பக்கங்கள்

வெள்ளி, 11 டிசம்பர், 2015

உளவியலின்படி - முடிவுகள் எடுக்குமுன்...!


குடும்பமாக இருந்தாலும், இயக்க மாக இருந்தாலும், பெரும் நிறுவனங் களாக இருந்தாலும், அதில் உள்ள தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், மேலாண்மையாளர்கள் எப்படி முடி வுகள்  எடுப்பது என்பது உளவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது உளவியல் அறிஞர்களால்.
அதன்படி, மிகுந்த கோபம், ஆத்திரம், ஆவேசம் அடங்காத நிலையில், அவசரப்பட்டு முடிவுகளை எடுப்பது, அறிவிப்பது விரும்பத்தக்கது அல்ல என்பதோடு அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்த கதை யாகவே அது முடியும்.
முடிவுகளை எடுக்குமுன் - வள் ளுவர் அறிவுறுத்தியபடி - எண்ணித் துணிக கருமம் என்று ஆழமாக, தீர ஆலோசித்து முடிவுகளை அறிவிக்க வேண்டும்; அறிவித்தபின் அதைத் திரும்பப் பெறும் கேலிக் கூத்துக்கு நல்ல பொறுப்பாளர்கள், நல்ல தலை வர்கள் ஆளாகக் கூடாது; துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு அல்லவா?
எதையும் பின்விளைவுகள், அத் துடன் ஏற்படக் கூடிய பக்க விளைவு கள் ஆகியவற்றைபற்றியும் ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
நல்ல தலைமைகள் முடிவு எடுத்து விட்டால் அதிலிருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டார்கள்; எவ்வளவு எதிர்ப்பு, கெட்ட பெயர் அதன் மூலம் வந்தாலும் கவலைப்படாமல் அதைச் செயல்படுத்துவதில் உறுதி காட்ட வேண்டும்.
உளவியலில் களைப்புடன் முடிவு எடுத்தல் (“Decision Fatigue”) என்று ஒரு ஆய்வுத் தலைப்பு உண்டு. ஒருவர் மிகவும் ஆராய்ந்து, சிந்தித்து பல நேரங்களில் சோர்வடைந்து விடுவதுண்டு.
விளைவுகள், எதிர் விளைவுகள், நன்மைகளைவிட தீமை அதிகமா? லாபமா - நட்டமா? என்று மண்டையைக் குடைந்து யோசிப்பதனால் இயல்பாகவே  களைப்பு, சோர்வு ஏற்படவே செய்யும். உடல் சோர்வைவிட மிகவும் மோச மானது மனச் சோர்வு!
நமது பலவீனமான நேரம் அது. அந்த நேரத்தில் முடிவு எடுத்தால், அது பெரிதும் சரியான முடிவாக அமை யாது; காரணம் உடல் சோர்வும்கூட அதனுடன் பற்பல நேரங்களில் சேர்ந்து கொள்ளும்! ரத்தத்தில் உள்ள சர்க்கரை யின் அளவு (Low Blood Sugar) குறைந்த நேரத்தில் முடிவுகள் எடுத்தாலும் அது சரியான முடிவாக அமைய வாய்ப் பில்லை என்பது மனோ தத்துவவியல் வல்லுநர்கள் கருத்தாகும்.
எனவே இதைப்போக்க சிறிது நேரம் இளைப்பாறி, (Relax) பிறகு ஏதாவது சாப்பிட்டு, கொஞ்சம் புத்துணர்ச்சியைப் பெற்றபின் (ரத்த சர்க்கரை கூடியபின்) எடுக்கும் முடிவுகளே சரியானதாக அமையும்.
அமெரிக்காவின் பிரபல புத்தகக் கடையான ‘Barnes and Noble’ கடை ஒன்றில் மூன்று மாடிகள் - பல பிரிவுகள் - அதிலும் குறிப்பாக கீழே குறுந்தகடுகள், DVD ஆடியோ, வீடியோ கேசட்டுகள், ஒலி நாடாக்களை உள்ளடக்கிய மின் புத்தகப் பிரிவு போன்ற பல இருக்கின்றன.  நடுப் பகுதியில் ஒரு ‘Coffee Shop’ வைத்துள்ளார்.  அங்கே நொறுக்குத்  தீனி, காபி, டீ முதலியவற்றை வாங்கிக் குடித்து, புத்துணர்ச்சியுடன் மேலும் அதிக நேரம் தங்கி, புத்தகங்களை இன்னும் கொஞ்சம் கூடுதலாக வாங்கிச் செல்வார்கள். அது கெட்டிக்கார ஏற்பாடு.
அது போலவே அமெரிக்காவிலும் மற்ற பல உலக நாடுகளிலும் உள்ள ‘I.K.E.A’ “ அய்க்கியா மேஜை நாற்காலி, வீட்டுச் சாமான்கள் குறிப்பாக மரச்சாமான்கள், முதலியவற்றுக்குப் பிரபலமான கடை - (இது சுவீடன் பேன்ஸ்காண்டிநேவிய நாடு ஒன்றில் துவங்கப்பட்ட கடை) உலகம் முழுவதும் நல்ல தரமான பொருள்களை விற்பனை செய்யும் (Furniture Mart) அது. அதிக வாடகை கொடுத்து எடுத்த பெரிய கட்டத்திலுள்ள ஒரு மெல் உணவு தேநீர் கடை (Cafeteria) வைக்க இடம் ஒதுக்கித் தருவது அதன் மூலம் அதற்கு வரும் லாபத்தைவிட, அதனைப் பயன்படுத்தி, களைப்பு நீங்கி புத்துணர்வு கூடுதலாகப் பெற்றவுடன் மேலும் ஒன்று இரண்டு தடவை வட்டமிட்டு மேலும் அதிக மாக பொருள்களை அங்கிருந்து வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்லும் லாபம் மிக அதிகம் கிடைக்கக் கூடும் என்பதால்தான்! இதைவிடச் சிறந்த தொழில் வெற்றி ரகசியம் உண்டா?
நீதிபதிகள் தீர்ப்பு எழுதத்  தேர்வு செய்யும் நேரம்கூட களைப்பில்லாத காலை நேரமாக இருப்பின் அதன் விளைவு - அவர்கள் எழுதும், தீர்ப்பு நல்ல தீர்ப்பாக அமையக் கூடும்; இன்றேல் திசை மாறிய தீர்ப்பாகக் கூட அவர்களை அறியாமலேயே அது ஆகி விடக் கூடும்!
ஆசிரியர்கள் தேர்வுத்தாளைத் திருத்தும்போதுகூட நல்ல சோர்வற்ற நிலையில் செய்தால் எளிதில் தவறுகள் நடக்காது!
நல்ல முடிவுகளை எப்போதும் புத்துணர்வோடு, களைப்பின்றி, உற்சாகமான நிலையில், நல்ல தூக்கம், நல்ல ஓய்வு, நல்ல இளைப்பாறு தலுக்குப் பின் எடுங்கள்; அது ஒரு வரலாற்று முடிவாக நிலைக்கும்.
சிறு விஷயங்களிலும்கூட களைப் புடன் முடிவு எடுக்காதீர்கள்; முடிவு எடுத்ததனால் களைப்பும் அடையா தீர்கள் - அறிவியல் - உளவி யல்படி இது அவசியமான உண்மையாகும்.
வாழ்க்கையில் “Decision Fatigue”  தலைகாட்டக் கூடாது.
-கி.வீரமணி
-விடுதலை,17.6.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக