பக்கங்கள்

சனி, 29 பிப்ரவரி, 2020

கொள்ளையடிக்கத் தவறிய மூன்று பொக்கிஷங்கள்!

"நியூசெஞ்சுரியின் உங்கள் நூலகம்"  - பிப்ரவரி (2020) இதழில் பல அற்புதமான அறிவு விளக்கக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

அதன் தனிச் சிறப்பு, தமிழ்நாட்டின் தலை சிறந்த சிந்தனையாளரும் எழுத்தாளருமான ஆய்வாளர் திரு. ஆ.சிவசுப்பிரமணியம் அவர் களது சிறப்புக் கட்டுரை - ஒரு பழைய நூலை வாசக நேயர்களுக்கு அறிமுகப்படுத்துவதே! நான் அந்த ஏட்டின் தொடர் வாசகன்.

'மூன்று பொக்கிஷங்கள்' என்ற தலைப்பில் பாவண்ணன் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை, மூத்த சீனத் தத்துவ ஞானிகளில் ஒருவரான லாவோ ட்சு அவர்களைப் பற்றிய சுவையான தகவல்களைத் தருவதோடு, அவரது தத்துவக் கருத்துக்கள் பெரிதும் கவிதைகளாகவே அமைந்துள்ள "தாவோதே ஜிங்" (தாவோயிசத்தின் அடித்தளம் அது) பற்றிய விவரங்களும், அதன் கவித்துவ தத்துவங்களும் மனித குலத் தின் அறிவை விரிவு செய்து, அகண்டமாக்கும், அறிவுப் பரப்புரைப் பணி ஆகும்!

லாவோ ட்சு சீனத்தைச் சேர்ந்த தத்துவஞானி; தத்துவஞானி கன்பூசியஸின் சம காலத்தவர்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கும், அய்ந்தாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவர்.

வாழ்க்கையைத் துறந்து, உண்மைகளைத் தேடி, அவைகளை 81 பாடல்களாக ஓலைச் சுவடிகளில்  எழுதிக் கொடுத்துவிட்டு (தனது நீதிமன்ற ஆவணக் காப்பாளர் பணியிலிருந்து) வெளியேறிய மாமனிதர்! இப்பாடல் தொகுதி "தாவோ தே ஜிங்" என்று அழைக்கப்படுகிறது.

"தாவோ" என்பது பாதை -  வாழ்வின் பாதை- அன்பின் பாதை - மானுடத்தின் பாதை - மேன்மையின் பாதை.

'தாவோ தே ஜிங்' என்பது அப்பாதையின் விளக்கம்; ஓர்கையேடு!

இதனை தமிழாக்கம் செய்து சந்தியா நடராஜன் அவர்கள் (குறிப்புக்களுடன்) சீனப் பாடல்களை தமிழ்மயமாக்கி நாம் புரிந்து கொள்ள உதவியிருக்கிறார். தமிழ் கூறும் நல்லுலகம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்!

சில தத்துவ கருத்து முத்துக்கள்

ஆழமாக மனதிற் பதிய வைத்தால் மனித வாழ்வு இன்பமயமாகவே எப்போதும் தொடர வாய்ப்புண்டு என்பதால் சுருக்கமாக சிலவற்றைத் தருகிறோம். முழுமை விரும்பின் நூலை வாங்கிப் படியுங்கள்.

சில பாடல் வரிகளில் காணப்படும் உவமை களும், படிமங்களும் ஆழ்ந்த கற்பனைக்குரி யவையாகவும், வசீகரமுள்ளவையாகவும் உள்ளன.

"வைக்கோலில் செய்யப்பட்ட நாய் பொம்மை சடங்கு முடிந்ததும் தூக்கியெறியப்படுவதுபோல, பூவுலகும், விண்ணுலகும் இரக்கமின்றி எல்லா வற்றையும் கையாளும்" என்று தொடங்குகிறது ஒரு பாடல்!

"ஒரு குடும்பத்தில் - ஓர் அமைப்பில் - ஒரு சமூகத்தில் ஒரு தனி மனிதனின் பங்கு என்பது சடங்குக்காக செய்து வைக்கப்பட்ட பொம்மை அளவுக்கே முக்கியத்துவம் வாய்ந்தது. அதை கூடுதலாகவோ, குறைவாகவோ, செய்ய வேண்டியதில்லை"

"வாழ வேண்டிய வாழ்க்கையை வாழாமல் உதறிவிட்டு, தனக்குக் கிட்டாத பெருமையை நினைத்துத் தான் வஞ்சிக்கப்பட்டதாகக் கருதிப் பலர் நெஞ்சில் - வன்மத்தை வளர்த்துக் கொள்வது தன்னைத்தானே சிதைத்துக் கொள் ளத்தான் பயன்படுமே தவிர வேறு பயன் தராது!"

2. "நிரம்பி வழியும் பாத்திரம் ததும்பி வழியும்" என்ற மற்றொரு வரியும், "உனது கத்தியைக் கூர்மைப்படுத்திக் கொண்டே இருந்தால் கூர்மை குறைவுபடும்" என்ற ஒரு வரியும் அடுத்தடுத்து ஒரு பாடலில் இடம் பெறுகின்றன.

"வலிமைப்படுத்த எல்லை உண்டு. அதற்கு ஒரு புள்ளி உண்டு. ஆழ் மனதில் தேக்கி வைப்பதில் எல்லைதாண்டினால் சிக்கல்தான்!"

"நுனிக்கொம்பர் ஏறினால் உயிர்க்கு இறுதி யாகி விடும்" என்று எச்சரித்த வள்ளுவத்தினை வேறு வார்த்தைகளால் வார்த்தெடுக்கப்பட்டி ருக்கிறது போலும் இது!

"கருணையால் நிரப்ப வேண்டிய மனத்தை பொறாமையால் நிரப்பி விடக் கூடாது."

"தியாகத்தால் நிரப்பப்பட வேண்டிய உள்ளத்தை பேராசையால் நிரப்பிவிடக் கூடாது."

"என்னிடம் மூன்று பொக்கிஷங்கள் உள்ளன.

முதலாவது : அன்பு அல்லது கருணை எனப்படும்

இரண்டாவது : மிதம் எனப்படும்

மூன்றாவது : போட்டி போடாத மன நிலை.

'கருணை' உனக்குத் துணிவை அளிக்கும்.

'மிதம்' உனக்கு தயாள குணமே அளிக்கும்.

உலகத்தில் முதலிடம் எனக்கென

உரிமை கோராதவன்.

உண்மையில் ஆளப் பிறந்தவன்"

- அடடா! என்னே அழகு, சிறப்பு. இந்தப் பொக்கிஷத்தை ஏனோ பலரும் கொள்ளை யடிக்கத் தவறுகிறார்கள். புரியவில்லையே!

- விடுதலை நாளேடு 14 2 20

சனி, 22 பிப்ரவரி, 2020

"கரோனோ வைரஸ்" - அச்சம் வேண்டாம்!

உலகில் புதுப்புது நோய்கள் உருவாகி, பல நாடுகளுக்கும் பரவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது! பல நாட்டு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்!

சீனாவில் ஏற்பட்ட 'கரோனா' தொற்று வைரஸ் கண்டு உலகமே அஞ்சி நடுங்குகிறது; சுமார் 20,000 பேர் அங்கே பாதிக்கப்பட்டு, சுமார் 500 பேர்கள் பலியாகியுள்ளனர் - இதுவரையில். வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

சீன அரசு அதனை எதிர்கொள்ள பல முனை களிலும் பாதுகாப்பு - தடுப்பு ஏற்படுத்தி வருகிறது.

பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது!

முன்பு “பறவைக் காய்ச்சல்" காரணமாக சிங்கப் பூரின் சுற்றுலா குறைந்து, அதன் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

விமான நிலையங்களில் அதிகமான கண் காணிப்பை அந்தந்த நாட்டு மத்திய, மாநில "சுகாதார அமைப்புகள்" சிறப்பாக செய்து, அங்கிருந்து அந்த "வைரஸ்" - தொற்று நோய்க் கிருமிகள் இங்குள்ள மக்களிடம் பரவி, அவர்கள் பலியாகக் கூடாது என்ப தற்காக பல கட்ட சோதனைகளை ஏற்படுத்துகின்றன.

ஆனால் நாம், நமக்கு நாமே ஒரு தடுப்பு முறையை - பாதிப்பு ஏற்படாத வண்ணம் உருவாக்கிக் கொண்டு தற்காப்புடன் இருப்பது மிகமிக அவசியம்.

1. இப்போது மனிதர்களுக்குப் பரவிப் படையெடுக்கும் கரோனா தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் கிடைக்கின்றன! அவைகளைப் போட்டுக் கெள்ளுங்கள்.

2. அடிக்கடி கையை சோப்பு போட்டு நன்றாக தேய்த்து கழுவுங்கள். எதையும் சாப்பிடும் முன்பும் - மருந்துகளை சாப்பிடும் முன்பும் கட்டாயம் கை கழுவிய பின்னரே எடுத்துக் கொள்ளுங்கள்.

3. கைகளைக் கழுவாமல் உங்களுடைய கண்கள், மூக்கு, மற்றும் வாய்ப் பகுதிகளைத் தொடுவதைத் தவிர்த்து விடுங்கள்.

Samitgal எடை திரவம், Anti Septic சிறு சிறு பாட்டில்களில் விற்பனையாகிறது. Dettol போன் றவை வாங்கி அலுவலகத்திலோ, இருக்கை பக்கத் திலோ வைத்து கைகளில் சிறிது தடவிக் கொள்ளுங் கள்.

4. உடல் நலம் குன்றிய நோயாளிகளிடம் நெருக்கமாக இருப்பதை கூடுமான வரை தவிர்த் திடுங்கள்.

5. கைக் கொடுப்பதை (Hand Shaking) தற்காலிகமாக தள்ளி வையுங்கள். யாருக்கும் கை கொடுக்கும் பழக்கம் இப்போது வேண்டாம்!

வலி நிவாரணி மற்றும் காய்ச்சல் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

கவனம்: குழந்தைகளுக்கு "ஆஸ்பிரின்" போன்ற மாத்திரையைக் கொடுக்காதீர்கள், தவிர்த்து விடுவது அவசியம்.

“வேது பிடித்தல் என்ற நீராவி கொண்டு “ஆவி பிடிக்கலாம்; நல்ல பயன் ஏற்படும் (சில நேரங்களில் நமக்கு எளிமையாக பழைய பாட்டி வைத்தியம் கூட தேவைப்படுகின்றதே!)

6. இருக்கும் இடங்களை ஈரமாக்காதீர். கதகதப்புடன் சற்று சூடாகவே வைத்துக் கொள்வது நல்லது. கிருமிகளைத் தடுக்க அல்லது அழிக்க அதுகூடப் பயன்படும்.

வெந்நீரில் ஒவ்வொரு நாளும் இரண்டு முறை குளிப்பது - உடலைத் தூய்மையாக்கிக் கொண்டு, உடைகளையும் வெந்நீரில் நனைத்து வெளுக்க வைத்துப் பயன்படுத்தலாம். குறிப்பாக உள்ளாடைகளை.

7. உங்கள் உடம்பு என்ன சொல்கிறது என்பதை நன்கு உணர்ந்து கேளுங்கள் - டாக்டர் அறிவுரை களை விட இதுவே முக்கியம் - முதன்மையானது!

உடம்பு 'ஒரு மாதிரியாக‘ இருக்கிறது என்று நீங்கள் நியாயமாக உணர்ந்தால் வெளியே செல்வதைத் தவிர்த்து வீட்டில் ஓய்வு எடுங்கள்.

நீர்ச் சத்து நிறைய தேவை. நீர் ஆகாரங்களை உண்ணுங்கள்.

வெளியில் உண்ணும் பண்டங்களை அறவே தவிர்த்தல் எப்போதும் நல்லது.

பொது விருந்து - மொத்த சமையல் வகையறா விருந்துகளையும் தவிர்த்து எளிய உணவாகவும், சூடானதாகவும் (சுவையை விட சூடு முக்கியம்) சாப்பிடப் பழகுங்கள்.

9. நோய் பற்றி அச்சமோ, கவலை, அளவுக்கு அதிகமான கற்பனைகளிலோ உங்களை ஈடுபடுத்தி - வராத நோய்கள் உங்களுக்கு வந்ததாக கற்பனை பயத்தினால் நடுங்காதீர்கள்!

செய்வன திருந்தச் செய்யுங்கள். எதையும் துணிவுடன் ஏற்பதே அறிவுடைமை; நம் நலவுடை மைக்கு அதுவே முன்னேற்றமும்கூட! மறவாதீர்!!

- விடுதலை நாளேடு, 5.2.20