பக்கங்கள்

ஞாயிறு, 3 ஜூலை, 2016

“கவலைப்பட நேரமில்லை”


உலகப் புத்தக நாளையொட்டி ஆண்டுதோறும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்கிற பெரியார் அறக்கட்டளையின் சார்பில் சென்னை பெரியார் திடலில் இவ்வாண்டு கடந்த 22,23,24 ஆகிய நாள்களில் 50 விழுக்காடு தள்ளுபடி என்ற புத்தக நிலையங்களின் விற்பனை - சென்னை புத்தக சங்கமத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது!

இருபால் இளைஞர்கள், மாணவர்கள், முதியவர்கள் என்ற வயது இடைவெளியின்றி பலரும் வந்து, ஏற்பாடு செய்யப்பட்ட 35 பதிப்பகக் கடைகளில் கூடி, ‘புத்தகங்களை வாங்குவோம், புத்தாக் கம் பெறுவோம்‘ என்ற உணர்வோடு, ஏராளமான புத்தகங்களை வாங்கிச் சென் றனர் என்பதைவிட அள்ளிச் சென்றனர் என்பதே பொருத்தமான சொல்.
வெறுங் கையோடு வந்தவர்கள் புத்தகங்கள் கொண்ட பையோடு சென் றனர்;  மகிழ்ச்சியில் திளைத்தனர் விற்பனை யாளர்கள்.

சென்னையில் வந்த பெரு வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட பதிப்பக நண்பர்கள் பலர் உண்டு. வீட்டில், குடோனில் வைக்கப் பட்டிருந்த அச்சிட்ட நூல்கள் எல்லாம் மழை வெள்ள நீரில் மூழ்கின! எளிதில் மீள முடியாத பெரு நட்டத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தின.

இந்த விற்பனை மூலம் சிலருக்கு சற்று ஆறுதலும் தெம்பும் - புத்தக விற்பனைப் பதிப்பாளர்களுக்குக் கிடைத்தது!

மூன்று நாள்களிலும் மாலையில் கருத்து விருந்தும், நிகழ்ச்சிகள் மூலம் பரிமாறப்பட்டது! ஆண்டுதோறும் ‘புத்தகர் விருது’ வழங்கி, புத்தகக் காதலர்களைப் பாராட்டி, நாட்டிற்கு அறிமுகப்படுத்தி, ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சியில், இரண்டு தொண்டறச் செம்மல்கள், சென்னை திருவாளர் ஆறுமுகம் அவர்களும், மதுரை திருவாளர் முருகேசன் அவர்களும் அழைக்கப்பட்டு, அவர்கள் புத்தகங்கள் மூலம்  பலருக்கும் அளித்து வரும் கைம்மாறு நோக்கா அரிய தொண்டறத்திற்காக விருதுகள் வழங்கப்பட்டன.

இருவரின் ஏற்புரை - ‘குறள்’போல் அமைந்தன. ஆழ் கடலில் மூழ்கினால் கிடைக்கும் சிந்தனை முத்துக்கள் அவர் களது எளிய, இனிய உரைகளில் தெறித்தன! ஒளி வீசின!!

சென்னை நண்பர் ஆறுமுகம் அவர்கள் தியாகராய நகர் பகுதியில் புத்தகங்களைச் சேர்த்து பலரும் படித்து மகிழும் தொண்டில், தான் பெற்ற இன்பம் தணியாத இன்பம் என்பதை, ஒப்பனை இல்லா உண்மைப் பேச்சின் மூலம் விளக்கினார். சென்னை ஆறுமுகம், மதுரை முருகேசன் இருவருமே - பட்டப் படிப்போ, பட்டயப் படிப்போ இல்லாத வர்கள் என்றாலும், பட்டறிவோடு உலகத்தைப் படித்தவர்கள், அவர்களது “படிப்பின்மை” அவர்களை நல்வாய்ப்பாக ‘தொண்டறச் செம்மல்களாக்கி’, சுயநல வேட்டைச் சூழலுக்கு விடை கொடுக்க உதவியது!

தந்தை பெரியார், கல்வி வள்ளல் காமராசர் போன்றவர்கள் பட்டதாரிகளாய் இருந்தால் அவர்களது ஈடு இணையற்ற தொண்டு உலகிற்குக் கிடைத்திருக்குமா?  துணிவுடன் எதிர் நீச்சல் அடித்து வெற்றி வாகை சூடும் ‘முரட்டுக் கொள்கை உறுதிப்பாடு’ தோன்றியிருக்குமா? என்பது அய்யம்தானே!

அதுபோல, இவ்விரு பெரு மக்களும் தம்முடைய எளிய தொண்டினை, ‘வியாபாரமாக’ அல்லாது, தொடர் பணியாக, சமூகத் தொண்டாகவே செய்து அதில் எல்லையற்ற மகிழ்ச்சியையும், இன்பத்தையும் மன நிறைவையும் அடைகின்றனர்!

இருவரது பிள்ளைகள் நன்கு படித்து  வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள்; வாழுகிறார்கள்; அவர்களுக்குக் கல்விக் கண் திறந்து விட்டு, அவரவர் சுதந்திரமாக இருக்க வைத்து, இவர்கள் பணி எப்போதும் போல் தொடரவே செய்கிறது என்றனர்!

சென்னை நண்பர் ஆறுமுகம் அவர்கள் பேசிய ஏற்புரைக்குப் பின், மதுரை முருகேசன் அவர்களின் யதார்த்தம் கொப்பளித்த பேச்சு இதய ஒலியாக ஒலித்தது!

வாழ்க்கையில் இரண்டாம் வகுப்பு மட்டுமே படித்தேன், - புத்தகங்களில் ஆர்வம் கொண்டு சேகரித்தேன்; மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் அவர்கள் தேடும் புத்தகங்களை நான் கொண்டு போய் அவர்களிடம் சேர்ப்பேன்.

எனக்குத்தான் எவ்வளவு மகிழ்ச்சி! எனது குடும்பம், பிள்ளைகள் எல்லாம் இருக்கின்றனர் படித்தும் தொழில் செய்தும் வரி கட்டுவோர் உள்ளனர். அவர்களால் எனக்குத் தொல்லை இல்லை. என் பணியை எப்போதும் செய்து கொண்டு மகிழ்ச்சியாகவே எப்போதும் இருக்கிறேன்; கவலைப்பட எனக்கு நேரமில்லை; காரணம் முழு நேரமும், நான் எடுத்துக் கொண்ட வேலையில் முழு மூச்சாகவே ஈடுபடுவதால் என்று கூறி மிகப் பெரிய வாழ்வியல் பாடத்தை ஒரு பேராசிரியராகவே நின்று முழங்கினார்!

இப்படி நாட்டில் அடையாளம் கண்டு பாராட்டப்பட வேண்டிய வாழ்வியல் போதனையாளர்களாக எத்தனையோ ஆறுமுகங்களும் மதுரை முருகேசன்களும், விளம்பர வெளிச்சம் கண்டு கூசிடும் உண்மை தொண்டறம் புரிகிறார்கள்!

அவர்களிடமிருந்து நாம் கற்கும் பாடத்தில் முக்கியமானது கவலைப்பட நேரமில்லாத வாழ்க்கையை அமைத்து வாழுங்கள் என்பதேயாகும்! என்ன சரிதானே?! இவ்விருவர் போன்றவர்கள் ‘தனக்குவமை இல்லாதவர்கள்’; அவர் களைப் பின்பற்றினால் எதற்கெடுத்தாலும் அழுவோர் ‘மனக்கவலையை’ மாற்றிக் கொண்டவர்கள் ஆவார்கள்! - இல்லையா?

- கி.வீரமணி
-விடுதலை,26.12.15