் என்பதை மறந்து ஆச்சாரியார் தன்னிடம் காட்டிய அன்பைப் பெருமையுடன் கூறும் அவர் ஓர் அருமையான செய்தியைக் குறிப்பிடுகிறார்.

‘‘பலரைப் பற்றி என்னிடம் (ராஜாஜி) மனந் திறந்து பேசினார். தன் நண்பர் தந்தை பெரியாரைப்பற்றிச் சொல்லும்போது, ‘ அவரிடம் சேரும் ஒவ்வொரு காசும் பொதுவுக்குத்தான் சேருமே தவிர, சொந்தத்துக்கு வைத்துக் கொள்ள மாட்டார். பண விஷயத்தில் என் நண்பர் நாயக்கரைப் போல் நாணயமானவர்களைக் காண்பது அரிது’ என்று சொன்னது கல்லால் அடித்து வைத்த சாசனம் போல் இருந்தது!’’

இப்படி பல்வேறு அறிய வேண்டிய அரிய செய்தி களையும்,  கற்க வேண்டிய பாடங்கள் – அனைத்து பொதுத் தொண்டறங்களையும் பின்பற்றினால் எப்படி இருக்கும்? என்று சிந்தித்துக் கொண்டே இக்கட்டுரையை முடிப்போம்!

-விடுதலை நாளேடு, 29.8.26

நாராயணகுரு குறித்த புதிய ‘திறவு’கள்!

 

இந்திய நாட்டின் சமூகப் புரட்சியின் முதன்மை யானவர்கள்

  1. ஜோதிபா பூலே (மராத்திய மாநிலம்)
  2. சத்ரபதி சாகுமன்னர்
  3. ஆசான் நாராயண குரு
  4. தந்தை பெரியார்
  5. பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர்.

(முதன் முதலில் இப்படி வரிசைப்படுத்தியவர் பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனரும் என்றும் தடம் மாறாத தனிப் பெரும் அரசியல் சமூகப் புரட்சியாளருமான நண்பர் கான்ஷிராம் அவர்கள்)

இதில் இந்த அய்ம்பெரும் புரட்சியாளர்களில் தந்தை பெரியார் ஒருவர்தான் மதம் எதிலும் சாராது, மதங்களையும் எதிர்த்தவர் என்பது முக்கியமாகச் சிந்திக்க வேண்டியது.

ஜோதிபா பூலே அவர்கள் முன்னோடியாக,  சமூகநீதிப் போராளியாக ஒடுக்கப்பட்டோருக்கு  முதல்  அறிவூட்டிய மாமனிதர் ஆவார்.

அவரது சிறப்பினை இவ்வாண்டு நவம்பரில் நாம் சிறப்பாக நடத்தவிருக்கிறோம்.

அய்வரில் ஒருவர் கேரளத்து அமைதிப் புரட்சியாளர் சிறப்புமிகு ஆசான் நாராயணகுரு.  ஒடுக்கப்பட்ட மக்கள், குறிப்பாக அவர் சார்ந்த  ஈழவ மக்கள் உரிமை பறிக்கப்பட்டதையும், கல்வி சமத்துவ வாய்ப்புகளையும் அவர்களுக்கு அறவே மறுத்தும் வந்ததையும் கோயிலுக்குச் சென்று கடவுளை கும்பிட உரிமை இல்லை என்றும், அவர்களைத் தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை என்ற காட்டுமிராண்டி காலத்திலும் காண முடியாத ஒரு பெரும் பேத – ஜாதிப் பிரிவை உண்டாக்கி செய்ததையும் ‘வாயில்லா ஜீவன்களாக’ அடங்கி ஏற்றுக் கொண்ட மலையாள நாட்டுப் பகுதியில், அதை எதிர்த்துப் புரட்சி வெடி வைத்தவர் கேரளத்தில் ஆசான் நாராயண குரு அவர்கள்!

அவர்கள் பற்றியும் அவர் துவக்கி வளர்த்துள்ள ‘தர்மபரிபாலன சபை’ அமைப்பு பற்றியும், அதை வார்த்த அவர்தம் அருமைச் சீடர்கள் டாக்டர் பல்பு, குமரன் ஆசான் ஆகியோர் பற்றியும் இதுவரை எத்தனையோ நூல்கள் வந்திருந்தாலும் அண்மையில் ‘தெற்கின் புத்தர் – ஆசான் நாராயண குரு’ என்ற ஓர் ஆய்வு நூலை – மதுரை திருவாளர் தமிழன் இளங்கோ அவர்கள் மிக மிக ஆர்வத்துடன், இதுவரை பலரும் அறிந்திராத, அரிய தகவல்களைத் திரட்டி 724 பக்கங்களில் அருமையான ஒரு சமூக வரலாற்று நூலாக எழுதியுள்ளார். அனைத்து சமூக  நீதியாளர்களும் நூலாசிரியரைப் பாராட்டிப்  பெருமைப்படுத்த வேண்டும்.

இதற்காக அவரது கடும் உழைப்புக்கும், திரட்டிய தகவல்களுக்கும் ஓர் ஆய்வு முனைவர் பட்டமே தரலாம்.  தரத் தகுதியான ஆய்வு நூல். ‘கேரளம்’ ஆகியுள்ள அந்த மாநிலத்தில் பல கிராமங்கள் உட்பட சென்று தரவுகளைத் திரட்டி, பலரையும் பேட்டி கண்டு, தனி ஒரு மனிதராக இதனைச் செய்ய முடியுமா என்றால் ‘முடியும் – முயன்றால்’ என்பதை விடையாகத் தந்துள்ளது – இந்த அறிவு ஒளி வீச்சு!

பகுத்தறிவாளர்கள், சுயமரியாதை எழுத்தாளர்கள், பகுத்தறிவுப் பாலவர் கவிஞர் அறிவுமதி, தவத்திரு பால பிரஜாபதி அடிகளார், ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியின் செய்திப் பிரிவுத் தலைவர் ‘செறிஞர்’ (செறிவான கருத்துகளை எழுதுபவர்) ப. திருமாவேலன், முற்போக்குச் சிந்தனையாளர் வாலாசா வல்லவன் ஆகியோரது அறிவுரைகள், அணிந்துரைகள், கருத்துரைகள், பாராட்டுரைகள் கொண்ட இந்த நூலை ஒரு சமூக வரலாற்று நூலாக எழுதி, நாராயண குருவை முற்றிலும் ஒரு சமூகப் புரட்சியாளராக, சரியானபடி  இந்நூலில் தமிழன் இளங்கோ சிறப்புடன் காட்டியுள்ள  பாங்கு அவரது தனித்த சிறப்புமிகு சிந்தனை ஓட்டத்தையே காட்டுகிறது.

மதத் தலைவர், மடங்களில் வாழும் – பூசை புனஸ்காரங்கள் நிலைக்கு மாறுபட்டு, எழுத்தோவியத்தில் பல தகுந்த தரவுகளுடன் பயணத்தில் பலரை சந்தித்துத் திரட்டிய செய்திகளை வைத்து எழுதியுள்ளார்.

‘திறவுகள்’ என்று தலைப்பிட்டு ஏழு பிரிவுகளில் அரிய தகவல் களஞ்சியமாகியுள்ளார்.

‘திறவு 3’இல் வைக்கம் போராட்டம் துவக்கி தந்தை பெரியார், காமராசர் பலவற்றை அவர் ஒரு வகை தனித்த பார்வை திரட்டித் தரும் கருத்துகள் மிக குறிப்பிடத்தக்கவையாகும். அரிய முக்கியத்துவம் வாய்ந்த மற்ற வரலாற்றலாளர்கள்பற்றி மறந்தோ மறைத்தோ விட்ட செய்திகள் அவை.

‘‘நூலைப்படி, நூலைப்படி’’ என்று ஆணையிட்ட நமது புரட்சிக் கவிஞர் ஆணையை ஏற்று இந்த அரிய நூலைவாங்கிப் படிப்போம் – அக்கருத்தொளியை அனைவருக்கும் சேர்ப்போம்.

மிகுந்த பாராட்டுகள் – நூலாசிரியர் மானமிகு தமிழன் இளங்கோ அவர்களுக்கு!

-விடுதலை நாளேடு, 28.8.26

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

டாக்டர் அம்பேத்கர் கடிதமும், புதிய வெளிச்சமும்! (1)(2)

 

‘ஒரு புரட்சியாளரின் கடிதங்கள்’ – ‘Letters of Revolutionary’ என்ற தலைப்பில் வெளியாக்கப்பட்டுள்ள இந்த கடிதத் தொகுப்பில் பல கடிதங்கள் – இடம் பெற்றுள்ளன என்றாலும், சிலவற்றை அறிந்து கொண்டால் பலரைப் பற்றியும் அவர்களது சிந்தனைகளும், செயலாக்கங்களும் பற்றிய வரலாற்று நிகழ்வுகள் நமக்கு ஒரு புதிய வெளிச்சத்தைத் தரும். தெரிந்த தலைவர்கள்; அவர்களைப் பற்றித் தெரியாத – மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள், கண்ணோட்டங்கள்  பற்றித் தெரிந்தால் ‘ஒப்பனை’ இல்லாத உண்மைகளை நாம் புரிந்து ஒரு தெளிவான மதிப்பீட்டினைப் பெற முடியும் என்பதை இக்கடிதங்கள் காலக் கண்ணாடியாக நமக்குக் காட்டுகின்றன.

எடுத்துக்காட்டாக, டாக்டர் அம்பேத்கர் அவர்களது வரலாற்று முக்கியத்துவமுள்ள  எழுத்துகளைக் கொண்ட  ‘‘அரிய, பெரிய ஒரு நூல்’’ (Magnum Opus) என்று பலராலும் பாராட்டப்படும் நூல்தான் ‘Buddha and His Dhamma’ – ‘‘புத்தமும் – தம்மமும்’’ (புத்தரும் அவரது கொள்கை நெறியும்) என்ற அற்புதமான ஆய்வு ஆவணம் போன்றதொரு நூல். அந்த நூலை அவர்கள் வெளியே கொண்டு வந்து மக்களுக்குச் சேர்க்க இறுதியில் அப் புத்தகத்தை அச்சிட்டு வெளிவர அவர் பட்ட பாடுகள் எவ்வளவு?

‘‘அச்சுச் செலவு  20  ஆயிரம் ரூபாய் என்பது எனக்கு மிக அதிகமான தொகையாகும். எல்லாப் பகுதி (நண்பர்கள் மூலம் நிதி உதவி) உதவியையும் நாடி முயற்சி செய்கிற நிலையில் – அந்த அளவுக்குச் செலவிட என்னிடம் நிதி இல்லை என்பதால் தங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

இந்திய அரசாங்கம் எனது அந்தப் புத்தகத்தை 500 பிரதிகள் வாங்கி, நூல் நிலையங்களுக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும், கல்விமான்களுக்கும் அனுப்பினால் புத்தரின் 2500ஆம் ஆண்டு விழாவை கொண்டாடவிருக்கும் இந்திய அரசுக்கு, அது ஒரு சிறப்பான அம்சமாக அமையும். பவுத்தத்தினைப் பற்றி உங்களது ஆர்வத்தை நான் நன்கு அறிவேன்.

அதனால் உங்களை நாடுகிறேன்.

நிச்சயம் தாங்கள் உதவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.’’

தங்கள் உண்மையுள்ள

பி.ஆர். அம்பேத்கர்

(ஆங்கிலக் கடிதத்தின் தமிழ் மொழியாக்கம்)

மேற்காட்டிய கடிதத்தைப் படித்தவுடன் என் கண்களில் நீர் கசிய ஆரம்பித்தது.

பொது வாழ்வில் 40 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்; வெளிநாடுகளில் படித்துப் பட்டம் பெற்று, பல பெரும் பதவிகளை வகித்த ஓர் உலகமகா அறிஞரான  டாக்டர் அம்பேத்கரின் இறுதிக் கால நிதி நிலை எப்படி இருந்தது என்று பார்த்தால், பொது வாழ்வில் அவரது நேர்மை, தூய்மை, தனக்கென வாழாமல் பிறருக்காக – தொண்டறச் செம்மலாக, தந்தை  பெரியாரைப் போல வாழ்ந்துள்ளார் என்பதை, இன்றைய படாடோபத்தினை  விரும்பும் அரசியல் தலைவர்கள், பதவியாளர்களுடன்  – இவரை ஒப்பிட்டுப் பார்த்து ‘உண்மையின் கதி இதுவா?’ என்ற கேள்வியினைக்  கேட்டு, அதுதான் அவர் வாழ்க்கை ஒளி என்றே வரலாறு அவரை உச்சத்தில் மெச்சிக் கொண்டாட வைக்கும்.

அதற்குப் பிரதமர் நேரு பதில் என்ன? நாளை பாருங்கள்.

(வளரும்)

- விடுதலை நாளேடு, 19.08.26



பிரதமர் பண்டித நேரு அவர்கள் டாக்டர் அம்பேத்கருக்கு எழுதிய பதில் கடிதம் இதோ:

ஆங்கிலத்தின் தமிழ் மொழியாக்கம்:

எண். 2196-PMH/56

புது தில்லி

செப்டம்பர் 15, 1956

அன்பார்ந்த டாக்டர் அம்பேத்கர்,

‘‘செப்டம்பர் 14ஆம் தேதியிட்ட தங்களின் உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்கள் கேட்டுக் கொண்டபடி உங்கள் நூலின் அதிக எண்ணிக்கையிலான பிரதிகளை வாங்குவது எங்களால் இயலுமா என்பதில் எனக்குச் சந்தேகமே உள்ளது. புத்த ஜெயந்தி விழாவையொட்டி வெளியீட்டிற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை நாங்கள் ஒதுக்கியிருந்தோம். அந்தத் தொகை தீர்ந்துவிட்டது, மேலும் உண்மையில் அதிகமாகி விட்டது. நாங்கள் நிதியுதவி அளிக்க இருந்த பவுத்தம் தொடர்பான சில நூல் திட்டங்களைக்கூட நிராகரிக்க வேண்டியிருந்தது. எனினும், உங்கள் கடிதத்தை புத்த ஜெயந்தி குழுவின் தலைவரான டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் அனுப்பி வைக்கிறேன்.

வெளிநாடுகளிலிருந்து பலர் வருகை தரும் புத்த ஜெயந்தி விழாக் காலத்தில், டில்லியிலும் மற்ற இடங்களிலும் உங்கள் நூலை விற்பனைக்கு வைக்கலாம் என நான் பரிந்துரைக்கிறேன். அப்போது அது நன்கு விற்பனையாகக் கூடும்’’.

தங்கள் உண்மையுள்ள,

ஜவஹர்லால் நேரு

டாக்டர் பி. ஆர். அம்பேத்கர், எம்.பி.,

26, அலிபூர் சாலை,

சிவில் லைன்ஸ், டெல்லி.

 

இவ்வாறு நிதி உதவிட வாய்ப்பில்லை என்றுகை விரித்தார் நேரு!

2500 புத்த ெஜயந்தி கொண்டாட்டங்களை நடத்தி, உலகிற்கு வெளிச்சம் காட்டிட இந்திய அரசின் கஜானாவில் அதுவும் பல லட்சங்களை அப்போது ஒதுக்கி ‘2500 Years of Buddha’ போன்ற (டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் முன்னுரையுடன் வெளியிடப்பட்ட  நூல்) ஒன்றிய  அரசு நூல் வெளியீடு என்று நடத்தியது. ஆனால் இந்த ரூ.20 ஆயிரம் தொகையைப் பெற டாக்டர் அம்பேத்கரின் நூல்களை  நூலகங்களுக்கு அனுப்பி உதவிட ஏனோ நேருவால் முடியவில்லை?

இதைப் பணமில்லை என்று நம்ப முடியுமா? அதைவிட மிக மிகக் கசப்பான உண்மை – ‘‘மனமில்லை’’ என்பதுதானே சரியானதாக இருக்க முடியும்.

முற்போக்காளர் நேருவின் இந்த நடவடிக்கைக்கு   அரசியல் காரணமா அல்லது வேறு கண்ணோட்டமா என்பது  புரியவில்லை

அதைவிட சிரிப்பு வரக்கூடிய அதில் ஒன்று என்ன தெரியுமா?

புத்த ஜெயந்தி கமிட்டியின் தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு டாக்டர்  அம்பேத்கரின் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளேன் என்று  பிரதமர் நேரு கூறியதுதான்!

உங்கள் புத்தகங்களை விற்பனையாளர்களுக்கு அனுப்புங்கள். டில்லி விழாவிற்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் விழாவிற்கு வருகிறவர்கள் பலரும் வாங்கக்கூடும் என்பது ஒரு இலவச அரியதொரு (கருத்து தானம்) வழி கூறி, சோஷலிசம் பேசிய பண்டித நேரு இப்படி பதில் எழுதினார்.

அதற்குப் பின்னே இருப்பது எதுவோ! வாசகர்களே தீர்மானிக்கட்டும்.

எவராலும் இதை நியாயப்படுத்த முடியுமா?

- விடுதலை நாளேடு, 20.08.26

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

வாருங்கள், இந்தக் கருவூலத்தைப் பாருங்கள், படியுங்கள்!

 சில நாள்களுக்கு முன் சீரிய சிந்தனையாளரும், சிறந்த  எழுத்தாளருமான அருமை சகோதரர் கவுதம சன்னா அவர்களும், அதேபோல் சிறந்த ஆய்வாளரும், முற்போக்கு சிந்தனையாளரும், பெரியார் – அம்பேத்கரின் கருத்தாளருமான ஜெர்மனி வாழ் சுபாஷினி அவர்களும் என்னை சந்தித்து, பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களது உரைகள், எழுத்துகள் முதலியவற்றை பல புதிய முறையில் விளக்கப்பட பல நூல்கள் என்ற அறிவு நிதியை அளித்தனர்; தோழர் டாக்டர் ஒளிவண்ணன் அவர்களும் உடன் இருந்தார்.

கடந்த சில ஆண்டுகளில் திரு.கவுதம சன்னா அவர்கள் கடுமையாக உழைத்து, பெரும் பொருட் செலவில் – தமிழ்ச் சமூகத்தை ‘அம்பேத்கரியம் இதுதான்’ என்று விளங்கிக் கொள்ளும் வகையில் அரிய தொகுப்புகளாக அவை அமைந்தன.

வியந்துபோனேன்! எளிதான சாதனை அல்ல அது. எழுத்து, பதிப்புலகில் அது ஓர் இமாலயச் சாதனை!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் அருமை சகோதரர் முனைவர் தொல். திருமாவளவன் அணிந்துரையோடு வந்த அந்தக் கருத்துக் கருவூலத்தை நேர நெருக்கடியிருந்த போதிலும்,  ரயில், கார் பயண நேரத்தில் படித்து விடும் ஒரு மகிழ்ச்சி நோய் !(?) எனக்கு எப்போதும் உண்டு. அதன்படி படித்து எழுதுகிறேன்.

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் எழுத்துகள், பேச்சுகள், ஆவணங்கள் (அவரது கடிதங்கள் உட்பட) என பல தொகுதிகளாக கொணரப்பட்டுள்ளது. ‘அம்பேத்கரியம் வழிகாட்டி’ என்பது அரிய படங்களுடன் அம்பேத்கரின் நூல்கள் உட்பட பல நூல்களின் தமிழாக்கம் உள்ளன.

முன்பு பெருமைக்குரிய பேராசிரியர் அரசு  மற்றும் சீரிய பகுத்தறிவாளர் புலவர் செந்தலை கவுதமன் போன்ற நண்பர்களைக் கொண்டு ‘திராவிட மாடல்’  அரசின் உதவியோடு, குறைந்த விலைக்கு நியூசெஞ்சரி வெளியீடு வந்ததும் ஒரு வகை மக்கள் பதிப்பாக மதிப்பும், பாராட்டத்தக்கவகையில் அமைந்தது என்ற  மற்றொரு வகையில் முக்கிய மானது!

வாழ்வியல் சிந்தனைகள்

சகோதரர் கவுதம சன்னா அவர்களது இந்தத் தொகுப்பில் சிறப்புக்குச் சிறப்புச் சேர்க்கக்கூடிய, இதுவரை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கிடைப்பதற்கரிய பொன்னான வாய்ப்பு – புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின்கடிதங்களாகும் (இது ஆங்கிலத் தொகுப்பு).

1936இல் முதன் முதலில் 90 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்நாட்டிற்கு டாக்டர் அம்பேத்கர் அறிமுகமாகாத கால கட்டத்திலேயே, அவரது வரலாற்றுப் பெருமை இது.  அந்நாளில் அவர் ஆற்றவிருந்து, ஆற்றாது மறுத்து வெளியான  Annihilation of Caste என்ற நூல் – அதனைக் கேள்வியுற்று அந்த ஆங்கில உரையை கடிதவியலில் டாக்டர் அம்பேத்கரை அனுப்பச் சொல்லி, தனது ‘பச்சை அட்டை’, ‘குடிஅரசு’ வார ஏட்டில் தொடராக வெளியிட்டு பிறகு ‘ஜாதியை ஒழிக்க வழி’ என்ற தலைப்பில் மக்களிடம் சேர்க்க 4 அணா விலையில் அச்சிட்ட முன்னோடி அறிவு ஆசான் தந்தை பெரியார் என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து மகிழக் கடமைப்பட்டவர்களாவர்.

அதனால்தான் தொடர்ந்து நாம் கூறி வருகிறோம் தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று!

‘சமூக விடுதலை’ என்பது அந்த நாணயம்தான் – பெற்றுத் தரத்தக்க ஒன்றாகும்.

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் பல தரப்பட்ட கடிதங்களைப் படிக்கும்போது, நம்மை அறிய வைக்க  அவர்தம் எதிர் நீச்சல் – அவருக்குப் பேராதரவு தந்து படிக்க உதவிய சமூகப் புரட்சியாளர், பிற்பட்ட சமுதாயத்தின் முதற் கடமையான இடஒதுக்கீடு மூலம் அதனை சமப்படுத்த முயன்ற (1922 – ஒரு நூற்றாண்டு) கோலாப்பூர் மன்னர் சிவாஜி பரம்பரை  சத்ரபதி சாகு மகராஜ் அவர்களது கடிதம் போன்ற அரிய தகவல்கள், கடித இலக்கியமாய், சிந்தனைச் செல்வமாய் நமக்கு கிடைக்க கவுதம சன்னாவின் கடும் உழைப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது.

அதன் சிலகடிதங்களிலேயே அதன் மூலம், அக்காலத்தில் அரசியல் பொது வாழ்க்கை எப்படிப் ‘படி’ உயர் ஜாதியினர் ஆதிக்கக்களமாய் அவர்கள் எழுதியதே எல்லோருக்கும் பழைய ஒப்பனை, ‘வேத சரக்கு’ என்று கூறி, தங்களது சமூக அநீதியை நியாயப்படுத்தியது பற்றிய பல தகவல்கள்  இன்றைய தலைமுறையை வெகுவாக சிந்திக்க வைக்கும் கடிதங்களாகும். சிலவற்றைப்பற்றி ஒரு சிறு தொடராக உங்களுக்குத் தருவதில் நமக்கு ‘ஈத்துவக்கும் இன்பம்’ என்ற ‘‘சுயநலம்’’ பெறுகிறோம்.

(வளரும்)

- விடுதலை நாளேடு, 18.8.26

திங்கள், 17 ஆகஸ்ட், 2026

செலவில்லாது சிக்கனமான உடல் நலப் பாதுகாப்பு – இதோ! (4)(5)

 

அதன் மூலம் இப்பழக்கம் 47% இறப்பு வேகத்தைக் குறைப்பதும், 38% டிமன்சியா என்னும் மறதி நோயைக் குறைப்பதும் 22% மன உளைச்சலைக் குறைப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதய நோய்த் தடுப்பானாக இந்த நடைப்பயிற்சிகளும், 8 மணி நேர தூக்கமும் பெரிதும் நம்மை காத்து, நமது வாழ்க்கை ஆயுளைப் பெருக்கப் பெரிதும் உதவக்கூடும்.

நடைப் பயிற்சி  எப்படி இடைவெளிகள் இருக்க வேண்டும்? எத்தனை (Steps) அடிகள் நடக்க வேண்டும் என்பதும் முக்கியம் அல்லவா?

  1. நடைக்கான ‘காலடி’ (‘‘Pace’’) இடைவெளியை சரியாக நிர்ணயித்துக் கொள்ளுமுன் நாம் எத்தனை அடிகள் அன்றாடம் நடக்கிறோம் என்பது வாழ்வின் நீட்சிக்கு மிகவும் உதவும் ஒரு செலவில்லா நல்லஆக்கம் ஆகும். அதுபோலவே டைமிங் (Timing) – காலக் கணக்கீடும் முக்கியமே!

2024இல் ஒரு முக்கிய ஆய்வில், சுமார் 5,30,000 பேர்களை வைத்து  ஆய்வு செய்ததில்  சரியான காலடி, கால அளவு கடைப்பிடிப்பதன் காரணமாக நமது மரண வாய்ப்பு 43 சதவிகிதம் குறைகிறது (43% lower risk of mortality)

75 வயதில், ஆண்களில் 87 சதவீதம் பேர்களும், பெண்களில் 91 சதவீதம் கூடுதலாக வாழ்க்கை நீளுவதற்கு அவர்களது வேக நடை – நடைப் பயிற்சியில் கை கொடுக்கிறது என்பதை ஆய்வில் கண்டறிந்து அறிவிக்கிறார்.

இதனால் வேக நடை, நமது ஆயுள் நீடிப்புக்குச் செலவில்லாத நம்மிடம் உள்ள ஒரு வாய்ப்பு.  மனமும் செயலும் தான் இதற்கு முக்கியத் தேவை – பணமல்ல!

சிகிச்சைகளிலிருந்து மீண்டு வந்து ஓய்வான நடைக்கான காலடிகளை மிச்சப்படுத்துங்கள் – பிறகு வேக நடை உதவும் என்பது உண்மையாகும்.

உடல் நல மருத்துவர் டாக்டர் நைட் அவர்கள் இதுபற்றி ‘‘ஒரு மணி நேரத்திற்கு 3 மைல் வேகமாக நடக்கலாம், மூச்சு வாங்கினால் மாற்றிக் கொள்ளலாம்’’ என்கிறார்.

  1. அடுத்து தசைகளின் முக்கியத்துவம்.

நமது உடலின் நிற்கும் சோதனை (Balance Stability)

பெரிதும் பலரும் இதனை முயற்சிப்பதே கிடையாது!

நமது உடலின் தசைகள் நமது நடை, நிற்றல் முதலியவற்றிற்கு சரியான, தலைசுற்றாத அல்லது திடீர் மயக்கம் ஏற்படாது தக்க வகையில் நிற்கும், நடக்கும் நிலையில் (Balance) இருப்பு பாதுகாக்கப்படுவது மிக முக்கியம் ஆகும்.

Stability நிலைத்து இருப்பது –

இதை நாம் முயன்று முயன்று மெதுவாக பக்குவப்படுத்திக் கொள்ளும் பயிற்சியை மேற்கொள்வது அவசியமாகும். 30, 40 வயதில் சாதாரணமாக நீட்டி இருப்பது 55 வயதுகளில் திடீரென்று தள்ளுவதுபோன்று  எண்ணி கீழே விழுவதும் நடைமுறையாகி வருகின்றது.

இதய பலப் பரிசோதனை எவ்வளவு முக்கியமோ அதுபோல இந்தப் பரிசோதனைகள் முக்கியம் என்கிறார் டாக்டர் பெர்சின் அம்மையார்.

65 வயதுக்கு மேற்பட்ட முதியவர் பலரும் கீழே விழுந்து காயமடைந்து பல தொல்லை, துன்பங்களை அடையும் ஆபத்தைத் தவிர்ப்பதற்கு முன்பாக இந்த சரிநிலை நிற்றல் பயிற்சியை (Balance)  என்கிறோம்.

முதுமையில் நாம் நடக்கும்போது  தள்ளாடும் நிலை (Imbalance) திடீர் திடீர் என்று ஏற்படுவதிலிருந்து முதுமையாளர்கள் தங்களை மிக கவனமாகப் பார்த்துக் கொள்வது முக்கியமான ஒன்றாகும்.

இதற்காக மிக்க தன்னார்வத்துடன் ‘பெரு வகை டீரில்கள்’ – தேகப் பயிற்சிகளை முதுமையாளர்கள் ஈடுபடுவதைக் காட்டிலும், ஓர் எளிய வழியை அந்த டாக்டர் கூறுகிறார்.

முதலில் எளிமையாக இந்த ‘இருப்பு நிலை’ (Balance) பயிற்சியை ஒரு 10 வினாடிகள் (10 Seconds) ஒரு காலில் நிற்க பயிற்சி எடுத்து துவக்கலாம்.

‘‘இப்படி நடுத்தர வயதுகள் (Adults) 10 மணித்துளிகள் – ஒன்றைக் காலில் நிற்க முடியாதவர்கள் அவர்களுக்கு மரண அபாயம் அதிகம் (A higher risk) – ஏழு ஆண்டு காலத்தில் வேறு எந்தக் காரணம் சேரும்போது மரண அபாயம் அதிகமாகும்’’ என்று எச்சரிக்கை செய்தியை ‘பிரிட்டிஷ் ஜெர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசன்’ (British Journal of Sports Medicine)

நம் நாட்டு பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது அல்லவா உங்களுக்கு?

‘ஒற்றைக் காலில் நீங்கள் நின்றாலும், நான் என் முடிவை மாற்றிக் கொள்ளவே  மாட்டேன்’ என்று. அதிலிருந்து ஒற்றைக் காலில் நிற்பது அவ்வளவு எளிதானதல்ல என்பது விளங்குகிறதல்லவா?

எனவே 10 வினாடிகள்  (10 Seconds) பயிற்சியை எந்த வயதானவர்களும் பயிற்சி செய்து வர (சோம்பல் இன்றி) பழகினால் பலன் நிச்சயம் தருவதாக அது அமையக் கூடும்.

முயற்சி செய்யத் தவறாதீர்கள்.

பல்துலக்க நேரம் ஒதுக்குவதுபோல, காலை காபி குடிக்க நேரம் ஒதுக்குவதுபோல அல்லது கடைகளுக்குச் சென்று ‘க்யூ’ வரிசை நிற்பதுபோல 10 விநாடிகள் பயிற்சியை விடாமல் நாளும் தவறாமல் பழகிப் பாருங்கள்.

ஒவ்வொரு காலுக்கு 10 விநாடிகள் என்று நின்று நாளடைவில் அந்த ‘ஒற்றை காலில்’ தவறாமல் நிலையான உடற்பயிற்சி பழக்கமாக்கி, வழக்கமாக்குங்கள்?

 

(தொடரும்)

-விடுதலை நாளேடு,15.7.26

வாழ்வியல் சிந்தனைகள்

  1. அடுத்து உடலின் வலிமைக்கும் அதன் மூலம் வாழ்க்கை நீட்சிக்கும் உதவுவது நமது அழுத்தப் பயிற்சி.

நமது பலத்தின் வலிமைச் சோதனை என்பது நமது ஆயுளை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகளிலும் வாழ்க்கையில் ஒன்றாகவும் பயன்படும் என்கிறார் அந்த உடல் வலிமை மருத்துவர் டாக்டர் பெர்சின்.

கைகளை அழுத்திப் பிடிமானத்தை அறிந்து கொள்ளும் பயிற்சி வெறும் கைகளுக்காக மட்டும் என்று நினைக்காதீர்கள். உடல் தசை முழுவதின் பலத்தைப் பரிசோதித்து பார்த்துக் கொள்ளும் நல்லதோர் அடையாளம் என்பதை நாம் உணர வேண்டும்.

நாம் ரத்தக் கொதிப்பு நிலையைப் (Blood Pressure –  ‘B.P.’)  பார்த்துக் கொள்ளுவதைவிட இது ஒரு சிறந்த உடல்நல அறிதல் முறையாகும். U.K. Biobank analysis என்ற அமைப்பு இந்த ஆய்வினை  50 லட்சம் வாலிபர்கள் மூலம் கண்டறிந்ததில் இந்த ‘Muscle grip’ (தசை அழுத்தம்) என்பது – ஆண்களுக்கு 26 கிலோ கிராம் மட்டும், பெண்களுக்கு 16 கிலோ கிராம். அதற்கே Risk Factor பற்றி எடுத்துரைக்கிறார்.

மூச்சுத் திணறல் போன்ற மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள், மார்பகப் புற்று மூலம் எப்படி மரணங்கள் நிகழ்கின்றவோ அதே அளவிற்கு தசை பலவீனம் மூலமும் இறப்பு ஏற்படும் அபாயம் உண்டு என்று  நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறார் மருத்துவ நிபுணர்.

எனவே கை அழுத்தப் பயிற்சி (Hand Grip) காணொலி பார்க்கும் போதோ,  தொலைக்காட்சி பார்த்துக் கொண்டேகூட செய்து பழகலாமே என்று அறிவுறுத்துகிறார் அந்த மருத்துவர் நிபுணர்.

VII. இப்போது மேலே சுட்டிக்காட்டிய  6 அம்சங் களையும் தாண்டி ஏழாவது ஒரு முக்கியப் பயிற்சி என்ன தெரியுமா?

நல்ல குடும்ப உறவுகள், நட்பு வட்டம் ஏற்பட்டால் அது நிச்சயம் மகிழ்ச்சியைப் பெருக்கி, நமது வாழ்நாளைக் கூட்டுவது நிச்சயமாகும்!

சமூக உறவுகள் நாளும் சிறப்புடன் இருக்க தனிமை, சோர்வு, மன அழுத்தம் இவைகளைவிட்டு நாம் மகிழ்ச்சியோடு வாழ்வது இயல்பாகவே எல்லா மருந்துகள், சத்துணவுகள், உடற்பயிற்சிகளையும் தாண்டி நமக்கு பெரிதும் உதவும் என்பதே அவரின் முக்கிய மருந்தில்லா – செலவில்லா பெரு வாழ்வு!

நல்லுறவுகள், சிறந்த நம்பிக்கைக்குரிய நண்பர்கள் நட்பு வட்டங்கள் இவற்றை நமது முதுமையைக் குறைத்து கவலைகளைப் போக்கி வாழ வகைப்படுத்தும்.

‘வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்’ என்ற எளிய மொழிகள் கேட்காதவர்களா நாம்?

‘காசு கொடுத்தாலும் சிரிக்கத் தெரியாது எனக்கு, என்று சொல்லும் மனிதர்கள் உண்டு. அவர்கள் மட்டும்  சமூகத்தில் உள்ள ஒட்டு மொத்த இன்பம் –மகிழ்ச்சிகளையும் இழந்து, தங்களைச் சோக வாழ்வில் தள்ளிக் கொள்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

நல்ல குடும்ப உறவு, அல்லது நட்புறவுகள் நமது வயதைக் குறைக்க, நல்ல இளமையைத் திரும்ப அழைப்பதற்கு  உதவிடும். அதற்காகக் காயகல்ப லேகியங்களை தேடி அலைய வேண்டாம்.

எல்லா உடற்பயிற்சிகளையும் தாண்டி மன மகிழ்ச்சிக்கான ஊற்றுகள் அவை.

(நிறைவு)

 -விடுதலை நாளேடு,17.7.26