பக்கங்கள்

செவ்வாய், 31 ஜனவரி, 2017

உணவும் உடலும் பற்றி அறிய இதோ ஓர் அரிய நூல்!'தினத்தந்தி' நாளேட்டில் தொடர் கட்டுரைகளாக டாக்டர் எஸ். அமுதகுமார் MBBS, MCIP, PG Dip.DIABETOLOGY, FCGP அவர்கள் எழுதிய 'உடலும் உணவும்' என்ற கட்டுரைத் தொகுப்பு பலருக்கும் பயன் தரத்தக்க எளிய முறையில், நல வாழ்வின் கையேடுபோல மிக அருமையான நூலாக - 60 கட்டுரைகளின் தொகுப்பாக - தினத்தந்தி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

தினத்தந்தியில் வந்த போதே, சிற்சில கட்டுரைகளைப் படித்துச் சுவைத்தேன்.

இது வாழ்க்கைக்குப் பயன்தரும் ஒரு நல்ல நலவாழ்வுக்கான நூலாகும். பலரும் படித்து ஒழுகினால் உடல் நலம் பெரிதும் பாதுகாக்க உதவிடும் என்பது உறுதி!

பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் அ. ராஜசேகரன் தொடங்கி பல்துறை அறிஞர்கள் இந்நூலுக்குப் பாராட்டுரைகள் - அணிந்துரைகள் வழங்கி சிறப்பித்துள்ளார்கள்.

சுமார் 50, 60 ஆண்டுகளுக்குமுன், உடல் நலம் காப்பதுபற்றி தமிழில் வந்த நூற்கள் மிகமிகச் சொற்பமே!

ஆனால் இப்போது பல டாக்டர்கள் நல்ல சிந்தனையாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கூட இருப்பதால், பல்வேறு மருத்துவத்துறை ஆய்வு நூற்களில் தொடங்கி, இத்தகைய உடற்கூறு பற்றிய அனைத்துத் தரப்பும் விளங்கிக் கொள்ளும் நூற்கள் பலவும் எழுதியுள்ளார்.

இந்த நூலில் உள்ள 60 தலைப்புகளில் 60ஆவது கடைசி கட்டுரையில் (தலைப்பே வேடிக்கையானதுதான்) "பணப்பை அல்ல; இரைப்பைதான் முக்கியம்" என்ற தலைப்பில் உள்ள கட்டுரையின் இறுதியில்... (பக்கம் 400)

"ஒரு மனிதன், தனது உடலை வைத்துதான் அடையாளப்படுத் தப்படுகிறான். அந்த உடலைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பு மனிதனுக்கு இருக்கிறது. அதற்கு அடிப் படையாக இருப்பது உணவுதான். சரியான உணவை, சரியான நேரத்தில், சரியான அளவில் சாப்பிடுகிற மனிதர்களாலே சரியான ஆரோக்கியத்துடன் வாழ முடியும். சரியான உணவு எது? சரியான அளவு எது? சரியான நேரம் எது? என்பதை கடந்த அத்தியா யங்களில் பார்த்து வந்திருக்கிறோம். அதோடு எந்தெந்த உணவில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன? யார்- யாருக்கு எந்தெந்த சத்துக்கள், எந்தெந்த அளவில் தேவை என்பதையும் விளக்கியிருக்கிறேன். அத்தனைக்கும் மேலாக உச்சியில் இருக்கும் முடி முதல் பாதத்தில் இருக்கும் நகம் வரை சிறப்பாக இருக்க என்னென்ன உணவுகள் சாப்பிடவேண்டும் என்பதையும் பல்வேறு அத்தியாயங்களில் மனதில் பதியும் அளவுக்கு விளக்கியிருக்கிறேன்.

இன்று பலரும் பணத்தைத்தேடி அலைந்து பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி ஓடிக்கொண்டிருக்கும்போது, 'எனக்கு சாப்பிடக்கூட நேரமில்லை' என்கிறார்கள். ஆனால் அவர்கள் பெருமளவு சம்பாதித்துவிட்டு இனி உட்கார்ந்து சாப்பிடலாம் என்று நினைக்கும்போது, டாக்டர்கள் பல்வேறு நோய்களின் பட்டியலை வாசித்து, 'அதை சாப்பிடக்கூடாது, இதை சாப்பிடக்கூடாது' என்று தடை விதித்துவிடுகிறார்கள்.

உங்களால் அனுபவிக்க முடிந்த பணம் மட்டுமே உங்களுக்கான பணம். நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் பணம் எல்லாம் உங்களுக்கான பணம் அல்ல. உங்களுக்குப் பின்னால் அதை யார் அனுபவிப்பார்களோ அவர்களுக்கான பணமாக அது ஆகிவிடும். அதை மனதில் வைத்துக்கொண்டு பசிக்கிறது என்று உடல் உணர்த்தும் நேரத்தில் சாப்பிட்டு விடுங்கள். சுவையாக சாப்பிடுங்கள். ஆனால் அது அளவானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கட்டும். ஆரோக்கியம் தருவது பணப்பை அல்ல, இரைப்பைதான்! உண்டு மகிழுங்கள்! நன்கு வாழுங்கள்! "

முன்பெல்லாம் ஆங்கில மொழிகளில் தான் இத்தகைய நூல்கள் வருவது வழமை என்பதை மாற்றி நமது தமிழ் இனப் பெரு மக்கள், செம்மொழியாகிய நம் மொழி தமிழ் வெறும் "நீச்ச பாஷையல்ல" - மக்களின் மூத்த மொழி! காலத்தாலும், கருத்தாலும் மூத்த நாகரிகம், பண்பாடு எம்முடையது என்பதை நிறுவிட மருத்துவம் உட்பட பல துறைகளிலும் இப்போது நூற்கள், மலையினும் மானப் பெரிதாக பெருகுகின்றன.

படித்துப் பயன் பெறுக!

எழுதிய பிரபல டாக்டர் எஸ். அமுதகுமார், மக்களுக்குப் பயன்படக் கூடிய வகையில் அழகிய பட விளக்கங்களுடன் கூடிய நூலாகக் கொணர்ந்த 'தினத்தந்தி' பதிப்பகத்தினருக்கு நமது பாராட்டு - வாழ்த்துகள்!

-விடுதலை,28.1.17

ஜப்பானின் மூத்த டாக்டரின் அறிவுரை (1)
ஜப்பானில் இப்போது முதுகுடி மக்கள்  (Senior Citizens) எண் ணிக்கை பெருகி வருகிறது!

அங்கு ஓய்வு பெறும் வயது 65 ஆக இருந்தாலும், சராசரி ஆயுள் ஜப்பானில் உள்ள மக்களுக்கு 68 ஆண்டுகள் நமது நாட்டிலும்கூட அந்த எண்ணிக்கையை தொடும் நிலையில் நாம் வந்துவிட்டோம் - மருத்துவ அறிவியல் வளர்ச்சி காரணமாக!

ஜப்பானியர்களில் 100 ஆண்டு களைத் தாண்டி வாழுபவர்கள் 125 பேர்கள் என்றும் ஜப்பானிய பெண்கள் - மூதாட்டிகள். 80 வயது முதல் 86 வயது வரை வாழுபவர்கள்.

நம் நாட்டில் நூறாண்டு கண்ட வர்கள் 36,000 பேர்கள். இன்னும் 20 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேர்களாக (நூற்றாண்டு காணுபவரின்) உயரக் கூடும் என்பது  அறிஞர்கள் கணக்கு எதிர்பார்ப்பு.

ஷிகேகி ஹினோஹாரா (Shigeaki Hinohara)  என்ற டாக்டர் கடந்த ஆண்டு 101 வயதை எட்டி, மிகுந்த சுறுசுறுப்புடன் வாழுகிறார்! இவர் டோக்கியோவில் உள்ள செயிண்ட் லூக் இன்டர்நேஷனல் ஆஸ்பிடல் என்ற மருத்துவமனையில் 1941ஆம் ஆண்டு முதல் பணிபுரிவதோடு, செவிலியர்கள் கல்லூரியில் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராகவும் பணிபுரிகிறார்!

தனது 75ஆம் ஆண்டில் இவர்  15 புத்தகங்கள் எழுதியுள்ளார்! அதில் ஒன்று நீண்ட காலம் வாழுவது நலமாக வாழுவது எப்படி என்று ஒரு நூலும் (Living Long, Living Good’) ஒன்று!

இவரைவிட சிறந்த எடுத்துக் காட்டானவர்கள் -  ரோல் மாடல் - வேறு யாரும் தேவையில்லை. இவரது அந்த புத்தகம் 12 லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன!

டாக்டர் ஹினோஹாரா கூறும் முக்கிய அறிவுரைகள் - அனுபவக் கருத்துக்கள் - நீண்ட நாள் நலவாழ்வு வாழுவதற்கு என்னென்ன?

பார்ப்போமா?

உழைக்கும் சக்தி (Energy) என்பது நாம் நல்ல உணர்வுடன் இருப்பதினால் வருவதே தவிர, நன்றாகச் சாப்பிடுவ தினாலோ, நிறைய தூங்குவதினாலேயோ கிடைப்பதல்ல.

குழந்தைகளாக நாம் இருக்கும்போது, விளையாட்டு ஆர்வம் மிகுதியினால் நம்மில் பலர், சாப்பிடுவதற்கோ, தூங்கு வதற்கோகூட மறந்துவிட்ட சந்தர்ப்பங்கள் உண்டு. அதே உணர்வை நாம் பெரிய வர்களாக வளர்ந்த பிறகும்கூட தொடரலாம். தப்பில்லை. நம்முடைய உடம்புக்கு ஏகப்பட்ட விதிகளை - கட்டுப்பாடுகளைப் போட்டு, இந்த மணிக்குச் சாப்பாடு, இந்த மணிக்கு படுக்கைக்குப் போவது என்று

ஆக்கிக் கொண்டால்தான் நல்லது என்று கருதிட, அவதிப்பட வேண்டியதில்லை என்கிறார் இந்த டாக்டர்!

அதிக எடை இல்லாதவர்கள் பல இன மக்களில், பல நாடுகளில் இருக்கவே செய்கிறார்கள் உலகம் முழுவதும்!

நான் காபி சாப்பிடுகிறேன், ஒரு குவளை பால், ஆரஞ்சுச் சாறு அதில் ஆலிவ் எண்ணெய் ஒரு தேக்கரண்டி விட்டு சாப்பிடுகிறேன்.

ஆலிவ் ஆயில் என்பது இதயக் குழாய்களுக்கு மிகவும் நல்லது; தோல் பாதுகாப்புக்கும் நலத்துக்கும் உதவக் கூடியது.

எனது மதிய உணவு கொஞ்சம் பால், சில குக்கீஸ் என்ற ரொட்டி வகையறா இல்லையெனில் சாப்பிடாமலேயே (No Lunch) இருந்து விடுவதும் உண்டு பணியில் அதிகமான கவனம் காரணமாக!

இரவு உணவு காய்கறிகள், கொஞ்சம் மீன், சோறு, வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே ஆட்டிறைச்சி (Leanmeat)

எனது வாழ்க்கை முறையில் 2014 வரை நான் திட்டமிட்டு பணியாற்றி வரு கிறேன். (இந்த பேட்டி பல ஆண்டுகள் முன்பு எடுத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்) 2016ஆம் ஆண்டு எனக்கு சில பொழுதுபோக்கு - கேளிக்கை நிகழ்வுகளில் ஈடுபடும் திட்டம் டோக் கியோ ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பார்த்து மகிழும் திட்டம்! அடுத்த முக்கியக் கருத்து.

உங்களிடம் உள்ள கருத்துக்களை எண்ணங்களை - அனுபவங்களை மற்ற வர்களுக்கு அளித்து- பகிர்ந்து கொள் ளுங்கள்.

நான் இதுவரை 100 ஆரம்பப் பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு 150 உரைகளை ஆற்றியுள்ளேன், மற்ற வியாபாரம் தொழில் செய்வோருக்கு 4500 பேர்களுக்கு உரையாற்றி உள்ளேன் - எப்போதும் 60 நிமிடம் முதல் 90 நிமி டங்கள் வரை  பேசுவது எனது வழக்கம்.

நின்று கொண்டுதான் பேசுவேன். என்னை இளமையாக்குவதற்கும் தொடரு வதற்கும் அது பெரிதும் உதவுகிறது என்பது என் அனுபவக் கருத்து.

உங்களுக்கு எந்த டாக்டராவது அறுவை சிகிச்சை செய்து கொள் ளுங்கள் என்று அறிவுறுத்தினால் அவர்களிடம் நீங்கள் கேட்க வேண்டிய முதல் கேள்வி. ஏன் டாக்டர் இம்மாதிரி ஒரு அறிவுரையை உங்கள் துணைவி யாருக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ செய்ய முனை வீர்களா?

அப்படி என்றால் எனக்கும் செய் யுங்கள்! மற்றொரு தவறான கருத்து, டாக்டர்கள்  என்றால் எல்லா நோய்களையும் குணப்படுத்தி விடு வார்கள் என்பது! எல்லா நோய் களையும் அவர்களால் குணப்படுத்தி விட முடியாது. அப்படியிருக்கும் போது ஏன் தேவையில்லாமல் அறுவை சிகிச்சை அது இது என்று நோயாளிகளுக்கு அனாவசிய வலியையும் அவதியையும் உண் டாக்க வேண்டும்.

அதற்குப் பதில் இசை கேட்க வைப்பது செல்லப் பிராணிகளிடம் பாசம் காட்டி வளர்த்து அவைகளைப் பராமரிப்பது மூலம் ஒரு மன மகிழ்ச்சியை அவர்களுக்கு ஏற்படுத்தச் செய்தல்  - இவை அல்லவா முக்கியம்?

எனது தந்தையார் ராபர்ட் பிரவுனிஸ் கவிதை ஒன்று (Abt Vogler) என்பதைப் படிக்கச் செய்வார்!

கலை உணர்வு நமக்கு அது போதிக்கும் ஒரு பெரிய வட்டத்தை நாளும் வரையத் தொடங்கினால் வட்டமே முடியாது! நீண்டு கொண்டே இருக்கும். அரை வட்டம் பெரிதாக இருக்கும்.

அதைவிட முக்கியம். ஏராளமான உலகப் பொருள் - செல்வம் - பணம்   உட்பட  தேவையின்றி மேலும், மேலும் சேர்க்க வேண்டும் என்று அலைந்து கொண்டே இருக்காதீர்கள்! உங்கள் வாழ்வு முடியும்போது இவைகளை உங்களுடனா எடுத்துப் போகப் போகிறீர்கள்?

(தொடரும்)

வலி (Pain) என்பது மிகவும் வியப் பானது- புரியாததும்கூட; சில நேரங் களில்! வேடிக்கைப் பேச்சு, நகைச்சுவை மூலம் அதனை மறக்க - மாற்றிட முயலுங்கள்!

பல் வலியால் அவதிப்படும் குழந்தை களோடு விளையாடிப் பாருங்கள்; அக் குழந்தை வலியை எளிதில் மறந்துவிடும் என்பதைக் காணுவீர்கள் - சேர்ந்து விளையாடுங்கள்.

மருத்துவமனைகள் என்பவை நோயாளிகளின் அடிப்படைத் தேவை களை அறிந்து செய்யவேண்டியவை களைச் செய்வதில் முனைப்புடன் செயலாற்றவேண்டியவை ஆகும்!

மருத்துவமனைகள் எப்போதுமே மிகவும் பெரிய அளவில், விசாலமான தாக அமைக்கப்படல் வேண்டும் (செயிண்ட் லூக்ஸ் மருத்துவமனையை எங்கிருந்தும், எந்தப் பகுதியின் பணி களை - நோயாளிகளுடன் தொடர்பு கொண்டு தேவையான சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளும் வசதி களை உள்ளடக்கியதாகக் கட்டப்பட் டுள்ளது).

நான் இப்படி சொல்வதனால், பலரும் என்னை விசித்திரமான பார்வையோடு - இவர் என்ன இப்படிக் கூறுகிறாரே என்றுதான் பார்த்தார்கள். பெரிய நெருக்கடி, எதிர்பாராத பெரும் திடீர் விபத்துகள் நடைபெறும்போது அது வெகுவாகக் கைகொடுக்கும் என்பது புரியாமலிருந்தது. ஆம் ஷி ரின்க்யூ என்ற மதவாத தற்கொலைகளை அந்த இயக்கத்தவர் செய்துகொண்டு - மோட்சத்துக்கான ஒரே வழி அதுதான் என்ற அந்த மதத் தலைவரின் கூற்றினை ஏற்று, 740 பேர் ஒரே நேரத்தில் தற் கொலை - பயங்கரவாதச் செயலை டோக்கியோவின் கீழ் முனைப்பாதை (Sub-Way-ல்)யில் செய்ய முற்பட்ட போது, அவர்களை உடனடியாக இந்த செயிண்ட் லூக்ஸ் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர்; ஒருவரைத் தவிர, 739 பேர்களை இந்த மருத்துவ மனை - தற்கொலையிலிருந்து காப் பாற்றி விட்டது! பெரிய மருத்துவமனை யாக அமைக்கப்பட்டதன் பயனை அன்றே - முன்பு எதிர்த்தவர்களே ஏற்கும் நிலை ஏற்பட்டுவிட்டது!

என்னதான் அறிவியல் - மருத்துவ இயல் வளர்ந்திருந்தாலும் அதன் உதவியால் எல்லோரையும் மருத்துவ சிகிச்சையினால் காப்பாற்றிக் கரை சேர்த்துவிட முடியாது; காரணம், நோய் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ் வொரு வகை தன்மையைக் கொண்டது.

‘‘Illness is individual’’  ஒவ்வொரு வரின் உடற்கூறும் ஒவ்வொரு மாதிரி. இந்த நேரத்தில் ஒரு முக்கிய விளக் கத்தைக் கூறியாகவேண்டும்; நம்மில் பலர், நான் இந்த மருத்துவரிடம் காட்டி, இந்த மருந்து சாப்பிட்டு, குணப்படுத்திக் கொண்டேன்; அதே மருந்தை நீங்களும் எடுத்துக்கொண்டால் குணமாகும் என்று யாராவது சொன்னால், அதைக் கேட்காதீர்கள்; காரணம், அந்த ஜப் பானிய டாக்டர் சொன்னதுபோல், ஒவ்வொருவரது நோயும், ஒவ்வொரு தனித்தன்மையது ஆகும்! இந்தக் கட்டுரையை நேற்று (16.9.2014) எனது வீட்டிற்கு வந்து உரையாடிய அமெரிக் காவின் பிரபல புற்றுநோய் மருத்துவ ரான டாக்டர் திருஞானசம்பந்தம் (ரோட் அய்லாண்ட் பகுதியில் பிரபல மருத்துவர் அவர்) அவர்களிடம் இந்த ஜப்பானிய டாக்டரின் கருத்து பற்றிக் கேட்டேன்; அவர் அதற்கு அருமை யான விளக்கம் சொன்னார். புற்றுநோய் உடலின் ஒரு பகுதியில் வந்துள்ளது ஒருவருக்கு என்றாலும், அந்த ரக புற்றுநோய் அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது; அதில் பலவகை - ஒன்றுக்கு மற்றொன்று மாறுபட்டதாக இருக்கும். எனவே, அந்த அனுபவம் மிக்க ஜப்பானிய மூத்த டாக்டர் சொன்னது 100-க்கு 100 விழுக்காடு உண்மை. நோய்கள் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு வகையில் அமைவது கண்கூடு என்றார்.

உணவில் சுவை எப்படி ஆளுக்கு ஆள் மாறுபடுகிறதோ, அதுபோலத் தான் நோயின் கூறுபாடும் - இல்லையா?)

இந்த நோயாளிகளைக் குணப்படுத் துவதற்கு இதயமார்ந்த, இரக்க உணர்வு, கருணை உள்ளம் தேவை. எனவே, அதற்கு பலவகை கலைகள் உணர்வு தேவை!
மேலும் அந்த ஜப்பானிய டாக்டர், தன் அனுபவத்தைக் கூறுகிறார்:

ஏராளமான நிகழ்வுகளின் தொகுப்பே வாழ்க்கை என்பது!

1970 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி, நான், 59 வயதுள்ளவன் அப் போது - டோக்கியோவிலிருந்து யோடோ விமானம்மூலம் ஃபுக்யோகா (Fukuoka) என்ற ஊருக்குப் போகப் புறப்பட்டேன். சூரிய ஒளி வீசிய அரு மையான காலை வேளை. எரிமலை யான மவுண்ட் ப்யூஜி (Mount Fuji) எங்கள் பார்வையில் விழுந்தது. அப் போது, ஜப்பானிய தீவிரவாதிகளால் அந்த விமானம் கடத்தப்பட்டது. (அய்ஜாக் செய்யப்பட்டது). கையில் விலங்கு மாட்டப்பட்ட நிலையில், 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் நான்கு நாள்களைக் கழித்தேன். அதை ஒரு நல்ல அனுபவமாக நான் உணர்ந்தேன். எனது உடல் அதற்கேற்ப ஆயத்தமாகி விட்டது! மேலும் கூறுகிறார்:

60 ஆண்டுகள்வரை உங்கள் குடும்பத்தினருக்காக உழைத்தாலும்கூட நீங்கள் அதற்குமேல் சமுதாயத்திற்கான தொண்டறம் புரிய முன்வாருங்கள்.

வாரத்தில் 7 நாள்களும், 18 மணி நேரம் உழைக்கும் நான் சமூகத் தொண்டனாக என்னைப் பதிவு செய்து - 65 ஆம் வயதிலிருந்தே - பணி செய் வதில், எனக்கு அத்தொண்டு எல்லை யற்ற மகிழ்ச்சியைத் தருகிறதே!

ஒவ்வொரு நிமிடத்தையும், நான் காதலித்து வாழுகிறேன் என்றார்.

இதுவல்லவா பயனுறு வாழ்வு!

- கி.வீரமணி

-விடுதலை,16,17.9.14

சனி, 28 ஜனவரி, 2017

ஈகையால் உயருங்கள்! இருப்பு - மகிழ்ச்சியோடும்!


இக்காலத்தில் மனிதர்களில் பலரும் ஓடிஓடிப் பொருள் சேர்க்கின்றனர், தேவைக்குப் பன்மடங்கு மேலாக சேர்த்தும் கூட அவர்களுக்கு மனநிறைவு ஏற்படுவதில்லை.
குறுக்கு வழிகளில் கோடிகளைக் குவிப்பது எப்படி என்பதே அவர்களில் பலரது வாழ்நாள் கவலையாக இருக்கிறது.
பல பெரும் பணத் திமிலர்கள் தங்களது பல்வேறு சிறுசிறு முதலீட்டுக்காரர்களையே விழுங்கி, தங்களின் பணந்தேடும் பசியினைத் தீர்த்துக்கொள்ள ஆளாய்ப் பறக்கிறார்கள்!
இவர்கள் இப்படி பணம் பன்னும் கவலையி லேயே, நாளும் நொந்தும்  வெந்தும் காட்சியா கின்றனர்! மகிழ்ச்சியைச் சற்றும் அனுபவிக்கத் தெரியாத மனிதயந்திரர்கள் அவர்கள்!
இவர்களின் வாழ்க்கை என்பது எப்போதும் திருப்தி இல்லாது ஓடிக்கொண்டேயிருக்கும் திணறும் வாழ்க்கைதான்!
போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்ற பழமொழி அவர்களுக்குத் தெரியாத ஒன்று!
இது இன்றைய நிலை; ஆனால் சங்க காலத்தில் புறநானூறு புலவர் காலத்தில் எப்படிப்பட்ட நிறைமதி உடைய அரிய வாழ்க்கைத் தத்துவத்தைப் பாடலாக்கிப் பாடம் போதித்தனர் நம் புலவர்கள்.
வியக்கத்தக்க வித்தகக் கருத்தின் வெற்றி முளைத்த வெளிச்சம் அப்பாடல்.
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய அந்த அரிய செய்யுள் எப்படிப்பட்ட எளிய வாழ்க்கைத் தத்துவத்தை மிகச் சுருக்கமான அன்றாட வாழ்க்கையைக் காட்டி பாடம் எடுத்துள் ளார்!
“தென் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்;
நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்
கடுமாப் பார்க்குங் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி, உடுப்பவை இரண்டே,
பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே,
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே
- புறநானூறு
இதன் பொருள் இதோ:
‘‘உலகமெல்லாம் ஒருவெண்குடை
நிழலில் வைத்துஅரசு செலுத்தும்      வேந்தனேயானாலும்,
தான் பயிர் செய்த ஒரு தினைப் புலவைக்
காட்டி யானைகளும், காட்டுப் பன்றிகளும்
புகுந்து அழித்துவிடாமல் இரவும் பகலும்
கண்ணுறக்கங் கொள்ளானாய் அதனைப்
பாதுகாக்கும் ஒரு கானவனே யானாலும்
எல்லாரும் ஒரு நாளைக்குக்
கொள்ளும் உணவு ஒரு நாழியே யாகும்!
அவர் உடுப்பன இரண்டு ஆடைகளே யாகும்;
இவையேயன்றிப் பிறப்பு இறப்பும் நோயுங்
கவலையும் துன்பமும் இன்பமும்
எல்லார்க்கும் உள்ளனவே ஆகும்;
ஆதலால், செல்வத்தாற் பெற்ற பயன்
ஈகை அறங்களைச் செய்தலேயாகும்!
செல்வத்தைப் பிறர்க்குக் கொடாமல்
யாமே நுகர்வேமெனில், அது கை கூடாமல்
தவறுதல் பலவாகக் காணப்படுகின்றன!
எளிய, சிக்கன வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய தந்தை பெரியார் அவரது சொத்து, பொருள் முழுவதையும், ஈகைக்கே - மக்களுக்கு விட்டுச் சென்றதில் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கோர் எல்லை உண்டா?
சொந்த பந்தம் - பார்க்காது - மக்களையே பார்த்தவர் - மனிதனையே நினை என்று கூறி, மனிதகுலத்திற்கு வாழ்க்கைப் பாடத்தை - சுய மரியாதை என்ற சுக வாழ்வைச் சொல்லிக் கொடுத்த வரை, எண்ணி எண்ணிப் பெருமை கொள்ளலாமே!
அவரை விட செல்வத்தில் பன்மடங்கு பெருக்க முடையோர்கூட - சொத்து முழுவதையும் ஈக மாக்கிட முன்வரவில்லையே!
அவரை நினைத்து, பின்பற்றி வாழ முயற்சிப் போம்!
வாசக நேயர்களுக்கு...
இந்த வாழ்வியல் சிந்தனைக் கட்டுரை - எழுதத் துவங்கிய நாள் தொட்டு இது ஆயிரமாவது என்று கூறி மகிழ்ச்சியூட்டுகின்றனர், ‘விடுதலை’ ஆசிரிய நிர்வாகக் குழுத் தோழர்கள்!
அப்படியா? நான் எண்ணிப் பார்த்து எழுது கிறேனே தவிர, எண்ணிக்கைப் பார்த்து எழுத வில்லை.
என்றாலும், மற்றவர்களை மகிழ வைத்த வாய்ப்பு தந்த ‘விடுதலை‘க்கும், வாசக நேயர்களுக்கும் எமது இதயமார்ந்த நன்றி - நன்றி! நன்றி!!
-விடுதலை,23.1.17

வெள்ளி, 27 ஜனவரி, 2017

இளைஞர்களே, இப்படியா நீங்கள் வாழ்வது? மறைவது?

நமது இளைஞர்களில் மிகப் பெரும்பாலோர் தேவையின்றி உயிர்ப் பலி தருகின்றவர்களாகி வருவது மிகவும் வேதனையையும் எல்லையற்ற சோகத்தையும் நம்முள் ஏற்படுத்து கிறது.

ஒவ்வொரு பெற்றோரும் தேக்கி வைத்த ஆசைக் கனவுகள் எல்லாம், திடீர் மின்னல் தாக்கிப் பறிக்கப்பட்ட கண்ணொளி போல் ஆகி விடுகின் றனவே!

தேவையற்ற விபரீத ஆசைகளுக்கு நீங்கள் இரையாகி இழத்தற்கரிய வாழ்வை இளையர்கள் இழக்கலாமா?

இதோ இன்றைய தமிழ் இந்து நாளேட்டில் (23.5.2014) பக்கம் 10இல் வந்துள்ள நெஞ்சுருக்கும் செய்தி: இது கேரள மாநிலத்தில் நிகழ்ந்தது என் றாலும், அதிலிருந்து மற்ற அனைவரும் பாடம் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக அதனை அப்படியே தருகிறோம்.

பாஸ்ட் புட், பேஸ்புக் இது இரண்டும் தான் இன்றைய இளைய தலைமுறை யினரின் அடையாளமாய் மாறிப் போயி ருக்கின்றன. முகநூலில் லைக் வாங்க ரிஸ்க் எடுத்து படம் பிடித்த மாணவர், இப்போது அந்த படத்தை பார்க்க உயிருடன் இல்லை.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் வின்ஸ். இவரது மனைவி நிஷா. இத்தம்பதியின் மகன்கள் எட்வின், காட்வின்.

இதில், எட்வின் பத்தாம் வகுப்பு படித்தார். காட்வின் 9-ம் வகுப்பு படிக்கிறார்.

இருவரும் நண்பர்களுடன் அருகே உள்ள கனிமங்கலம் என்ற இடத்தை சுற்றிப் பார்க்க புதன்கிழமை சென்றனர். அங்கு, ஒருவர் மாற்றி ஒருவர் முக நூலில் பதிவு செய்ய புகைப்படம் எடுத்தனர்.

அங்கிருந்த தண்டவாளத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, மின்னல் வேகத்தில் வந்த ரயிலில் அடிபட்டு எட்வின் தலை துண்டானது. இதுகுறித்து, திருச்சூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்னொரு சம்பவம்

கேரள மாநிலம் எருவா, வேலாத் தட்டுதரையை சேர்ந்தவர் அபிலாஷ் (32). முகநூலில் வினோதமான விஷ யங்களை படம் பிடித்து காட்டுவதில் இவருக்கு அலாதி விருப்பம். புதன் கிழமை, வீட்டில் தூக்கு மாட்டுவது போல் செல்போனில் வீடியோ எடுத்து அதை முகநூலில் பதிவிட ஆயத்த மானார்.

இதற்காக தன் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டவர் செல்போனில் வீடியோவை ஆன் செய்து விட்டு, தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டினார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக சேர் நகர்ந்தது. கயிறு இறுக்கி அபிலாஷ் மூர்ச்சையடங்கி போனார்.

அவரது செல்போன் பழுதாகி இருப்பதால் அதை சீர் செய்யும் பணி நடைபெறுகிறது. அதன் பின்னர் தான் நடந்தவற்றின் முழு விவரங்களும் தெரிய வரும்.

அபிலாஷ் ஏற்கெனவே இதே போல் ஒருமுறை முகநூலில் பதிவிட்டிருந்தார்.

அதீத ஆர்வத்துக்கு தற்போது தன்னையே பலியாக்கி யுள்ளார். முகநூலில் புகைப்படம் பதிவிட ஆசைபட்டு 2 பேர் உயிரை விட்ட சம்பவம் கேரளத்தில் பரி தாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

- எதிலும் ஆசை வெறியாக மாறினால் இத்தகைய விபரீதங்கள் நிகழ்வுகளாவது தடுக்கப்பட முடி யாததாகும்.

எனவே, இளைஞர்களே எச்சரிக் கையுடன்  வாழுங்கள்!

- கி.வீரமணி

-வடுதலை,23.5.14

வியாழன், 26 ஜனவரி, 2017

அமெரிக்காவிலும் இப்படி சிலரா? நம்ப முடிகிறதா?
23.1.2017, திங்கள்கிழமையன்று எழுதிய (ஆயிரமாவது) 'வாழ்வியல் சிந்தனை' கட்டுரையில்,

எதற்குப் பணம் சேர்க்கிறோம் என்று தெரியாமலேயே பலர் - அதுவும் பொது வாழ்வைப் பயன்படுத்தி, அரசியல்வாதிகளும், அவர்களது நண்பர்களும், அவர்களைப் பயன்படுத்தி கோடீசுவரர்களாகும் அதிகாரிகளும் தான் நினைவுக்கு வருகிறார்கள். நம் நாட்டில் பணம் சேர்த்து வைத்து செல்வது நியாயமல்ல என்று எழுதினோம்.

"உண்பது நாழி, உடுப்பது இரண்டு முழம்" என்ற மனிதர்களுக்கு ஊரையடித்து  உலையில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதை புறநானூறு நக்கீரனார் பாடல் மூலம் சுட்டிக் காட்டியிருந்தோம்.

ஆடம்பரத்தில் வெளிச்சம் போட வெட்கமோ, லஜ்ஜையோ சிறிதும் இல்லாத பதவியாளர்கள், அரசியல்வாதிகள் படித்துப் பாடம் பெற வேண்டிய ஒருவரைப் பற்றிய கண்ணீர் காவியம் இதோ:

43 ஆண்டுகள் அமெரிக்கப் பொது வாழ்வில் ஜனநாயகக் கட்சியில் அலுவல் பொறுப்பில் இருந்தவர் ஜோ பிடன் (Joe Biden).

அவரது 29 வயது வயதில் அவர் செனட் உறுப்பினராகத் தேர்வு பெற்றார். செனட்டில் 35 ஆண்டு காலமும், துணைக் குடியரசுத் தலைவராக 8 ஆண்டுகளும் இருந்து அண்மையில் பதவி விலகிய ஜோபிடன் கதையைக் கேளுங்கள்....

அவரது மகனுக்குப் புற்றுநோய்; அதிலிருந்து சிகிச்சை  அளித்து, மகனைக் காப்பாற்ற வேண்டிய கடமை பொறுப்பு உண்டு அந்தத் தந்தைக்கு.

ஈராக் போரில் 'இராணுவ சேவை' செய்து பின் சொந்த மாநிலமான டெலவேர் (Delaware) திரும்பி அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றி வந்தவர் ஜோபிடனின் மகன்.

இவரைப் பயங்கர புற்றுநோய் பாதிப்பிலிருந்து காப்பாற்ற தன்னிடம் உள்ள பணத்தை எல்லாம் செலவழித்து விட்ட நிலையில், தான் குடியிருந்த வீட்டையே விற்று தனது மகனின் புற்றுநோய் செலவினை ஈடு கட்டுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை ஜோபிடன் அவர்களுக்கு!

இதை அமெரிக்க அதிபர் ஒபாமா கேள்வியுற்று பதறிப் போனார்!

எக்காரணத்தைக் கொண்டும் வீட்டை விற்க வேண்டாம்; செலவுக்கு தனது சொந்தப் பணம் தந்து உதவுகிறேன் என்று ஜோபிடன் அவர்களிடம் கூறினார் உணர்ச்சிபூர்வமாக!

வாஷிங்டனுக்கும், டெலவேர்க்கும்  ரொம்ப தூரம் இல்லை. செனட்டராக இருந்தபோது ஜோ பிடன் அவர்கள்  - டெலவேரும், வாஷிங்டனும் அருகருகே இருப்பதால் ரயில் வண்டிப் பயணம் மூலம் ஒவ்வொரு நாளும் வந்து தனது பணிகளை முடித்து மாலை திரும்புவார்.

2017 ஜனவரி 20இல் அவரது துணைக் குடியரசுத் தலைவர் பொறுப்பு முடிவடைந்த நிலையில் இவர் மீண்டும் முந்தைய வழமை போலவே இரயில் மூலம்  டெலவேரிலிருந்து வாஷிங்டனுக்கு வந்து திரும்புவராம்!

டெலவேர் என்ற அந்த சிறிய மாநிலத்து மக்கள் ஜோ பிடனை அவரது எளிமைக்காக தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்றால் அது நியாயம் அல்லவா?

இப்படியும் சில நாடுகளில் சில மனிதர்கள் - இல்லை இல்லை -  மாமனிதர்கள்!

நம்மூர் எட்டுப்பட்டி நாட்டாண்மை அரசியல்வாதிகளை நினைத்தால் வெட்கித் தானே தலை குனிய வேண்டும்!

இந்த எளிமை மனிதர்கள் எங்கிருந்தாலும் வாழ்க! வாழ்க!!
-விடுதலை,26.1.17

ஞாயிற்றுக்கிழமைப் பள்ளியில் ஒரு பாடம்!


இயக்குநர் லிங்குசாமியின் மிக நெருக்கமான நண்பர். குடந்தையில் கல்லூரி காலத்தில் மூத்தவர். அன்பில், நட்பில், யார் யாருக்கு மூத்தவர், இளை யவர் என்ற பேதம் இவர்களைப் பிரித்த தேயில்லை என்பதை அவர் எனக்குத் தந்த நூலாகிய, பிருந்தா சாரதியின் ‘ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக் கூடம்!’ என்னும் கவிதைகள் தொகுப்பு நூல் வெளிப்படுத்தியது.

வழக்குரைஞர் தொழிலுக்குப் படித்து, வழக்குரைஞராக 2 ஆண்டுகள், ‘தொழில்’ செய்த பிறகு, தந்தை பெரி யாரின் அன்பழைப்பு என்பது எனக்குக் கட்டளையானதினால், வழக்குரைஞர் தொழிலையே நான் விட்டுவிட்டேன்.

பிரபல வழக்குரைஞராகத் திகழ்ந்த எனது நண்பர்களில் ஒருவரான - நான் பல குற்ற வழக்குகளை ‘‘அவரிடம் செல்லுங்கள்’’ என்று அனுப்பி பழகிய கொள்கை உறவுக்காரர் தோழர் மோகன் குமாரமங்கலம்.

என்னை அவர் வேடிக்கையாக ‘வாய்ய்யா ‘சண்டே வக்கீல்’ என்று அழைப்பார். ‘‘சண்டை போடும் வக்கீ லாக உங்களிடத்தில் வராமல், ‘சண்டே வக்கீல்’ தோழராக வந்திருப்பது எவ்வ ளவு மகிழ்ச்சி'' என்பேன். அவரும் சிரித்துக் கொள்வார்!

அதை எனக்கு நினைவூட்டியது ‘ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம்‘ என்ற பிருந்தா சாரதியின் சிறந்த கவிதைகள் தொகுப்பு நூல்.
கடவுளைச் சந்திக்கச் சென்றிருந்தபோது
கடவுளைச் சந்திக்கச் சென்றிருந்த             போது
என்னைப் போலவே பலர்
அங்கு வந்து
நெடுநேரம் காத்திருந்தார்கள்.

பலர் பொறுமையிழந்து
கடிகாரத்தை
மீண்டும் மீண்டும்
பார்த்தபடி இருந்தார்கள்.

அடுத்தடுத்து பலர் வந்தபடி                 இருந்ததால்
நெரிசலாகிக் கொண்டிருந்தது.

புழுக்கம் வேறு.

வந்தவர்கள் ஒவ்வொருவரும்
வி.அய்.பி. என்று
தங்களைத் தாங்களே
கூறிக் கொண்டு
முன்வரிசைக்கு முன்னேறும்
முனைப்பில் இருந்தனர்.

எனக்கும் வேறு வேலைகள்
இல்லாமல் இல்லை.

இவரைப் பார்த்தால்
வேலைகள் சுலபமாக முடியும்
என்று கேள்விப்பட்டதால்
இங்கு வந்து காத்திருக்கிறேன்.

வரிசையில் நிற்கச் சொல்லி
அதிகாரம் செய்து கொண்டிருந்தவர்
கடவுளை விடவும்
அதிகாரம் படைத்தவராயிருந்தார்.

கடவுளுக்குப் பணிவதை விடவும்
அதிகப் பணிவை
அவரிடம் காட்டிக் கொண்டிருந்தோம்.

ஆண்கள் பெண்கள் என
இருவேறு வரிசைகள்
திடீரென பிரிக்கப் பட்டதால்
கணவன் மனைவி
தாய் தந்தை
சகோதர, சகோதரிகள்
மகன் மகள்
எல்லோரும்
பிரிக்கப்பட வேண்டிய
அவசியம் உண்டானது.

இது தேவையா
என்று எனக்குள் ஒரு குரல்
எழுந்தது.
ஆனால் அதை கேட்பதற்குத்தான்
அங்கு யாரும் இல்லை.

வரிசை பிரிந்தது.

ஆண்கள் மட்டும் நிற்கும் வரிசை
பார்ப்பதற்கு அவ்வளவு
அழகாயில்லை.
பெண்கள் இல்லாத உலகம்
எப்படி இருக்கும் என்று அது
கன்னத்தில் அறைந்து சொன்னது

சிறிது நேரம் கழிந்ததும்
உரசாமல் நிற்கும்படி
ஒருவர் இன்னொருவரிடம் கூற
அங்கே லேசான வன்மம் பிறப்பதை
பதைபதைப்போடு கவனித்தேன்.

பெண்கள் வரிசையில் இருந்து
பெரும் கூச்சல் ஒன்று
திடீரென்று எழவே
என்னவென்று திரும்பினேன்.

அங்கே ஒருத்திக்கு
சாமி வந்து விட்டதாம்.

கடவுளைப் பார்க்க வந்தவர்கள்
அவள் காலில் விழுந்து
கொண்டிருந்தார்கள்.

இங்கே ஒருவர்
அவள் தன் மனைவிதான் என்றும்
கடவுளைப் பார்க்கவந்ததே
அவர் இவள் மீது வருவதால்
அவளுடன் வாழமுடியாமல் போகிறது
என்றும் அலுப்புடன் பொருமினார்.

கடவுளைக் காண வந்ததை
கண்காட்சி காணவந்தது போல
ஆக்கிக் கொண்டிருந்தோம்
டீ பிஸ்கெட் வரவழைத்து.

நெடுநேரக் காத்திருப்புக்குப் பிறகு
கடவுளை நாளைதான் பார்க்கமுடியும்
என அறிவிப்பு வந்தது.

சலசலப்புடன்
கலையத்தொடங்கினோம்.

கூட்டத்தில் சிறுவன் ஒருவன்
கேட்டான்
நாளைஎன்றால்
நம்முடைய நாளையா
கடவுளின் நாளையா என்று.

கடைசி வரிகளின் சொடுக்கு  (சாட்டை) மிக அருமை!
‘கூட்டத்தில் சிறுவன் ஒருவன்
கேட்டான்
நாளை என்றால்
நம்முடைய நாளையா
கடவுளின் நாளையா?’
இப்படிச் ‘சிறுவர்கள்’ தான் கேட்பார்கள்! பெரியவர்கள் பதில் சொல்லாமல் மிரட்டுவார்கள்.

இல்லையா? இதுதானே நம் அனு பவம்?

படியுங்கள் - பயன் பெறுங்கள்!

‘‘தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல்’’ என்றாரே புரட்சிக்கவிஞர் - அது இப்போது நினைவிற்கு வருகிறதா?
- கி.வீரமணி
-விடுதலை,9.9.16

தூக்கமும் - துக்கமும்!


பழைய அறநூல்களை இளைப்பாறுதல் கருதி, படித்து மகிழ்வேன்; கொள்ளை இன்பம் ஊற்றாய் வந்து உவக்கும்படி உடற்சிலிர்ப்பைத் தருவனவாக அக்காலத்துப் பாடல்களின் ஆழ்ந்த கருத்துரைகள் அமைந்துள்ளன!

நடைமுறை வாழ்க்கையில் நம் புலவர்கள் கண்டவற்றைப் பாடிய கருத்துரையாளர்களாகவே இருந்துள்ளார்கள்! மற்ற புலவர்களைக் காட்டிலும் அதிலும் சமணப் புலவர்களின் அறிவும், தெளிவும் அனுபவ வார்ப்புகளாகவே நமக்குப் பாடம் சொல்லித் தருகின்றன!

புலவர் விளம்பி நாகனாரின் "நான் மணிக்கடிகை" என்ற  பழம் பெரும் நூலுக்குக் கவிஞர் ஞா. மாணிக்க வாசகனின் பொருளோடு பல நூல்கள் புதிய கையடக்கப் பதிப்பாக வெளி வந்துள்ளன. (உமா பதிப்பகம்)

அதில் சில கருத்துக்கள் எத்தகைய அறிவார்ந்த 'பாடங்களை' மக்களுக்குப் போதிக்கிறது தெளிவுற!

'இவர்களுக்கெல்லாம் தூக்கம் இல்லை!' என்ற தலைப்பில் ஒரு பாட்டு,
கள்வம் என்பார்க்குத் துயில்இல்லை காதலிமாட்டு
உள்ளம் வைப்பார்க்குந் துயில்இல்லை - ஒண்பொருள்
செய்வம் என்பார்க்கும் துயில்இல்லை அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில். (பாடல் 9)

தூக்கம் உடலுக்கும், உள்ளத்திற்கும் மிகவும் இன்றியமையாதது; பழையன (சோர்வு) நீங்குதலும், புதியன (புத்துணர்ச்சி) புகுதலும் உடல் நலத்திற்கு இன்றியமையாதவை.
ஆனால் மனிதர்கள் பற்பல நேரங்களில் தங்களை மறந்தவர்களாகவும், தங்கள் உடல் நலனைத் துறந்த வர்களாகவும் வாழ்ந்து கொண்டே, கடைசியில் வருந்துகிறார்கள்!
எல்லாம் முடியும் தருவாயில் வருந்துவதால் யாருக்கும் நன்மை இல்லை.

எதையும் மட்டுப்படுத்தி, 'சீரான அளவு; சிறந்த வாழ்வு' என்று வாழப் பழகிக் கொண்டேமேயானால், இத்தகைய 'தூக்கமின்மை' என்ற நோய் - (ஆம் இது ஒரு நோய் - எளிதில் விரட்ட முடியாத நோய் என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டியதாகும்). 'Insomnia' (இன்சோம்னியா) என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மன அழுத்தமும், துயரமும் பெருகும் போதுகூட தூக்கத்தைத் துன்பம் விரட்டி விட்டு அவ்விடத்தினைச் 'சூன்யமாக்கி' பாதிக்கப்பட்டவர்களை பாடாய்ப் படுத்துவது உண்டே!

சில கருத்துக்கள் - சில பாடல்கள் - பகுத்தறிவு யுகத்திற்கு ஏற்க இயலாதவைகளாகவும்கூட உள்ளன!

"தள்ளுவன தள்ளி, கொள்ளுவன கொள்வோம் யாம்" என்பதுபோல படித்து மகிழலாம் - 'மெய்ப்பொருள்' காணலாம்.

'மூத்தவன் நான்  - எனவே எனக்குக் கீழ்ப் படிந்து நடக்க' என்று உத்தரவு போடும் நிலையில், வயதால் மூத்தால் போதுமா? என்று கேள்வி கேட்டு அதற்குரிய விடையையும் தருகிறார் விளம்பி நாகனார்!

திரிஅழல் காணின் தொழுப விறகின்
எரிஅழல் காணின் இகழ்ப - ஒருகுடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமை பாராட்டும் உலகு (பாடல் 66)

- வயதில் மூத்ததால் மட்டும் ஒருவன் பெரியவனாகி விட மாட்டான். இளையவனானும் கற்றவனே பெரியோன் என்பதை, விளக்கில் எரிவதும் நெருப்புதான்; சுடரில் தெரிவதும் நெருப்புதான்; என்றாலும் வீட்டு விளக்கைத் தான் வணங்குவோம்.. விறகுத் தீயை அல்ல!

எனவே தீவட்டிகள் மூத்தமையைக் காட்டி கலகம் செய்யக் கூடாது!
-விடுதலை,22.9.16

அறிதல், தெரிதல், புரிதல் அவசியமே!


உல்லாசக் கப்பல் ஒன்றில் வாழ் விணையர்களான ஒரு கணவனும், மனைவியும் பயணம் செய்து கொண் டிருந்தார்கள்; திடீரென்று ஒரு நெருக்கடி பேரிடர்!

இருவரில் ஒருவர், கப்பலை விட்டுக் குதித்தே ஆகவேண்டும் என்பது கப்பல் தலைவரின் தவிர்க்க இயலாத கட்டளை போன்ற வேண்டுகோள்!

வேறு வழியில்லை; இருவரும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய அளவுக்குக்கூட அவகாசமில்லை.

மனைவியைத் தள்ளிவிட்டு, சோகத்தோடு வீடு திரும்பிய கணவன், இனி நமக்கு ஒரே ஆறுதல் கடமை, தமது ஒரே பெண் குழந்தையை நன்கு வளர்த்து ஆளாக்கி, மகிழ்வதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்ற எண்ணத்தோடு, அப்பெண் குழந் தையை நன்கு வளர்த்தார். அந்தப் பெண் கல்வி கற்று, பெரிய பெண்ணானாள். தந்தையும், முதுமையை அடைந்த நிலையில், இறந்து போனார்.

அந்தச் சொல்லொணா சோகத் திற்கிடையில்,  அடக்கமெல்லாம் முடிந்த பிறகு, வீட்டில் தந்தையின் அறையைப் பெருக்கித் தூய்மைப்படுத்திய நேரத்தில், படுக்கையில் உள்ள  தலையணையின் கீழிருந்து ஒரு பழைய டைரி - தந்தை நாளும் எழுதிய நாட்குறிப்பு - விழுந்தது! வியப்புடன் அந்த டைரியில் ஒவ்வொரு நாளும் தன் தந்தை எழுதியிருந்ததை இந்தப் பெண் - மகள் படித்தாள்! அதிர்ந்தாள்!!

அப்போது அதற்குமுன்பு எப் போதும் கேட்டிராத, தெரிந்திராத, அறிந்திராத ஒரு செய்தி அவளது கண்ணில் தென்பட்டது!

படித்துக் கண்ணீர் விட்டு ‘ஓ’வென்று கதறி அழுதாள்.

தனது தாய்க்கு ‘மீளாநோய்’ ஒன்று இருந்த காரணத்தால், அவர் களுக்குள்ளேயே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்போல, கப்பலில் இருந்த தன்னை கணவன் தள்ளிவிட்டு, குழந்தையான தனது அருமை மகளை வளர்த்து ஆளாக்கிடும் கடமையைச் செய்தலே தலையாய கடமை; எனவே, மனைவி கடலில் தள்ளிவிடப்படல் தவிர்க்க முடியாததாகி விட்டது!

அதுவரை இந்தச் சம்பவத்தின் பின்னணியை அறியாத, தெரியாத நிலையில் இந்த இளம் பெண்ணின் ஆழ்மனதில், தனது தாய் இல்லை; தந்தை மட்டும் தப்பித்து வந்தாரே, இது அவரது ஆண் வர்க்க சுயநல ஆதிக்கத்தினால் ஏற்பட்ட முடிவாக இருக்குமோ என்றே நினைத்திருந்தாள். என்றாலும் தந்தை, தந்தைதானே! தன் னிடம் பாசம் காட்டுபவர் அவர் தானே என்று  ஆறுதல் கொண்டிருந்தாள், புரிந்துகொண்டாள்.

அந்த ‘டைரி’யின் வாசகங்களும், அதில் புதைந்திருந்த  உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தவுடன், தன் தந் தையின் திட சித்தம், தாயின் தியாகம் - தன்னை ஆளாக்கிட அவர்கள் எத்தகைய நெருக்கடியில், எப்படிப்பட்ட கசப்பான முடிவினை மேற்கொள்ள வேண்டியதாயிற்று என்பதைப் புரிந்து - அழுது தீர்த்துவிட்டு சலனமற்று சாய்ந்தாள்!

தோழர்களே, இதிலிருந்து நாம் அனைவரும் அறிந்து, தெரிந்து, புரிந்து கொள்ளவேண்டிய பாடங்கள் பல உள்ளன - இல்லையா?

1. எதையும் மேலெழுந்தவாரியாக, ஒரு நிகழ்வை மட்டும் வைத்து முடிவுக்கு வந்து - அவசரத் தீர்ப்பு வழங்கிடுவது உண்மையைக் குழிதோண்டிப் புதைப் பதாகும் என்பதும்,
2.அவரவரதுசூழ்நிலையும்,நிர்ப் பந்தம், அடிப்படை, நியாயமான செயலைச் செய்த செயல்கள், புறப்பார் வையில், பிறர் கண்ணோட்டத்தில் சரியானதல்ல; கொடுமையானது என்று கூடத் தோன்றும்.

ஆனால், சரியான புரிதலே உண் மையை உள்ளிருந்து உரக்கக் குரல் கொடுத்து, நம்மை உயர்த்தும்.
எனவே, மேலெழுந்தவாரியான முடிவோ - அவசரமோ வேண்டாம்!
-விடுதலை,10.9.16

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

தோல்வியும் சுவைக்கத்தக்க அனுபவமே!

வாழ்க்கையாக இருந்தாலும், தேர்வாக இருந்தாலும், தேர்தலாக இருந்தாலும், விளையாட்டுத் துறையாக இருந்தாலும், வெற்றியைச் சுவைக்கவே விரும்புவதைவிட, தோல்வியை ஏற்கக் கற்றுக் கொள்ளுவதும், அதன்பாடங் களால் பயன் பெறுவதும் அனைவரும் பெற வேண்டும்.

எப்போதும் நிழலில் இருப்பவருக்கு வெயில் அனுபவமே தெரியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், நிழலின் பெருமை, அருமையை அவரால் உணர்ந்து, சுவைக்க முடியாது.

பசியே தெரியாதவன் வாழ்க்கை, பலனற்ற ஒன்றாகும்; ருசியும் அவனுக்கு அதிகமாகத் தெரியாது. உணவின் பெருமை பசியினால் தான் பெரும் அளவுக்கு உணர்த்தப்படும்.

எங்களுக்கே ஏற்பட்ட அனுபவம், மிசா கைதியாக சிறை உணவு என்ற தண்டனை உணவை (அதிலும் எங் களுக்குத் திட்டமிட்டே தரப்பட்ட அருவருக்கத்தக்க உணவை வேறு வழியின்றி உண்ட நேரத்தில்,) நம் வீட்டுச் சமையலின் அருமை, பெருமை களையும், சிறிது உப்புக் குறைவாக இருந்தபோதும்கூட அதற்காக கோபத் தின் உச்சிக்குச் சென்று வீட்டு அம்மை யாரிடம் சண்டை பிடித்த காட்சிகள் எல்லாம் எங்கள் அகக்கண் முன் தோன்றியது; சுயபரிசோதனை செய்து பிறகு பக்குவமாகும் பாடத்தையும் போதித்தது! வெற்றியே பெற்று வந்த நான் (அதிலும் முதல் தகுதி, பரிசுகள் பெறு கின்றவன் என்ற எங்கோ ஒரு மூலையில் பதிந்த தன் முனைப்பு - என்னை அறியாமலேயே - இருந்த நிலையில்,) சட்டப்படிப்பு முதலாண்டில் தோல்வி யுற்றபோது அதை எளிதில் ஏற்றுக் கொண்டு செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை.

நான் தோல்வியுற்றது தான் நியாயம், அதிசயமானதோ, அக்கிரமம் ஆனதோ அல்ல; காரணம் நான் சட்டக் கல்லூரி வகுப்புக்கே செல்லாமல், அன்னையாருடன் சென்று, தேர்வுக்கு 15 நாள்கள்தான் படித்தேன் - நானே பாடங்களை! அய்யத்துடன் தேர்வு எழுதினேன்; மிகக் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் தான் தோற்றேன் தேர்வில்!

எனது தோழர் கோ. சாமிதுரை அவரும் என்னைப் போலவே தோல் வியைத் தழுவியவர். இருவரும் அதி லேயும் கூட்டாளிகளாக  அமைந்தோம். அவர் அதை வெகு சாதாரணமாக எடுத்துக் கொண்டு வழமைபோல் சினிமா, பொழுதுபோக்கு - இவைகளை விடவில்லை. நானோ இயல்பாகவே அவற்றில் நாட்டம் இல்லாத இயக்கப் பணி - கூட்டங்கள், பிரச்சாரத்தில் திளைப்பவன்; அவற்றையும் ஒதுக்கி மும்முரமாகப் படித்து நல்ல மதிப் பெண்கள் பெற்றுத்  தேர்ந்தேன். அந்த அனுபவம் ஒரு வடுப்போல என்னை எப்போதும் பக்குவப்படுத்திய வாழ்க்கை அனுபவத்தைத் தந்தது!

கசப்புக்குப் பிறகு கிடைக்கும் இனிப்பின் சுவைதான் என்னே!

தோல்விக்குப்பின்னர் கிடைக்கும் வெற்றியின் மதிப்புதான் எவ்வளவு!

அது மட்டுமா? ஓர் அமைப்பில் வெற்றி கிட்டும்போது, அதனைக் கொண்டாட பலரும் உரிமை பாராட் டுவர்.

தோல்வி என்றால், எவரும் திரும்பும் முன் நம்மை தனியாக விட்டு ஓடவே முயற்சிப்பார்கள்.

இது உலக இயற்கைதான்! பழி தூற்றும் பகைவர்கள் பலரும் இச்சந்தர்ப்பம்தான் நமக்கு அரிய வாய்ப்புச் சேற்றை வாரி இறைத்து, நமக்கு வேண்டாதவர்களை அழிக்க, ஒழிக்க அரிய சந்தர்ப்பம் என்றும் மகிழ்வர். லட்சிய வீரர் - வீராங் கனைகளுக்கு இந்த பழியும் - குற்றச் சாற்றுகளும் பொறாமைப் புழுக்களின் புலம்பல்கள் என்று தூசி தட்டி விட்டு இலக்கு நோக்கியே பயணிப்பர் - கார ணம் வாழ்வில் என்றும் பயணங்கள் முடிவதில்லை; பாதைகள் மூடப் படுவதில்லை.

- கி. வீரமணி
-விடுதலை,19.5.14