பக்கங்கள்

மனிதநேயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனிதநேயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 டிசம்பர், 2020

இருவர் நிகழ்வுகள் - மூன்று பாடங்கள்!



மதுரை மாநகரிலிருந்து ஒரு செய்தி!


27.11.2020 அன்று ஒரு வயது முதிர்ந்த பெரியவர் நடந்து செல்லுகிறார் - கையில் ஒரு செருப்புடன். காரணம், மற்றொரு செருப்பு முந்தைய ஆட்டோவில் பயணம் செய்தபோது மற்றொரு காலிலிருந்து நழுவி வழியில் எங்கோ விழுந்து விடுகிறது! அவர் நடந்து சென்று விழுந்து விட்ட அந்த மற்றொரு செருப்பைத் தேடிக் கண்டுபிடித்தார். காலில் அணிந்து கொண்டே நடந்து செல்லுகிறார்.


ஓர் ஆட்டோ ரிக்ஷாவை ஒருவர் ஓட்டி வரும் போது, நடந்து வரும் இவரைப் பார்த்து, பார்த்த முகமாக உள்ளதே என்று நினைவலைகளை எழும் பச் செய்கிறார். அவர் இரண்டுமுறை எம்எல்.ஏ.வாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் என்.நன்மாறன் என்பது புரிந்துவிட்டவுடன், தனது ஆட்டோ ரிக்ஷாவை திருப்பி -  பானகல் சாலையில் ‘நடந்து வரும் அவர்' அருகே நிறுத்தி ‘அய்யாஇதில் ஏறிக் கொள்ளுங்கள். நான் கொண்டு போய் விடுகிறேன் - கருப்பையூரணிக்கா? கொண்டு போகி றேன், ஏறி அமருங்கள்' என்று கூறுகிறார்!


உடனே அந்தப் பெரியவர் ‘தன்னிடம் ரூபாய் 20 தான் உள்ளது. ஆகவே அதற்கு மேல் தர வாய்ப்பில்லை' என்று தயக்கமின்றி, கூச்சமின்றி - தன்னிலை விளக்கம் தருகிறார்.


‘பரவாயில்லை. நீங்கள் ஏறி உட்காருங்கள் அய்யா' என்றார் ஓட்டுநர்.


தான் ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் - ஊரறிந்த கொள்கைப் போராளி - என்ற அடை யாளத்தை அவரும் சொல்லவில்லை. இடம் வந்தது. இறக்கி விட்டவுடன், ரூபாய் 20அய் அவர் தர முயலும் போது, ‘அய்யா, நீங்கள் இதைத் திரும்பும் பயணத்திற்கு வைத்துக் கொள்ளுங்கள் - உங்களிட மிருந்து பணம் வாங்க நான் விரும்பவில்லை' என்று அன்பொழுகக் கூறிவிட்டு, அவருடன் ஓர் ஒளிப்படம் எடுத்துக்கொண்டு தனது ஆட்டோவை ஓட்டிச் செல்லுகிறார். அப்போது அந்த ஆட்டோ ஓட்டுநர் சென்னார், ‘இவர் போன்றவர்களுக்கு உதவும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிட்டியதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்' என்றார்.



ஒரு கையில் ஒரு செருப்புடன் மறு செருப்பைத் தேடிக் கண்டுபிடிக்க நடந்து சென்றவர் வேறு யாருமில்லை - இரண்டு முறை சட்டமன்ற உறுப் பினராக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழரும், எளிமையின் சின்னமுமான தோழர் என்.நன்மாறன் அவர்கள்தான்! நகைச்சுவையாகப் பேசி சிந்திக்க வைக்கும் சிறந்த கொள்கை வீரர்!


ஆட்டோவை ஓட்டி அன்பும், பண்பும் காட்டிய தோழர் பெயர் பாண்டி. அவர் சொல்கிறார், ‘கொள்கை ரீதியாக நான் அவரிடமிருந்து மாறுபடு கிறவன். நான் பசும்பொன் தேசிய கழக இளைஞரணி பொறுப்பாளர் என்றாலும், அவரது (நன்மாறன் அவர்களது) எளிமை, நேர்மை மனித நேயம் என்னை ஈர்த்ததால் நான் மனநிறைவுடன் அவருக்கு உதவிடும் அரிய வாய்ப்பைப் பற்றிக் கொண்டேன்' என்று கூறியுள்ளார்.


இச்செய்தி சமூக வலைதளங்களில், ஊடகங்களில் பரவியுள்ளது. (இந்தச் செய்தியை 4.12.2020 ‘இந்து' நாளேட்டில் திரு.சுந்தர் என்ற செய்தியாளரான நண்பர் தந்துள்ளதைப் படித்தே நான் இதை உங்களுக்குத் தரும் வாய்ப்பு ஏற்பட்டது).


இந்த இருவரிடமிருந்து நாம் கற்க வேண்டிய அரிய பாடங்கள் மூன்று:



  1. எளிமை - இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ஒருவர் - கம்யூனிஸ்ட்கள் தங்களது சட்ட மன்ற சம்பளத்தைக் கூட கட்சிக்கே கொடுத்து, அவர் கள் தரும் ஒரு தொகையை மட்டுமே பெறும் அத்த கைய எடுத்துக்காட்டான தோழர்கள். அவரிடம் பையில் 20 ரூபாய் தான் இருந்துள்ளது. அது வெளி யில் கிளம்பி திரும்ப வீடு சேரும் வரையில் செல வுக்கு இருந்த "பெரிய தொகை!"


- இன்றுள்ள டாம்பீக பொதுவாழ்க்கை வாண வேடிக்கை வெளிச்சத்தில் இதை எளிதில் நம்பவே முடியாது பலரால்.


இப்படியும் எளிமையும், நேர்மையும் கொண்ட கொள்கை லட்சிய உணர்வாளர்கள் வாழத்தான் செய்கிறார்கள்.



  1. அதுபோல அந்த ஆட்டோ ஓட்டுநர் நண்பர் பாண்டி போன்ற கருணையும், அன்பும் பொங்கும் வாழ்க்கை நெறியாளர்கள். கொள்கையால் வேறு பட்டாலும், மனித நேயம் அதனினும் பெரிது - தாண் டியது என்பதை அவரது சீரிய நடவடிக்கை மூலம் சமூகத்திற்கு உணர்த்தி இருக்கிறார்.


பாண்டி அவர்களை வெகுவாகப் பாராட்டுகி றோம் - கொள்கைக்கு அப்பாற்பட்டு!



  1. எளிமை, நேர்மை, அன்பு, கருணை என்றுமே மனிதத்திடமிருந்து வற்றி விடாது என்பதே பேருண்மை!


வளரட்டும் இந்தப் பண்பாடு!


செவ்வாய், 24 நவம்பர், 2020

மதுரை மண்ணின் ஒளிரும் மனிதநேய வைரம்!

 

June 6, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

மதுரை அண்ணாநகரில் முடிதிருத்தகம் நடத்தும் மோகன் - அவர்களது மகள் நேத்ரா. இவர் தனது மகளின் படிப்புச் செலவுக்காக 5 லட்ச ரூபாயைச் சேமித்து, வங்கியில் வைத்திருந்தார்.

நேத்ரா, அந்தப் பணத்தை கரோனாவினால் பாதிக் கப்பட்ட ஏழை மக்களுக்கு நிவாரணமாய் வழங்கும்படி தனது தந்தையை வற்புறுத்தினார் (8ஆம் வகுப்பி லிருந்து 9ஆம் வகுப்புக்குச் செல்கிறார் நேத்ரா - இவருக்கு 13 வயது).

இவரது தாராளமான - மனிதநேய கொடைச் சிந்தனையைப் பாராட்டி அய்.நா. மன்றத்தின் ஒரு அங்கமான அமைதி மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வறுமை ஒழிப்புக்கான நல்லெண்ணத் தூதுவராக நியமித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதன்மூலம் ஜெனிவாவில் (சுவிட்சர்லாந்து) உள்ள அய்.நா. பிரிவு சபையில் வறுமை ஒழிப்பு பற்றி பேசுவதற்கான கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்திய பிரதமர் மோடி, தனது வானொலி உரையில் நேத்ராவின் பண்பைப் பாராட்டி யுள்ளார்.

இந்த சிறப்பு பெற்ற நேத்ரா, "எனது விருப்பம் என்னவென்றால் ஜாதி, மதம் இல்லா உலகம் உருவாக வேண்டும், எல்லோரும் தங்களது ஆடம்பரங்களை குறைத்துக் கொண்டு ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். நல்லெண்ணத் தூதராக அய்.நா.வால் நியமிக்கப்பட்ட தனக்கு அவர்கள் தந்த 1 லட்ச ரூபாய் நன்கொடையை நல்ல விஷயத்திற்கு செலவழிப்போம்" என்று கூறியுள்ளார்!

என்னே முதிர்ச்சி, எத்தகைய மனிதநேயம்!

இந்த 'குமரகுருபர'ச் செல்வியின் அறிவுக் கூர்மை மிகவும் வியக்கத்தக்கது என்பது ஒருபுறம் இருந்தாலும், இவர் ஒரு எளிய மிகவும் பிற்படுத்தப்பட்ட முடிதிருத் தும் சமுதாயத்தவரின் மகள் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.

"அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்" (குறள் 997)

எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், மக்களின் தேவை அறிந்து உதவ வருவதுதான் மக்கள் பண்பு என்கிறார் வள்ளுவர்.

 அதைப் பிரதிபலிக்கக் கூடிய இந்த ஏழைப் பெண்ணின் உள்ளம் எவ்வளவு விசாலமானது - மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டானது! தனது கல்விச் செலவுக்கான சேமிப்பு முக்கியமா? அல்லது அல்லற் பட்டு ஆற்றாது அழுது கண்ணீர் விடும் ஏழை, எளிய வர்களுக்கு உதவுவது முக்கியமா என்ற ஒரு கேள்வி எழுப்பினால் - பெரும்பாலோர் தங்கள் சுயநலம் சார்ந்தே - "அய்யய்யோ இந்த கரோனா காலத்தில் - அதுவும் 5 லட்ச ரூபாய், குருவி சேர்த்ததுபோல் சேர்த்த தொகையையா செலவிடுவது?" என்றே நினைப்பர் - அது சராசரி மனிதர்களுடைய நினைப்பு!

ஆனால், நண்பர் மோகன் அவர்களின் அன்பு மகள் நேத்ரா - விழிகள் திறக்காதவர்களுக்கும், வழி தெரியாமல் பணத்தைப் பூட்டி வைத்திருக்கும் பல ‘‘சீமான்கள் - சீமாட்டிகளுக்கு'' உதிக்காத மனித நேயத்தோடு துயர் துடைக்க ஓடோடி உதவிட, தனது தந்தைக்கே 'உபதேசம்' செய்த 'குமரகுருபர'ச் செல் வியை உலகமும், பிரதமரும், மற்றவரும் பாராட்டிப் பெருமை சேர்த்தாலும் அது அக்குடும்பத்திற்கு மட்டுமா பெருமை? மதுரைக்கு மட்டுமா பெருமை? தமிழ்நாட்டிற்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும் தனிப் பெருமையாகும்!

அதன் கொடைச் சிந்தனை, வறுமையைப் போக்கு வதில் ஈத்துவக்கும் இன்பம் என்பதைவிட அவருடைய விருப்பம் என்னவென்று கேட்டவர்களுக்கு அவர் கூறிய பதில் - பொறிதட்டும் வகையில் - சமூக நோய் எதுவோ அதை அந்தப் பிஞ்சு உள்ளமானாலும் முதிர்ச்சியால் முற்றிய பக்குவப்பட்ட சிந்தனையை வெளிப்படுத்தியது!

"ஜாதி, மதம் அற்ற உலகம் வர (காண) வேண்டும்" இதில் தந்தை பெரியாரின் கொள்கை வெற்றியின் வெளிச்சம் தெரியவில்லையா? தமிழ்நாடு பெண்களை எப்படிப் பக்குவப்படுத்தி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!

பெண்களைப் படிக்க வைக்க மறுக்கும் ஜாதி, மத, மனுதர்ம சமுதாயத்தில், இப்படி ஒரு புரட்சி சிந்தனை மொட்டாக மலரும் ஒரு குறிஞ்சி மலருக்கு (பெரியாரின் கொள்ளுப் பேத்திக்கு) நமது வாழ்த்துகள்!

இப்படி வெளியே தெரியாத புதிய இளைஞருலகம் புரட்சியின் பூமராங்காக எங்கெங்கோ நம்மண்ணில் இருக்கவே செய்கின்றன!

வாழ்க, வாழ்க!

நேத்ராவின் பெற்றோர்களுக்கும் நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் - பாராட்டுகள். 'குமரகுருபர'ச் செல்வி - இளம் வயதில் ஆசிரியை' - பெற்றோருக்கும் கூட என்பதே பொருள்.