பக்கங்கள்

திங்கள், 11 மார்ச், 2019

கலைஞரின் பார்வையில் வாளேந்திய வீரத்தாய் இதோ!



கடலூரில் அய்யாவின்மீது செருப்புப் போடப்பட்ட இடத்தில்  எழுப்பப்பட்ட சிலை அருகே - நெருக்கடி காலம் முடிந்து,  பெரியார் நூலகம் திறப்பு விழா 1977 - செப்டம்பரில்  நடைபெற்றது.  அன்னையாருக்கு வெள்ளி வீரவாள் பரிசளிப்பும் நடைபெற்றது. எதிர்க் கட்சித் தலைவர் கலைஞர் கலந்து கொண்டு ஆற்றிய சொற்பொழிவு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வைர வரிகளின் ஒளியாகும்.

இதோ, அப்படியே தருகிறோம். கலைஞர் அன்னை யாரின் தொண்டறத்தையும், வீரத்தையும் எப்படி மலர்ந்த நினைவுகளுடன் வர்ணித்தார். படியுங்கள் - சுவையுங்கள்.

வீணை நரம்பினிலே இசை துடிக்கும்


மானம் மானம் என்றே முழங்கும்


தென்னாற்காடு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கழகத் தலைவர் அம்மா அவர்களிடம் வாள் ஒன்றினை பரிசாக அளித்து, கலைஞர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

"இந்த விழா எழுச்சி வாய்ந்தது. உணர்ச்சியும் உற்சாக மும் மிக்கது, எதிர்கால தமிழ் இனத்திற்கு நம்பிக்கை ஊட்டவல்லது என்றெல்லாம் கூறத்தக்க ஒரு பெரும் விழாவாகும்.

இந்த விழாவிலே உரையாற்றி இருக்கின்ற மதிப் பிற்குரிய அம்மையார் அவர்களும் மற்றும் திராவிடர் கழகத்தினுடைய பொதுச் செயலாளர் வீரமணி, ஏனைய நண்பர்கள் அனைவரும் தமிழ்ச் சமுதாயம் வீறுநடை போட வேண்டும், ஒற்றுமையாக இந்தச் சமுதாயம் வாழ்ந்திட வேண்டும் என்ற அரிய கருத்துகளை இங்கே வழங்கி இருக்கிறார்கள்.

என்னுடைய கையால் ஒரு வாளினை அம்மையார் அவர்களுக்கு தென்னாற்காடு மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் வழங்கிய நிகழ்ச்சியும் இங்கே நடைபெற்றது.

தாய்க்குலம் கையிலே வாள் ஏந்துவது என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலே விந்தையான ஒரு செய்தி அல்ல.

புறநானுற்றுத் தாயினுடைய வீர வரலாறுகளை யெல்லாம் இலக்கியங்களிலே படித்த நமக்கு தாய்க்குலம் கையிலே வாள் ஏந்துவதா என்ற அய்யம் ஏற்பட நியாயமே கிடையாது. இன்றைக்கு வேண்டுமானால்  நம்முடைய தமிழ்நாட்டுத் தாய்மார்கள் "வாள் ஏந்துவது பெண்டிற்கு அழகல்ல. அது ஆடவர்க்கே உரிய ஒன்று" என்கின்ற நிலைக்கு ஆளாகி இருந்தாலும், நான் குறிப்பாகவும் சிறப்பாகவும் சொல்ல வேண்டுமேயானால் தொன்மைக் காலத்திலே - பழந்தமிழர் காலத்திலே ஆடவர்களை வீரர்களாக ஆக்கிய பெருமைகூட தாய்க்குலத்திற்குத்தான் உரிய பெருமையாக இருந்தது.

இந்த வீரவாளிளை திராவிடர் கழக நண்பர்கள் தந்து அதனை நான் பெற்று, அன்னையார் அவர்களுடைய கையிலே வழங்கிய நேரத்தில் 'குடிஅரசு' அலுவல கத்திலே   1944-45ஆம் ஆண்டுகளில் துணை ஆசிரி யனாக நான் பணியாற்றியபோது பெரியாருடைய பள்ளியிலே பயின்று பெரியாருடைய இல்லத்திலே உணவருந்தி, நம்முடைய அன்பிற்குரிய அன்னை மணியம்மையார் அவர்கள் உணவு பரிமாறி அதனை அருந்திய அந்தக் காட்சிகளும், 'குடிஅரசு' அலுவலகத்தி லிருந்து எழுதிய 'கவிதை அல்ல' என்கின்ற ஒரு கவிதையும் எனக்கு நினைவுக்கு வந்தன.

இந்த வாளை கண்ட மாத்திரத்தில் - வாளை அம்மையார் அவர்களுடைய கரத்திலே தந்த மாத்திரத் தில் - அந்த வாளை அவர்கள் ஓங்கி உயரப் பிடித்துக் காட்டினார்களே, அந்த நேரத்தில் நான் 1944ஆம் ஆண்டில் எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது.

"குடிசைதான்! ஒரு புறத்தில்  கூரிய வேல்வாள்  வரிசையாய் அமைத்திருக்கும்  வையத்தைப் பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும்  வடித்துவைத்த படைக்கலம்போல் மின்னும்; மிளிரும் புலியின் குகையினிலே அழகில்லை - புதுமையல்ல  கிலியும் மெய் சிலிர்ப்பும் கீழிறங்கும் தன்மையும்  தலைகாட்டா மானத்தின் உறைவிடம் - மறவன் மாளிகை இல்லத்து வாயிலிலே கிண்ணத்துச் சோறோடு  வெல்லத்தைச் சிறிது கலந்து வயிற்றுக்குள் வழியனுப்ப  பொக்கைவாய் தனைத்திறந்து பிடியன்னம்  எடுத்துப் போட்டாள் பெருநரைக் கிழவிஒருத்தி  ஓடிவந்தான் ஒரு வீரன்  ஒரு சேதி பாட்டி என்றான்  ஆடிவந்த சிறுமிபோல் பெருமூச்சு வாங்குகின்றாய்  ஆண்மகனா நீ தம்பி  மூச்சுக்கு மூச்சு இடைவேளை ஏற்படட்டும்  பின் பேச்சுக்குத் துவக்கம் செய் என்றாள் அந்தக்  கிண்டலுக்குப் பேர்போன கிழட்டுத் தமிழச்சி!  வேடிக்கை நேரம் இதுவல்ல பாட்டி - உன் வாடிக்கைக் கேலியை விட்டுவிடு.  மடிந்தான் உன் மகன் களத்திலென்றான்

மனம் ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க்கிழவி ஒருமுறை

தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு

களமும் அதுதான்

காயம் மார்பிலா? முதுகிலா? என்றாள்

முதுகி லென்றான்

கிழவி துடித்தனள்; இதயம் வெடித்தனள்;

வாளை எடுத்தனள்!

முழவு ஒலித்த திக்கை நோக்கி

முடுக்கினாள் வேகம்

கோழைக்குப் பால் கொடுத்தேன்

குப்புற வீழ்ந்து கிடக்கும்

மோழைக்குப் பெயர் போர்வீரனாம்

முன்பொருநாள்

பாய்ந்துவந்த ஈட்டிக்குப் பதில் சொல்ல மார்பைக் காட்டிச்

சாய்ந்து கிடந்தார் என் சாகாத கண்ணாளர். அவருக்குப் பிறந்தானா?

அடடா மானம் எங்கே?

குட்டிச் சுவருக்கும் கீழாக வீழ்ந்து பட்டான்.

இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும்

இங்கு வீணை நரம்பினிலே இசை துடிக்கும்

அதுவும் மானம் மானம் என்றே முழங்கும்

மதுவும் சுராவும் உண்டுவாழும் மானமற்ற வம்சமா

ஏடா! மறத்தமிழ்க் குடியிலே மாசு தூவிவிட்டாய்

மார்பு கொடுத்தேன் மகனாய் வளர்த்தேன்

தின்றுக் கொழுத்தாய் திமிர்பாய்ந்த தோள்களெங்கே?

தினவெடுக்கவில்லையோ? அந்தோ!

வேலுக்கு வழி சொல்ல வகையற்ற கோழையே

என் வீரப் பாலுக்கு வழி சொல்வாய்!!

என்று கதறினாள் எண்பதை நெருங்கிய ஏழைக் கிழவி.

சென்றங்குச் செருமுனையில் சிதறிக்கிடந்த

செந்தமிழ்க் காளைகளைப் புரட்டிப் பார்த்தாள்

அங்கு நந்தமிழ் நாட்டைக் காக்க ஓடிற்று ரத்த வெள்ளம்!

பிணக்குவியலிலே பெருமூச்சு வாங்க நடந்தாள்

மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை

மகன் பிறந்த போதும் அவள் மகிழ்ச்சிக்கு எல்லையுண்டு

அவன் இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி!

இதைக் கண்டாள் - இதயங் குளிர்ந்தாள்!

எதைக் கண்டாலும் இனிக் கவலை இல்லை

என் மகன் வீரனாய் இறந்தான் என்றாள்.

அறுத்தெறிய இருந்தேன் அவன் குடித்த மார்பை

அடடா! கருத்தெரியப் பொய் சொன்ன கயவனெங்கே?

வாளிங்கே! அவன் நாக்கெங்கே?

என்று கேட்ட புறநானூற்றுத் தாயினுடைய கவிதை வரிகள் கிட்டத்தட்ட முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய வரிகள் - இன்றைக்கு அம்மையார் அவர்கள் அந்த வாளை கையிலே வாங்கி உயரப் பிடித்த நேரத்தில் நினைவுக்கு வந்தன.

புறநானுற்றுத்தாய் தன்னுடைய மகனை வீரனாகத்தான் வளர்த்தாள்.

போர்க்களத்திலே கணவன் மாண்டு, தமையனும் மாண்டு, தந்தையும் மாண்டு அனைவரும் மாண்ட பிறகு கூட தன்னுடைய ஒரே மகனுக்கு தலைசீவி பொட்டிட்டு வாளைத் தந்து "சென்றுவா மகனே! செருமுனை நோக்கி" என்று சொன்ன தாய்க்குலம் தமிழ்க் குலம்.

"அம்மா உன் மகன் எங்கே?" என்று கேட்ட மகனுடைய நண்பனைப் பார்த்து "புலி எங்கே போயி ருக்கிறதோ தெரியாது. புலி வாழ்ந்த குகை இதோ இருக்கிறது" என்று தன்னுடைய வயிற்றைக் காட்டினாள் ஒரு தாய் என்ற சங்ககால இலக்கி யங்களெல்லாம் நம்முடைய வீரக் காதையை தமிழனுடைய வரலாற்றை பறைசாற்றிக் கொண்டிருப்பவையாகும்.

ஆனால், இடைக்காலத்திலே வந்து புகுந்த கருத் துகள்; இடைக்காலத்திலே யாரும் அறியாமல் வந்து நுழைந்துவிட்ட எண்ணங்கள் அந்த வீரத்தை நிலை குலைத்துவிட்டன."

- கடலூர் விழாவில் கலைஞர், விடுதலை, 11.09.1977
-  விடுதலை நாளேடு, 10.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக