பக்கங்கள்

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

நடிகவேளும், நடிப்பிசைப் புலவரும்

“உலகெங்கும் பெரியார்" என்ற தலைப்பில் நேற்று (20.8.2017) சென்னை பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில், ஜெர்மனியில் கடந்த மாதம் (ஜூலை) 27, 28, 29 ஆகிய நாள்களில் நடந்த பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டினையொட்டி ஆங்கில கட்டுரைப் போட்டி - பெரியார் தத்துவங்கள் பற்றிய - முதல் பரிசு பெற்ற டாக்டர் திருமதி.பிரியதர்சினி அவர்கள் வந்திருந்தார் (அவர் பேராசிரியர் டாக்டர் நாகநாதன் அவர்களின் மருமகள் - டாக்டர் எழிலனின் வாழ்விணையர்). அவருடன் வந்திருந்த பகுத்தறிவுப் பேராசிரியர் டாக்டர் நாகநாதன் அவர்கள் சென்ற மாதம் வெளியிட்ட "பதிவுகள்" என்ற நூலை எங்களுக்கு அளித்தார்.

இரவே படித்தேன். பல்வேறு சமயங்களில் அவரால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக "பதிவுகள்" என்ற நூலில் 60 சிறுசிறு சுவையான கட்டுரைகள் கதம்ப மாலை போல் உள்ளன!

சுவை, சூடு, சொரணை, சுயமரியாதை - இவைகளை மறந்த மனிதர்கட்கு நினைவூட்டும் அப்புத்தகங்களில் திராவிடர் இயக்கக் கொள்கைகளைப் பரப்பிட உழைத்த, பொருளுதவி முதல் செய்த இரண்டு பெரிய நடிகர்களான நடிகவேள் (எம்.ஆர்.ராதாவும்), நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி ஆகியோர் பற்றி உள்ள இரண்டு கட்டுரைகளில் இரண்டு அரிய தகவல்கள்.

சுவைமிக்கப் பகுதிகள் இதோ:

நடிகவேள் எம்.ஆர்.ராதா பிறந்த நாள் பிப். 21 என்ற தலைப்பில் உள்ள கட்டுரையில் உள்ள ஒரு முக்கிய பகுதி இதோ (பக்கம் 25-26):

1973 ஆம் ஆண்டு தந்தை பெரியார் மறைந்து விடுகிறார். சென்னைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள் சங்கத்தின் சார்பில் பெரியாருக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்த முற்படுகிறோம். இந்து ராம் அன்றைய எஸ்.எப்.அய். இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பின் அறிவிக்கப்படாத வழிகாட்டி.

பெரியாருக்கு நினைவேந்தல் கூட்டம் அமைக்க சி. பி. எம். ஆய்வு மாணவர்கள் சிலர் எதிர்ப்புக் காட்டினர்.

ஆராய்ச்சி மாணவர்கள் சங்கத்தின் செயலர் என்ற முறையில் இச்சங்கம் உடைந்துவிடக்கூடாது என்பதற்காக இளந்தமிழர் என்ற அமைப்பின் சார்பில் இக்கூட்டத்தை நடத்தினோம். பொது மக்களும் கலந்து கொள்ளும் வகையில், மத்திய நூலக மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.

அன்றைய கல்வி அமைச்சர் நாவலர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஏ.எஸ்.கே., நடிகவேள் எம்.ஆர்.ராதா ஆகியோர் கலந்து கொண்டனர். பல்கலைக் கழக, கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என எதிர்ப்பார்த்ததிற்கு மேல் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

நடிகவேள் ராதாவின் பேச்சு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நாவலர், ஏ.எஸ்.கே. ஆகியோர் ஆற்றிய உரைகள் ஒருவரை ஒருவர் விஞ்சும் அளவில் இருந்தன.

நடிகவேள் இவ்வாறு பேசினார்.



"படிக்காத என்னை ஏன் அழைத்தீர்கள் என்று உரையைத் தொடங்கியவர், 1920 களில் பெரியார் முதல் வலம் வருகிறார். அப்போது நாடகக்குழுவில் சிறுவனாக வேலை செய்து வந்தேன். காலையில் நாடகக் குழுவினருக்கு காபி தேநீர் வாங்கச் செல்வேன்.

அய்யர் கடையில் 20 அடி தூரத்திலிருந்து "அய்யா சாமி" என்று உரத்தக் குரலில் கத்துவேன். "டேய் வரேன்டா" என்று கூறிவிட்டுப் பாத்திரத்தில் காபியை அய்யர் எடுத்து வருவார். நான் எடுத்துவந்த பாத்திரத்தையும், பணத்தையும் மண் தரையில் வைக்கச் சொல்வார். நீண்ட கைப்பிடியுடன் உள்ள அவரது பாத்திரத்திலிருந்து காபியை ஊற்றுவார்.
1930களில் தமிழ்நாடெங்கும் பெரியார் மீண்டும் வலம் வருகிறார். காபி கடைக்கு மிக அருகில் செல்ல முடிகிறது. "சாமி காபி கொடுங்கள்" என்று கூறியவுடன் "இதோ வரேன்டா!" பாத்திரத்தையும் பணத்தையும் உணவகத்தின் மேஜை மீது வைக்க முடிந்தது. "டேய்" என்ற ஆணவச் சொல் காணாமல் போய்விட்டது.

1940களில் பெரியார் வலம் வருகிறார். உணவகத்தின் நாற்காலியில் அமர்ந்து கொண்டு "அய்யரே! காபி கொடு, காசு கொடுக்கிறன்" என்று மிடுக்கோடு பேச முடிந்தது. "இதோ தரேன்! வாங்கிக்கப்பா" இப்படியாக, படிப்படியாக அனைவருக்கும் மரியாதையும், சம உரிமையும் கிடைக்கிறது. இதை யார் வாங்கித்தந்தது?

அய்யா சாமி: டேய் வரேன்டா: ... 
சாமி : வரேன்டா 
அய்யரே : வாங்கிக்கப்பா

மாணவர்களே! சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு முறை இந்தச் சொற்களைச் சொல்லிப்பாருங்கள், இந்த ஒலி சத்தத்தின் வேறுபாடுகளில் தந்தை பெரியாரின் உழைப்பும், சீர்திருத்தமும் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொண்டிருக்கும்" என்று குறிப்பிட்டு, அவரின் குரலில், அவருக்கே உரித்தான பாணியில் நடித்துக் காட்டினார். மண்டபமே அதிரும்படியான கையொலி சத்தம்.

நடிகவேள் ராதாவின் பகுத்தறிவுப் பணி என்றும் போற்றப்படும்.

அடுத்து,

நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி 102ஆவது பிறந்த நாள் கட்டுரை (பக்கம் 119-120).

"அறிஞர் அண்ணாவின் கெழுதகை நண்பர் கே.ஆர்.ஆர். திராவிடர் இயக்கத்திற்கு அளித்த தொண்டும், பணியும் என்றும் போற்றத் தகுந்ததாகும்.

அறிஞர் அண்ணா ஆட்சி 1967-இல் அமைந்தவுடன், பச்சையப்பன் கல்லூரியில் ஆண்டு விழாவிற்கு நடிப்பிசைப் புலவர் அழைக்கப்பட்டார்.

கல்லூரி மாணவர் தலைவர் மறைந்த நண்பர் இரா.ஜனார்த்தனம் கே.ஆர். ஆரை அழைத்து வரும் பொறுப்பினை என்னிடம் ஒப்படைத்தார்.

மகிழ்வோடு அப்பொறுப்பை ஏற்று அடையாறில் -கே.ஆர். ஆரின் காந்தி நகர் இல்லத்திற்கு மதியம் 2 மணிக்கே சென்று விட்டேன்.

அண்ணா படித்த பச்சையப்பன் கல்லூரியிலிருந்து வந்துள்ளீர்களா என்று என்னைத் தழுவிக் கொண்டார். வியப்பில் ஆழ்ந்து போனேன்.

எளிமை - அடக்கம் - அன்பு ஆகிய அருங்குணங்கள் ஒருங்கே அமைந்த கே.ஆர். ஆரைப் பார்க்கும்போது அண்ணாவைப் பார்க்கும் உணர்வு ஏற்பட்டது. வாடகை காரில்தான் அழைத்துச் சென்றேன்.

காரில் போகும்போது அண்ணாவின் அறிவாற்றல், திறமைப்பற்றி பேசிக் கொண்டிருந்தார். நான் எதைப் பற்றிப் பேச வேண்டும் என்று கேட்டார். கலை அனுபவங்களைப் பற்றிப் பேசலாம் என்றேன். ஒரு பாட்டுப் பாடலாமா? - என்றார். அய்யா உங்கள் விருப்பம் - என்றேன்.

இந்தப் பாடலுக்கு பின்னால் அண்ணா உள்ளார் என்று கூறிவிட்டு விளக்கம் அளித்தார். சொர்க்கவாசல் படத்தில் ஆத்திகம் எது? நாத்திகம் எது? என்ற பாடலை நான் பாடி ஒலிப்பதிவு செய்யப்பட்டுப் படம் தணிக்கைக் குழுவிற்குச் சென்றது.

தணிக்கைக் குழுவில் நாத்திகம் என்ற சொல்லை நீக்கினால்தான் சான்றிதழ் வழங்கப்படும் என்று கூறினார்கள். படத்தயாரிப்பாளரும் இப்பாடலை நீக்கி விடலாம் என்று கூறினார்.

அண்ணாவை அஞ்சல் அலுவலகம் சென்று -அக்காலத் தொழில்நுட்பப்படி டிரங்க் காலில் அழைத்துச் செய்தியைச் சொன்னேன்.

அறிஞர் அண்ணா ஒரே நொடியில் -ஆகும் நெறி எது - ஆகா நெறி எது-என்பதை அறிந்து கொள்வீரே! புரிந்து கொள்வீரே! என்று மாற்றிப் பாடித் தணிக்கைக்குழுவிடம் ஒப்புதல் பெற முயலுங்கள் என்றார்.

அறிஞர் அண்ணா செய்த மாற்றம் தணிக்கைக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். படம் பெரும் வெற்றியைப் பெற்றது.

இப்போது அண்ணா ஆட்சியில் அத்தடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது என்று கூறிவிட்டு "நாத்திகம் எது? ஆத்திகம் எது? அறிந்து கொள்வீரே! புரிந்து கொள்வீரே" என்ற பாடலை உணர்ச்சியோடு பாடினார். அவையில் கைதட்டல் அடங்கப் பல மணித்துளிகள் ஆயிற்று.

திராவிட இயக்கம் தனது கலைப்பயணத்தில் எவ்வளவு தடைகளைச் சந்தித்து வெற்றியை ஈட்டியுள்ளது என்பதற்கு இது ஒரு சிறு சான்றாகும்.

அறிஞர் அண்ணாவின் பகுத்தறிவுப் பணியையும், நடிப்பிசைப் புலவரின் தகைமையையும் போற்றுவோம்."
- கைம்மாறு கருதா திராவிட இன வான் மழைகள் இவர்கள் இல்லையா?

-விடுதலை,21.8.17

சனி, 19 ஆகஸ்ட், 2017

பயணங்களால் பிறகு ஏது பயன்?


சில வாரங்களுக்கு முன் சுவிட்சர்லாந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாகிய ஜுரிச் (ஞீuக்ஷீவீநீலீ) என்ற அழகிய நகரத்திற்குச் சென்றோம் - ஜெர்மனியில் ஜூலை 27, 28, 29 ஆகிய நாள்களில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டினை முடித்துவிட்டு சாலை வழியே பயணம் செய்து அந்நகரை 6, 7 மணி நேரத்தில் (வழியில் தங்கி உணவு எடுத்துக் கொண்ட நேரமும் இதில் உள்ளடக்கம்) பயணக் களைப்புத் தெரியாத சாலைகள் - இயற்கையின் ரம்மியக் காட்சிகள்!

அந்த நகரத்திற்குள் நுழையும்போது பிற்பகல் 3 மணி இருக்கலாம்!

அன்று ஞாயிற்றுக்கிழமை. கடைகள் எல்லாம் மூடியிருந்தன - ஒரு சில உணவுக் கடைகளைத் தவிர.

எங்களுக்காக பாரிசிலிருந்து காரை எடுத்து வந்து ஜெர்மனி அழைத்துச் சென்றனர் பெரியார் பற்றாளர்களான தோழர் சுசீலா எத்துவால் அவர்களும், தோழர் ரவி அவர்களும்!

ஜுரிச் நகரில் ஒரே அமைதி! எங்கும் அமைதி!! பேசுபவர்கள்கூட - வழி கேட்டு தோழர் ரவி செல்லும் போது கூட எல்லோரும் மிகவும் மெல்லிய குரலில் தான் பேசினார்கள். எங்களை அவர்கள் இல்லத்தில் தங்க வைத்து உபசரித்த தோழர் கைலாயப் பிள்ளை வாசன் அவர்களிடம் இதுபற்றி நாங்கள் கேட்டபோது அவர் சொன்னார்: "இந்த நாட்டில் ஞாயிற்றுக்கிழமையை மிக அமைதி காக்கும் (ஷிவீறீமீஸீநீமீ ஞிணீஹ்) நாளாக" பராமரிக்கிறார்கள்.

மாசுக் கட்டுப்பாடு என்பதும் ஒலிக் கட்டுப்பாடும் சேர்ந்த ஒன்றேயாகும். வீடுகளில் கூட யாரும் பெரும் ஓசை எழுப்ப மாட்டோம், மீறி எழுப்பினால் அபராதமும் போடுவர் அரசும் நகராட்சியும்!

ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுக் கூட்டங்கள் போட்டு, ஒலி பெருக்கி வைத்துப் பேசுவதற்குக் கூட அனுமதி கிடையாது.

வீடுகளில் உரையாடும் போதுகூட மெல்லிய குரலில் குறை ஓசையுடன் தான் பேசிக் கொள்வோம். இந்த ஓசைக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தல் என்பது மாசுக்கட்டுப்பாட்டின் ஓர் அம்சமே; ஓசையெழுப்புதல், அதிக ஒலி செய்தல்கூட ஒழுங்கீனம் மட்டுமல்ல; மாசுக் கட்டுப்பாட்டிற்குக் கீழ்வரும்" என்றார்.

அங்கெல்லாம் கார்களில் செல்லும்போது எங்கும் 'ஹாரன்' சப்தம் கேட்கவே இல்லை; இங்கோ...!

மறுநாள் திங்கள்கிழமை ஆகஸ்ட் 1 ஆம் தேதி அந்நாட்டின் சுதந்திர நாள் கொண்டாட்டம் ஆகும்.

அன்று அதைக் கொண்டாட ஜூலை 31ஆம் தேதி மாலை முதல் பல ஊர்களில் வாண வேடிக்கை, பட்டாசு கொளுத்தல் அனுமதிக்கப்படுகிறது. அதுவும் ஒரு குறிப்பிட்ட மணி நேரங்கள் தான் நடைபெறுகின்றது. பிறகு நிறுத்தி விடுகிறார்கள்!

பொதுவாக நம்நாட்டில்தான் உரையாடலின் போது அதிக ஓசையுடன் பேசும் பழக்கம்.

மேலை நாடு என்ன? ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகளில் கூட மிகவும் மெல்லியக் குரலில்தான் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் பழக்கம் உண்டு.

இங்கோ பட்டாசுகளையும் கூட இரவெல்லாம் வெடிக்கும் நிலையும், பலரது தூக்கத்தையும் கெடுத்து, தேர்வுக்குப் படிக்கும் மாணவ - மாணவிகளுக்குக் கூட பெருந்தொல்லை, அவதியாகவும் இருக்கிறது.

பலரும் நாம் வெளிநாடு சுற்றுலா சென்று காட்சிகளைக் கண்டு களிக்கிறோம், செல்பி எடுத்துக் கொள்ளவும் தயங்குவதில்லை.
ஆனால் அங்குள்ள நல்லவைகளைக் நாம் நம் வாழ்வில் நடைமுறையில் செயல்படுத்த ஏனோ தவறுகிறோம்! பயணங்களால் பிறகு ஏது பயன்?

-விடுதலை,11.8.17

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

ஆளைக் கொல்லும் தனிமை - எச்சரிக்கை!


'தனிமை இனிமை தரும்' என்பது எப்போது, எவருக்கு? - இந்தக் கேள்வி முக்கியம்!
கடுமையான உழைப்பாளிகள், இயக்கங்களில் ஈடுபட்டு ஓய்வறியாது உழைப்பவர்கள் - இவர்களுக்கு தனிமை. அது கூட சில மணி நேரம் அல்லது சில நாள்கள்! தனிமை இனிமை தரும்; ஏன் 'இனிமை' மட்டுமா? ‘வலிமை‘யும் தரும்!

இளைப்பாறுதலில் ஒரு பகுதி என்ற அளவில் மட்டுமே வரையறைக்குட்பட்ட தனிமை விரும்பத்தக்கதே!

ஆனால் எப்போதும் பிறருடன் - நண்பர்கள், தோழர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள் - இவர்களிடையே கலந்து கலகலப்பாகப் பேசி, சிரித்து, மகிழ்ந்து வாழ நாம் அனைவரும் கற்றுக் கொள்வதுடன்; பிறருக்குப் பயன்படும் வகையில் அந்த நட்புறவு பயன்படவும் வேண்டும்; காரணம் மனிதன் ஒரு சமூகப் பிராணி அல்லவா?

'உம்முணா மூஞ்சிகளாகவும்‘, 'சிடுசிடு', 'கடுகடு' என்றே எப்போதும் உள்ளவர்கள், தெருவார்க்கும் பயனற்ற சிறிய 'வீணர்கள்‘ என்பது பலருக்கும் புரிந்தாக வேண்டும்.

எப்போதும் தனிமை என்பது தனிமைச் சிறையாகும்!

தனிமையே எப்போதும் என்பது மன இறுக்கத்தின் ஊற்றுக்கண் ஆகும்!

தற்கொலை உணர்வுக்கும் தூண்டும் - சிற்சில நேரங்களில்.

இன்று வந்த ஆங்கில நாளேடான "டைம்ஸ் ஆஃப் இஃந்தியா"வில் ஒரு வாழ்வியல் செய்தி!

அதன் தலைப்பு என்ன தெரியுமா?

'உடல் பருமன் எவ்வளவு சாவுக்கு அழைப்போ அதுபோன்றதே தனிமையில் கிடப்பதும்!‘

'Loneliness as deadly as obesity' 
'social isolation also tied 
to increased risk of premature death'

சமூகத்தில் ஒதுக்கி ஒருவரை ஒளிமயமாக்கி வைத்தால் அது சாவை விரைவு படுத்தி விடும் அபாயத்தை உருவாக்கி விடும் ஆபத்து! என்று எழுதியுள்ளது!

இது சம்பந்தமானதொரு நீண்டதோர் ஆய்வினை, அமெரிக்காவில் உள்ள பிர்ஹாம் யங் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜுலியானே ஓல்ட் லன்ஸ்டாட்(Julianne Holt - Lunstad) அவர்கள் செய்து மேற்கண்ட கருத்தினைத் தெரிவித்து எச்சரிக்கை வழங்கியுள்ளார்!

இது வயதான முதியவர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் தங்களை அதிமேதாவிகள், தங்கள் தகுதிக்கு ஏற்ப பழகும் தன்மை கொண்டவர்கள் எவருமே இல்லை என்று தலைக்கனத்துடன் தனித்தே ஒதுங்கியிருக்கும் அறிவு ஜீவிகளுக்குத் தக்கதோர் எச்சரிக்கையாகும்!

இரண்டு ஆய்வுகளிலிருந்து இதை நிரூபிக்கும் புள்ளி விவர வகைகளை பேராசிரியர் ஜுலியானே அவர்கள் கூறியுள்ளார்.

அது மட்டுமல்ல; இப்படி தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுதலோ, அல்லது சிறைச் சாலையில் ஒருவரை நீண்ட கால தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதோ அவரது ஆயுளைக் குறைத்து சாவின் விளிம்பில் தள்ளும் மனிதாபிமானற்ற செயலாகும்!

இந்த இடத்தில்தான் நண்பர்கள் அதுவும் நம்பிக்கைக்குரிய நண்பர்கள் - மகிழ்ச்சியை ஏற்படுத்த தேவை! தேவை!

நம்மைச் சுற்றி நல்லவர்களான நண்பர்கள் இருப்பதை விட நமக்கு வேறு நல்ல பாதுகாப்பு கேடயம் வேறு எது?

நாம் அவர்களிடமிருந்து ஏதும் பெறாவிட்டாலும்கூட, நமக்கு அவர்கள் சிறந்த வழிகாட்டுபவர்களாகவும், மகிழ்ச்சி, நல்வழி எது என்று போதித்திடுபவர்களாகவும் இருக்கப் பெரிதும் உதவிடச் செய்யும் என்பது உறுதி!

கைமாறு கருதாத நட்பு வட்டமே நாம் பெறும் செல்வங்களில் தலையாய செல்வம்! எனவே தனிமையைத் தவிர்த்து நீண்ட காலம் வாழலாம்!
-விடுதலை,7.8.17