பக்கங்கள்

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

"படி படி பெரியார் படி" - ஒரு புத்தாக்க நூல்!திருவாரூர் மாவட்டத்தில் காவாலகுடி, கண்கொடுத்த வனிதம், விடயபுரம் - எருக்காட்டூர் போன்ற கிராமங்கள் திராவிட விவசாயக் குடும்பங்கள் நிறைந்த பகுதிகளாகும்.

விடயபுரம் கிராமத்தில் தந்தை பெரியார் நடத்திய திராவிட மாணவர் பயிற்சி வகுப்பில்தான் தந்தை பெரியார் - பிரபலமானதும், விவாதத்தை தோற்றுவித்ததுமான "கடவுள் மறுப்பு வாசகங்களை" அறிவித்த இடமாகும்.

பெரியார் பற்றாளர், ஒரு ஆதரவாளர் பயிற்சி வகுப்பிற்கு ஏற்பாடு செய்தார்!

அவ்வூரில் உள்ள எளிமையான கருஞ்சட்டைத் தோழர்மானமிகு சு. ஒளிச்செங்கோ. ஆழ்ந்த பகுத்தறிவுத் தமிழ்ப் புலமை பெற்ற பெரியார் பெருந்தொண்டர். தந்தை பெரியார் கருத்துக்கள், எழுத்துக்கள், பேச்சுகள் பற்றி ஆழமாக விரித்துரைக்கும் 'நுண்மா நுழைபுலம்' உடைய வியக்கத்தக்க விவசாயி!

அவர் சில அரிய நூல்கள் எழுதியுள்ளார். அவரது மகன் சுந்தரபுத்தன் ஒரு சிறந்த எழுத்தாளர். சென்னையில் பணிபுரிகிறார்!

அவர் கடந்த 7.4.2019 அன்று அவரது புதிய நூலான "பெரியார் அடுக்குச்சொல்; மற்றும் சில கட்டுரைகள்"என்ற தலைப்பில் வெளி வந்துள்ளதை எனக்குக் கொடுத்தார். உடனே சுற்றுப் பயணத்திலேயே படித்தேன்.

அது  மிக மிக அருமையான நூல்! படித்து விழுங்க வேண்டிய அறிவுப் பெரு உலா அந்நூல்!!

பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந. இராமநாதனுக்கு அடுத்து, வரிக்கு வரி பெரியாரை திறனாய்வுத் தேனில் குழைத்துத் தருபவர் இவரே! அந்நூல் ஒரு சிறு 'கேப்சூல்' ('Capsule') போல பல அருமையான தொகுப்பு - விளக்கம், கட்டாயம் வாசித்து பெரியாரை சுவாசிக்கும் நூல் இது!

இதோ, ஒரு அரிய பகுதி.

"பெரியார் படி" என்ற அத்தியாயத்தில் அவரது விளக்கம் - பெரியார்படி என்பதில், "பெரியார் என்னும் கருத்தாவின் பெயர் அவரால் செய்யப்பட்ட நூலுக்கு ஆயிற்று."

என்னே நேர்த்தி!

இதோ அக்கட்டுரை.

பெரியார் படி


"பெரியார் எனும் சொல் இணைப்பரும் பெருமையையும், ஒப்புச் சொல்வதற்கு அரிய பெருமையுடையவர் என்பதை உணர்த்தும் சொல்லாகும். அச்சொல் சுட்டும் பொருளுக்கு ஏற்பவே பெரியார் திகழ்ந்தார்; இன்றும் ஒளிர்ந்துவருகிறார். பொருள் புலப்பட பொருள் தோன்ற கூறுதலை புலன்வனப்பு என்பர். அந்த அரிய புலன்வனப்பைப் பெரியாரின் எழுத்திலும், பேச்சிலும் காணலாம்.

பெரியாரின் உரைநடை என்பது தனி வகைப்பட்ட உரை நடை வண்ணமாகும். எந்த தமிழ்ப் புலமையாளர்களுக்கும் வாய்க்கப் பெறாத - பெரியாருக்கு மட்டும் இயல்பாக வாய்க்கப்பெற்ற பெரும்பேறாகும். கழுத்துப் பிடி கொடுத்தாலும், எழுத்துப்பிடி கொடுக்கக்கூடாது என்பது கொங்கு நாட்டு சொலவமாகும்.

பெரியார் பேசும்போதும், எழுதும்போதும் சொற்களின் புலப்பாட்டைத் தெரிந்துகொண்டு எழுத்துப் பிடி கொடுக்காமல் எழுதவும் பேசவும் வல்லவர். அவரது எழுத்திலும் பேச்சிலும் எண்ணற்ற பழமொழிகளைக் காணலாம். அவை சுவைமிக்கதாகவும், சுட்டுரைப்பாகவும் இருக் கின்றன. தாம் கூறும் கருத்துக்களுக்கு வலுசேர்க்க சிறு சிறு குட்டிக் கதைகளையும் கூறியிருக்கிறார். அது நகைச்சுவையும், அறிவுச் சுவையும் தருவனவாகும்.

மேலும், அவர்தம் கருத்துக்கு அழுத்தமும் தெளிவும் கொடுக்க உயிர் எழுத்து அடுக்குத் தொடர்களையும், மெய் எழுத்து அடுக்குத் தொடர்களையும் பயன்படுத்தியுள்ளமை சுவை பயப்பனவாகவுள்ளன. அவரது பேச்சும் எழுத்தும் கேள்விகளாகவே இருக்கும் என்பதை ஆய்வு செய்த அண்ணாமலைப் பல்கலைக்கழத் தமிழ்ப் பேராசிரியர் சேகர், முற்றுச் சொல் இல்லாத வாக்கியத்தை வினைச் சொல்லும் இல்லாமல் கேள்விக்குறியினால் மட்டுமே கேள்வியாக்கும் முறையில் தம் இதழ்களில் பின்பற்றியுள்ளார் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

விமர்சன அறிஞர் க.நா.சுப்ரமணியம், "ஈ.வெ.ராவின் நடையிலும் ஓர் இலக்கியத்தரமான வார்த்தைச் செட்டைக் காணலாம். அவர் பேச்சிலும், அவரது உள்ளத்தைத் துல்லிய மாகக் காணமுடிந்தது. ஈ.வெ.ராவின் இலக்கியச் சேவை மிகவும் தரமானது. இத்தனைக்கும் அவர் இலக்கியச் சேவை செய்ய முன்வந்தததாகச் சொல்லிக் கொள்ளவில்லை. மற்றவர்கள் தான் சொல்லிக் கொண்டார்கள்" என்று சொல்கிறார்.

உவமைக் கவிஞர் சுரதா இப்படிச் சொல்கிறார்... "கவிதையால் ஒன்றும் செய்ய முடியாது. அது ஒரு மயக்கம். உரைநடைதான் மாற்றங்களைக் கொண்டு வரும். பெரியாரின் உரை நடைதான் சமூக சீர்திருத் தங்களை ஏற்படுத்தியது, என்னால் மறக்கமுடியாத தலைவர் பெரியார்தான். பெரியாரால்தான் இங்கே பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதுவரை இங்குள்ள மக்கள் நம்புவர்களாகத்தான் இருந்திருக் கிறார்கள். எம்புவர்களாக மாற்றியது பெரியார்தான்,

பெரியார் யாரையும் மேற்கோள் காட்டிப் பேசுவதில்லை. நான் சொல்றேன்னுதான் சொல் வார். அதுக்கு அசாத்திய தன்மை, தன்னம் பிக்கையும், தனக்கு சரி என்று பட்டதை வெளிப்படுத்தும் பழக்கம் வேணும். பெரியார் என்ற ஒரு வார்த்தை சொன்னால், இவரை மட்டும்தான் குறிக்கும். உலக வரலாற்றில் இந்தப் பெருமை எந்தத் தலைவருக்கும் கிடையாது" என்கிறார்,

தமிழ்த்தென்றல் திரு.வி.க. சொல்வதைப் பார்க்கலாம்.. "இயற்கைப் பெரியார். என் வாழ்நாளில் இதுகாறும் செய்த ஆராய்ச்சிகளுள் அகப்படாத பல கருத்துக்களும், அரிய யோசனைகளும் இப்பெரியாரின் இயற்கை அறிவில் உதித்திடக் காண்கின்றேன். எவருக்கும் எளிதில் கிடைக்காத இயற்கை அறிவை ஏராளமாகப் பெற்றிருக்கிறார்." மேலும், "அவர் பெரியாருடைய இயக்கம் அறிவியக்கம். அது எல்லா எல்லைகளையும் கடந்து இது உலகப் பொது இயக்கமாகும்" என்று குறிப்பிட்டு வியந்திருக்கிறார்.

பெரியார் தாமே தொடங்கி நடத்திய குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, உண்மை மற்ற பிற இதழ்களிலும் தம் சுயசிந்தனை பகுத்தறிவுக் கருத்துக்களைப் பதிவு செய்துவிட்டார். அவ் விதழ்களில் பகுத்தறிவு கருத்துச் செல்வங்கள் செறிந்தும் பொதிந்தும் கிடக்கும்.

பெரியாரியல் என்பது மெய் வைத்த சொல் இயலாகும். அவற்றை ஊன்றிப் படித்தால் நம் அறியாமையின் அளவைத் தெரிந்து தெளிவு பெறலாம். பெரியாரின் சுயசிந்தனைக் கருத்துத் துளிகள் சிலவற்றை உங்கள் உள்ளங்களில் நுழையவிட்டுப் பாருங்கள். அது துளிர்விட்டு வளர்ந்து ஒளிர்வதைக் காணலாம். அதனால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பயமற்றவர் களாகவும், வளமும் பொலிவும் பெற்றுத் திகழலாம். பெரியார் மறைந்தாலும் அவரது பெரியாரியல் என்ற பகுத்தறிவு விடிவெள்ளிக்கு மறைவில்லை. அது திராவிடர்களின் விடியலைச் சுட்டிக்காட்டியும் தட்டி எழுப்பிக்கொண்டேதான் இருக்கும்."

-  விடுதலை நாளேடு, 19.4.10