பக்கங்கள்

திங்கள், 11 மார்ச், 2019

கலைஞரின் பார்வையில் வாளேந்திய வீரத்தாய் இதோ!



கடலூரில் அய்யாவின்மீது செருப்புப் போடப்பட்ட இடத்தில்  எழுப்பப்பட்ட சிலை அருகே - நெருக்கடி காலம் முடிந்து,  பெரியார் நூலகம் திறப்பு விழா 1977 - செப்டம்பரில்  நடைபெற்றது.  அன்னையாருக்கு வெள்ளி வீரவாள் பரிசளிப்பும் நடைபெற்றது. எதிர்க் கட்சித் தலைவர் கலைஞர் கலந்து கொண்டு ஆற்றிய சொற்பொழிவு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வைர வரிகளின் ஒளியாகும்.

இதோ, அப்படியே தருகிறோம். கலைஞர் அன்னை யாரின் தொண்டறத்தையும், வீரத்தையும் எப்படி மலர்ந்த நினைவுகளுடன் வர்ணித்தார். படியுங்கள் - சுவையுங்கள்.

வீணை நரம்பினிலே இசை துடிக்கும்


மானம் மானம் என்றே முழங்கும்


தென்னாற்காடு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கழகத் தலைவர் அம்மா அவர்களிடம் வாள் ஒன்றினை பரிசாக அளித்து, கலைஞர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

"இந்த விழா எழுச்சி வாய்ந்தது. உணர்ச்சியும் உற்சாக மும் மிக்கது, எதிர்கால தமிழ் இனத்திற்கு நம்பிக்கை ஊட்டவல்லது என்றெல்லாம் கூறத்தக்க ஒரு பெரும் விழாவாகும்.

இந்த விழாவிலே உரையாற்றி இருக்கின்ற மதிப் பிற்குரிய அம்மையார் அவர்களும் மற்றும் திராவிடர் கழகத்தினுடைய பொதுச் செயலாளர் வீரமணி, ஏனைய நண்பர்கள் அனைவரும் தமிழ்ச் சமுதாயம் வீறுநடை போட வேண்டும், ஒற்றுமையாக இந்தச் சமுதாயம் வாழ்ந்திட வேண்டும் என்ற அரிய கருத்துகளை இங்கே வழங்கி இருக்கிறார்கள்.

என்னுடைய கையால் ஒரு வாளினை அம்மையார் அவர்களுக்கு தென்னாற்காடு மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் வழங்கிய நிகழ்ச்சியும் இங்கே நடைபெற்றது.

தாய்க்குலம் கையிலே வாள் ஏந்துவது என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலே விந்தையான ஒரு செய்தி அல்ல.

புறநானுற்றுத் தாயினுடைய வீர வரலாறுகளை யெல்லாம் இலக்கியங்களிலே படித்த நமக்கு தாய்க்குலம் கையிலே வாள் ஏந்துவதா என்ற அய்யம் ஏற்பட நியாயமே கிடையாது. இன்றைக்கு வேண்டுமானால்  நம்முடைய தமிழ்நாட்டுத் தாய்மார்கள் "வாள் ஏந்துவது பெண்டிற்கு அழகல்ல. அது ஆடவர்க்கே உரிய ஒன்று" என்கின்ற நிலைக்கு ஆளாகி இருந்தாலும், நான் குறிப்பாகவும் சிறப்பாகவும் சொல்ல வேண்டுமேயானால் தொன்மைக் காலத்திலே - பழந்தமிழர் காலத்திலே ஆடவர்களை வீரர்களாக ஆக்கிய பெருமைகூட தாய்க்குலத்திற்குத்தான் உரிய பெருமையாக இருந்தது.

இந்த வீரவாளிளை திராவிடர் கழக நண்பர்கள் தந்து அதனை நான் பெற்று, அன்னையார் அவர்களுடைய கையிலே வழங்கிய நேரத்தில் 'குடிஅரசு' அலுவல கத்திலே   1944-45ஆம் ஆண்டுகளில் துணை ஆசிரி யனாக நான் பணியாற்றியபோது பெரியாருடைய பள்ளியிலே பயின்று பெரியாருடைய இல்லத்திலே உணவருந்தி, நம்முடைய அன்பிற்குரிய அன்னை மணியம்மையார் அவர்கள் உணவு பரிமாறி அதனை அருந்திய அந்தக் காட்சிகளும், 'குடிஅரசு' அலுவலகத்தி லிருந்து எழுதிய 'கவிதை அல்ல' என்கின்ற ஒரு கவிதையும் எனக்கு நினைவுக்கு வந்தன.

இந்த வாளை கண்ட மாத்திரத்தில் - வாளை அம்மையார் அவர்களுடைய கரத்திலே தந்த மாத்திரத் தில் - அந்த வாளை அவர்கள் ஓங்கி உயரப் பிடித்துக் காட்டினார்களே, அந்த நேரத்தில் நான் 1944ஆம் ஆண்டில் எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது.

"குடிசைதான்! ஒரு புறத்தில்  கூரிய வேல்வாள்  வரிசையாய் அமைத்திருக்கும்  வையத்தைப் பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும்  வடித்துவைத்த படைக்கலம்போல் மின்னும்; மிளிரும் புலியின் குகையினிலே அழகில்லை - புதுமையல்ல  கிலியும் மெய் சிலிர்ப்பும் கீழிறங்கும் தன்மையும்  தலைகாட்டா மானத்தின் உறைவிடம் - மறவன் மாளிகை இல்லத்து வாயிலிலே கிண்ணத்துச் சோறோடு  வெல்லத்தைச் சிறிது கலந்து வயிற்றுக்குள் வழியனுப்ப  பொக்கைவாய் தனைத்திறந்து பிடியன்னம்  எடுத்துப் போட்டாள் பெருநரைக் கிழவிஒருத்தி  ஓடிவந்தான் ஒரு வீரன்  ஒரு சேதி பாட்டி என்றான்  ஆடிவந்த சிறுமிபோல் பெருமூச்சு வாங்குகின்றாய்  ஆண்மகனா நீ தம்பி  மூச்சுக்கு மூச்சு இடைவேளை ஏற்படட்டும்  பின் பேச்சுக்குத் துவக்கம் செய் என்றாள் அந்தக்  கிண்டலுக்குப் பேர்போன கிழட்டுத் தமிழச்சி!  வேடிக்கை நேரம் இதுவல்ல பாட்டி - உன் வாடிக்கைக் கேலியை விட்டுவிடு.  மடிந்தான் உன் மகன் களத்திலென்றான்

மனம் ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க்கிழவி ஒருமுறை

தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு

களமும் அதுதான்

காயம் மார்பிலா? முதுகிலா? என்றாள்

முதுகி லென்றான்

கிழவி துடித்தனள்; இதயம் வெடித்தனள்;

வாளை எடுத்தனள்!

முழவு ஒலித்த திக்கை நோக்கி

முடுக்கினாள் வேகம்

கோழைக்குப் பால் கொடுத்தேன்

குப்புற வீழ்ந்து கிடக்கும்

மோழைக்குப் பெயர் போர்வீரனாம்

முன்பொருநாள்

பாய்ந்துவந்த ஈட்டிக்குப் பதில் சொல்ல மார்பைக் காட்டிச்

சாய்ந்து கிடந்தார் என் சாகாத கண்ணாளர். அவருக்குப் பிறந்தானா?

அடடா மானம் எங்கே?

குட்டிச் சுவருக்கும் கீழாக வீழ்ந்து பட்டான்.

இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும்

இங்கு வீணை நரம்பினிலே இசை துடிக்கும்

அதுவும் மானம் மானம் என்றே முழங்கும்

மதுவும் சுராவும் உண்டுவாழும் மானமற்ற வம்சமா

ஏடா! மறத்தமிழ்க் குடியிலே மாசு தூவிவிட்டாய்

மார்பு கொடுத்தேன் மகனாய் வளர்த்தேன்

தின்றுக் கொழுத்தாய் திமிர்பாய்ந்த தோள்களெங்கே?

தினவெடுக்கவில்லையோ? அந்தோ!

வேலுக்கு வழி சொல்ல வகையற்ற கோழையே

என் வீரப் பாலுக்கு வழி சொல்வாய்!!

என்று கதறினாள் எண்பதை நெருங்கிய ஏழைக் கிழவி.

சென்றங்குச் செருமுனையில் சிதறிக்கிடந்த

செந்தமிழ்க் காளைகளைப் புரட்டிப் பார்த்தாள்

அங்கு நந்தமிழ் நாட்டைக் காக்க ஓடிற்று ரத்த வெள்ளம்!

பிணக்குவியலிலே பெருமூச்சு வாங்க நடந்தாள்

மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை

மகன் பிறந்த போதும் அவள் மகிழ்ச்சிக்கு எல்லையுண்டு

அவன் இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி!

இதைக் கண்டாள் - இதயங் குளிர்ந்தாள்!

எதைக் கண்டாலும் இனிக் கவலை இல்லை

என் மகன் வீரனாய் இறந்தான் என்றாள்.

அறுத்தெறிய இருந்தேன் அவன் குடித்த மார்பை

அடடா! கருத்தெரியப் பொய் சொன்ன கயவனெங்கே?

வாளிங்கே! அவன் நாக்கெங்கே?

என்று கேட்ட புறநானூற்றுத் தாயினுடைய கவிதை வரிகள் கிட்டத்தட்ட முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய வரிகள் - இன்றைக்கு அம்மையார் அவர்கள் அந்த வாளை கையிலே வாங்கி உயரப் பிடித்த நேரத்தில் நினைவுக்கு வந்தன.

புறநானுற்றுத்தாய் தன்னுடைய மகனை வீரனாகத்தான் வளர்த்தாள்.

போர்க்களத்திலே கணவன் மாண்டு, தமையனும் மாண்டு, தந்தையும் மாண்டு அனைவரும் மாண்ட பிறகு கூட தன்னுடைய ஒரே மகனுக்கு தலைசீவி பொட்டிட்டு வாளைத் தந்து "சென்றுவா மகனே! செருமுனை நோக்கி" என்று சொன்ன தாய்க்குலம் தமிழ்க் குலம்.

"அம்மா உன் மகன் எங்கே?" என்று கேட்ட மகனுடைய நண்பனைப் பார்த்து "புலி எங்கே போயி ருக்கிறதோ தெரியாது. புலி வாழ்ந்த குகை இதோ இருக்கிறது" என்று தன்னுடைய வயிற்றைக் காட்டினாள் ஒரு தாய் என்ற சங்ககால இலக்கி யங்களெல்லாம் நம்முடைய வீரக் காதையை தமிழனுடைய வரலாற்றை பறைசாற்றிக் கொண்டிருப்பவையாகும்.

ஆனால், இடைக்காலத்திலே வந்து புகுந்த கருத் துகள்; இடைக்காலத்திலே யாரும் அறியாமல் வந்து நுழைந்துவிட்ட எண்ணங்கள் அந்த வீரத்தை நிலை குலைத்துவிட்டன."

- கடலூர் விழாவில் கலைஞர், விடுதலை, 11.09.1977
-  விடுதலை நாளேடு, 10.3.19

சனி, 9 மார்ச், 2019

சிங்கமென கர்ஜித்த புறநானூற்று வீரத்தாய்!



நூற்றாண்டு விழா காணும் நம் தலைவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் தொண்டு - பல பரிமாண வடிவங்களைக் கொண்டது! கற்றுக் கொள்ள வேண்டிய தலைமைப் பண்புகள் ஏராளம் உண்டு.

பாசமுள்ள தாய் மாத்திரம் அல்ல அவர்; அய்யாவும்- மூவாயிரத்திற்கு மேற்பட்ட தோழர்கள் ஜாதி காக்கும் அரசியல் சட்ட எரிப்புப் போரில் அய்யாவின் ஆணைப்படி ஈடுபட்டு சிறையில் வதிந்தபோதும், அச்சிறையின் உள்ளேயும், வெளியே வந்த பின்பும் தங்கள் இன்னுயிர் ஈந்த சர்வபரித்தியாகிகள் 18 பேர்களது மறைவை எதிர் கொண்டு, களம் கண்டு,  அய்யா 6 மாத சிறை வாசத்தின் போது இயக்கத்தினைக் காத்து, இயக்கக் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, இயக்கப் பிரச்சாரத்தைத் தொய்வின்றி நடத்தி, தன்னுள் புதைந்து கிடந்த தலைமைத்துவ ஆற்றல் வெளியே காட்டப்பட வேண்டிய சூழல்கள் ஏற்பட்டன!

அவர் ஒரு புறநானூற்று வீரத்தாய் - விவேகத் தாய் என்பதை அகிலம் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது 1957-58 துவக்கத்தில்!

திருச்சி சிறையில் கொள்ளளவுக்கு மேற்பட்ட கைதிகள் எண்ணிக்கை நிரம்பி வழிந்ததால் பட்டுக்கோட்டை இராமசாமி, மணல் மேடு வெள்ளைச்சாமி என்ற இரு பெரும் வீரர்கள் - (1938 இந்தி எதிர்ப்புப் போரில் சிறையில் உயிர்த் தியாகம் செய்த நடராசன், தாளமுத்து ஆகியவர்களைப் போன்று மரணமுற்றதை - கமுக்கமாக உள்ளே புதைத்துவிட திருச்சி சிறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து புதைத்தே விட்டனர்!)

செய்தி அறிந்த நம் அன்னையார் உடனே என்னை அழைத்துக் கொண்டு, நடிகவேள் எம்.ஆர். ராதாவின் பிளைமவுத் காரில் விரைந்து திருச்சி வந்து செய்தியை அறிந்து, சென்னை சென்று முதல்வர் காமராசரையும், போலீஸ் அமைச்சர் எம்.பக்தவத்சலத்தையும், அய்யாவின் அறிவுரைப்படிப் போய் பார்த்து, நீதி கேட்டு புதைக்கப்பட்ட தோழர்களை "விதைக்கப்பட்டவர் களாக்கிட" வெளியே கொண்டு வந்தார்.

எல்லாம் 24 மணி நேரத்தில் மின்னல் வேகத்தில் நடைபெற்றது!

திருச்சியில் இருவருக்கும் வீர வணக்க ஊர்வலம் புறப்பட காவல்துறை அதிகாரிகள் நெருக்குதல் தந்தனர்; அன்னையாரின் வருகைக் குப் பிறகே இறுதி  ஊர்வலம் - ஆயிரக்கணக்கில் கருஞ்சட்டைகளும், ஆதரவாளர்களும், பொது மக்களும் காந்தி மார்க்கெட் அருகே சென்றவுடன் எஸ்.பி. சோலை என்பவர் தடுத்தார்; (டி.எஸ்.பி. தயாசங்கர் - மீனாம்பாள் சிவராஜ் மகன் - அவர் கீழ் அதிகாரியானதால் மேல்  அதிகாரி ஆணையை மீற முடியவில்லை)

அடடா, அம்மாவுக்கு வந்த ஆவேசம், வீரத்தின் வெளிச்சமாக வெடித்துக் கிளம்பியது!

"எங்கள் தோழர்கள் - இரு கண்களின் மணி களை சிறையில் கொன்றதுமல்லாமல், கடை வீதி வழியே (ஓயாமாரி) சுடுகாட்டுக்குச் செல்லக்கூட மறுத்து எங்களது உரிமையை நீங்கள் பறிப்பதா?" என்று கர்ஜித்துவிட "அப்படியே நடுரோட்டில் அமருங்கள் அனைவரும், உடல்களை  தாங்கிய வண்டி நகரக் கூடாது" என்றார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் அப்படியே அமர்ந்துவிட்டனர்! மயிர்க்கூச்  செறியும் சம்பவம்; அதிகாரிகள் அரண்டு விட்டனர்!

மக்கள் கொதிப்பு பேரலையாய் பொங்கியது! வேறு வழி இல்லை அனுமதிப்பதைத் தவிர என்பதை உணர்ந்து அனுமதித்தனர். "கட்டுப் பாடோடு செல்லுங்கள்" என்ற அன்னையாரின் ஆணைப்படி எவ்வித அசம்பாவிதங்கள் இன்றி தோழர்கள் உடல்கள் விதைக்கப்பட்டன.

அதற்குச்சில நாள் கழித்து, இதே போல திருவையாறு மஜீத் என்ற சட்ட எரிப்புப் போர் வீரர் - ஓர் ஏழைத்தாய் காய்கறி விற்கும் மூதாட்டியின் ஒரே மகன் - சிறையில் உயிர் ஈர்ந்தார்!

இறுதி மரியாதை - இறுதிப் பயணம் - தளபதி அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி கல்லறை அருகே புதைக்க கழகத் தோழர்கள் கா.மா. குப்புசாமி உட்பட பலர் சென்றனர் - மாபெரும் பேரணி அன்னையார் தலைமையில் - கழக இல்லக் கட்டடம், அரண்மனை முகப்பு வரும்போது அந்த முக்கிய பாதையில் செல்ல காவல்துறைத் தடுத்தது; கெடுபிடி காட்டியது!

கோபாவேசத்தோடு "ரௌத்திரம்" காட்டி சீறி கர்ஜித்தார் அன்னையார்! ஏதோ குறுக்கிட்டு சொல்ல வந்த சாமி. நாகராஜனின் முதுகில் ஓங்கி ஒரு அறை விட்டார் அம்மா! "எல்லோரும் அப் படியே அமருங்கள். இந்தப் பாதை வழியேதான் சுடுகாடு செல்வோம்" என்று உரைத்தார். ஆயிரக் கணக்கில் திரண்ட மக்களும், கருஞ்சட்டை சேனையும் கட்டுப்பாட்டுடன் அமர்ந்தனர். அம்மாவும், நானும் அங்கேயே அமர்ந்தோம். சில மணித்துளிகள் மயான அமைதி. மேலதிகாரிகள் விரைந்து வந்து அன்னையாரிடம் வருத்தம் தெரிவித்து அனுமதித்தனர்.

கட்டுப்பாடாக தியாகி மஜீத்தின் இறுதி ஊர்வலம் முடிந்து  இரவு 8 மணி அளவில் சென்று இரங்கல் கூட்டத்துடன் விதைக்கப்பட்டார்!

அமைதியே வடிவான அன்னையார் சிங்கமாகி சீறி கர்ஜித்த காட்சி இன்றும் நம் கண்களை விட்டு அகலாத காட்சி!

தொண்டருக்கு மரியாதை காட்ட இப்படி வீரத்தின் வெடி முழக்கம், விவேகத்தின் வெளிப் பாடு, தலைமை தகத்தகாய ஆற்றல்!

மறக்க முடியுமா அன்னையே?

-  விடுதலை நாளேடு, 9.3.19

வெள்ளி, 8 மார்ச், 2019

இல்லக் குழந்தையை மீட்க நீதிமன்றப் போராட்டம் நடத்தி வென்ற தாய்!

ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள் நம் தமிழ்நாட்டில் பல நடைபெறுகின்றன. மதங்களின் சார்பிலும் பல நடைபெற்று வந்தாலும், அங்கே அந்தக் குழந்தைகளை வைத்து சூதாட்டங்கள் போல பலவும், தவறான பயன்பாடுகளும் பற்பல நடைபெறுவதால், குழந்தைகள் இல்லம் நடத்து வோர்மீதே அரசுக்கும், நீதிமன்றங்களுக்கும், மக்க ளுக்கும் பல்வேறு சந்தேகங்களும், அருவருப்பு களும் கூட ஏற்படும் அவலம் தற்போது உள்ளது!

ஆனால் தந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் அவர்களால் துவக்கப் பெற்று சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாகும் நிலையில் திருச்சியில் நடைபெற்று வரும் "நாகம்மையார் குழந்தைகள் இல்லம்" - "ஒழுக்கத்திலும், கட்டுப் பாட்டிற்கும் எடுத்துக்காட்டானது" என்று உயர்நீதி மன்ற நீதிபதிகளே பாராட்டிடும் வண்ணம் அய்யா வும், அம்மாவும் இதன் அடிக்கட்டுமானத்தை அசைக்க முடியா வண்ணம் அமைத்துள்ளனர். அதனால் அது நெறி தவறுவதில்லை!

தம்மால் மருத்துவமனைகளிலிருந்து பெறப் பட்ட பெண் குழந்தைகள் பலவற்றினையும் பெயரிட்டு, "ஈ.வெ.ரா.ம." முன்னொட்டு (Initials) போட்டு வளர்த்து, படிக்க வைத்து, போதிய வயது வந்தவுடன் திருமணமும்கூட செய்து ஒரு குடும்பம்போல என்றும் தொடர்புடன்  உள்ள இல்லம் நமது திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லம்!

அன்னையார் தம் உடல் நலம் குன்றிய போதும், குழந்தைகளின் நலம் பற்றிய அக்கறையும், கவலை யும் கொண்டு பேணி வளர்த்தார்.

பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சம்பவம். திடீரென இரண்டு இல்லத்துப் பெண் குழந்தைகள் சாந்தி, தனலட்சுமி என்று பெயர் கொண்டவர்களைக் காணவில்லை - திருச்சி எங்கும் தேடும்படி அம்மா ஆணையிட்டார்; கழகத் தோழர்களை எங்கும் அனுப்பினார் அம்மா.

இந்த இருவரில் ஒரு பெண் சாந்தி குறைவான மார்க் வாங்கியதால், மற்றொரு பெண் தனத்தையும் அழைத்து வெளியே சென்று ஒருவர் வீட்டில் தில்லை நகரில் தங்கி, பிறகு மதுரைக்கு அழைத்துச் சென்று ஒரு  பெரும் பணக்காரர் வீட்டில் வேலை செய்ய அமர்த்தி விட்டார் யாரோ ஒருவர்.

அவர் அய்.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த ஒருவர் பிரபல அரசு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வீட்டில் கொண்டு போய் தனத்தை விட்டார்! அவர்களோடு அவரது சகலை - சென் னையில் அரசு செயலாளர், தகுதியுள்ள ஒருவர் வீட்டுக்கு வேலைக்குப் பெண் தேவை என்பதால் அனுப்பி வைத்து அங்கே வேலை பார்த்தது.

அம்மா எங்கெங்கோ தேடுகிறார். வெளியேறிய மற்றொரு பெண் பள்ளியில் பணியாற்றிய ஒருவ ரிடம் இந்தத் தகவலை கசிய விட்டது - கடிதம் மூலம்; அதன் மூலம் துப்பு துலக்கி திருச்சி அதி காரியிடம் பெரியார் மாளிகை நிர்வாகி திரு. சோமு போய் கேட்க, அவர் அதிகாரத் தோரணையில் பதில் கூறி விட்டார்.

சென்னை வந்தார் - அம்மாவின் உச்சக் கட்ட கோபத்தை நாங்கள் கண்டது அப்போதுதான்!  "ஊராருக்கு வேலை செய்யும் பணிக்கா அவர்கள் இல்லத்திற்கு அனுப்பப்பட்டு இங்கு வந்தனர்!" என்றார்.

எப்படியும் அப்பெண் குழந்தைகளை மீட்டாக வேண்டும் என்று ஒரே நோக்கில் உண்ணாமல், உறங்காமல் இருந்தார்!

நானும், நிர்வாகி சம்பந்தமும், நண்பர்களும் இணைந்து அம்மாவிடம் கூறினோம் - தேடுகிறோம் என்று! அத்துடன் Habeas Corpus சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு ரிட் மனு போட்டார் அம்மா.  அம்மாதான் 'ரிட்' மனுதாரர்! சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் ஜஸ்டீஸ் பி.ஆர்.கோகுல கிருஷ்ணன், ஜஸ்டீஸ் ஏ.வரதராஜன் ஆகியோர் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது, "உடனடியாக அந்த இல்லத்துக் குழந்தையை அந்த மூத்த அய்.ஏ.அய் அதிகாரி வீட்டிலிருந்து மீட்டு அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று தீர்ப்பு வழங்கினர்.

தனம் என்ற தனலட்சுமி அம்மாவிடம் வந்தது. அறிவுரை கூறி இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.

அன்னையார் மறைந்து உடல் பெரியார் திடலில் இறுதி மரியாதை செலுத்த  அந்த இரு மூத்த நீதிய ரசர்களும் கையில் மாலையுடன் வந்து அம்மாவின் உடலின்மீது வைத்தபோது, வியந்து சொன் னார்கள். ஒரு குழந்தையைத் திரும்பிப் பெற எத்தனை முயற்சி எடுத்த பாசமுள்ள தகைமைத் தாய் அவர் என்று கண்ணீர் மல்க வீர வணக்கம் செலுத்தினர்.

அந்த தனலட்சுமிக்கு திருமணத்தை நாங்கள் - எனது தலைமையில் நடத்தி வைத்து, அதற்கு இரண்டு பெண் குழந்தைகள் - மிகச் சிறப்பாகப் படித்து நல்ல துணைவர்களைப் பெற்றும், இந்தப்  பெண் எப்போது எங்கள் வீட்டிற்கு வந்தாலும் தங்கி அண்ணன், அக்கா உறவு அறுபடாமல் வளர்த்த பாசத்தோடு இருந்து வருபவர்.

தையல் கலையில் சிறந்த பயிற்றுநர் தனம். துணைவரை நீண்ட நாள் மருத்துவமனையில் வைத்து கவனித்தும் அவர் நோய் முற்றி மறைந்தார் என்றாலும், தனமும் குழந்தைகளும் எங்கள் தனங் களில் ஒன்று என்று இல்லமும், நாங்களும் பெரு மைப்படும்படி பாசத்தோடும் இன்றும் உள்ளது!

அம்மா என்ற போராளி நீதிமன்ற படிக்கட்டு களிலும்  - குழந்தைகளை மீட்க ஏறி வெற்றி பெற்ற பாசத்தை நினைத்து நினைத்து அவரது நூற் றாண்டில் நெக்குருகிறோம்!

குவலயம் காணா உறவுகள் இவை! பெற் றால்தான் பிள்ளையா என்பார்கள்; யாரோ பெற்று வந்தபிள்ளைகளையும் பெற்ற பிள்ளைகளைவிட பாசத்தைக் கொட்டிய தாயே உங்களை மறக்க முடியுமா?

- விடுதலை நாளேடு, 8.3.19

புதன், 6 மார்ச், 2019

ஒரு கற்பனைக் கண்ணீர் கடிதம் - "பாசம் வற்றா எங்கள் அம்மாவுக்கு!"



அன்புள்ள அம்மா, பாட்டிக்கு,

உங்களால் சீராட்டி சிறப்புடன், கண்டிப்புடன் ஊட்டி வளர்க்கப்பட்டு, "சாணிக்குப் பொட்டிட்டு சாமி என்பார் செய்கைக்கு நாணிக் கண்ணுறங்கு, நகைத்து நீ கண்ணுறங்கு!" என்று தங்கள் விழி இமையாய் என்னை, எங்களைக் காத்து வளர்த்து ஆளாக்கினீர்கள்.

தங்களின் நூற்றாண்டு தொடங்கும் நாளில் நன்றிக் கண்ணீர், மகிழ்ச்சிக் கண்ணீருடன் எண்ணிப்பார்க்கிறேன்.

எங்களை விட்டு பாழும் உடல்நோய் உங்களைப் பிரித்த போது, அதுவரை அனாதைகள் இல்லை; காரணம் எங்கள் பெயருக்குப் பின்னால் ஈ.வெ.ரா.ம. கலைமணி, அருள்மணி, அன்புமணி என்றெல்லாம் E.V.R.M. என்ற முன்னெழுத்துக்கள் (Intials) எங்களுக்குத் தந்து பெற்ற தாயினும் மேலான உற்ற தாயாக எங்களை நாளொருமேனியும், பொழுதுதொரு வண்ணமும், கவலையுடனும், அதே நேரத்தில் கண்டிப்புடனும் வளர்த்து ஆளாக்கிவிட்டுச் சென்று விட்டீர்!

எங்கள் அண்ணனும், அக்காவும், புலவர் அண்ணனும் தங்காத்தாளும்,  எங்களின் இழப்பை ஈடுசெய்ய முன் வந்து கடமையாற்றி பாசப்பொழிவினை பரிவுடன் காட்டி, எங்களது படிப்பை வளர்த்தனர்.

எங்கள் திறமை, ஆற்றல் பற்றி நாங்களே கூட அறியாத போது அவர்கள் உணர்ந்ததோடு, எங்களுக்கும் உணர்த்தினர்!

நான் "பிளஸ் டூ" நம் கல்வி நிறுவனத்தில் முடித்த வுடன், அண்ணனிடம் சொன்னேன் - அக்காவிடம் கூறினேன். "எனக்கு ஓர் ஆசிரியப் பயிற்சி டிப்ளோமோ பட்டயப் படிப்பில் போட்டு கரையேற்றுங்கள்" என்று.

அவர்களோ "முடியாது, நீ பட்டதாரி - அதுவும் என்ஜினியரிங் பட்டதாரியாக வரவேண்டும்" என்று பிடிவாதமாகக் கூறி, என்னை உலகின் முதல் பெண் பொறியியல் கல்லூரி - வல்லத்தில் தொடங்கிய பெரியார்  மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரியில் சேர்த்து, கணக்கில் சுணக்கம் எனக்கு, என்ஜினியரிங் கஷ்டம் அண்ணா என்று தயங்கியபோது, உனக்கு ஸ்பெஷல் வகுப்பு கணக்கு வாத்தியார் வந்து சொல்லிக்கொடுக்கச் சொல்கிறேன் என்று கூறி, அதன்படி செய்து என்னை நன்றாக B.E பாஸ் செய்ய வைத்தார்கள்.

நானும் ஒத்துழைத்தேன் - முடித்து சம்பளம் பூராவும் அய்யா டிரஸ்ட்டே எனக்குக் கட்டியது!

பாஸ் செய்த பிறகு எனக்குத் திருமண ஏற்பாடு - என்னைப்புரிந்து, கொள்கை உணர்வுக்காக குழந்தைகள் இல்லத்துப் பெண்களையே மணக்க விரும்புகிறேன் என்ற லட்சிய நோக்குக் கொண்ட மானிட நேயர் - சுயமரியாதை வீரரை மணமகனாக்கியதை அக்காவும் தங்காத்தாள் அக்காவும், அண்ணன் விருப்பப்படி அவர்கள் இல்லம் சென்று சம்மதம் பெற்று குடந்தையில் மாநாடு போல - மக்கள் தலைவர் மூப்பனார் முன்னிலையில் அண்ணா - அக்காவால் நடத்தி வைக்கப்பட்டது.

வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கில் அண்ணன் என்னை விரிவுரையாளராக நியமித்து, வகுப்பெடுக்க வாய்ப்பளித்து, பக்குவப்படுத்தினார்!

மேலும் திருச்சி RECயில் B.E தாண்டி M.E முடித்தேன். வாழ்விணையரும் பெரும் ஒத்துழைப்பு - ஊக்கம் தந்தார். ஒரு பெண் குழந்தை. குடும்பத்தார் அனைவரும் எங்களிடம் பாசம் காட்டியதில் பஞ்சமே இல்லை - குடும்ப உறவு, குருதி உறவு எல்லாம் மிகவும் மகிழ்ச்சியுடன் தொடர்ந்தது!

மேலும் நான் குடந்தை பல்கலை- ஒரு பொறியியல் கல்லூரியில் இணைப்பேராசிரியராக உயர்வு பெற்று Ph.d என்ற டாக்டர் பட்டத்திற்கு பதிவு செய்து ஆராய்ச்சிப் பட்ட மேல் நிலைத் தகுதியும், என் பெயருக்குமுன் முனைவர் பட்டமும் பெற்றேன்.

எங்கள் மகள் நன்றாகப் படித்து மாநிலத்தில் முன்னணி மதிப்பெண்கள் பெற்று, இன்று ஆடிட்டிங் படிப்பில் அப்பாவுக்கு உதவியாய் இருக்க ஆயத்தமாகி வருகிறாள்.

தாத்தா, பாட்டி கூட்டங்களுக்கு வரும்போதெல்லாம் சந்திப்போம்; மகிழ்வோம். நான் குடும்பத்தினருடன் மாநாடுகள், விழாக்கள்,  குடந்தை, பாபநாசம், கபிஸ்தலம் பகுதியில் வரும் போதெல்லாம் எங்கள் இல்லம் விழாக்கோலம் - விருந்து உபசரிப்பு பல நூறுபேர்களுக்கு.

எங்களுக்குத்தான் எத்தனை எத்தனை கொள்ளை மகிழ்ச்சி!

எங்கள் அன்பை, மரியாதையை அவர்கள் பெறும்போ தெல்லாம் அவர்கள் வாஞ்சையுடன் எங்கள் உச்சிமோந்து பாராட்டி மகிழ்வதை விட அவர்களுக்கும் சரி, எங்களுக்கும் சரி - வேறு என்ன கைமாறு தேவை?

பெரியார் தாத்தாவை, மணிப் பாட்டியை நான் பார்த்ததில்லை - எங்கள் அம்மா அவர்கள் வளர்ப்பில் தான் வளர்ந்து ஆளாகி இன்று என்னை நல்லாசிரியையாய், நல்ல தாயாய் ஆக்கினார். எனக்கும் தாத்தா, பாட்டி அன்பைக் கொட்டி அரவணைத்து வழிகாட்ட இருக்கிறார்களே அது பெரிய வாய்ப்பு அல்லவா?

இந்தக் குடும்பம் ஒரு தோப்பு போலே! இதில் இது போல எத்தனையோ பழமரங்கள் பூத்து, காய்த்து, கனியாகி, பழுத்துத் தொங்கி சிறப்பாக இருக்கிறதே.

அந்த விதை நட்டு நீர் பாய்ச்சி உழவுக்காரருக்கு நூற்றாண்டு விழா என்றால் என்னைப் போன்ற விழுதுகளுக்கு இதை விட வேறு விழா வேண்டுமா? மகிழ்ச்சி கண்ணீருடன், அந்தத் தாத்தாவின், பாட்டியின் கைப்பற்றி குலுக்கி மகிழ என தலைமுறைக்கு வாய்ப்பில்லை. இதோ எங்கள் பாட்டியும், தாத்தாவும் கைப்பிடித்து குலுக்கி மகிழும் நிலையில் அவர்கள்  கைகளில் எனது, எங்களது கண்ணீர்தான் விழுந்து ஈரமாக்கி, அவர்களது ஈரமுள்ள இதயங்களை குளிர்விக்கிறதே அது போதாதா?

இப்படிக்கு

நாகம்மை விடுதியின் விழுதும், விழுதின் விழுதும்!

(அன்னையார் நூற்றாண்டில் இப்படி கடிதம் - கற்பனை என்றாலும் உண்மைகளை -

உணர்வுகளை உள்ளடக்கிய கற்பனைக் கடிதம் - அன்னையார் நூற்றாண்டுத் தொடக்கம் அல்லவா?)

-  விடுதலை நாளேடு, 6.3.19