'தினத்தந்தி' நாளேட்டில் தொடர் கட்டுரைகளாக டாக்டர் எஸ். அமுதகுமார் MBBS, MCIP, PG Dip.DIABETOLOGY, FCGP அவர்கள் எழுதிய 'உடலும் உணவும்' என்ற கட்டுரைத் தொகுப்பு பலருக்கும் பயன் தரத்தக்க எளிய முறையில், நல வாழ்வின் கையேடுபோல மிக அருமையான நூலாக - 60 கட்டுரைகளின் தொகுப்பாக - தினத்தந்தி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
தினத்தந்தியில் வந்த போதே, சிற்சில கட்டுரைகளைப் படித்துச் சுவைத்தேன்.
இது வாழ்க்கைக்குப் பயன்தரும் ஒரு நல்ல நலவாழ்வுக்கான நூலாகும். பலரும் படித்து ஒழுகினால் உடல் நலம் பெரிதும் பாதுகாக்க உதவிடும் என்பது உறுதி!
பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் அ. ராஜசேகரன் தொடங்கி பல்துறை அறிஞர்கள் இந்நூலுக்குப் பாராட்டுரைகள் - அணிந்துரைகள் வழங்கி சிறப்பித்துள்ளார்கள்.
சுமார் 50, 60 ஆண்டுகளுக்குமுன், உடல் நலம் காப்பதுபற்றி தமிழில் வந்த நூற்கள் மிகமிகச் சொற்பமே!
ஆனால் இப்போது பல டாக்டர்கள் நல்ல சிந்தனையாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கூட இருப்பதால், பல்வேறு மருத்துவத்துறை ஆய்வு நூற்களில் தொடங்கி, இத்தகைய உடற்கூறு பற்றிய அனைத்துத் தரப்பும் விளங்கிக் கொள்ளும் நூற்கள் பலவும் எழுதியுள்ளார்.
இந்த நூலில் உள்ள 60 தலைப்புகளில் 60ஆவது கடைசி கட்டுரையில் (தலைப்பே வேடிக்கையானதுதான்) "பணப்பை அல்ல; இரைப்பைதான் முக்கியம்" என்ற தலைப்பில் உள்ள கட்டுரையின் இறுதியில்... (பக்கம் 400)
"ஒரு மனிதன், தனது உடலை வைத்துதான் அடையாளப்படுத் தப்படுகிறான். அந்த உடலைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பு மனிதனுக்கு இருக்கிறது. அதற்கு அடிப் படையாக இருப்பது உணவுதான். சரியான உணவை, சரியான நேரத்தில், சரியான அளவில் சாப்பிடுகிற மனிதர்களாலே சரியான ஆரோக்கியத்துடன் வாழ முடியும். சரியான உணவு எது? சரியான அளவு எது? சரியான நேரம் எது? என்பதை கடந்த அத்தியா யங்களில் பார்த்து வந்திருக்கிறோம். அதோடு எந்தெந்த உணவில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன? யார்- யாருக்கு எந்தெந்த சத்துக்கள், எந்தெந்த அளவில் தேவை என்பதையும் விளக்கியிருக்கிறேன். அத்தனைக்கும் மேலாக உச்சியில் இருக்கும் முடி முதல் பாதத்தில் இருக்கும் நகம் வரை சிறப்பாக இருக்க என்னென்ன உணவுகள் சாப்பிடவேண்டும் என்பதையும் பல்வேறு அத்தியாயங்களில் மனதில் பதியும் அளவுக்கு விளக்கியிருக்கிறேன்.
இன்று பலரும் பணத்தைத்தேடி அலைந்து பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி ஓடிக்கொண்டிருக்கும்போது, 'எனக்கு சாப்பிடக்கூட நேரமில்லை' என்கிறார்கள். ஆனால் அவர்கள் பெருமளவு சம்பாதித்துவிட்டு இனி உட்கார்ந்து சாப்பிடலாம் என்று நினைக்கும்போது, டாக்டர்கள் பல்வேறு நோய்களின் பட்டியலை வாசித்து, 'அதை சாப்பிடக்கூடாது, இதை சாப்பிடக்கூடாது' என்று தடை விதித்துவிடுகிறார்கள்.
உங்களால் அனுபவிக்க முடிந்த பணம் மட்டுமே உங்களுக்கான பணம். நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் பணம் எல்லாம் உங்களுக்கான பணம் அல்ல. உங்களுக்குப் பின்னால் அதை யார் அனுபவிப்பார்களோ அவர்களுக்கான பணமாக அது ஆகிவிடும். அதை மனதில் வைத்துக்கொண்டு பசிக்கிறது என்று உடல் உணர்த்தும் நேரத்தில் சாப்பிட்டு விடுங்கள். சுவையாக சாப்பிடுங்கள். ஆனால் அது அளவானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கட்டும். ஆரோக்கியம் தருவது பணப்பை அல்ல, இரைப்பைதான்! உண்டு மகிழுங்கள்! நன்கு வாழுங்கள்! "
முன்பெல்லாம் ஆங்கில மொழிகளில் தான் இத்தகைய நூல்கள் வருவது வழமை என்பதை மாற்றி நமது தமிழ் இனப் பெரு மக்கள், செம்மொழியாகிய நம் மொழி தமிழ் வெறும் "நீச்ச பாஷையல்ல" - மக்களின் மூத்த மொழி! காலத்தாலும், கருத்தாலும் மூத்த நாகரிகம், பண்பாடு எம்முடையது என்பதை நிறுவிட மருத்துவம் உட்பட பல துறைகளிலும் இப்போது நூற்கள், மலையினும் மானப் பெரிதாக பெருகுகின்றன.
படித்துப் பயன் பெறுக!
எழுதிய பிரபல டாக்டர் எஸ். அமுதகுமார், மக்களுக்குப் பயன்படக் கூடிய வகையில் அழகிய பட விளக்கங்களுடன் கூடிய நூலாகக் கொணர்ந்த 'தினத்தந்தி' பதிப்பகத்தினருக்கு நமது பாராட்டு - வாழ்த்துகள்!
-விடுதலை,28.1.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக