பக்கங்கள்

சனி, 29 அக்டோபர், 2016

‘‘அகப்படாத பறவை; அணியக்கூடாத அணி!’’



போதைகளில் மீளா கடும் போதை - மயக்கங் களிலேயே ஏலா மயக்கம் - எது தெரியுமா? தற் புகழ்ச்சிதான்.

எவ்வளவு சிறந்தவர்களையும் வீழ்த்தும் படுகுழி தற்புகழ்ச்சிதான்!

பல நண்பர்கள் பேசும் பேச்சுகளிலே ‘நான், நான், நான்,’ ‘தான்’; மறந்தும் ‘நம்ம’, ‘நாங்கள்’, ‘எங்கள்’ என்று அவர்களின் வாய்களில் வரவே வராது!

கேட்பவர்கள் மனதிற்குள் அருவருப்பு அடை வார்களே என்ற எண்ணம்கூட இல்லாமல் இப்படி தங்கள் ‘சுயபுராணத்தை’ இடைவெளி இன்றி தொடர்ந்து  ஊதிக் கொண்டே உள்ளவர்கள், அவர் களது நெருங்கிய நண்பர்களைக்கூட மனதில் மதிப்பிழக்கச் செய்பவர்களாக மாற்றி விடுவதை ஏனோ புரிந்து கொள்வதே இல்லை!
‘ஆசை வெட்கமறியாது’ என்பது இதனால்தானோ!

பழமொழி நானூறு என்ற பழைய நீதி நூலில் உள்ள இரண்டு பாடல்கள் நம் அனைவருக்கும் சிறந்த பாதுகாப்பரண்களாகும், அதிலும் குறிப்பாக மேடைப் பேச்சுக்கள், கட்சித் தலைவர்கள், ஆட்சி யாளர்கள் - இப்படி பல தரப்பட்டவர்களுக்குச் சரியான வழிகாட்டும் நெறி முறைகள் - குழிகளில் வீழ்ந்துவிடாதீர் என்ற எச்சரிக்கை விளக்குகள்!

‘தற்புகழ்ச்சியால் வரும் தலைக்குனிவு’ என்ற தலைப்பில் 66ஆவது பாடல் ஒன்று இதோ:

செய்த கருமம் சிறிதானும் கைகூடா
மெய்யா உணரவும் தாம்படார் - எய்த
நல்லத்தக்க தம்மைப் புகழ்தல் புலத்தகத்துப்
புள்அரைக்கால் விற்பேம் எனல்.

ஒரு செயலை நன்கு செய்து முடிக்கும் திறமை இல்லாதவர்கள் இதைச் செய்து இவன் முடிப்பான். அதனால் வரும் பயனைப் பெறுவான் என்று, மற்ற வர்களால் நம்பவும் முடியாதவனாக இருப்பவன், தான் அந்தச் செயலைச் செய்து முடித்து, அதனால் பெரும் பயன் அடைந்து விட்டதைப் போலப் பொய்யாகத் தம்மைத் தாமே புகழ்ந்து போற்றிக் கொள்ளுதல், காட்டில் (கைக்கு அகப்படாமல்) இருக்கிற பறவை யைப் பிடித்து அரைக்கால் பொன்னுக்கு விற்போம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதைப் போலக் கேலிக்குரியதாகும். (கருமம் - செயல், எய்துதல் - அடைதல், புலத்தகத்து - காட்டினிடை. புள் - பறவை). வீண் புகழ்ச்சி, தற்பெருமை வேண்டாம் எனச் சொல்லும் இப்பாடலில் பழமொழி “புலத்தகத்துப் புள்அரைக்கால் விற்பேம் எனல்.”

அதேபோன்று

புகழ்ச்சி மயக்கம் பொருத்தமற்றது என்ற தலைப் பில், ஒரு பாடல் (67ஆவது பாடல்)
தமரேயும் தம்மைப் புகழ்ந்துஉரைக்கும் போழ்தில்
அமராது அதனை அகற்றலே வேண்டும்!
அமைஆரும் வேற்ப! அணியாரே தம்மைத்
தமவேனும் கொள்ளாக் கலம்.

தமர் - தமக்கு வேண்டியவர்கள், உறவினர் அல்லது நண்பர் சுற்றத்தார்களே என்றாலும், அவர் கள் தம்மைப் பாராட்டிப் புகழ்ந்து தேவைக்கு அதிகமாகப் போற்றும் போது, அமராது - அந்தப் போற்றிப் புகழ்ந்துரைகள், பாராட்டுக்கு அகமகிழ்ந்து இருந்துவிடாது, அப்படிப்பட்ட வீண் புகழ்ச்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும். (அமை - மூங்கில், ஆரும் - நிறைந்த, வெற்பு - மலை) நீண்டுயர்ந்த மூங்கில்கள் செழித்து வளரும் மலைநாட்டவனே! தன்னுடையதே என்றாலும், பொன்னால் செய்த ஆபரணங்களே ஆனாலும், பொருத்தமில்லாதவற்றை அணிந்து கொள்ள எவரும் விரும்ப மாட்டார்கள். கொள்ளா - பொருந்தாத, கலம் - ஆபரணம். இப்பாடலில் பழமொழி - ‘‘அணியாரே தம்மைத் தவமேனும் கொள்ளாக் கலம்.”
“அணியாரே தம்மை தமவேனும் கொள்ளாக் கலம்” என்று முடிகிறது!

கிரேக்க ஞானி சாக்கரட்டீசின் அறிவுத் திறனை அகிலமே பாராட்டுகிறது இன்று!

அவரோ எனக்குத் தெரிந்ததெல்லாம் என் அறியாமை ஒன்றுதான் என்றார்!
என்னே தன்னடக்கம்! தலைக்கனம் நுழைய முடியாத இரும்பரண் மூளை!

தந்தை பெரியார் முன் யாரேனும் புகழ்ந்தால் அவரது முக பாவனை மாறும், ‘உம்’ அப்புறம் ‘வேறென்ன’ என்பார் தந்தை பெரியார். அதையும் மீறி ‘பம்ப்’ அடித்தாலும் கட்டிலில் கிடக்கும் பத்திரி கையை - ஏட்டை எடுத்து அதனைப் படிக்கத் தொடங்கிவிடுவார்.

அதற்குப் பொருள் - நாசூக்காக ‘நீங்கள் விடை பெறுங்கள்’ என்பதல்லாமல் வேறு என்ன?

தன்னைக் காப்பது நோய் நொடிகளிலிருந்து மட்டும் அல்ல நண்பர்களே!

நோய்களில் கொடிய நோயான தற்புகழ்ச்சி, புகழ்ச்சிப் போதை மயக்கம். இவைகளிலிருந்து நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டாமா? சிறந்த வாழ்க்கை அதுவே!
- கி.வீர்மணி
வாழ்வியல் சிந்தனைகள்

-விடுதலை,23.9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக