சமுக வாழ்க்கையில் நாம் பல நண்பர்களைப் பார்க்கிறோம்; அவர்களோடு பழகுகிறோம். ஆனால் அனைவருமே நமது உள்ளத்தில் இடம் பெற்றவர்களாக - ஆகிவிட முடியாது!
"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர்தம்
உறவு கலவாமை வேண்டும்" என்ற வள்ளலாரின் வாழ்க்கை எச்சரிக்கையை - பொது வாழ்வில் உள்ள நம்மைப் போன்ற பலரால் பின்பற்ற இயலாது என்றாலும், அவர்களை எந்த இடத்தில் நிறுத்தி விட வேண்டுமோ, அந்த இடத்தோடுதான் நிறுத்தி விட வேண்டும். காரணம் பழகும் பலரும் அப்படி நம்மிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வந்து பழகுபவர்கள். நம்மால் அதைச் செய்ய முடியாது என்று தெரிந்தால் அவர்களேகூட "அற்றகுளத்து அறு நீர்ப்பறவை போல்" பறந்து விடுவர்; நமக்கும் நிம்மதி!
மற்றும் சிலர், இன்றில்லாவிட்டாலும் இவரால் என்றாவது சிறுபயன் விளையுமே, அதற்காகவாவது அவருடன் உள்ள தொடர் பினை நைந்து போகாமலும், பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் பழகுபவர்களாக இருப்பார்கள்! அத்தகையவர்களை நாம் அடையாளம் கண்டு உள்ளத்தின் மூலையில் அதை நிறுத்திடப் பழகிக் கொள்ள வேண்டும்!
இன்னொருவகை - நமக்குப் புதிய அறிமுகம்தான் - ஆனால் ஏதோ பல ஆண்டு காலம் பழகிய பான்மையரைப் போல கலகலப்பு, சலசலப்புடன் நம்மைக் கட்டி அணைத்து 'உயிருக்கு உயிரானவர்' போன்று - சிறப்பாக நடித்து, காலை வாரி விட்டு, காட்டிக் கொடுக்க வேண்டிய வேளை வரும்போது அதைக் கச்சிதமாகச் செய்து தனக்கும், அதன் விளை வினால் ஏற்பட்ட கேட்டிற்கும் எவ்விதத் தொடர்போ, முகாந்திரமோ இல்லாத மாதிரி நம்மிடமே அனுதாபத்தோடு, ஆறுதலும்கூட கூற முன் வருவார்கள்! இவர்களைவிட நடிப்புக் கலை கற்றவர்கள் எவரை நாம் எளிதில் பார்க்க முடியும்?
நம்மோடு நீண்ட காலம் பழகிய ஒரு இயக்க நண்பர். அன்றாடம் சந்திக்கும் வாய்ப்பும் பெற்றவர். அவர் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துவிட்டு, "எனக்கு என்றென்றும் தலைவர் - நீங்கள்தான்" என்றெல்லாம் நாம் கேட்காத வாக்குறுதியை தந்துவிட்டு வழி யனுப்பி வைத்து - அடுத்தநாள் நமது இன எதிரி நாளேட்டில் ஒரு அறிக்கை, அபாண்ட ஆதார மற்ற பொறாமைப் புழு நெளிந்த அறிக்கை - 'நீயுமா புருட்டஸ்' என்ற ஷேக்ஸ்பியர் எழுதிய ஜுலியர் சீசரின் உலகறிந்த காவிய வரிகளால் என்னை தேற்றிக் கொண்டேன்.
ஏன் ரத்த உறவுகளில்கூட பயன் கருதி பாசம் காட்டும் பல்வேறு சொந்தங்களையும் மறக்காமல், மன்னித்தே பழகும் நிலை பெற் றுள்ளோம்!
அது அய்யா தந்தை பெரியாரிடம் யாம் பெற்ற - கற்ற - பாடங்களில் முக்கியமானது.
பொது வாழ்வில் பணியாற்றும் எவரும் "தடித்த தோலர்களாகவும்," கேளாக் காதர் களாகவும் மாறி, அவமானத்தை வழிந்த எச்சிலைத் துடைத்தெறிந்து அருவறுப்பற்று நடந்து கொள்ளுபவர்கள் போலத்தான் நடக்க வேண்டும் - லட்சிய வெற்றியைக் கருதி!
'மிசா' காலத்தில் கைதியாக உள்ளே இருந்தபோதுகூட, என்னை, அன்னையாரைத் தாறுமாறாகப் பேசிய ஒருவருக்கு உள்ளேயும் சில நெருக்கடி (அந்த வெளி நெருக்கடி காலத் தில்தான் உள்ளே வந்தவர்) அதைத் தீர்த்து வைக்க எனது முக்கிய அதிகாரி ஒருவருக்குப் பரிந்துரையை எனது வீட்டார் மூலம் அனுப்பச் செய்து, தீர்த்தேன் மற்றும் சில உதவிகளும்கூட உண்டு. சொல்லுதல் தேவையற்றது! வெளியே விடுதலை ஆகி வந்து அவர் தாக்கி - ஆதாரமற்றப் பேச்சுகளை சிலர் தூண்டுதலால் பேசியதும் உண்டு.
இவருக்குப் பால் வார்த்தீர்களே என்று இடித்துரைத்தனர் இல்லத்திலிருந்த சிலர். எனக்கு வருத்தமே இல்லை. அப்போது அவருக்கு உதவிய மகிழ்ச்சியான நினைவு மட்டும் இருந்தது!
காரணம் தந்தை பெரியாரிடம் கற்ற பண்பு. எவ்வளவு துரோகத்தையும் எளிதில் ஜீரணிக்கும் மாமனிதர் அவர்!
மான அவமானம், நன்றி, எதிர்பார்ப்பு என்பவையெல்லாம் பொது வாழ்வில் எதிர் பார்க்கக் கூடாத ஒன்று என்பதை விதியாக நாம் ஆக்கிக் கொள்வதுதான் பெரும் பண்பாகும். பண்பாளர்களைத் தேடித் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
(பிறகும் சிந்திக்கலாம்)
- விடுதலை நாளேடு, 1.8.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக