சென்ற சனிக்கிழமை (27.6.2020) ‘‘ஒப்பற்ற தலைமை’’ இரண்டாம் பொழிவின் முடிவில், வினா - விடை பகுதி நடைபெற்றபோது, ஒரு தோழர், அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையார், அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் ஆகியோர் பற்றி நூல்கள் வந்துள்ளன. நாகம்மையாரோடு இணைந்து கள்ளுக்கடை மறியல், வைக்கம் போராட்டம் போன்ற பல போராட்டங்களில், சத்தியாகிரகங்களில் அந்நாளில் கலந்துகொண்டவரான தந்தை பெரியாரின் தங்கை எஸ்.ஆர்.கண்ணம்மாள்பற்றி தனியே எழுதப்பட்ட நூல் ஏதாவது வெளிவந்துள்ளதா என்று ஒரு வினா தொடுத்தார்.
நான், ‘‘எனக்குத் தெரிந்த வரையில் இதுவரை யாரும் எழுதி, வெளிவந்ததாகத் தெரியவில்லை - ‘குடிஅரசில்’ உள்ள பல தகவல்களையும், உள்ளூர் தகவல்களையும் - குடும்ப உறுப்பினர்களிடம் தகவல் சேகரித்தும் பேராசிரியர் முனைவர் பா.காளிமுத்து அவர்களை விட்டு எழுதச் செய்யலாம்; அவர் ஈரோட்டு வாசிதான்'' என்று அப்போது விடையளித்தேன்.
தோழர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் நமது பெரியார் புத்தக நிலையத்திலிருந்து ‘அன்னை நாகம்மையாரும் - தோழர் கண்ணம்மாளும்‘ என்ற தலைப்பிலான புத்தகத்தை எனக்கு கொடுத்து அனுப்பினார். சென்னை ‘கருப்பு பிரதிகள்’ பதிப்பகத்தா ரால் வெளியிடப்பட்ட அந்நூலை, பேராசிரியர் முனை வர் மு.வளர்மதி அவர்கள் எழுதியுள்ளார். 134 பக்கங்கள் கொண்ட (இணைப்புகளும் சேர்த்து) அந்நூல் 2011இல் வெளிவந்துள்ளது புத்தகத்தை அனுப்பினார். பிறகுதான், என் நினைவுக்கு இது தப்பியது எப்படி என்று சற்று வருந்தினேன்.
பேராசிரியர் முனைவர் மு.வளர்மதி அவர்கள், திராவிடர் இயக்கக் குடும்பக் கொள்கைத் தொட்டிலில் தாலாட்டப்பட்டு வளர்ந்தவர் - தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் திராவிடமுத்து அவர்களின் அருமை மகளாவார். நல்ல ஆய்வாளர். தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழக பெரியார் உயராய்வு மய்யத்தின் வருகைப் பேராசிரியராக இருந்து, குடும்பச் சூழ்நிலையால் விடைபெற்றார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டு தமிழர் புலத்தில் இணைப் பேராசிரியராக பணியாற்றி, ஓய்வு பெற்ற, ஆழ்ந்த புலமையும், எழுத்தாற்றலும் உடைய பெரியார் கண்ட புரட்சிப் பெண் ஆவார் அவர்.
அவர் இந்த நூலுக்காக, பல அரிய தகவல்களை சென்னை பெரியார் திடல், பெரியார் பகுத்தறிவு நூலகம் - ஆய்வகத்திலிருந்து திரட்டியுள்ளார்!
தந்தை பெரியாருக்கு அண்ணன் ஈ.வெ.கிருஷ்ண சாமி, மூத்த தங்கை பொன்னுத்தாய் அம்மாள், எஸ்.ஆர்.கண்ணம்மாள் இளைய தங்கை.
கண்ணம்மாளின் கணவர் பெயரும் அய்யாவின் இயற்பெயர் போல எஸ்.இராமசாமி நாயக்கர்தான். அவரது (எஸ்.ராமசாமி) அண்ணன் கல்யாணசுந்தரத்திற் குப் பொன்னுத்தாய் அம்மாள் மண முடிக்கப்பட்டார்.
பொன்னுத்தாய் அம்மாள் - கல்யாணசுந்தரம் இணையருக்கு அம்மாயி அம்மாள், அப்பையன் என்று இரு பிள்ளைகள். (இந்த அம்மாயி அம்மாளுக்கு தான் குழந்தை மணம் செய்யப்பட்டு, அவர் இளம் விதவையான நிலையில், 1906லேயே தந்தை பெரியார் விதவை மறுமணத்தைத் துணிச்சலாக நடத்தி, அவர் குடும்பத்தவர் ‘ஜாதிப் பிரஷ்ட‘த்திற்கு ஆளாவதற்குக் காரணமான புரட்சியைச் செய்தார்).
எஸ்.ஆர்.கண்ணம்மாளுக்குக் குழந்தைகள் இல்லை. எஸ்.இராமசாமி நாயக்கரின் இரண்டாம் மனைவி பொன்னம்மாளுக்கு ராஜாத்தி என்ற சுப்புலட்சுமி, காந்தி, சரோஜினி என்ற மூன்று மகள்களும், (எஸ்.ஆர்.) சந்தானம், (எஸ்.ஆர்.) சாமி என்ற இரண்டு மகன்களும் உண்டு.
இப்பிள்ளைகளின் சொந்தத் தாயார் மறைந்த நிலையில், கண்ணம்மாள்தான் தாயாக இருந்து - பெற்ற பிள்ளைகளைவிட, உற்ற பிள்ளைகளாக அவர் களை வளர்த்தார். அப்பிள்ளைகளும் அந்த அம்மா கிழித்த கோட்டை தாண்டாது அவரது இறுதி வரை (1971இல் அவர் மறையும் வரை) வாழ்ந்தவர்கள்.
அன்னை நாகம்மையாருடன் அவர் கலந்து கொண்ட போராட்டங்கள் பல உண்டு - பதிவானவை. சில! - புதிய செய்திகள் என்ன தெரியுமா?
அன்னை நாகம்மையாரைப் போல இவர் பல சுயமரியாதை ‘‘கலப்பு’’ ஜாதி மறுப்பு (காதல்) திருமணங் களை நடத்தி வைத்துள்ளார்!
மகளிர் உரிமைப்பற்றி பேசுவதே அதிர்ச்சிக்குரிய முற்போக்கானதாக கருதப்பட்ட அந்தக் காலத்தில் 1930 களில் சிந்தித்து உரையாற்றியவர். பெரியாரின் சுயமரி யாதைத் தாக்கம் நிறைந்த ‘குடிஅரசு’ ஏட்டின் பதிப்பா ளராக இருந்ததால், சிறைத் தண்டனையும்கூட ஏற்றவர்!
தந்தை பெரியார் தான் நடத்திய ஏடுகளுக்கு, பெண்களைப் பதிப்பாளர்களாக ஆக்கி, அதிலும் அக்காலத்தில் ‘புரட்சி’ செய்தவர்! நாகம்மை,
எஸ்.ஆர்.கண்ணம்மாள், கே.ஏ.மணியம்மாள் - பிறகு ஈ.வெ.ரா.மணியம்மை - நாமறிந்த வரையில், அக்கால கட்டத்தில் தமிழ்நாட்டில் - பெண்கள் பதிப்பாளராகி சிறைக்கு - எழுத்துரிமைக்காகச் சென்றவர்கள் இந்த இருவருமே! (எஸ்.ஆர்.கண்ணம்மாள், ஈ.வெ.ரா.மணி யம்மையார்)
பெண்கள் சடங்கு முறைகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவேண்டும் என்னும் கண்ணம்மா ளின் சொற்பொழிவு அருவி: இதோ, ஆதாரம் 1929 ஆம் ஆண்டு, மே 20, ‘திராவிடன்’ நாளேடு.
‘‘சீமந்தம், வளைகாப்பு என்பதன் பெயரால் கர்ப்ப ஸ்திரியை நமது நாட்டில் கஷ்டப்படுத்தும் கொடுமை யைச் சொல்லி முடியாததாயிருக்கின்றது. கர்ப்ப ஸ்திரீக்கு பூ முடித்தல் என்பதன் பெயரில் ஊரிலுள்ள புஷ்பங்களையெல்லாம் சூட்டி மேற்படி வாசனையால் தலைவலி வரச் செய்துவிடுகிறார்கள், மேலும் கர்ப்ப ஸ்தீரிக்கு பளுவான புடவைகள் கட்டி 2 மணி நேரம் ‘மனை இருத்தல்’ என்று சொல்லி இருக்க வைக்கின் றனர். இம்மாதிரியான கஷ்டமான, அநாகரீகமான சடங்குகள் எதற்கு என்று கேட்டால், இவைகளெல்லாம் பெரியோர்கள் செய்தது. அதனால், அப்படியே நடக்க வேண்டுமென்று ஏராளமாகப் பதில் சொல்லி விடு கின்றனர். ஆனால், அந்தக் காலத்தில் பெரியோர்கள் 20, 30 மைல் தூரம் பிரயாணம் போவதாய் இருந்தாலும் கட்டமுது கட்டி தோள்மேல் போட்டுக்கொண்டு நடந்தே போய்விடுகின்றனர். ஆனால் இக்காலத்திலோ இரயிலென்றும், மோட்டாரென்றும், ஜட்கா என்றும் அநேக வாகனங்கள் இருக்கின்றன. ஊர்ப்பிரயாணம் போகவேண்டுமாயின் ‘கொண்டு வா மோட்டார்’ என் கிறார்கள். இது விஷயத்தில் மாத்திரம் பெரியோர்கள் நடந்தபடி நடப்பதில்லையே. ஏன் தற்கால நாகரிகத் துக்கேற்றவாறு நடப்பதால்தானே. அதேபோல தற்கால நாகரீகத்துக்கு ஒவ்வாத சடங்குகளையும் ஒழிக்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்குக் காதுகுத்தல் போன்ற இம்சையையும் செய்கின்றனர். எனவே, இம்மாதிரியான அனாவசியமானதும், அர்த்தமற்றது மான சடங்குகளை ஒழித்து, அதற்குச் செலவிடும் பணத்தை ஏழை மக்களுக்கும் படிப்பூட்டினால் மிகவும் நன்மையானதும், பிரயோஜனமானதுமாக இருக்கும்.’’
(‘திராவிடன்‘, 1929ஆம் ஆண்டு மே 20)
‘ஈரோடு அர்பன் பாங்கி’ தேர்தலில் 22.9.1934இல் புதுமையாகவும், ‘‘புரட்சியாகவும்” 11 ஸ்தானங்களுக் கான டைரக்டர்கள் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட் டவர்களில், 10 பேர் ஆண்கள்; பெண்ணாக இவர் ஒரு வர் (எஸ்.ஆர்.கண்ணம்மாள்) மட்டும் தேர்வு செய்யப் பட்டது - அப்பகுதி பெரிதும் கேள்விப்பட்டிராத ஒன்று.
தொடர்ந்து பல ஆண்டுகள் ஈரோடு நகர சபை உறுப்பினராக இருந்தவர்; பலமுறை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவரும் கூட!
பெண்ணுரிமைக்குப் பெரியாரின் பங்கு மட்டுமா? அவர்தம் குருதிக் குடும்பத்தாரின் பங்கும் எவ்வளவு மகத்தானது பார்த்தீர்களா?
வாழ்க நாகம்மையார்
- வாழ்க எஸ்.ஆர்.கண்ணம்மாள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக