பக்கங்கள்

பண்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 டிசம்பர், 2020

இருவர் நிகழ்வுகள் - மூன்று பாடங்கள்!



மதுரை மாநகரிலிருந்து ஒரு செய்தி!


27.11.2020 அன்று ஒரு வயது முதிர்ந்த பெரியவர் நடந்து செல்லுகிறார் - கையில் ஒரு செருப்புடன். காரணம், மற்றொரு செருப்பு முந்தைய ஆட்டோவில் பயணம் செய்தபோது மற்றொரு காலிலிருந்து நழுவி வழியில் எங்கோ விழுந்து விடுகிறது! அவர் நடந்து சென்று விழுந்து விட்ட அந்த மற்றொரு செருப்பைத் தேடிக் கண்டுபிடித்தார். காலில் அணிந்து கொண்டே நடந்து செல்லுகிறார்.


ஓர் ஆட்டோ ரிக்ஷாவை ஒருவர் ஓட்டி வரும் போது, நடந்து வரும் இவரைப் பார்த்து, பார்த்த முகமாக உள்ளதே என்று நினைவலைகளை எழும் பச் செய்கிறார். அவர் இரண்டுமுறை எம்எல்.ஏ.வாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் என்.நன்மாறன் என்பது புரிந்துவிட்டவுடன், தனது ஆட்டோ ரிக்ஷாவை திருப்பி -  பானகல் சாலையில் ‘நடந்து வரும் அவர்' அருகே நிறுத்தி ‘அய்யாஇதில் ஏறிக் கொள்ளுங்கள். நான் கொண்டு போய் விடுகிறேன் - கருப்பையூரணிக்கா? கொண்டு போகி றேன், ஏறி அமருங்கள்' என்று கூறுகிறார்!


உடனே அந்தப் பெரியவர் ‘தன்னிடம் ரூபாய் 20 தான் உள்ளது. ஆகவே அதற்கு மேல் தர வாய்ப்பில்லை' என்று தயக்கமின்றி, கூச்சமின்றி - தன்னிலை விளக்கம் தருகிறார்.


‘பரவாயில்லை. நீங்கள் ஏறி உட்காருங்கள் அய்யா' என்றார் ஓட்டுநர்.


தான் ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் - ஊரறிந்த கொள்கைப் போராளி - என்ற அடை யாளத்தை அவரும் சொல்லவில்லை. இடம் வந்தது. இறக்கி விட்டவுடன், ரூபாய் 20அய் அவர் தர முயலும் போது, ‘அய்யா, நீங்கள் இதைத் திரும்பும் பயணத்திற்கு வைத்துக் கொள்ளுங்கள் - உங்களிட மிருந்து பணம் வாங்க நான் விரும்பவில்லை' என்று அன்பொழுகக் கூறிவிட்டு, அவருடன் ஓர் ஒளிப்படம் எடுத்துக்கொண்டு தனது ஆட்டோவை ஓட்டிச் செல்லுகிறார். அப்போது அந்த ஆட்டோ ஓட்டுநர் சென்னார், ‘இவர் போன்றவர்களுக்கு உதவும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிட்டியதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்' என்றார்.



ஒரு கையில் ஒரு செருப்புடன் மறு செருப்பைத் தேடிக் கண்டுபிடிக்க நடந்து சென்றவர் வேறு யாருமில்லை - இரண்டு முறை சட்டமன்ற உறுப் பினராக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழரும், எளிமையின் சின்னமுமான தோழர் என்.நன்மாறன் அவர்கள்தான்! நகைச்சுவையாகப் பேசி சிந்திக்க வைக்கும் சிறந்த கொள்கை வீரர்!


ஆட்டோவை ஓட்டி அன்பும், பண்பும் காட்டிய தோழர் பெயர் பாண்டி. அவர் சொல்கிறார், ‘கொள்கை ரீதியாக நான் அவரிடமிருந்து மாறுபடு கிறவன். நான் பசும்பொன் தேசிய கழக இளைஞரணி பொறுப்பாளர் என்றாலும், அவரது (நன்மாறன் அவர்களது) எளிமை, நேர்மை மனித நேயம் என்னை ஈர்த்ததால் நான் மனநிறைவுடன் அவருக்கு உதவிடும் அரிய வாய்ப்பைப் பற்றிக் கொண்டேன்' என்று கூறியுள்ளார்.


இச்செய்தி சமூக வலைதளங்களில், ஊடகங்களில் பரவியுள்ளது. (இந்தச் செய்தியை 4.12.2020 ‘இந்து' நாளேட்டில் திரு.சுந்தர் என்ற செய்தியாளரான நண்பர் தந்துள்ளதைப் படித்தே நான் இதை உங்களுக்குத் தரும் வாய்ப்பு ஏற்பட்டது).


இந்த இருவரிடமிருந்து நாம் கற்க வேண்டிய அரிய பாடங்கள் மூன்று:



  1. எளிமை - இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ஒருவர் - கம்யூனிஸ்ட்கள் தங்களது சட்ட மன்ற சம்பளத்தைக் கூட கட்சிக்கே கொடுத்து, அவர் கள் தரும் ஒரு தொகையை மட்டுமே பெறும் அத்த கைய எடுத்துக்காட்டான தோழர்கள். அவரிடம் பையில் 20 ரூபாய் தான் இருந்துள்ளது. அது வெளி யில் கிளம்பி திரும்ப வீடு சேரும் வரையில் செல வுக்கு இருந்த "பெரிய தொகை!"


- இன்றுள்ள டாம்பீக பொதுவாழ்க்கை வாண வேடிக்கை வெளிச்சத்தில் இதை எளிதில் நம்பவே முடியாது பலரால்.


இப்படியும் எளிமையும், நேர்மையும் கொண்ட கொள்கை லட்சிய உணர்வாளர்கள் வாழத்தான் செய்கிறார்கள்.



  1. அதுபோல அந்த ஆட்டோ ஓட்டுநர் நண்பர் பாண்டி போன்ற கருணையும், அன்பும் பொங்கும் வாழ்க்கை நெறியாளர்கள். கொள்கையால் வேறு பட்டாலும், மனித நேயம் அதனினும் பெரிது - தாண் டியது என்பதை அவரது சீரிய நடவடிக்கை மூலம் சமூகத்திற்கு உணர்த்தி இருக்கிறார்.


பாண்டி அவர்களை வெகுவாகப் பாராட்டுகி றோம் - கொள்கைக்கு அப்பாற்பட்டு!



  1. எளிமை, நேர்மை, அன்பு, கருணை என்றுமே மனிதத்திடமிருந்து வற்றி விடாது என்பதே பேருண்மை!


வளரட்டும் இந்தப் பண்பாடு!


வியாழன், 1 ஆகஸ்ட், 2019

பண்புடையாளர் தொடர்புதான் பெறர்க்கரிய பேறு!



சமுக வாழ்க்கையில் நாம் பல நண்பர்களைப் பார்க்கிறோம்; அவர்களோடு பழகுகிறோம். ஆனால் அனைவருமே நமது உள்ளத்தில் இடம் பெற்றவர்களாக - ஆகிவிட முடியாது!

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர்தம்

உறவு கலவாமை வேண்டும்" என்ற வள்ளலாரின் வாழ்க்கை எச்சரிக்கையை - பொது வாழ்வில் உள்ள நம்மைப் போன்ற பலரால் பின்பற்ற இயலாது என்றாலும், அவர்களை எந்த இடத்தில் நிறுத்தி விட வேண்டுமோ, அந்த இடத்தோடுதான் நிறுத்தி விட வேண்டும். காரணம் பழகும் பலரும் அப்படி நம்மிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வந்து பழகுபவர்கள். நம்மால் அதைச் செய்ய முடியாது என்று தெரிந்தால் அவர்களேகூட "அற்றகுளத்து அறு நீர்ப்பறவை போல்" பறந்து விடுவர்; நமக்கும் நிம்மதி!

மற்றும் சிலர், இன்றில்லாவிட்டாலும் இவரால் என்றாவது சிறுபயன் விளையுமே, அதற்காகவாவது அவருடன் உள்ள தொடர் பினை நைந்து போகாமலும், பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் பழகுபவர்களாக இருப்பார்கள்! அத்தகையவர்களை நாம் அடையாளம் கண்டு உள்ளத்தின் மூலையில் அதை நிறுத்திடப் பழகிக் கொள்ள வேண்டும்!

இன்னொருவகை - நமக்குப் புதிய அறிமுகம்தான் - ஆனால் ஏதோ பல ஆண்டு காலம் பழகிய பான்மையரைப் போல கலகலப்பு, சலசலப்புடன் நம்மைக் கட்டி அணைத்து 'உயிருக்கு உயிரானவர்' போன்று - சிறப்பாக நடித்து, காலை வாரி விட்டு, காட்டிக் கொடுக்க வேண்டிய வேளை வரும்போது அதைக் கச்சிதமாகச் செய்து தனக்கும், அதன் விளை வினால் ஏற்பட்ட கேட்டிற்கும் எவ்விதத் தொடர்போ, முகாந்திரமோ இல்லாத மாதிரி நம்மிடமே அனுதாபத்தோடு, ஆறுதலும்கூட கூற முன் வருவார்கள்! இவர்களைவிட நடிப்புக் கலை கற்றவர்கள் எவரை நாம் எளிதில் பார்க்க முடியும்?

நம்மோடு நீண்ட காலம் பழகிய ஒரு இயக்க நண்பர். அன்றாடம் சந்திக்கும் வாய்ப்பும் பெற்றவர். அவர் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துவிட்டு, "எனக்கு என்றென்றும்  தலைவர் - நீங்கள்தான்" என்றெல்லாம் நாம் கேட்காத வாக்குறுதியை தந்துவிட்டு வழி யனுப்பி வைத்து - அடுத்தநாள் நமது இன எதிரி நாளேட்டில் ஒரு அறிக்கை, அபாண்ட ஆதார மற்ற பொறாமைப் புழு நெளிந்த அறிக்கை - 'நீயுமா புருட்டஸ்' என்ற ஷேக்ஸ்பியர் எழுதிய ஜுலியர் சீசரின் உலகறிந்த காவிய வரிகளால் என்னை தேற்றிக் கொண்டேன்.

ஏன்  ரத்த உறவுகளில்கூட பயன் கருதி பாசம் காட்டும் பல்வேறு சொந்தங்களையும் மறக்காமல், மன்னித்தே பழகும் நிலை பெற் றுள்ளோம்!

அது அய்யா தந்தை பெரியாரிடம் யாம் பெற்ற - கற்ற - பாடங்களில் முக்கியமானது.

பொது வாழ்வில் பணியாற்றும் எவரும் "தடித்த தோலர்களாகவும்," கேளாக் காதர் களாகவும் மாறி, அவமானத்தை வழிந்த எச்சிலைத் துடைத்தெறிந்து அருவறுப்பற்று நடந்து கொள்ளுபவர்கள் போலத்தான் நடக்க வேண்டும் - லட்சிய வெற்றியைக் கருதி!

'மிசா' காலத்தில் கைதியாக உள்ளே  இருந்தபோதுகூட, என்னை,  அன்னையாரைத் தாறுமாறாகப் பேசிய ஒருவருக்கு உள்ளேயும் சில நெருக்கடி (அந்த வெளி நெருக்கடி காலத் தில்தான் உள்ளே வந்தவர்) அதைத் தீர்த்து வைக்க எனது முக்கிய அதிகாரி ஒருவருக்குப் பரிந்துரையை எனது வீட்டார் மூலம் அனுப்பச் செய்து, தீர்த்தேன் மற்றும் சில உதவிகளும்கூட உண்டு. சொல்லுதல் தேவையற்றது! வெளியே விடுதலை ஆகி வந்து அவர் தாக்கி - ஆதாரமற்றப் பேச்சுகளை சிலர் தூண்டுதலால் பேசியதும் உண்டு.

இவருக்குப் பால் வார்த்தீர்களே என்று இடித்துரைத்தனர் இல்லத்திலிருந்த சிலர். எனக்கு வருத்தமே இல்லை. அப்போது அவருக்கு உதவிய மகிழ்ச்சியான நினைவு மட்டும் இருந்தது!

காரணம் தந்தை பெரியாரிடம் கற்ற பண்பு. எவ்வளவு துரோகத்தையும் எளிதில் ஜீரணிக்கும் மாமனிதர் அவர்!

மான அவமானம், நன்றி, எதிர்பார்ப்பு என்பவையெல்லாம் பொது வாழ்வில் எதிர் பார்க்கக் கூடாத ஒன்று என்பதை விதியாக நாம் ஆக்கிக் கொள்வதுதான் பெரும் பண்பாகும். பண்பாளர்களைத் தேடித் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

(பிறகும் சிந்திக்கலாம்)

- விடுதலை நாளேடு, 1.8.19

சனி, 27 ஜூலை, 2019

நீங்கள் எவ்வகை மனிதர்.....?



மனிதப் பண்புகளில் தலையாய பண்பு - நன்றி காட்டுதல்.

ஆறறிவு படைத்த மனிதனின் பகுத்தறிவின் வெளிப்பாடே நன்றி காட்டுதல் ஆகும். மிருகங் களுக்கு அவை கிடையாது. நன்றி சொல்லத் தெரியாதவர்கள், நன்றி சொல்லத் தயங்குகிற வர்கள், நன்றியை மறந்தவர்கள் - என மனிதர்களில் பல வகை உண்டு!

குழந்தைகளுக்கு - அவர்களது வளர்ப்புப் பிராயத்திலேயே நன்றி என்ற சொல்லையும், ’வருந்துகிறோம் - Sorry’ என்ற சொல்லையும், மன்னிக்கவும் என்று சொல்லும், மன்னிக்கணும் என்பதையும் சொல்லப் பழக்கி வளர்க்க வேண்டும்; சில பிள்ளைகளுக்கு ஏனோ தெரிய வில்லை - excuse கேட்பது, sorry என வருத்தம் தெரிவிப்பது என்பது மிகப்பெரிய அவமானத் திற்குரிய தோல்வி என்பது போன்ற ஒரு தவறான எண்ணம்; அதன் காரணமாக தேவையற்ற பிடிவாதம் - கெட்ட பெயர்.

கீழே விழுந்தவரைத் தூக்கி விடுதல் - மருந்திட்டு சிகிச்சையளித்தல் போன்ற இன்றிய மையாக் கடன் இந்த நன்றி சொல்லுதலும்!  வருத்தம் தெரிவிப்பதும்! மன்னிப்புக் கேட்பதும்!

பல மனிதர்கள் காரியம் ஆக காலைப் பிடிப் பவர்கள் - நிழல்போல் தொடர்வார்கள்; ஏன் பெவிக்கால் போட்டு ஒட்டிவைத்தது போலப் பிரிய முடியாதபடி இணைந்து விட்டதாகக் காட்டிக் கொள்ளுவர்.

வேலை முடிந்து விட்டால் வேடந்தாங்கல் சீசன் முடிந்த பறவைகள் போல், பறந்து போய் விடுவர், பெற்ற உதவிகளையும் மறந்து விடுவர்.

இதுதான் உலகியல் - உலக வழமை; மாறாக நன்றி காட்டி, நினைவில் நிறுத்தி,  மதித்து என்றும் போல் ஒரே மாதிரி இருந்தால்  அவர்கள் மனித சமுகத்தின் விதி விலக்கான மனிதர்கள், நண்பர்கள்!

ஒன்று கேட்டு நாமும் முயற்சித்து அது அவர்களுக்குக் கிடைக்காத நிலை ஏற்பட்ட போது, நம்மிடம் வந்து தாங்கள் செய்த முயற்சிக்கு மிக்க நன்றி என்பவர்கள் பலமடங்கு உயர்ந்த மாமனிதர்கள் ஆவர்.

மறுபடியும் நம் உதவி தேவைப்பட்டால் சற்றும் கூச்சமின்றி - வெட்கத்தை வெளியே நிறுத்தி விட்டு, குழைந்து குழைந்து நிற்பர்!

ஆம் இவர்கள் பல நேரங்களில் பல மனி தர்கள்! நாமும் பார்த்துப் பார்த்து, அனுபவித்து அனுபவித்து மறத்துப் போன மானிட ஜென்மங்கள்!

அப்போது கோபம், ஆத்திரம், எரிச்சல் - இவைகள் வரும்; அவற்றைத் தவிர்த்து உயர நாம் பழகிக் கொள்ள வேண்டும்! அது எளிதல்ல தான் - என்றாலும் முயற்சித்து முன்னேறி வெற்றியடைய வேண்டும்!

மன்னிப்போம் - மறப்போம்! (Forgive - Forget) என்ற இரண்டு பண்புகள் நம்மை வெறுப் பற்ற வாழ்விற்குக் கொண்டு சேர்க்கும்!

சிலர் மன்னிப்பார்கள் - மறக்கமாட்டார்கள், வேறு சிலர் மறப்பார்கள் - மன்னிக்கமாட்டார்கள், மற்றொரும் பாலரோ - மன்னிக்கவும் மாட்டார்கள்; மறக்கவும் மாட்டார்கள்!

மனிதர்களை இனம் பிரித்துப் பார்த்து -  நன்றி காட்டுதலுடன் சேர்த்து இவ்விரண்டையும் இணைத்துக் கொண்டு வாழ்ந்தால் அதை விட மாமனிதம் வேறு இல்லை அல்லவா!

எழுதுவதும், பேசுவதும் எளிது;  அவற்றை நடைமுறைப் படுத்துதல் அரிது! அரிதினும் அரிது!!

என்றாலும் முயன்றால் முடியாதது உண்டா?

உலகில் எதுவுமில்லையே!

நன்றி என்பது பயனடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பு; உதவி செய்தவர்கள் எதிர் பார்க்கக் கூடாத ஒன்று; அப்படி எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமேயாகும்!

- தந்தை பெரியார்

1933 - குடிஅரசு தலையங்கத்தில்

தீதும் நன்றும்  பிறர் தர வாரா என்ற கணியன் பூங்குன்றனாரின் இந்த சொற்றொடருக்கு ஏற்ப வாழ்வு, நாம் பார்த்த முப்பெரும் பண்புகளைக் கொண்டு அமையும் நம்வாழ்வு. அப்படி ஒழுகி கடைப்பிடித்து வாழுபவர்களே வாழ்பவர்கள்.

மற்றையோர் செத்த மனிதர்கள்!

நீங்கள்.....?.......?

- விடுதலை நாளேடு, 24 .7. 19