கி.வீரமணி
'நண்பர்கள்' என்பவர்கள் நாம் வாழும் சமுகத்தில் - குமுகாயத்தில் 'உண்ணும் உணவு போன்றவர்கள்' என்பதை நாம் அனைவரும் மனதில் இறுத்தி நட்புறவைத் தேர்வு செய்து வளர்த்துக் கொள்ளுதல் மிகவும் இன்றி யமையாதது.
நல்ல உணவு சரியாக செரிமானமாகி, உட லுக்குப் பலத்தை சேர்க்கிறது; நோய் எதிர்ப்புச் சக்தியினை வளர்த்து வாழ வைக்கிறது.
கெட்ட உணவு - அதாவது கெட்டுப் போன உணவு அல்லது உடம்புக்கு ஒத்து வராத உணவு, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, உடலில் தொற்று நோய் - இவை ஏற்பட மூல காரணமாக ஆகி விடுகிறது!
பசி எடுப்பது நல்ல அறிகுறி - சீரிய உடல் நலனுக்கு; அதுபோல பண்புடைய - இடுக்கண் களைய, வேட்டி அவிழ்ந்தவன் கைகள் விரைந்து செயல்படுவதைப் போன்ற துடித்துப் பாய்ந்து உதவிடும் நண்பர்களைத் தேர்வு செய்வது மிகுந்த பயன் தரும்.
'பார்த்தால்' 'அந்தப் பசி' - நட்பு தேடல் - 'பசி தீரும்' என்பதை இப்படியும் பொருள் கொள்ளலாமே!
நீண்ட காலம் பழகி விட்ட நண்பர்களுக்குக் கூட தவிர்க்க முடியாத சில (தீய) பழக்க வழக்கங்கள் இருக்கலாம். என்றாலும் அவர் களுடைய வற்புறுத்தலுக்குக்கூட நாம் இணங்கி நமது தனித் தன்மையான ஒழுக்கத்தை இழந்து விடத் தேவையேயில்லை. உறுதி மிக்க உள்ளத்தவனை யாரும் எதுவும் ஒன்றும் செய்துவிட முடியாது என்பது திண்ணம்.
தந்தை பெரியார் அவர்கள் எழுதுகிறார்;
"நான் எனது (40 வயதில்) நெருங்கிய சகாக்களான நண்பர்களுடன் பழகும்போது, அவர்கள் மது குடிப்பார்கள்; நான் அதன் ஒரு சொட்டைக்கூட ருசி பார்த்ததே இல்லை! அவர் களுக்கு நான் ஊற்றிக் கொடுத்துக் கூட இருக்கிறேன். அதை அதிகமாக குடித்த கார ணத்தால் போதை தலைக்கேறி அவர்கள்கூட என்மீது துப்பி, என்னைக் குடிக்க வற்புறுத் தியதும் உண்டு.
சுற்றுச்சூழல் பல மனிதர்களைக் கெட்டு விடக் காரணமாகிறது என்று சொல்வதை என் விஷயத்தில் நான் பொய்யாக்கி இருக்கிறேன். நான் சிரித்துக் கொண்டே முகத்தைத் துடைத்துக் கொள்வேன். அவ்வளவுதான்!" மகத்தான மன உறுதி படைத்தவர்களை எந்த அழுத்தத்தாலும் மாற்றிவிட முடியாது என்பதற்கு இது ஓர் உதாரணம்!
ஒருமுறை தானே என்று முதலில் தவறு செய்பவர்கள் பலர் உண்டு; அதில் சறுக்கி விட்டால், அந்த சறுக்கலும், வழுக்கலும் வாழ்நாள் முழுவதும் கைவிடப்பட முடியாத பலவீனங்களில் ஒன்று ஆகி, நம்மை வாட்டி வாட்டி வதைக்கும் - மறவாதீர்கள்!!
வள்ளுவர் குறளில் 79ஆவது அதிகாரம் 'நட்பு', (நட்பின் சிறப்புக் கூறுதல்) 80ஆவது 'நட்பாராய்தல்' - 20 குறள்கள் நமக்கு நல்ல வழிகாட்டும் நெறிமுறைகள்.
அவற்றை கற்பதோடு, அதற்குத் தக நிற்கவும் - ஒழுகவும் - பழகிக் கொள்ளுங்கள். அதிகாரம் 79 - "நட்பின் சிறப்பு" பற்றி கூறுகையில்,
"செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு".
(குறள் - 781)
நட்பு செய்வதுபோல் அருமையான செயல் வேறில்லை. நட்பு போல செயலுக்குப் பாதுகாப்புத் தருவதும் வேறில்லை.
இன்பத்தைப் பகிர்ந்துகொள்ள உதவும் - ஓடோடி வரும் நட்பு முதன்மையானது அன்று. நண்பருக்குத் துன்பம் வரும்போது, ஓடோடி அதன் விளைவு எதுவாக இருப்பினும் அதுபற்றி அஞ்சாது - அதை ஏற்போன் நம்மை பாது காப்பது, நண்பருக்கு ஆறுதல் தர என்று ஓடோடி வந்து ஆறுதல் கூறும் நட்பு தரும் நயத்தக்கப் பண்பு, பிறருக்கு எப்படித் தோன் றிடினும் நம் உள்ளத்தில் மகிழ்ச்சியை மன நிறைவை அது ஊற்றெடுப்பாகப் பெருக்கும்.
எனது வாழ்வில் நிகழ்ந்த இரண்டு நிகழ்வுகளைக் கூறுவேன் - இதற்கு விளக்கமான பொழிப்புரை போன்று நிகழ்ந்தவை அவை.
(நாளையும் சந்திப்போம்)
- விடுதலை நாளேடு, 2.8.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக