நண்பர் டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் பலருக்கும் பயன்படும்படி பல முக்கிய தகவல்களை வாட்ஸ்-அப் மூலம் அனுப்புவார்கள்.
அண்மையில் பிரபல எழுத்தாளரும், கருத்தாளருமான குஷ்வந்த் சிங் அவர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரை - "மகிழ்ச்சியுடன் வாழ்வதும் மறைவதும் எப்படி?" என்று அவரது கண்ணோட்டத்தில் பல ஆண்டு களுக்கு முன் எழுதிய அருமையானதொரு சிறு கட்டுரையை அனுப்பினார்.
இதனை பலரும் படித்துப் பயனுற வேண்டும்.
பல பேருக்கு வாழ்க்கை என்பது பெரிய சிக்கலாகவும், எல்லையற்ற தேடலும், கிடைக்காதவற்றைப் பற்றி பிறகு நினைத்து நினைத்து வாடுவதும்தான் மிச்ச சொச்சமா கிறது!
குஷ்வந்த் சிங் அவர்கள் தமது கண் ணோட்டத்தில் சிறப்பாக வாழ்தலும், மகிழ்ச் சியாக மறைதலும் ஒவ்வொருவருக்கும் எப்படி இருந்தால் பெரிதும் சாத்தியமாகும் என்பதை விளக்குகிறார்.
- முதல் தேவை: அடிப்படையானது நல்ல உடல் ஆரோக்கியமாகும். நாம் சிறு வயதில்கூட படித்தாலும் வாழ்க்கை என்று வரும்போது மறந்து விடுகிறோமே! அந்த 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - ஆரோக்கியம்' (Health என்பதற்கு இப்போது விரிவான பொருள் பிறருக்கு, சமூகத்திற்கு உதவிடும் தொண்டும் உள்ளடக்கமாகும்). உடலில் எந்த சிறு உபாதை, நோய் இருந்தா லும் அது நம் மகிழ்ச்சியை வெகுவாகப் பறித்து விடுகிறது அல்லவா? நமது முக்கியமான முதல் கவனம் உடல் நலப் பாதுகாப்பில்தான் இருக்கவேண்டும். நல்ல உடல் நலம் நல்ல மனவளத்தையும் கூடத் தருவதை நாம் ஒவ்வொருவரும் மகிழ்வோடு அனுபவித்து வருகிறோம் அல்லவா?
- நிதி கையிருப்பு: போதிய அளவுள்ள ஆரோக்கியமான நிதி கையிருப்பு - சேமிப்பு (வங்கிக் கணக்கு இருப்பு - Bank Balance) அது கோடிக்கணக்கில் இருக்க வேண்டும் என்பதல்ல இதன் பொருள். அவரவரின் அடிப்படை செலவுகளை ஏற்கக்கூடியது - குறைந்தபட்ச வசதிகளைப் பூர்த்தி செய்து கொள்ளுதல், வெளியே செல்லுதல், உண்ணு தல், குடும்பத்தோடு விடுமுறைகளில் சுற் றுலா செல்லுதல் போன்றவற்றுக்கும் - பொழுது போக்குகளுக்கும் தேவையான அளவு நிதி இருப்பு.
இதனை கடன் வாங்கி நடத்தினால், அதுவே பிறகு பெரும் சுமையும், துன்பமாக வும் மாறிவிடக்கூடும்; மற்றவர் முன் நாம் சுயமரியாதை இழந்தவர்களாகவே ஆகி விடக் கூடும் கடன் வாங்கி வாழும் வாழ்க்கை முறையினால். போதுமான அளவு - தமது தேவைகளுக்கேற்ற இருப்புத் தொகையிருந் தால் அதுவே தன்னம்பிக்கை - மனதில் மகிழ்ச்சியையும் தரும்.
- சொந்த வீடு: குருவிக்குக்கூட கூடு உண்டு. மனிதர்களுக்கு ஏனோ போதிய வீடு இல்லை! அவர்கள் சொந்த வீட்டில் இருந் தால் அது தரும் மகிழ்ச்சியே அலாதியானது. ஒரு வகை பாதுகாப்பும் ஆனது! அந்த வீடு கூட சிறிய தோட்டத்தோடு - செடிகள் நட்டு, தோட்டத்தில் பூக்கள் பூக்கவும், அதைக் கண்டு மகிழ்ச்சி அடையவும், நமது மரத்தில் பழுத்த பழம் - நமது செடியில் காய்த்தவை என்று பறித்து உண்ணுவதும், பூக்களின் அழகை சுவைத்தும், தனி மகிழ்ச்சியை அதன் சொந்தக்காரருக்கு அவை தருவ தினால், மன அழுத்தம் பறந்தே போகும்; செடியும், கொடியும், பச்சைப் புல்லும் பசுமை யோடு நம் மனதைக் குளிர்விக்கும் - என்கிறார் குஷ்வந்த் சிங்.
- பெரிய வாய்ப்பு: அத்துடன் புரிதலுள்ள வாழ்விணையர் - நண்பர் உற்ற நண்பர் - தோழமையுடன் உள்ள இணை! இது மிகப் பெரிய வாய்ப்பு.
அடிக்கடி சண்டைபோட்டும், மாறுபட்டும், சதா ஒத்துப் போகாத வாழ்விணையுடன் வாழ்வதைவிட, மண விலக்குப் பெற்று நிம்மதியை, "வாங்குவதே" மிக முக்கியமான வாழ்க்கை என்றும், அவர் பளிச்சென்று உறுதியாக்கவில்லை.மன அமைதி, மகிழ்ச்சி எங்கே இல்லையோ அதிலிருந்து விடுதலை பெற ஏன் தயக்கம்? என்று சம்மட்டி அடி அடிக்கிறார். நியாயம்தானே!
- பொறாமை கொள்ளாமை: எவரைப் பார்த்தும் பொறாமைப்படாத வாழ்வு - முக்கியம். நம்மைவிட அவர் நிறைய சம்பாதித்துவிட்டாரே, அவர் நம்மைவிட பெரிய பதவிக்குப் போய்விட்டாரே, அவ ருக்கு எவ்வளவு செல்வாக்கு? எவ்வளவு பெருமை, புகழ் நமக்கு இல்லை என்றெல் லாம் நினைத்து ஏங்கி புழுங்கிய மனம் கொள்ளாதீர்கள். அது உங்கள் மகிழ்ச்சியை அறவே பறித்திடும். கவனம்! கவனம்!!
'அழுக்காறு உடையார்க்கு அதுசாலும்' என்றபடி, பிறரைப் பார்த்து பொறாமைப் படுவதாலும், தானும் அப்படி இல்லையே என்று ஏங்குவதால், புழுங்குவதால், உள்ள மகிழ்ச்சியும் பறந்தே போகும் அல்லவா?
"பறப்பதை எண்ணி இருப்பதை இழப் பது" எவ்வகையில் புத்திசாலித்தனம்?
(நாளையும் தொடரும்)
நேற்றையத் தொடர்ச்சி....
6. அக்கப்போர் தவிர்த்திடுக!: எக்காரணம் கொண்டும், அடுத்தவர்கள் பற்றிய அக்கப் போர்களை கேட்பதிலும், பரப்புவதிலும், அவை ஏற்படுத்திக் கொள்ளாத வாழ்க் கையை வாழக்கற்றுக் கொள்ளுங்கள். மற்ற சிலர் இதற்கென்றே உங்கள் வாழ்வின் மீது பாய்ந்திட வருவார்கள். அத்தகையவர்க ளுக்கு அறவே இடம் தராதீர்கள். அவர்களை ஒதுக்கித் தள்ளிவிடத் தயங்காதீர்கள். அக் கப்போர் (Gossip) களை கேட்பது, சுவைப் பது என்றால் அது ஒரு கொடிய போதை மாதிரி ஆகி உங்களையே "தின்று"விடக் கூடும். எச்சரிக்கை! அதற்கு இடம் தராமல் முளையிலேயே கிள்ளி எறியுங்கள்.
7. பற்றாட்டை: ஏதாவது ஒரு பொழுது போக்கு பற்றாட்டை (Hobby) - அன்றாட வாழ்வின் பழக்கமாக, பயனுறு பொழுது போக்கு அம்சமாக ஆக்கிக் கொள்ளப் பழகுங்கள். தோட்டவேலை, படிப்பு, எழுத்து, ஓவியம் வரைதல், இசை கேட்டல் - இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து உங்களது நேரத்தை பொழுது போக்காக அதற்குச் செலவழித்துப் பழகுங்கள்.
பொழுதுபோக்கு கிளப்புகளுக்குப் போவது, தேநீர் சந்திப்பு, கச்சேரிகளுக்குச் செல்வது, இலவசக்குடி, பிரபலங்களைச் சந்திப்பு என்று காலத்தை வீணாக்கும் இவை எல்லாம் அறவே பயனற்றவை - 'கிரிமினல் வேஸ்ட்' என்கிறார் குஷ்வந்த் சிங்.
பல பேருக்குப் பெருமை - வீண் பெருமை - தற் பெருமை என்ன தெரியுமா?
எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று கூறிக் கொள்வதில் ஒரு 'கித்தாப்பு' பயனற்ற ஒன்று - (அதனால் நேரக்கேடும், மானக் கேடும் ஏற்படக் கூடும்).
அர்த்தமுள்ளதாக வாழ்வில் எது நம்மை முழுமையான ஈடுபாடு கொள்ளச் செய் கிறதோ அதற்கு உங்கள் நேரத்தையும், காலத்தையும் செலவிடுவது நிச்சயம் பலன் தரும். கூடுதல் மகிழ்ச்சியையும் சுரக்கச் செய்யும்.
"எனது நண்பர்கள் பலர் தெரு நாய்களைப் பற்றிக்கூட அக்கரை எடுத்துக் கொண்டு அதில் நேரத்தைச் செலவிட்டு உணவு, மருந்துகளும் கொடுப்பார்கள், வேறு சிலர் நடமாடும் மருத்துவ சிகிச்சை நிலையங்களை ஏற்படுத்தி உடல் நலம் குறைந்தோர்களுக்கு, ஏழை, எளியவர்களுக்கு, இவர்களே சென்று இலவசமான சிகிச்சை அளிப்பது உண்டு" (அதுதான் தொண்டறம் - அது பயனுள்ளது. அதை இப்படி குஷ்வந்த் சிங் குறிப்பிடுகிறார். அதுபோல பலருக்கு உதவிடுவதும், நோய் தீர்ப்பதும்).
8. கடமையாற்றல்: ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ஒரு 15 மணித் துளிகளை ஒதுக்கி உங்களை நீங்களே 'கடமையாற்றல்' பற்றிய சுயபரிசோதனையை அமைதியுடன் ஆழ்ந்து சிந்தித்து முடிவு செய்யுங்கள்.
காலையில் 10 மணித் துளிகள் மனதை ஒருநிலைப்படுத்திய நிலையில் ஆழ்ந்து சிந்திக்கும் பழக்கத்தில் இன்று என்னென்ன பணிகள், கடமை ஆற்றப் பட வேண்டியவை, என்னென்ன செய்தோம் - ஏன் செய்து முடிக்கவில்லை என்பது போன்றும், இந்த மன அமைதியை ஒட்டி திட்டமிட்டால், வாழ்க்கை - குறிக்கோள் உள்ள வாழ்க்கை யாக ஆகி உயரக்கூடும். இலக்குடன் கூடிய பயணம் தானே பயனுறு பயணம்? இலக்கு இன்றி பயணம் செய்வதால் யாருக்கு என்ன பயன்? வீண் தானே! குறிக்கோள் அற்ற வாழ்க்கையும் அப்படிப்பட்டதுதானே!
9. கோபம், ஆத்திரம் கூடாது: எதற்கும் உணர்ச்சி வசப்பட்டு, ஆத்திரப்பட்டு விடா தீர்கள். (Don't lose your temper). எதற் கெடுத்தாலும் 'சிடு மூஞ்சி'யாக கோபம், ஆத்திரம் கொப்பளிப்பது! எல்லாவற்றுக்கும் எதிர் வினையாற்றாமல் அமைதியுடன் சிக்க லின், இக்கட்டான நிலையையும் சமாளிக்கப் பழகிக் கொள்ளுங்கள். மற்றவர் மோசமாக நடந்தால், நீங்கள் நகர்ந்து விடுங்கள். திருப்பி பதிலுக்குப் பதில் வேண்டாம்.
10. மரணம் கண்டு பயப்படாதீர்கள்: இது வாழ்வின் இறுதிப் பகுதி! மறையும்போது கூட நாம் எந்த வருத்தமும், குறையுமற்ற வாழ்வினைப் பெற்றவன், மகிழ்ச்சியான வாழ்வில் திளைத்தவன், யாருக்கும் எந்த துன்பத்தையும் கொடுக்காதவன் என்ற பெரு மிதத்துடன், வாழ்க்கையிலிருந்து மகிழ்ச்சியு டன் விடை பெறுபவர்கள் ஆகப் பழகிக் கொள்ளுங்கள்.
பாரசீகக் கவிஞன் ஒருவனின் கவிதை வரிகளோடு குஷ்வந்த் சிங் கட்டுரையை முடிக்கிறார்.
"மிகுந்த நம்பிக்கையுள்ள ஒரு மனிதனின் அடையாளம் என்னவென்று என்னைக் கேட்கிறீர்கள். நான் சொல்லுகிறேன். எவன் மரணம் அவனைத் தழுவும்போது தனது உதடுகளில் புன்சிரிப்போடு அதை வரவேற் கிறானோ அவனே அத்தகைய சிறந்த நம் பிக்கையாளன்."
என்ன நண்பர்களே! இதில் எவற்றை யெல்லாம் உங்கள் வாழ்வில் - ஆடம்பரமற்ற, எளிய வாழ்வின் இலக்கணமாகவும், இலக்கு களாகவும் கொண்டு வாழ முடியுமோ அத னைக் கடைப்பிடித்து வாழுங்கள் - மகிழ்ச் சியுடன், என்றும்!