பக்கங்கள்

ஞாயிறு, 29 மே, 2016

சில நேரங்களில் சில மணமக்கள்!



திருமணங்களை வைதீகர்கள் நாள், நட்சத்திரம், ஜோஸ்யம் இவை களையெல்லாம் பார்த்துதான் நிச்சயிக்கின்றனர். இதில் வர்க்க பேதமின்றி, ஏழை, பணக்காரர் எல்லோருமே அடக்கம்!
ஒரு மதத்தவர் ‘திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்று கூறினார்கள். (ஆனால் நடை முறையில் அவை ரொக்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன; ‘இச்சயிக்’ கப்படுகின்றன என்பதே யதார்த்தமாகும்)
ஆனால் நேற்று நாளேடுகளில் வந்துள்ள ஒரு செய்தி, திருமணங்கள் ரசத்தாலும், சாம்பாராலும்கூட அவைகள் சுவை ரசனைக்கேற்ப இல்லாததால் ரத்து செய்யப்படும் அவலங்களும் நாட்டில் நடைபெறுகின்றன!
இதன் மூலம் மணமகன் வீட்டார் வாழ்க்கைக்குத் துணை தேடவில்லை; நல்ல சமையற்காரியைத் தான் தேடினர் போலும்!
என்னே கூத்து! எவ்வளவு ஜோக்கு!! நேற்றைய தமிழ் ‘இந்து’ நாளேட்டில் வெளி வந்துள்ள அச்செய்தியை அப்படியே தருகிறோம் படியுங்கள்:
கர்நாடகாவில் ரசம் ருசியாக இல்லாததால்
கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்
கர்நாடகாவில் ரசம் ருசி இல்லாததை காரணம் காட்டி மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அதே முகூர்த் தத்தில் வேறொரு மணமகனுடன், மணமகளுக்கு திருமணம் நடந்தது.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள சுதந்திர பாளையாவை சேர்ந்த திம்மையாவின் மகன் ராஜூ (32). டீ விற்பனையாளரான இவருக்கும் துமக்கூரு மாவட்டத் தைச் சேர்ந்த, குனிகல் கிராமத்தை சேர்ந்த பிரகாசத்தின் மகள் சவுமியாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை மாலை மணமகளின் வீட்டார் சார்பில் திருமணத்துக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. அப்போது சாம்பார் மற்றும் ரசம் ருசியாக இல்லாததை காரணம் காட்டி மணமகன் வீட்டார் தகராறு செய்துள்ளனர். இதனால் அதிர்ந்து போன மணமகள் வீட்டார் அவர்களை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தனர்.
அதிகாலையில் திருமணம் நடக்கும் சமயத்தில் நலங்கு வைப்பதற்கான சடங்குக்காக மணமகன் வீட்டாரை அழைக்கச் சென்றபோது அவர்கள் அனைவரும் மண்ட பத்தை விட்டு வெளியேறியது தெரியவந்தது.
இதனால் குழப்பமடைந்த மணமகளின் பெற்றோர் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது, ருசியான ரசம் வைக்கத் தெரியாத குடும்பத் தாருடன் சம்பந்தம் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. திருமணத்தை நிறுத்தி விடுங்கள் என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் வீட்டார் செய்வதறியாது திகைத்தனர்.
அப்போது பெரியவர்கள் மேற் கொண்ட முயற்சியால் திருமணத் துக்கு வந்திருந்த கோவிந்த ராஜ் என்ற இளைஞர் மணமகள் சவுமியாவை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார்.
இதையடுத்து இருவருக்கும், ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட அதே முகூர்த்தத்தில் திருமணம் நடந்தது.
இது குறித்து மணமகளின் பெற்றோர் கூறும்போது, ரசம் ருசியில்லாததை கூட பொறுத்துக் கொள்ள முடியாத மணமகன் வீட்டாரிடம் இருந்து கடைசி நேரத்தில் எனது மகளை கடவுள் தான் காப்பாற்றி இருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறோம் என்றனர்.
அதே சமயம், மலிவான காரணத்துக்காக திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துமக்கூரு மகளிர் அமைப்பினர் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
‘கடவுள்தான் காப்பாற்றியிருக்கிறார்!’ என்ற பெருமூச்சு பாவம்! அந்தக் கடவுள், ரசம், சாம்பாரை நன்றாக சுவைக்கும்படி மணமகள் வீட்டாருக்கு ஏனோ உதவவில்லை என்பதுதான் தெரியவில்லை’.
சில நேரங்களில் சில மணமக்கள்! வேதனை - வேடிக்கை.
- மகா வெட்கக் கேடு!
- கி.வீரமணி
-விடுதலை,4.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக