பக்கங்கள்

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

வாழ்வின் இன்றியமையாத இரண்டு
நாம் அனைவரும் நமது உடல் நலனைப் பேணிக் காப்பதில் மிகுந்த அக்கறையும், பொறுப்புணர்வும் காட்ட வேண்டும். மனித உடல் அமைப்பு - உடல் நலனை இயல்பாக வளர்க்கும் தன்மையில்அமைந்துள்ளது; அதற்குச் செயற்கையாக கேடு செய்வது நம்முடைய தவறான பழக்கவழக்கங்களாலும், அலட்சியத் தினாலும்தான்!

நாம்உடற்பயிற்சிக்கெனநாளும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைக்கும் பழக்கத்தை விடாப் பிடியாக மேற்கொண்டால், பின்னால் நோய் வந்துபடுத்துக்கொள்ளவோ,மருத் துவமனைகளில்காலம்,பொருள் எல்லாவற்றையும் செலவழிக்க வேண்டிய அவசியமோ இராது.

(இதை மீறிய சுற்றுச்சூழல் காரண மாகவோ, அல்லது வேறு சில தவிர்க்க இயலாது தாக்கப்படும் நோய்க் கிருமிகள் காரணமாகவோ மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்கள் உதவியைத் தேடுவது நாமாக ஏற்படுத்திக் கொள் ளுவதல்ல; வந்ததை எதிர்கொள்ள வேண்டியவர்களாகி அதிலிருந்து விடு பட செல்லுகிறோம். அது வேறு).
உடற்பயிற்சி என்றால், ஏதோ உடற்பயிற்சிக் கூடத்திற்குச் (‘‘ஜிம்‘’) சென்று மணிக்கணக்கில் அங்கு செலவழிக்கவேண்டும் என்பதல்ல. அவரவர் வயது, வேலையின் தன்மை, சூழலுக்கு ஏற்ப அதை எவ்வளவு எளிமையாக அமைத்துக் கொள்ள முடியுமோ அப்படிச் செய்வதேயாகும்.

நல்ல நடைப்பயிற்சி குறைந்தது 30 மணித்துளிகள், வாரத்தில் ஏழு நாள்கள் இல்லையென்றாலும், அய்ந்து நாள்கள் செய்யலாம்; செய்யவேண்டும். காலையில் இயலவில்லையானால் - மாலையில் கூட செய்யலாமே!

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் பெருநகரங்களில் அலுவல கங்களில் பணிபுரிவோர் மதியம் உணவு இடைவேளையில்கூட, நடைப்பயிற்சி- ‘‘ஜாகிங்’’ என்ற மெல்ல ஓட்டம், வேக நடைப் பயிற்சியை அரை மணிநேரத்தில் அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதியில் செய்து முடித்து, அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ள குளியல் அறைகளில் சென்று குளித்தோ, முகம் கழுவியோ, உடை மாற்றம் செய்தும்கூட திரும்பும் நிலையை நான் பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கே சென்றிருந்தபோது கண்டு மகிழ்ந்தேன்; வியந்தேன்.
‘டிரெட் மில்லில்’ (Tread mill) கூட நடைப்பயிற்சியை - வேக நடைப் பயிற்சியை வாய்ப்புக் கிடைக்கும்போது செய்து  முடிக்கலாம்.
ஆரோக்கியத்திற்காகவும், மகிழ்ச் சிக்காகவும் செலவழிக்கும் இந்தக் கால அளவு - செலவல்ல உண்மையில்; மாறாக, வாழ்க்கையினை நீட்ட உத விடும் அருமையான வழிமுறை என்றே சொல்லவேண்டும்!

சோம்பலுக்கு இடந்தராது இந்த உடற்பயிற்சி வயதுக்கேற்ற நிலையில் செய்து பழகி விட்டீர்களானால், பிறகு நீங்களே செய்யாமல் இருந்தால், ‘என்னமோ மாதிரி இருக்கு’ என்று மழை பெய்தாலும் குடைபிடித்துக் கொண்டு நடக்கப் புறப்பட்டு விடுவீர்கள்!

அதுபோலவே, நடக்க நேரத்தினை ஒதுக்கி, அதன்மூலம் மன இறுக்கத்தைப் போக்கி, புத்துணர்ச்சியைப் பெற மற் றொரு வழி (கூட்டாளி போன்றது இது!) என்ன தெரியுமா?

அன்றாட வாழ்வில் கொஞ்ச நேரத்தை - அமைதியாக, சலனமின்றி செலவிடப்பழகி,அதைஒருபழக்க மாக்கி பிறகு வழக்கமாக்கிக் கொள்வ தாகும்!

‘வில்லியம் வேர்ட்ஸ் ஒர்த்’ William wordsworth) என்ற பிரபல கவிஞரின் அறிவுரை என்ன தெரியுமா?

“அதிவேகத்தில் இயங்கும் உலகம் அதன் அன்றாட நடப்புகளின்மீது வெறுப்பு, உலகாயுத இன்பங்களினால் ஏற்பட்ட சோர்வு ஆகியவற்றினால் நம்மின மேம்பட்ட, நம்மின் மேம்பட்ட அகநிலையிலிருந்து நாம் அதிக காலம் விலக்கி வைக்கப்பட்டபோது, தனிமை எவ்வளவு இனிமையானது, எவ்வளவு அழகானது, எவ்வளவு புத்துணர்வைப் புதுப்பிக்கும் வாய்ப்பு என்று உணர்ந்தால் அதன் நன்மை நமக்கு விளங்கும்!’’

கடைசியாக அமைதியாகவும், சலனமற்றும் நீங்கள் இருப்பதற்கு நேரம் எப்போது கொடுத்தீர்கள்; கணிசமான நேரம் ஒதுக்கியது எப்போது?

வேகமான மோட்டார்களில் நாம் அருமையான சிமெண்ட் சாலையில் பறந்து செல்லும்போதுகூட, இடையில் சூடான எஞ்சினை தணியச் செய்ய சிற்சில மணித்துளிகள் நிறுத்தி, ஓய்வெடுத்து, ஓட்டுநருக்கும் ஒரு ‘பிரேக்‘ கொடுப்பது (என்னிடம் இனி இருக்கவேண்டிய பழக்கம் இது) மிகவும் அவசியம்.

நீண்ட தூரப் பயணத்தில்கூட என் னிடம் எனது வாழ்விணையர் இடித்துச் சொல்லுவார் இதன் தேவையினை! எனக்கென்னவோ நேரம் வீணாகி விடுகிறதே என்ற தவறான கணக்கு. நான் செய்யும் தவறு அது!

அமைதியாக இருப்பதற்கு முன் னுரிமை கொடுத்து - மனதின் தனிமை பிறகு இனிமையாக மாறும்; சிந்தனைப் பூக்கள் பூத்து, காய்த்துக் கனியும். அவற்றை நாம் அருந்தலாம்!
கருத்தாளர் ராபின் சர்மா அவர்கள் தனது நூலில் ஒரு நல்ல உவமையைச் சொல்லியுள்ளார்!

முன்னுரிமைக்கு முக்கியத்துவம் எவ்வளவு தேவை; இன்றேல் விளையும் கேடு எப்படிப்பட்டது என்பதை நன்கு அதன்மூலம் விளக்குகிறார்!
கலங்கரை விளக்குக் காப்பாளர் ஒருவரின் கதையைச் சுட்டிக் காட்டு கிறார்:

‘‘பாறைகள் நிறைந்த கடற்கரையை தவிர்ப்பதற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கை எரிய விட சிறிதளவு எண்ணெய்வைத்திருந்தான் அந்த பணியாளன். (முன்பெல்லாம் இம்முறை தான்; பிறகுதான் மாற்றுமுறை வந் துள்ளது - இது பழைய கால கதைதான்).

ஓர் இரவு அண்டை வீட்டுக்காரன் தன் வீட்டில் விளக்கேற்ற, கடன் கேட்டதினால் சிறிது எண்ணெய் கொடுத்தான்.

மற்றொரு இரவு வழிப்போக்கன் ஒருவன், தன் பிரயாணத்திற்காக இரஞ்சிக் கேட்டதினால், அவனுக்கு சிறிது எண்ணெய் கொடுத்தான்.

மறு நாள் இரவும் கதவு தட்டப் பட்டதால், எழுந்த இந்த ஊழியன், பெண்மணிஒருத்தி,வீட்டிற்குஒளி யேற்றி தன் குடும்பத்தாருக்கு உணவு படைக்க சிறிது எண்ணெய் தரவேண்டினாள். அதற்கும் இசைந் தான், இந்தக் கலங்கரைக் காப்பாளன்.

கலங்கரை விளக்கோ, போதிய எண்ணெய் இன்றி ஒளி தர முடியாமல் அந்தப் பெரு விளக்கு அணைந்து போயிற்று.

கப்பல் பல, மணல் தட்டின; பல உயிர்கள் பலியாயின.

காரணம் என்ன? காப்பாளன் கடமை தவறியதே!

தன் முன்னுரிமை எதுவோ, அதன் மீது கவனம் செலுத்த மறந்த தேயாகும்.

அவனின் முதற்பணி எதுவோ அதன்மீது கவனம் செலுத்த அவன் மறந்ததால், இந்தப் பரிதாப விபத்துகள்!
பெரு விலை கொடுக்கவேண்டிய பேரிடர் நிகழ்ந்தது!

தன் முன்னுரிமை எதுவோ அதன் மீது கவனம் செலுத்த எவரும் மறக்கவே கூடாது!

தனிமையாக நாளில் சில மணித் துளிகளையாவது செலவழியுங்கள் - அது உங்கள் வாழ்வின் உயரிய குறிக்கோளை அடைய உங்களை இட்டுச் செல்வது உறுதி!
முக்கியமாக இந்த ‘செல்போன்’ யுகத்தில் அதனை அலறவிடாதீர்!

மனதை அலைய விடாதீர்!

இன்பத்தைக் கலைய விடாதீர்கள்!
- கி.வீரமணி

-விடுதலை,24.10.16

சனி, 29 அக்டோபர், 2016

இதயத்தைப் பாதுகாக்க இதோ நான்கு வழிகள்!

 
நம் உடலின் ஓய்வறியா உழைப்பாளியான இருதயத்தை நாம் பாதுகாத்து வாழ வேண்டாமா? மற்ற உறுப்புகள் ஓய்வு எடுக்கின்றன; எடுக்கலாம். ஆனால் இதயம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாமா? இதயத்தின் விழிப்பும் உழைப்பும் -  நம் வாழ்வின் பாதுகாப்பும் வாழ்க்கை நீட்டலும் - உழைப்பு! உழைப்பு! சதா உழைப்பு! இதற்கு ஊறு செய்து நம் வாழ்வை நாமே முடிவுக்குக் கொண்டு வரும் கேடான பழக்க வழக்கங்களைப் பற்றியும், அவைகளைப் பற்றியுள்ள நண்பர்களும்  உலக இதயப் பாதுகாப்பு நாளான இன்று (29.9.2016) சற்று சிந்திப்போமா?
உலகின் அதிகமான மரணங்கள் இதயம் செயல் படாததின் காரணமாகவே - மாரடைப்பு காரணமாக நிகழ்கின்றன!

ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் 1 கோடியே 75 லட்சம் பேர் இதய வலி, மாரடைப்பு மூலம் மரணம் அடையும் கொடுமை நிகழ்கிறது!

உலகின் முதல் தர கொலையாளி நோய்தான் இந்த மாரடைப்பு! வயதானவர்களை முதுமை காரணமாகத்தான் இந்நோய் தாக்கி வாழ்க்கையை முடிக்கிறது என்பது பழங்காலத்துக் கதை!
இப்போது இளையவர்களுக்கெல்லாம் இதய நோய் - மாரடைப்பு - இவை தாக்கி, அந்த வளர வேண்டிய தளிர்கள் உதிரும்படியான கொடுமைகள் மிகச் சர்வ சாதாரணமாக நிகழ்கின்றன.
காரணம் என்ன?

எப்படி, வருமுன் காத்து, வாழ்வை நீட்டுதல் என்பதுபற்றி சிந்திக்க வேண்டும்; வந்த பின்பு,
'ஸ்டெண்ட்' (Stent) பொருத்துதல்,
பேஸ்மேக்கர் பொருத்துதல்
மாற்று அறுவை சிகிச்சை செய்தல்

இவைகளை எல்லாம் செய்து கொண்டு, அஞ்சி அஞ்சி வாழ்க்கையை நடத்துவதைவிட, சற்று முன் எச்சரிக்கையான நடவடிக்கைகள், பழக்க வழக்கங்களை நாம் மேற்கொள்ளலாமே! இன்றைய இளைய தலைமுறையினருக்கும் இதனை நாம் எளிதில் சொல்லி சிந்திக்க வைக்க வேண்டும்.

(அ) புகையிலை, புகைபிடித்தல் - இவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
புகை - நல்ல உடல் நலத்திற்கு மிகப் பெரும் பகை என்பதை மக்கள் மறக்கக் கூடாது! காசு செல வழித்து இப்படிப்பட்ட மாரடைப்பு, புற்றுநோய் போன்றவற்றை 'சிவப்புக் கம்பள வரவேற்பு' கொடுத்து நாமே வரவழைத்தல் தேவையா என்று இன்றைய 'புகைஞர்கள்' சிந்திக்க வேண்டும்!
விளக்கை நோக்கிய விட்டில் பூச்சிகளாக அவர்கள் ஆகலாமா?

(ஆ) கண்டபடி ஆரோக்கியமற்ற - உடல் நலத்துக்கு கேடு செய்யும் உணவுப் பழக்கம். சதா அரைத்துக் கொண்டே இருப்பர். நம் நாட்டில் அமெரிக்க உணவு முகமைகள், கே.எப்.சி. (K.F.C.) போன்ற பல்வேறு துரித உணவுகள், தெருத் தெருவாக எங்கணும் கோழிக்கறி - பிரியாணி போன்றவை பழையவையா, புதியவையா என்று கண்டறிய முடியாத உணவுப் பண்டங்கள், 'கோக்', 'பெப்சி கோலா', 'கொக்கோ கோலா' போன்ற  கேடு பயக்கும் சுவை நீர்கள் சதா குடித்துக் கொண்டு, இயல்பான வீட்டு உணவைக்கூட நமது இளைய தலைமுறையினர் தவிர்த்து, தங்களுக்குத் தாங்களே குழி வெட்டி மாளும் கொடுமை முற்றாக மாற வேண்டும்!

(இ) கணினி புரட்சி ஏற்பட்டுள்ள இன்றைய நவீன உலகில், பணியின் காரணமாக ஒருபுறம் ஓய்வு - இளைப்பாறுதல் என்ற போக்கில் பல மணி நேரம் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன் அமர்ந்தே உள்ள பழக்கம் (Sedentary Habits - No Physical activity) என்ற நிலையால் மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்!

(ஈ) மது குடித்தல் - இப்போது அது ஒரு நவ நாகரிகப் பழக்கம்.தமிழ்நாட்டில் எங்கெங்கு காணினும் 'டாஸ்மாக்' (Tasmac)   மது விற்பனைக் கடைகள்!
பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், உள்ள பகுதிகளுக்கு அருகில்கூட இந்தக் கடைகள்! பிறகு சொல்லவா வேண்டும்? இதனால் அங்கிங்கெனாதபடி எங்கும் ஏராளமான இளைய குடிகள்!
விளைவு...?
முதலில் மனிதன் குடிக்கிறான்
பிறகு, குடி குடிக்கிறது!
இறுதியில், குடி மனிதனையே குடிக்கிறது!
வாழ்வு முடிகிறது! தேவையா?

எனவே, உடல் நலம் பேணுங்கள்; கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைச் சொரியாதீர்கள்! வாழ வேண்டியவர்கள் சாவுக்கு அழைப்பு அனுப்பி வரவேற்கத் தயாராகாதீர்!
மேலும் இரண்டும் முக்கியம்

1. உடற்பயிற்சி - நடைபயிற்சி.
2. மன இறுக்கம் (Stress)
தவிர்த்த, இளைப்பாறுதல் இவையும்.
50 வயதுக்குட்பட்டவர்கள் உடலில் Master Checkup ஆண்டுக்கு ஒருமுறை செய்து கொள்ளுங்கள்!
50 வயதுக்கு மேற்பட்ட 'முன்னாள் வாலிபர்கள்' ஆண்டுக்கு இரு முறை இந்த முழு உடற் பரிசோதனையைச் செய்து கொள்ளுங்கள்.
தெரிந்தே தற்கொலை செய்து கொள்ளுவதுபோல தவறான பழக்க வழக்கங்களை விட்டொழியுங்கள்.
-விடுதலை,29.9.10

‘‘அகப்படாத பறவை; அணியக்கூடாத அணி!’’போதைகளில் மீளா கடும் போதை - மயக்கங் களிலேயே ஏலா மயக்கம் - எது தெரியுமா? தற் புகழ்ச்சிதான்.

எவ்வளவு சிறந்தவர்களையும் வீழ்த்தும் படுகுழி தற்புகழ்ச்சிதான்!

பல நண்பர்கள் பேசும் பேச்சுகளிலே ‘நான், நான், நான்,’ ‘தான்’; மறந்தும் ‘நம்ம’, ‘நாங்கள்’, ‘எங்கள்’ என்று அவர்களின் வாய்களில் வரவே வராது!

கேட்பவர்கள் மனதிற்குள் அருவருப்பு அடை வார்களே என்ற எண்ணம்கூட இல்லாமல் இப்படி தங்கள் ‘சுயபுராணத்தை’ இடைவெளி இன்றி தொடர்ந்து  ஊதிக் கொண்டே உள்ளவர்கள், அவர் களது நெருங்கிய நண்பர்களைக்கூட மனதில் மதிப்பிழக்கச் செய்பவர்களாக மாற்றி விடுவதை ஏனோ புரிந்து கொள்வதே இல்லை!
‘ஆசை வெட்கமறியாது’ என்பது இதனால்தானோ!

பழமொழி நானூறு என்ற பழைய நீதி நூலில் உள்ள இரண்டு பாடல்கள் நம் அனைவருக்கும் சிறந்த பாதுகாப்பரண்களாகும், அதிலும் குறிப்பாக மேடைப் பேச்சுக்கள், கட்சித் தலைவர்கள், ஆட்சி யாளர்கள் - இப்படி பல தரப்பட்டவர்களுக்குச் சரியான வழிகாட்டும் நெறி முறைகள் - குழிகளில் வீழ்ந்துவிடாதீர் என்ற எச்சரிக்கை விளக்குகள்!

‘தற்புகழ்ச்சியால் வரும் தலைக்குனிவு’ என்ற தலைப்பில் 66ஆவது பாடல் ஒன்று இதோ:

செய்த கருமம் சிறிதானும் கைகூடா
மெய்யா உணரவும் தாம்படார் - எய்த
நல்லத்தக்க தம்மைப் புகழ்தல் புலத்தகத்துப்
புள்அரைக்கால் விற்பேம் எனல்.

ஒரு செயலை நன்கு செய்து முடிக்கும் திறமை இல்லாதவர்கள் இதைச் செய்து இவன் முடிப்பான். அதனால் வரும் பயனைப் பெறுவான் என்று, மற்ற வர்களால் நம்பவும் முடியாதவனாக இருப்பவன், தான் அந்தச் செயலைச் செய்து முடித்து, அதனால் பெரும் பயன் அடைந்து விட்டதைப் போலப் பொய்யாகத் தம்மைத் தாமே புகழ்ந்து போற்றிக் கொள்ளுதல், காட்டில் (கைக்கு அகப்படாமல்) இருக்கிற பறவை யைப் பிடித்து அரைக்கால் பொன்னுக்கு விற்போம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதைப் போலக் கேலிக்குரியதாகும். (கருமம் - செயல், எய்துதல் - அடைதல், புலத்தகத்து - காட்டினிடை. புள் - பறவை). வீண் புகழ்ச்சி, தற்பெருமை வேண்டாம் எனச் சொல்லும் இப்பாடலில் பழமொழி “புலத்தகத்துப் புள்அரைக்கால் விற்பேம் எனல்.”

அதேபோன்று

புகழ்ச்சி மயக்கம் பொருத்தமற்றது என்ற தலைப் பில், ஒரு பாடல் (67ஆவது பாடல்)
தமரேயும் தம்மைப் புகழ்ந்துஉரைக்கும் போழ்தில்
அமராது அதனை அகற்றலே வேண்டும்!
அமைஆரும் வேற்ப! அணியாரே தம்மைத்
தமவேனும் கொள்ளாக் கலம்.

தமர் - தமக்கு வேண்டியவர்கள், உறவினர் அல்லது நண்பர் சுற்றத்தார்களே என்றாலும், அவர் கள் தம்மைப் பாராட்டிப் புகழ்ந்து தேவைக்கு அதிகமாகப் போற்றும் போது, அமராது - அந்தப் போற்றிப் புகழ்ந்துரைகள், பாராட்டுக்கு அகமகிழ்ந்து இருந்துவிடாது, அப்படிப்பட்ட வீண் புகழ்ச்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும். (அமை - மூங்கில், ஆரும் - நிறைந்த, வெற்பு - மலை) நீண்டுயர்ந்த மூங்கில்கள் செழித்து வளரும் மலைநாட்டவனே! தன்னுடையதே என்றாலும், பொன்னால் செய்த ஆபரணங்களே ஆனாலும், பொருத்தமில்லாதவற்றை அணிந்து கொள்ள எவரும் விரும்ப மாட்டார்கள். கொள்ளா - பொருந்தாத, கலம் - ஆபரணம். இப்பாடலில் பழமொழி - ‘‘அணியாரே தம்மைத் தவமேனும் கொள்ளாக் கலம்.”
“அணியாரே தம்மை தமவேனும் கொள்ளாக் கலம்” என்று முடிகிறது!

கிரேக்க ஞானி சாக்கரட்டீசின் அறிவுத் திறனை அகிலமே பாராட்டுகிறது இன்று!

அவரோ எனக்குத் தெரிந்ததெல்லாம் என் அறியாமை ஒன்றுதான் என்றார்!
என்னே தன்னடக்கம்! தலைக்கனம் நுழைய முடியாத இரும்பரண் மூளை!

தந்தை பெரியார் முன் யாரேனும் புகழ்ந்தால் அவரது முக பாவனை மாறும், ‘உம்’ அப்புறம் ‘வேறென்ன’ என்பார் தந்தை பெரியார். அதையும் மீறி ‘பம்ப்’ அடித்தாலும் கட்டிலில் கிடக்கும் பத்திரி கையை - ஏட்டை எடுத்து அதனைப் படிக்கத் தொடங்கிவிடுவார்.

அதற்குப் பொருள் - நாசூக்காக ‘நீங்கள் விடை பெறுங்கள்’ என்பதல்லாமல் வேறு என்ன?

தன்னைக் காப்பது நோய் நொடிகளிலிருந்து மட்டும் அல்ல நண்பர்களே!

நோய்களில் கொடிய நோயான தற்புகழ்ச்சி, புகழ்ச்சிப் போதை மயக்கம். இவைகளிலிருந்து நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டாமா? சிறந்த வாழ்க்கை அதுவே!
- கி.வீர்மணி
வாழ்வியல் சிந்தனைகள்

-விடுதலை,23.9.16

வெள்ளி, 28 அக்டோபர், 2016

மணமாகா இருபால் இளைஞர்களே, கேரளத்தைப் பாருங்கள்!


நேற்று (12.9.2016) இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டில், திருச்சி பதிப்பில் 6ஆம் பக்கத்தில் ஒரு செய்தி! நம் சமூக பழக்கவழக்கங்களையே புரட்டிப் போட்ட பயனுறு மாற்றத்தின் மலர்ச்சி அது!

திருமணங்களை - ஜாதி மறுப்பு, மதமறுப்புதிருமணங்களாக (Inter- caste, Inter-religion) கேரள இருபால் இளைஞர்கள் இப்போதெல்லாம் ஏரா ளமாக நடத்திக் கொள்ளுகிறார்களாம்!

புதிய தலைமுறை இளைஞர்கள் பழைய பழக்க வழக்கங்களையெல்லாம் தூக்கி வீசியெறிந்து விட்டு துணிவுடன் (சிறப்பு திருமணச் சட்டப்படி 1954) எளியமுறையில், பதிவுத் திருமணமாக ரூ.1000 செலவோடு மட்டும் நடத்திக் கொள்கிறார்களாம்!

சுயமரியாதைத் திருமணத்தின் மற்றொரு வடிவம்தான் அது. 30 நாள் நோட்டீஸ் மட்டும்தான் தேவை.

2015 - 2016 நிதி ஆண்டில் இத்தகைய பதிவுத் திருமணங்கள் (ஜாதி, மதம் பார்க்காதவை) 13,198ஆகும். 2014- 2015 இல் இந்த எண்ணிக்கை வெறும் 2,136 மட்டுமே.
அதாவது 6.17 சதவீதம் (ஆறு மடங்குக்குமேல்) இவ்வகைத் திரு மணங்கள் ஓராண்டில் பல மடங்காகப் பெருகிவிட்டன!

இதில் வடக்குக் கேரளப் பகுதி வாழ்விணையர்களே முன்னணியில் இருக்கிறார்களாம்!

ஆறு மடங்காக பெருகிய இத்த கைய பதிவுத் திருமணங்களில் பெரிதும் ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்களேயாகும்! என்னே மாறுதல்! எத்தகைய தெளிவு! எத்தகைய முன்னேற்றம்.
பழைய சடங்கு, சம்பிரதாயங்களுக்கு விடை கொடுத்து விரட்டியதோடு, அசைக்க முடியாத சட்ட சாட்சியப் பதிவு. செலவோ மிகமிகக் குறைவு வெறும் 1000 ரூபாய் மட்டுமே!
இப்போது நமது இருபால் இளை ஞர்கள் ஆடம்பரத்தை வெறுத்து, சிக்கனமான வகையில் இப்படி எளிமையாகவே தமது திருமணங்களை நடத்திக்கொள்ளதுணிவுடனும்,தெளி வுடனும் அவர்களாகவே முன்வந் துள்ளனர்.

வழமையான சடங்காச்சார திரு மணம் ஆடம்பரம், செலவுகள் அதிகம்.

எங்கள் உறவினர்கள் என்ன சொல்லுவார்கள்என்பதைப்பற்றி கவலைப்படாமல்,நாங்கள்இப்படி சிக்கனமான, சடங்கு சம்பிரதாயங் களுக்கு இடமே இல்லாத இந்த திருமணங்களுக்கு நாங்கள் செலவழித்த தொகை (நண்பர்கள் உறவினர்களுக்கு சாப்பாட்டுக்கான செலவு உள்பட) வெறும் 5000 ரூபாய்க்குள்தான் என்று ஒரு மணப்பெண்ணே கூறினார் என்பது செய்தி
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்ற வாசகங்கள் இன்று மாறிவிட்டன! பெரும்பாலான திருமணங்கள் ரொக்கத்தில் தான் நிர்ணயிக்கப்படுகின்றன என்ற அவலம்.
‘வரன்-தட்சணை’என்றதங் களை விற்றுக் கொள்ளும் மானங் கெட்ட முறையை வற்புறுத்தும் பெற்றோரும், அதில் அவர்களுக்கு அடிமையாகிவிட்ட மணமகன்கள்-மாப்பிள்ளைகள் நமது தேசிய அவ மானங்கள் அல்லவா?

அதற்கு சிறிதும் இடமின்றி 1000ரூபாய்துவங்கி5000ரூபாய்க் குள் முடியும் செலவுடன் மண விழாவை நடத்திக் கொள்ளும் இம்முறையை, இணையத்தையும், வலைதளங்களையும் “வாட்ஸ் அப்புக்கள், பேஸ்புக்குகள், டிவிட்டர்கள்’’ என்று பார்த்து பார்த்து காலம் கழிக்கும் இளைய தலைமுறையே இந்த நல்லதைக் கற்று, கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை - சேமித்த செல்வத்தை ஒருநாள் ஆடம்பரக் கூத்துக்கு செலவழித்து பின் கடன்காரனாகி கவலைப்படுவானேன்?

யோசியுங்கள்! சுயமரியாதை உள்ள வராக மாறுங்கள்!

எளிய திருமண முறை இன்று இன்றியமையாத் தேவை அல்லவா?
-விடுதலை,13.9.16

வியாழன், 27 அக்டோபர், 2016

தோல் சுருக்கமும் - நமது ‘நாள் சுருக்கமும்!’


நமக்கு வயதாக வயதாக முதுமை வருவது தவிர்க்க இயலாத இயற்கையாகும். அதற்காக நம்பிக்கை இழந்து, ஒரு வகையான  மன இறுக்கத்தையோ, விரக்தியையோ நம்மோடு தவிர்க்க இயலாது இருந்தே தீரும் என்று எண்ணுவது ஒருவகை மூடநம்பிக்கையேயாகும்!

இறப்பைத் தவிர்க்க இன்றுவரை இயலாது என்பது மறுக்க முடியாத உண்மையே! அதற்காக எப்போதும் வருத்தத்துடன் வாழவேண்டுமா, என்ன?
முதுமை என்பது முதிர்ச்சி என்று கணக்குப் போடுங்கள்!

நரைத்தன்மைக்கு ஒரு மரியாதை தானே வருகிறது என்ற மற்றொரு பக்கத்தை ஏனோ பார்க்கத் தவறு கிறீர்கள்?

முதுமைஉடலுக்குத்தான்- உள்ளத்திற்கு அல்ல என்பதை பல முறை நாம் இதே பகுதியில் எழுதி விளக்கியுள்ளோம்.

தோல் சுருங்கிடும் (Wrinkles) வந்துவிட்டதே, கீழே விழுந்து விடு வோமோ, தடுமாற்றம் (வருவதற்கு முன்பே) வந்து விடுமோ என்று பயந்து பயந்து சாகும் வேதனைக்கு ஆளாகவேண்டாம்.

முதியவர்களான முதுகுடி தோழர் களே, முதிய தோழியர்களே!

அமெரிக்காவின் பிரபல அறிவுக் களஞ்சிய ஏடு (Bottomline) ஒன்றில் படித்து சேகரித்த தகவல்களைத் தருகிறோம்.

படித்து பயன்படுத்தி மகிழுங்கள்.

தோல் சுருக்கங்கள் முதுமையில் தவிர்க்க இயலாதது என்று பலர் எண்ணுகிறார்கள்; இது தேவையற்ற ஒரு சிந்தனையாகும். அதனைத் தடுக்கலாம். பளபளப்பு மேனியுடன் விளங்கலாம் - கவலைப்படாதீர்கள்!

உடலில் சுருக்கங்கள் ஏற்படுவது என்பது எப்படி என்றால், உடம்பின் செல்கள் எரிந்த நிலை - சுற்றுச்சூழல், சூரிய வெப்பம், போதிய போஷாக்கு உணவுக் குறைவு இவைகளால்தான்!

உடம்பின் செயல் திற அமைப்பு (Metabolism) புரத சத்தைத் தூண்டும் activator protein-1 (AP-1) 
என்பது போதிய அளவில் கிடைக்கும்போது நமது உடல் பளபளப்பும் விரிவடையும் தன்மையை ‘கொலேஜென்’ ((Collagen) என்பதன்மூலம் தூண்டுவதால் இந்தத் தோல் சுருக்கமடையச் செய்கிறது.

நல்ல போதிய ஊட்டச் சத்துள்ள உணவு மாற்றம்மூலம் இதனைத் தடுக்க முடியும்.

எரித்தன்மை உள்ள உணவுகளை (inflammatory) உண்ணுவதைத் தவி ருங்கள். (அதிக காரம்  ‘அதிகாரம்‘ எப்போதுமே ஆபத்தானதுதானே!)

அத்தகையஎரித்தன்மைஉள்ள அதிகார கொதி நிலைக்குத் தள்ளு வதைத் தடுக்கும் உணவுகளை உண் ணப் பழகுங்கள்.

இப்படிச் செய்வதன்மூலம் தோல்சுருக்கத்தைமட்டும்தடுக் காமல், பொதுவான உடல் ஆரோக் கியத்தையும் வளர்க்க அந்த உணவு முறை மாற்றம் உதவிடும்.

புற்றுநோய், இதயநோய் மற்றும் வயிற்று நோய்களை வராமல் தடுப் பதற்கும் கூட அது நமக்குப் பெரிதும் உதவிடும்.

புரதச் சத்துதான் நமது உடம்பி லுள்ள ‘செல்’களின் பழுதுகளை நீக்கும் முக்கிய கூறு ஆகும்! குறிப் பாக ‘கொலேஜன் செல்’ என்பது பழுதடையாமல் தடுக்கும்.

ஆண்களுக்கு ஒரு நாளைக்குப் போதுமான புரதச் சத்து அளவு 80 கிராமும்; பெண்களுக்கு 65 கிராமும் நாள் ஒன்றுக்கு உண்டால் பயன் அளிக்கும்.

ஒரு நாளின் மூன்று வேளை உணவு,இரண்டுவேளை‘நொறுக் குத் தீனி’ (Snacks) இது இடம்பெற வேண்டுமென, மருத்துவர் நிக்கோலஸ் பாரிகோன் (தோல் சிகிச்சை நிபுணர்) பரிந்துரைக்கிறார்!

இதை எப்படி எடுத்துக் கொள் ளலாம் என்பதற்கு உதாரணம் கூறுகிறார்:

வறுத்த கோழியின் மார்பு - 31 கிராம் புரதச் சத்தினைத் தருகிறது. அரை கப் நேவி பீன்ஸ் -  7 கிராம்; அவிச்ச சால்மன் மீன் - 22 கிராம். இது போதுமானதாகும்! 31 + 7 + 22.

கோழி முட்டை, கோழி, பன்றி இறைச்சி, மெலிந்த மாட்டிறைச்சி (Lean Beef), மீன் இவைகள் உடலுக்கு மிகவும் தேவையான அமினோ அமிலத்தையும் - செல்களின் பழுது நீக்கும் வகையில் பிராணிகளின் புரதம் அளிக்கும் என்பதாலும், அது தவிர தாவரப் புரதம், கய்கறி உணவுப் பழக்கமுள்ளவர்களுக்குசோயாஉணவு மூலம் tempeh, tofu) மூலம் பெறலாம்.

சால்மன் மீனின் கொழுப்பு திரவம் (EFA’s) essential folic acid மிகவும் உதவி செய்யும்.

எனவே, வாரத்திற்கு மூன்று முறை யாக இத்தகைய மீன்களை உணவாகக் கொள்ளுங்கள்!

மீன் சாப்பிடுவதற்குத் தயங்கினால், மீன் எண்ணெய் சாப்பிடலாம்! அது ‘கேப்சூலாகவும்‘ வருகிறதே!

அதுபோல கருமைப் பச்சை யான கீரை, காய்கறி வகைகளை உண்ணுங்கள். நமது தோலின் எரி யூட்டல் தன்மையை (inflammation) அது தடுக்கப் பெரிதும் உதவும்!

‘ஆலிவ் ஆயில்’  என்ற ஆலிவ் எண்ணெய் (உணவில் சேர்த்தால்) இதய நோய்த் தடுப்பானாகவும் கூட அது பயன்படுகிறது.

மற்றவை நமது உடம்பின் செல் களுக்குள் நுழைவதைவிட, இந்த ஆலிவ் எண்ணெய்மூலம் ‘ஓலிவ் ஆசிட்’ என்பது இதிலிருந்து நுழைந்து, தோல் பராமரிப்புக்குப் பெரிதும் உதவுகிறது.
(மற்றவை நாளை)

-விடுதலை,27.10.16

புதன், 26 அக்டோபர், 2016

அறிவும், துணிவுமே புதுமைக்கு அடிப்படை!நம்முடைய ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு மனிதனின் தனித்தன்மை.
இதன் உண்மையான பயன் என்ன தெரியுமா?

மந்தைகளில்சேராமல்,மனிதன் உண்மை மனிதனாகப் பரிமளிப்பது தான்!
எப்படி என்கிறீர்களா?

தனித்தன்மையோடு, சென்ற வழியே செல்லாமல் புது வழிபற்றிச் சிந்தித்து, அதில் துணிந்து நடப்பதன்மூலம் - எத்தகைய தற்காலிக இழப்புகள், எதிர்ப்புகள், ஏளனங்கள், தோல்விகள், துன்பங்கள் தொடர்ந்தாலும், இறுதியில் நிரந்தர வெற்றியும், நீடுபுகழும் - அப்படி தனி வழி சென்ற அந்த மனிதனை, மாமனிதனாக வரலாறு காட்டும் - வாழ்த்தத் தவறாது.
அறிவுடைமை பற்றி எழுதிய வள்ளுவர் துணிவுடைமைபற்றியும் கூறினாரே!

அறிவுடைமையின் முழுப் பயனை நாம் எப்போது அடைய முடியும் தெரியுமா?

அறிவுடைமையும் - துணிவுடைமையும் இணைந்து பணியாற்றும்போதுதான்!

அன்றைய உலகத்திலிருந்து இன் றைய உலகம் வரை இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டே!

2500 ஆண்டுகளுக்குமுன், தன் வழி தனி வழி என்று வகுத்துக்காட்டிய வரலாற்று பகுத்தறிவாளர்கள் மகா வீரரும், புத்தரும்தான்!

முன்னோர் சென்ற வழி என்ப தற்காகவோ முன்னோர் நடந்த வழி என்பதற்காகவோ, முன்னோர் எழுதியது என்பதற்காகவோ அதையே பிடித்துக் கொண்டிராதீர்கள்!
உங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி அந்த உரை கல்லில் உரைத்துப் பாருங் கள்!

புது வழி - அறிவு மார்க்கத்தைக் கடைப்பிடியுங்கள் என்றார்!

அறிவியலின் அடிப்படை அது தானே!

அன்றிருந்தவழியிலிருந்துமாறு பட்டு, மனித குலத்திற்கு அறிவு வெளிச்சத்தைத் தந்தவர் ஒரு அய்ன் ஸ்டீன், கலிலியோ, கலைத் துறையில் பிகாசோ அல்லது பீத்தோவன் ஆகியோர் அல்லவா?

ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனரான ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’ எளிதாகச் சொன்னார் - ‘‘மாறுபட்டுச் சிந்தியுங்கள்!’’ (Think Differently) அதுதானே அவரை உலகப் புகழ் பெற்றவராக ஆக்கியது - இல்லையா?

உலகத்தாரின் கருத்தைப் பின்பற்றி இவ்வுலகில் வாழ்வது மிகவும் எளிது. நம் கருத்தைக் கொண்டே தனிமையில் வாழ்வதும் எளிதே. ஆனால், கூட்டத்தின் இடையே சுவை குன்றாமல் தனிமையின் தனித்துவத்தை - தனி சுதந்திரத்தை நிலை நாட்டுபவனே மகத்தான மனிதன் என்றார் எமர்சன்; அதற்கு இலக்கணம் மேலே சுட்டிக் காட்டப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற ‘ஆப்பிள்’ மாமனிதர்.

அவ்வளவு தூரம் ஏன் போக வேண்டும். தந்தை பெரியார் போன்ற மகத்தான எதிர்நீச்சல்காரரை உலகம் கண்டுள்ளதா? 

மலையளவு எதிர்ப்புகள் வந்த நிலையிலும், தினையளவும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லையே! எவ்வளவு ஏளனம்! இழிமைகள் - எல்லாவற்றையும் தாண்டி -  இறுதியில், தன் கொள்கை வெற்றியை - அதன் சுவையை தனது வாழ்நாளிலே கண்டவர் -சுவைத்தவர் அல்லவா தந்தை பெரியார்?

மனிதர்கள் சென்ற வழியே சென்றிருந்தால்,ஓலைச்சுவடியும், கட்டை வண்டியும்தான் இன்றும் இருந்தி ருக்கும்.

மாற்றி தனித்தன்மையோடு சிந்தித்ததால்தான் மனிதர்கள் விஞ்ஞானிகளானார்கள், விவேகத்தின் விளைச்சல், அறுவடையாகக் கிடைத்தது; வேற்றுக் கிரகத்திற்குச் சென்று பயணம் செய்யும் அளவுக்கு அறிவும், துணிவும் மனிதர் களை உயர்த்தியது!

எனவே, மந்தைகளாகாமல், துணிந்து தனித்த சிந்தனையாளர்களாகி தகத்தகாய தங்கமாக ஒளிருங்கள், மிளிருங்கள்!

- கி.வீரமணி

-விடுதலை,26.10.16

வியாழன், 20 அக்டோபர், 2016

எது இன்பம் - வாழ்வில்?

இன்பத்தில் திளைப்பதே வாழ்க்கை என்றுதான் இந்த உலகத்தில் பலரும் எண்ணுகிறார்கள்! துன்பமே இல்லாத வாழ்க்கைதான் எனது லட்சியம் என்று பல மனிதர்கள் கருதுகிறார்கள்!

இன்பத்திற்கு என்ன அளவுகோல்? ‘இன்பம்‘ என்பதுதான் என்ன? என்ன செய்தால் - அது எப்போதும் கிடைத்துக்கொண்டே இருக்கும்? எவ்வளவு விலை கொடுத்து மனிதன் இன்பத்தை வாங்கிட முடியும்?

கொஞ்சம் ‘ஆற அமர’ சிந்தித்துப் பாருங்கள்.

ஆசைகள் எல்லாம் நிறைவேறினால் இன்பம்தானே வரும் என்றார் என் நண்பர் ஒருவர்!

‘அப்படியா? அதனை எப்படி அளப்பது? கணக்கு முறையில் கணித்தால், 50 ஆசைகளை உருவாக்குவதில், 25 நிறைவேறின என்றால், 50 விழுக்காடு இன்பம் கிடைத்து விடுகிறது என்பதுதானா பொருள்?

கூட்டிக் கழித்துப் பார்க்கையில், கணக்குக்கு இது சரி. ஆனால், வாழ்க்கைக்கு....? சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள்.

பக்கத்து வீட்டுக்காரர் ஒரு கோடி ரூபாய்க்குமேல் சம்பாதித்து ‘பெரிய கோடீசுவரனாக’ (கோடி ரூபாய் சம்பாதித்தால் ‘ஈஸ்வரர்’ கடவுள் ஸ்தானம் தானே கிடைத்துவிடுகிறது. இந்த ‘லட்சுமி’ பிறந்த நாட்டில்..) ஆகி விட்டார்; நாமும் அப்படி எப்போது ஆவது? என்ற ஏக்கம் இவரை அரித்துக்கொண்டே இருந்தது!

எப்படியோ ‘லாட்டரி’ பரிசு விழுந்து இவருக்குக் கோடி ரூபாய் கிடைத்துவிட்டது!

அவர் விரும்பியது நடந்துவிட்டது; அதன் பிறகு ஆசை நிறைவேறிவிட்டது என்று இன்பத்தில் புரள முடிந்ததா என்றால், ‘இல்லை’ என்பதே யதார்த்தமாகும்!

கோடி ரூபாய் கிடைப்பதற்குமுன் படுத்தவுடன் தூங்கி விடுவார்!

முன்பு பசியோ நல்ல வண்ணம் எடுத்து, உணவை - எவ்வகை உண வானாலும் முழு மன நிறைவோடு உண்ணுவார். நிதானமான வாழ்வு; நிம்மதியைத் தரும் அன்றாட நிலை - இவை அறவே மாறிவிட்டன!  இப்போது தூக்கம் வரவில்லை; மருத்துவரிடம் சொன்னார், அவர் மாத்திரை எழுதித் தந்து விழுங்கச் சொன்னார்.

வேளா வேளைக்குப் பசியெடுப்பது - அப்படியே  பணம் வந்த நாள்முதல் படிப்படியாகக் குறைந்துவிட்டது!

அதற்குமுன் ‘கவலையில்லாத’ மனிதராக இருந்த இந்த மனிதர், சதா கவலை தோய்ந்த முகம் கொண்டவராக மாறிவிட்டார்; ‘பணத்தை எப்படிப் பாதுகாப்பது? - திருடன் பயம் - அடுத்து வருமான வரித்துறைக்கு இனிமேல் வருஷா வருஷம் ரிட்டன் தாக்கல் செய்யவேண்டுமாமே - அதற்கு என ஒரு ஆடிட்டரை தேட வேண்டுமாமே!’

‘இதற்கிடையில் நம்மை வள்ளல் ஆக்கி, வரிசையில் நிற்கும் நன்கொடை கேட்போர் எண்ணிக்கை வேறு!’

‘சொந்தங்களான உறவுகளுக்கு நான் கிள்ளிக்கூடத் தரவில்லையே - அள்ளித்தராவிட்டாலும்கூட என்ற வசை அம்புகள் வீச்சு ஏராளம்!’ என்று மனம் புலம்ப ஆரம்பித்துவிட்டது.

அப்போதுதான் அந்தப் புதிய கோடீசுவரருக்குப் புரிந்தது! பழைய நிலையே எவ்வளவு நிம்மதியானது? ஏன் இந்தப் பணம் வந்து விரைவில் நம்மைப் பிணமாக்கிட முழு முயற்சி செய்கிறது? என்று எண்ணினார்.

பொருள் இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை என்பது உண்மைதான்; ஆனால், பொருளே வாழ்க்கை என்றால், வாழ்க்கையே பொருளற்றுப் போகும்!

எதிரே சுவரில் மாட்டப்பட்டிருந்த  இருந்த தமிழறிஞர் ஒருவரின் வாசகத் தைப் படித்தார்.

‘தீதும் நன்றும் பிறர்தர வாரா!’

ஆம்! மகிழ்ச்சி என்பது பணத் தாலோ, புகழுரைகளாலோ, பதவிகளாலோ, முகமன்களாலோ வருவதல்ல; ஏற்றம் தரும், கவலை அண்டாத எளிய வாழ்வின் மூலமே கிடைக்கும்.

அது வற்றாமல் கிடைத்தால் போதும், அதுவே வளமான வாழ்வாக அமையும் என்பதை புரிந்துகொண்டார்!

நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

 

- கி.வீரமணி

வாழ்வியல் சிந்தனைகள்

-விடுதலை,20.10.16

வற்றாத ஆறு இதோ!
ராபின் ஷர்மா என்ற அமெரிக்க எழுத்தாளர், வாழ்வியல் பற்றிய பல நூல்களை எழுதியுள்ளார். அதில் மிகவும் பிரபலமான ஒன்று Who will cry when you die? -- ‘இறந்தால் யார் அழுவார்கள்?’ என்ற அந்நூலில் உள்ள சில கருத்துகளின் பிழிவு இதோ:

இந்தப் புத்தகத்தில்...

‘‘நீ பிறந்த போது நீ அழுதாய்... உலகம் சிரித்தது.... 
நீ இறக்கும்போது, பலர் அழுதால்
அது உனக்குப் பெருமையை ஏற்படுத்தும்.

அறிஞர் திருக்குறளார் வீ.முனுசாமி அடிக்கடி தனது உரையில் குறிப்பிடுவார்.

‘‘ஓ! மனிதா, நீ பிறக்கும்போது அழுதுகொண்டே பிறந்தாய் என்றாலும், நீ மறையும்போது பலர் அழவேண்டும்; அவைதான் உன்னை ஒரு நல்ல மனிதனாக - மனிதம் படைத்த மனிதனாக உயர்த்திக் காட்டும்‘’ என்று உருக்கமாகச் சொல்வார்!

அதிலுள்ள அற்புதமான கருத்துகளை நமக்கு இணையத்தின்மூலம் அனுப்பியுள்ளார் நண்பர் ஒருவர்.

அவற்றின் பிழிவுகள் இவை:

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றைச் சொல்லித் தருகிறார்; எனவே, நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலைப்படாதீர்கள்; தேவை எனில், கவலைப்படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது மணித்துளிகளை ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்துக் கவலைகள் குறித்தும் சிந்தியுங்கள்.
(கவலைப்படுவதால் தீர்வு கிட்டி விடாது என்பது பொது உண்மை).

4. அதிகாலை எழப் பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலை எழுபவர்களே!
(நேரம் கூடுதலாக கிடைக்கும் உணர்வு அதன் மூலம் கிட்டும்!)

5. தினமும் சிரிக்கப் பழகுங்கள் - மகிழுங்கள்.
(‘வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்‘ என்பது பழைய பழமொழி அல்லவா?) அது நல்ல ஆரோக்கியத்தையும், ஏராளமான நண்பர்களையும் பெற்றுத்தரும். (மன பாரம் - சுமை குறையுமே!)

6. நிறைய நல்ல புத்தகங்களைப்  படியுங்கள். எங்கு சென்றாலும், பயணத்தின்போதும்கூட ஒரு புத்தகத்தை கையோடு எடுத்துச் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் அது மன அழுத்தத்தைக் குறைக்கும்!

இப்படிப் பல அறிவுரைகளை ‘ராபின் ஷர்மா’வின் புத்தகம் அள்ளி அள்ளித் தருகிறது!

(புத்தக நண்பர்களைப்போல புத்தாக்கம் தரும் நண்பர்கள் வேறு எவரே உளர்? என்பது நமது கேள்வி!)

படித்த பின் கற்க
‘கற்ற பின் நிற்க அதற்குத்தக’

 

- கி.வீரமணி
-விடுதலை,18.10.16

புதன், 19 அக்டோபர், 2016

கொசுக்கடியிலிருந்து மீள...!

கொசுக்கள் உயிர்க் கொல்லியாகவும் உள்ளன என்ற உண்மை, சென்னை யிலும், பிற ஊர்களிலும் பரவும் ‘டெங்கு’ காய்ச்சல்மூலம் அனைவரும் புரிந்துள்ளனர்!
பரிதாபத்திற்குரிய முறையில் பல குழந்தைகள் உயிரைக்கூட குடித் துள்ளன!

சென்னை மாநகரில் மாடி வீடுகளில் உள்ளவர்கள்கூட கொசுக்கடிக்கு விலக்கானவர்கள் அல்ல என்றால், ஏழை - எளிய, நடுத்தர மக்களின் நிலைமைபற்றி விவரிக்கவா வேண்டும்!
அண்மையில், நமது அருமை குடும்ப நண்பரும், ஓய்வு பெற்ற காவல்துறை தலைமை அதிகாரியும், பண்பட்டபடிப்பறிவுமிக்கதோழரு மானதிரு.அ.ராஜ்மோகன்அய்.பி.எஸ். அவர்கள் எனக்கு அனுப்பிய கடிதத் தினையும், அதன் கருத்துரையையுமே இந்த கட்டுரை விளக்கும்!

படித்து, நீங்களும் அப்படிச் செய்து பயன்பெறலாம்!

சில மாதங்களுக்குமுன் இக்கருத் தைப் படித்து நானே நடைமுறைப்படுத்தி பயன் அடைந்துள்ளேன்.

எளிய, அதிக செலவில்லா தற்காப்பு சுகாதார முறையை அனைவரும் கடைபிடித்தாலே பயன் ஏற்படும்!

கற்பூரம் இயற்கையாக கொசுக் களை விரட்டக்கூடிய  தன்மை உள்ளவையாகும். பக்க விளைவுகள் ஏதுமில்லாமல், குறைவான செலவில் கற்பூரத்தைக் கொண்டு கொசுக்களை எளிதாக விரட்டி விடலாம். கற்பூரத்தைக் கொளுத்த வேண்டிய  அவசியமும்  கிடையாது. 

கீழ்க்கண்ட 3 வழிமுறைகளில் கற்பூரத்தைப் பயன்படுத்தி கொசுக்கள் நம்மை அண்டவிடாமல் செய்யலாம்.

1. கடைகளில் விற்கப்படுகின்ற கற்பூரத்தில் இரண்டு  வில்லை களை வெற்றுத்தரையில் வைத்திருக்க வேண்டும். அப்படி வைக்கப்படுகின்ற ஒரு மணி நேரத்தில் கொசுக்கள் இல்லாமல் போவதைக் கண்கூடாக பார்க்கலாம். இதுபோன்று காலையிலும், மாலையிலும் இரண்டு முறை செய் யும்போது அந்தப் பகுதிகளில் கொசுக் கள் இல்லாமல் போகும்.

2. அறையின் இரு வேறு மூலைகளில் கொசுக்கள் எங்கெல்லாம் தஞ்சம் அடைகின்றன என்று தெரிகிறதோ அப்பகுதிகளில் இரண்டு கற்பூர வில்லைகளை வைக்கும்போது, அவை  சிறிது சிறிதாக ஆவியாகி கொசுக்களை விரட்டுவதுடன் காற் றையும் சுத்தப்படுத்திவிடுகின்றன.

3. அகலமான சிறிய பாத்திரம் அல்லது தட்டில் தண்ணீரை நிரப்பி அதில் இரண்டு கற்பூர வில்லைகளைப் போட்டுவைக்க வேண்டும். படுக்கை அறையில் அப்பாத்திரத்தை தண் ணீருடன் கற்பூரத்தையும் சேர்த்து வைக்கும்போது,தண்ணீரில் சிறிது சிறிதாக கற்பூரம் கரையும். சராசரியான தட்ப வெப்பத்தில் தண்ணீர் ஆவியாகும்போது, அப்பகுதி முழுவதும் கற்பூரத்தின் மணம் பரவும். சிறிது வெதுவெதுப்புடன் உள்ள தண்ணீர் என்றால் இச்செயல் இன்னும் வேகமாக இருக்கும். அறையின் அளவுக்கு ஏற்றவாறு தண்ணீர் மற்றும் கற்பூரத்தின் அளவு மாறுபடும்.

ஆக, கற்பூரத்தின் தன்மையால் கொசுக்கள் எளிதில் விரட்டப்படுவதை அனுபவப்பூர்வமாக உணரலாம். செய்து பாருங்கள். மற்றவர்களுக்கும் கூறுங்கள்.

- கி.வீரமணி

-விடுதலை,19.10.16

திங்கள், 17 அக்டோபர், 2016

ஞாயிற்றுக்கிழமைப் பள்ளியில் ஒரு பாடம்!


இயக்குநர் லிங்குசாமியின் மிக நெருக்கமான நண்பர். குடந்தையில் கல்லூரி காலத்தில் மூத்தவர். அன்பில், நட்பில், யார் யாருக்கு மூத்தவர், இளை யவர் என்ற பேதம் இவர்களைப் பிரித்த தேயில்லை என்பதை அவர் எனக்குத் தந்த நூலாகிய, பிருந்தா சாரதியின் ‘ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக் கூடம்!’ என்னும் கவிதைகள் தொகுப்பு நூல் வெளிப்படுத்தியது.

வழக்குரைஞர் தொழிலுக்குப் படித்து, வழக்குரைஞராக 2 ஆண்டுகள், ‘தொழில்’ செய்த பிறகு, தந்தை பெரி யாரின் அன்பழைப்பு என்பது எனக்குக் கட்டளையானதினால், வழக்குரைஞர் தொழிலையே நான் விட்டுவிட்டேன்.

பிரபல வழக்குரைஞராகத் திகழ்ந்த எனது நண்பர்களில் ஒருவரான - நான் பல குற்ற வழக்குகளை ‘‘அவரிடம் செல்லுங்கள்’’ என்று அனுப்பி பழகிய கொள்கை உறவுக்காரர் தோழர் மோகன் குமாரமங்கலம்.

என்னை அவர் வேடிக்கையாக ‘வாய்ய்யா ‘சண்டே வக்கீல்’ என்று அழைப்பார். ‘‘சண்டை போடும் வக்கீ லாக உங்களிடத்தில் வராமல், ‘சண்டே வக்கீல்’ தோழராக வந்திருப்பது எவ்வ ளவு மகிழ்ச்சி'' என்பேன். அவரும் சிரித்துக் கொள்வார்!

அதை எனக்கு நினைவூட்டியது ‘ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம்‘ என்ற பிருந்தா சாரதியின் சிறந்த கவிதைகள் தொகுப்பு நூல்.
கடவுளைச் சந்திக்கச் சென்றிருந்தபோது
கடவுளைச் சந்திக்கச் சென்றிருந்த             போது
என்னைப் போலவே பலர்
அங்கு வந்து
நெடுநேரம் காத்திருந்தார்கள்.

பலர் பொறுமையிழந்து
கடிகாரத்தை
மீண்டும் மீண்டும்
பார்த்தபடி இருந்தார்கள்.

அடுத்தடுத்து பலர் வந்தபடி                 இருந்ததால்
நெரிசலாகிக் கொண்டிருந்தது.

புழுக்கம் வேறு.

வந்தவர்கள் ஒவ்வொருவரும்
வி.அய்.பி. என்று
தங்களைத் தாங்களே
கூறிக் கொண்டு
முன்வரிசைக்கு முன்னேறும்
முனைப்பில் இருந்தனர்.

எனக்கும் வேறு வேலைகள்
இல்லாமல் இல்லை.

இவரைப் பார்த்தால்
வேலைகள் சுலபமாக முடியும்
என்று கேள்விப்பட்டதால்
இங்கு வந்து காத்திருக்கிறேன்.

வரிசையில் நிற்கச் சொல்லி
அதிகாரம் செய்து கொண்டிருந்தவர்
கடவுளை விடவும்
அதிகாரம் படைத்தவராயிருந்தார்.

கடவுளுக்குப் பணிவதை விடவும்
அதிகப் பணிவை
அவரிடம் காட்டிக் கொண்டிருந்தோம்.

ஆண்கள் பெண்கள் என
இருவேறு வரிசைகள்
திடீரென பிரிக்கப் பட்டதால்
கணவன் மனைவி
தாய் தந்தை
சகோதர, சகோதரிகள்
மகன் மகள்
எல்லோரும்
பிரிக்கப்பட வேண்டிய
அவசியம் உண்டானது.

இது தேவையா
என்று எனக்குள் ஒரு குரல்
எழுந்தது.
ஆனால் அதை கேட்பதற்குத்தான்
அங்கு யாரும் இல்லை.

வரிசை பிரிந்தது.

ஆண்கள் மட்டும் நிற்கும் வரிசை
பார்ப்பதற்கு அவ்வளவு
அழகாயில்லை.
பெண்கள் இல்லாத உலகம்
எப்படி இருக்கும் என்று அது
கன்னத்தில் அறைந்து சொன்னது

சிறிது நேரம் கழிந்ததும்
உரசாமல் நிற்கும்படி
ஒருவர் இன்னொருவரிடம் கூற
அங்கே லேசான வன்மம் பிறப்பதை
பதைபதைப்போடு கவனித்தேன்.

பெண்கள் வரிசையில் இருந்து
பெரும் கூச்சல் ஒன்று
திடீரென்று எழவே
என்னவென்று திரும்பினேன்.

அங்கே ஒருத்திக்கு
சாமி வந்து விட்டதாம்.

கடவுளைப் பார்க்க வந்தவர்கள்
அவள் காலில் விழுந்து
கொண்டிருந்தார்கள்.

இங்கே ஒருவர்
அவள் தன் மனைவிதான் என்றும்
கடவுளைப் பார்க்கவந்ததே
அவர் இவள் மீது வருவதால்
அவளுடன் வாழமுடியாமல் போகிறது
என்றும் அலுப்புடன் பொருமினார்.

கடவுளைக் காண வந்ததை
கண்காட்சி காணவந்தது போல
ஆக்கிக் கொண்டிருந்தோம்
டீ பிஸ்கெட் வரவழைத்து.

நெடுநேரக் காத்திருப்புக்குப் பிறகு
கடவுளை நாளைதான் பார்க்கமுடியும்
என அறிவிப்பு வந்தது.

சலசலப்புடன்
கலையத்தொடங்கினோம்.

கூட்டத்தில் சிறுவன் ஒருவன்
கேட்டான்
நாளைஎன்றால்
நம்முடைய நாளையா
கடவுளின் நாளையா என்று.

கடைசி வரிகளின் சொடுக்கு  (சாட்டை) மிக அருமை!
‘கூட்டத்தில் சிறுவன் ஒருவன்
கேட்டான்
நாளை என்றால்
நம்முடைய நாளையா
கடவுளின் நாளையா?’
இப்படிச் ‘சிறுவர்கள்’ தான் கேட்பார்கள்! பெரியவர்கள் பதில் சொல்லாமல் மிரட்டுவார்கள்.

இல்லையா? இதுதானே நம் அனு பவம்?

படியுங்கள் - பயன் பெறுங்கள்!

‘‘தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல்’’ என்றாரே புரட்சிக்கவிஞர் - அது இப்போது நினைவிற்கு வருகிறதா?
- கி.வீரமணி

-விடுதலை,9..9.16

கூவி விற்கும் பூக்கள்!முற்போக்குச் சிந்தனையும், சமூக மாற்றத்தில் அக்கறையும் கொண்ட - தவறானவைகளையே சரியானவைகளாகச் சாதிக்கும் சமூக முதலைகள் நிறைந்த - நமது நாட்டுக் கலை உலகின் புரட்டர் களை நாசுக்காக அம்பலப்படுத்தும் அறிவுப் புரட்சி யாளர்களாக பல இயக்குநர்களைச் சந்தித்தபோது, நம்முள் நம்பிக்கை துளிர்த்தது!

‘ஜோக்கர்’ படத்தைப் பார்த்தோம். இன்றைய சமுதாய ஊழல்களை தோலுரித்து ‘எக்ஸ்ரே’வாகக் காட்டியிருந்தார் இயக்குநர் ராஜுமுருகன்.
அப்போது அவர் நமக்கு பல சிறந்த இயக்குநர் - எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தினார்.

நம்மால் ‘நம் வீட்டுப் பிள்ளைகள்’ என்ற பெருமிதத்துடன் பார்க்கப்படும் வெற்றி இயக்குநர் வெற்றிமாறன், சீரிய சிந்தனையாளர் சீனு இராம சாமி - இவர்களது அறிவார்ந்த சமூகம் சார்ந்த திரைப்படங்களைப் பாராட்டியுள்ளோம். கலை நமக்கு விரோதி அல்ல; கலையை ஆதிக்கத்தின் அடி வேராக மாற்றும் பழைமையாளர்களும், சுயநல சக்திகளே நமக்கு - நம் இனத்தின் வளர்ச்சிக்கும், வாழ்விற்கும், முன்னேற்றத்திற்கும் தீராப் பகைவர் கள் என்று கூறிய பெரியாரின் தொண்டன் அல்லவா நாங்கள்.

அவ்வரிசையில் எவ்வளவு கவிதை, கற்பனை - எழுத்தாற்றல் உள்ளவராக இயக்குநர் தயாரிப்பாளர் லிங்குசாமி அவர்கள் உள்ளார்கள் என்பதை அவர் அன்று அறிமுகமானபோது,  ‘அய்க்கூ’ கவிதைகள், புதுக்கவிதைகள் கொண்ட இரண்டு கவிதை நூல்களை அளித்தார்.

படித்தேன் - சுவைத்தேன் - பெருமிதம் தந்தது! நம் இளைஞர், வாலிபர், நடுத்தர வயதாளர்கள் எல்லோரும் முகிலைக் கிழித்த முழு மதிகளாக பரிணமிக்கின்றனர் என்று வியந்தேன்.
லிங்கூ 2 என்ற ஒரு நூலில் வரைகோடுகளாக ஓவியமும், கவிதைகளும் ஒய்யாரப் போட்டியில் ஒன்றை ஒன்று மிஞ்சுகின்றன!
செல்ஃபி மோகம் இன்று எவ்வளவு அங்கெங் கினாதபடி எங்கும் நிறைந்துள்ளது; பல நேரங்களில் உயிர்க்கொல்லியாகவும்கூட ஆகிவிடு
கிறது என் றாலும்கூட,

‘செல்பி எடுத்துக் கொள்கிறது மரம்‘ என்ற தொகுப்பு எல்லாம் சிந்தனைத் தெறிப்புகள்!

‘‘நிலவொளியில் மயானம்
அமைதியாய் வெட்டியான்
எங்கோ உதிர்ந்து கொண்டிருக்கிறது ஒரு பூ’’
- என்னே கருத்து வளம்!
‘‘வீட்டில் நிகழ்ந்த மரணம் அறியாமல்
எப்போதும் கூவிக் கொண்டிருக்கிறது
குயில்’’

‘‘மரத்தடியில்
வகுப்பெடுக்கிறார் ஆசிரியர்
கற்றுக் கொடுக்கிறது
மரம்‘’

‘‘பதித்த எல்லாத் தடங்களும்
அடுத்த அலைவரைதான்’’
‘‘இன்னும் கூவித்தான்
விற்க வேண்டியிருக்கிறது
பூக்களை’’

- இப்படி எத்தனையோ கவிதைச் சொடுக்குகள்!
கருவாட்டை விற்பவர்கள்
கூவுவதில்லை. காரணம்
அதன் ‘நாற்றமே’ சுண்டியிழுக்கிறது
பல காலம் பழகிவிட்டதால் - இல்லையா?
என்றே கூறத் தோன்றுகிறது.

வண்ணத்துப் பூக்களை, வாடா மலர்களான மண மல்லிகளைக்கூட கூவித்தான் விற்றுக் கொண்டிருக்கிறோம் நாங்கள்! கூந்தல் உள்ளவர்களும் வாங்கத் தயங்குகிறார்களே!

எனவே, இன்னும் பல லிங்குசாமிகளைத் தேடுகிறோம், தேடிக் கொண்டே இருக்கிறோம்.

- நாளை பிருந்தா சாரதியின் ஒரு சுவையான சொடுக்குபற்றி....
- கி.வீரமணி


-விடுதலை,8.9.16

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

அரிஸ்ட்டாட்டிலின் அறிவுரை - அனுபவ மொழிகள்


கிரேக்கத்தின் தலைசிறந்த தத் துவ ஞானியான அரிஸ்டாட்டில், பிளாட்டோவின் மாணவர்; பிளாட்டோ கிரேக்க மேதை, பேரறிவாளர் சாக்ரட் டீசின் மாணவர்.
அரிஸ்டாட்டில்தான் மாவீரன் அலெக்சாண்டரின் ஆசிரியர்.
அவருடைய அறிவுரைக் கொத்து மலர்களைப் பறித்த அமெரிக்காவில் தற்போதுள்ள நமது நண்பர் செல்லா அவர்கள் (வயது 90 நெருங்குகிறவர்) பிரபல வேலூர் டாக்டர் ஏ.சி.ஜான்சனின் வாழ்விணையர் டாக்டர் சத்திய பாபமாவின் அண்ணனார்; டாக்டர் ஜான்சனின் தங்கை டாக்டர் வசந்தாவின் வாழ்விணையர்.
அவர் உற்ற நண்பர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறுவதோடு, முக்கிய அறிவு மலர்களைப் பறித்து மாலையாகக் கோர்த்து அனுப்பி உதவிடுவதில் கொள்ளை இன்பம் கொள்ளும் பெருந் தகையாளர்; மனித நேயர். எங்கள் குடும்ப உறவு என்றே சொல்லி நாங்கள்
பெருமைப்படுவதுண்டு.
அவர் அனுப்பிய கருத்து மலர்களின் மணம் இதோ:
1. எவ்வளவுதான் பலவகைப் பொருள் - செல்வம், சொத்து பெற்றிருந் தாலும், நண்பர் இல்லாத வாழ்க்கையை எவரும் விரும்பவே மாட்டார்கள்; (அது ஒரு சிறப்பான வாழ்க்கையே அல்ல).
2. கற்றறிந்த மனம் உடையவர் என்பதன் அடையாளம் என்ன தெரியுமா?
ஏற்காத சிந்தனைகளைக்கூட ரசித்து வரவேற்கும் பண்பேயாகும்.
3. ஒரு மனிதன் எப்போது புத்திசாலியாகிறான் தெரியுமா? தன்னை அறிந்து, உணர்ந்து கொண்ட பின்புதான்!
4. பொறையுடைமை - பொறுமை காத்தல் முதலில் கசப்பாக இருக்கும்; பிறகு அதன் கனிகள் மிகவும் இனிக்கும்!
5. நியாயமான செயல்களைச் செய்யும்போது நாம் நியாயமாக, நீதியாக நடப்பவர்கள். வெறும் ஆத்திரம் கொப்பளிக்க கோபத்துடன் செய்யும் செயல்கள் நம்மை ஆத்திரக்காரனாகவே காட்டும். துணிச்சலான செயல்களால் நாம் துணிவுள்ள மனிதர்களாக மாறுவோம்!
6.மிகுந்தஇருள்சூழ்ந்த கால கட்டத்தில்தான் வாழ்வில் வெளிச் சங்களைத் தேடிக் கண்டுபிடிக்க இலக்கு நோக்கிச் செல்ல முயலவேண்டும்.
7. தொல்லை வரும்போது அதை எதிர்கொள்ளாது ஓடுபவன் கோழை. தற்கொலை செய்துகொள்பவன் மரணத்தினை ஏற்கத் துணிந்தவன் என்றாலும்கூட, அவன் ஒன்றும் பெரிய இலட்சியங்களுக்காக உயிரைத் தியாகம் செய்தவன் அல்ல; மாறாக, தொல்லைகளை சமாளிக்க முடியாமல் தப்பித்து ஓடியவனே!
8. நாம் செய்யும் பணியில் நமக்கு இன்பம் இருந்தாலே அது செம்மையான முழுமையாக அமைவது உறுதி.
9. அறிந்தவர்கள் செயலில் செய் கிறார்கள்! புரிந்தவர்கள் போதிக்கிறார்கள்!
10. சிறந்த புத்திசாலி என்பவன் தன்னைத் தேவையின்றி அபாயத்திற்கு ஆட்படுத்திக் கொள்ளமாட்டான். காரணம், அதுபோன்றவைகளுக்கு எதிரான போதிய பாதுகாப்பைத் தேடிக் கொள்ளுவான்; ஆனால்,  அம்மாதிரி நெருக்கடியான உச்சகட்டத்தில் சில சூழ்நிலையில் வாழ்வது அர்த்தமற்றது என்று உணர்ந்து விட்டால், உயிரையும் அர்ப்பணிக்கத் தயங்கமாட்டான்.
11. மிகப்பெரிய உயர்வான திறமை (ணிஜ்நீமீறீறீமீஸீநீமீ) என்பது எதிர்பாராது வரும் விபத்து போன்ற நிகழ்வல்ல. உயர் உள்ளிலின் விளைவு! அதோடு, இடையறா உண்மை முயற்சி, சரியான முறையில் சரியானபடிச் செய்யும் நேர்த்தி - இவைகளின் கூட்டுப் பலன் ஆகும்!
உங்கள் தேர்வு (சிலீஷீவீநீமீ) தான் உங்களை உயர்த்துமே தவிர, உங்கள் வாய்ப்பு (சிலீணீஸீநீமீ) ஒருபோதும் உயர்த் தாது!
பைத்தியக்காரத்தனம் கலவாத மேதைகளே உலகில் இருக்க முடியாது!
12. எதைச் செய்யும் அதிகாரம் நமக்குள்ளதோ அதைச் செய்யாமல் இருக்கச் செய்யும் அதிகாரமும் நம்முள் உள்ளது என்பதை மறவாதீர்!
13. மிக மோசமான சமத்துவமின்மை என்பது எது தெரியுமா?
சமமாக இல்லாதவர்களோடு போட்டி போட சம வாய்ப்பு அளிக்கும் மோசடி.
14. விமர்சனமோ - நம்மைப்பற்றி வரக்கூடாது என்று ஒருவன் கருதினால், அவன் எதையும் பேசக்கூடாது; எதையும் செய்யக்கூடாது; எதுவாகவும் இருக்கக்கூடாது! (மண் புழு வாழ்க்கை மனித வாழ்க்கை அல்ல).
என்னே நேர்த்திய அனுபவப் பாடங்கள் இவை.
முழுமையாகவோ அல்லது  முடிந்த வரையோ பின்பற்றிட முயலுங்கள்; பிறகு நீங்கள் வாழ்வில் தானே உயர்வீர்கள்!
-விடுதலை,15.8.16