பக்கங்கள்

இளைஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளைஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 ஜூலை, 2018

இளைஞர்களே, இன்ப வாழ்வு வாழ இதோ வழிகள்! (2)


6. இளைஞர்களே - உங்களுக்குப் பிடித்தமான ஒரு பணியை - உங்கள் அறையை அலங்கரிப்பதோ, நீங்கள் தங்கியுள்ள வீட்டில் ஒளிவிளக்கு அலங்காரம் செய்தலோ அல்லது தனியே இருப்பவர்கள் தாங்களே அடுப்பைப் பற்ற வைத்து, சமைக்க முயற்சித்து 'சமையல் எனக்கும் தெரியும்' என்ற பெருமிதம் கொள்ளவோ, எஞ்சிய நேரத்தில் நடைபயிற்சி செய்து - இயற்கையழ கினை ரசித்தோ - வாழ்க்கையின் பிற இன்பங்களையும் அனுபவித்து மகிழக் கற்றுக் கொள்ளுங்கள்.

7. உங்கள் மனதிற்குள் ஆயிரம் பிரச்சினைகள் ஏற்பட்டு உங்கள் மூளையைக் குடையலாம்; அதனால் நீங்கள் மன இறுக்கத்திற்குக்கூட ஆளாகக் கூடும். அதனைத் தவிர்ப்பதற்கும், மனதை லேசாக ஆக்கிக் கொள்ளும் வகையில், மனம்விட்டு உங்களுக்கு வேண்டியவர்களிடம் அல்லது உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களிடம் அவிழ்த்துக் கொட்டி விட்டால், மனபாரம் குறையும். மகிழ்ச்சி  ஊற்று தடைபடாது! இதய நோய்க்கு விடை கொடுத்து அதைத் துரத்திடவும் முடியும்! தேவைப்பட்டால் மதியுரைஞர்களை ஆலோச னைக்கு (சிஷீuஸீsமீறீறீவீஸீரீ ஷிமீssவீஷீஸீ)  அணுகுவதில்கூட தவறில்லை. அதற்காக அச்சமோ, கூச்சமோ படத் தேவையே இல்லை.

8. எல்லா நேரங்களிலும் மன உறுதி குலையாதிருப்பது வாழ்க்கையில் எளிதான செயல் அல்ல. உபதேசிப்பது சுலபம்; ஆனால் அதை நடைமுறையில் கொண்டு வந்து நிலை நிறுத்திட நிறைய மனப்பக்குவம் ஏற்பட வேண்டும். நம்மில் பலரும் பிரச்சினைகள் ஏற்படும் போது அதிகமான கவலையையும், பயத்தை - பீதியைத் தான் பெறுகிறோமேயன்றி, தீர்வு  நோக்கி நமது சிந்தனைகளை ஓட்டுவதில்லை.

கவலையோ (ஷ்ஷீக்ஷீக்ஷீஹ்வீஸீரீ),  பயமோ (திமீணீக்ஷீ)  பிரச் சினைகளைத் தீர்த்து விடாது ஒருபோதும்! மாறாக, அது பற்பல நேரங்களில் உடல் நிலையையும்கூட பாதிக்கும் நிலை தான் ஏற்படக் கூடும்.

எல்லா நேரமும் நாளில் 'இருட்டு' கிடையாது. இருட்டின் விடியல் வெளிச்சத்தில் துவங்குகிறது என்று நன் நம்பிக்கையுடனும், துணிவுடனும் தீர்வைத் தேடுங்கள், சரியான விடை கிடைக்கவே செய்யும்!

பயிற்சி காரணமாக இது படிப்படியாக வருமே தவிர, ஒரே நாளில் - எடுத்த எடுப்பிலே வந்துவிடாது இளையர்களே!

'ஒவ்வொரு தோல்வியும் ஒவ்வொரு அனுபவம்' என்று கருதி எதிர் கொண்டால் வெற்றி என்ற வெள்ளி முளைப்பது தெரியும்.

9. நமது உறவுக்காரர்கள்கூட சில நேரங்களில் சரியான காரணமில்லாமல் நம்மிடம் குற்றங் காணும் வகையில் நம் உறவில் விரிசல் ஏற்படும்  வண்ணம் புண்படுத்திடும் நேரத்தில் இனி இந்த உறவே கூடாது என்று அதை முறித்துக் கொள்ளும் அளவுக்கு உங்களுக்குக் கோபம் 'பொத்துக் கொண்டு வரக் கூடும்!'

அதைப் பின்னுக்குத் தள்ளிட இளமையிலிருந்தே பழகுங்கள் - 'பட்டிமன்றங்கள் நடத்தி, வாதாடி வெற்றி பெறுவதால்' நமக்கு  கணநேர இன்பம் மட்டுமே; எஞ்சிய வாழ்நாள் முழுதும் இழப்பே என்பதை எண்ணி பொறுத்துப் பழகுங்கள்; உறுத்துப் பார்க்க நினைக்காதீர்கள்!

'ஒருவர் பொறை; இருவர் நட்பு' என்ற முது மொழியினை நடைமுறைப்படுத்தி, உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள்; அதன் மூலம் உங்கள் உறவையும் நட்பை - தோழமையையும் வைப்பு நிதியாகவே வளர விடுங்கள்! புரிகிறதா? கவிழ்ப்பது நொடிப் பொழுது; கட்டுவது சேர்ப்பது பல நாள் - பல ஆண்டு!

பல நாள் - பல மணி நேரம் நெய்த ஆடையை சில மணித்துளிகளிலே கிழித்து விட முடியுமே! மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியுமா? யோசியுங்கள்!

10. எல்லாரும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லா நிலைமைகளிலும் சரியாகவே இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாதல்லவா? அப்போது நாம் அந்த உலகியலைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப விட்டுக் கொடுத்துப் பழகிட பாடம் கற்றுக் கொள்ளுதல் வாழ்வின் வெற்றிக்கு மிகவும் தேவை.

'எந்த சூழ்நிலையிலும் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்' என்பதை இளமையிலிருந்து பயிற்சி பெற்ற வாழ்வாக உங்களின் வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்.

மகிழ்ச்சி என்பது மற்றவர்கள் நமக்குத் தரும் பிச்சை அல்ல. மாறாக நம் உள்ளம் நமக்கு வழங்கும் கொடை! அதை ஊற்றாக ஆக்கிக் கொள்ள இடையில் ஏற்படும் அடைப்புகளை அகற்றி விட்டு ஊற்றுத் தண்ணீரை, அதன் சுவையை நீங்கள் ருசித்திட வேண்டாமா? இளைஞர்களே, 'இளமையிற்கல்' என்பது இதுவும்தான், மறவாதீர்!

- விடுதலை நாளேடு, 2.7.18

ஞாயிறு, 1 ஜூலை, 2018

இளைஞர்களே, இன்ப வாழ்வு வாழ இதோ வழிகள்! (1)



அறிவியல் தொழில் நுட்பம் வேகமாக வளரும் இந்நாட்களில் சராசரி ஆயுளும் முன்பைவிட இரண்டு மூன்று மடங்கு கூடுதலாகவே பெருகியுள்ளது.

அதுபோலவே புதுப்புது வகை தொற்றுநோய்களும் ஒரு நாட்டிலிருந்து கிளம்பி, மற்ற நாடுகளுக்குப் பரவி, எளிதில் படையெடுப்பை வெற்றிகரமாக ஆக்கி மருத்துவ உலகிற்குச் சவால் விடுகிறது!

முன்பு காற்று, நீர், நில வெளி எல்லாம் தூய்மையாகவே இருந்தன. சுற்றுச்சூழல் மாசுபடவில்லை; இன்றோ வெப்ப சலனம் ஒரு பக்கம் - காடுகளை அழித்த மனிதர்களின் கொடுஞ் செயல் மற்றொரு பக்கம்! இவைகளால் புதிய நோய்களும், பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இளம் வயதுக்காரர்கள்கூட இதய நோயால் தாக்குண்டு இறந்து விடும் நிகழ்வுகள் இப்போது மிகச் சர்வ சாதாரணமாகியுள்ளது!

இளையவர்கள் இதிலிருந்து தங்களைக் காப்பாற்ற நல வாழ்வு வாழ; மிகுந்த அக்கறையும், கவனமும் உடல் நலத்திற்காக காட்டிட முன் வருதல் அவசியமாகும்!

இளையர்களுக்குக்கூட இதோ ஒரு 10 வழிகள்: இதனை நாள்தோறும் கடைப்பிடித்து வந்தால் நலவாழ்வு நீண்ட வாழ்வாக ஆக முடியும்.

1. முதலில் நீங்கள் 'தனிக்காட்டு ராஜா'வாக இல்லாமல், நல்ல, கலகலப்பாகப் பேசிப் பழகும் நண்பர்கள் குழாத்துடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல் அவசியம். அதுவே உயிர்க் காப்பான் தோழன் என்ற உண்மையை உங்கள் வாழ்க்கையுடன் அமைத்துத் தரும்.  இளவயதினருக்கும்கூட மன அழுத்தம் - இறுக்கம் - பணிச் சுமையினாலோ  அல்லது எதிர்பார்த்த வேலை கிட்டாததாலோ, கிட்டிய வேலையும் முழு மன நிறைவைத் தராததாலோ, அல்லது நிரந்தரமல்ல என்ற பயம் காரணத்தாலோ, அந்த அழுத்தம் கூடக் கூடும்.

அதற்குச் சரியான மருந்து, நல்ல நண்பர்கள் வட்டம்தான். நகைச்சுவை உணர்வு வாழ்க்கைச் சாப்பாட்டின் உப்புப் போன்றது. அவ்வுணர்வுடன் சில நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள்; வாய்விட்டுச் சிரியுங்கள். மன அழுத்தம் மலையென வந்தாலும் பணியென உருகிக் கரைந்தோடி  விடும். அவர்கள் நீங்கள் விரும்புபவர்களாகவும், உங்களை அவர்கள் நேசிப்பவர் களாகவும் இருப்பதே முதல் தகுதி அதற்கு.

2. அண்மைக் காலத்தில் விஞ்ஞான விந்தையான தகவல் தொழில் நுட்பப் புரட்சியினால் விளைந்த மின்னணுவியல் கருவிகள், அவைகளை வைத்து சமூக ஊடகங்களில் (Social Media)  அதிகமான நேரம் செலவழித்து, உங்களின் பொன்னான நேரத்தை வீணடித்துக் கொள்ளாமல் தேவையான அளவுக்கு அதில் ஈடுபாடு காட்டுங்கள். உங்களுக்கு அது கட்டுப்பட்டதாக வேண்டும். அதற்கு நீங்கள் கட்டுப்பட்டவராக மாறிட வேண்டாம்!

3. உங்களின் நலத்தில் நீங்கள்தான் தனி அக்கறை எடுத்துக் கவனிக்க வேண்டும்; உடல் நலத்தைப் பேண 'வாய்தா' வாங்கும் முறை - 'நாளை பார்த்துக் கொள்ளலாம்' என்று தள்ளிப் போட்டு தன்னையே இழந்து   விடாதீர்கள். அவ்வப்போது உடனுக்குடன் அதனைச் சரி செய்து கொள்ளுங்கள். பழுதடைந்த வாகனங்களைக்கூட உடனே சரி செய்தால்  பயணத்தை மேலும் தொடர முடியும்? தள்ளிப் போட்டால் பயணம் இல்லை என்றாகிவிடாதா? - சிந்தியுங்கள். மேலும் 'நாளை' என்பது நம் திட்டப்படி சரியாக வருமா? அவசர நிகழ்வுகளின் குறுக்கீடு வருமா? யாரும் கூற முடியாது!

'இன்று' என்பது முழுக்க நம் கைகளில் மட்டுமே உள்ளது!  எனவே விரைந்து காலதாமதம் இன்றி உடல் நலம் பேணுங்கள்.

4. இளைஞர்கள் முதல் முதியோர்வரை அவரவர் உடலுக்கும், வாய்ப்புக்கும் ஏற்ப உடற்பயிற்சி செய்ய - உணவு உண்ணுதலைப் போலவே நேரம் ஒதுக்கி செய்யப் பழகிக் கொள்ளுங்கள்!

நாளும் தவறாமல் செய்யும் பழக்கம் உடலைப் பாதுகாக்கும். பழக்கம் பிறகு வழக்கமாகி சோம்பலை அதுவே விரட்டி விடுவதில் தனி வெற்றி காணும்.

5. கடினமாக உள்ளது நாம் செய்யும் வேலை என்று கருதி ஒதுக்காதீர்; தள்ளிப் போடாதீர்!

முதலில் எதுவும் கடினமாகவே தோன்றும்; பிறகு செய்யச் செய்ய அது உங்களுக்கு எளிமையாகி விடுவது உறுதி! கடின வேலையைத் தேடுங்கள். இலகுவான வேலை வேலையே அல்ல என்று மனதில் உறுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

சிக்கலைத் தீர்ப்பது தான் சிறந்த அறிவின் வெளிப்பாடு. கடினமான பணி மூளைக்கும், உடலுக்கும் - இரண்டுக்குமே நல்லதொரு பயிற்சிக் களம், மறவாதீர்!

(திங்கள் தொடரும்)

-  விடுதலை நாளேடு, 30.6.18