கி.வீரமணி,
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் தனது பண்ணை வீட்டில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற ஊழியரான திருவாளர் சண்முகவேல் (வயது 72) அவர் களை பின்புறமாக வந்து கழுத்தில் கயிற்றைப் போட்டு கொலை செய்து, வீட்டில் கொள்ளை யடிக்க முயன்ற சம்பவம் நடந்து கொண்டு வரும்போது, உள்ளே இருந்து கூச்சல் கேட்டு ஓடோடி வந்த அவரது வாழ்விணையர் திருமதி செந்தாமரை (வயது 65) கையில் கிடைத்த பொருள்களையெல்லாம் எடுத்து தைரியமாக வீசி, அந்த இரு முகமூடிக் கொள்ளையர்களை - அவர்கள் கையில் அரிவாள் இருந்ததையும் பற்றிக் கவலைப் படாமல், துணிச்சலுடன் பொருளை வீசி விரட்டி அடித்து இருவரும் இணைந்து அந்த முகமூடிக் கொள்ளையர்களை ஓடச் செய்த தீரமிக்க செயல், தொலைக்காட்சி ஊடகங் களில், காணொலியாகக் கண்டபோது தமிழ் மண் வீரத்தின் விளைநிலம், விவேகத்தின் ஊற்று என்பதை எண்ணி, எண்ணி பூரித்து மகிழ்கிறோம்! உலகமே வியக்கிறது!
72 வயது முதியவர் - ஒரு இளைஞரைப் போல் போராடியதைவிட, அவரது 65 வயது ஆன துணைவியார் திருமதி செந்தாமரையின் தீரத்தையும், சமயோசிதச் செயலையும், கையில் கிடைத்த ஆயுதத்தோடு போராடிய தும் அந்த 'கொள்ளை வினைக்கு' வந்த இரண்டு திருடர்களும் தங்கள் அரிவாளைப் போட்டு ஓடும் காட்சியும் வெறும் படம் அல்ல நண்பர்களே, பாடம்!
வீரம் கொப்பளித்த விவேக செயல்! தந்தை பெரியார் சொல்வார்; "பெண்களை நாம் 'மென்மையானவர்கள்' என்று அடக்கி வீட்டுக்குள்ளே பூட்டி வைத்தோம்; பொத்திப் பொத்தி வளர்த்துப் பயந்தாங்கொள்ளிகளாக்கி னோம். அதனால் போராட வேண்டிய நேரத் தில் போராடும் குணத்தை நமது பெண்கள் இழந்துள்ளார்கள்!"
அம்மா செந்தாமரை அவர்கள் திராவிடர் - தமிழ்ப் பெண் குலத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு; அவரும், 72 வயதிலும் போராடத் துணிந்த ஒரு முறுக்கேறிய 'வாலிப' முதியவரின் துணிவு வியக்கத்தக்கதாகும்.
மனிதர்களுக்கு - நமக்கு - சோதனைகள் ஏற்படும்போது இப்படித் துணிந்து எதிர் போராட்டம் நடத்திட வேண்டும்.
"அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்"
என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
"ஓடிவந்த புலியதனைத் துரத்தினாளே
தமிழ் மறத்தி ஒருத்தி முறத்தினாலே" என்று அண்ணா எழுதிய சொர்க்கவாசல் திரைப்படத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராசாமி, உடுமலையார் பாடலை தனது வெண்கலக் குரலில் பாடுவார். அது திரைப் பாட்டு. ஆனால் மேற்காட்டிய வீரம் புற நானூற்றுத் தாயின் வீரத்தை நேரில் கண்டு வியக்கும் எசப்பாட்டு! நிசப்பாட்டு!
பெண் குழந்தைகளை, பெற்றோர்களே அடக்கி அடக்கி அச்சத்தில் எப்போதும் ஆழ்த்தி, 'பேய், பூதம், அஞ்சுகண்ணன்' என் றெல்லாம் சோறு ஊட்டும் போதே பயத்தை ஊட்டி வைத்தால் இப்படிப்பட்ட கொடூர நிகழ்வுகளால் அவர்கள் உயிர் பலியாவார்கள்! எதிர்க்கவும் துணிவு வராது.
ஒருபோதும் அவர்கள் "செந்தாமரை - சண்முகவேல்" ஆக முடியாது.
வள்ளுவர் குறளுக்கு இந்நிகழ்வு ஒரு புதுப்பொருள் தருகிறது!
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் - குறள்
பழைய பொருள் எப்படி இருந்தாலும்கூட, தற்காத்தார் - செந்தாமரை - தற்கொண்டா னையும் - பேணி காத்தார்!
'சோர்விலாது' விரட்டி வியந்த உலகத்தின் பாராட்டு மழையில் நனைகிறார்கள் அவ்விருவரும்!
"அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடைமையடா!"
கவியரசு கண்ணதாசன் எழுதிய 'மன்னாதி மன்னன்' பாட்டுக்குப் புது விளக்கம் தானே இது! - இல்லையா? வாழ்க துணிவின் தூய உருக்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக