பக்கங்கள்

சனி, 9 மார்ச், 2019

சிங்கமென கர்ஜித்த புறநானூற்று வீரத்தாய்!



நூற்றாண்டு விழா காணும் நம் தலைவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் தொண்டு - பல பரிமாண வடிவங்களைக் கொண்டது! கற்றுக் கொள்ள வேண்டிய தலைமைப் பண்புகள் ஏராளம் உண்டு.

பாசமுள்ள தாய் மாத்திரம் அல்ல அவர்; அய்யாவும்- மூவாயிரத்திற்கு மேற்பட்ட தோழர்கள் ஜாதி காக்கும் அரசியல் சட்ட எரிப்புப் போரில் அய்யாவின் ஆணைப்படி ஈடுபட்டு சிறையில் வதிந்தபோதும், அச்சிறையின் உள்ளேயும், வெளியே வந்த பின்பும் தங்கள் இன்னுயிர் ஈந்த சர்வபரித்தியாகிகள் 18 பேர்களது மறைவை எதிர் கொண்டு, களம் கண்டு,  அய்யா 6 மாத சிறை வாசத்தின் போது இயக்கத்தினைக் காத்து, இயக்கக் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, இயக்கப் பிரச்சாரத்தைத் தொய்வின்றி நடத்தி, தன்னுள் புதைந்து கிடந்த தலைமைத்துவ ஆற்றல் வெளியே காட்டப்பட வேண்டிய சூழல்கள் ஏற்பட்டன!

அவர் ஒரு புறநானூற்று வீரத்தாய் - விவேகத் தாய் என்பதை அகிலம் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது 1957-58 துவக்கத்தில்!

திருச்சி சிறையில் கொள்ளளவுக்கு மேற்பட்ட கைதிகள் எண்ணிக்கை நிரம்பி வழிந்ததால் பட்டுக்கோட்டை இராமசாமி, மணல் மேடு வெள்ளைச்சாமி என்ற இரு பெரும் வீரர்கள் - (1938 இந்தி எதிர்ப்புப் போரில் சிறையில் உயிர்த் தியாகம் செய்த நடராசன், தாளமுத்து ஆகியவர்களைப் போன்று மரணமுற்றதை - கமுக்கமாக உள்ளே புதைத்துவிட திருச்சி சிறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து புதைத்தே விட்டனர்!)

செய்தி அறிந்த நம் அன்னையார் உடனே என்னை அழைத்துக் கொண்டு, நடிகவேள் எம்.ஆர். ராதாவின் பிளைமவுத் காரில் விரைந்து திருச்சி வந்து செய்தியை அறிந்து, சென்னை சென்று முதல்வர் காமராசரையும், போலீஸ் அமைச்சர் எம்.பக்தவத்சலத்தையும், அய்யாவின் அறிவுரைப்படிப் போய் பார்த்து, நீதி கேட்டு புதைக்கப்பட்ட தோழர்களை "விதைக்கப்பட்டவர் களாக்கிட" வெளியே கொண்டு வந்தார்.

எல்லாம் 24 மணி நேரத்தில் மின்னல் வேகத்தில் நடைபெற்றது!

திருச்சியில் இருவருக்கும் வீர வணக்க ஊர்வலம் புறப்பட காவல்துறை அதிகாரிகள் நெருக்குதல் தந்தனர்; அன்னையாரின் வருகைக் குப் பிறகே இறுதி  ஊர்வலம் - ஆயிரக்கணக்கில் கருஞ்சட்டைகளும், ஆதரவாளர்களும், பொது மக்களும் காந்தி மார்க்கெட் அருகே சென்றவுடன் எஸ்.பி. சோலை என்பவர் தடுத்தார்; (டி.எஸ்.பி. தயாசங்கர் - மீனாம்பாள் சிவராஜ் மகன் - அவர் கீழ் அதிகாரியானதால் மேல்  அதிகாரி ஆணையை மீற முடியவில்லை)

அடடா, அம்மாவுக்கு வந்த ஆவேசம், வீரத்தின் வெளிச்சமாக வெடித்துக் கிளம்பியது!

"எங்கள் தோழர்கள் - இரு கண்களின் மணி களை சிறையில் கொன்றதுமல்லாமல், கடை வீதி வழியே (ஓயாமாரி) சுடுகாட்டுக்குச் செல்லக்கூட மறுத்து எங்களது உரிமையை நீங்கள் பறிப்பதா?" என்று கர்ஜித்துவிட "அப்படியே நடுரோட்டில் அமருங்கள் அனைவரும், உடல்களை  தாங்கிய வண்டி நகரக் கூடாது" என்றார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் அப்படியே அமர்ந்துவிட்டனர்! மயிர்க்கூச்  செறியும் சம்பவம்; அதிகாரிகள் அரண்டு விட்டனர்!

மக்கள் கொதிப்பு பேரலையாய் பொங்கியது! வேறு வழி இல்லை அனுமதிப்பதைத் தவிர என்பதை உணர்ந்து அனுமதித்தனர். "கட்டுப் பாடோடு செல்லுங்கள்" என்ற அன்னையாரின் ஆணைப்படி எவ்வித அசம்பாவிதங்கள் இன்றி தோழர்கள் உடல்கள் விதைக்கப்பட்டன.

அதற்குச்சில நாள் கழித்து, இதே போல திருவையாறு மஜீத் என்ற சட்ட எரிப்புப் போர் வீரர் - ஓர் ஏழைத்தாய் காய்கறி விற்கும் மூதாட்டியின் ஒரே மகன் - சிறையில் உயிர் ஈர்ந்தார்!

இறுதி மரியாதை - இறுதிப் பயணம் - தளபதி அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி கல்லறை அருகே புதைக்க கழகத் தோழர்கள் கா.மா. குப்புசாமி உட்பட பலர் சென்றனர் - மாபெரும் பேரணி அன்னையார் தலைமையில் - கழக இல்லக் கட்டடம், அரண்மனை முகப்பு வரும்போது அந்த முக்கிய பாதையில் செல்ல காவல்துறைத் தடுத்தது; கெடுபிடி காட்டியது!

கோபாவேசத்தோடு "ரௌத்திரம்" காட்டி சீறி கர்ஜித்தார் அன்னையார்! ஏதோ குறுக்கிட்டு சொல்ல வந்த சாமி. நாகராஜனின் முதுகில் ஓங்கி ஒரு அறை விட்டார் அம்மா! "எல்லோரும் அப் படியே அமருங்கள். இந்தப் பாதை வழியேதான் சுடுகாடு செல்வோம்" என்று உரைத்தார். ஆயிரக் கணக்கில் திரண்ட மக்களும், கருஞ்சட்டை சேனையும் கட்டுப்பாட்டுடன் அமர்ந்தனர். அம்மாவும், நானும் அங்கேயே அமர்ந்தோம். சில மணித்துளிகள் மயான அமைதி. மேலதிகாரிகள் விரைந்து வந்து அன்னையாரிடம் வருத்தம் தெரிவித்து அனுமதித்தனர்.

கட்டுப்பாடாக தியாகி மஜீத்தின் இறுதி ஊர்வலம் முடிந்து  இரவு 8 மணி அளவில் சென்று இரங்கல் கூட்டத்துடன் விதைக்கப்பட்டார்!

அமைதியே வடிவான அன்னையார் சிங்கமாகி சீறி கர்ஜித்த காட்சி இன்றும் நம் கண்களை விட்டு அகலாத காட்சி!

தொண்டருக்கு மரியாதை காட்ட இப்படி வீரத்தின் வெடி முழக்கம், விவேகத்தின் வெளிப் பாடு, தலைமை தகத்தகாய ஆற்றல்!

மறக்க முடியுமா அன்னையே?

-  விடுதலை நாளேடு, 9.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக