பக்கங்கள்

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

செலவில்லாது சிக்கனமான உடல் நலப் பாதுகாப்பு – இதோ! (1)(2)


வாழ்வியல் சிந்தனைகள்

பல நாடுகளில் உள்ள வயதாகும் பலருக்கும், உள்ள ஒரு பெரும் கவலை என்ன தெரியுமா?

ஓய்வூதியத்தில் வாழும் நமக்கு முதுமை அதிகமானால், மருத்துவக் காப்பீட்டு வசதிகளும் குறைவு என்பதே.

அடிக்கடி உடல் நலம் குறைதல் – காரணம் நம் மனம் இளமையாகவே இருக்க வேண்டும் என்று விரும்பினாலும், அதற்கேற்ப உடல் உறுப்புகள் ஒத்துழைக்க வேண்டுமே! அதற்கு மருத்துவர், மருந்துச் செலவினங்களும் அதிகரிக்கும். முதுமையில் – தற்போதுள்ள வேகமான வாழ்க்கை முறையில்,  முந்தைய நாள்களைப்போல குடும்பத்தில் எல்லோரும் கலகலப்பாக அமர்ந்து பேசி மகிழும் வாய்ப்பு நாளும் குறைந்து வருகிறது!

இயந்திரம் போல் வாழந்து வருபவர்கள் ஒரு புறம் – தனிமையால் தள்ளப்பட்டு உரையாடக் கூட இயலாமல் ‘அவரவரது பணி அவரவர்களுக்கு!’ என்பதாலும் – அப்படி இல்லாத நிலையில் கூட, ஆளாளுக்கு கையில் வைத்திருக்கும் கைத்தொலைபேசி, கூடிப் பேசிடும் வாய்ப்பைப் பறித்துக் கொண்டு போன சூறைக்காற்றாகிய பரிதாப நிலை!

ஓர் இணையதளத் தகவலை நமக்கு வேண்டியவர்கள் நம் பார்வைக்கு அனுப்பினார். அதில் ஓர் அருமையான மாற்று வழி, ஆலோசனைகளைத் தரும் ஏழு வழிமுறைகள் – புதிய சிந்தனைகள் தரப்பட்டுள்ளன. (சில யோசனை பழையன என்றாலும் புதுமை மெருகுடன் புதுச் சிந்தனை நமக்கு அதன் மூலம் கிடைக்கிறது).

மகிழ்ச்சியோடு வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளுவோமா?

உடல் நலம் பேணுதல் என்றால் பளு தூக்கிப் பழகுதல், கீரை வகைகளைச் சாப்பிடுவது, மன அழுத்தத்தை குறைத்தல் வழிமுறை, சரியான 8 மணி நேரம் தூக்கம் மேற்கொள்ளும் முறை போன்றவைகள் பற்றி அறிவோம்.

ஆனால் ‘ஆயுள் வளர்ச்சி’ என்பது இவற்றை மட்டும் பொறுத்ததல்ல – அந்தத் தூண்களால் மட்டுமே உடல் நலப் பாதுகாப்பு முழுமை அடைந்து விடுவதில்லை.

ஆய்வு செய்த ஆய்வாளர்கள் சிலர் வியக்கத்தக்க சிறு சிறு விஷயங்களை நமக்கு – உடல் நலத்தைக் காக்கவும், ஆயுளைப் பெருக்கவும் கற்று, எளிய மாற்றத்தினைச் செய்வதன் மூலம் அடைய முடியும் என்று நமக்கு நம்பிக்கை மாத்திரையைக் கருணை உள்ளத்தோடு வழங்குகிறார்கள்!

  1. உடல் பற்றி நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைக் கருத்து ஒன்று.

நமது உடலைப் பாதுகாக்க உணவு, பணிகள், உடற்பயிற்சி மற்றும் அவ்வப்போது நோய் போக்கிகளாக மருந்துகள் என்று உடல் நலத்தைப் பேணும் ‘Health’ – நலவாழ்வு என்பது எவ்வளவு முக்கியமோ,  அதைவிட முக்கியம் நமது உடலில் அந்தந்த உறுப்புகள் அவ்வவற்றின் பணிகளைத் தடையில்லாமல் செய்து அதன்மூலம் நமது உடலில் ஏற்படும் வளர்ச்சிக்குரிய என்சைம்களின் பங்களிப்பு – அவற்றின் பயன் ஒருவகை Body Chemistry – உடலில் ஏற்படும் ரசாயன மாறுதல் வெகு முக்கியமானது.

இதையேதான் மெட்டபாலிக் ஹெல்த் (Metabolic health) என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். மருந்துகள் மூலமும், மற்ற வகைகள் மூலமும் பாதுகாப்பது ஒரு வகை என்கின்றனர். இது மிகவும் முக்கியம்.

‘Prevention is better than cure’ – சிகிச்சையை விட முன்தடுப்பு முக்கியம், அதற்குத் தேவையே ஏற்படாத அளவுக்கு உடல் உறுப்புகள் இயற்கையாக அவற்றின் பணிகளைத் தடுப்பு ஏதுமின்றி சிறப்பாக அமைவதே!

“வந்தபின்’ என்பதைவிட ‘வருமுன்னரே’ என்பது Metabolic health care மூலமே எளிதாகும்.

இம்முறை உடல் நலம் பேண அடிப்படை யானதும் தேவையானதும் ஆகும்.

உடலின் நோய்த் தடுப்பாற்றலை வளர்த்துக் கொள்ள ‘Physical Immunity’ என்பது மிக மிக அவசியமாகக் கண்காணிக்கப்பட வேண்டிய தாகும்.

‘கோவிட்-19′ ஏற்படுத்திய படுபயங்கர மரணங்களில் இருந்து தப்பித்தவர்களுக்கு அதற்கான  முக்கிய காரணமாகத் திகழ்ந்தது அவர்களது உடலின் நோய் தடுப்பாற்றல் சக்தியேயாகும்.

அதற்கு Metabolic health முக்கியம். அதனைச் சீர்படுத்தி சிறப்பாக வாழவும், அவை செலவில்லாதவைகளாகவும் நமது மன உறுதியுடன் அந்தச் சின்னச் சின்ன விஷயங்களைப் பின்பற்றுவதன் மூலமே சாத்தியப்பத்தலாம் எளிமையாக!

(தொடரும்)

- விடுதலை நாளேடு, 12.08.2026

எளிய வாழ்வே என்றும் இனிமை (2)


பல்கலைக் கழகத்தில் இடைநிலை வகுப்பு படிக்கும்போது, எனது  ஆங்கிலப் பாட புத்தகம் ஒன்றில் இடம் பெற்ற ஒரு கதை.மனிதனின் பேராசைக்கு மிக விளக்கம் தந்த பாடம் – ரஷ்ய அறிஞர் லியோ டால்ஸ்டாய் அவர்களது சிறுகதை…

‘ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் (காணி) தேவை?’ என்ற தலைப்பில் (How much land does a man require?)

ஒரு நாட்டின் அரசர் ஓர் அறிவிப்பு தருகின்றார்.

காலை சூரிய உதயம் முதல் மாலை சூரியன் மறையும் வரை, எனது நாட்டில் நிலங்களைச் சுற்றிச் சுற்றி அயராமல் ஓடுபவருக்கு அந்த நிலப்பரப்பு முழுவதும் இலவசமாக தரப்பட்டு, உரிமையாக்கப்படும் என்ற தண்டோரா போட்டு அறிவிக்கச் செய்தார்.

பேக்காம் என்ற ஒரு (ரஷ்ய) விவசாயி இதைக் கேட்டு மகிழ்ச்சியுடன் மற்றவர்களோடு சேர்ந்து ஒடத் தொடங்கினார். பலரால் முடிந்தஅளவு ஓடி முடித்துக் கொண்டனர்; ஆனால் பேக்காம்  ‘அதிக அளவு பரப்பு நமக்கு கிடைக்க, நிறுத்தாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தால் மேலும், மேலும் அதிகப் பரப்புள்ள நிலத்தைப் பெறலாமே’ என்ற பேராசையில் தண்ணீர்கூட அருந்தாமல் மாலை வரைஓடி, சூரியன் மறையும்போது ஓடுவதை நிறுத்தியவுடன், கீழே சாய்ந்து விட்டார்.

எல்லோரும் கைதட்டினர்; அந்த வெற்றி வீரனை எழுப்பிவிட நடுவர் சென்றார். மூச்சுப் பேச்சில்லை; மரணம்தான் அவருக்குக் கிடைத்த பரிசு!

அவரை 6 அடி நிலத்தில் ஒரு குழி தோண்டி புதைக்கிறார்கள் – துக்கத்துடன்!

இப்போது சொல்லுங்கள் விடையை!

ஒரு மனிதனுக்கு எவ்வளவு தேவையான நிலம்?

அவன் ஓடி ஓடிச் சேர்த்த நிலமா? ஆறடி மண்ணா?

வாசக நண்பர்களே,

அதுகூட பழைய கதை. இப்போது அந்த ஆறடி கூடத் தேவையில்லை! எரித்த பிறகு கிடைக்கும் சாம்பலை நம்பிக்கையாளர்கள் சிலர் ‘‘அஸ்தி’’யாகச் சின்ன பாத்திரத்தில் வைத்து அவற்றை கும்பிடுகின்றார்.

பகுத்தறிவுவாதிகளோ, அதற்கும் தேவையின்றி மருத்துவமனைக்குப் பயன்படுவதற்கு மருத்துவர் களுக்கு பாடக் கருவியாகத் தங்கள் உடலை நன்கொடை வழங்குகின்றனர்!

1976இல் மிசா கைதியாக சென்னை சிறைகளில் நான் இருந்தபோது, பல ஆயுள் தண்டனைக் கைதிகள்  – எங்களுக்குச்சேவை செய்யும் வகையில் பழகுவார்கள்; அவர்களில் கோவில்பட்டியைச் சார்ந்தஒரு பெரியவர் என்னிடம் புத்தகங்களைப் பெற்று, படித்து விட்டு, திரும்ப நன்றிகூறி கொடுப்பார். பண்புடன், பணிவுடன் நடந்து கொள்வார். ‘சிறை மொழியில் காணிக்கை வார்டன்’  – ‘Convict Warden’ என்ற சொல்லின் மருவு அது!

நான் ஒரு நாள் கேட்டேன்… ‘‘ஏங்க நீங்க இவ்வளவு நல்ல மனிதராக இருப்பதை என்னால் தெரிந்துகொள்ள முடிகிறது… பின் எப்படி, ‘என்ன குற்றம் செய்து  கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றீர்கள் என்று சொல்ல முடியுமா?’’ என்று கேட்டேன்.

அதற்கு அவர் சொன்னார் ‘‘எல்லாம்  ‘க்ஷணநேரக் கோபம்’ தான்! என் மனைவியைப்பற்றி ஒருவன் என் முன்னாலே இழிவுச் சொல் சொன்னதால் வந்த கோபம், ஆத்திரத்தினால் குத்தி விட்டேன்;  செத்து விட்டான்’ என்ற கதையை கண்ணீர் ‘பொலபொல’வென விழும் நிலையில் கூறினார். அதன் பிறகு திருக்குறளை இங்கே வந்து படித்து வருகிறேன்’’ என்றார்.

இப்படிப் பல. எனவே நமது இன்பமும், துன்பமும் நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் மனநிலையைப் பொறுத்ததே!

தீதும் நன்றும் ‘பிறர் தரவாரா’. எனவே மூன்று ‘‘நஞ்சுகளை’’ முறிப்பதற்கு முயன்று பாருங்கள். நானும்கூட முயன்று கொண்டே இருக்கிறேன். மறந்து விடாதீர்கள்; அதே சமயம்

கோபப்படுவதில்கூட இரண்டு வகை உண்டு.

தேவையான கோபம் (நியாயமான கோபம்)

தேவையற்ற கோபம் (அர்த்தமற்ற கோபம்)

ஒரு மனிதனின் நியாயங்கள் அநியாயமாகப் பறிக்கப்படும்போது,  அது தனி மனிதக் கோபமாக இல்லாமல் சமூகக் கண்ணோட்டத்தில் இருக்கும் அநியாயங்களை எதிர்க்கும் சமூகக் கோபமாக உருமாறினால், அதைவிட மனித சமூகத்திற்கு வேறு விடியல் ஏது?

யோசியுங்கள்!

 - விடுதலை நாளேடு, 13.08.2026

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக