பக்கங்கள்

திங்கள், 21 டிசம்பர், 2020

அறிவை விரிவு செய்து அகண்டமாக்க - இதோ ஓர் அரிய தமிழ் நூல்!


கடந்த 10 ஆண்டு கால கட்டத்தில் உலக அளவில் பிரபலம் அடைந்த வரலாற்று எழுத் தாளர் - சீரிய பல் கருத்துகளை உலகமெங்கும் தனது நூல்கள் மூலம் அளித்து வருபவர் யுவல் நோவா ஹராரி என்ற யூத வரலாற்றுப் பேராசிரியர். இவர் 2002 இல் ஆக்ஸ்ஃபோர்டில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

தற்போது ஜெருசேலம், ஹீப்ரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்!

“சேப்பியன்ஸ்': மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு.

‘ஹோமோடியஸ்': வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு.

ஆகிய இவரது இரண்டு நூல்களும் உலகம் முழுவதும் சிந்தனைத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியனவாகும்.

அவர் 2018 இல் எழுதி வெளிவந்த நூல் "21ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்" என்ற இந்த நூல்!

21ஆம் நூற்றாண்டு பற்றிய ஒரு புதிய வெளிச்சத்தை இந்த நூலாசிரியர் சிறப்பாக இந்த படைப்பு மூலம் வாசக நேயர்களுக்குத் தந்து, இதற்கு முன் அறிந்திராத அறிவை அவர் களுக்குத் தந்துள்ளார்.

ஆங்கிலத்தில் "21 21 Lessons for the 21st Century" என்ற  தலைப்பில் வெளிவந்த இந் நூல், தமிழில் மொழியாக்கம் செய்து வெளிவந் தால் அது தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை, மும்பையில் உள்ள சிறந்த தமிழ் நூல் - மொழி பெயர்ப் பாளரான திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர் களிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்தேன் - ஒருமுறை அவருடனும், அவருக்கு எப்போதும் எல்லாவற்றிலும் வாழ்க்கை இணையராக, வழி காட்டி உதவுபவராக உள்ள அவரது வாழ் விணையரிடமும் உரையாடியபோது!

அவர் அதை சிறப்பாக செய்து முடித்துள்ளார். ஆங்கில நூலின் சுவை குறையாத அளவுக்கு மிகவும் கவனத்துடன், அவருக்கே உரிய ஆற்றல், அறிவு, அனுபவம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, தமிழ் இலக்கிய உலகுக்கு ஒரு சிறந்த நூலை கருவூலம் கண்டு வந்து தரு வதைப்போல் தந்துள்ளார்!

‘மஞ்சுள் பப்ளிஷிங் அவுஸ்' இதனை நேர்த்தி யாக அச்சிட்டு, ஆங்கில நூலுக்கு இணையாகத் தந்துள்ளனர்!

சிறந்த ஆங்கில நூல்களை நாம் போதிய ஆங்கில அறிவு வாய்ப்பு இல்லாததால் படிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தைப் போக்கும் வண்ணம், தமிழுக்குப் பெருந்தொண்டாற்றி யுள்ளார் திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்கள்.

இவர் தனித்தன்மையானவர்; மணமான பின்பும், தன் பெயருக்குப் பின்னால் உள்ள தன் தந்தையின் பெயரை மாற்றாதவர்!

அதை ஊக்குவிக்கும் அளவுக்கு ஒருமன தானவர் அவருடைய வாழ்விணையரான துணைவரும்! இனிய இலக்கிய தோழர்கள் இணை பிரியா இருவரும்!

இந்த நூலில்,

முதல் பகுதியில் ‘‘தொழில்நுட்ப சவால்'' என்ற  தலைப்பின்கீழ் -

1. ஏமாற்றம் 2. வேலை 3. சுதந்திரம் 4. சமத்துவம்

இரண்டாவது பகுதி,

‘‘அரசியல் சவால்''

5. சமூகம் 6. நாகரிகம் 7. தேசியவாதம் 8. மதம் 9. குடிவரவு இப்படி 5 பகுதிகள் - 416 பக்கங்கள்.

உலகின் பல்வேறு தகவல்களை எதிர் காலத்தை நாம் அணுக நம்மை நாமே ஆயத் தப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்கு பல தொழில்நுட்பங்களை அலசி ஆராய்ந்து கூறு கிறார்!

வாழ்வின் பாடப் புத்தகங்களாக உள்ள பெருமை சில நூல்களுக்கே உண்டு.

அதில் இந்நூல் தனிச் சிறப்பிடத்தைப் பெற்று, அனைவரது நூலகங்களிலும் - இல்லங்களிலும் இருக்கவேண்டிய சிறப்பிற்குரியதாகும்.

சிந்திக்க வேண்டிய தூண்டல், செயல்பட வேண்டிய தேவை என நம்மைப் பக்குவப்படுத் தத் தவறாத கையேடு இந்நூல்!

வாங்கிப் படியுங்கள்!

சுவைபட மொழியாக்கம் செய்த திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!

இருவர் நிகழ்வுகள் - மூன்று பாடங்கள்!மதுரை மாநகரிலிருந்து ஒரு செய்தி!


27.11.2020 அன்று ஒரு வயது முதிர்ந்த பெரியவர் நடந்து செல்லுகிறார் - கையில் ஒரு செருப்புடன். காரணம், மற்றொரு செருப்பு முந்தைய ஆட்டோவில் பயணம் செய்தபோது மற்றொரு காலிலிருந்து நழுவி வழியில் எங்கோ விழுந்து விடுகிறது! அவர் நடந்து சென்று விழுந்து விட்ட அந்த மற்றொரு செருப்பைத் தேடிக் கண்டுபிடித்தார். காலில் அணிந்து கொண்டே நடந்து செல்லுகிறார்.


ஓர் ஆட்டோ ரிக்ஷாவை ஒருவர் ஓட்டி வரும் போது, நடந்து வரும் இவரைப் பார்த்து, பார்த்த முகமாக உள்ளதே என்று நினைவலைகளை எழும் பச் செய்கிறார். அவர் இரண்டுமுறை எம்எல்.ஏ.வாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் என்.நன்மாறன் என்பது புரிந்துவிட்டவுடன், தனது ஆட்டோ ரிக்ஷாவை திருப்பி -  பானகல் சாலையில் ‘நடந்து வரும் அவர்' அருகே நிறுத்தி ‘அய்யாஇதில் ஏறிக் கொள்ளுங்கள். நான் கொண்டு போய் விடுகிறேன் - கருப்பையூரணிக்கா? கொண்டு போகி றேன், ஏறி அமருங்கள்' என்று கூறுகிறார்!


உடனே அந்தப் பெரியவர் ‘தன்னிடம் ரூபாய் 20 தான் உள்ளது. ஆகவே அதற்கு மேல் தர வாய்ப்பில்லை' என்று தயக்கமின்றி, கூச்சமின்றி - தன்னிலை விளக்கம் தருகிறார்.


‘பரவாயில்லை. நீங்கள் ஏறி உட்காருங்கள் அய்யா' என்றார் ஓட்டுநர்.


தான் ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் - ஊரறிந்த கொள்கைப் போராளி - என்ற அடை யாளத்தை அவரும் சொல்லவில்லை. இடம் வந்தது. இறக்கி விட்டவுடன், ரூபாய் 20அய் அவர் தர முயலும் போது, ‘அய்யா, நீங்கள் இதைத் திரும்பும் பயணத்திற்கு வைத்துக் கொள்ளுங்கள் - உங்களிட மிருந்து பணம் வாங்க நான் விரும்பவில்லை' என்று அன்பொழுகக் கூறிவிட்டு, அவருடன் ஓர் ஒளிப்படம் எடுத்துக்கொண்டு தனது ஆட்டோவை ஓட்டிச் செல்லுகிறார். அப்போது அந்த ஆட்டோ ஓட்டுநர் சென்னார், ‘இவர் போன்றவர்களுக்கு உதவும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிட்டியதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்' என்றார்.ஒரு கையில் ஒரு செருப்புடன் மறு செருப்பைத் தேடிக் கண்டுபிடிக்க நடந்து சென்றவர் வேறு யாருமில்லை - இரண்டு முறை சட்டமன்ற உறுப் பினராக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழரும், எளிமையின் சின்னமுமான தோழர் என்.நன்மாறன் அவர்கள்தான்! நகைச்சுவையாகப் பேசி சிந்திக்க வைக்கும் சிறந்த கொள்கை வீரர்!


ஆட்டோவை ஓட்டி அன்பும், பண்பும் காட்டிய தோழர் பெயர் பாண்டி. அவர் சொல்கிறார், ‘கொள்கை ரீதியாக நான் அவரிடமிருந்து மாறுபடு கிறவன். நான் பசும்பொன் தேசிய கழக இளைஞரணி பொறுப்பாளர் என்றாலும், அவரது (நன்மாறன் அவர்களது) எளிமை, நேர்மை மனித நேயம் என்னை ஈர்த்ததால் நான் மனநிறைவுடன் அவருக்கு உதவிடும் அரிய வாய்ப்பைப் பற்றிக் கொண்டேன்' என்று கூறியுள்ளார்.


இச்செய்தி சமூக வலைதளங்களில், ஊடகங்களில் பரவியுள்ளது. (இந்தச் செய்தியை 4.12.2020 ‘இந்து' நாளேட்டில் திரு.சுந்தர் என்ற செய்தியாளரான நண்பர் தந்துள்ளதைப் படித்தே நான் இதை உங்களுக்குத் தரும் வாய்ப்பு ஏற்பட்டது).


இந்த இருவரிடமிருந்து நாம் கற்க வேண்டிய அரிய பாடங்கள் மூன்று:  1. எளிமை - இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ஒருவர் - கம்யூனிஸ்ட்கள் தங்களது சட்ட மன்ற சம்பளத்தைக் கூட கட்சிக்கே கொடுத்து, அவர் கள் தரும் ஒரு தொகையை மட்டுமே பெறும் அத்த கைய எடுத்துக்காட்டான தோழர்கள். அவரிடம் பையில் 20 ரூபாய் தான் இருந்துள்ளது. அது வெளி யில் கிளம்பி திரும்ப வீடு சேரும் வரையில் செல வுக்கு இருந்த "பெரிய தொகை!"


- இன்றுள்ள டாம்பீக பொதுவாழ்க்கை வாண வேடிக்கை வெளிச்சத்தில் இதை எளிதில் நம்பவே முடியாது பலரால்.


இப்படியும் எளிமையும், நேர்மையும் கொண்ட கொள்கை லட்சிய உணர்வாளர்கள் வாழத்தான் செய்கிறார்கள்.  1. அதுபோல அந்த ஆட்டோ ஓட்டுநர் நண்பர் பாண்டி போன்ற கருணையும், அன்பும் பொங்கும் வாழ்க்கை நெறியாளர்கள். கொள்கையால் வேறு பட்டாலும், மனித நேயம் அதனினும் பெரிது - தாண் டியது என்பதை அவரது சீரிய நடவடிக்கை மூலம் சமூகத்திற்கு உணர்த்தி இருக்கிறார்.


பாண்டி அவர்களை வெகுவாகப் பாராட்டுகி றோம் - கொள்கைக்கு அப்பாற்பட்டு!  1. எளிமை, நேர்மை, அன்பு, கருணை என்றுமே மனிதத்திடமிருந்து வற்றி விடாது என்பதே பேருண்மை!


வளரட்டும் இந்தப் பண்பாடு!


எளிமையில் உதித்த அண்ணாவின் எழுத்தோவியம்! (1)(2)

எளிமையில் உதித்த அண்ணாவின் எழுத்தோவியம்! (1)


அறிஞர் அண்ணாவின் எழுத்துக்கள் - அவர் 1940களில் ‘விடுதலை' ஆசிரியராக இருந்து (ஈரோட்டில்) எழுதிய எழுத்தோவி யங்களானாலும், அதன்பின் 1942இல் காஞ்சி புரத்துக்கே திரும்ப வந்து ‘திராவிட நாடு' என்ற வார ஏடு ஒன்றைத் துணிவுடனும், தந்தை பெரியாரின் ஆசியுடனும், திராவிடர் கழகத் தோழர்களின் ஒத்துழைப்புடனும், அக்காலத்து வசதி படைத்த தோழர்கள் டி.பி.எஸ்.பொன்னப்பா போன்றவர்களின் நிதி உதவியுடனும் - நடத்திட பல்வகைத் தொல்லைகளையும் ‘சோதனை'களையும் சந்தித்து, ‘சாதனை' சரித்திரம் படைத்தவர் அண்ணா.


அண்ணாவின் எழுத்துக்கள் மலரில் உள்ள தேன் என்றால், இளைஞர், மாணவர் வாசகர்களாகிய எம் போன்ற பலரும், தேனீக் கள் ஆவோம்!


அஞ்சல் அல்லது தொடர்வண்டி மூலம் வாரந்தோறும் ‘குடிஅரசு' ஏடும், ‘திராவிட நாடு' ஏடும், நாளும் ‘விடுதலை' நாளேடும் எனது ஆசான் (கடலூரில்) ஆ.திராவிடமணி அவர்களது சொந்தச் செலவில், கடலூர் ‘ராமலிங்க பக்த ஜனசபை' கட்டடத்தில் உள்ள கட்டட வாசக சாலைக்கு (அதுவே ஆசிரியர் ஆ.திராவிடமணி அவர்களது இருப்பிடமும்; எங்களுக்கான கல்விக் கூட பாசறையும் போன்றதாகும்) வரவழைக்கப் பட்ட ஏடுகளாகும்!


திரும்பத் திரும்ப உரத்த குரலில் பல முறை படிக்கச் சொல்வார்; அது அப்படியே படித்து மனப்பாடமாகி விட்டது. கிடுகிடு வென பார்க்காமலேயே அதை எம் ஆசிரி யர் ஆ.திராவிடமணி அவர்கள் முன் ஓசை நயத்தோடு ஒப்புவித்தலே - நல்ல முயற்சி தான்!


அறிஞர் அண்ணாவின் 'திராவிட நாடு' ஏட்டிற்கு நிதியளிப்புக் கூட்டம் 27.6.1943ஆம் ஆண்டில் கடலூர், ஓ.டி. செட்டிக்கோயில் தெரு மைதானத்தில் நடைபெற்றது.


அந்தப் பொதுக் கூட்டத்தில் என்னை மேடைமீது எற்றிப் பேச வைத்து எனது அரங்கேற்றத்தை எனது ஆசிரியர் திராவிட மணி நடத்தினார். அதற்கு சில மாதங்கள் கழித்து - 29.7.1944 அன்று திருப்பாதிரிப்புலியூர் (கடலூர், என்.டி.) முத்தையா டாக்கீசில் தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு - அதில்தான் அண்ணா அவர்கள் அய்யா முன்னிலையில் பேசிய என்னைப் பற்றிக் குறிப்பிட்டபோது,


“இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந் தால், இவரை இந்தக் கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப் பார்கள்; இவர் பேசியதிலிருந்து இவர் உண்ட தெல்லாம் ஞானப்பால் அல்ல; பெரியாரின் பகுத்தறிவுப் பால்தான்”


என்று வர்ணித்து - ‘திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தன்' என்று பலரும் குறிப் பிடும் ஒப்பீட்டைச் செய்து பேசினார்!


அய்யாவின் எழுத்துக்கள் ஆழமானவை - கருத்தாழம் மிக்கவை - அலங்காரம் இல்லாதவை.


ஆனால் அண்ணாவின் எழுத்துக்கள் எதுகை மோனையுடன் ஈர்க்கும் சக்தி படைத் தவைகளாக, இளைஞர்களை மயக்கக் கூடியதாகும்.


அறிஞர் அண்ணாவின் தலைப்புகளே தனித்தன்மையானவை - விசித்திரமானவை - சில நேரங்களில் திரைப்பட பாடல்களின் வரிகளையும் கூட கொண்டவைகளாக இருக்கும்!


‘கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது!'


‘தீட்சதர் வீட்டில் திருக்கல்யாணம்'


‘இந்து இட்லரிசம்'


‘சீடர் சிலம்பம் எடுக்கிறார்'


இப்படி அற்புதமான எழுத்து ஆற்றல் அண்ணாவுக்கு வளர்ந்தது பற்றி சிந்திக்கும் எவருக்கும் வியப்பே மிச்சமாகும்.


காரணம் அறிஞர் அண்ணா தமிழ் எம்.ஏ.வோ, தனியே புலவர் பட்டத்திற்கோ படித்தவரல்லர்.


மாறாக அவர் பொருளாதார ஹானர்ஸ் படித்து எம்.ஏ. பட்டமும் பெற்றார். தானே விரும்பி இலக்கியம் பயின்றார், எல்லாப் பொருள் பற்றியும் ஆய்ந்து தேறினார்.


அந்த வகையில் அறிஞர் அண்ணா ஓர் அதிசயமான ஆற்றலாளர்.


அந்நாளில் அவர் தனியே ‘திராவிட நாடு' வார ஏடு நடத்த என்ன பாடுபட்டார்; துன்பப்பட்டார் என்பதை அவரே ‘ஆசிரியர் கடிதம்' என்ற தலைப்பில் (இந்த தலைப்பே கூட சற்றே வித்தியாசமானதுதானே!) விவரித் துள்ளார். மற்ற ஏடுகளில் ‘ஆசிரியருக்குக் கடிதங்கள்' வருவதுதான் வாடிக்கை. ஆனால் அண்ணாவோ ‘ஆசிரியர் கடிதம்' என்று துவக்கினார் 1942இல், அதுதான் பின்னாளில் அண்ணாவின், கலைஞரின் கடித இலக்கியங்களாகப் பூத்தன - காய்த்தன - கனிந்தன!


(தொடரும்)

எளிமையில் உதித்த அண்ணாவின் எழுத்தோவியம்! (2)


“தோழர்களே! ‘திராவிடநாடு' பத்திரிகை கொந்தளிப்பிலே முளைத்தது. உமது ஆதர வால் வளர்வது. காலமோ நெருக்கடியானது. விற்பனை நிலவரமோ மனத்தை மருட்டு கிறது. காகித விலையோ நஞ்சாக ஆகி விட்டது. துன்பமோ அதிகம். உதவியோ நானும் இதுவரை கேட்கவில்லை. பரீட்சை யில் இறங்கப் பயந்துதான் கேட்கவில்லை. மாடி வீட்டிலிருந்து கொண்டு, பொழுது போக்குக்காக நான் இப்பணியில் ஈடுபட வில்லை. சூச்சு வீட்டை மச்சு வீடாக்க வருவாய் தேடவுமல்ல. இந்தப் பணியில் நான் இறங்கியது, வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என்ற நிலையிலும் அல்ல. இதில் குதித்ததன் காரணம், உங்களோடு வாரா வாரம் நேரில் வந்திருந்து பேச முடியாது. ‘திராவிடநாடு’, நம்மைச் சந்திக்கச் செய்கிறது. கட்சிக்கே, இதன் சக்தி.


இதற்கு நீங்கள் கைகொடுக்கவேண்டாமா! சந்தா அனுப்ப வேண்டாமா! விற்பனையை உடனுக்குடன் அனுப்பித் தந்தால் பளு குறையுமே! அதைச் செய்யக் கூடாதா? உமது செல்வாக்கைச் செலுத்தி விளம்பரங் கள் அனுப்பினால், இளைத்த உடலுக்கு டானிக்போல் (சத்து மருந்து போல்) பத்திரிகை வளர்ச்சியடையும், தோழர்களே! அன்பு சில சமயத்தில் பண உருவத்திலே வரவேண்டும். அச்சமயம் இதுதான். என் தோழர் டி.பி.எஸ்.பொன்னப்பன் தந்துவரும் அரிய உதவியே இன்று பத்திரிகையை நடமாடவைக்கிறது. ஆனால், இதையே மட்டும் இறுகப் பிடித் திருக்க இயலுமா? சரியானது தானாகுமா? அவர் இயக்கத்துக்கு செய்யவேண்டிய வேலைகளை இது தடை செய்யுமல்லவா! இவைகளை யோசித்து, இன்றே உங்களா லான, உதவியைச் செய்யுங்கள், உள்ளத்தைக் குளிரச் செய்யுங்கள், ‘திராவிட நாடு' அபயக் குரலிடுவதைக் கேளுங்கள், ஆவன செய் யுங்கள்.


சந்தா - விளக்கம்


தனிப்பிரதி விலை ஒரு அணாவாக இருக்க ஆண்டு சந்தா (கட்டணம்) அய்ந்து ரூபாய் எப்படி? என்று பல அன்பர்கள் கேட்கின்றனர். சந்தாதாரர்களுக்கு, சிறப்பு மலர்கள், ஆண்டு மலர் கிடைக்கும். தனியாக வாங்குவோர், பிரத்தியேக விலைகொடுத்து, மேற்படி மலர்கள் பெறவேண்டும். மலர் களின் விலையையும் சேர்த்தே ஆண்டு சந்தா 5 ரூபாய் என்று குறித்திருக்கிறேன்.


பாரதிதாசன்


கவிபாரதிதாசனைப் பற்றி விசாரித்துப் பல தோழர்கள் கடிதம் எழுதுகின்றது கண்டு மிக்க மகிழ்ச்சி. கனக சுப்புரத்தினம், ‘ஆசிரியர்', புதுச்சேரி என்பது அவர் முகவரி, அரிய தேனினுமினிய ஏடுகள் உள்ளன இப்போதும் அவரிடம். தமிழை உணர்ந்து, புத்தகம் வெளியிடும் அன்பர்கள் தேவை. தமிழகத்திலே, ஒரு நல்ல பதிப்பகம் இருப் பின், கவியின் உள்ள வெள்ளம், நம் வீடெல்லாம் மனமெல்லாம் பாய்ந்து தமிழ் மயமாக்கும், தமிழகத்தின் விசை ஒடிந்திருக் கிறதே என் செய்வது!


திராவிட நாட்டுப் படம்


எல்லை இயல்பு குறித்து திராவிட நாட்டுப் படம் ஒன்று தயாரித்து வெளியிட வேண்டும் என்று தோழர்கள் விரும்புகின்றனர். எனக்கு மிக விருப்பம் அது, திருவாரூர் மாநாட்டிலே நிறுவப்பட்ட குழு அக்காரியத்தைச் செய் வதே பொருத்தமாகும். என்னைப் போன்ற தனி ஆள் செய்வது கூடாது. குழு கூடி எல்லாம் வரையறுத்து, படத்தை வெளியிட வேண்டும்


அழைப்பு


அடுத்த மாதத்திலே தீவிர இளைஞர் மாநாடு காஞ்சியில் நடைபெற இருக்கிறது. காஞ்சிபுரம் தோழர் முனுசாமி, பி.ஏ. அவர்கள் வரவேற்புக் கழகத் தலைவர், தோழர் சி.டி நடராசன் எம்.ஏ.பி.எல். திறப்பு விழா உரையாற்றவும், நெடும்பலம் தோழர் என் ஆர். எஸ். ராமலிங்கம் பி.ஏ., தலைமை தாங் கவும் குறிப்பிட்டுள்ளனர். திராவிட நாட்டுப் பிரிவினையை வலியுறுத்த இம்மாநாட்டில் வேலைத் திட்டம் வகுக்கப்படும். என்னைக் கலந்தாலோசித்தனர். நான் சில யோசனைகள் கூறினேன்.


மாநாட்டிலே திருவாரூர் தோழர் டி.வி. நமசிவாயம், பாரதிதாசனின் திராவிட நாட்டுப் பண்ணைப் பாடவும், லெனின் - பெரியார் படத் திறப்பு விழாக்களை முறையே தோழர்கள் டி.பி.எஸ். பொன் னப்பன், ஏ.கே.டி. சாம்பசிவம் ஆகியோர் நடத்தவேண்டும் என்றும் கூறினேன். மாநாட்டு வேலைகள் பூர்த்தியானதும் அழைப்பு அனுப்புவர். நானும் ஓர் அழைப்பு விடுத்து விடுகிறேன். மாநாட்டுக்கல்ல. திரு மணத்துக்கு, தோழர் ஏ.கே.டி. சாம்பசிவம் (தோழர் ஏ.கே. தங்கவேலரின் திருமகனார்) அடுத்த மாதம், தமிழ் முறையில் திருமணம் நடத்திக் கொள்ளப் போகிறார். பெரியாரும், நாவலர் சோம சுந்தர பாரதியாரும் வர ஏற்பாடு நடக்கிறது. பாகவதர், நமச்சிவாயம், தண்டபாணி தேசிகர் இசைவிருந்து, தங்க வேலர் - ஆதிலட்சுமி அம்மையார் தம் பதிகள் விருந்தோம்பல், இவ்வளவுக்கும் உங்களை அழைக்கிறேன். வருக!”


(சி.என். அண்ணாதுரை,


‘திராவிட நாடு' - 12.07.1942)


இதனிடையில் கடலூரில் அண்ணாவை வரவழைத்து பணமுடிப்பு அளிக்க நடத்திய நிதியளிப்புக் கூட்டத்தில் வழங்கப்பட்ட தொகை - நாங்கள் - எங்கள் ஆசிரியர் திரா விட மணியின் தூண்டுதல் - கழகத் தோழர் களின் கடும் உழைப்பின் மூலம் திரட்டப் பட்டதுதான் அந்தப் பெரிய தொகை!


அந்நாளிலேயே ஒரு பெரும் பொதுக் கூட்டம் போட்டு, அது வழங்கப்பட்டது. அன்றுதான் அண்ணாவையும், அவரது தோழர்கள் டி.பி.எஸ். பொன்னப்பா (காடா கலர் சில்க் ஜிப்பா போட்டிருப்பார்), ‘போட் மெயில்' பொன்னம்பலனார் உட்பட பலரை யும் கண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது. மா.பீட்டர் பி.ஏ. கலந்து கொண்டார்.


இப்படி பல ஊர்களிலும் பணமுடிப்பு களும், மக்கள் அள்ளி வழங்கிய நன்கொடை களும் அன்பு மழையாகப் பொழிந்தன!


(நிறைவு)எளிமையால் உயர்ந்த எடுத்துக்காட்டான சாதனை விஞ்ஞானிகள்!கோவிட் 19 நோய் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கு  ஃபிஷர்ஸ் நிறுவனத்திற்கு உதவி செய்த ஜெர்மானிய-துருக்கி இணையரி டம் முன்பு ஒரு கார் கூட சொந்தமாக இருக்க வில்லை.


தொற்று நோய்களையும், புற்று நோயையும் குணப்படுத்துதற்கான மருந்துகளைக் கண்டு பிடிக்கும் பணியிலேயே தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அறிவியலாளர்கள் ஊகுர் ஸஹின் (Ugur Sahin) மற்றும் ஓஸ்லெம் டுருசி (Ozlem Tureci) இணையர்,  கோவிட் - 19 நோய்த் தடுப்பு  மருந்தை ஃபைஸர் (Pfizer) நிறுவனம் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி களை மேற்கொண்டு உதவியுள்ளனர்.


பையோஎன்டெக் BioNTech மற்றும் அமெ ரிக்க நாட்டு ஃபைஸர் (Pfizer Inc‘s) நிறுவனமும் பங்குதாரர்களாக விளங்கும் அந்த நிறுவனம் கோவிட் -19 நோய்த் தடுப்பு மருந்தைக் கண்டு பிடிப்பதற்கான ஆக்கபூர்வமான புள்ளி விவரங் கள், ஜெர்மானிய உயிரியல் தொழில்நுட்ப நிறு வனத்தில் பணியாற்றி வரும்  கணவன்-மனைவி யான ஓர் இணையர்  ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்த புள்ளி விவரங்களாகும்.  புற்று நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஒரு நடைமுறையைக் கண்டுபிடிப்பதற் காகவே தங்களது வாழ்க்கையையே அர்ப் பணித்த இணையர்கள் அவர்கள். தங்களது பரிசோதனைகள் மூலம் உருவாக்கப்பட்ட கோவிட்-19 நோய்த் தடுப்பு மருந்து 90 சதவிகிதம் அளவுக்கும் மேல் பயனளிப்பதாக இருப்பதாக இதுபற்றி  மேற்கொள்ளப்பட்ட ஒரு பெரிய ஆய் வின் தொடக்க கால புள்ளி விவரங்கள் தெரி விப்பதாக ஃபைசர்ஸ் (Pfizer Inc’s) நிறுவனம் கடந்த திங்கள்கிழமையன்று தெரிவித்துள்ளது.


கரோனா நோய்த் தடுப்பு ஊசிமருந்து கண்டு பிடிப்பது பற்றி ஒரு மிகப்பெரிய சோதனைச் சாலையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியி லிருந்து கிடைத்துள்ள வெற்றிகரமான புள்ளி விவரங்கள், அந்த மருந்தை முதன்முதலாகக் கண்டுபிடித்த நிறுவனம் பையோஎன்டெக் மற்றும் அமரிக்க நாட்டு ஃபைஸர் நிறுவனம்தான் என்பதைக் காட்டுகிறது. இதுவரை மேற்கொள் ளப்பட்ட சோதனைகளில் இருந்து, எந்தவித தீவிரமான பாதுகாப்புக் கவலைகளும் எழ வில்லை என்று கூறும் அந்த நிறுவனங்கள் அந்த மருந்தை அவசர காலப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்துவதற்கான அமெரிக்க நாட்டின் அனுமதியை இந்த மாத இறுதியில் பெற உள்ள தாகவும்  கூறியுள்ளன.


கொலக்னியில் உள்ள ஃபோர்டு நிறுவன தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி, துருக்கி நாட்டில் இருந்து வந்து ஜெர்மன் நாட்டில் குடியேறிய ஒரு துருக்கியரின் மகன் என்ற ஒரு சாதாரணமான பாரம்பரியத்தை மட்டுமே பெற் றுள்ள  ஊகுர் ஸஹின் (Ugur Sahin), BioNTech  நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக தனது 55 ஆம் வயதில் இப்போது விளங்குகிறார்! அவரும், அவரது வாழ்விணையரும், அவரது நிறுவனத் தின் சக நிர்வாக உறுப்பினருமான ஓஸ்லெம் டுருசி (Ozlem Tureci) இருவரும் இன்று ஜெர் மனி நாட்டின் மிகப் பெரிய 100 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக ‘Wel Tam Sonntag' என்ற வார இதழ் பட்டியலிடுகிறது!


இந்த இணையர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய, BioNTech என்று நாஸ்டாக்கில் பதிவு செய்துள்ள   நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஓராண்டுக்கு முன்னர் 4.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது,  கடந்த வெள்ளிக் கிழமை இறுதியில் 21 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு உயர்ந்து விட்டது. கரோனா நோய்ப் பரவலுக்கு எதிராக மக்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை மிகப்பெரிய அளவுக்கு உயர்த்தும் ஒரு வெகுஜன இயக்கத்தின் முன்னணியில் செயல்படுவதற்கு தன்னைத் தானே இந்த நிறு வனம் அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.


“மிகப் பெரிய சாதனைகளுக்குப் பின்னரும், அடக்கம் மிகுந்தவராகவும், அனைவருடனும் இனிமையாகப் பழகுபவராகவும் இருந்த அவர் தன்னை எப்போதுமே மாற்றிக் கொள்ளவில்லை” என்று மத்தியாஸ் க்ரோமேயர் என்ற தொழில் முனைவோருக்கு முதலீட்டு உதவி செய்யும் MIGAG நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் கூறுகிறார்! இந்த நிறுவனத்தின் நிதி உதவிதான்  2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் BioNTech நிறுவனத்துக்கு நிதி ஆதார பின்பல மாக இருந்தது.


சாதாரணமான ஜீன்ஸ் உடைகளைப் போட்டுக் கொண்டும், கையில் தனது சைக்கிள் தலைக் கவசத்தை எடுத்துக் கொண்டும், தனது முதுகில் தனது பையை மாட்டிக் கொண்டும்தான் வியாபாரக் கூட்டங்களில் அவர் கலந்து கொள் வார் என்றும் அவர் கூறினார்! என்னே எளிமை!!


மருத்துவம் பயின்று பிற்காலத்தில் ஒரு மருத் துவராக வரவேண்டும் என்ற தனது இளமைக் காலக் கனவினால் உந்தப்பட்ட அவர் கொலக்னி மற்றும் ஹோம்பர்க் என்னும் தென்மேற்கு நகரங் களின் மருத்துவமனைகளில்  பாடம் கற்பிக்கும் பணியை மேற்கொண்டார். தனது கல்விப் பணியின் தொடக்க காலத்தில் ஹோம்பர்க் நகரில்தான் தனது மனைவி ஓஸ்லெம் டுருசி (Ozlem Tureci)யை சந்தித்தார்.


மருத்துவ ஆராய்ச்சியும், உயிரியல் பாடம் கற்பிப்பதும் (oncology) அவருக்கு மிகவும் பிடித்தமான செயல்களாக ஆயின.


ஜெர்மன் நாட்டில் குடியேறிய ஒரு துருக்கி நாட்டைச் சேர்ந்த மருத்துவரான ஓஸ்லெம் டுருசி (Ozlem Tureci)யின் தந்தை அவர்களது திருமண நாளன்று கூட அவர்கள் இருவரும் சோதனைக்கூட பரிசோதனைகளை மேற்கொள் வதற்கான நேரத்தை ஒதுக்கினார்கள் என்று ஊடக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார் என்றால் அவர்கள் இருவரின் விடாமுயற்சி, பணி ஆர்வம் எப்படிப்பட்டது பார்த்தீர்களா?


புற்று நோய்க்கு எதிரான போரில் மிகப்பெரிய அளவில் உதவி செய்ய இயன்ற உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றலில் அவர்கள் இரு வரும்  மிகுந்த நம்பிக்கையுடன் அத்துறையில் தங்களது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தனர்.  உட லின் ஒவ்வொரு செல்லிலும் உள்ள ஈடு இணை யற்ற மரபணு உருவாக்கத்தையும், அதற்கான தீர்வுகளையும் காண்பதற்கு அவர்கள் முயன் றனர்.


புற்று நோயை எதிர்த்துப் போராடும் ஆண்டி பயாடிக் மருந்துகளைத் தயாரிக்கும் தங்களது (Ganymed Pharmaceuticals) என்ற  நிறுவனத் தைத் தொடங்கியதன் மூலம் அவர்கள் தொழில் முனைவோராக தங்களது வாழ்க்கையைத் தொடங்கினர். ஆனால், அப்போது மெயின்ஸ் (Mainz) பல்கலைக் கழகத்தில் ஒரு பேராசிரியராக இருந்த அவர் மருத்துவக் கல்வி தொடர்பான ஆராய்ச்சிகளையும், பாட கற்பிப்புப் பணியை யும் எப்போதுமே விட்டு விடவில்லை. மிக் ஏஜியில் (MIG AG) இருந்து நிதி முதலீடுகளைப் பெற்றது போலவே தாமஸ், ஆண்டிரியாஸ்ஸ்டு ரெங்க்மேன் (Ganymed Pharmaceuticals) நிறு வனத்திடமிருந்தும் அவர்கள் நிதி முதலீடுக ளைப் பெற்றனர். அவர்கள் தங்களது Hexal மரபணு மருந்து வியாபாரத்தை 2005 நவம்பரில் நோவார்டிஸ் (Novartis) என்ற நிறுவனத்துக்கு விற்றுவிட்டனர்.


இந்த நிறுவனம் 1.4 அமெரிக்க டாலர் விலைக்கு ஜப்பான் நாட்டின் ஆஸ்டெல்லாஸ் (Astellas) நிறுவனத்துக்கு  விற்கப்பட்டுவிட்டது. அந்த நேரத்தில் கேணிமெட் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் பக்கபலமாக இருந்த இந்த இணையர் குழு, 2008 ஆம் ஆண்டில் BioNTech    நிறுவனத்தின் கட்டுமானப் பணியில் மிகவும் மும்முரமாக இருந்தனர். புற்றுநோய்க்கான மனி தரின் இயற்கையான உடல் நோய் எதிர்ப்பு சக்திகளையும், அதற்கான கருவிகளையும் அதிக அளவில் ஆராய்ந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டனர்.


இதில்  மரபணு ஆணைகளை உடலின் செல் களுக்கு அனுப்பும் செய்தியாளர் போன்ற (mRNA) என்ற கருவியும் இதில் அடங்கும்.


சீனாவின் வூஹான் நகரில் ஒரு புதுமாதிரி யான கரோனா தொற்று நோய் பரவி வருவதைப் பற்றி   அறிவியல் இதழில் வெளியான  கட்டுரை ஒன்றை சாஹின் படிக்க நேர்ந்தபோது, BioNTech   நிறுவனத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. புற்று நோய்க்கான எதிர்ப்பு மருந்துகள் (mRNA) தயாரிக்கும் நடைமுறையில் இருந்து சாதாரண மான  ஒரு படி தொலைவிலேயே, தொற்று நோய்களுக்கான (mRNA) அடிப்படையிலான தொற்று நோய்த் தடுப்பு ஊசி மருந்துகள் தயாரிப்பும் இருப்பது அவருக்கு தெரிய வந்தது.


தொற்றுநோய் தடுப்புக்கான ஊசி மருந்தைக் கண்டுபிடிப்பதற்கு உதவும் பல வகையிலான மருந்துக் கலவைகள்பற்றி விரைந்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொள்வதற்கான செயல் திட்டம் ஒன்று 500 சோதனையாளர்கள் நியமனத்தின் மூலம் BioNTech  நிறுவனம் உடனடியாக மேற் கொண்டது. மாபெரும் மருந்து தயாரிப்பு நிறு வனமான ஃபைசர் மற்றும் சீன மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபோசனும் பங்குதாரர்களாக இந்த ஆராய்ச்சிப் பணியைத் தொடங்கினர்.


சாஹினுடன் 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்டு பணியாற்றி வந்தவரும், அவரது சக ஆன்காலஜி புற்று நோய் பேராசிரியருமான மத்தியாஸ் தியோ போல்ட், “எதனையும் குறைத்து மதிப்பிட்டு சாஹின் கூறுவது, மருத்துவத் துறையிலேயே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற அவரது இடைவிடாத, சோர்வில்லாத, பெருவிருப்பத்தை வெளிப்படுத்துவதாகவே இருப்பதாகும். இந்த நம்பிக்கையில் இருந்து, கோவிட்-19 தடுப்பூசி மருந்து தயாரிப்புக்கான கண்டுபிடிப்புக்குத் தாவியிருப்பதே அதை மெய்ப்பிப்பதாக இருப்பதாகும்“ என்று கூறினார்.


'பிசினஸ் இன்சைடர்' பத்திரிகையின் ஓர் அறிக்கையின்படி, BioNTech நிறுவனம் ஃபைச ருடன் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பங்குதாரராக சேர்ந்ததுடன், தங்கள் கண்டுபிடிப்பான ஊசி மருந்தை மனிதர்கள் மீது பரிசோதனை செய்வ தைத் தொடங்கி விட்டனர். செப்டம்பர் மாதத்தில் ஜெர்மன் நாட்டில் உள்ள மிகப்பெரிய 100 பணக் காரர்களின் பட்டியலில்  இந்த இணையர்கள் இடம் பெற்றுள்ளனர்! இப்போது  உலகப் பெரும் பணக்காரர்களாக ஆகியுள்ள இந்த இணைய ருக்குச் சொந்தமான ஒரு கார் கூட முன்னம் இருக்கவில்லை என்று “வாஷிங்டன் போஸ்ட்” இதழ் கூறுகிறது!


“சாதாரணமான தோற்றம் கொண்ட அடக்கம் நிறைந்த மனிதர் அவர். தனது தோற்றத்தைப் பற்றி அவர் கவலைப்பட்டதில்லை. ஆனால், தனது எதிர்பார்ப்புகளையும், விழைவுகளையும் நிறைவேற்ற இயன்ற  கட்டுமானங்களை உரு வாக்க அவர் விரும்புகிறார்.  இந்த விஷயத்தில் அவரது எதிர்பார்ப்புகள் சாதாரணமாகவோ, அடக்கமாகவே இருப்பவை அல்ல” என்று தியோபால்ட் கூறுகிறார்.


தனது இந்த முயற்சி ஓர் அசாதாரணமாக வெற்றியைத் தந்திருப்பதாகக் கூறும் சாஹின், இதுபற்றிய ஒட்டுமொத்தமான பணி இவ்வளவு கடினமானதாக இருக்கும் என்று ஆண்டின் தொடக்கத்தில் தான் அறிந்திருக்கவில்லை என்றும் கூறினார்.


"நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்


மலையினும் மாணப் பெரிது"


(குறள் 124).


எல்லைக்கோட்டோடு சிரிப்பு - கேலி - கிண்டல் நிற்கட்டும்!நகைச்சுவை உணர்வு (Sense of Humour) என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மிகவும் தேவையான ஒன்றாகும்!


'வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்பது நமது நாட்டுப்புற பழமொழியானாலும், அனுபவ ரீதியாக வெகு மக்கள் கண்டறிந்த  தலைமுறை தலைமுறையாக நமக்குக் கற்றுக் கொடுத்த வாழ்வியல் பாடம்!


கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர் களது நகைச்சுவை இன்றும் ரசிக்கப்படுகிறது - பல தலைமுறைகள் தாண்டியும்! அன்று எவ்வகைச் சிரிப்பையும், சிந்தனையையும் தூண்டியதோ அதே உணர்வு இன்றும் பழைய அவரது நகைச்சுவைத் துணுக்குகளைப் பார்த் தாலும் 'உம்மணாமூஞ்சி' களைக்கூட சிரிக்க வைத்து விடுகிறது!


தந்தை பெரியார் எவ்வளவு பெரிய புரட்சிக் கான சிந்தனைத் தந்தை. அவருக்கிருந்த நகைச் சுவை உணர்வை அருகில் இருந்து அனுபவித்த எங்களைப் போன்றவர்களுக்கு அது மறக்க முடியாத அனுபவமாகும்.


நடிகவேள் எம்.ஆர். இராதா பெரிதும் வில் லன் நடிகராகவே நாட்டுக்கு அறிமுகம்; பிறகு ரத்தக் கண்ணீர் போன்ற நாடகங்கள் நடத்தி, திரைக்கதை 'ஹீரோ'வாக நடித்து வரலாறு படைத்தவர்.


அவரது நகைச்சுவை அனுபவங்கள் நாடகக் கொட்டகையிலும் சரி, திரையரங்கங்களிலும் சரி,  பேச்சு மேடைகளிலும் சரி பெரும் நகைச்சுவை முத்திரை இல்லாது இருக்கவே இருக்காது!


பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரது நகைச்சுவை வசனங்களைக் கேட்டு குலுங்கு குலுங்கி சிரிப்பதோடு, வெளியேறிய பிறகும் அதைப்பற்றியே பெரிதும் நினைவு கூர்ந்து அசைபோட்டு, சிரித்து மகிழ்வர்!


சிரிப்பு என்பதும், கேலி, கிண்டல் என்பதும் கூட உள்நோக்கமில்லாத வெகுளித்தனத்தின் வெளிப்பாடாக அமைய வேண்டுமே தவிர, மற்றவர்களை எக்காரணம் கொண்டும் குத்திக் காட்டி - புண்படுத்தி - கேவலப்படுத்தி சிரித்து மகிழ்வதாக இருக்கவே கூடாது!


சில நண்பர்களின் சுபாவமே மற்றவரைப் புண்படுத்தி - தேவையில்லாமல்கூட - மகிழ்வது - சிரித்து மகிழ்வது ஒருவகை வாடிக்கையான வழக்கமாகும்!


கேலி, கிண்டல் எல்லாம் உள்நோக்கம் இல்லாமல் செய்யப்பட்டாலும்கூட - சிரித்து மகிழ்வதற்காகச் செய்யப்பட்டாலும்கூட அதற்கென சில எல்லைகள் உண்டு. அந்த எல்லையைத் தாண்டினால் எதிர்வினைதான் ஏற்படக்கூடும்; எனவே அருமை நண்பர்கள் இதனை கவனமாக, எல்லை மீறாமல் - எவரையும் சங்கடப்படுத்தாமல், பாதிக்கப்பட்டவரும் நம்முடன் இணைந்து சிரித்து மகிழ்வதாக அந்த கேலி, நகைச்சுவை, கிண்டல் அமையுமாயின் நிச்சயம் அது சிறப்பு பெறும்!


‘பண்புடைமை' என்ற தலைப்பில் திருவள்ளு வர் மிக முக்கியமான ஒரு அறிவு விளக்கத்தை அளிப்பது நம் அனைவருக்குமான வாழ்க்கைப் பாடம் ஆகும்!


நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்


பண்புள பாடறிவார் மாட்டு. (குறள் - 995)


"விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்தல் என்பது, துன்பத்தினைத் தருவதாகும்! உலக இயல்புகளை நன்கு அறிந்து நடக்கும் நல்லவர்களிடத்திலேயே பகைமை உணர்ச்சி தோன்றும் காலத்திலேகூட, இனிய பண்புகள் அவர்களிடத்தில் இருக்கவே செய்யும்!"


தமிழில் பண்பாளர் என்று சொல்லும் போதும், ஆங்கிலத்தில் 'Culture of Person' என்று ஒருவர்பற்றிக் கூறும்போதும் அதன் அளவுகோல் எப்படியிருத்தல் அவசியம் என்பத ற்கான அறிவு விளக்கம் அல்லவா?


நீண்ட காலமாக வளர்ந்த நட்பு - இதுபோன்று சிற்சில நேரங்களில் கேலி கிண்டல் வார்த்தையில் - விளையாட்டாக ஆரம்பித்தது 'வினையாக முடிந்தது' என்று சொல்வதற்கேற்ப ஆகி விடக் கூடும்!


எனவே, சிரிக்க வைப்பது நல்ல சீலம் தான் - மகிழ்ச்சி தரும். ஆனால், எல்லை தாண்டுவது பல கால நட்பு முறிவதற்கும் காரணமாகிவிடும், எச்சரிக்கை! எச்சரிக்கை!!


செத்த பின்பும் வாழலாம் - எப்படி


செத்த பின்பும் வாழலாம் - எப்படி?மனிதர்களின் சுயநலமும், சுரண்டலும், ஏய்த் துப் பிழைக்கும் சுபாவமும் உலகில் ஒருபுறம் வளர்ந்து வந்து கொண்டிருந்தபோதிலும், நாம் நம்பிக்கை இழக்க வேண்டிய அளவுக்கு சமூகம் இன்னமும் சீர்கேடடையவில்லை என்பதும், மனித நேயம் பட்டுப்போகாமல், துளிர்த்து வளர்ந்தும் வருகிறது என்பதும் மிகவும் ஆறுதல் தரக் கூடிய மகிழ்ச்சி ஊற்றாகும்!


கொடைகளில் எத்தனையோ வகை உண்டு. தருமம் செய்கிறோம் என்று புகழுக்கும், பெரு மைக்கும் கூட செய்பவர்கள் மலிந்ததால்தான் இத்தனை வகை போலும்! நமது தமிழ் இலக்கி யங்களில் ‘அறவிலை வணிகன் ஆய்-அண்டி ரன் அல்லன்' என்று ஒரு வள்ளல் பற்றிய தமிழ்ப் பாட்டு இடம் பெற்றுள்ளது!


காலணா தர்மம் செய்துவிட்டு நாலணா விளம்பரம் தேடும் மனிதர்கள் அறத்தை - தர்மத்தை இங்கே பொருள் கொள்ளத்தான் வேண்டும். (பொதுவாக அறம் வேறு; தர்மம் வேறு என்பது பண்பாட்டுக்குரிய மிகப்பெரிய விழுமம். அறம் - அது வள்ளுவர் சொன்னதைப் போல ‘மனத்துக்கண் மாசு இலனாதல் அனைத்து அறன்' அல்லவா?)


உள்ளபடியே வலது கையில் கொடுத்ததை இடது கையே அறியாத அளவுக்கு அள்ளிக் கொடுத்தும் விளம்பர வியாதியில் பீடிக்கப்படாத பெருமக்களும், உண்மை ‘கொடைஞர்களும்' உலகில் இருக்கத்தான் செய்கின்றனர்.


அவைகளைப் பற்றி எவ்வளவோ எழுதலாம்.


சீதக்காதியைப் பற்றி ‘செத்தும் கொடை கொடுத்தார் சீதக்காதி' என்பார்கள்! அத்தகைய சான்றாண்மை - இந்த மண்ணில் பஞ்சமில்லை என்பது, விபத்துக்கள் ஏற்பட்டு, அதனால் உயிர் பிழைக்க முடியாது மரணத்தைத் தழுவும் தத்தம் பிள்ளைகளையோ, உறவுகளையோ அப்படியே புதைப்பதோ, எரிப்பதோ செய்வதற்கு முன்பு, அந்த மூளைச் சாவு அடைந்த இனி பிழைக்க முடியாது என்று மருத்துவர்களால் அறிவிக்கப் பட்டவர்களின் உடல் உறுப்புகள் - அந்த உறுப் புகளின் தேவைக்காக நோயுடன் போராடும் மற்ற மனிதர்களுக்குக் கொடையாக - உடல் உறுப்புக் கொடையாகத் தந்து, அதன் மூலம் தாங்களும், தம் பிள்ளைகளும் உலகில் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டே இருக்கும் நிலை; சாகவில்லை என்ற ஆறுதல் கொண்டு அமைதியுடன் அந்த மாளாத, மறையாத துக் கத்தை, துயரத்தைப் போக்கிக் கொள்வது நல்ல வழியே அல்லவா?


ஒருவர் துக்கம் மாறுகிறது; மற்றது ஒரு மகிழ்ச்சி - உடல் உறுப்பு கிடைத்து பொருத்தப் பட்டதால் - கூடுதலாகச் சேருகிறது என்பது எவ்வளவு சிறப்பான மனிதநேயம்! - இல்லையா?


கோவையில் உள்ள கோவை மெடிக்கல் சென்டரில் விபத்தில் அடிபட்டு சேர்க்கப்பட்ட இளைஞன் (18, 19 வயதுக்குட்பட்ட இளைஞன்) ஜி.வைத்தீஸ்வரன் என்று பெயர்.


அவரை சேர்த்த பின்பு மூளைச்சாவு ஏற் பட்டதனால், அவர் இனி பிழைப்பது இயலாது, அதனால் அவரது உடல் உறுப்புகளைக் கொடை யாக தேவைப்படும் நோயாளிகளுக்குத் தந்து மற்றவரை பிழைக்க வைக்கலாம், மறுவாழ் வளிக்கலாம் என்ற மனிதநேய உணர்வுடன் அவரது பெற்றோர் கோபால்-விமலாதேவி ஆகி யோர் மனமுவந்து அவருடைய இருதயம், நுரையீரல்கள், கல்லீரல், சிறுநீரகம், கண்கள், எலும்புகள், தோல் இவற்றையெல்லாம் பிறருக்கு அளிக்க முன்வந்து - இழப்பில் கூட சிறந்த மனிதர்களாக உயர்ந்துள்ளார்கள்.


நமது வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் உரியவர் கள். இறந்த சோக கட்டத்தைக் கூட, ஆனந்தமாக ஆக்கிட்ட அந்த அரும்பெரும் வாழ்விணையர் கள்.


இதயம் சென்னை மருத்துவமனை ஒன்றுக் கும், நுரையீரல்கள் செகந்தராபாத் மருத்துவ மனைக்கும் உடனடியாக தனியாக ஏற்பாடு செய் யப்பட்ட விமானங்களில் எடுத்துச் செல்லப்பட்டு பொருத்தப்பட்டன என்பது, அறிவியலும், மனித நேயமும் எப்படி போட்டி போட்டுக் கொண்டு மனித மாண்பை ஒளி வீசச் செய்கிறது - பார்த் தீர்களா?


செத்தவரை பிழைக்க வைக்க முடியும், துன் பத்தையும் இன்பமாக்கிட முடியும், அழிவையும் கூட ஆக்கத்திற்குத் திருப்ப முடியும், இறந்த பின்னும் பலராக வாழலாம் என்பதே உடல் உறுப்புக் கொடையாகும்!


பெரியார் உடல் உறுப்புக் கழகம்  1984 முதலே தொடங்கப்பட்டு, பலரும் மறைந்த பிறகும் உடற் கொடை, உறுப்புக்கொடை, குருதிக் கொடை, விழிக்கொடை வழங்குவது - ஏதாவது ஒரு வகையில் பயனுறு சாவாக மரணத்தை மாற்ற லாமே என்பதால்தான். இத்தகைய அமைப்பு களின் ஆரவாரமற்ற அமைதிப் பணி தொடர் கிறது.


கரோனாவை வென்ற தமிழ்! - பாராட்டுவோம்!!நவம்பர் 14ஆம் தேதி (2020) 'இந்து தமிழ் திசை' நாளேட்டில் த. ராஜன் அவர்கள் எழுதி - "வெளிவந்தது மூன்றாவது முறையாக விரி வாக்கப்பட்ட 'க்ரியா' அகராதி" என்ற தலைப்பில் வெளிவந்த 'கருத்துப் பேழை' கட்டுரையின் இரண்டாவது தலைப்பு மிகவும் எவரையும் ஈர்க்கும் தலைப்பு ஆகும்!


"கரோனாவுடனான போராட்டத்தின் மத்தியில் வெளியிட்டார் எஸ். ராமகிருஷ்ணன்" என்பதே அது! அத்துடன் 'இந்திய மொழிகளில் தமிழின் சாதனை' என்ற தலைப்பின் கீழ் 76 வயதிலும், அதிலும் கரோனா கொடுந் தொற்று காரணமாக, ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் (அவர் விரைவில் குண மடைந்து வீடு திரும்பி மேலும் பல தமிழ் ஆக்கங் களை- கருவூலங்களைத் தர வேண்டுமென விழைகி றோம்) மூன்றாவது பதிப்பை, எழுத்தாளர் இமையம் அவர்களை வைத்து வெளியிட்டு "சாதனை" புரிந்துள்ளார்.


அவரது தன்னம்பிக்கை, தனிப்பெரும் தளராத உழைப்பும் ஒப்பற்றவை. நோய் தாக்கும் நிலை யிலும் அந்த வலியை மறந்து, தமிழின் பெருமை - அகராதிப் பதிப்பு மூன்றாவதும், கூடுதலாக இணைப்பு ஆக பல புதிய சொற்களை வைத்து (Updating) செய்துள்ள அருஞ்சாதனை, நோயையே தமிழ்ப் பற்றும், கடும் உழைப்பும் விரட்டியடிக்கும் வகையில், மருத்துவப் படுக்கையைக்கூட தனது பணியிடமாக மாற்றிய கடமை வீரரின் சாதனை எடுத்துக்காட்டானது.நமது வீடுகளில், நூலகங்களில், கல்வி நிறுவ னங்களில் ஆங்கில அகராதிகள் போல, ஆங்கில - தமிழ் அகராதிகள் முன்பு தேடிக் கண்டு பிடிக்க வேண்டியது ஆக இருந்ததை, 'க்ரியா' போன்ற பதிப்பகத்தவர்கள் போக்கி தமிழ்த் தொண்டு புரிந்துவருகின்றனர்!


பிற மொழியில் படிக்கும்போது, அய்யங்களைத் தீர்க்கும்போது அகராதிகளில் அச்சொற்களின் பொருளை அறிந்து மனதிற் பதிய வைத்து, புரிந்து வைத்துக் கொள்ளல் நம் மொழி அறிவைப் பெருக்கக் கூடியதாகும்.


இது போன்ற பணியை பல கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களும் செய்ய வேண்டும்.


பேராசிரியர் வையாபுரியார் தொகுத்த சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலம் -தமிழ் அகராதி  (அது சில பிரச்சினைகளையும் கிளப்பிய ஒன்று!) - அதற்கு பல ஆண்டு காலம் கடந்து அண் ணாமலைப் பல்கலைக் கழக மேனாள் தமிழ்த் துறைத் தலைவர், தமிழில் முதலில் ஆராய்ச்சிப் பட்டம் (பி.எச்.டி.) பெற்ற அறிஞர் டாக்டர் அ. சிதம் பரநாதன் (ஏ.சி. செட்டியார்) அவர்களை ஆசிரி யராகக் கொண்டு ஆங்கிலம் - தமிழ் அகராதி வெளிவந்ததும் அடுத்த கட்ட வரலாறு.


இந்த 'க்ரியா'வின் "தற்காலத் தமிழ் அகராதி" அதன் பெயருக்கு ஏற்ப முதல் பதிப்பு 1992இல் வெளியிடப்பட்டது.


பின்னர் 16 ஆண்டுகள் கழித்து - இடைப்பட்ட காலத்தில் தமிழில் உருவான உருவான சொற் களையும், மாற்றங்களையும் உள்ளடக்கி, மேற்படுத் தப்பட்ட பதிப்பு 2008இல் வெளி வந்தது.


இப்போது 12 ஆண்டுகள் கழித்து, அதன் பிறகு தமிழில் உருவான சொற்களையும், மாற்றங்களை யும் உள்ளடக்கியதாக இப்போது மூன்றாம் பதிப்பு - இப்படி அதனைத் தொகுத்தவர் - கரோனாவில் படுக்கையிலிருந்தும்கூட "குடி செய்வார்க்கில்லை பருவம்" என்பதுபோல "பணி செய்வார்க்கில்லை உடல்" என்ற புது மொழிக்கேற்ப உழைத்துள்ளார்.


தமிழ் கூறும் நல்லுலகத்தின் வாழ்த்தும், பாராட் டும் இத்தகைய உழைப்பாளர்களின் உரிமையாகும்.


கரோனாவை தமிழ் வெல்லும் என்று காட்டி யுள்ளது இம்முயற்சி!


அவரது பதிப்புகளை வாங்கி பயன்படுத்தும் பயனாளிகளில் ஒருவன் - வாசகன் என்ற நிலை யில் இந்த புதிய வரவுக்கும் - அதுவும் நெருப்பில் பூத்தது போன்ற வியத்தகு சாதனைக்கும் நன்றி கூறி வரவேற்போமாக - வாங்கிப் பயன் பெற்று அறிவை விரிவு செய்து அகண்டமாக்குவோம்!


குறிப்பு: இந்த "வாழ்வியல் சிந்தனைகள்" மூன்று நாள்களுக்கு முன்பாக எழுதப்பட்டதாகும். எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களின் ‘க்ரியா'வின் "தற்காலத் தமிழ் அகராதி!" நூலினை வாங்கி நேற்று (16.11.2020) இரவு படித்தேன். இந்நிலையில் இன்று (17.11.2020) அதிகாலை அவர் மறைவுற்றது பெரும் துயரத்திற் குரியதாகும். இரங்கல் அறிக்கை 4ஆம் பக்கம் காண்க!


இந்தக் குளிர்காலமும் -உடலின் நோய் எதிர்ப்பு சக்திப் பெருக்கமும்! (1)(2)

இந்தக் குளிர்காலமும் -உடலின் நோய் எதிர்ப்பு சக்திப் பெருக்கமும்! (1)

கரோனா - கொடுந்தொற்று (கோவிட் - 19) அண்மையில் தமிழ்நாடு மற்றும் சில தென் மாநிலங்களில் குறைந்து வருகிறது; உயிர்பலியும் வெகுவாகக் குறைந்து வருகிறது என்பது ஆறுதலான செய்தி.


அதே நேரத்தில் டில்லி தலைநகரில் மீண்டும் ஒரு கடுமையான கொடுந்தொற்று பரவுவதும் - ஒரே நாளில் நூற்றுக்கு மேற்பட்டோரின் உயிரிழப்பும் செய்தியாக வருவது மீண்டும் அச்சத்தில் மக்களை ஆழ்த்துகிறது. மொத்த எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது.


இப்போது குளிர்காலம் - மழைக் காலம் துவங்கி இவை இன்னமும் ஜனவரி மாதத்தின் பாதிக்கு மேல் நீடிக்கக் கூடும்; இந்த காலக் கட்டம் பொதுவாகவே, சளி, இருமல் - காய்ச்சல் வருவது வாடிக்கையான பருவம் உள்ளதாகும்.  இப்போது கரோனா தொற்று அபாயமும் இதோடு இணையும் போது மிகவும் எச்சரிக்கையுடன் வருமுன்னர் காக்கும் வழிமுறைகளில் மக்கள் தீவிர கவனம் செலுத்துவது அவசர அவசியமாகும்.


முதல் அடிப்படைத் தேவை நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity to Disease) வளர்த்துக் கொள்ளும் வகையில் நமது உணவுப் பழக்கம், உடற் பயிற்சி முதலியவற்றை மாற்றி அமைத்துக் கொள்ளுவது மிகவும் இன்றியமையாததாகும்.


ஊட்டச்சத்து நிபுணரான லிசா பீல்ட்ஸ் (Lisa Fields) என்பவர் பல்வேறு அரிய தகவல்களையும், யோசனைகளையும் திரட்டி ஒரு கட்டுரையில் தந்துள்ளார்; அதன் பிழிவு இதோ:


1. நமது அன்றாட உணவில் தாவரங்கள், செடிகள், கீரைகள் கொண்ட உணவை அதிகமாக எடுத்துக் கொள்வது அவசியம்.


பழங்கள், காய்கறிகள், தானிய வகைகள் - கொட்டைகள் (Nuts), கீரைகள் கூடுதலாக உணவில் சேர்த்துக் கொள்வது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவிடக் கூடும்.


நியூஜெர்சி மாநிலத்தின்  நியூவார்க்கைச் (Newark) சேர்ந்த நடேஷா ஃபுஸ்வினா எம்.பி.  அவர்கள் 'இவற்றை உட்கொள்ளுவதன்மூலம் நமது உடலில் ஏற்படும் நெஞ்செரிச்சல், கரோடி னாய்ட்ஸ் (Carotenoids) என்ற ஜி செல்களைப் பாதுகாக்க உதவும். பிளோவனாய்ட்ஸ் (Flavonoids) - இவை எல்லாம் மேலும் பழங்கள், கீரைகள், காய்கறிகளை நாம் உணவாக உண்ணும்போது அது பெரிதும் உதவும்.


2. நமது வயிறு - செரிமானப் பகுதியை (Gut) எப்போதும் ஆரோக்கியத்துடன் வைத்திருப்பது நமது நோய் எதிர்ப்பு சக்திக்குப் பெரிதும் துணை புரியக் கூடும். புரோபயோட்டிக்ஸ் (Probiotics) என்ற என்சைம்களை தினமும் எடுத்துக் கொண்டால் அது நல்ல பாக்டீரியாக்களைப் பெருக்குவதுடன் நமது உடலிலிருந்து அதிகமாக வெளியேறிவிடாமல் அதைப் பெருக்கிடவும் பெரிதும் உதவும். நல்ல தயிர், மோர் போன்ற பால் பொருட்களை அதிகம் சேர்த்தால் செரிமானப் பகுதிக்கு அவை பெரிதும் துணை புரியக்கூடும். கெட்ட கிருமிகள் உடலுக்குள் நுழைவதை எதிர்த்துத் தடுத்து அவை போரிடும் சிப்பாய்களாக நிற்கும்.


உணவுப் பொருட்களின் லேபிள்களில் லேக்டோ பாசிலஸ் (Lactobacillus) (எல்லாம் தயிர் - மோர் வகையறாக்கள்), Acidophilus அல்லது Bifidobacterium Bifidum  என ஒட்டப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். இவை தனியாக என்சைமமாகவும் கிடைக்கிறது. தினமும் ஒன்று எடுக்கலாம் என்று வயிறு, குடல் செரிமான மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்!


3. மன அழுத்தம் இல்லாது அல்லது குறைந்த அளவே இருக்கும்படி அன்றாட வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி, உடல் நலம் பேணும் முறைகள், மூச்சுப் பயிற்சி, மனதை ஆழ்ந்து செலுத்தும் (Meditation) பயிற்சி மூலம் மன இறுக்கத்தைப் போக்கினால் அது நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கிட பெரிதும் உதவும்.


4. உடலின் நீர்ச்சத்து (Dehydration) குறையாமல் - அது பெருகும் அளவுக்கு அடிக்கடி தண்ணீர் குடிப்பது இந்த கால கட்டத்தில் மிகவும் தேவையான ஒன்றாகும். நீர் வறட்சி - உடலின் நீர் வெளியேறி வறண்ட நிலை உருவானால் அது மலச்சிக்கல் போன்ற பலவற்றுக்குக் காரணமாகிவிடக் கூடும். உடலிலிருந்து வெளியேற வேண்டிய கழிவுகள், விஷச் சத்துக்கள் (Toxins) உரிய முறையில் வெளியேற போதிய அளவு தண்ணீர் குடித்தல் பெரிதும் உதவும்.


இந்த விஷச் சத்துகளும், கழிவுகளும் வெளியேறாவிட்டால், நோய் எதிர்ப்புச் சக்தியை அவை வெகுவாக பாதிக்கின்றன என்பதோடு, பல களங்களில் போராடும் போர்ப்படை வீரர்களைப் போல, நம் உடலின் நோய் எதிர்ப்புப் போர்ச் சக்திகள் இவைகளோடு ஒருபுறம் - வெளியே இருந்துவரும் கிருமிகளோடு மறுபுறம் என்று தங்கள் சக்தியை சிதறடிக்கக்கூடும்.

இந்தக் குளிர்காலமும் - உடலின் நோய் எதிர்ப்பு சக்திப் பெருக்கமும்! (2)


5. உடற்பயிற்சிகளை நாளும் தவறாமல் அவரவர் வயதுக்கும், உடலுக்கும் ஏற்ப - மருத்து வர்கள் ஆலோசனை - அறிவுரைப்படி செய்து வருவது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை வளர்த்துக் கொள்ள பெரிதும் உதவும் என்கிறார் 'நியூயார்க் டைம்ஸ்' ஏட்டின் நற்சான்றிதழ் பெற்ற உடற்பயிற்சியாளர் ரிக் ரிச்சே (Rick Richey). இப்படி குளிர் காலம் போன்ற பல பருவங்களில் ஏற்படும் உடல் நோய் தாக்கத்தைத் தடுக்க நோய் எதிர்ப்பு (Immunity to Disease) சக்தியைப் பெருக்கிடும் என்றும் கூறுகிறார். இந்த உடற்பயிற்சிகளை பெரிதும் திறந்த (வெளிச்சம் உள்ள) வெளிப் பகுதிகளில் செய்யும்போது மிகு பயன் விளையும் என்றும் அறிவுறுத்துகிறார்!


வைட்டமின் D சூரிய வெளிச்சத்தில் அதிக மாகக் கிடைக்கிறது. வைட்டமின் D நமது நோய் எதிர்ப்பைப் பெருக்க உதவிடும் முக்கியமான ஒன்றாகும். அதிலும் இந்தக் கரோனா  கோவிட் - 19 இல் அதைத் தடுக்க வைட்டமின் D -அய்தான் பெரிதும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சூரிய வெளிச்சத்தில் - வெளியே அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது. அண்மைக் கால ஆய்வுகள் இந்தக் கருத்தை உறுதிப்படுத்தியுள்ளன.


நமது தோல் பகுதி சூரிய வெளிச்சத்தில் போதிய வைட்டமின் D-அய் பெறுவதால் - இந்த வெளிப்பகுதி உடற்பயிற்சியால் சூரிய வெளிச்சம் - வெப்பம் மூலம் அதிகமான பலனை ஏற்படுத்தும் என்பதும் அதே முடிவுகளின் கண்டுபிடிப்புமாகும்!


6. உடலுக்குப் போதிய ஓய்வு (Rest) முக்கியத் தேவையாகும்!


தூக்கம் (8 மணி அல்லது ஏழரை மணி நேரம்) மிகவும் அவசியமாகும். மருத்துவர்கள் நம் உடலைப் பரிசோதிக்கும்போது கேட்கும் மூன்று முக்கிய கேள்விகளில் 'பசி இருக்கா?', 'தூக்கம் போதிய அளவு வருகிறதா?' 'ஏதாவது புதிய அறிகுறிகள் - வழமைக்கு மாறாக உடலில் - போக்கில் உங்களுக்குத் தென்படுகிறதா?' என்பவைதானே!


தூக்கமின்மை பலவற்றிற்கும் அடிப்படை 'செயலூர்தியாகி'விடக் கூடும்! எனவே தூக்கத்தைக் குறைக்காதீர். நமது உடல் கடிகாரம் போல் எப்போதும் இயங்கக் கூடியது. அதைக் கடைப்பிடித்து ஒழுகுவதில் நம்முடைய குறை பாட்டால்தான் அதன் முறைகள் - சீரான ஒரே நேர்கோட்டில் போகாமல் தாறுமாறாகப் போகக் காரணமாக அமைகின்றது.


தூங்கும்போது வெளிச்சத்துடன் தூங்காதீர்! இருட்டை உருவாக்கி - விளக்கணைத்து விட்டுத் தூங்குங்கள்.


'புக்சினோ  (Fuksina) என்ற தூக்க நிபு ணர் கூறுகிறார்: "நீல விளக்கு, ஸ்மார்ட் போன்கள், கணினிகள் 'மெலடோனின்' என்ற முக்கிய ஹார்மோன் பெருக்கத்தை உடலில்  ஏற்படுத்தாமல் இவை தடுத்து விடுகின்றன!" என்கிறார்.


இந்தக் கருவிகளுக்குப் படுக்கைக்குச் சென்று தூங்குவதற்கு ஓரிரு மணி நேரம் முன்பே 'ஓய்வு' கொடுத்து விடுங்கள்! (அதுபோலவே டி.வி. பார்ப்பதைத் தவிர்ப்பது தூங்குமுன் அவசியம்)


7. கைகளை சோப்பு போட்டு அடிக்கடி சரியாகக் கழுவுதல் மிக மிக மிக முக்கியம்.


பாக்டீரியாக்கள், வைரஸ் கிருமிகள், தொற்று நோய்க் கிருமிகள், உங்கள் கைகளில் பற்றி அந்தக் கைகளைக் கொண்டு  மூக்கைத் தொடுதல், கண்கள், வாயைத் தொடுதல் மூலம் எளிதில் கிருமிகள் உடலின் உள்ளே படையெடுத்து நம்மை நோய்த் தொற்றுக்கு ஆளாக்கிவிடக் கூடும் என்பதால், அடிக்கொரு தரம் கை கழுவுங்கள்; நன்றாகக் கழுவுங்கள்.


அதிலும் குறிப்பாக, சமைக்கும் முன்பும், உண்ணும் முன்பும், கழிவறைக்குச் சென்று வெளியே வந்த உடனும், மூக்கைச் சிந்தும் போதும் அல்லது வேறு ஏதாவது பொருளை தொட்டுக் கைகள் அழுக்காகும் நிலை ஏற்படும் போதும், இந்தக் கைகழுவுதல் அடிக்கடி (சோம்ப லின்றி) நடைபெற்றால், ‘நோயை நாம் கை கழு வலாம்'.


கவனத்துடன் செயல்படுங்கள்.


வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்


வைத்தூறு போலக் கெடும். (குறள் 435)


வெற்றியின் பெருமை புரிய தோல்வியின் சுவை முக்கியம்!நம்மில் பெரும்பாலோருக்கு - எல்லாம், எப்போதும் எதிர்பார்ப்பதைப் போலவே நடக்க வேண்டும்; அதன் காரணமாக எப் போதும் மகிழ்ச்சியில் திளைக்க வேண்டும், இன்பத்தையே சுவைக்க வேண்டும் என்ற இலக்கிலேயே வாழ நினைப்பவர்கள்தான்.


ஆனால், யதார்த்தத்தில் - நடைமுறை வாழ்க்கையில் இது இயலக்கூடியதா? அன்றாட உலக வாழ்க்கை இதற்கு ஆதர வான காட்சிகளை, அனுபவங்களைச் சுட்டிக் காட்டுவதற்குப் பதிலாக அதற்கு நேர் எதிர் மறையாக, துன்பங்களையும், தோல்வி களையும்தானே பலருக்கு அளித்து அவர் களது வாழ்க்கையை ஒரு ‘மயான காண்ட மாக’ ஆக்கிக் கொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை அல்லவா?


ஒரு நண்பர் - சாதாரண எளிய நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். கடுமையாக உழைத்துப் படித்தார், பட்டம் பெற்றார். கடின உழைப்பு அவரை திட்டமிட்டபடியே உயரத்துக்கு உந்தியது. அமெரிக்காவிற்குப் போய் மேல்படிப்பை முடித்தார்.


சிறப்பான அறிவும், அழகும் (அவரது கண்ணோட்டத்தில் சொல்லுகிறேன்) ஒருங்கே அமையப் பெற்ற படித்த, பட்டம் பெற்ற பெண் தனது வாழ்க்கைத் துணை வியாக அமைய வேண்டும்; அதுபோல இரண்டு குழந்தைகளையும் பெற்று, தமது வாழ்க்கை என்றென்றும் மகிழ்ச்சியில் நனைந்ததொரு வாழ்க்கையாகவே அமைய வேண்டும் என்று அவர் நினைத்தபடி - எல்லாம் திட்டமிட்டபடி சிறப்பாக நடை பெற்று வந்தது. தன் பெண்டு, தன் பிள்ளை என்ற சின்னதொரு கடுகு உள்ளம். அவருக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களில் அதிக மான அல்லது நெருக்கமான நண்பர்களோ கிடையாது!


உற்றார் உறவினர்களுக்கு உதவி அவர்களை வறுமையில் வாடிடும் நிலையில் கைதூக்கி விட வேண்டும் என்ற எண்ணமும் உடையவர் அல்ல!


அவரது உலகம் எல்லாம் நவீன வசதிகளுடன் கூடிய ஆடம்பர பங்களா, விலை உயர்ந்த கார், அருமையான லேட்டஸ்ட் மின்னணு வசதிகளான செல்போன், etc. etc.!


வாழ்க்கை நதி எவ்வித சலனமும் இன்றி ஓடிக் கொண்டிருந்தது!


மகிழ்ச்சி! மகிழ்ச்சி!! மகிழ்ச்சி!!!


திடீரென்று ஒரு இடி மின்னல், பூகம்பம் போன்ற நிலை - அவரது வாழ்வில்! நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் சென்றது - வங்கிகள் கொடுத்த கடனைத் திரும்பப் பெற முடியவில்லை - இவர், இவரது துணைவியாரது வேலைகள் பறிபோயின! வீட்டையும், காரையும் வங்கிக் கடன் தவணை செலுத்த முடியாததால் இழக்கும் நிலை.


இவருக்கு உதவிட நண்பர்கள் எவரும் தேடிப் பார்த்தாலும் கண்ணுக்கெட்டிய தூரத் திற்குத் தெரியவே இல்லை!


வாழ்க்கையின் மற்றொரு முனைக்கு அக்குடும்பம் - வறுமை, ஏழ்மை, கடன் தொல்லை, வேலை இழந்த கொடுமை - இவற்றால் ஏற்பட்ட மன அழுத்தமோ சொல் லும் தரமன்று; வார்த்தைகளில், எழுத்தில் வர்ணிக்க முடியாது!


காட்டுச் செடிகளாக வளர்ந்தால் எவ்வித புயல், மழை, காற்று எதையும் சமாளித்துக் கொள்ள முடியும். வெறும் அழகு குரோட் டன்ஸ் செடிகளாகவே வளர்க்கப்பட்டால் சற்று மிகுந்த காற்று, மழை என்றால்கூட எதிர்கொள்ள முடியாத நிலைதானே ஏற்படக்கூடும்?


அதே நிலை இந்த நண்பரின் குடும்பத் திற்கும்; வேறு வழி எதுவும் தெரியவில்லை.


மற்றவரிடம் உதவி கேட்கவும், அண்ட வும் யாருமில்லை - மனமும் இல்லை.


ஓர் இரவு - கணவரும், மனைவியும் நஞ்சு அருந்தினர்; அதற்கு முன் அவ்விரு பிள்ளை களுக்கும் நஞ்சைக் கொடுத்து சாவை நெருங்கச் செய்தனர். இவர்கள் இருவரும் அதே முறையில் உலகை விட்டு விடை பெற்றனர் - பரிதாபகரமாக!


இவர்களது இந்த திடீர் உயர்வுக்கும் - திடீர் வீழ்ச்சிக்கும் - தற்கொலைகளுக்கும் மூல காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்து, அதிலிருந்து மீளக் கற்றுக் கொள்ள வேண்டியது, சமூகத்தின் கடமையாகும்!


வாழ்க்கை என்பது எப்போதும் ’பிளஸ்’ ஆகவே இருக்காது; வெளிச்சம் - இருட்டு - வெளிச்சம் என்று மாறி மாறியே வரும்!


வெற்றியையே சுவைத்துப் பழகக் கூடாது. தோல்வியையும் எதிர்கொண்டு சுவைத்து மனப்பூர்வமாக அதனை சமா ளித்து, மீண்டும் எழ தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்; அதையே அடிப்படையாகக் கொண்டு மறுபடியும் புத்தாக்கம், புத்தெழுச்சி கொண்டு, நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருண்ட காலங்களைச் சந்திக்க வேண்டிய மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளும்.


கட்டாயம் வரவழைத்துக் கொண்ட, அந்த துன்ப அனுபவத்தையும் சலிக்காமல், துவளாமல் எப்படி சமாளித்து, வெற்றிக் கொண்டு மீளுவது என்ற சிந்தனைக்கும், செயல் வடிவம் தருவதற்கும் உங்களைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.


அறுசுவை உணவை சாப்பிட்டால், சலிப்பு வரும். பசி, பட்டினி - இவற்றையும் அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.


பிறகு எந்த உணவும் - எளிய உணவும் கூட அறுசுவை உணவைவிட மிகவும் அற்புதமாகவே உண்ணக் கூடிய உயர்தர உணவாக சுவைக்கும் உங்களுக்கு.


இருட்டில் இருந்தவர்களும் வெளிச் சத்தை நன்கு உணர முடியும்.


வெயிலில் காய்ந்தால்தான் நிழலின் அருமை, பெருமை புரியும் - கற்றுக் கொள்ளுங்கள், அனைவரும்!


எத்தனை காலம்தான் ஏமாறுவரோ இந்த ‘‘படித்த தற்குறிகள்!''நம் நாட்டில் ‘படித்த முட்டாள்' என்று ஒரு சொலவடை உண்டு. சற்று கடினமானதும், காரமானதும் ஆன சொல்தான் இது. படிப்பு என்பதே மக்கள் ‘முட்டாள்'களாகக் கூடாது என் பதற்குத்தான் தேவை! ஆனால், இப்படியும்கூட நடக்குமா - இந்த அறிவியல் வளர்ச்சி யுகத்தில் - இதுபோன்ற மனிதர்களும்கூட இந்த பூமிப்பந்தில் வாழுகிறார்களா? என்ற வியப்பு நம் போன்ற பலருக்கும் விலாவைக் குடைவதாக இருக்கிறது!


‘அலாவுதீனும் அற்புத விளக்கும்' என்ற ஒரு கற்பனைக் கதை படிக்க, கேட்க சுவையானது தான். ஆனால், அதை இன்று உண்மை என்று நம்பி, அதுவும் மருத்துவப் பட்டம் பெற்ற ஒரு டாக்டர் ஏமாறுகிறார் என்றால், அதுபற்றி என்னதான் சொல்லுவது? புரியவில்லை.


ஏற்கெனவே உங்களில் ஒரு சிலர் இந்தச் செய்தியை சில ஏடுகளில் படித்திருக்கக் கூடும் என்றாலும்கூட, வாழ்க்கையில் பேராசைக்கு அடிமைப்பட்டு, மனிதர்கள் தங்கள் வாழ்க் கையை வறண்ட பாலைவனமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ‘விடுதலை' யிலும், மற்ற செய்தித் தாள்களிலும் வந்த செய் தியை அப்படியே தருகிறோம், படியுங்கள்! படித்து, எத்தனை  காலந்தான் ஏமாறுவார்களோ படித்தவர்களான பிறகும்கூட என்று கேட்கவே தோன்றும்!


‘‘உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாய்க்கஹன்.  இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மருத்துவம் படித்துவிட்டு பிறகு இந்தியா வந்து பிரபல மருத்துவமனையில் இதய நோய் சிறப்பு மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.


சில ஆண்டுகளுக்கு முன்பு இவரிடம்  சமீனா என்ற பெண் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன் மூலம் மருத்துவருடன் அவரது குடும்பத்தினர் அறிமுகமானார்கள்.  சமீனாவின் கணவர் இஸ்மாயில் மருத்துவரின் வீட்டிற்குச் சென்று அவ்வப்போது விலை உயர்ந்த பொருட்களை கொடுத்துள்ளார்.


இது குறித்து மருத்துவர் கேட்டபோது, ‘‘எங்கள் குடும்பத்தின் மூதாதையர் அரபு நாட்டில் இருந்து வந்தவர்கள். அப்படி வரும் போது தங்களிடம் இருந்த அலா வுதீன் அற்புத விளக்கையும் கொண்டு வந்துள்ளனர். அதை நாங்கள் மிகவும் கவனமாகப் பாதுகாத்து வருகிறோம். எங்களுக்கு நேரம் இருக்கும்போது அந்த விளக்கைப் பயன்படுத்தி எங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்வோம், அந்த விளக்கின் மூலம் கிடைத்த பொருட்கள் தான் இவை'' என்று கூறி ஏமாற்றி உள்ளார்.


 வெளிநாடுகளில் படித்திருந்தாலும் மூடநம்பிக்கை காரணமாக சிந்திக்காமல் அவரின் பேச்சை அப்படியே நம்பிய மருத்துவர் அதை தனக்கு விலைக்கு கொடுக்க முடியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண்ணின் கணவர் 10 கோடி ரூபாய் கொடுத்தால் அந்த விளக்கை நான் தருவேன் என்று கூறினார். மேலும் அரபு நாடுகளில் இதை வாங்க நூறு கோடிவரை கொடுக்கத் தயாராக உள்ளனர் என்று ஏமாற்று வார்த்தைகளை இஸ்மாயில் கூறினார்.


தான் 10 கோடி ரூபாய் உடனடியாக தர முடியாது, ஆரம்பக் கட்டமாக 2 கோடி ரூபாய் தருகிறேன் என்று மருத் துவர் கூறியுள்ளார். ஆனால், அதற்கு இணங்கவில்லை. பின்னர் 2 கோடி 50 லட்சத்திற்குப் பேசி முடித்து அந்த  விளக்கினை கொடுத்துள்ளார்.


மேலும் அவரை தங்களின் வீட் டிற்கு அழைத்து விளக்கை காட்டி வேண்டி யதைக் கேளுங்கள் என்று கூறினார். சில நிமிடங்களில் அந்த அறை முழுவதுமே புகையாக பரவியது. பின்னர் பூதம் போன்று வேடம் அணிந்த ஒருவர் அங்கு நின்றுகொண்டு இருந்தார். உடனே மருத்துவர் சில பொருட்களைக் கேட்க அனைத்தும் உங்கள் வீட்டில் வைத்துவிட்டேன் என்று அந்த பூதமாக வேடம் போட்டவர் கூறினார். அதன் பிறகு மீண்டும் புகை தோன்ற அந்த பூதம் வேடமிட்டவர் ஓடி ஒளிந்துகொண்டார்,


இதனை அடுத்து மருத்துவர் விளக்கை வாங்கிக்கொண்டு மீண்டும் தனது வீடு திரும்பினார். தனது வீட்டிற்கு பல எதிர்பார்ப்புகளோடு சென்ற அவர் அங்கே ஒன்றுமே இல்லாதது கண்டு பின்னர் பலமுறை விளக்கைப் பார்த்து ‘பூதமே வெளியேவா?‘ என்று கூறியுள்ளார். ஆனால் பூதம் எதுவும் வரவில்லை. இதனை அடுத்துதான் ஏமாற்றப் பட்டதை மிகவும் தாமதாகத் தெரிந்துகொண்டார்.


இதனை அடுத்து பிரம்மபுரி காவல் நிலையத்தின்கீழ் வரும் கைர்நகர் பகுதி யில் தான் ஏமாற்றப்பட்டது குறித்து மருத் துவர் லாய்க்கஹன் புகார் அளித்தார் 


இந்த புகாரை தொடர்ந்து காவல் துறையினர் சமீனாவின் கணவர் இஸ் மாயில் மற்றும் அவரின் நண்பரைக் கைது செய்துள்ளனர்.  மேலும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சமீனா  என்ற அந்தப் பெண்ணை தேடி வருகின்றனர்."


இதுதான் அந்தச் செய்தி.


மூடநம்பிக்கைக்கும், பேராசைக்கும் ஜாதி, மதம், நாடு என்ற எல்லையெல்லாம் கிடையாது!


எல்லா நாடுகளிலும் இப்படிப்பட்ட ‘படித்த தற்குறிகள்' பரவலாக இருக்கிறார்கள்!


‘‘உங்களுக்கு இத்தனை மில்லியன் டாலர் பரிசு விழுந்துள்ளது; அதை உங்கள் வங்கிக் கணக்கில் (கிரெடிட் செய்ய) சேர்க்கவேண்டும்; எனவே, உங்கள் வங்கிக் கணக்கு, ஆதார் முதலிய தகவல்களை இந்தத் தொலைப்பேசி எண்ணுக்கோ, மின்னஞ்சலுக்கோ அனுப்புங்கள் என்று வந்தவுடன், அதுபற்றி என்னவென்று தெரியாத அந்த மின்னஞ்சலை நம்பி, ‘நமது வங்கிக் கணக்கு எண்ணைத் தரலாமா?' என்ற பொது அறிவுகூட இல்லாது ‘பெருந்தொகை கனவான்கள்' எப்படி தங்களிடம் உள்ள அத்துணை சேமிப்புகளையும் இழக்கிறார்கள் என்று எண்ணும்போது, எப்படித்தான் இவர்க ளைத் திருத்துவதோ தெரியவில்லை!


எத்தனை காலம்தான் ஏமாறுவார்கள் இது போன்ற படித்த தற்குறிப் பேராசை மன்னன்கள்? புரியவில்லை - பகுத்தறிவு வாழ்க்கையின் எல்லாவித கோணங்களிலிருந்தும் சிந்தித்து செயல்படவேண்டும். எளிதில் ஏமாறக்கூடாது! ஏமாற்றுபவருக்கு அது தொழில்; ஏமாறுபவர் நிலை அப்படி இல்லையே! புரிந்துகொள்ளுங்கள்!


மேடையில் வீசிய மெல்லிய ஆய்வுப் பூங்காற்று!தமிழ்நாட்டில் வெளியாகும் திங்கள் இதழ் களில் தனிச் சிறப்பு வாய்ந்த ஏடு - எடுத்துக் காட்டான ஏடு - மொழி உணர்வு, இன உணர்வு, பகுத்தறிவு - அனைத்துக்கும் அறிவு ஊற்றாக மாதந்தோறும் வெளிவரும் ஏடு, வலிவும் பொலிவும் உள்ள ஏடு ஆசிரியர் ‘முகம்' மாமணி அவர்களால் நிறுவப்பட்டு, அவரது தொண்டைப் பகிர்ந்து, முனைவர் இளமாறன் அவர்களது சீரிய முயற்சியால் கரோனா கொடுந்தொற்று காலத் திலும் அறிவு நீர் பாய்ச்சும் தமிழ்க் கலங்கரை வெளிச்சம் ‘முகம்' ஏடாகும்.


பெரியவர் ‘முகம்' மாமணி அவர்கள் ‘விடுதலை'ப் பண்ணையில் விளைந்து இன்று பலருக்கும் பயன்படும் விதை நெல்லாகும்!


அவரது கிந்தனார் பதில்களைப் படித்துச் சுவைத்துப் பாராட்டாதவர்களே எவரும் இருக்க மாட்டார்கள்!


‘பிலிம் இண்டியா' என்ற பழைய பம்பாய் ஏட்டின் ஆசிரியர் பாபுராவ் பட்டேலின் பதில் களுக்காகவே அவ்வேட்டைப் பலரும் வாங்கிப் படிப்பார்கள் - அக்காலத்தில்.


அதற்கு இணையானவர் அல்ல; அதற்கும் மேலான ‘பதிலாளி' அய்யா முகம் மாமணி என்ற ‘கிந்தனார்!' - கலைவாணர் மீதுள்ள காதல் காரணமே இந்தப் புனை பெயர்!


இவ்விதழில் (நவம்பர் 2020) ஒரு வினா - விடை:


வினா: கிந்தனாரே, உங்களை 'விடுதலை' நாளேடு பாராட்டக் காரணம் என்னவோ?


விடை: அது தாய் - பிள்ளை உறவம்மா!


என்னே அருமையான உண்மையை அடிப் படையாகக் கொண்ட பதில்! (‘விடுதலை'யில் அச்சுக் கோர்த்த தொழிலாளியாக நுழைந்து, பிரபல எழுத்தாளர் - கருத்தாளராக ஒளி பாய்ச் சும் ஏட்டுலகக் கலங்கரை வெளிச்சமாகியவர் அய்யா முகம் மாமணி அவர்கள்.


அவ்வேட்டில்,


இத்திங்கள் (நவம்பர் 2020) முனைவர் திருமதி சரளா ராஜ கோபாலன் அவர்கள், ஆய் வறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்களது கடும் உழைப்புப் பற்றியும், அத்தகைய அறிஞர் களுக்குரிய முக்கியத்துவத்தைத் தமிழ் கூரும் நல்லுலகம் அளிக்கத் தவறியது பற்றியும் மிக அருமையாக எழுதியுள்ள ஒரு அரிய  செய்திக் கோவை இதோ:


ஆய்வுத் தேனீயின்


‘சமணமும் தமிழும்' நூல்


“எந்தப் பயனையும் எதிர்பாராமலும், எண் ணற்ற இடர்ப் பாடுகளுக்கு நடுவிலும், எவரின் துணையும் இல்லாமலும் ஆய்வறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் ஆற்றிய ஆய்வுப் பணி வியக்கத்தக்க பணியாகும். அவருடைய இந்தத் தொண்டினை மதித்துப் போற்றுவா ரில்லை.


‘சமணமும் தமிழும்' என்ற நூலை, நான் காண்டுக் காலம் கடும் உழைப்பிற்குப் பின்னால் அவர் எழுதி முடித்தார். ஆனால் அதை வெளியிட அவருக்கு வசதியில்லை . வெளியிட யாரும் முன் வரவில்லை. இதைப்பற்றி அவரே மனம் நொந்து பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.


‘நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டு இந்த நூலை எழுதி ஏன் என் ஆயுளை வீணாக் கினேன் என்று கருதி இதை வெளியிடாமலேயே இருந்து விட்டேன்.


அதற்கும் சில காரணங்கள் உண்டு. உண்மை யாக உழைத்து ஆராய்ச்சி நூல் எழுதும் உழைப் பாளிகளுக்குத் தமிழ் நாட்டில் இடமில்லை' என்று வருந்தி எழுதியிருந்தார்.


பத்தாண்டுகளுக்குப் பிறகு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இந்நூலை வெளியிட முன் வந்தது. நூலின் கையெழுத்துப் பிரதியைத் தேடிய போது தன் வாழ்நாளில் என்றும் அடையாத அதிர்ச்சியை அவர் அடைந்தார். கறையான்கள் அரித்துத் தின்று விட்டன.


பத்துமாதம் சுமந்து பெற்ற குழந்தையைப் பறிகொடுத்த தாயின் வேதனையை அவர் அடைந்தார். ஆனாலும் சோர் வடையாமல் மீண்டும் அந்த நூலினை எழுதி முடித்தார். அவருடைய நூல்கள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் இத்தகைய வேதனையான வரலாறு உண்டு.''


திராவிடர் இயக்கத்தவர் பெரிதும் போற்றிக் கொண்டாடி அவர்தம் கருத்து வளம், ஆய்வறிவு, தொண்டறம் பற்றி மேலும், முன்னிலைப்படுத்த வேண்டிய தமிழ் அறிஞர்கள், ஆய்வுப் புலவர் கள் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார், நாவலர் மு.சோமசுந்தர பாரதியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., பரிதிமாற் கலைஞர் போன்றவர்கள். தனித்தமிழ் செம்மொழி தலைமுறை தாண்டிய அடுத்த வரிசையில் வரும் பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார், புலவர் குழந்தை, மயிலை சீனி.வேங்கட சாமி, திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், பேராசிரியர் சி.இலக்கு வனார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்ற பலரது ஆய்வுக் கருவூலங்களை, இளைய தலைமுறைக்குப் போய் சேரும் வண்ணம் பரப்பிட வேண்டும்.


அமெரிக்க அதிபர் தேர்தலும் - திருவள்ளுவரும்!அமெரிக்காவின் அடாவடி அதிபர் டொனால்ட் டிரம்ப் தோல்வி முகத்தோடு தேர்தல் முடிவுகளைச் சந்திக்கும் நிலையில், அவரை நோக்கிப் பாய்ந்த அம்புகளில் மிகவும் கூர்மையான ஒன்று - யாரும் எதிர்பார்க்காத - கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை விட சக்தி வாய்ந்த சொற்களைக் கொண்ட ஏவுகணையானது ஒரு விசித்திரமான அரசியல் பாடம் ஆகும்!


அப்பாடம் அனைத்து அரசியல்வாதிக ளுக்கும், பொது வாழ்வில் உள்ளவர்களுக்கும் மட்டுமல்ல, (ஏன் தனி வாழ்வில் கூட முக் கியம்தான்!).


வள்ளுவரின் குறளும்கூட அமெரிக்க அதிபர் தேர்தலில் நமக்கு நல்ல பொழிப்புரை விளக்கமாக அமைந்துவிட்டது! காரணம் தேவையற்ற தனது - பெருநிலைப் பதவி பற்றிக் கூட கவலைப்படாமல், பேசிய பேச்சு - பழிப்புரை  - அதற்கான பொழிப்புரை உரிய காலத்தில் தகுந்த பாடமாக அவருக்கு ஒரு 17 வயது இளம் பெண், அதுவும் சுவீடன் நாட்டைச் சார்ந்தவரால் சரியான முறையில் திருப்பித் தரப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. அதே நாணயத் தைத் திருப்பிக் கொடுத்து முகத்தில் அடிப் பது, அடிக்கப்படுவது என்று.


இதோ சுவைக்க வேண்டிய ஒரு செய்தி - டிரம்ப் பற்றி!


சுவீடன் நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க், சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் ஆவார்.


சுவீடன் நாடாளுமன்றம் முன்பு போராட் டம், மாணவர்களுக்குக் காலநிலை குறித்த விழிப்புணர்வு வழங்குதல், சூழலியல் தொடர்பான கட்டுரைகளை எழுதுதல் எனத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார், கிரேட்டா. ‘டைம்ஸ்' பத்திரிகையின் இந்த ஆண்டின் சிறந்த நபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார். அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.


உலக நாடுகளின் தலைவர்களைக் கடு மையாக விமர்சனம் செய்யக்கூடியவர் கிரேட்டா. இதுதொடர்பாக, டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பதிவில்,  “மிகவும் கேலிக்குரியது. கிரேட்டா தன்பர்க் தன்னு டைய கோபத்தைக் கட்டுப்படுத்த முயல வேண்டும். தனது நண்பர்களுடன் நல்ல க்ளாசிக் திரைப்படங்களைப் பார்க்க வேண் டும். Chill கிரேட்டா, Chill !” என்று கிரேட்டா வின் கோபத்தை விமர்சனம் செய்து பதி விட்டிருந்தார்.


கிரேட்டா தன்பெர்க் இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, தன்னுடைய ட்விட்டர் பதிவில்,


“So ridiculous. Donald must work on his Anger Management problem, then go to a good old fashioned movie with a friend! Chill Donald, Chill!” 


என்று பதிவிட்டுள்ளார்.


அதன் தமிழாக்கம்:


“மிகவும் அபத்தமானது. டொனால்ட் தம் முடைய கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பிறகு நண்பரு டன் நல்ல பேஷன்  திரைப்படங்களைப் பார்க்கட்டும்.  Chill டொனால்ட்Chill” என்று பதிவிட்டார்.


“என் மீது அவ்வப்போது அரசியல் சாயம் பூசுகிறார்கள். ஆனால், நான் எந்தவொரு கட்சிக்கோ, அரசியல்வாதிக்கோ, சித்தாந்தத் திற்கோ ஆதரவாகப் பேசியதே இல்லை. அறிவியலையும், சுற்றுச்சூழலையும் காப் பாற்ற நாம் எதுவும் செய்யாமல் விட்டால் நடக்கப்போகும் ஆபத்துகளைப்பற்றி மட் டுமே நான் பேசுகிறேன்.


இன்றைக்குத் தேவைப்படும் அரசியல் வலதிலும் சரி, இடதிலும் சரி, நடுநிலையான நிலைப்பாட்டிலும் சரியாக இல்லவே இல்லை!” என்று தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையும், அரசியல் குறித்த விமர்சனத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


எப்படி சரியான பதிலடி பார்த்தீர்களா?


யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்


சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு (குறள் 127)


ஒருவர், தாம் காக்க வேண்டியவைகளில், எவற்றை காக்கத் தவறினாலும், தம் நாவை மட்டுமாவது கட்டாயம் காக்க வேண்டும். அப்படிக் காக்கத் தவறினால், அவர் சொற் குற்றத்தால் அகப்பட்டுக் கொண்டு பெரிதும் துன்பப்படுவார் - என்பதே இதன் கருத்துரை யாகும்.


அரசியல் தோல்வியைவிட இது மிகவும் மோசமானது - தவிர்க்கப்பட வேண்டியது. டிரம்பின் அரசியல் வாழ்விலிருந்து அரசியல் நடத்துவோர் கற்க வேண்டிய அதாவது தவிர்க்கப்பட வேண்டிய - பாடங்கள் - ஆயிரம் உண்டு இந்த நான்காண்டு - பதவிக் காலத்தில்!


ஜோபைடன் என்ற மாமனிதர்! (1)(2)

ஜோபைடன் என்ற மாமனிதர்!  (1)

அமெரிக்க அதிபராக கடும் போட்டிக்கிடை யில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜன நாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோபைடன் அவர்கள் பற்றிய - அரசியலுக்கு அப்பாற்பட்ட அரிய தகவல்கள் - அவர் எத்தகைய சகிப்புத் தன்மையும், பொறுமையும் வாய்ந்த, எந்த கடுஞ்சோதனைகளையும் தாங்கி, தாண்டி வாழ்வில் வெற்றி பெற்று வந்தவர் என்பதை நன்கு விளக்குகின்றன.


வாழ்க்கையில் எதிர்பாராத இழப்புகளையும், அதிர்ச்சிக்குரிய நிகழ்வுகளையும் சந்தித்து, வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாமோ என்ற விரக்தியின் விளிம்புக்கே கூடச் சென்று அந்த கவலையைப் புறந்தள்ளி, அதிலிருந்து மீண்டு, தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை ஓர் அமைதியும், ஆழமும் நிறைந்ததாகவே ஆக்கிக் கொண்டு எவ்வாறு ஜோபைடன் என்ற அந்த மாமனிதர் முன்னேறினார் என்ற மனித இயல்பு களை உள்ளடக்கிய அவரது வாழ்வின் குறிப்புகள் பற்றிய சில தகவல்கள்  - (அவரது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றியது அல்ல).1972 இல் சட்டம் படித்து வழக்குரைஞராக வரவேண்டியவரான இவர், தமது மிகக் குறைந்த வயதில்  (31 வயது) செனட் சபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு அரசியலுக்கு வந்தார் - மகிழ்ந்தார். ஆனால், அந்த மகிழ்ச்சி பெரும் அளவில் நீடிக்க முடியாத அளவுக்கு வாழ்க்கையில் ஒரு சோக நிகழ்வு நடந்தது.


தனது துணைவியார் நீலியா, மகள் ஏமி, மகன்கள் பியூ மற்றும் ராபர்ட் ஆகியவர்களுடன் ‘கிறிஸ்துமஸ் ஷாப்பிங்’ சென்ற போது, இவரது காரின்மீது ஒரு டிராக்டர் மோதி, இவரது துணை வியார் நீலி, 9 வயது மகள் ஏமி கொல்லப்பட்டனர். மகன்கள் பியூ, ராபர்ட் ஆகியோர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தனர்.


இந்த சோகத்திலிருந்து அவரால் எளிதில் மீள முடியவில்லை; காரணம் இரண்டு தாயற்ற சிறு ஆண் பிள்ளைகளை வளர்க்கும் ‘ஒற்றைத் தந்தை’ நிலைக்குத் தள்ளப்பட்டார்! அவர் அடைந்த துயரம், துன்பம் அளவிடற்கரியது.


ஒரு கட்டத்தில் அவரது மன அழுத்தம் மிக அதிகமாகி தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட யோசிக்கும் அளவுக்குச் சென்று விட்ட நிலைமை!எனினும் அவர் அதன் பிறகு தெளிவடைந்து “ஏன் நாம் வாழ்க்கையில் நம்பிக்கை இழக்க வேண்டும்? எதையும் எதிர்கொண்டு வாழும் பக்குவத்தைப் பெறுவதுதானே சரியான அறிவு வழி. இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு கடமையாற்றி அந்த துன்பத்திலிருந்து மீளும் வழிகாண வேண்டும்'' என்ற திட சித்தத்துடன் வாழ்க்கையைத் தொடர்ந்தார்!


இரண்டு இளம் மகன்களையும் வளர்க்கும் தந்தை - தாயின் பெருங்கடமையை அவர் ஆற்றிடத் தயங்கவில்லை.


36 ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் 4 மணி நேரம் AMTRAK - ரயிலில் பயணம் செய்து, தனது பணிகளை முடித்து, வீட்டிற்கு வந்து தனது பிள்ளைகளுக்கு அன்பையும், பாசத்தையும், உணவையும் ஊட்டி வளர்த்தார்; படுக்கையில் அமர்த்திக் கொண்டு பல கதைகளைப் படித்துக் கூறி அவர்களைப் பக்குவப்படுத்தி வளர்த்தார்!1987ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்த லில் போட்டியிட முடிவு செய்தார் பைடன். அதற்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது அவருக்குத் தலையில் அடிக்கடி கடுமையான வலி ஏற்பட்டது. அவருக்கு மூளையில் இருக்கும் ரத்த நாளங்களில் இரண்டு மிகப்பெரிய வீக்கங் கள் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக தலையில் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் எனவும் மருத்துவர்கள் அவரிடம் தெரிவித்தனர்.


மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், அதனால் ஏற்பட்ட பக்க விளைவாக அவரது நுரையீரலில் ரத்த உறைவு ஏற்பட வழிவகுத்தது. இதனால் மீண்டுமொரு அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய நிலைக் குத் தள்ளப்பட்டார் பைடன். எப்போதும் தடை களிலிருந்து மீண்டெழும் குணம் படைத்த பைடன், ஏழு மாத ஓய்வுக்குப் பிறகு மீண்டும் அரசியல் வாழ்க்கையில் நுழைந்தார்.


வாழ்க்கையின் சோக மேகங்களும், இருட் டும் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங் கின. என்றாலும் வாழ்க்கை என்பது பல எதிர் பாராத அதிர்ச்சித் திருப்பங்களைக் கொண்டது தானே! - இல்லையா? அதை எதிர்பார்க்கத்தானே வேண்டும்!


இவரது மகனுக்கு 46 வயது. மூளைப் புற்று நோய் அந்த பிள்ளையைத் தாக்கியது - அவரை மிகப்பெரிய துன்பக் கடலில் தள்ளியது. அவ ருக்கு சிகிச்சை, மற்றவைகளையும் ஏற்பாடு செய்து தனது அன்பைப் பொழிந்தார்! ஆனா லும், மகன் இறப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது.மகன் மரணமடைந்த சோகம் இவரை மீண் டும் தாக்கியது. எதையும் தாங்கும் இதயத்தோடு ஜோபைடன் இந்தத் தாங்க முடியாத இழப்பை யும் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று கருதி அதை ஏற்றுக் கொண்டார். தனது பொது வாழ்வுப் பணியை - துணைக் குடியரசுத் தலைவர் பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்டு, பராக் ஒபாமா அவர்கள் குடியரசுத் தலைவராக - அதிபராக இருந்தபோது அவரால் பெரிதும் கவரப்பட்டவரானார்!


எவ்வளவு துன்பம், துயரம் தொல்லைகள் தொடர்ந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் வாழ்வது என்பது பாடம் அல்லவா?


தனது  துணைவி, மகள், பிள்ளைகள் எப் போதும் தன்னுடன் இருக்கிறார்கள் என்ற உணர் வுடன் வாழத் தொடங்கினார், துயரத்தையும் போக்கிக் கொண்டார்.


முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இவரைப் பற்றி அருமையாகச் சொன்னார். “பாசாங்கு இல்லாது மனிதர்களை நேசிக்கும் அன்பான பண்புள்ளவர்; அவரது தொண்டு தொய்வில் லாதது - தன்னலமற்றத் தொண்டுள்ளம் அவரு டையது” என்று கூறியது சரியான மதிப்பீடு - சிறந்த பாராட்டும்கூட!


அத்தகைய சிறந்த மாமனிதர். எதிர்நீச்சல் அடித்து, அமெரிக்க நாட்டை ஒரு வகையான தனி மனித சர்வாதிகார ஆபத்திலிருந்து மீட் டெடுத்து, ஜனநாயகத்தை - புத்துயிரும் புத்தாக்கமும் தர ஆயத்தமாகியுள்ளார் என்பது  நற்செய்தி அல்லவா?


(ஒரு காணொலியின் மூலம் திரட்டப்பட்ட தகவல் இது!)

ஜோ(ஜோசப்) பைடன் என்ற மாமனிதர் (2)


உலகமே அண்ணாந்து பார்க்கும் அளவில் அமெரிக்க வரலாற்றிலேயே மிக அதிகமான அமெரிக்க வாக்காளர்களின் வாக்கைப் பெற்று, கடும் போட்டியில் வெற்றி வாகை சூடியதோடு, மனித குலத்தின் சரி பகுதியான பெண்ணினத்தின் ஆற்றல், அறிவு, திறமைக் குரிய முக்கியத்துவமும், பங்களிப்பும், வாய்ப் பும் முதல் முறையாக ஒரு பெண்ணுக்கு அதுவும் இந்திய வம்சாவளி, தமிழ் நாட்டுப் பெண்மணிக்கு துணைக் குடியரசுத் தலைவர் பதவிப் பொறுப்பினைத் தந்து வெற்றி உலாவரும் அவர்களைப் பற்றிய அறியாத தக வல்கள் அறிவது அவர்களைப் பெருமைப்ப டுத்த மட்டுமல்ல; வாழ்க்கையில் துன்பமும், துயரமும் நம்மைத் தாக்கும் போதும், மனந் தளராமல், ஒடிந்து நொடிந்து போகாமல், நம்பிக்கையுடன் ‘இது மாறும்', இதை மாற்றி வெற்றி பெற்றிட நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை சிகரத் தின்மீது ஏறி நின்று முழக்கமிடுவதற்கும், விரக் தியை விரட்டி, மன அழுத்தத்திற்கு அறவே இடந்தராமல், துணிவு கொள்ள ஜோபைடன் போன்றவர்களின் வாழ்க்கை நமக்கெல்லாம் தன்னம்பிக்கை பாடங்களாகவும் பயன்படும் அல்லவா?


மூன்றாண்டுகளுக்கு முன்பே (2017 இல்) டிசம்பரில் எனக்கு அன்பு மகள் அருள் - பாலு ஜோபைடன் பற்றி - அவரது மனிதத்தின் தனிச் சிறப்பு பற்றி விளக்கிக் கூறி, “இந்தப் புத்தகம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். அவரது வாழ்க்கை எத்தனை நெகிழ்ச்சிக்குரிய நிகழ்ச்சி களின் தொகுப் பாக அமைந்துள்ளது என்பதை சுவைப்படக் கூறும்'' என்று சிறு அறிமுகத்துடன் தந்தார்.


“Promise Me, Dad” - “எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள் அப்பா” என்ற தலைப்பு தான் ஜோ பைடன் 2017 இல் எழுதி வெளிவந்த ஆங்கில நூல்!


அதன் தலைப்பு இன்று அதைவிட மிகப் பொருத்தமாக அமையக்கூடிய ஒன்றாகவும் உள்ளது! ‘A year of Hope, Hardship, and Purpose' என்பது அத்தலைப்பின்கீழ் - அப் புத்தகத்தின் முன்பக்க அட்டையில் உள்ள ஆங்கில வாசகம்.


‘நம்பிக்கை, துன்பம், ஒரு குறிக்கோளும் என்பதற்கான ஆண்டு' என்பதே அது!


இவ்வாண்டு ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அவர் நாட்டிற்கு சேவை செய்ய தன்னை அர்ப்பணித்துக்கொள்ள முன்வந் துள்ள நிலையில் - இந்தத் தேர்தல் ஆண்டும் கூட அம் மூன்றும் அவரைப் பொறுத்தவரை அவரைக் கட்டித் தழுவிய அம்சங்கள்தானே!


புத்தகத்திற்கு வெளியே நின்று பேசிக் கொண்டே இருந்தோமேயானாலும் வாசகர் களின் ஆவல் மேலும் சோதிக்கப்படக் கூடா தல்லவா?


உள்ளே போகலாமா?


2014 ஆம் ஆண்டு நவம்பர், ஜோபைடனின் குடும்ப உறுப்பினர்கள் 13 பேர், ‘நன்றித் திருநாளில்‘, ‘நான் ட்டு கெட்' பகுதியில் கூடி தங்களது குடும்பத்தினரின் 40 ஆண்டு நிறைவு விழாவில் கூடி கொண்டாட முனைகிறார்கள். Thanks Giving என்பது அமெரிக்க வாழ்வில் குடும்ப உறுப்பினர்கள் சந்தித்து மகிழும் நாள் ஆயிற்றே!


தங்கள் குடும்பத்தின் எதிர்காலம் எப்படி அமையக் கூடும் என்பது பற்றியெல்லாம் அவர்களது குடும்பச் சந்திப்பில் - நன்றித் திருநாளின்போது - பேச்சுகள், உரையாடல் நிகழ்ந்தன.  கருத்து பரிமாற்றங்கள் குடும்பங் களில் - சந்திப்புகளின் போது நடைபெற்றால் அது ஆரோக்கியமான அறிவு வழிதானே!


இதற்கு 15 மாதங்களுக்கு முன் ஜோபை டனின் மூத்த மகன் - பீயோ (Beau) வுக்கு மூளைப் புற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலை (46 வயது). அவர் அதிலிருந்து மீண்டு உயிர் பிழைப்பாரா என்பது சந்தேகம் என்ற நிலை இருந்தது!


அப்போது அவரது மூத்த மகன் பீயோ தனது தந்தை ஜோபைடனிடம், “தந்தையே, நீங்கள் எனக்கொரு சத்திய வாக்குத் தரவேண் டும். எனக்கு என்னவானாலும்கூட, நீங்கள் உங்கள் பணியிலிருந்தும், வாழ்க்கையிலிருந் தும் எனக் காக ஒதுங்கிவிடக் கூடாது; நீங்கள் எப்போதும் வழக்கம்போல் சரியாகவே இருக்க வேண்டும்” என்றார்.


கண்களில் நீர்த் ததும்ப, உறுதி அளித்தார் மகனுக்கு, தந்தை ஜோபைடன். அதுபோலவே அவரது மூத்த மகன் நோயினால் 12 மாதங்கள் போராடியும்கூட மீள முடியவில்லை; மரணம் அவர்களைப் பிரித்த கொடுமைக்கு ஆளாகிய நிலையில், மகனுக்குக் கொடுத்த வாக்கு றுதிப்படி நடந்து கொள்ளுவதிலிருந்து தான் மாறிவிடாமல் இருக்க, தனது துணை அதிபர் பொறுப்புகளை - ஏற்பட்ட கடமைகளை - உலகப் பயணங்கள் - பூமிப்பந்தில் யாருக்கெல் லாம் எந்தெந்த வகையில் உதவிட முடியுமோ அப்படியெல்லாம் அவர் கடமையாற்றி துய ரத்தை ஒரு வழியில் துடைத்துக் கொண்டார்!


பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இப்படி தாங்க முடியாத பிரிவுகளால் துன்பமும், துயரமும் ஏற்படும்போது, அதிலிருந்து வெளியே வர ஒரே வழி, முன்னிலும் அதிக மான அளவு பல மடங்கு உழைத்து, கடமை யாற்றிடுவதன் மூலம் தான் அத்துன்பம் துயரம், சோகத்தை விரட்டியடிக்க முடியும் என்று பலமுறை தந்தை பெரியார் அவர்கள் அறிவுரை கூறியுள்ளார் என்பது இதைப் படிக்கையில் நமக்கு நினைவுக்கு வருகிறது!


தனது கடமைகளாற்றுவது, பாரக் ஒபாமா போன்றவர்களின் அகநக நட்பை பலப்படுத்திக் கொள்வது, உலக மக்களின் பல தீர்க்க முடியாத பிரச்சினைகட்குத் தீர்வு காணும் இடையறாத முயற்சிகள் - எப்போதும் இழக்காத உறுதிமிக்க நம்பிக்கை - இவையே ஜோபைடனை பெரி தும் அதன்பிறகு வாழவைத்து இன்று உலகம் பாராட்டும் புது நம்பிக்கை அளிக்கும் அதிப ராக அவர் உயருவதற்கு அடித்தளமாக அமைந்து விட்டது!


இந்த நூலை அவர் எழுதியுள்ளது துணைக் குடியரசுத் தலைவர் என்ற நிலையினால் அல்ல. ஒரு பாசமிக்க தந்தை, தாத்தா, நண்பர், ஒரு கணவர் என பல நிலைகளில் எப்படிப் பட்ட அனுபவங்கள் அவர் வாழ்க்கையைச் செதுக்கின என்பதை உலகுக்குப் பறை சாற்றிடும் பல்சுவைப் பாடங்களே!


இந்நூல் துவங்குமுன் அவர் தத்துவஞானி, இமானுவேல் காந்த் அவர்களது அறிவு மொழியை அறிமுகப்படுத்துகிறார் - வாசகர் கட்கு!


“Rules for happiness: something to do, someone to love, something to hope for.” - Immanuel Kant.


மகிழ்ச்சிக்குரிய விதிகள் என்பவை எவை தெரியுமா? சிற்சில பணிகளைச் செய்தல், சிற் சிலரை நேசித்து அன்புக் காட்டுதல், நம்பிக்கை யோடு பயணம் தொடர்தல் என்பதே!


அமெரிக்க பேராசிரியரின் கேள்வியும் - பதிலும்! (1)(2)

அமெரிக்க பேராசிரியரின் கேள்வியும் - பதிலும்! (1)


அருமை நண்பர் அமெரிக்கப் பேராசிரியர் முனைவர் மானமிகு அரசு செல்லையா இரண்டு கேள்விகள் (27.10.2020) கேட்டுள்ளார்.


கேள்வி: நீங்கள் படித்த பல புத்தகங்களில் மிகவும் சிறந்தவையாகக் கருதுவன எவை? அவற்றை வரிசைப்படுத்தினால் எங்கள் புத்தகப் பட்டியலிலும் அவற்றை சேர்த்துக் கொள்ள இயலுமல்லவா?


இதற்குப் பதில் எழுதுவது நீண்ட ஒரு ஆய்வுக் கட்டுரை போல ஆகிவிடக்கூடும்! காரணம், எனது மாணவப் பருவம், குறிப்பாக கல்லூரி-பல்கலைக்கழகக் காலந்தொட்டே பற்பல நூல்களை நானே தேர்வு செய்தும் அல்லது மிக நெருக்கமான நண்பர்கள், இயக்கப் பிரமுகர்களான டார்ப்பிட்டோ ஏ.பி.ஜெனார்த் தனம் எம்.ஏ., போன்றவர்கள், எனது ஆசிரியர் கள், நூலக நண்பர்கள் மூலம் அறிவுறுத்தப்படும் பல நூல்களை வாங்கியோ அல்லது எங்கள் பல்கலைக்கழகத்தின் நூலகத்திற்கோ சென்று படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவன்.தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் அவ்வப்போது படித்த நூல்கள், மீண்டும் மீண்டும் படிக்க வேண் டும் என்று விரும்பப்படும் நூல்கள் வி.ச.காண் டேகரின் புதினங்கள், ராகுல சாங்கிருத்தியாயனின் நூல்களான ‘வால்காவிலிருந்து கங்கை வரை', ‘பொது உடைமை தான் என்ன?' மற்றும் ‘சிந்து முதல் கங்கை வரை‘, ‘ராஜஸ்தானத்து அந்தப் புரங்கள்', ‘ஊர் சுற்றிப் புராணம்'. ஆங்கிலத்தில் 'One Hundred Great Lives '. பண்டித நேருவின் ‘டிஸ்கவரி ஆப் இந்தியா', 'Glimpses of the World History', ‘Letters From a Father to his Daughter' மற்றும் ‘Gilbert Slater’s - Dravidian Elements in Indian Culture' - இப்படி நீளும். அக்கிரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. என்னும் இராமசாமி அய்யங்கார்  எழுதிய மொழி தொகுப்பு நூல்களும் அடங்கும். ஒரு குறிப்பிட்ட ஆசிரியரை விரும்பினால், அவர் எழுதிய அத் துணை முத்துக்களைச் சேர்ப்பதும், படிப்பதும் எனது வாடிக்கை!


பொதுவாக ஆங்கிலப் புதினங்களை அவ் வளவு விரும்பிப் படிப்பதில்லை.


ஒருமுறை அமெரிக்க நாவலாசிரியர் Irving Wallace  அவர்களது நூலை ஒரு நண்பர் அறிமுகப்படுத்தினார் - பல ஆண்டுகளுக்கு முன்பு. (அவர் வித்தியாசமான எழுத்தாளர்-ஓராண்டுக்கு ஒரு நூல் எழுதி வெளியிடுவார்). அது புதினமாக இருந்தாலும், குறிப்பிட்ட மய்யக் கருத்து ஒரு சீர்திருத்தமாகவோ, சமூகத்தில் புரையோடிப் போன பிரச்சினையை அம்பலப் படுத்துவதாகவோ இருக்கும் என்பதால், அவரது அத்துணை நூல்களையும் படித்துச் சுவை காண்பேன்.


'The Man' என்ற ஒரு புதினம். அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பினத்தவர் தற்காலிகமாகக்கூட அதிபராக வந்தால் எப்படி யெல்லாம் தங்களது ஒவ்வாமையை அவரிடம் பிற சமுகத்தவர் காட்டுவர் என்பதைத் தொலை நோக்குடன் எழுதினார். அதனையே அறிஞர் அண்ணா அவர்கள் ‘வெள்ளை மாளிகையில்...!!' என்று ‘திராவிட நாடு' ஏட்டில் மிகமிகச் சிறப்பான இலக்கிய நடையில் எழுதினார்! மூலத்தைவிட இவரது தெள்ளு தமிழ் நடை மிகச் சிறந்ததாகும்!


 எந்த அளவுக்கு அமெரிக்க முற்போக்கு எழுத்தாளர்  Irving Wallace  - இர்விங் வேலஸ் அவர்கள், மனித உரிமையின் மீது தணியாத ஆர்வம் கொண்டவர் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டு. 1976இல் நாங்கள் “மிசா”வில் - இந்தியா வின் நெருக்கடி நிலை காலத்தில் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டபோது வெளிவந்த ஒரு நூல்பற்றி ‘ஹிந்து' நாளேட்டில் மதிப்புரை படித்து, அதனை வாங்கி அனுப்பச் சொன்னேன். வீட்டாரும் அனுப்பினர். அந்தப் புதினத்தின் பெயர் ‘The R Document' (‘ஆர்.டாக்குமெண்ட்') என்பது! நெருக்கடி காலப் பிரச்சினைகள், கருத் துரிமைப் பறித்தல்  எல்லாம் அதில் மய்யப்படுத்தி கற்பனை போல எழுதப்பட்ட ஒன்றாகும். இந் திய அவசர கால நிலையின் வேற்று உருவகம் அந்தப் புத்தகம். அதனை அன்றைய மத்திய அரசு விற்காமல் பார்த்துக் கொண்டது, தடுத்து விட்டது! பிறகு செய்தி அழிந்து விட்டது!


இப்படி பல நூல்கள் தந்தை பெரியார், புரட்சி யாளர் அம்பேத்கர் போன்றவர்களின் நூல்கள் மீண்டும் மீண்டும் படிக்கப்பட்டு, அசைபோட வேண்டியவையாகும். அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், நாவலர் இரா.நெடுஞ்செழியன், கா.அப்பாதுரையார், மயிலை சீனி.வேங்கடசாமி  ஆகியோர் எழுதிய நூல்கள் என - இப்படி நீண்ட பட்டியலே உண்டு.


‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதுமல்லவா?'


(நாளை பார்ப்போம்)

அமெரிக்க பேராசிரியரின் கேள்வியும் - பதிலும்! (2)


தோழர் அரசு செல்லையாவின் அடுத்த கேள்வி: நீங்கள் எழுதிய புத்தகங்களில் உங் களுக்கு மனநிறைவை ஏற்படுத்திய புத்தகங்கள் எவை?


1. இரண்டு ஆண்டுகள் ஆய்வு - தரவுகள் சேர்த்து எழுதிய, 25 பதிப்புகளுக்கு மேல் பரவிய ‘கீதையின் மறுபக்கம்!’.


‘கீதையின் மறுபக்கம்‘ என்ற இந்த ஆய்வு நூலை எழுத வேண்டுமென்ற எண்ணம், நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் மறைவதற்கு முன் அதுபற்றிய ஆய்வு நூல் ஒன்றை எழுதிட வேண்டுகோள் விடுத்ததோடு, அய்யா அவர்களுக்கே உரித்த முறையில் - மொழியில் “தக்க சன்மானமும்'' வழங்கப்படும் என்றும் ‘விடுதலை’யில் வெளியிட்டார்; அய்யா வின் வாழ்நாளில் எந்தப் புலவரும், ஆராய்ச்சி யாளரும் அந்த வேண்டுகோளுக்கு இணங்க நூல் எழுதிட ஏனோ முன்வராதது வருத்தத்திற் குரியதே!


ஆந்திர பகுத்தறிவாளரும், தெலுங்கு நாளேடான ‘ஆந்திரப் பிரபா’ - கோயங்காவின் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தைச் சேர்ந்த அவ் ஏட்டின் ஆசிரியருமான நாரண வெங்கடேசராவ் என்ற சீரிய பகுத்தறிவாளர் ‘வி.ஆர்.நார்லா’ என்று அழைக்கப்படுபவர், தலைசிறந்த அறிஞர் - தனது வீட்டின் மூன்று மகா அடுக்குகளிலும் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்களே! அவ் வளவு ஆழமாக  தனது இறுதிக்காலம் வரை படித்தும், எழுதியும் வந்த துணிச்சலும், அறிவு நாணயமும் வாய்ந்த சிந்தனையாளர். அவர் எழுதிய “GEETHA - TRUE  READING” என்ற நூல் கிடைத்ததைப் படித்தேன். படித்தபோது இனித்தது. அது எனது முயற்சியைத் தூண்டியது. ‘லிப்கோ’ வெளியிட்ட சமஸ்கிருத சுலோகங்க ளைத் தமிழிலும் வெளியிட்ட பகவத் கீதை தொடங்கி பல நூல்களை ஒரு 6 மாதங்கள் அளவில் (2 ஆண்டுகள் வரை) திரட்டுவதும், படிப்பதும், குறிப்பெடுப்பதுமான பணியை, எனது பல்வேறு பிரச்சாரப் பணி, அன்றாட எழுத்துப்பணி, பத்திரிகை, இயக்க நிர்வாகத்தின் இடையே செய்து வந்தேன். அதற்கென குறைந்த பட்சம் ஓரிரு மாதங்களை தனியே ஒதுக்கினா லொழிய இப்பணியை முடிக்க முடியாது என்று எண்ணி அதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி இருந்தேன்.


அமெரிக்காவில் உள்ள மகள் அருள்செல்வி - பாலகுரு இல்லத்திற்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. அது வழமையான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் - அமெரிக்காவில் கோடை காலம் அல்ல; அசாத்திய குளிர் - பனிக்காலம், அதனால் வீட்டில் வெப்பம் போதிய அளவில் இருக்கும் சூழலில் ஒரு தனி அறையில், நாங்கள் எடுத்துச் சென்ற இரண்டு பெரிய பெட்டி நூல்கள் - கீதைப் பற்றியவை - குறிப்புகளுடன் அந்த அறையை சுற்றிப் பரப்பி வைக்கப்பட்டு, கட்டு வெள்ளைக் காகிதம், மேசை - நாற்காலி - அமர்ந்து படித் தலும், எழுதுவதிலும்தான் ஏறத்தாழ ஒரு மாதம் சென்றது. உணவு வேளைக்கு அழைப்பார்கள். உண்டு சிறிது ஓய்வு, மாலை நேரங்களில் சில நாள் மட்டும் இளைப்பாறுதல் மற்றபடி இந்தப் பணிதான் என்று முடிக்கப்பட்டது.


700 சுலோகங்கள் - அதன் முரண்களைக் கூறியது கூறல் மட்டுமல்ல, முரணான செய்திக ளும் இப்படிப்பல உள்ளன. பலரும் படிக்காம லேயே அதில் வரும் சிற்சில சுலோகங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு அதற்கு பதவுரை, கருத்துரை, தத்துவ உரைகளைக் கூறுவதே வாடிக்கையாகிவிட்டது.


அதில் இல்லாததையும்கூட பலர் அளக் கின்றனர்.


“எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.


எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.


எது நடக்க இருக்கிறதோ,


அதுவும் நன்றாகவே நடக்கும்.


உன்னுடையதை எதை இழந்தாய்?


எதற்காக நீ அழுகிறாய்?


எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்ப தற்கு?


எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவ தற்கு?


எதை நீ எடுத்துக் கொண்டாயோ,


அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது,


எதை கொடுத்தாயோ,


அது இங்கேயே கொடுக்கப்பட்டது,


எது இன்று உன்னுடையதோ,


அது நாளை மற்றொருவருடையதாகிறது,


மற்றொரு நாள், அது வேறொருவருடைய தாகும்''.


என்பதாக சில வாக்கியங்களைப் பலரும் கூறுவது வேடிக்கை; காரணம் அவை கீதையில் எங்கும் கிடையாது!


இதுபோலப் பலப்பல.


இந்த நூல் 25, 26 பதிப்புகள் வெளியாகியிருப்ப தோடு, ஆங்கிலத்திலும், மலையாள மொழியி லும் மொழி பெயர்க்கப்பட்டும் பரப்பப்பட்டு உள்ளது!


முத்தமிழ் அறிஞர் கலைஞரிடம் பகவத் கீதை நூலை - அந்த சமயத்தில் திட்டமிட்டே நேரில் சென்று கொடுத்த இந்து முன்னணி மாநில அமைப்பாளர் இராம.கோபாலனிடம் அதை வாங்கிக் கொண்டு, “அவசியம் இதைப் (கீதையைப்) படிக்கிறேன்; நானும் ஒரு நூலைத் தருகிறேன். நீங்களும் அதைப் படியுங்கள். தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டலாம் அல் லவா?” என்பதாகக் கூறி தனது மேசையைத் திறந்து எடுத்துக் கொடுத்தது - “கீதையின் மறுப் பக்கம்'' நூல்...


இந்தச் செய்தி அப்போது நாளேடுகள், வார ஏடுகளில் செய்தியாக வந்தது; அன்று மாலையே எனக்கு உடனடியாக கலைஞர் அவர்களே தொலைப்பேசி வாயிலாகத் தெரிவித்து மகிழ்ந் தார். நானும் அவருக்கு எனது நன்றியைத் தெரி வித்துக் கொண்டேன்.


நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களும், பல பிரமுகர்களும் பற்பல கூட்டங்களில் வெளி யீட்டு விழாக்களை நடத்தி, விளக்கி ஆற்றிட்ட சொற்பொழிவுகளும்கூட தனி சிறு வெளி யீடுகளாக வந்துள்ளது!


எனது அருமை நண்பர், மனித உரிமைப் போராளி. பிரபல வழக்குரைஞர் பாளை.சண் முகம் அவர்கள் இந்த நூலை முழுமையாகப் படித்து விட்டு, அவர் படுக்கையில் இருந்த நிலை யில், என்னை அழைத்து வெகுவாகப் பாராட்டி உற்சாகப்படுத்தினார். ‘என்ன ஓய், இதுதான் உமக்கு “MAGNUM OPUS” - மிகப்பெரிய நூல் - சிறந்த நூலாக அமையும்‘ என்று வாழ்த்தி மகிழ்ந்தார்.


அதன் தாக்கம் - பரவி 26 பதிப்புகள் வெளி வந்து, பல லட்சம் வாசகர்களைச் சென்றடைந்துள் ளது என்பது உழைப்புக்கேற்ற ஊதியம் அல் லவா?


அதுவும் தந்தை பெரியார் இட்ட கட்டளை யால் கிடைத்த “ஊதியம்‘’ தானே!


இல்லையா?


மற்ற இரு நூல்கள் - ‘சுயமரியாதைத் திரு மணம் - தத்துவமும் வரலாறும்!’


‘காங்கிரஸ் மறைக்கப்பட்ட வரலாறு’ என்ற நூல்.


இப்படி பல உண்டு என்றாலும், இவை இரண்டும் ‘கருத்தரித்தது’ சென்னை மத்திய சிறைச் சாலையிலும், திருச்சி மத்திய சிறைச் சாலையிலும்! வெளியில் வந்து பல ஆண்டுகள் கழித்தே இவை முழுமையடைந்து நூல்களாக வெளிவந்தன!


‘பரவாத செய்திகள் பரவ வேண்டும்!’ என்பது தான் அவற்றின் இலக்கு! என்று எனக்கு அவை மன நிறைவு அளித்தனவாகும்.


(கூடுதலாக ஒன்று ‘அய்யாவின் அடிச் சுவட்டில்...’ - பாகம் 1) இணைத்துக் கொள்ளலாம்!


இப்படி எழுதியது சமூகத்திற்கும், சந்ததி யினருக்கும் தெரிய வேண்டும் - புரிய வேண்டும் என்பதற்காக!


அதைவிட நான் எழுதிய புத்தகங்கள் எதற் கும் “ராயல்டி”  வாங்கியது கிடையாது. காரணம் இயக்கம் வேறு, நான் வேறு என்று பிரிக்கப்பட முடியாத அளவு இரண்டும் இணைந்த ஒன்று அல்லவா? தொண்டைவிட பெரு ஊதியம் வேறு தேவையா? நமக்கு என்று எண்ணி மன நிறைவு கொள்ளுபவன்.


நன்றி தோழரே!


65 வயது தாண்டியவர்களே - இதை தெரிந்து கொள்ளுங்கள்!வழமைபோல டாக்டர் எஸ்.இராமச்சந் திரன் அவர்கள் “கட்செவி” (Whatsapp) மூலம் அனுப்பிய ஒரு சுவையான தகவல் இதோ:


“65 வயதைத் தாண்டியவர்கள் உலக மக்கள் தொகையில் வெறும் 8 சதவிகிதம் பேர் தானாம்'' - வியப்பாக இல்லையா?


(யார் இத்தகவலைச் சேகரித்து - சமூக வலைதளங்களில் வெளியிட்டாரோ அவ ருக்கு உங்கள் நன்றியைக்  கூறிக் கொள்ளுங் கள்!) காரணம் 65 வயதைத் தாண்டியவரான நேயர்களே!  நீங்கள்தான் எவ்வளவு அரிய வாய்ப்பு பெற்றவர்கள் என்பதை எண்ணி மகிழுங்கள்!


இந்த பூமிப் பந்தில் உள்ள மக்கள் தொகை 780 கோடி மக்கள் ஆகும்! (7.8 பில்லியன்) பலருக்கும் இதுபெரிய எண்ணிக்கை என்ற அளவில் மட்டும்தான் தெரியும்.


இதைக் கண்ணுற்ற சிலர், இதனை மொத்த எண்ணிக்கை 100 ஆகச் சுருக்கி அதனை வெவ்வேறு விதமான புள்ளி விவரமாக நமக்குத் தந்து சுவையூட்டி உள்ளார்கள்!


எளிதில் எவரும் புரிந்து கொள்ள உதவும் இந்த ஏற்பாடு! - இல்லையா?


மொத்தம் 100 பேர் - இந்த பூமிப் பந்தில் இருக்கிறவர்கள் என்று கணக்கிட்டுக் கொண்டு பார்த்தால் - பல்வகைப் பிரிவுகளின் எண்ணிக்கையை எளிதாகப் புரிந்து கொள்ள இதோ:


மக்களின்


வகைப் பிரிவுகள்


அய்ரோப்பாவில் உள்ளோர் - 11 பேர்


வட அமெரிக்காவில் - 5 பேர்


தென் அமெரிக்காவில் - 9 பேர்


ஆப்பிரிக்காவில் வாழ்வோர் - 15 பேர்


ஆசியாவில் இருப்போர் - 60 பேர்


இதில்,


49 பேர் கிராமப்புறங்களில் வாழுகின்றனர்.


51 பேர் நகரங்களில் வாழும் நகர வாசிகள்!


77 பேருக்குச் சொந்தமாக வீடு உண்டு.


23 பேருக்கு வாழ இடமில்லாதவர்கள்.


அதில்,


உணவு முறை


21 பேர் அற்புதமாக போஷிக்கப்பட்ட புளியேப்பக்காரர்கள் (over-nourished).


63 பேர் முழுமையாக சாப்பிடுபவர்கள்.


15 பேர் மிகக் குறைவான அளவுக்கு ஏற்ற உணவு அற்றப் பசியேப்பகாரர்கள்! (under-nourished)


ஒரு நபர் ஒரு வேளை சாப்பாடு மட்டுமே சாப்பிடுபவர். அடுத்த வேளை சாப்பாடு கிட்டாதவர்.


வாழ்வாதாரம் - வாழ்க்கைச் செலவு.


48 பேர் அன்றாட வருமானம் 2 அமெரிக்க டாலருக்கும் கீழே!


மற்றும் 100 பேரில்,


87 பேர் சுத்தமான குடிநீர் வசதி கிடைக் காதவர்கள்.


13 பேர் அந்த குடிநீருக்கான வாய்ப்பு இல்லை (கிட்டாதவர்கள்).


75 பேர் கைத்தொலைபேசி உள்ளவர்கள்.


25 பேரிடம் கைப்பேசி இல்லாதவர்கள் (வசதி இல்லாதவர்கள்)


இதில்,


30 பேருக்கு இணைய வசதி உண்டு


70 பேருக்கு அந்த இணையவசதி (Online) இல்லை (தேடாதவர்களும் கூட!)


கல்வி


7 பேர்தான் பல்கலைக்கழகப் படிப்பு பெற்றவர்கள்.


மற்றும் 93 பேர் கல்லூரிக்கே போகாத வர்கள்!


83 பேருக்கு எழுதப் படிக்கத் தெரியும்.


17 பேர் தற்குறிகள் - எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்


மதங்கள் எண்ணிக்கையைப் பார்ப்போமா?


கிறித்தவர்கள் - 33 பேர்


முஸ்லீம்கள் - 22 பேர்


இந்துக்கள் - 14 பேர்


பவுத்தர்கள் - 7 பேர்


மற்ற மதத்தவர் - 12 பேர்


மத நம்பிக்கை அற்றவர் - 12


வயது கணக்குப் பார்ப்போமா?


14 வயதுக்கு குறைவான வாழ்வு பெற்ற வர்கள் - 26 பேர்


15 - 64 வயதுக்கும் இடையே வாழ்பவர்கள் - 66 பேர்


65 வயதுக்கு மேற்பட்டு வாழ்பவர்கள் - 8 பேர்


இப்போது சற்று கண்ணை மூடிக்கொண்டு ஒரு கணம் யோசியுங்கள் - சிந்தியுங்கள்!


சொந்தவீடு,


முழுச்சாப்பாடு,


தூய்மையான குடிநீர்,


கைத் தொலைபேசி,


இணையத் தொடர்பு,


கல்லூரிக்கும் சென்றவர் என்ற வாய்ப்பு


- இவை அனைத்தும் உடையோர் 7 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே!


இதில் 100 பேரில் 65 வயதைத் தாண்டி வாழும் 8 சதவிகிதம் பேரில் நீங்களும் ஒரு வர் என்று அறிந்து - மகிழ வேண்டாமா?


கிடைத்த வாய்ப்பை நன்கு பற்றிக் கொண்டு, தானும் வாழ்ந்து, பிறருக்கும் பயன் படக்கூடிய வாழ்க்கையாக நமது இந்த நிறை வாழ்க்கையைப் பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டாமா?


64 வயது வருவதற்கு முன்பே, இந்த உலகை விட்டு மறைந்த 92 பேரில் ஒருவராக நாம் இல்லாதபோது, வருத்தமும், கவலையும் ஏன்? எஞ்சிய வாழ்க்கை இன்பத்துடன் இருக்க வேண்டாமா?


அதற்கு ஒரு சிறிய வழி (நாளை சொல்கி றேன்).


பிறருக்குத் தொண்டு செய்க!


பிறருடன் பகிர்ந்து கொள்க!!


மகிழ்ச்சிதானே ஊற்றாகக் கிளம்பும்!!!


தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி எப்படி வந்தது தெரியுமா


தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி எப்படி வந்தது தெரியுமா?தஞ்சையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி சிறப்பாக மக்களுக்கு சேவை செய்யும் அருமையான மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று.


சிறப்பான வகையில் வளர்ந்தோங்கியுள்ள அந்த மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மருத்துவப் பணி யும், தொண்டும் செய்யும் ஆற்றல்மிகு மருத்துவ மாமணிகள் பலர் உள்ளனர். சிலரை நாம் நன்கறி வோம்!


சென்னைக்கு சுமார் 180 மைல்களுக்கு அப்பால் உள்ள காவிரி டெல்டா விவசாயப் பகுதியில் அமைந்து, அன்று பல மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு நோய் தீர்க்கும் - குறிப்பாக அருகில் உள்ள கிராம மக்கள், விவசாயிகள் முதலியவர்களில் நோயாளிக ளுக்குத் தொலைதூரம் சென்று சிகிச்சை தேட வேண்டிய அவசியத்தைக் குறைத்தவை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியும், அதன் மருத்துவ மனையுமாகும். அக்கல்லூரி ஏற்பட்டதனால் எளிய, நடுத்தர குடும்பத்து கிராம மக்களின் பிள்ளைகளும், தத்தம் மருத்துவக் கனவை எளிதில் நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.


அங்கு படித்து அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பற்பல நாடுகளில் உள்ள பழைய மருத்துவ பட்டதாரிகளான டாக்டர்கள் பல முறை குடும்பத்துடன் சந்தித்து மகிழ்வதோடு, தங் களுடைய பங்களிப்பாக வழங்கிடும் பழைய மாண வர்களது - நிதி - நன்கொடையால் மருத்துவமனைக் கும், மருத்துவக் கல்லூரிக்கும் புதிய கட்டடங்களும் கூடக் கிடைத்துள்ளன!


அவர்களது நன்றி உணர்ச்சியும், அவர்களை வளர்த்த ‘கல்வித் தொட்டிலுக்கும்' காட்டிடும் நன்றியும் மிகவும் நேர்த்தியானது மட்டுமல்ல, மற்றவர் பின் பற்றத்தக்க எடுத்துக்காட்டானதும் ஆகும்.


அப்படி அவை உருவானதற்கு மூலகாரணம் அன்றைய முதலமைச்சரும், கல்வி வள்ளலுமான ‘படிக்காத' காமராசர்! அதுபற்றி அண்மையில் சமூக வலை தளத்தில் வந்த தகவலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது மிகவும் சுவையாக இருக்கும் அல்லவா?


“ஒருநாள் காமராசரைச் சந்திக்க வந்த செல்வந்தர் ஒருவர்,


கோவையில் மருத்துவக் கல்லூரி ஒன்று அமைக்க 20 லட்ச ரூபாய் தருவதாகக் கூறினார்.


அத்திட்டத்திற்கு (அப்போது) ஒரு கோடி ரூபாய் செலவாகும் என்றும், மீதி ரூபாய் 80 லட்சத்தை அரசு முதலீடு செய்ய வேண்டும் என்றும் அந்த செல்வந்தர் கேட்டுக் கொண்டார்.


அந்த மருத்துவக் கல்லூரி தனியார் நிர்வாகத்தில் இருக்குமென்றும் கூறினார்.


இதற்கு சம்பந்தப்பட்ட துறையான சுகாதாரத்துறை அமைச்சரின் ஆதரவும் இருந்தது!


சிறிது காலத்திற்குப் பிறகு இத்திட்டம் சம்பந்த மான கோப்பு அனுமதிக்காக முதல்வர் காமராசரின் பார்வைக்கு வந்தது.


சம்பந்தப்பட்ட அமைச்சரை (சுகாதாரத் துறை அமைச்சரை) முதல்வர் காமராசர் அழைத்து, “80 லட்ச ரூபாயை ஒரு தனியாரிடம் கொடுத்து மருத்து வக் கல்லூரி தொடங்குவதைவிட, இன்னும் கூடுத லாக ஒரு 20 லட்ச ரூபாய் செலவிட்டு அரசாங்கமே மருத்துவக் கல்லூரியை தொடங்கலாமே!


தனியாரை மருத்துவக் கல்லூரித் தொடங்க அனுமதித்தால், அவர்கள் அதைத் “தொழிலாக்கி” விடு வார்கள்! லாபம் சம்பாதிப்பது தான் அவர்களது நோக் கமாக இருக்கும். சேவை மனப்பான்மை இருக்காது” என்றார்! சம்பந்தப்பட்ட அமைச்சர் பதில் ஏதும் சொல்ல முடியாமல் திக்குமுக்காடிப் போனார்!


கோவையில் தனியார் மருத்துவக் கல்லூரியைத் தெடங்க அனுமதி மறுத்த முதலமைச்சர் காமராசர், தஞ்சாவூர் போர்டு, ரயில்வே ‘செஸ்'வரியாக வசூ லித்தத் தொகையில் 1.30 கோடி ரூபாய் இருப்பதைக் கேள்விப்பட்டு, அதைப் பயன்படுத்தி அங்கே (தஞ் சையில்) மருத்துவக் கல்லூரி அரசு சார்பில் தொடங்க, செலவழிப்பதற்கு அனுமதி அளித்தார். மேற்கொண்டு பணம் தேவைப்பட்டால் அரசு (தமிழ்நாடு) கொடுப்ப தற்குத் தயாராக இருப்பதாகவும் கூறினார்!"


இவ்வாறு தஞ்சையில் ஒரு கோடிக்கு மேல் (அன்று) செலவு செய்து அரசு மருத்துவக் கல்லூரி அமைந்திட ஆதரவும், ஊக்கமும் அளித்தார்.


அதோடு கல்வி வள்ளல் காமராசரை எப்படி நினைவு கூர்வது, நன்றி காட்டுவது முக்கியமோ அந்த அளவுக்கு என்றென்றும் நினைவுகூர்ந்து, நன்றி கூறிட வேண்டிய மற்றொரு அருட்கொடை யாளர் யார் தெரியுமா?


89 ஏக்கர் நிலத்தினைத் தானமாகக் கொடுத்த வள்ளல் A.Y.S.பரிசுத்த நாடார் அவர்கள் ஆவார் கள்! தஞ்சையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய தொண்டறச் செம்மல் அவர்!


கல்வி வள்ளல் காமராசரின் பொது நோக்கு, தொலை நோக்கு எவ்வளவு சிறப்பானது பார்த்தீர் களா? பல மெத்தப் படித்த “முதல்வர்களுக்கு” வராத யோசனை ‘படிக்காத' காமராசருக்கு வந்ததால்தான் அவர் ‘படிக்காத மேதை' என்று வரலாற்றில் வைர மாக ஒளி வீசுகிறார்!


அச்சத்திற்கு தந்த விலை - நியாயந்தானா


அச்சத்திற்கு தந்த விலை - நியாயந்தானா?நோய்களில் மிகக் கொடுமையான நோய் (மக்களின்) அறியாமை (Ignorance) தான் என்றார் அமெரிக்கப் பகுத்தறிவாளர் ராபர்ட் கிரின் இங்கர்சால்.


அறியாமையை விரட்டி, அறிவை விரிவு செய்வதற்குத்தான் பகுத்தறிவு. அய்ந்து அறிவுள்ள மிருகங்களுக்கும், ஆறறிவுள்ள மனிதனுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இந்தப் பகுத்தறிவுதான். பகுத்தறிவு, அறியாமையை - மூடத்தன இருட்டை விரட்டி அறிவு வெளிச்சத்தைப் பாய்ச்சி மனித குலத்தை முன்னேற்றி வளர்ச்சி அடையச் செய்யும்.


கல்வி அதற்கான சாணைப்பிடிப்பதற்குரிய நுண்கருவி என்றாலும், அந்தக் கல்வியும் கூட, பற்பல நேரங்களில், பற்பல மக்களிடையே பகுத் தறிவைப் பயன்படுத்திராத மூடநம்பிக்கைக்குப் புது வியாக்கியானமும், விளக்கங்களும் சொல் லவே பயன்படும் பரிதாப நிலை நம் நாட்டில்!


வேதனையும், வெட்கமும் தரும் செய்தி சில நாட்களுக்கு முன் ஏடுகளில் வெளிவந்தது.


சென்னையில் ஒரு கர்ப்பிணிப் பெண் மகப்பேறு நடக்கும் காலம் நெருங்குகையில், அந்தப் பேறு கால வலி (Labour Pain) அவஸ்தைக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், அளவிலா வெட்கத்தையும் நம் அனைவருக்கும் தரக்கூடிய ஒரு சம்பவம் ஆகும்!


இது, நமது பெற்றோர்களுக்கும் கூட, குறிப்பாக பெண் குழந்தைகளைப் பெற்று வளர்த்து அவர்களது வாழ்வினை அமைக்கப் பெரிதும் கவலைப்படும் பெற்றோர்களுக்கு மிகப்பெரிய பாடம் ஆகும்!


நூறு ஆண்டுக்கு முன்பு எந்தப் பெண்ணாவது கருவுற்றிருந்தால், நம்முடைய வீடுகளில் உள்ள பெரியவர்களும் சரி, தாய்மார்களும் சரி, 'அவள் சாவைத் தலைமீது வைத்துள்ளாள்; அவள் விருப்பத்தினை அறிந்து அதனைப் பூர்த்தி செய்ய வேண்டும்' என்றார்களாம்! “அறிவுரை” - “மூதுரை” - கூறி தனியாக கருணையுடன் கவனிப்பது உண்டு.


ஆனால், கடந்த சுமார் 50 ஆண்டுகளில் மருத்துவ (இயல்), விஞ்ஞானம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ள காரணத்தால், மகப்பேறு முடிந்தவுடன் தாயும்- சேயும் நலம் என்று தான் செய்திகள் வருவது வழமையாகிவிட்டது!


மருத்துவமனைகளின் வசதிகள் பெருக்கம் - கருவுற்ற பெண்மணிகளுக்குரிய உடல் நலம் பேணும் வகையில் ஊட்டச் சத்து முதலியன தருதல், அவ்வப்போது தவணை முறைகளில் ஆரோக்கியப் பரிசோதனைகளை நடத்துதல் முதலியன நடைபெற்றும் வருவது உண்மைதான்.


என்றாலும், அடிப்படையில் நமது பெண் குழந் தைகளுக்குப் போதிய பாலியல் பற்றிய தெளிவை ஏற்படுத்த பல பெற்றோர்களும், நமது சமூக பழக்க வழக்க மரபுகளும் தடையாக உள்ளனவே!


பல திருமணங்கள் தோல்வியில் இணையரி டையே முடிவதற்கு மூல காரணம் அறியாமையே! - உடற்கூறு பற்றியும், உடலின் அங்கங்கள் பற்றியும் தெளிவுபடுத்தி விளக்கிட பெற்றோர்களே கூட மனம் திறந்து தனது பெண் பிள்ளைகளிடம் பேசுவதும் கிடையாது; வெட்கம், கூச்சம், பயம், இவை - அவர்களை அறியாமை இருட்டில் வைத்து அச்சத்தை - பீதியை ஏற்படுத்துகிறது! கருவுற்ற பெண்களுக்குப் போதிய அளவில் கற்றுத் தெளிவுபடுத்தத் (educate) தவறி விடுவதால் - இதுபோன்ற அதிர்ச்சியூட்டக்கூடிய அறியாமையின் உச்சத்து  நிகழ்வுகள் நடைபெறுகின்றன.


பிரபல மராத்திய முற்போக்கு எழுத்தாளர் வி.ச.காண்டேகர் அவர்கள் எழுதிய ‘கருகிய மொட்டு' என்ற ஒரு புதினத்தில் எப்படியெல்லாம் மகளிர் மணவாழ்க்கைக்கு முன்பு கூட தாம்பத் தியம் பற்றிய அறிவே இல்லாது அதிர்ச்சியும், பயத்தால் வாழ்வே இருண்ட வாழ்வாக ஆகிய பல்வேறு சமூக வாழ்வின் சிதிலங்கள், எப்படி உள்ளன என்பதை ஸ்கேன் எடுத்துத் தருவதுபோல் விவரிப்பார்கள். இது சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் வந்த புதினம் ஆகும்!


எனவே, பெண் குழந்தைகள் வளர்ப்பு முறையில் உள்ள இத்தகைய குறைபாடுகளை பெற்றோர்களும், கற்றோர்களும் உணர்ந்து, இதுபோன்று வரும் செய்திகளில் இதுவே கடைசி செய்தியாக அமையட்டுமாக!


அச்சத்திற்குத் தந்த இந்த விலை உயிர் தற்கொலை - அநியாயம் அல்லவா? உணர்ச்சி வயப்படும் பெற்றோர்கள், அறிவு வயப்பட்டால் சரியான மாற்றம் ஏற்படும் - நிச்சயமாக!