பக்கங்கள்

திங்கள், 17 அக்டோபர், 2016

ஞாயிற்றுக்கிழமைப் பள்ளியில் ஒரு பாடம்!


இயக்குநர் லிங்குசாமியின் மிக நெருக்கமான நண்பர். குடந்தையில் கல்லூரி காலத்தில் மூத்தவர். அன்பில், நட்பில், யார் யாருக்கு மூத்தவர், இளை யவர் என்ற பேதம் இவர்களைப் பிரித்த தேயில்லை என்பதை அவர் எனக்குத் தந்த நூலாகிய, பிருந்தா சாரதியின் ‘ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக் கூடம்!’ என்னும் கவிதைகள் தொகுப்பு நூல் வெளிப்படுத்தியது.

வழக்குரைஞர் தொழிலுக்குப் படித்து, வழக்குரைஞராக 2 ஆண்டுகள், ‘தொழில்’ செய்த பிறகு, தந்தை பெரி யாரின் அன்பழைப்பு என்பது எனக்குக் கட்டளையானதினால், வழக்குரைஞர் தொழிலையே நான் விட்டுவிட்டேன்.

பிரபல வழக்குரைஞராகத் திகழ்ந்த எனது நண்பர்களில் ஒருவரான - நான் பல குற்ற வழக்குகளை ‘‘அவரிடம் செல்லுங்கள்’’ என்று அனுப்பி பழகிய கொள்கை உறவுக்காரர் தோழர் மோகன் குமாரமங்கலம்.

என்னை அவர் வேடிக்கையாக ‘வாய்ய்யா ‘சண்டே வக்கீல்’ என்று அழைப்பார். ‘‘சண்டை போடும் வக்கீ லாக உங்களிடத்தில் வராமல், ‘சண்டே வக்கீல்’ தோழராக வந்திருப்பது எவ்வ ளவு மகிழ்ச்சி'' என்பேன். அவரும் சிரித்துக் கொள்வார்!

அதை எனக்கு நினைவூட்டியது ‘ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம்‘ என்ற பிருந்தா சாரதியின் சிறந்த கவிதைகள் தொகுப்பு நூல்.
கடவுளைச் சந்திக்கச் சென்றிருந்தபோது
கடவுளைச் சந்திக்கச் சென்றிருந்த             போது
என்னைப் போலவே பலர்
அங்கு வந்து
நெடுநேரம் காத்திருந்தார்கள்.

பலர் பொறுமையிழந்து
கடிகாரத்தை
மீண்டும் மீண்டும்
பார்த்தபடி இருந்தார்கள்.

அடுத்தடுத்து பலர் வந்தபடி                 இருந்ததால்
நெரிசலாகிக் கொண்டிருந்தது.

புழுக்கம் வேறு.

வந்தவர்கள் ஒவ்வொருவரும்
வி.அய்.பி. என்று
தங்களைத் தாங்களே
கூறிக் கொண்டு
முன்வரிசைக்கு முன்னேறும்
முனைப்பில் இருந்தனர்.

எனக்கும் வேறு வேலைகள்
இல்லாமல் இல்லை.

இவரைப் பார்த்தால்
வேலைகள் சுலபமாக முடியும்
என்று கேள்விப்பட்டதால்
இங்கு வந்து காத்திருக்கிறேன்.

வரிசையில் நிற்கச் சொல்லி
அதிகாரம் செய்து கொண்டிருந்தவர்
கடவுளை விடவும்
அதிகாரம் படைத்தவராயிருந்தார்.

கடவுளுக்குப் பணிவதை விடவும்
அதிகப் பணிவை
அவரிடம் காட்டிக் கொண்டிருந்தோம்.

ஆண்கள் பெண்கள் என
இருவேறு வரிசைகள்
திடீரென பிரிக்கப் பட்டதால்
கணவன் மனைவி
தாய் தந்தை
சகோதர, சகோதரிகள்
மகன் மகள்
எல்லோரும்
பிரிக்கப்பட வேண்டிய
அவசியம் உண்டானது.

இது தேவையா
என்று எனக்குள் ஒரு குரல்
எழுந்தது.
ஆனால் அதை கேட்பதற்குத்தான்
அங்கு யாரும் இல்லை.

வரிசை பிரிந்தது.

ஆண்கள் மட்டும் நிற்கும் வரிசை
பார்ப்பதற்கு அவ்வளவு
அழகாயில்லை.
பெண்கள் இல்லாத உலகம்
எப்படி இருக்கும் என்று அது
கன்னத்தில் அறைந்து சொன்னது

சிறிது நேரம் கழிந்ததும்
உரசாமல் நிற்கும்படி
ஒருவர் இன்னொருவரிடம் கூற
அங்கே லேசான வன்மம் பிறப்பதை
பதைபதைப்போடு கவனித்தேன்.

பெண்கள் வரிசையில் இருந்து
பெரும் கூச்சல் ஒன்று
திடீரென்று எழவே
என்னவென்று திரும்பினேன்.

அங்கே ஒருத்திக்கு
சாமி வந்து விட்டதாம்.

கடவுளைப் பார்க்க வந்தவர்கள்
அவள் காலில் விழுந்து
கொண்டிருந்தார்கள்.

இங்கே ஒருவர்
அவள் தன் மனைவிதான் என்றும்
கடவுளைப் பார்க்கவந்ததே
அவர் இவள் மீது வருவதால்
அவளுடன் வாழமுடியாமல் போகிறது
என்றும் அலுப்புடன் பொருமினார்.

கடவுளைக் காண வந்ததை
கண்காட்சி காணவந்தது போல
ஆக்கிக் கொண்டிருந்தோம்
டீ பிஸ்கெட் வரவழைத்து.

நெடுநேரக் காத்திருப்புக்குப் பிறகு
கடவுளை நாளைதான் பார்க்கமுடியும்
என அறிவிப்பு வந்தது.

சலசலப்புடன்
கலையத்தொடங்கினோம்.

கூட்டத்தில் சிறுவன் ஒருவன்
கேட்டான்
நாளைஎன்றால்
நம்முடைய நாளையா
கடவுளின் நாளையா என்று.

கடைசி வரிகளின் சொடுக்கு  (சாட்டை) மிக அருமை!
‘கூட்டத்தில் சிறுவன் ஒருவன்
கேட்டான்
நாளை என்றால்
நம்முடைய நாளையா
கடவுளின் நாளையா?’
இப்படிச் ‘சிறுவர்கள்’ தான் கேட்பார்கள்! பெரியவர்கள் பதில் சொல்லாமல் மிரட்டுவார்கள்.

இல்லையா? இதுதானே நம் அனு பவம்?

படியுங்கள் - பயன் பெறுங்கள்!

‘‘தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல்’’ என்றாரே புரட்சிக்கவிஞர் - அது இப்போது நினைவிற்கு வருகிறதா?
- கி.வீரமணி

-விடுதலை,9..9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக