பக்கங்கள்

செவ்வாய், 22 டிசம்பர், 2015

பிஞ்சு உள்ளத்தின் கொஞ்சும் புரட்சி!


ஆப்ரிக்க குழந்தைக் கவிஞர் ஒருவரது கவிதையை, 2005ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதை (Best Poem of 2005) என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நிறம் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அக்கவிதையின் தமிழாக்கம் இதோ:
நான் பிறந்தபோதும் நான் கறுப்புதான்;
நான் வளர்ந்தபோதும் நான் கறுப்புதான்;
நான் வெயிலில் நடந்தபோதும் நான் கறுப்புதான்;
நான் நோயில் வதிந்தபோதும் நான் கறுப்புதான்;
நான் இறக்கும்போதும் நான் இன்னமும் கறுப்புதான்;
ஆனால் வெள்ளை ஆட்களான நீங்களோ நீங்கள் பிறந்த போது நீங்கள் பழுப்பு நிறத்தவர்
நீங்கள் வளர்ந்தபோது நீங்கள் வெள்ளை நிறத்தவர்
நீங்கள் வெயிலில் நடந்தபோது நீங்கள் சிவப்பு நிறத்தவர்
நீங்கள் குளிரில் நனைந்தபோது நீங்கள் நீல நிறத்தவர்
நீங்கள் பயத்தால் நடுங்கியபோது நீங்கள் மஞ்சள் நிறத்தவர்
நீங்கள் நோயில் வாடியபோது நீங்கள் பச்சை நிறத்தவர்
நீங்கள் மரணம் அடையும்போது நீங்கள் சாம்பல் நிறத்தவர்
இருந்தபோதிலும் எங்களைப் பார்த்து நிறத்து மக்கள் (“Coloured”)
என்று அழைக்கிறீர்களே - இதுதான் அந்தக் கவிதை.
இணையதளத்தில் எத்தனையோ சிறந்த தகவல்களும், காட்சிகளும் வரத்தான் செய்கின்றன! (சில நேரங்களில் அதே தளம் குற்றவாளிகளின் வாளாகவும், கேடயமாகவும் கூடப் பயன்படுகிறது என்பது உண்மையானாலும்கூட!)
இரண்டு நாள்களுக்கு முன் என் மின் அஞ்சலில் பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் நம் நண்பர்களுக்குக் கிடைத்த ஓர் அற்புதமான கவிதை, போற்றற்கரிய இலக்கியப் புதையல் ஆகும்!
பிஞ்சுகளின் நெஞ்சுகளிலும் எரிமலை வெடிக்கத் துவங்கி விட்டது!
எத்தனைக் காலம்தான் இத்தனை அவமானங்களைச் சுமந்து, சுமந்து  வேதனைத் தீயில் அவர்கள் வெந்து கருகுவது? அந்தக் குமுறல்கள் - கொஞ்சும் மொழியாக இல்லாமல், புரட்சியின் பூபாளங்களாக இசைக்கத் தோன்றி விட்டன!
விடியலை நோக்கி விரைகின்றனர் புதிய தலைமுறையினர் -
மனிதம் மறுமலர்ச்சி பெறத் துவங்கி விட்டது!
(மொழி பெயர்ப்பு என்றால் அந்த மொழி யில் கேட்கும் சுவையை அப்படியே கொடுத்து விட முடியாதல்லவா அதனால் ஆங்கிலக் கவிதையையும் அப்படியே கீழே தந்துள்ளேன் - வாசகர்கள் சுவைக்காக).
(This poem, written by an African child was nominated for the best poem 2005).
Colour
When I born, I Black;
When I grow up, I Black;
When I go in Sun, I Black;
When I scared, I Black;
When I sick, I Black;
And when I die, I still black;
And U White fellows;
When U born, U Pink;
When U grow up, U White;
When U go in Sun, U Red;
When U cold, U Blue;
When U scared, U Yellow;
When U sick, U Green;
When U die, U Gray;
And you call me Coloured

- கி.வீரமணி -
- வாழ்வியல் சிந்தனைகள்
-விடுதலை,11.7.14

வெள்ளி, 11 டிசம்பர், 2015

உளவியலின்படி - முடிவுகள் எடுக்குமுன்...!


குடும்பமாக இருந்தாலும், இயக்க மாக இருந்தாலும், பெரும் நிறுவனங் களாக இருந்தாலும், அதில் உள்ள தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், மேலாண்மையாளர்கள் எப்படி முடி வுகள்  எடுப்பது என்பது உளவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது உளவியல் அறிஞர்களால்.
அதன்படி, மிகுந்த கோபம், ஆத்திரம், ஆவேசம் அடங்காத நிலையில், அவசரப்பட்டு முடிவுகளை எடுப்பது, அறிவிப்பது விரும்பத்தக்கது அல்ல என்பதோடு அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்த கதை யாகவே அது முடியும்.
முடிவுகளை எடுக்குமுன் - வள் ளுவர் அறிவுறுத்தியபடி - எண்ணித் துணிக கருமம் என்று ஆழமாக, தீர ஆலோசித்து முடிவுகளை அறிவிக்க வேண்டும்; அறிவித்தபின் அதைத் திரும்பப் பெறும் கேலிக் கூத்துக்கு நல்ல பொறுப்பாளர்கள், நல்ல தலை வர்கள் ஆளாகக் கூடாது; துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு அல்லவா?
எதையும் பின்விளைவுகள், அத் துடன் ஏற்படக் கூடிய பக்க விளைவு கள் ஆகியவற்றைபற்றியும் ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
நல்ல தலைமைகள் முடிவு எடுத்து விட்டால் அதிலிருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டார்கள்; எவ்வளவு எதிர்ப்பு, கெட்ட பெயர் அதன் மூலம் வந்தாலும் கவலைப்படாமல் அதைச் செயல்படுத்துவதில் உறுதி காட்ட வேண்டும்.
உளவியலில் களைப்புடன் முடிவு எடுத்தல் (“Decision Fatigue”) என்று ஒரு ஆய்வுத் தலைப்பு உண்டு. ஒருவர் மிகவும் ஆராய்ந்து, சிந்தித்து பல நேரங்களில் சோர்வடைந்து விடுவதுண்டு.
விளைவுகள், எதிர் விளைவுகள், நன்மைகளைவிட தீமை அதிகமா? லாபமா - நட்டமா? என்று மண்டையைக் குடைந்து யோசிப்பதனால் இயல்பாகவே  களைப்பு, சோர்வு ஏற்படவே செய்யும். உடல் சோர்வைவிட மிகவும் மோச மானது மனச் சோர்வு!
நமது பலவீனமான நேரம் அது. அந்த நேரத்தில் முடிவு எடுத்தால், அது பெரிதும் சரியான முடிவாக அமை யாது; காரணம் உடல் சோர்வும்கூட அதனுடன் பற்பல நேரங்களில் சேர்ந்து கொள்ளும்! ரத்தத்தில் உள்ள சர்க்கரை யின் அளவு (Low Blood Sugar) குறைந்த நேரத்தில் முடிவுகள் எடுத்தாலும் அது சரியான முடிவாக அமைய வாய்ப் பில்லை என்பது மனோ தத்துவவியல் வல்லுநர்கள் கருத்தாகும்.
எனவே இதைப்போக்க சிறிது நேரம் இளைப்பாறி, (Relax) பிறகு ஏதாவது சாப்பிட்டு, கொஞ்சம் புத்துணர்ச்சியைப் பெற்றபின் (ரத்த சர்க்கரை கூடியபின்) எடுக்கும் முடிவுகளே சரியானதாக அமையும்.
அமெரிக்காவின் பிரபல புத்தகக் கடையான ‘Barnes and Noble’ கடை ஒன்றில் மூன்று மாடிகள் - பல பிரிவுகள் - அதிலும் குறிப்பாக கீழே குறுந்தகடுகள், DVD ஆடியோ, வீடியோ கேசட்டுகள், ஒலி நாடாக்களை உள்ளடக்கிய மின் புத்தகப் பிரிவு போன்ற பல இருக்கின்றன.  நடுப் பகுதியில் ஒரு ‘Coffee Shop’ வைத்துள்ளார்.  அங்கே நொறுக்குத்  தீனி, காபி, டீ முதலியவற்றை வாங்கிக் குடித்து, புத்துணர்ச்சியுடன் மேலும் அதிக நேரம் தங்கி, புத்தகங்களை இன்னும் கொஞ்சம் கூடுதலாக வாங்கிச் செல்வார்கள். அது கெட்டிக்கார ஏற்பாடு.
அது போலவே அமெரிக்காவிலும் மற்ற பல உலக நாடுகளிலும் உள்ள ‘I.K.E.A’ “ அய்க்கியா மேஜை நாற்காலி, வீட்டுச் சாமான்கள் குறிப்பாக மரச்சாமான்கள், முதலியவற்றுக்குப் பிரபலமான கடை - (இது சுவீடன் பேன்ஸ்காண்டிநேவிய நாடு ஒன்றில் துவங்கப்பட்ட கடை) உலகம் முழுவதும் நல்ல தரமான பொருள்களை விற்பனை செய்யும் (Furniture Mart) அது. அதிக வாடகை கொடுத்து எடுத்த பெரிய கட்டத்திலுள்ள ஒரு மெல் உணவு தேநீர் கடை (Cafeteria) வைக்க இடம் ஒதுக்கித் தருவது அதன் மூலம் அதற்கு வரும் லாபத்தைவிட, அதனைப் பயன்படுத்தி, களைப்பு நீங்கி புத்துணர்வு கூடுதலாகப் பெற்றவுடன் மேலும் ஒன்று இரண்டு தடவை வட்டமிட்டு மேலும் அதிக மாக பொருள்களை அங்கிருந்து வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்லும் லாபம் மிக அதிகம் கிடைக்கக் கூடும் என்பதால்தான்! இதைவிடச் சிறந்த தொழில் வெற்றி ரகசியம் உண்டா?
நீதிபதிகள் தீர்ப்பு எழுதத்  தேர்வு செய்யும் நேரம்கூட களைப்பில்லாத காலை நேரமாக இருப்பின் அதன் விளைவு - அவர்கள் எழுதும், தீர்ப்பு நல்ல தீர்ப்பாக அமையக் கூடும்; இன்றேல் திசை மாறிய தீர்ப்பாகக் கூட அவர்களை அறியாமலேயே அது ஆகி விடக் கூடும்!
ஆசிரியர்கள் தேர்வுத்தாளைத் திருத்தும்போதுகூட நல்ல சோர்வற்ற நிலையில் செய்தால் எளிதில் தவறுகள் நடக்காது!
நல்ல முடிவுகளை எப்போதும் புத்துணர்வோடு, களைப்பின்றி, உற்சாகமான நிலையில், நல்ல தூக்கம், நல்ல ஓய்வு, நல்ல இளைப்பாறு தலுக்குப் பின் எடுங்கள்; அது ஒரு வரலாற்று முடிவாக நிலைக்கும்.
சிறு விஷயங்களிலும்கூட களைப் புடன் முடிவு எடுக்காதீர்கள்; முடிவு எடுத்ததனால் களைப்பும் அடையா தீர்கள் - அறிவியல் - உளவி யல்படி இது அவசியமான உண்மையாகும்.
வாழ்க்கையில் “Decision Fatigue”  தலைகாட்டக் கூடாது.
-கி.வீரமணி
-விடுதலை,17.6.14

வெள்ளி, 4 டிசம்பர், 2015

எப்போதும் உட்கார்ந்தே இருக்காதீர்!


சிங்கப்பூரின் பிரபல ஆங்கில நாளேடான தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்  (The Straits Times)  வாரத்தில் ஒவ் வொரு வியாழக்கிழமையும் உங்கள் உடலைக் கவனித்துக் கொள் ளுங்கள் (Mind Your Body) என்ற தலைப்பில் மிக அருமையான உடல் நல அறிவுரைகளை பிரபல மருத்துவ வல்லுநர்களிடமிருந்து கட்டுரைகளை வாங்கி வெளியிடுகிறார்கள்!
வாசகர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கக் கூடியவையாக அவை அமைகின்றன.
எப்போதும் மணிக்கணக்காக உட்கார்ந்து கொண்டே இருப்பது கூடாது. அது சர்க்கரை நோய்க்கும், இதய நோய்க்கும், ஏன் மரணத் திற்கும்கூட தள்ளிவிடும் அபாயத்தை உருவாக்குகிறது என்று ஓர் அருமை யான ஆய்வுக் கட்டுரை 15.11.2012 அன்றைய இதழில் வெளி வந்துள்ளது!
நம்மில் பலரும், பல மணி நேரம் நாற்காலிகளில் உட்கார்ந்தே பணி செய்கிறோம்.
இன்னும் பெண்கள், மற்றைய முதியோர் வீடுகளில் முதிய வயதில் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்பே உட்கார்ந்து தொடர்ந்து டி.வி. பார்ப் பதும், அல்லது அமர்ந்து கொண்டே அசை போடுவதும், வீண் விவாதங் களில் ஈடுபடுவதாகப் பொழுதைக் கழிக்கிறோம்.
இன்னும் சிலர் சோம்பல் காரணமாக சாப்பிடுவது, தூங்குவது, தொலைக் காட்சி பார்ப்பது  இவற்றிலேயே நேரத்தை செலவழிக்கின்றனர்!
சிங்கப்பூரில் எடுத்த ஒரு கணக்குப் படி 98.7 சதவிகி பிள்ளைகள் சுறு சுறுப்பின்றி (வாரக் கடைசி நாளில்) இருப்பதாகவும், வார நாள்களில் 90.2 சதவிகிதம் அப்படி இப்பிள்ளைகள் இருப்பதாகவும் ஒரு ஏட்டில் (Journal of Kinsology in 2008) எழுதியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
அவர்களது இதயத் துடிப்பு - வாரத் தின் 3 நாள்களில் 120 ஒரு நிமிடத்திற்கு எனவும், 10 முதல் 15 வயதுள்ள குழந்தைகள் 280 பேர்களைக் கொண்டு இப்படி ஒரு கணக்கெடுத்துள்ளனராம்!
உட்காருவதும், நிற்பதும் இந்த முறையில் அடக்கம். வகுப்பில் பாடங்கள் படிக்கும்போது, எந்த செயலும் இல்லாததாலும், வெறும் ஹோம் ஒர்க் செய்வதாலும், கம்ப்யூட்டர் கேம்ஸ் என்ற விளையாட்டுகளுக்கு மணிக்கணக்கில் உட்கார்ந்தும் உள்ள நேரங்களை வைத் துத்தான் இந்த ஆய்வு நடத்தப்பட் டுள்ளன.
தேசிய கல்விக் கழகம் (National Institute of Education (NIE) பேராசிரியர், குழந்தைகளுக்கான Exercise Phisiology பேராசிரியர் ஆய்வு செய் துள்ளார்.
இந்த இளம் பிள்ளைகளுக்கு சர்க் கரை வியாதி வரும் அபாயம் 112 சதவிகிதம் - இதய நோய் ஆபத்துக் கான அபாயம் 147 சதவிகிதம் 49 சதவிகிதம் மரண அபாயமும் இணைந்து கொள்கிறதாம்!
எனவே, சில பேராசிரியர்கள் மாணவ இளைஞர்களுக்கு (இருபாலரும் சேர்ந் ததே இது) 150 நிமிடங்கள் சுமாரான உடற்பயிற்சிகளை ஒவ்வொரு வாரமும் தர வேண்டும் என்று டாக்டர் யான் ஹீஃபன் (Dr. Yang Yifan) கூறுகிறார். மேற்காட்டிய அமைப்பில் இவர் உடற் பயிற்சி, மற்றும் விளையாட்டு விஞ்ஞானக் கல்விக்  குழுவின் உதவிப் பேராசிரியர் ஆவார்!
எனவே பெரியவர்களும் சரி, இளை ஞர்கள், மாணவர்களும் சரி - வெறுமனே மணிக்கணக்கில் உட்கார்ந்தே இருக்கும் படியாகச் செய்யாமல் ஓரளவு உடற்பயிற்சிகள் அல்லது நடந்து, நடந்து பல விட்டுப் போன பணிகளைச் செய்வது, முதல் தொடர்ந்து ஏதாவது செய்து கொண்டே இருப்பது அவசியம்!
நம் உடல் என்பது 640 தசைகள் (Muscles) 206 எலும்புகளைக் கொண்டது. இவைகளுக்கு அசைவுகள் இருப்பதும் அவசியம்.
நிற்கும்போதும், நடக்கும் போதும் நமது தசைகள் போதிய சக்தியைத் தருகின்ற வகை யில் அதற்குரிய தேவையான சில வற்றை அளிக்கிறது. உட்கார்ந்துள்ள போது அது குறைந்துவிடுகிறது என்கிற டாக்டர் ஸ்லோகன் என்ற நிபுணர் அலுவலகங்களில் உள்ளவர் களும்கூட ஒரே அடியாக அமராமல் சிறிது நேரம் எழுந்து நடமாடலாமே! (நம் நாட்டு அரசு அலுவலர்களில் பலர் இதில் தீர்க்க தரிசிகள் போலும்; ஏனெனில் பெரும்பாலான நேரங்கள் அவர்கள் இருக்கைகளில் இருக்காமல் நடந்து கொண்டே தானே இருக் கிறார்கள்! இந்த சங்கதி - ஆய்வை முன்னாலேயே அறிந்தவர்கள் போலும்) இது யாரையும் குற்றம் சுமத்த அல்ல.
அதுவும் நன்மைக்கே! எனவே அலுவலகங்களில் அமர்ந்து பணியாற் றுவோர்கூட உடல் பயிற்சி அவசியம்! அவசியம்!!
உடற்பயிற்சி செய்தவர்களுக்கும் கூட இந்த நீண்ட நேரம் உட்கார்ந் திருப்பது ஆபத்தை விளைவிக்கக் கூடியதே!
- கி.வீரமணி

தன்னை வென்றவன் தரணியை வெல்பவன்!


உளவியல்  அறிஞர்கள், நம்மில் பலருக்குள்ள குணாதிசயங்கள் - நடத்தைகள்பற்றி ஆய்வு செய்து கருத் தறிவித்துள்ளது நம்மில் பலருக்கும் நம்மைப்பற்றி ஒரு தன்னாய்வு - சுயபரிசோதனை செய்து கொள்ள மிகவும் பயன்படும்.
நம் சொந்த விஷயங்களில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும்போது, ஆஹா, ஊஹு என்று துள்ளிக் குதிப்பதும், அல்லது உலகமே மூழ்கி விட்டது போல ஆர்ப்பரிப்பதும் உண்டு. அதே பிரச்சினை மற்றவர்களுக்கு ஏற்படும்போது, அதுதானே என்ற அலட்சியப் பார்வையோடும் பரவா யில்லை என்று எண்ணுவதும், அவர் களுக்கு அதைத் தாங்கியாக வேண் டிய நெறிப்பற்றி ஹிதோபதேசம் செய்வதும் உலக இயற்கை.
இதை உளவியல் அறிஞர்கள்; அடிப்படைப் பண்புப் பிழைகள் (Fundamental Attribution Error) என்று அழைக்கிறார்கள்!
தனக்கு ஏற்படும்போது, தனக்காக உலகமே ஓடோடி வர வேண்டும் என்பதுபோல ஓங்காரக் கூச்சல்; அதுவே மற்றவருக்கு வரும்போது அதெல்லாம் வாழ்க்கையில் சகஜம்தான் சார்; இதைப்போய் பெரிதுபடுத்தலாமா? என்று தத்துவப் பேருரை - அருளுரை - வழங்குவார்கள்!
மற்றவர்களுக்கு வரும் நோய் - துன்பம் எதுவானாலும் அதை தனக்கே வந்ததுபோல, எண்ணி, அதனைப் போக்கிடத் தேவையான முயற்சிகளை எடுப்பதுதான் மனிதன் பெற்ற அறிவின் பயன் என்றார் வள்ளுவப் பெருந்தகை!
அறிவினால் ஆவதுண்டோ பிறிதின் நோய் தன்நோய்போல் போற்றாக்கடை   (குறள்)
மேற்காட்டிய அடிப்படைப் பண்புப் பிழைக்கு என்ன மூல காரணங்கள்?
1. மனோ தத்துவ அறிஞர்கள் இப்படிக் கூறுகிறார்கள். பார்வைகள் ஆயிரம்; தனி நபர்களை நாம் கூர்ந்து பார்க்கும்போது நம் கவனம் அந்த நபர்மீது விழுகிறது.
ஆனால் நாம் நம்மைக் கண்காணிக்கும் சூழலில் நம்மை மட்டும் பார்க்காமல் விட்டுவிட்டு, சுற்றியுள்ள சூழல்களில் அதிக கவனம் செலுத்துவது வழக்கம்.
2. அவனுக்கு அப்படித்தான் வேணும்; நம் சிந்தனைகள் பெரும்பாலும் ஆழ் மனதிலேயே இடம் பெறுகின்றன.
குறிப்பிட்ட நபர்மீது நம் மனதுக்கு அறிந்தோ அறியாமலோ வெறுப்பு ஏற்பட் டிருந்தால் அந்நபர் தடுக்கி விழும்போதே அவனுக்கு இது தேவைதான் என்று நினைப்பதோடு, அவர் தடுக்கி விழுவ தற்கான காரணங்கள்மீது நாம் கவனம் செலுத்தாமல் போயிருக்கலாம்.
சரி, இப்பிழையை சமாளிப்பது, சரி செய்வது - எப்படி?
புதிதாகப் பணியில்  அமர்த்தப்பட்ட, நபர் ஏதேனும் தவறு செய்யும்போது, நாமும் பணியில் சேர்ந்தபோது இப்படிப் பல தவறுகள் செய்துள்ளதை சற்று நினைவூட்டிக் கொண்டால் குறையோ, குற்றமோ பெரிதாகத் தெரியாது. கற்றுக் கொடுத்து அவர்கள் மேலும் ஊக்கப் படுத்தி வேலை வாங்க அது உதவும்!
அவர்களை கண்டிப்பதைவிட, தண் டிப்பதைவிட, இப்படி இதமான விளக்கத் தைக்கூறி, மீண்டும் அவர்கள் அந்தத் தவறுகளைச் செய்யாமல் இருக்க, திருந்தியவர்களாக்கிட முடியும்!
அடக்குமுறைகள் பயன்படாத இடத்தில் அன்பும், பரிவும் பெரிதும் பயன்படும்.
புதுமண வாழ்விணையர்கள் விஷ யத்திலும்கூட இது பொருந்துமே!
பெருந்தன்மை காட்ட வேண்டிய சந்தர்ப்பம் தமக்குக் கிடைத்ததாக மேலே இருக்கும் நிருவாகிகள் எண்ண வேண்டும். அதன்மூலம் அவர்களும் உயர முடியும்!
ஹாலோ எபெஃக்ட் (Halo Effect) என்பது கவனத்தை ஈர்க்கும் வியப் படை விளைவு ஆகும்!
உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை - தன்நம்பிக்கை அவசியம் தேவை. அது இருந்தால் உங்களை வெல்ல எவராலும் முடியாது. உங்களை எதிர்வரும் பல சிக்கல்களையும் அறிவி யல், உளவியல் ரீதியாக ஆராய்ந்து பார்த்தால் உங்களுக்குத் தன்னம் பிக்கை தானே வரும்; வளரும்.
தன்னை வெல்வான் தரணியை வெல்வான் என்ற அறிவுரை (அண்ணா வின் மேற்கோள் அறிவுரை இது) கை கொடுக்கும்; நம்மை கரை சேர்க்கும்.
- கி.வீரமணி

சிக்கனத்தின் தத்துவமும், சிறப்பும்


தமிழகக் கல்வி நெறிக் காவலராகத் திகழ்ந்த, பெரியாரின் பேரன்புக்குப் பாத்திரமாகி, கல்வி வள்ளல் காமராசரால் கல்வித் துறை இயக்குநராக்கப்பட்ட நேர்மையாளர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று (12.10.2012) சென்னையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.
சான்றோர்கள், கல்வியாளர்கள் பலரும் கலந்துகொண்ட அவ்விழாவில் புரட்சியாளர் பெரியார் என்ற தலைப்பில், சென்னைப் பல்கலைக் கழகத்தில், பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவு கள் ஆற்றிய அதன் மேனாள் துணை வேந்தரான நெ.து.சு. அவர்கள் பிறகு அப்பொழிவுகளை மேலும் விரிவாக்கி அதே தலைப்பில் ஒரு பொத்தகமாகவும் எழுதி, அவர்கள் மன்றத்திற்குப் பயனுறு வகையில் அளித்தார்கள்.
அந்நூல் இப்போது மீண்டும் சென்னை சாந்தா பப்ளிஷர்ஸ் மூலம் நேற்று அவ்விழாவில் இரண்டாம் பதிப் பாக வெளியிடப்பட்டது.
தந்தை பெரியார் அவர்களின் வாழ்வு, வாக்கு, அறப்பணி, தொண்டூழியம்பற்றி அரிய பல தகவல்களின் அற்புதமான திரட்டான அந்நூலில் தந்தை பெரி யாரின் எளிமையும், சிக்கனமும் எத்தகை யது என்பதை மிக அருமையான இரண்டு தன் வாழ்க்கை நிகழ்வுகள் மூலம் மிக அருமையாக எடுத்துக் கூறி யுள்ள நெ.து.சு. அவர்கள், அந்நிகழ்வு களைவிட மிகச் சிறப்பானது அதன் உண்மைத் தத்துவம் என்ன என்பதையும் விளக்கியுள்ளார்கள்.
பெரியாரின் தனித்தன்மை என்ற தலைப்பில், அந்நூல் (பக்கம் 191 இல்)
பெரியார் சிக்கனத்திற்குப் பெயர் பெற்றவர். அவர் தன்னுடைய செலவைப் பொறுத்தமட்டும் சிக்கனத்தை கடைப் பிடிக்கவில்லை. பிறர் தனக்குச் செலவு செய்தபோதும் அதே துலாக்கோலைப் பயன்படுத்தினார்.
மண்ணோடு மண்ணாக, கண்டவர் களுக்கெல்லாம் மண்டியிட்டுக் கிடந்த தமிழ்ச் சமுதாயத்தை அடி தெரியக் கலக்கிய, தன்மான இயக்கத்தின் தந்தை ஈ.வெ.ராமசாமியை 1935 இல் நான் தற்செயலாகக் காண நேர்ந்தது.
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் 403 எண் வீட்டில் குடியிருந்த நண்பர், குத்தூசி குருசாமியைக் காணச் சென் றேன். வழியில் கண்ட நண்பரொருவர், ராமசாமிப் பெரியார் அவ்வேளை அங்கு இருப்பதாகக் கூறினார்.
அருகில் இருந்த பழக்கடைக்குச் சென்றேன். நாலணா கொடுத்து ஆஸ்திரேலிய ஆப்பிள் பழம் ஒன்றை வாங்கிக் கொண்டு, குருசாமி வீட்டுக்குப் போனேன்.
குருசாமி என்னை பெரியாருக்கு அறிமுகப்படுத் தினார். பெரியார் எழுந்து நின்று கை குலுக்கினார். பழத்தைப் பெரியாரிடம் கொடுத்தேன். வாங்கிக் கொண்டதும், என்ன மணம் என்று பாராட்டினார். அடுத்த நொடி,
என்ன விலைங்க அய்யா என்று அவருக்கே உரிய அடக்கத்தோடு கேட் டார்.
அதிகம் இல்லை என்றேன். விட வில்லை. மூன்று முறை கேட்ட பிறகு, நாலணா என்றேன். பெரியாருக்குச் சினம் பொங்கிற்று.
என்ன ஜம்பம்; நாலணாவுக்கு ஒரு பழம். அந்தப் பணத்துக்கு இரண்டு சீப்பு வாழைப் பழம் வாங்கியிருக்கலாம். இத்தனை பேருக்கும் கொடுத்திருக்க லாம். ஒரு பழத்திற்கு நாலணா என்ன அநியாயம் என்று பெரியார் கடிந்து கொண்டார். அதிர்ச்சியடைந்தேன்; ஆனால், அடங்கியிருந்தேன். ஏன்? அவருடைய சிந்தனை ஓட்டத்தின் சிறப்பு புரிந்தது. அது என்ன?
இருப்பது சிறிதே ஆயினும் அதை எவ்வளவு அதிகமானவர்களுக்குப் பயன்படுத்த முடியுமோ அந்த வகையில் செலவிட வேண்டும் என்பதே பெரியாரு டைய எண்ணம். அது நொடியில் எனக்கு விளங்கிவிட்டது. அப்புறம் அதே தவறைச் செய்யவில்லை.
அடுத்து 1940 ஆம் ஆண்டு அக் டோபர் திங்கள் 25 ஆம் நாள், செல்வி காந்தம்மாவும், நானும் எங்கள் திரு மணத்தைப் பதிவு செய்வதைப் பார்க்க, பெரியார் சென்னைக்கு வந்திருந்தார். பெரியார், பதிவாளர் அலுவலகத்திற்கு எங்களுடன் வந்தால், அங்கே கூட்டம் கூடிவிடுமென்று இயக்கத் தோழர்கள் கூறியதால், பெரியாரை திருவல்லிக் கேணியில் என் மாமனார் திரு. சுப்ர மணியம் இல்லத்திலேயே இருக்கும்படி வேண்டிக் கொண்டோம். பெரியார் பெருந்தன்மையோடு இசைந்தார்.
திருமணத்தைப் பதிவு செய்தபின், நாங்கள் இருவரும் மட்டும், வழியில் புகைப்படம் எடுக்கும் நிலையத்திற்குச் சென்றோம். புகைப்படம் எடுப்பதில் சற்றுக் காலதாமதம் ஆயிற்று. காலந்தாழ்த்தி வீட்டிற்குத் திரும்பிய எங்களைப் பார்த்து, பெரியார், ஏன் இவ்வளவு நேரம்? புது மணமக்கள் எங்கே போய்விட்டீர்கள் என்று கேட்டார்.
புகைப்படம் எடுத்துக்கொள்ளக் காலதாமதம் ஆனதைக் கேள்விப்பட்ட பெரியார், புகைப்படம் எடுக்க என்ன கட்டணம்? என்று கேட்டார்.
நான் மூன்று ரூபாய்கள் என்றேன். எத்தனைப் படங்களுக்கு என்று கேட்டார் பெரியார்.
நான் ஒரு படத்திற்கே என்றதும் பெரியார் வெகுண்டார்.
உடனே அவர் ரூபாய்க்கு மூன்று படம் கொடுக்கிற கடைகள் ஏராளம் இருக்கையில், எப்படி ஒரு படத்திற்கு மூன்று ரூபாய்கள் கொட்டிக் கொடுக் கலாம்? என்று கனல் கக்கக் கேட்டார்.
பதில் சொல்ல விரும்பாது திகைத் தேன். உடனிருந்த பொன்னம்பலனார், இவ்வளவு சிக்கனமாகத் திருமணஞ் செய்துகொண்ட அத்தான் மூன்று ரூபாய்கள்தானே பாழாக்கி விட்டார். நீங்கள் செலவு செய்ய முன்வந்த ஈராயிரம் ரூபாய்களை மிச்சப்படுத்தி விட்டாரே அய்யா! என்று சொல்லவும் பெரியாரின் சினம் தணிந்தது!
இப்படிப் பல பல உண்டு.
தம் வாழ்வில் சிக்கனத்தைக் கடைப் பிடிக்கும் சிலர் பிறர் பொருளைச் செல வழித்தால் அதை தாராளமாக ஓடவிட்டு மகிழும் இரட்டை வேடம் அவரிடம் இல்லாதது எவ்வளவு சிறப்பான - நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறி பார்த்தீர்களா?
நேற்றைய விழா இறுதியில், நிறைவுரை ஆற்றிய இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் பெரியாரின் இச்சிக்கனத்தை விளக்கி மேலும் இரண்டு சம்பவங்களை மகிழ்ச்சிப் பெருக்குடன் நினைவு கூர்ந்தார்.
எனது மாமா மாயூரம் நடராசன் வீட்டில் அக்காலத்தில் மாயவரம் என்ற மயிலாடுதுறைக்கு வரும்போது தங்கு வார்கள். நான் மாணவனாக இருந்து கண்டு களித்திருக்கிறேன். சாப்பிட்டு முடிந்தவுடன், ஒருவர் சொம்பைக் கொண்டு, தந்தை பெரியார் கைகளை கழுவுவதற்காக ஊற்றினார். சிறிது நேரத்தில் நிறுத்து என்றார்; ஊற்றிய வர் சரியாகத்தானே செய்தோம் என்ற சங்கடத்தோடு நிறுத்தினார். ஏன் இப்படி ஊற்றுகிறீர்கள் என்றார் பெரியார்.
தண்ணீர் தானே என்றார் என் மாமா! தண்ணீர் என்றால் வீணாக்க லாமா? - அதையும் சிக்கனத்தோடு பயன்படுத்தவேண்டாமா? என்றார் பெரியார்.
அது இன்று எப்படிப்பட்ட தொலை நோக்குப் பார்த்தீர்களா? காசு கொடுத்து குடிதண்ணீர், வழக்குப் போட்டும் கிட்டாத காவிரி நீர் - இப்படி உள்ள நிலை இன்று!
அதோடு இன்னொரு அனுபவத்தை யும் கூறினார். தந்தை பெரியார் வேனில் நாங்கள் செல்லுவோம் சில வேளை களில், திருச்சியிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வரும்போது, வாலி கண்டாபுரம் என்ற ஊரில் வண்டியை நிறுத்தச் சொல்லி, டிரைவரை அழைத்து டிபன்கேரியரைக் கேட்டு, பிறகு 2 ரூபாய் எடுத்துக் கொடுத்து, எங்களில் ஒருவரிடம், அதோ அந்த மரத்தடியில் ஒரு அம்மா இட்லி சுட்டு விற்பார், அங்கே சென்று இதற்கு இட்லி, சட்னி வாங்கி வாருங்கள், எல்லோரும் சாப்பிடுவோம் என்றார்.
இதை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், பெரியார் மகா கஞ்சர் போலும்; இவ்வளவு பெரிய தலைவர் இப்படியா? என்று சிலர் எண்ணக்கூடும்.
ஆனால், இதில் குறைந்த செலவில், மொத்தம் உள்ளவர்கள் பசியாறுகிறோம் என்பது மட்டுமா? அந்த அம்மையார் இதை விற்றால்தானே அவருக்கு அன்றாட ஜீவனம்; அவருக்கும் எவ்வளவு மகிழ்ச்சி; வாழ்வளிப்பதாகவும் அமை கிறதே என்பதைப் புரிந்துகொண்டால், நாமும் வாழவேண்டும்; நம்மால் பிறரும் வாழவேண்டும் என்கிற தத்துவம் அல்லவா நமக்கு அவரால் - அச்சம்பவம்மூலம் போதிக்கப்படுகிறது!
எனவே, சிக்கனத்தின் மற்றொரு பக்கம் பிறரை வாழ வைப்பது - பண்டங் களை வீணாக்கக் கூடாது என்பதற் காகவே கையில் மூட்டை கட்டி எடுத்து பிறருக்குத் தர, பயன் விளையும்படிச் செய்ய அவர் கூச்சப்பட்டதே இல்லை.
இதன்மூலம் போலி ஆடம்பரம், போலி கவுரவம் தகர்க்கப்பட்டுள்ளதே!
எல்லாவற்றையும்விட இச்சிக் கனத்தை வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டால், மனிதன் கடன் வாங்கி, மானங்கெட்டு, மறைந்து திரியவேண்டிய அவசியம் இராதே! சுயமரியாதையின் சொக்கத்தங்கமாக அவன் வாழ்வு மிளிர, சிக்கனமும், எளிமையும் சிறந்த படிக்கட்டுகள் அல்லவா?
சிக்கனம் தேவைக்கேற்ப செலவழித்தல்,
கருமித்தனம் தேவைக்கே செல வழிக்க மறுத்தல்,
ஆடம்பரம் தேவைக்குமேல் செல வழித்தல்! மறவாதீர்!

துறவியும் - நடன மாதும்!


காரில் பயணம் செய்யும்போது, வானொலி கேட்கும் பழக்கமுடையவன் என்பதால் இரண்டு நாள்களுக்குமுன், 75ஆம் ஆண்டு விழாவைக் கொண் டாடும் சென்னை வானொலியைக்  கேட்கும்போது, இலக்கியப் புரட்சி எழுத்தாளர் பொன்னீலன் அவர்களது கணீர் குரலில் கதையொன்று ஒலித் தது!
ஒரு ஊரில் ஒரு துறவி. அவர் நமது ஆனந்தாக்களைப் போன்றவர்கள் அல்லர். உண்மையான துறவி - அவருக்குள்ள சிறப்பு சிறப்பாக ஓவியம் வரைதல்.
எவரையும் சிறப்பாக உயிரோட்டத் துடன் அவர் வரையும் ஓவியங்களால் இந்தத் துறவி பிரபலமானார்; ஆனால் அவரிடம் சென்று எவர் ஓவியம் வரையுமாறு கேட்டாலும் அதிகமான கட்டணம்   கேட்பாராம்! அவரது வியத்தகு திறமையைப் போற்றுவதால், அதிக கட்டணம் கொடுப்பதற்கு பலர் தயங்குவதில்லையாம்!
இவரது பெருமையை, ஓவியத் திறமையைக் கேள்வியுற்று ஒரு நாட்டியக்காரியான பெண்மணி - அவரும் ரொம்ப பிரபலமானவர்தான் - தனது ஓவியத்தை இந்தத் துறவி வரைவாரோ மாட்டாரோ தெரிய வில்லை; எதற்கும் நேரிற் சென்று கேட்டுப் பார்ப்போமே என்று எண்ணி, அவரிடம் சென்று தனது வேண்டு கோளை - விருப்பத்தைத் தெரிவித்தார். கட்டணம் மற்றவர்கள் தருவதைவிட மூன்று மடங்கு நீங்கள் எனக்குத் தர சம்மதம் தெரிவித்தால் ஓவியமாக உங்களை வரைந்து கொடுப்பேன் என்றார்.
இருவரும் ஒப்புக் கொண்டு, ஓவியம் வரைந்து முடிந்தவுடன், வேண்டுமென்றே அவரைச் சிறுமைப்படுத்த எண்ணிய நாட்டியக்காரியான அந்த நடன மங்கை, இது என்ன ஓவியம் என்னை மாதிரியே இல்லை; எனக்குத் தேவையில்லை என்று கூறி பணத்தை மட்டும் கொடுத்து, வீசி விட்டு போய்விட்டார். இவரோ அதற்காக சலனப்படவே இல்லை! இப்படி இவரை அவமானப்படுத்தியும் மனுஷன் கவலைப் படவே இல்லையே; இவரை வேறு வகையில் சிக்க வைக்க வேண்டும். அவமானப்படுத்த வேண்டும் என்று ஒரு விஷமத் திட்டத்தைப் மனதிற்குள் போட்டுவிட்டு, அவரிடம் சென்று, அந்த ஓவியம் தான் சரியாக இல்லை; இன் னொரு ஓவியம் வரையுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை எனது உள் பாவாடையை தருவேன். அதில் என் உருவ ஓவியத்தை வரைந்து தருவீர்களா? என்று கேட்டார்.
துறவி, வரைவேன்; ஆனால் அதற்கு ஆறு மடங்கு கட்டணம் தர வேண்டும் - ஒப்புவீர்களா? என்றார்! உடனே இருவரும் ஒப்பந்தம் முடித்து விட்டபின், இந்தப் பெண்மணிக்கு மனதிற்குள் ஏமாற்றம் - சரியென்று வெளியே கிளம்பிவிட்டார்.
சில நாள்கள் கழித்து, நடன மாது காரில் போகும்போது வேறு ஒரு கிராமம் வழியே செல்லுகிறார். அங்கே ஒரு புறத்தில் இந்த துறவி நின்று யாரிடமோ எதையோ அந்த ஊரின் மக்களிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறார். இந்தத் துறவி அந்த ஊரைவிட்டு, இங்கே வந்திருப்பது ஏன் என்று விசாரித்தபோது, அம்மா இவர் தனது ஓவியங்கள் மூலம் திரட்டிய பெரும் பணத்தை எங்களூரில் சாலை, பள்ளிக் கூடம், மக்களுக்கு உதவிகள் - இப்படியே செலவழித்து, எங்கள் ஊரையே மிகப் பெரிய புதுமைபுரியாக மாற்றிட நாளும் உழைக்கிறார்; இப்படிப் பட்டவரை எளிதில் எங்கும் காண முடியாது என்ற சொன்னவுடன்தான் அவர் ஏன் எவ்வளவு அவமானத்தையும் பொதுக் காரியத்திற்காக தொண்டுக் காக ஏற்றுக் கொண்டு அப்படி பணம் திரட்டினார் என்பது அந்த நடன மங்கைக்குப் புரிந்தது!
பணத்தாசை பொது வாழ்வில் உள்ள சிலருக்கு ஏன் வருகிறது என்பது புரிகிறதல்லவா?
பொது வாழ்வில் மானம் பாராது பணி செய்யும் வகையில் பணம் திரட்டி அதை தனது ஜாதிக்கோ, உற்றார் உறவினர் களுக்கோ, வைத்துவிட்டு, அல்லது உயில் எழுதி வைத்துவிட்டுப் போகாமல் தொண்டறம் புரிந்த தந்தை பெரி யாரின் பணத்தாசை பற்றி பலர் பேசியதுதான் நினைவுக்கு வந்தது!
கையெழுத்துக்குக்கூட நாலணா, புகைப்படம் எடுக்க அய்ந்து ரூபாய் என்று கட்டணம் இப்படி வசூலித்து தனது சொந்த செல்வத்தையும் பொது மக்களுக்கே  தந்து, பல்கலைக் கழகங் களும், மருத்துவமனைகளும், பகுத் தறிவுப் பிரச்சார பரப்புரை நிலையங் களும், கைவிடப்பட்ட குழந்தைகள், முதியோரை காக்கும் தொண்டறப் பணிகளுக்காகவும் அவர் திரட்டிய செல்வம் - பெரியாரின் திரண்டதனம் என்று சிலரால் வர்ணிக்கப்பட்டதற்குப் பொருள் அவருக்குப் பிறகு மக் களுக்குப் புரிந்தது.
தோழர் பொன்னீலனின் கதையைக் கேட்டபோது, பெரியாரையே அவரது தொண்டறத்தை உருவகப்படுத்திய தாகவே எங்களுக்குத் தெரிந்தது!
பணத்தைச் சேர்ப்பது முக்கியமல்ல. எதற்காக அது பயன்படுகிறது என்ப தல்லவா முக்கியம்!
துறவிகளுக்கு இப்படி ஆசை வந் தால் அதுவும் பொது நலத்தின் பாற் பட்டதென்றால் அது விரும்பத்தக்கதே!
- கி.வீரமணி


இன்று (அக்டோபர் 16) உலக உணவுப் பாதுகாப்பு நாள்! இதை யொட்டி கலைஞர் செய்தி தொலைக் காட்சியில் இன்று காலை ஒரு நல்ல தகவல்
- அறிவுரை ஒளிபரப்பப்பட்டது.
திருமணம், விருந்துகள் போன்ற வற்றினால் நமது (இந்திய) நாட்டில் சுமார் 950 டன்களுக்கு மேற்பட்ட சமைத்த உணவுகள், தூக்கி எறியப் பட்டு, விரயமாகின்றனவென்றும் இதன் மதிப்பு சுமார் 350 கோடி ரூபாய் என்றும் குறிப்பிட்டு, உணவை இப்படி குப்பைத் தொட்டியில் போட்டு வீணடிக் கலாமா? இது தவிர்க்கப்படுதல் அவசியம் என்று குறிப்பிட்டு, இதிலும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று மிக அருமையாக அந்த செய்தியாளர் விளக்கினார்!
பொதுவாக நம் நாட்டுத் திருமணங் கள் மிக மிக ஆடம்பரங்களாகக் காட்சி அளிக்கின்றன. இதைக் கண்டு வெட்கப்பட வேண்டியதற்குப் பதிலாக, பலரும் - பணக்காரர்கள் மட்டுமல்ல நடுத்தர வர்க்கத்தினர்கூட இந்த போலி ஆடம்பர போதை மயக்கத்திற்கு ஆளாகின்றனர். இதைப் பார்த்த ஏழைகளாய் இருப்பவர்களில் பலர்கூட கடன் வாங்கியாவது தம் பிள்ளை களின் திருமணங்களை ஆடம்பர மாகவே நடத்திடவே ஆசைப்படுகிறார் கள்! கடனில் மூழ்கி தற்கொலைக்கு ஆளாகினர்.
பெரும்பாலான திருமணங்களில் காலைச் சிற்றுண்டியே ஏக தடபுடல், இரண்டு இனிப்பு, மற்றபடி எத்தனை அதிகப்படியான பலகார வகைகள் உண்டோ அதன் நளபாகங்கள் அத்தனையும் போட்டு காலை 9.30 மணி வரை இந்த விருந்து. திருமணம் காலை 10 மணிக்குத் துவங்கி (அது வைதிக புரோகித, சுயமரியாதைத் திருமணம் - எதுவாக  இருந்தாலும்) 11 மணிக்கு முடிந்துவிடும். சில திருமண வைதீக மூடநம்பிக்கை யாளர்கள் வீட்டுத் திருமணம் காலை 9 மணி - ராகுகாலம் முகூர்த்த நேரம் இத்தியாதி! இத்தியாதி பார்த்து ஒரு மணிக்குள் முடித்து விடுவதுண்டு.
உடனே பலமான விருந்து - பலவகை பதார்த்தங்கள் - இனிப்புகள், அய்ஸ் கீரிம், பழங்கள் என்றால்  1 மணி இடை வெளியில் ஒருவர் என்னதான் அவர் சாப்பாட்டு ராமன்ஆக இருந்தாலும் எவ்வளவு சாப்பிட முடியும்? அதனால் உட்கார்ந்து சாப்பிட்டு எழுகின்றபோது - அவர்கள் தேவை அறிந்து பரிமாற முடியாத அளவுக்குக்கூட்டம் - பந்தி பரிமாறுகிறவர்கள்  ரோபோக்கள் போல கடகடவென்று வாரி வாரிக் கொட்டிக் கொண்டே போவர்!
விளைவு...? இலையில் ஏராளமான வீணாக்கிய பண்டங்கள், சோறு, மற்றும் பல அய்ட்டங்கள் ஒரு இலை இப்போது ரூ.150 முதல் 200 வரை; இதில் மூன்றில் ஒரு பங்கோ அல்லது 50 சதவிகிதமோ கூட வீண் விரயம் - பசியின்றி, புசிக்கும் பரிதாப ஜம்பக் காட்சி!
வேறு முறையில் - Buffet  (விருப்பத்துக்கேற்ப விருந்து) என்ற முறையில்கூட பலவற்றை அடுக்கி விருப்பப்பட்டதை எடுப்பவர்களில் பலர்கூட கொஞ்சம் கொஞ்சமாக எடுக்காமல், ஆசை அளவை அறியாது என்பதுபோல் அள்ளி அள்ளிக் கொண்டு, பிறகு சாப்பிடாது தட்டிலேயே தள்ளித் தள்ளி வைத்து விட்டு போய் விடுவதும் காணும் காட்சியே!
நாட்டில் ஒரு புறத்தில் உணவுப் பஞ்சம், பசி, பட்டினி, இவ்வகை உணவையே பார்த்திராத பரிதாபத்திற்கு பாட்டாளி, ஏழை, எளிய குடும்பங்கள் - சிறார்களிலிருந்து பெரியவர் வரை ஏராளம் இருக்கையில், மறுமுனையில், இப்படி ஒரு வெட்கப்படத்தக்க விருந்து - வீண் விரயர்களா?
இதைவிடப் பெரிய தேசியக் குற்றம் (National Crime) வேறு உண்டா?
வீட்டில்கூட தேவைக்கு ஏற்ப கேட்டு வாங்கி இலையிலோ, தட்டிலோ வைத்து, விரயமாக்காது பரிமாறக் கற்றுக் கொள்ள வேண்டும்.
பல வீடுகளில் அன்பால் கொல்லும் அநாவசிய ஆடம்பர உபசரிப்புகள் அறவே தவிர்க்கப்படல் வேண்டும்.
பசித்துப் புசித்தால்தானே உடல் ஆரோக்கியமாக அமையும்? ஆயுள் வளரும். முக்கால் வயிறு உண்டு கால் வயிற்றைக் காலியாக வைத்திருக்கும் பழக்கமுடையோர்க்கு ஆயுள் வளருவது உறுதி!
வறுமைக்கோட்டிற்குக் கீழ் பல கோடி மக்கள் வாழும் இந்தப் பரந்த நாட்டில் ஏன் இப்படி ஆடம்பரத் திரும ணங்களும், பசியற்ற விருந்துகளும்! பசை உள்ளதை பகிரங்கப்படுத்தப் பல நல்ல அறப் பணி வழிகள் உள்ளனவே. அதைச் சற்று எண்ணிப் பார்க்கக் கூடாதா?
முன்பு 1976இல் நெருக்கடி நிலை காலத்தில் 50 அல்லது 100 பேர்கள் மட்டும் தான் திருமணங்களுக்கு அழைத்தல் வேண்டும் என்ற சட்டக் கடுமை - அது இப்போது அவசரமாகத் தேவை போலும்!
அரசு அதிகாரிகள் சாப்பிட்ட இலை களை ஆள்களை விட்டு எண்ணி அபராதம்; சிறை விதித்த நிலைபோல் மீண்டும் வருவதுகூட வரவேற்கப்பட வேண்டியவையே!
ஆடம்பரம் என்பது மனித குல நோய்களில் மிகவும் அருவருக்கத்தக்க ஆபத்தானதொரு நோய். இதற்கு சிக்கன மருந்து தேவை! தேவை!!

எக்கணமும் சிக்கனமே சிறந்தது!

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
எக்கணமும் சிக்கனமே சிறந்தது!
இன்று உலக சிக்கன நாள்  - என்று அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். ஒரு நாள் மட்டுமல்ல என்றுமே நமது வாழ்வு. சிக்கன வாழ்வாக அமைந்தால் அதைவிட சிறப்பான வாழ்க்கை வேறு இருக்கவே முடியாது!
சிக்கனம் என்பது எப்போது பெருமை அடைகிறது தெரியுமா?
ஏராளமான வசதி வாய்ப்புப் பெற்றுள்ளவர்கள் எளிமையையும், சிக்கனத்தையும் கடைப்பிடிக்கும் போதுதான் அது மேலும் பாராட்டத் தகுந்ததாக அமையக்கூடும்.
ஏழை, எளியவர்கள் சிக்கனத் திருமணத்தைச் செய்தால், உலகத் தார் உடனே, அவருக்கு வேறு வழி என்ன? சிக்கனத்தைத் தவிர? என்று எளிதாகக் கூறி விடுவார்கள்.
ஆனால் நிரம்ப வசதி படைத் தவர்கள் சிக்கனத் திருமணம் செய்து கொள்ளும்போது அதைப் பாராட்டுவர் - சரியான தெளிவு படைத்த மனங் கொண்டோர். கோணல் இல்லாத குணங் கொண்டோர்.
கோணல் புத்தியுள்ளவர்களோ, பாரய்யா இவ்வளவு வசதியிருக்கிற இவர், ஏன் தாராளமாகப் பணத்தைச் செலவழிக்கக் கூடாது? இவர் சாதாரண ஆள் இல்லப்பா; உலக மகா கஞ்சன் என்று கூறிடும் நிலையும் உண்டு!
நாம் எவரும் யாருக்காகவும், ஊருக்காகவும் வாழ வேண்டிய தில்லை; நமக்காக, நமது சுயமரி யாதைக் காப்புறுதிக்காக வாழ வேண்டும்.
வரவுக்குட்பட்டு செலவழிக்கும் எவருக்கும் கடன் வாங்க வேண்டிய கட்டாயமோ, அல்லது அப்படியே தவறிப் போய் கடன் வாங்கினாலும்கூட ஒழுங்காகத் திருப்பி அதனை உரிய காலத்திற்குள் அடைத்திடும் வாய்ப்பும், வழியும் உண்டே!
அண்மைக் காலங்களில் தொலைக் காட்சிகளின் விளம்பரங்கள் பல நடுத்தர வர்க்க மக்களைக்கூட தொற்று நோய் போல் தொற்றிக் கொண்டு, ஆடம்பரப் பொருள்களை வாங்கிக் குவிக்கச் செய்கிறது!
அதிலும் வங்கிகள் தந்த (ஊசநனவை ஊயசனள) கடன் அட்டைகளை வைத்துக் கொண்டு ஆடம்பரப் பொருள்களை வாங்குவது - தேவையைக் கருதி அல்ல - ஆசையைக் கருதி, அந்தஸ்தை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வெளிச்ச வியாதிக்குப் பலியாகி, கண்டபடி குறிக்கோள் அன்றிச் செலவழிப்பர்.
தொலைக்காட்சியில் ஒரு பிரபல ஜவுளிக் கடைக்கு ஒரு பெண்மணி செல்லுகிறார். (நான் பார்த்தேன் - நேற்று - விளம்பரம் அல்ல உண்மையான செய்தி!) தீபாவளிக்கு ஒரு புடவை எடுப்பதற்காக இங்கு வந்தேன். இங்கு வந்து பார்த்தவுடனே எல்லாம் மிகவும் கவர்ச்சியாக இருக்கின்றபடியால் 12 புடவைகள் எடுத்துள்ளேன் என்று சிறிதுகூட லஜ்ஜையின்றிக் கூறுகிறார் தொலைக்காட்சி செய்தியாளரிடம்!
12  புடவைகளை ஒரு நபர் வைத்து எப்படித்தான் மாற்றிக் கட்டுவார்; வீட்டில் ஏற்கெனவே ஏராளம் அடுக்கி வைத் திருப்பார்களே!
இது ஒரு சிறு நிகழ்வு. இதுபோல தேவையைக் கருதாது, மனம் போன போக்கில், ஆசைக்கு லகான் போடத் தெரியாமல் சென்றால் அவர்கள் வாழ்க்கை என்னவாகும்?
வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தார்!
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்          (குறள் 479)
அளவறிந்து அதற்குத்தக்கபடி வாழ்க்கை நடத்தாதவனுடைய ஆடம்பரச் சிறப்பு, இருப்பது போல் இருந்து இல்லாமற் போய் மீண்டும் தலைதூக்க விடாமல் கெட்டுப் போகும் என்கிறார் வள்ளுவர்!
என்னே அருமையான, தேவை யான எச்சரிக்கை!
தந்தை பெரியார் அவர்கள் எப்போதும் சிக்கனக்காரராக இருந் தவர் - மண்டிக் கடை வியாபாரியாக இருந்த காலம் முதல் பொது வாழ்க்கையில் மக்கள் ஏற்ற தலைவராக உயர்ந்து உள்ளத்தார் உள்ளத்தில் எல்லாம் உள்ளவராகி வாழும் நிலை பெற்ற பிறகுகூட.
வீட்டை விட்டு வெளியேறி,  காசியில் பசியால், பட்டினியால் எச்சில் இலையிலிருந்து வழித்துச் சாப்பிட்ட நிலையை அனுபவித்து, அதைச் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொண்ட ஞானி அவர்!
தனது தந்தை ஆந்திராவிற்கு வந்து மகனைக் கண்டறிந்து மகிழ்ந்த போது, அவரது நண்பர் வீட்டில் தனது பொன்னகைகளையெல்லாம் மூட்டை கட்டி நம்பிக்கையுடன் கொடுத்து அப்படியே திருப்பி தந்தையிடம் ஒப்படைத்த கதை மெய் சிலிர்க்க வைப்பதல்லவா?
ஏண்டா இராமா - சாப்பாட்டிற்கு என்ன செய்தாய் என்று தந்தை வெங்கட்டநாயக்கர் கேட்டபோது, அது ஒன்றுமில்லை நைனா, நீங்கள் போட்ட தானத்தை - சதாவிருத்தி களை நான் அங்கே திரும்ப வசூலித்துவிட்டேன் என்று கூறியது -  வெறும் நகைச்சுவை உணர்வு மட்டுமா? எவ்வளவு பெரிய சிக்கனத்தின்  செதுக்கல்? எங்கும் சிக்கனம் பெருகுக!
-விடுதலை,30.11.12
இப்போதெல்லாம் இளைஞர்கள் பலருக்கு சிந்திக்கும் ஆற்றலும், அவற்றை எழுத்து வடிவத்தில் கட்டுரை களாக்கி சிறு புத்தகமாகவும் ஆக்கிப் பரப்புகிறார்கள்.
அப்படிப்பட்ட நடுத்தர வயதினரான திரு. வைகை ஆ. விசுவநாதன் என் னிடத்தில் திறன் பத்து என் சொத்து என்ற தலைப்பில் ஒரு கையடக்க நூலை அளித்துச் சென்றார்!
எளிய முறையில் கருத்தைச் சொல்லி கவனத்தைச் சுண்டி இழுத்து சிந்திக்க வைக்கும் திசை காட்டும் கருவிபோல் இருந்தது.
பாராட்டத்தக்க இதுபோன்றவர் களின் பணி - எழுத்துத் தொண்டு மிகவும் போற்றி வரவேற்கத்தக்கதாகும்!
தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாத அன்றன்றும் புதுமைகளை சுவைக்கவேண்டும் என்பார் புரட்சிக் கவிஞர்.
அதற்கேற்ப இச்சிறுநூல், பயணங் களின்போது படிக்கப் பயன்படும் வகை யில் அமைந்துள்ள, பயணக் களைப்ப கற்றும் பலே நண்பனாகவும் கூட அமையலாம் - சில பயணாளிகளுக்கு!
தம்பியண்ணா என்பது இவரது புனை பெயர்.
உங்கள்
பலங்களை
பலப்படுத்துங்கள்;
பலவீனங்களை
பலவீனப்படுத்துங்கள்
- என்ற வரிகளுடன் தொடங்கும் இச்சிறு வெளியீட்டில்,
மனிதாபிமானம்
மற்றவர்
+
நிறைவு
நிலை
+
தக்க செயல்
தனதாக
உணர்வு
எனப் போட்டு,
மற்றவர் நிலையை தனதாக உணர்தல் தன்னிலையில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்து, மற்றவர் நிலையை தனது என உணர்ந்து, அவருடைய
நெருக்கடியிலிருந்து அவரை விடுவித்தல் என்று கூறுகிறார்.
ஆம், ஆங்கிலத்தில் நுஅயீயவால என்ற சொல்லின் முழு விளக்கம் இது என்றால் மிகப் பொருத்தம் அது!
மனிதாபிமானமும், நிறைவும் கொண்ட ஒருவரே, மற்றவர் நிலையை தனதாக உணர்ந்து, தக்க செயல் செய்ய முடியும்; இது பிறர் மீது இரக்கம் காட்டுவதல்ல; (Sympathy என்பது இரக்கம் என்பதாகும்) தனது மேம்பட்ட ஆளுமையை வெளிப்படுத்துவது.
யார் வெற்றி பெறவேண்டும் என்பதை விட யார் தோற்றுவிடக் கூடாது என்ற நிறைவான உணர்வு இது!
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்    (குறள் 214)
என்ற குறளுக்கு மிக அருமையான விளக்கமாக மேற்காட்டிய வரிகள், வந்து நிற்கின்றன!
இதுபோல பலப்பல
பயனுறும் கருத்து முத்துக்கள்!
மனம் திறந்து கேளுங்கள்,
சுவையாக, சுருக்கமாக
சூழலுக்கேற்பப் பேசுங்கள்....!
இதைக் கடைப்பிடிக்க கற்றுக் கொள் வோம், வாரீர்!
எனவே, இக்கட்டுரையும் சுருக்க மாகவே முடிவது நல்லதல்லவா?
- கி.வீரமணி
-விடுதலை,21.11.12

முதுமையும் ஏற்க இயலாத முடிவுகளும்!


இன்றைய நாளேட்டில் ஒரு வேதனை தரும் செய்தி. நெல்லையைச் சேர்ந்த 80 வயது நிறைந்த பிரபல டாக்டர் ஒருவர் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்!
நெல்லை சந்திப்புப் பகுதியில் தனியார் மருத்துவமனை நடத்தியவர் அந்த டாக்டர் (நாம் பெயர் குறிப்பிட விரும்பவில்லை)
இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனராம்! அவர்களில் ஒருவர் முடக்கியல் டாக்டராகவும், மற்ற இரு பிள்ளைகள் தொழிலதிபர்களாகவும் உள்ளனராம்!
நெல்லைப்பேட்டைப் பகுதியில் அமைந்த ஒரு நகரில் (பெயர் கோடீசுவரன் நகராம்) தனியே வசித்து வந்த அவர் இப்படி  ஒரு முடிவை அவரே தேடிக் கொண்டாராம்!
அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் வயது முதிர்ந்த நிலையில் என்னைக் கவனிக்க யாரும் இல்லை. தற்போது பார்வை குறைந்ததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாராம்!
என்னே கொடுமை!
வறுமை, கடன் தொல்லை, காதலில் தோல்வி, தேர்வில் தோல்வி என்பது போன்ற காரணங்களால் நிகழும் தற்கொலைகளைக்கூட பகுத்தறிவாளர் களால் ஏற்க முடிவதில்லை. இருட்டுக்குப் பின் வெளிச்சம் உண்டு - இரவுக்குப் பின் வெள்ளி முளைத்து விடியல் வருவது உறுதி. இரவே இருபத்து நான்கு மணி நேரமும் நீடிக்காது என்பது தானே இயற்கை நியதி? புரிந்து கொள்ள பலர் மறந்து விடுகிறார்களே!
ஆனால் வளமை - வசதி  - வாய்ந்த - குறையில்லாத போதும் தனிமையும் உதவி செய்ய எவரும் முன் வரவில்லையே என்ற ஆதங்கமும் அந்த டாக்டரை தற்கொலை முடிவுக்குத் துரத்தியது எவ்வளவு வேதனையானதொரு செய்தி! அது மட்டுமா? அவர் பிள்ளைகள் அவ்வளவு பெரும் நிலையில் உள்ளார்கள் என்றால் அதற்கு இந்த தந்தையின் கடும் உழைப்பும், உதவியும் அல்லவா?
முதுமை எல்லோருக்கும் வருவது என்பது காலத்தின் கட்டாயம்; இயற்கை யின் நியதி; இதைக் கண்டு இப்படி ஒரு முடிவுக்கு வந்து தமது இன்னுயிரைப் போக்கிக் கொள்ளும் முடிவை எடுத்தது புத்திசாலித்தனமா?
நல்ல நண்பர்கள் வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு, வாழத் திட்டமிட்டி ருக்கலாமே!
அல்லது வயதானவர்களுக்கென்று பல நகரங்களில் அமைந்துள்ள முதியோர் இல்லங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து, அதில் பணம் கட்டியாவது சேர்ந்து வாழ்ந்திருக்கலாமே! இந்த அவசரப்பட்ட முடிவுக்கு அவர் வந்தது - ஒரு கெட்ட வாய்ப்பு என்றே நினைத்து வருந்த வேண்டும்! ஆண் பிள்ளைகள் மூவர் - சம்பாதிப்பவர்கள் தங்களை ஆளாக்கியவரை, அம்போ என்று விட்டு விட்டார்களே என்ற பழி அல்லவா அவர்கள்மீது வீழ்ந்துவிட்டது!
ஒரு தரப்பு வாக்குமூலத்தை வைத்தே தீர்ப்பு எழுத நாம் விரும்பவில்லை என்றா லும் பொதுவாக நாட்டில் இன்றுள்ள நிலை என்னவென்றால், நம் நாட்டில் இப்போதைய தேவை கைவிடப்பட்ட அனாதைக் குழந்தைகள் இல்லம் அல்ல.
மாறாக, கைவிடப்பட்ட முதியோர் பாதுகாப்பு பராமரிப்பு  இல்லங்களே யாகும்!
பெற்றோர்களைத் தங்களிடம் வைத் துப் பராமரிக்கும்போது அந்த முதியவர் களும் சற்று அந்தக் குடும்பத்திற்கு உதவிகரமான நீக்குப் போக்குடன் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, அங்கு நான்தான் வயதில் மூத்த குடும்பத்தின் தலைவன் என்ற பழைய ஆதிக்க நினைப்பிலேயே அதிகாரம் செலுத்தவோ, ஆணைகள் பிறப்பிப் பதோ இல்லாமல், அவர்களுக்கு இன்றுள்ள நிலையில் (ஏனெனில் மகன் மருமகள் ஆகிய இருவரும் வேலைக் குப் போகின்றவர்கள்; அவர்களுக்கும் குழந்தைகளை ஆளாக்கும் கடமை இப்படி பல உண்டு என்பதை மனதில் நிறுத்தி) அன்போடு நடந்து கொண்டு அரவணைப்பு அணுகுமுறை தேவை.
பிள்ளைகளும், தங்களுக்கும் முதுமை வரும்; இதே கதி நமக்கு வருங்காலத்தில் நமது பிள்ளைகளால் ஏற்பட்டால் நம் நிலையும் தற்கொலை யில் தான் முடிய வேண்டுமோ என்று ஒரு கண நேரம் சிந்தித்தால், முதியவர் களின் தவறுகளைப் பெரிதாக்காமல், தக்கதோர் அன்பு, பாசம், கடமை உணர்வினால் கட்டுண்டு, பல முதி யோர்களை காப்பகத்தில் புகாமலோ, தற்கொலை முடிவுக்கு துரத்துதலோ இன்றி வாழ வைக்க முடியும்! யோசிப் பார்களா?
- கி.வீரமணி
-விடுதலை,20.10.12