பக்கங்கள்

எளிய வாழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எளிய வாழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

எளிய வாழ்வே என்றும் இனிமை (2) -ஆசிரியர் கி.வீரமணி

 

பல்கலைக் கழகத்தில் இடைநிலை வகுப்பு படிக்கும்போது, எனது  ஆங்கிலப் பாட புத்தகம் ஒன்றில் இடம் பெற்ற ஒரு கதை.மனிதனின் பேராசைக்கு மிக விளக்கம் தந்த பாடம் – ரஷ்ய அறிஞர் லியோ டால்ஸ்டாய் அவர்களது சிறுகதை…

‘ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் (காணி) தேவை?’ என்ற தலைப்பில் (How much land does a man require?)

ஒரு நாட்டின் அரசர் ஓர் அறிவிப்பு தருகின்றார்.

காலை சூரிய உதயம் முதல் மாலை சூரியன் மறையும் வரை, எனது நாட்டில் நிலங்களைச் சுற்றிச் சுற்றி அயராமல் ஓடுபவருக்கு அந்த நிலப்பரப்பு முழுவதும் இலவசமாக தரப்பட்டு, உரிமையாக்கப்படும் என்ற தண்டோரா போட்டு அறிவிக்கச் செய்தார்.

பேக்காம் என்ற ஒரு (ரஷ்ய) விவசாயி இதைக் கேட்டு மகிழ்ச்சியுடன் மற்றவர்களோடு சேர்ந்து ஒடத் தொடங்கினார். பலரால் முடிந்தஅளவு ஓடி முடித்துக் கொண்டனர்; ஆனால் பேக்காம்  ‘அதிக அளவு பரப்பு நமக்கு கிடைக்க, நிறுத்தாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தால் மேலும், மேலும் அதிகப் பரப்புள்ள நிலத்தைப் பெறலாமே’ என்ற பேராசையில் தண்ணீர்கூட அருந்தாமல் மாலை வரைஓடி, சூரியன் மறையும்போது ஓடுவதை நிறுத்தியவுடன், கீழே சாய்ந்து விட்டார்.

எல்லோரும் கைதட்டினர்; அந்த வெற்றி வீரனை எழுப்பிவிட நடுவர் சென்றார். மூச்சுப் பேச்சில்லை; மரணம்தான் அவருக்குக் கிடைத்த பரிசு!

அவரை 6 அடி நிலத்தில் ஒரு குழி தோண்டி புதைக்கிறார்கள் – துக்கத்துடன்!

இப்போது சொல்லுங்கள் விடையை!

ஒரு மனிதனுக்கு எவ்வளவு தேவையான நிலம்?

அவன் ஓடி ஓடிச் சேர்த்த நிலமா? ஆறடி மண்ணா?

வாசக நண்பர்களே,

அதுகூட பழைய கதை. இப்போது அந்த ஆறடி கூடத் தேவையில்லை! எரித்த பிறகு கிடைக்கும் சாம்பலை நம்பிக்கையாளர்கள் சிலர் ‘‘அஸ்தி’’யாகச் சின்ன பாத்திரத்தில் வைத்து அவற்றை கும்பிடுகின்றார்.

பகுத்தறிவுவாதிகளோ, அதற்கும் தேவையின்றி மருத்துவமனைக்குப் பயன்படுவதற்கு மருத்துவர் களுக்கு பாடக் கருவியாகத் தங்கள் உடலை நன்கொடை வழங்குகின்றனர்!

1976இல் மிசா கைதியாக சென்னை சிறைகளில் நான் இருந்தபோது, பல ஆயுள் தண்டனைக் கைதிகள்  – எங்களுக்குச்சேவை செய்யும் வகையில் பழகுவார்கள்; அவர்களில் கோவில்பட்டியைச் சார்ந்தஒரு பெரியவர் என்னிடம் புத்தகங்களைப் பெற்று, படித்து விட்டு, திரும்ப நன்றிகூறி கொடுப்பார். பண்புடன், பணிவுடன் நடந்து கொள்வார். ‘சிறை மொழியில் காணிக்கை வார்டன்’  – ‘Convict Warden’ என்ற சொல்லின் மருவு அது!

நான் ஒரு நாள் கேட்டேன்… ‘‘ஏங்க நீங்க இவ்வளவு நல்ல மனிதராக இருப்பதை என்னால் தெரிந்துகொள்ள முடிகிறது… பின் எப்படி, ‘என்ன குற்றம் செய்து  கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றீர்கள் என்று சொல்ல முடியுமா?’’ என்று கேட்டேன்.

அதற்கு அவர் சொன்னார் ‘‘எல்லாம்  ‘க்ஷணநேரக் கோபம்’ தான்! என் மனைவியைப்பற்றி ஒருவன் என் முன்னாலே இழிவுச் சொல் சொன்னதால் வந்த கோபம், ஆத்திரத்தினால் குத்தி விட்டேன்;  செத்து விட்டான்’ என்ற கதையை கண்ணீர் ‘பொலபொல’வென விழும் நிலையில் கூறினார். அதன் பிறகு திருக்குறளை இங்கே வந்து படித்து வருகிறேன்’’ என்றார்.

இப்படிப் பல. எனவே நமது இன்பமும், துன்பமும் நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் மனநிலையைப் பொறுத்ததே!

தீதும் நன்றும் ‘பிறர் தரவாரா’. எனவே மூன்று ‘‘நஞ்சுகளை’’ முறிப்பதற்கு முயன்று பாருங்கள். நானும்கூட முயன்று கொண்டே இருக்கிறேன். மறந்து விடாதீர்கள்; அதே சமயம்

கோபப்படுவதில்கூட இரண்டு வகை உண்டு.

தேவையான கோபம் (நியாயமான கோபம்)

தேவையற்ற கோபம் (அர்த்தமற்ற கோபம்)

ஒரு மனிதனின் நியாயங்கள் அநியாயமாகப் பறிக்கப்படும்போது,  அது தனி மனிதக் கோபமாக இல்லாமல் சமூகக் கண்ணோட்டத்தில் இருக்கும் அநியாயங்களை எதிர்க்கும் சமூகக் கோபமாக உருமாறினால், அதைவிட மனித சமூகத்திற்கு வேறு விடியல் ஏது?

யோசியுங்கள்!

-விடுதலை நாளேடு, 11.8.26


திங்கள், 10 ஆகஸ்ட், 2026

எளிய வாழ்வே என்றும் இனிமை (1)

 

வாழ்வியல் சிந்தனைகள்

‘ஜென்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள புத்தகத்தினை – ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மிக அருமையாக – தமிழின் தலைசிறந்த மொழியாக்க வல்லுநர் திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்கள். ‘எளிமையாக வாழும் கலை’ என்ற தலைப்பில் 2021இல் வெளியிடப்பட்ட (இந்நூலின் ஆங்கிலப் பதிப்பு 2019இல் வெளிவந்தது) நூலை மறுவாசிப்புச் செய்து மகிழ்ந்தேன்.

அன்றாட வாழ்வியல் புத்தரது அறிவுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.  (பின்னால் அவரையே கடவுளாகி வழிபாட்டுக்குரியவராக்கி சடங்கு, சம்பிரதாய சிறைக்குள் ‘பவுத்தம்’ என்ற புத்த மார்க்கத்திற்குள் அடைத்து விட்டனர்.  அதற்கு மூலகாரணம் யார், எது என்பது உலகறிந்த செய்தி).

பெரிதும் தெம்பூட்டும் வகையில் நமது வாழ்க்கைப் பாதை அமைய வேண்டுமானால் அதற்கு பெரிய பெரிய திட்டங்களைத் தீட்டிட வேண்டாம்.

நமது மனதை நாம் சீர்படுத்தி செப்பனிட்டுக் கொண்டாலே போதும்;

அதற்கு முக்கியம் – அடிப்படை தன்னம் பிக்கையாகும்.

‘எளிமையான வாழ்க்கையே நமக்கு என்றும் ஏற்றம் தரும் என்பதை நம்மில் பலரும் மறந்து விடுகிறோம்.

‘படாடோபம்’, ‘பிறர் மெச்ச வாழ வேண்டும்’ என்ற பேைதமை நம்மை அலைபாயும் மனதாக அலைக்கழிக்க வைக்கிறது.

இந்த நூலில் அதன் ஆசிரியர் ஷன்மியோ மசுனோ, ஜப்பானின் 450 ஆண்டுகள் பழைமையான ஜென் புத்தக்  கோவிலின் தற்போதைய  தலைமைத் துறவியாக இருந்து வருகிறார்.

பல பரிசுகளைப் பெற்றுள்ள அவர்  உலகெங்கும் உள்ள பிரபல பல்கலைக் கழகங்களில், குறிப்பாக ஹார்வேடு கிராஜூவேட் ஸ்கூல்  ஆஃப் டிசைன், கார்னெல் பல்கலைக் கழகம், பிரவுண் பல்கலைக் கழகம் ஆகிய   கல்வி நிலையங்களில்  நிகழ்த்திய சொற்பொழிவுகள் குறிப்பிடத்தக்கவையாகும்.

‘‘உங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றுவது கடினமாக இருக்க வேண்டியதில்லை. அதற்கு உங்களுடைய பழக்கங்களிலும், உங்களுடைய கண்ணோட்டத்திலும் ஒரு சில நுண்ணிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் போதும்’’.

‘‘அடுத்தவர்களுடைய விழுமியங்களால் நீங்கள் அலைக்கழிக்கப்படாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

தேவையற்ற கவலைகள் உங்களை வதைக்க அனுமதிக்காதீர்கள் – மாறாக, பயனற்ற அனைத்து விஷயங்களையும் உதறித் தள்ளி விட்டு,  மிக எளிமையான வாழ்க்கை வாழ முயற்சியுங்கள்’’ என்கிறார்.

வாசகத் தோழர்களே, நமது எளிமை நமக்கானது. அது விளம்பர வெளிச்சத்திற்குப் பயன்படும் எளிமையாக ஆகவே கூடாது!

இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் நம் வாழ்க்கை,  நாம் முடிவு செய்து, வாழ்ந்து காட்டும் வாழ்க்கையாக இல்லாமல், பெரிதும் ‘பிறருக்காகவோ’, ‘ஊருக்காகவோ’, ‘உலகத்திற்காகவோ’ நம்மை, நமது ‘சுயத்தை’ இழந்து – சொக்கட்டான் ஆட்டத்தில் காய்களை உருட்டுவது போன்று உருட்டப்படும் தன்மையில் உள்ளது. தெரிந்தோ தெரியாமலோ, புரிந்தோ புரியாலோ, அறிந்தோ அறியாமலோ வாழ்ந்து கொண்டிருக்கும் மன நிம்மதியற்ற வாழ்க்கை.

அதற்குப் பல காரணங்கள் உண்டு என்றாலும், பிறருடன் ஒப்பிடும் முறை என்ற ‘பலி பீடத்தில்’ நம்மை நாமே நிறுத்திக் கொண்டு, பிறர் நம்மை பலியிடாமலே நாமே நம்மை பலியிட்டுப் பாழாகிறோம்.

நுகர்வோர் கலாச்சார காலத்தின் உச்சத்தின் விளைவாக, கடன் வாங்கியாவது,  பிறரை வியப்படைய வைக்க, நமக்குத் தேவையில்லாவிட்டாலும்கூட ஒரு ‘டாம்பீக வாழ்க்கை’ என்ற வெளிச்சத்தில் நின்று காட்டப் படுகின்றது.

அந்த நூலில், ஓர் எளிய அறி வுரையை ‘ஜென்மாஸ்டர்’ கூறுகிறார்.

அறவுரைகளாகவும் அவை பளிச்சிடுகின்றன!

‘மூன்று நஞ்சுகளுக்கு’ முழுக்குப் போடுங்கள்! என்ற தலைப்பில் குறிப்பிடுகையில்…

மூன்று நஞ்சுகள்:

  1. பேராசை
  2. கோபம்
  3. அறியாமை

நாம் பேராசையால் தாக்கப்படும் போது, நாம் விரும்புகின்றவற்றை நாம் கைவசப்படுத்திய பிறகும்கூட, நமக்கு இன்னும் அதிகமானவை வேண்டும் என்ற எண்ணம்தான் நமக்கு ஏற்படுமேயன்றி, நமக்கு ஒருபோதும் மனநிறைவு ஏற்படாது.

இரண்டாவது, கோபம் தலைக்கேறும்போது நாம் அதைப் பிறர்மீது காட்டுகிறோம்.

(அதன் மூலம் பாதிக்கப்பட்ட ஒருவர், நாம் பாதிக்கப்பட்டது போல் நமக்குப் புரியாமலே மற்றொருவரையும்  பாதிப்புக்கு உள்ளாக்குகிறோம்).

மூன்றாவது, அறியாமை – தந்தை பெரியார் போன்ற ஒப்பற்ற சிந்தனையாளர் – அதனால் அதை ஒழிப்பதற்கென்ற ஒரு தனி இயக்கம் உருவாக்கினார்.

பகுத்தறிவு வீரர் அமெரிக்க நாட்டு ராபர்ட் ஜி. இங்கர்சால் சொன்னார்: ‘‘அறியாமையைவிட  உலகின் மனித குலத்திற்கு பெரிய நோய் வேறொன்றுமில்லை.’’

உலகின் பழம் பெரும் சிந்தனைப் புரட்சியாளரான கிரேக்கத்து சாக்ரட்டீஸ்,   தன்னுடைய அறிவு மொழிகளில் கூறிய,  வரலாற்றில் இடம் பெற்ற ஓர் அறிவு மொழி என்ன தெரியுமா?

‘‘நான் அறிந்ததெல்லாம் அறியாமை ஒன்றுதான்’’ என்றார் – மிகுந்த தன்னடக்கத்துடன்.

ஆம். நாம் நம் அறியாமையை  எப்போது புரிந்துகொள்ளுகிறோமோ அப்போதுதான் நாம் அறிவைப் பெறத் தொடங்குகிறோம் என்று பொருள்.

‘‘அறிதொறும் அறியாமை….’’ என்பது வள்ளுவரின் பார்வை.

(தொடரும்)

-விடுதலை நாளேடு, 10.08.26