பக்கங்கள்

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

நன்றி காட்டுவதின்மூலம் உயருங்கள்!

நன்றி காட்டுவதின்மூலம் உயருங்கள்!

சிறந்த வாழ்க்கை என்பது பணத்தால் அளக்கப் படுவது அல்ல பதவியால் மதிப்பிடுவதும் அல்ல; பகட்டான ஆடம்பரங்களில் அடையாளப்படுத்தப் படுவதல்ல; பட்டங்களாலும் கணக்கிடப்படுவது அல்ல.

மனித வாழ்வின் பண்புகளால் நிர்ணயிக்கப்பட்டு, நிலைக்கப்படுவதே மனிதர்களாகிய நம்முடைய சிறந்த வாழ்க்கை என்பது.

அதன் மிக முக்கிய மதிப்புறு விழுமியங்களில் (Values)    ஒன்று நன்றி காட்டுதல் என்னும் செய்ந்நன்றி அறிதல் ஆகும்.

செய்ந்நன்றி அறிதல் என்ற தலைப்பில், திருக்குறளில் தனித்த 10 குறட்பாக்களைக்கொண்ட ஒரு அதிகாரத்தையே எழுதி, வலியுறுத்தியுள்ளார்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழரின் சிந்தனை வளம் - பண்பாட்டுப் படையெடுப்பு மெல்ல நுழைந்து கொண்டிருந்த காலம் என்ற போதிலும் கூட - எவ்வளவு செழுமையானது பார்த்தீர்களா?

நன்றி என்பது என்ன என்பதை அறியாத மக்களே நம் மக்கள் தொகையில் பெரும்பாலோர்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வு இல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு                      (குறள் 110)

எவ்வகைப்பட்ட அறங்களையும் அழித்தவர் களுக்கும் தப்பிப் பிழைத்துக் கொள்ளுவதற்குக்கூட வழி உண்டாகக்கூடும். ஆனால், ஒருவர் செய்த பேருதவியை மட்டும் மறந்து போய் விடுபவர்க்கு, எப்பொழுதும் நல்வாழ்வு என்பது ஏற்படுவதில்லை என்பதே இக்குறளின் கருத்தாகும். இதிலிருந்து நன்றி என்ற சொல்லுக்குப் பொருள் உதவி பெறுதல் என்பதே ஆகும்.

எந்நன்றி -செய்நன்றி என்று பகுத்து ஆராய்ந்து பார்த்தாலே இது தெளிவாய் விளங்கும்.

1931இல் குடிஅரசு வார ஏட்டில் ஒரு தலையங் கத்தில் எழுதும்போது, தந்தை பெரியார் அவர்கள், நன்றியின் தத்துவம் பற்றி மிக அருமையாக விளக்கி யுள்ளார்கள்.

நன்றி என்பது பலன் அடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர் பார்க்கக் கூடாத ஒன்றாகும்; அப்படி எதிர் பார்த்தால் அது சிறுமைக் குணமேயாகும்

மனிதப் பண்புகளில் இயல்பானது சமூக வாழ்க்கை என்பது கூட்டு வாழ்க்கையாக அமைந்து விடுவதால், ஒருவருக்கொருவர் உதவியை நாடுவது தவிர்க்க இயலாதது. அதனால் உதவிட முன்வர வேண்டும் கட்டாயம்; ஆனால் அதற்காக நன்றி சொல்ல மறந்து விட்டாரே என்று உதவிய எவரும் ஆதங்கமோ, வருத்தமோ, கவலையோ கொள்ளக் கூடாது என்ற மிக உயர்ந்த தத்துவத்தை தென் கிழக்காசியாவின் சாக்ரடீஸ் என்று அய்.நா.வின் யுனெஸ்கோ வர்ணித்ததே - அதை தந்தை பெரியார் அவர்கள் கூறியுள்ளார்கள்!
இக்கருத்தின் ஒரு அடி நீரோட்டத்தையும் நாம் புரிந்து கொள்ளத் தவறக் கூடாது. அதாவது, நம்மால் உதவி பெற்றவர்களில் பலரும் நன்றி கூறிட முன் வருவதில்லை என்பதே உலக இயற்கையில் நாம் காணும் நடைமுறை.

அதனை எதிர்பார்த்தால் உதவியவர்களுக்கு ஏற்படுவது ஏமாற்றம்; ஏமாற்றத்தின் விளைவு வருத்தம் அல்லது கோபம் - அதன் விரிவாக்கம் -விளைவு...? அடுத்த ஒருவர் நம்மிடம் வந்து உதவிகளை அது மிகவும் தேவையானதாகவும் நியாயமானதாகவும்கூட இருக்கலாம் என்ற போதிலும், இந்த வருத்தத்தைக் தேக்கி வைத்து, குமுறும் நெஞ்சத்தை உடைய வர்களுக்கு அடுத்தவருக்கு உதவிடும் எண்ணம் வராமல் தடுக்கும் நிலைகூட உருவாகி விடலாமே!

எப்போதும் உதவிடக் கூடிய நமது உற்சாகமான நம் உள்ளப்பாங்கிற்கு இந்த எதிர்பார்ப்பு ஊறு செய்துவிடும் அல்லவா! அதனால்தான் உயர் எண்ணங்கள் மலரும் சோலையான பெரியார் அவர்கள். அதைச் சிறுமைக்குணம் என்று ஒரு போடு போட்டு, ஓங்கி சம்மட்டி அடி அடித்தார்கள்.

நன்றி என்பதும் உதவி என்பதும் ஒரு வகைப்பட்டது.

எங்கோ ஒரு நிகழ்வில், பெரிய நிலைக்கு உயர்ந்த ஒருவர் அங்கே உதவி செய்த வரை எதிர்பாராமல் சந்திக்கும்போது, சட்டென்று அவர்தம் நண்பர், உறவினர்கள் குழுவினரிடம் இவரின் அரிய உதவியால் தான் நான் இன்றுள்ள நிலையை அடைந்தேன் என்று பூரிப்புடனும் பெருமையுடனும் கூறிடும்போது, நல்ல மனிதர்கள் கூச்சத்தாலும், நாணத்தாலும் சற்றே தலை கவிழ்ந்து அடக்கத்துடன், அப்படி ஒன்றும் பெரிதாக நான் ஏதும் செய்துவிட வில்லை என்றுகூறி, மலையிலும் மாணப் பெரிதாக உயர்வார்!

நன்றி சொல்லவில்லையே என்று உதவி செய்தவர்கள் வருந்துவதற்குப் பதிலாக, அரிதாக மேற்காட்டிய நிகழ்வுகள் நடைபெறும்போது, அதனை எண்ணி எண்ணி மகிழ்வதுகூட தேவையில்லை. செய்த உதவியை செய்தவர்கள் மறந்து விடுவது நல்லது; உதவி பெற்றவர்கள் என்றும் நினைவில் வைத்துக் வாழுவதும் அங்குள்ள மனிதப் பண்பு வளர்ந்தோங்கு செழிப்புடன் உள்ளது என்பதே பொருளாகும்.

அண்மையில் அன்றாட அறிவுரைகள் ரகசியம் என்ற தலைப்பில் ஒரு அருமையான ஒரு ஆங்கில நூலினைப் (Secret - Daily Teachings by Rhonda Bynre)படித்தபோது, இந்த நன்றி உணர்வின் வெளிப்பாடுபற்றி மிக அருமையான நடைமுறை ஒன்றினை எழுதியுள்ளார்.

(இந்நூல் உலகின் 50 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது; 2.4 கோடி புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளன சென்ற ஆண்டுவரை)

ஆழமான நன்றி உணர்வை நீங்கள் உங்களுக்குள் அனுபவிக்கப் பழகிக் கொள்ளுங்கள்; ஒவ்வொரு நாளும் அமர்ந்து நீங்கள் யாருக்கெல்லாம் நன்றிக் கடன்பட்டுள்ளீரோ, யார் யாரிடம் எவ்வகை உதவிகளைப் பெற்றுள்ளீர்களோ அந்தப் பட்டியலை கைப்பட எழுதிடுங்கள். எழுதிக் கொண்டே இருங்கள். உங்கள் கண்களில் நீர்ப்பெருக்கெடுத்து ஓடும் வரை எழுதிக் கொண்டே அப்பட்டியலை நீட்டுங்கள். கண்ணீர் மேலும் ஊற்றாக வரும் நிலையில், உங்கள் இதயம் மிக அற்புதமானதாக உங்களுக்கு அமையும். நன்றி காட்டுதலின் உண்மைக் கூறுபாட்டை உணர்தல் இதன் மூலமே முடியும் இதை திரும்பத் திரும்ப செய்து கொண்டே இருங்கள். அதன் மூலம் உயர்வீர்கள் நீங்கள்.

- கி.வீரமணி

-விடுதலை,28.8.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக