பக்கங்கள்

கரோனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கரோனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 மே, 2021

நில்லாத மழை இல்லை; வெல்லாத போரில்லை!


‘‘கரோனா கொடுந்தொற்று - இரண்டாம் அலையின் வீச்சு உச்சக்கட்டத்தை 30 ஆம் தேதிக்குள் தொடும்; அதன் பிறகு படிப்படியாக குறையலாம்'' என்று ஒரு சாராரும், ‘‘மூன்றாம் அலை வீச்சுக்கும் நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும்'' என்று பரவலாகப் பலர் கூறுவதும், ‘‘நீரிழிவு நோயாளிகள் கரோனா கொடுந் தொற்றுக்குள்ளான பிறகு, சர்க் கரை அளவு கட்டுக்குள் வரா விட்டால், கண்களில் ‘கரும்பூஞ்சை'  (Mucormycosis) வந்து, உயிர்க்கொல்லியாகும்'' என்றும் வரும் செய்திகளை மிகவும் பயத்தையும், பதற்றத்தையும் பல ருக்கும் ஏற்படுத்தக் கூடியதாகும்.

தொலைக்காட்சிகளைத் தொடர்ந்து பார்த்துவரும் இல்லத் தரசிகள், வீட்டில் முடங்கியுள்ளவர்கள் மிகுந்த கவலை - பயத்தால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிடும் நிலையும் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவலாகக் காணப்படுகிறது!

இதுபற்றி அளவுக்கு மீறி பயப்படாமல், அறிவுப்பூர்வமாக, துணிவுடன் எதிர்கொள்ள முனையவேண்டுமே தவிர, அளவுக்கு மீறிய பயத்தால் - பதற்றத்தால் - நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துக் கொள்ள முயலவேண்டாம்.

இயற்கை நியதி - இயற்கை சட்டம் என்கிற தத்துவப்படி, எந்தத் தொடக்கத்திற்கும் ஒரு முடிவு உண்டு. ஆக்கப்பூர்வ சிந்தனையும், நம்முடைய துணிவும் பெரிதும் துணை நிற்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அவை பெருக்கும் - உளவியல் ரீதியாக.

நாம் ஒழுங்காக சில நியதிகளைத் தவறாமல் கடைப்பிடித்து, ஒழுகினால், அச்சத்தை விரட்ட லாம்; நிம்மதியுடன் நித்தம் நித்தம் வாழலாம். “தீதும் நன்றும் பிறர் தர வாரா”. இன்பமும், துன்பமும் எல்லாம் நம் கையில்தான் - நம் அணுகுமுறையிலும், பிரச்சினைகளை எதிர் கொள்ளுவதிலும் தான் உள்ளது!

சாவு எண்ணிக்கையை கண்டு பயப்படு வதைவிட, குணமாகி வாழும் பலரது எண் ணிக்கை கூடுதல்; அதைக் கண்டு ஏன் நாம் துணிவுடன் வாழக் கூடாது?

முகக்கவசம் அணிதல், கிருமி நாசினியைப் பயன்படுத்துதல், அடிக்கடி சோப்புப் போட்டுக் கைகழுவுதல், போதிய உடற்பயிற்சி - தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயங்காது ஊசிகளைச் செலுத்திக் கொள்ளுதல், தனி நபர் இடைவெளி காத்தல், அவசியமற்று எங்கும் செல்லாமல் தனித்திருப்பது, அடிக்கடி சோதித்துக் கொள் ளுதல், ஊட்டச் சத்து உணவுகளை எடுத்தல், நீரிழிவு போன்ற நோயாளிகள் மிகுந்த கவனத்துடன் ரத்தச் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பதை அடிக்கடி கண்காணித்து வருதல் - ஆக்கப்பூர்வ சிந்தனை - மனதிற்குப் பிடித்த பாடல்களைக் கேட்டு இசையின்பம் பெறுதல், படிக்க விரும்பும் நூல்களைப் படித்தல், வீட்டில் விளையாட்டுகளில் ஈடுபடுதல், நிகழ்த்தப்படும் காணொலிகளில் கலந்துகொண்டு மன உளைச்சலுக்கு விடைகொடுத்தல், வீட்டில் இருந்தாலும், தூங்கும் நேரம் தவிர, மற்றபடி எப்போதும் மிகுந்த சுறுசுறுப்புடன் இருப்பதுமான பலவற்றில் நம்மை நாம் ஈடு படுத்திக் கொண்டால், விடி யலைக் காணலாம்! உடலுக்கு ஓய்வு - மனதிற்கு வேலை கொடுங்கள்.

நம்பிக்கையை ஒருபோதும் இழக்கவே கூடாது; அலட்சியமாக இருக்கவும் கூடாது; அஞ்சுவதும், கெஞ்சுவதும், மிஞ்சுவதும் எல்லா முமே கூடாது.

‘‘நில்லாத மழையில்லை - 

வெல்லாத போரில்லை''

என்பதை மறவாதீர்!

கட்டுப்பாட்டுடன் வாழத் தெரிந்தவர்களுக்கு ‘கவலை' என்பது, தானே விடைபெற்றுக் கொண்டு ஓடக் கூடியதுதானே!

மேலும், உளவியல் ரீதியாக எண்ணிப் பாருங்கள். கவலைப் பட்டால்  பிரச்சினைகள் தீருமா? நோய்தான் வரும் - உடல்நிலை தான் வெகுவாகக் கெட்டுப் போகக் கூடுமே தவிர - உருப்படியான பலன் ஏதும் விளையாது!

எந்த நோய்க்கும் சிகிச்சை உண்டு - மறவாதீர்!

எந்த சிகிச்சையும் வெற்றியளிக்க நாளும் ஆய்வு செய்து மக்களைக் காப்பாற்றிக் கரை சேர்ப்பதில் 24 மணிநேரமும் ஆட்சியாளர்கள், மக்கள் நல களப்பணியாளர்களும் உழைக்கின் றனர். அவர்தம் ஈகத்தைக் கண்டு தன்னம்பிக்கை கொள்ளுங்கள்!

அவர்கள் இருக்கப் பயம் ஏன்?

அறிவியலால் முடியாதது எதுவுமில்லை. ஓராண்டுக்கு முன் தடுப்பூசியில்லை; இப்போது நம் கைகளில் கிடைத்துவிட்டதல்லவா? அது போலத்தான் எந்தக் கொடுந்தொற்றும் முடியவே செய்யும்.

முடிவற்ற நிலை எதற்குமில்லை - இது இயல்பான அறிவியல் - அறவியல் நிலை - தீர்வுகள் எட்டாக் கனிகள் அல்ல!

தெளிவுடன் இருங்கள் - துணிவுடன் செயல்படுங்கள்!

செவ்வாய், 25 மே, 2021

நம்மால் முடியும்; இன்றேல் முடிவே! - மறவாதீர்!

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி,



கரோனா தொற்றிலிருந்து நம்மை தடுத்துக் கொள்ள எளிய வழிமுறைகள் (பலரிடமிருந்து திரட்டப்பட்டவை) :

1. வீடுகளில் உள்ள ஜன்னல்களை நன்கு திறந்து வைத்து வெளிச்சத்தையும், காற்றோட் டத்தையும் ஏற்படுத்துங்கள்.

கதவுகள் ஜன்னல்களைத் திறந்து உள்ளே காற்று தாராளமாக வீசினால், எப்படி பலவகை நாற்றம், வாசனை போக, நாம் திறந்து காற்று வீச விரும்பி ஏற்பாடுகளைச் செய்கிறோமோ அதுபோன்றே, கரோனா மூலம் பரவும் (Droplets and Aerosols) மூக்கிலிருந்து துகள் - துளிகள் இந்த 'வைரசை'ப் பரப்பும்  சக்தி ஒரு தொற்று உள்ளவரிடமிருந்து அது சுமார் 2 மீட்டரிலிருந்து 10 மீட்டர் அளவுக்கு பயணிக்கும் சக்தி உள்ளதாம்! எனவே காற்றோட்டம் வெளிச்சம் முக்கியம். அடிக்கடி திறந்து வைத்து, பிறகு மூடும் பழக்கத்தினை தொடருவது நல்லது.

வேலை செய்யும் இடங்களில் கதவுகள், ஜன்னல்களும் திறந்து வைத்தல் அவசியம்.

பேருந்துகளில்கூட பக்கத்து ஜன்னல் போன்ற கதவுகள் திறந்திருப்பது அவசியம்.

2(a). தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக மிக அவசியம்.

2(b). பணிபுரிவோர் பலரும் N95 முகக் கவசம் தந்து அணியும்படி ஏற்பாடு செய்தல் அவசியம்.

3. கரோனா தாக்குதல் மே 29, 31களில் தமிழ்நாட்டில் உச்சக் கட்டத்திற்குச் செல்ல வாய்ப் புகள் உண்டு என்கிறார் மக்கள் நல் வாழ்வுத்துறை செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் அய்.ஏ.எஸ்.

கரோனா சங்கிலியை உடைக்க மக்களின் ஒத்துழைப்பே முக்கியம்; இன்றியமையாதவை. 

4. கரோனா பணியில் மும்முரமாக ஈடுபட்டு, மெழுகுவத்திகளாக எரிந்து, மற்றவர்களுக்கு வாழ்வு கொடுக்க தங்கள் வாழ்க்கையை விலையாகக் கொடுத்த தியாக தீபங்கள் 329 மருத்துவர்கள் - என்கிறார் இந்திய மருத்துவர்கள் சங்கத் தலைவர்.

மருத்துவர்களையும், செவிலியர்களையும் அறிவும், நிதானமும் இழந்து, சிலர் அவர்களைத் தாக்குவதோ அல்லது மிருகத்தனமாக நடந்து கொள்ளுவதோ விரும்பத்தக்கதா? எண்ணிப் பாருங்கள்! இழப்பிலும் நிலைகுலையாததுதானே உறுதியான மனிதம் - அதை மறக்கலாமா?

5. இந்தக் கரோனா கொடுந் தொற்று எப்படி இவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பது பலருக்கும் புரியாமலிருப்பதை துல்லியமாக, தெளிவாக விளக்குகிறார் விஞ்ஞானி ராபர்ட் ஏ.ஜெ. சிங்கர் என்பவர். 

கரோனா தொற்று உள்ள ஒரு நபர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் அவர் 30 நாளில் 406 பேர்களுக்கு கரோனாவைப் பரப்புகிற நிலை கண்டறியப்பட்டுள்ளது என்று கூறுகிறார்.

இந்தசமூக தொற்றுப் பரவுதலை கட்டுப்படுத்த முடியும் - எப்படி? இந்த நடைமுறை 75% கடைப் பிடிக்கப்பட்டால்  அது 30 நாளில் 2.5% மட்டுமே பரவும் அளவுக்கு குறைக்க முடியும் என்கிறார்.

25 நகரங்களில் உள்ள குடிமக்களில் 50 விழுக் காட்டினர்  முகக் கவசம் அணிவதில்லை!

அது மட்டுமா?

முகக்கவசம் அணிவோரில்கூட 64 விழுக் காட்டினர் வாயை மூடுகிறார்கள் மூக்கை மூடுவதில்லை.

20 விழுக்காட்டினர் 'தாவாக்கட்டை' வரை முகக்கவசம் அணிகிறார்கள்! என்ன கொடுமை!

2 விழுக்காட்டினர் கழுத்துப் பட்டை மாதிரி அணிந்துள்ளனர்!

அகர்வால் என்ற விஞ்ஞானி இதைக் கூறுகிறார்! ஒரு நபர்தானே என்று அலட்சியமாய் இராதீர்கள். அவர் பல நூற்றுக்கணக்கானவர் களுக்கு பரப்பும் அபாயம் உண்டு - மறவாதீர்!

இப்போது நாட்டின் சில மாநிலங்களில் குறைந்து வருகிறது.

கண்டிப்பான இந்த தடுப்பூசி, முகக் கவசம், தூய்மை, தனி நபர் இடைவெளி கடைப்பிடித்தால் கரோனாவை விரட்டலாம்.

இல்லையேல் முன்பு கரோனா பயம், இப்போது கறுப்பு கண் பூஞ்சை நோய்ப் பயமும் சேர்ந்து வந்து நம்மை அச்சுறுத்துகிறது!

பலருக்கு நோயால் ஏற்படும் சாவைவிட, பயத்தால் ஏற்படும் (நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவினால்)   மரணம் அதிலே - அநியாயம்கூட நடைபெறலாம்.

எனவே நம்மையும் காத்து நாட்டு மக்களையும் சமூகத்தையும் குடும்பத்தவரையும் காக்க கட்டுப்பாடு காத்து ஒத்துழைப்பு நல்கி -

புது வாழ்வு பெறத் தயாராவோம்

எளிய ஒரே வழி - ஒத்துழைப்பு - முகக்கவசம் மறவாதீர் - அது நம் கையில் - மனதில்!

செவ்வாய், 24 நவம்பர், 2020

கரோனா விளைவித்த மாற்றம்: ஓர் உரத்த சிந்தனை! (1)

 

June 5, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

கரோனா தொற்றினால் ஊரடங்கு தொடர்ந்த நிலையில், தனி மனித இடைவெளி மிகவும் முக்கியம். இதைத் தடுப்பதற்கு, முகக் கவசமும், அடிக்கடி சோப்பு போட்டுக் கைகழுவலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கிக் கொள்ள உடற்பயிற்சி முதல் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது வரை அவசியமா னது என எங்கும் பிரச்சாரம் செய்யப்படுகிறது; இதனைப் பெரும்பாலோர் தவறாது கடைப் பிடிக்கவும் தவறுவது இல்லை; காரணம் இது ஒவ்வொருவருக்கும் உயிர் காப்புப் பிரச்சினை அல்லவா? நோய் தடுப்பு பாதுகாப்பு அல்லவா? அதனால்தான்.

இதனால், சமூகத்திற்குத் தேவையான சில மாற்றங்கள் - பல ஆண்டுகால பிரச்சாரத்தினால் மெல்ல மெல்ல யோசித்து யோசித்து, தயங்கித் தயங்கி வந்த நடைமுறை மாற்றங்கள் - சீர்திருத் தங்கள் - திடீரென்று ‘சுனாமி' போல் மக்களை பணிய வைத்துவிட்டன!

மற்ற நாடுகளைப் போல அல்லாது நமது நாட்டில் திருமணங்கள் பெரிதும் பெற்றோர் களால் ஏற்பாடு செய்யப்படுபவைகளே; காதல் திருமணங்கள் மிகக் குறைந்த அளவே!

எப்படிப்பட்ட திருமணமாக இருந்தாலும், மண விழாவில் ஆடம்பரங்களும், டம்பங்களும், வெட்கப்படாத பணத் திமிரின் வெளிச்சங்களும் இன்று காணாமற் போய்விட்டன!  இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமே! தீமையிலும் ஏற்பட்ட ஒரு நன்மை!

1929ஆம் ஆண்டு செங்கற்பட்டில் தந்தை பெரியார் நடத்திய முதலாவது மாகாண சுயமரியாதை இயக்க மாநாட்டுத் தீர்மானங்களில் ஒன்று:

(இன்றைய இளைய தலைமுறைக்கு இது வியப்பாகவும், வேடிக்கையாகவும்கூட இருக் கலாம்)

"இனி நம் நாட்டில் நடைபெறும் திருமணங் கள் ஒரு நாள் மட்டுமே நடைபெறும் திருமணங் களாக நடத்தப்பட வேண்டுமென்று மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்ளுகிறது!" - காரணம் முன்பெல்லாம் ‘கல்யாண சுப முகூர்த்தப் பத்திரிக்கையைப் பிரித்தால் இஷ்டமித்திர பந்து சகிதமாய் ஒரு வாரத்துக்கு முன்பே வந்திருந்து, நடைபெறும் எல்லாவித சடங்குகளிலும் பங் கேற்று  வரன் - வதிகளை ஆசீர்வதிக்க வேண்டு மென்று வேண்டிக் கொள்கிறோம்' என்று இருக்கும்.

அது சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்தாலும், காலத்தின் முக்கியத்தை உணர வேண்டிய நெருக்கடி மக்களுக்கு வந்ததாலும் ஒரு நாள் திருமணமாகியதோடு, அதுவும்கூட மாலை வரவேற்பு உட்பட நடைபெறும் அளவு சுருங்கியது; என்றாலும்கூட

ஆடம்பர அழைப்பிதழ் - ஏராளமான செலவு -

மண்டபங்களில் பலவேளை விருந்துகள் - (பசியில்லாமலே கூட!)

இஷ்டமித்திர பந்து சகிதமாய் வேண்டிய சிநேகிதர்கள் (மனுஷாள் உட்பட!)

கடன் வாங்கியாவது ‘பல லட்சங்கள்' கரைந்த நிலை. கரோனா வந்ததினால் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ளாத நல்ல மாற்றம்!

செரிமானம் ஆக ஜீரண மாத்திரைகளைத் தேட வேண்டிய அவசியமில்லாத விருந்துக ளுக்கு இடமில்லை. வெகு சிலருக்குக் குறிப் பிட்ட அளவு உணவு - அதுவும் பாக்கெட்டுகளில்!

‘‘சொர்க்கத்தில்' திருமணங்கள் நிச்சயிக் கப்படுவதில்லை'' -

கரோனாவின் காரணமாக  ஆன் லைனின் - இணையத்தால் திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன இப்பொழுது!

'சொர்க்கம்' இப்போது காலியாகவே கிடக் கிறதோ என்னவோ?

ரொக்கத்தில் நிச்சயிக்கப்படும்போதுகூட (உள்ளாந்திரத்தில் எப்படியோ) வெளிப்படை யான ஆடம்பரச் செலவுகள் இப்போது இல்லை.

இது பற்றி பிரபல தமிழ் நாளேடு 'தினத்தந்தி' செய்திக் கட்டுரை வெளியிட்டது சில நாட்க ளுக்கு முன்.

4.6.2020 'தி இந்து' ஆங்கில நாளேட்டின் இணைப்புப் பகுதியில் ஓர் கட்டுரை இதோ:

பிரியாணி பொட்டலம் பார்சல் அல்லது வீட்டில் சமைத்த உணவு - 20 பேர் மட்டுமே முகக் கவசத்துடன் - மணமக்கள் மட்டுமல்ல - மந்திரம் ஓதும் புரோகிதரும்கூட!

புரிகிறதா? மாற்றம் ஒன்றுதான் மாறாதது - இதனை ஏன் நிரந்தரமாகவே ஆக்கிக்கொண்டு, மக்கள் பயன் அடையக் கூடாது? வீண் ஆடம்பரச் செலவுகளை மணவிழாக்களில் தவிர்க்க அறிவுரை சொன்ன பெரியார் கருத்து எப்படியோ செயலுக்கு வந்துவிட்டது!

இது இனிமேலும் ஒரு பழக்கமாக நிலைத்து விட்டால், மக்களுக்கு அதைவிட மிகப் பெரிய சேமிப்பு - சிறப்பு வேறு உண்டா?

உரத்து சிந்திப்போம்!

கரோனாவும் 'நடத்தை பொருளாதாரமும்!' 1&2

 

May 19, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

அறிவியல் பிரிவுகளில் மக்களின் நடத்தை களையொட்டியவைகளை ஆய்வு செய்தல் Behavioural Science என்று குறிப்பிடுவதுண்டு.

அதேபோல, பொருளாதாரத்திலும்கூட மக்க ளின் நடத்தையையொட்டியே இப்போது பல வகை பிரிவுகளை பொருளியல் ஆய்வு அறிஞர் கள் பகுத்துக் கூறுகின்றனர். எழுதுகின்றனர்.

அதில் ஒன்று Behavioural Economics  என்ற 'நடத்தை முறைகளையொட்டிய பொருளா தாரம்' என்பதும் ஆகும்.

கரோனா தொற்று உலகத்தை ஊரடங்குக்குள் தள்ளி, ஆட்களின் வெளி உலகச் செயல்களை மட்டுமா முடக்கியுள்ளது? அதோடு கூட, உலக நாடுகளின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதாரத்திற்கே சவால்விட்டு முடக்கியுள்ள வேதனையான நிலையும் வேகமாக மக்களை மிரட்டுகிறது!

இதன் பாதிப்பின் விளைவைச் சந்திக்காத ஜன சமூகமே பெரிதும் இல்லை. தொழில்துறைகளில்கூட தொழில் திமிங்கிலங்கள் முதல் சின்ன மீன் வரை அனைவரையும் கரோனா ஒரு புரட்டிப் போட்டு பதம் பார்க்கத் தவறவில்லை.

ஏழை, எளிய மக்கள் நோய்க்குப் பயந்து வீட் டில் முடங்கினால், பசியும் பட்டினியும் அந்த உழைப்பை நம்பிய மக்களை வாட்டி "வதைத்துச் சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம் - இம்மக்கள் நிலை சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்" என்று குமுறிடும் நிலைதான் கரோனா தந்த பரிசு!

மனிதன் இயற்கையின் சீற்றத்தை எதிர் கொண்டு சமாளித்து வாழப்பழகி விட்டான்.

சுனாமிகளும், பூகம்பமும் போன்ற சொல் லொணா கொடுமைகளை தங்கள் வாழ்வில் அடிக்கடி சந்திக்கும் ஜப்பானிய பெருமக்கள் மனந்தளர்ந்தவர்களாகி விடுவதில்லை.

எவ்வளவு சேதம், இழப்பு என்றாலும் அதையும் சகித்து, ஏற்றுக் கொண்டு, அதிலிருந்து புதுவாழ்வினைத் துவக்குவது எப்படி என்பதை நன்கு அறிந்தவர்கள் - ஆதலால், அதிக வயதின ரையும், சராசரி அதிக வயதுடையவர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகவும் ஜப்பான் இருக் கிறது!

சுனாமி, சூறாவளி, பயங்கர பூகம்பம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டாலும் அவர்கள் மனதளவில் தன் னம்பிக்கை இழக்காமல் தன்னெழுச்சி கொண்ட மக்களாகி, உழைப்பிலும் பண்பிலும் நல்ல குடி மக்களாக வாழ்ந்து காட்டுகிறார்கள்.

அவர்களது அன்றாட நடத்தைப் பொருளியல் வாழ்க்கை முறை (Behavioural Economics) மூலம் நாம் - இந்த காலகட்டத்தில் கற்றுக் கொண்டு நம்மை நாமே மீட்டெடுப்பதில் முழு கவனம் செலுத்துபவர்களாக மாற வேண்டும்

பூகம்பத்திற்கு பிறகு அந்தத் தீவில் (அங்கே பல தீவுகள் உள்ளன அல்லவா!) சில கடைகள் திறக்கப்படுகின்றன. மக்கள் பொருள்கள் வாங்கி, மீண்டும் ஒரு புதுவாழ்வு 'கணக்குத்திறக்க' முற்படுகிறார்கள். கடைக்குள் நீண்ட 'க்யூ' நிற்கிறது!

ஒரு அம்மையார் 2 பொட்டலம் சர்க்கரையை எடுத்து தனக்கென பில் போட செல்லுமுன் ஒரு கணம் யோசிக்கிறார். அங்கே அப்பொருள் இருப்பு அதிகம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு, தான் எடுத்து வந்த இரண்டு பொட்டலம் சர்க்கரையில் ஒரு பொட்டலத்தை திருப்பிக் கொண்டு வந்து வைத்துவிட்டு வருகிறார், கார ணம் பின்னால் வருகிறவர் ஏமாற்றம் அடையக் கூடாதே! என்னே பரந்த மனிதநேயத்தின் மாண்பு அவரிடம் பளிச்சிட்டது!

இந்த சூழலில் மற்ற நாடுகளில் - ஏன் அமெ ரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட பொருள் கள் பேரங்காடிகளில் (Super Marketகளில்) குவிந்தவை சிலமணிகளில் காலியாகி விட்டச் செய்தி, அள்ளிக் கெண்டு பத்திரப்படுத்தும் அப் பட்டமான தன்னலம் தலைவிரித்தாடுகிற நடத் தையையும் பார்க்கிறோம்.

என்றாலும் ஊரடங்கு, வீட்டுக்குள்ளே இருக் கும் நிலையில், பெரிதும் துரித உணவுக் கடைகள் உட்பட மூடிக்கிடந்தாலும், வீட்டின் அம்மாவின் சமையல் கூடம் 'Mom's Kitchen' மிகவும் சுவைத்தது மட்டுமல்ல - முதல்முறையாக வளர்ந்த பிள்ளைகளுக்கும் கூட.

இதனால் உடல் நலமும் கெடவில்லை; பணச் செலவும் குறைந்தது என்பது ஒரு நல்ல நடத்தைப் பொருளாதார ஏற்றத்திற்கு (Behavioural Economics) வழிவகுத்தது.

அதனை நிரந்தரமாக்கி நீள்பயன் பெறுவோம்!

(நாளை ஆராய்வோம்)

கரோனாவும் 'நடத்தைப் பொருளாதாரமும்!' (2)
May 20, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

கரோனாவினால் ஏற்பட்ட தீய விளைவுகள்  - உயிர்ப் பலி, பொருளாதாரத்தில் எளிய மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுதல் போன்றவற்றுடன் எதிர் பாராத சில விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்றும் சமூக ஆர்வலர்கள் கூறத் தான் செய்கின்றனர்!

கங்கை நீரை சுத்தப்படுத்த எத்தனையோ ஆயி ரம் கோடி  ரூபாய் செலவிட்டோம் - இப்போது அது ஊரடங்கு காரணமாக சுத்தமாகி வருகிறது - என்கிறார்கள்!  அதுபோலவே டில்லியில் தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தினால் காற்று மிகவும் மாசடைந்த நிலை மாறி - அதன் காற்று மாசு வெகுவாகக் குறைகின்றது என்றும் கூறுகிறார்கள் - ஒரு பக்கம் மகிழ்ச்சியையும் தெரிவிக்கிறார்கள்!

இது உண்மையாகவும் இருக்கலாம்; நாம் மறுக்க வில்லை; ஆனால் ஒன்று, இவை எந்த நிலையில்? மோட்டார் கார்கள் ஓடாமல், சாலைகள் வெறிச்சோடி இருக்கும்போது, விபத்துகளே ஏற்பட வில்லை அல்லது எங்கோ சிற்சில விபத்துகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன என்று கூறி மகிழவா முடியும்?

இயல்பு வாழ்க்கையில் இவை சாத்தியப்பட்டால் தானே அந்த மகிழ்ச்சிக்கு நியாயம் உண்டு.

நெருக்கடி காலத்தில் - 'எமர்ஜென்சி' என்ற காலத்தில் (1976 இல்) "ரயில்கள் சரியாக ஓடின - அலுவலகங்கள் சரியான நேரத்திற்கு இயங்கின - லஞ்சம் வாங்க பயந்தார்கள் - திருமணம் 50 பேருக்கு மேல் நடத்தினால் அபராதம்" என்பது வேலை செய்தது என்று சிலர் கூறி மகிழ்ந்தார்கள். ஆனால், அதற்கு நாடு கொடுத்த விலை? மதிப்பற்ற தனி மனித சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் பறிபோயிற்று என்பதல்லவா?

நடத்தைப் பொருளாதார மாற்றம் - கரோனா தொற்றின் விளைவாக ஊரடங்கு, வீட்டுக்குள் முடக் கம் - அதன் காரணமாக தாராளமாக வெளியே சென்று இளைஞர்களுக்கு துரித உணவு, பிட்சா, பர்கர் - எல்லாம் சாப்பிடவும், சினிமா கேளிக்கைகளில் கை நிறைய வாங்கும் சம்பளத்தை 'தாம்தூம்' என்று செலவழித்து 'ஜாலி'யாக இருப்பதுமே வாழ்க்கை  என்று நினைத்தவர்களுக்கு - கரோனாவின் விளைவாக சம்பளக் குறைப்பு, வேலை இழப்பு, வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு வாழுதல் முதலியவற்றைப் பற்றி ஆழமாகச் சிந்தித்து அதற்கேற்ப 'விரலுக்கு ஏற்ற வீக்கத்தை' மட்டும் வைத்துக் கொள்வது எப்படி என்று நினைத்து அசைபோட்டு சிந்தித்தால், எவ்வளவு பெரிய செலவாளியாக இதற்கு முன் நீங்கள் திகழ்ந்திருந்தாலும், உறுதியான, ஆழமான சிந்தனை உங்களை சரியான முடிவு எடுக்கவே தூண்டிவிடும். வாழ்க்கை முறை (Life Style Changes) மாற்றங்கள் தானே - அவசியத்தின் உந்துதல் காரணமாக தானே கருக் கொண்டு உருக்கொள்வது நிச்சயம்!

எங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு திருப்பத்  தையே ஒரு உதாரணமாக்கிட விரும்புகிறேன் - படிப்பறிவைவிட பட்டறிவே பல நேரங்களில் நல்ல பாடங்களைக் கற்றுத் தருகிறது!

சென்னை பிராட்வே சட்டக் கல்லூரி விடுதியில் (Madras University Students Club) என்ற 150 ஆண்டு வரலாற்றைக் கொண்டது அவ்விடுதியில் - இரண்டாமாண்டு படித்தபோது, நண்பர்கள் சாமிதுரை, திண்டுக்கல் சுப்பிரமணியம் மற்றும் நண்பர்கள் சிலர் பிராட்வேயிலிருந்து மாலை நேரம் நடைபயிற்சி போல் நடந்தே வந்து, மாலை 7 மணி அளவில் புகாரி ஓட்டலுக்குள் நுழைவோம். அவரவர்களுக்கு எது விருப்பமோ அதை ஆர்டர் செய்து "அரட்டை" அடித்துக் கொண்டு சாப்பிட்டு முடித்ததும், சுமார் 700 ரூபாய் சராசரி 'பில்' வரும்; நாங்கள் மாறி மாறி அந்த பில்லைக் கொடுப்போம்; இதில் யாரும் கணக்குப் பார்த்தில்லை!

ஒரு நாள், திரும்பி நடந்துவரும்போது நான் நண்பர் களிடம் உரையாடிய நிலையில், ‘‘நாம் ஒவ்வொரு நாளும் இப்படி இவ்வளவு ரூபாயை நமது விடுதி உணவு இருக்கும்போதும் செலவழிக்கின்றோமே - இதே 700 ரூபாய்க்கு வீட்டில் கறி - (இறைச்சி) வாங்கினால் நம் குடும்பத்தில் உள்ள எத்தனை பேர் சாப்பிடுவார்கள்; இந்தச் செலவு - தேவையற்ற ஆடம்பரம் அல்லவா? இது தவிர்க்கப்பட்டால் என்ன?'' என்று கேட்டவுடன் - மற்றவர்களுக்குப் பொறி தட்டியது.

பிறகு வெகுவாகவே அது குறைந்து விட்டது. அதுபோல இப்போதும் ஒரு நல்ல சூழல், 50 நாள் பயிற்சி - உடல் நலம் பேணுவது - சிக்கனம் தானே உருவாவது - வீட்டுச் சமையல், பழம் போன்றவற் றிற்குத் தாராளமாக செலவழித்து, நல்ல சத்துணவு விருந்தாக சாப்பிட, வாய்ப்பு உள்ளவர்கள் சாப்பிடலாமே! (இந்த நிலைகூட குறிப்பிட்ட அளவு மக்களிடம் இல்லை என்பது வேதனைக்குரியதே!)

இதுபோல பல்வேறு அன்றாட வாழ்க்கை நடத்தை களில் மாற்றங்களை உருவாக்கி, எந்த நிலையிலும் ஒருசிறு தொகையையாவது சேமித்தலும் - சேர்த்தலும் மிகவும் தலையாய கடமையாகும்.

கடன் வாங்குவது அரசுகளின் உரிமையாகட்டும்.

தனி மனித வாழ்வில் கூடுமான வரை கடன் வாங்குவதைத் தவிர்த்தால் - தந்தை பெரியார் அவர்கள் கூறுவதுபோல, நமது சுயமரியாதைக்குப் பங்கமோ, இழுக்கோ என்றும் ஏற்படவே ஏற்படாது!

தொழில் செய்ய வங்கிகளிலோ, மற்றபடி நிறுவனங் களிலோ கடன் வாங்கி, நாணயமாய் திருப்பிக்கட்டும் வ(ப)ழக்கம் தவறல்ல. தேவையற்ற ஆடம்பரங்கள் நம்மை அதல பாதாளத்தில் தள்ளி விடும். எளிமை எப்பொழுதும் ஏற்றம் தரும்; புது வாழ்வையே உருவாக்கி மேன் மைப்படுத்தும்!

'சிறுதுளி பெரு வெள்ளம் - நினைவிருக்கட்டும்!'

தந்தை பெரியார்  அவர்கள் கடனும் வாங்க மாட்டார்; எவருக்கும் (எளிதில்) கடனும் கொடுக்க மாட்டார். எனவேதான், அவர் கண்ட இயக்கம் ஒரு பெரும் நிறுவனமாகி, வளர்ந்தோங்கும் வாய்ப்பும், அந்த வருவாய்மூலம் எப்படிப்பட்ட இழப்புகளையும் ஈடுகட்டி கொள்கைப் பிரவாகம் தடையின்றி ஓடவும் வழி ஏற்பட்டுள்ளது! நமக்கு மிகவும் இன்றியமையாத பொருள்களையே வாங்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளுங்கள்.

இன்னும் 18 மாதங்கள் பொருளாதாரச் சிக்கலும், நெருக்கடியும் கரோனா தீர்ந்தும் - தீராத விளைவாக நம்மையே அச்சுறுத்தும். அப்போது நாம் நம்மைக் காப்பாற்றிட, நாம் மானத்தோடு வாழ, இந்த நடத்தைப் பொருளாதார மாற்றம் வெகுவாக கைக்கொடுக்கும் - மறவாதீர்!



கைத்தொலைபேசிகளும், கரோனா தொற்றும் ஓர் எச்சரிக்கை மணி!


May 16, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தின் (எய்ம்ஸ்) கிளை - மருத்துவமனை சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ளது. அங்கே பணிபுரியும் குடும்ப மருத்துவத் துறை மருத்துவர் கள் அய்ந்து பேர், ஒரு பன்னாட்டு மருத்துவப் பத்திரிக்கை ஒன்றில் (International Medical Journal) கரோனா தொற்றுப் பரவல் பற்றி - எச்சரிக்கை மணியடிப்பது போல் ஒரு முக்கிய தகவலை எழுதியுள்ளனர்.

நாம் பயன்படுத்தும் கைத்தொலைப்பேசி (Cell Phone) மேற்பரப்பு, கரோனா பரவலுக்கு அதிக வாய்ப்பு கொண்டது. செல்போன் பேசும் போது நமது முகம், கண், காது, வாய் ஆகியவற்றை ஒட்டியே வைத்துப் பேசுகிறோம்; இதனால் கரோனா எளிதில் பரவ அதிக வாய்ப்பு உண்டு.

எவ்வளவு தரம் கைகளை முறையாக சோப்புப் போட்டுக் கழுவினாலும் செல்போன் - கைத்தொலை பேசி - கரோனா பரவலுக்கு வழி வகுக்கக் கூடி யதே - கவனமாக இருங்கள்.

ஒரு மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய் வில் - 15 நிமிடங்களிலிருந்து 2 மணி நேரத்திற்கு ஒரு தடவை சுகாதாரப் பணியாளர்கள் செல் போனைப் பயன்படுத்துகின்றனராம்!

சுமார் 100 சதவிகிதம் பேரும் கைத்தொலைப் பேசிகளைப் பயன்படுத்தினாலும் அதில் 10 சதவிகிதம் பேர் மட்டுமே அவ்வப்போது தங்களது செல்போன்களைத் துடைக்கின்றனராம்!

சுகாதாரப் பணியாளர்களின் முகக்கவசம், தொப்பி ஆகியவை போல், செல்போனும் உடலு டன் ஒட்டியே இருக்கிறது. ஆனால், முகக்கவசம், தொப்பி ஆகியவற்றைத் துவைப்பது போல் செல் போன்களை துவைக்க முடியாதே! கையின் நீட்சி யாக செல்போன் இருப்பதால் செல்போனில் இருக் கும் எல்லாமே கைக்கு மாறும் வாய்ப்பு அதிகம்.

 மேலும் செல்போன்கள், பாக்டீரியாக்கள் - தொற்றுக் கிருமிகள் - குடியிருக்க வாய்ப்புள்ளவை - கை சுத்தத்தாலும் அவற்றைத் தடுக்க முடியாது.

எனவே, மருத்துவமனைகளில் தகவல் பரிமாற் றத்துக்கு கூடுமான வரை செல்போன்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக, ஹெட்போன்கள், இன்டர்காம் தொலைப்பேசி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம் என்றும் அறி வுறுத்தியுள்ளனர் அந்த ஆய்வுக் கட்டுரையில்!

மேலும் செல்போன்களை நாம் பல இடங் களுக்கும் எடுத்துச் செல்வதன் மூலம், கிருமி பரவும் என்பதால், வெளியிடங்களிலும் அதைப் பயன்படுத்துவதைக் கூடுமானவரை தவிர்க்கவும் வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

மேலும் மற்றொரு முக்கிய எச்சரிக்கை. தயவு செய்து உங்கள் செல்போன் கருவியை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். கூடுமானவரை மற்றவர் கள் தரும் செல்போனை வாங்கிப் பேசுவதையும், எவ்வளவு அதிகமாகத் தவிர்க்க முடியுமோ அவ்வளவு அதிகமாகத் தவிர்த்துவிட முயலுங்கள்! அதே எண்ணை வாங்கி உங்கள் போனிலிருந்து பேசுங்கள்!

சின்னச் சின்ன விஷயங்கள் என்றாலும், கவனக்குறைவு வேண்டாம் - காரணம் சின்னச் சின்னக் கிருமிதானே கரோனா தொற்று கிருமி - உலகை எப்படி ஆட்டி வதைக்கிறது பார்த்தீர்களா?

கையில் கயிறு - மாந்திரிகம், பக்தி என்பதற்கா கக் பல கயிறுகளை வடகயிறுகள்போல், கட்டியி ருப்பவர்களும் இதன் மூலம் பெற வேண்டிய முக்கியப் பாடம் உண்டே!

ஏற்கெனவே நாம் Microbilogy Department மூலம் - ஆய்வு செய்து - கையில் கட்டியுள்ள கயிறுகளில் கிருமிகள் எப்படி எளிதில் புகுந்து, தங்கி வாசம் செய்து நோய்களை ஏற்படுத்தும் வாய்ப்பு விஞ்ஞானப்படி அதிகம் என்பதை  குழந் தைகள் முகாமில் (தஞ்சையில்) விளக்கியுள்ளோம்!

குழந்தைகள் கேட்டனர்; ஆனால், பெரிய வர்களின் (மூட) நம்பிக்கை அவர்களைத் தொற்றி யுள்ள கிருமிகளாக நின்று தடுத்தால் நாம் என்ன செய்ய முடியும்?

குதிரையை குளத்துக்கு அழைத்துச் செல்ல முடியும் - ‘குடி தண்ணீரை என்று'  அதன் தலையை முக்கியா, தண்ணீர் குடிக்க வைக்க முடியும்?


திங்கள், 4 மே, 2020

சற்றே சிந்தியுங்கள்! மனிதமா? மனிதர்களா?

*வாழ்வியல் சிந்தனைகள்*

*- ஆசிரியர் கி.வீரமணி*

கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு என்பது ஒரு முக்கிய தேவை; மனிதர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுவதுதான் சிறந்தது. இதுவரை இதற்கென தனி தடுப்பு - ஒழிப்பு, மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தொற்றான கரோனாவிலிருந்து நம்மையும், பிறரையும் காப்பாற்றிக் கொள்ள ஒரே வழி என்று மருத்துவ அறிஞர்கள் கூறுவது, முற்றிலும் தவறாது கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்று அல்லவா!

உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கிக் கொள்வதும், அடிக்கடி சோப்புப் போட்டு கைகழுவு வதும், தள்ளி நிற்றல், முகக் கவசம் போன்றவை யோடு வீட்டிற்கு வெளியே அவசியம் ஏற்படும் போது செல்லுதல் என்பது போன்ற கட்டுப்பாடு கள்தாம் நம் நலம் - மக்கள் நலம் கருதி முக்கியம்.

ஆனால், கூட்டங் கூட்டமாக காய்கறி கடை மற்றும் இறைச்சி வாங்க கடைகளுக்குச் செல்வது, பல மனிதர்கள் தங்களது எல்லையற்ற சுயநலத் தினை வெளிப்படுத்த வெளியில் சுற்றுவது, கறி விருந்து சாப்பிடுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று பொறுப்பின்றி, நிலைமையின் தன்மை விபரீதமாகப் போய்க் கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல் நடந்துகொள்வது, இதுதான் சரியான நேரம் பணம் சம்பாதிக்க என்றும் கருதி, விலை வாசிகளை உயர்த்தி மக்களின் அவசரத் தைப் பயன்படுத்தி சுரண்டல் நடத்துவது போன்ற  நிலை களை நினைத்தால், வெட்கமாக இருக்கிறது!

ஊரடங்கை மீறியவர்கள் 4 லட்சம் பேர் என்றால், இது ஒரு சமூக அவமானம் அல்லவா?

மனிதர்களின் எண்ணிக்கை பெருத்துக் கொண்டே போகிறது,

ஆனால், மனிதம் சிறுத்துக்கொண்டே தேய் கிறது!

உலக நாடுகளையே பல லட்சம் பேரை பலி கொண்ட கரோனா தொற்றிலும்கூட - பல பெரிய  நிலைகளில் உள்ளவர்கள் பலரும் வேடிக்கை மனிதர்களாகவே இருக்கின்றனர்.

மனிதர்களின் எண்ணிக்கை பெருகிய அள வில், மனிதம் ஏனோ பெருகவில்லையே என்ற சிந்தனையோடு தந்தை பெரியார் என்ற மாமனி தரின் பாடங்களை சற்றே புரட்டினேன்.

மற்ற காலங்களைவிட இந்தக் காலகட்டத்தில் அவசியம் படித்தால் மட்டும் போதாது; கற்க வேண்டும் - பெரியார் பேசுகிறார் 70 ஆண்டு களுக்கு முன்பு - கேளுங்கள்; மனிதம் என்பதன் தேவை நமக்குப் பளிச்சென்று புரியும்.

‘‘வாழ்க்கை என்ற ஏணியின் அடிப்படியில் கால் வைக்கும்பொழுது நாம் எங்கே ஏறுகிறோம், கடைசியாக எங்கே போவோம் என்று அறியக் கூடவில்லை. நாம் ஏறி முடித்தால்போதும் என்பதைக் கொண்டிராமல், ஒவ்வொரு படியாக ஏறிக்கொண்டே போகவேண்டும்; அதற்குமேல் என்ன தெரிகிறதோ அதைப் பிடிக்க வேண்டும் என்று, அதைப் பிடித்தவுடன், அதற்குமேல் என்ன தெரிகிறதோ அதைப் பிடிக்கவேண்டும் என்று எல்லையே இல்லாமல், இலட்சியமற்ற முயற்சியி லேயே காலம் கடத்துகிறோம். இறுதியில் காலம் முடிந்து இறந்து போகிறோம். இப்பேர்பட்ட வாழ்க் கையால் ஒரு பலனும் கிடையாது.

சமுதாயத்திற்குப் பயன் தரும் வாழ்க்கையே சிறந்த இலட்சியம். மனிதன் பிறந்து இறக்கும்வரை இடையில் உள்ள காலத்தில் ஏதாவது பயனுள்ள காரியம் செய்யவேண்டும். அவன் வாழ்க்கை மற்ற வர்கள் நலனுக்கும், சமுதாயத்தின் சுகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கவேண்டும். ஒருவன் வாழ் வென்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள்; மற்றவர்கள் சுகம் கண்டார்கள் என்று அமையவேண்டும். இதுதான் முக்கியமானதாகும். இதுவே அவசியமும், பொருத்தமும் ஆனதுமின்றி மனிதவாழ்க்கை என்பதன் தகுதியான லட்சியம் இது என்றும் கூறலாம். ஆனால், நாம் இதை யாரிடமும் காண்பது கிடையாது. கண்டுபிடிப்பதென்றால், விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிருவரைக் காண்பதே மிகக் கஷ்டமான காரியமாகும்.

நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. நமது சமுதாயமும் வாழவேண்டும்; மற்றவர்களின் பிள் ளைகளும் வாழவேண்டும். நம் பிள்ளைகள் மட் டும் சுகம் அடைந்தால் போதாது; ஏனையவர்களின் வாழ்வு சுகம் அடைய வேண்டும். இதற்கு ஏதாவது நம்மால் ஆனமட்டிலும், நம் வாழ்க்கை அவர் களின் நன்மைக்கு அமையும் முறையில் நாம் நடந்துகொள்ளவேண்டும் என்பதே முக்கிய மானது. இந்த வேலையைச் செய்பவர்கள் மிகக் குறைவு; காண்பது அரிது.''

*- 1956 இல் பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் அய்யா உரை (17.3.1956).*

தோழர்களே,

மனிதம் என்பது என்ன என்பதற்கு எவ்வளவு அருமையான விளக்கம் பார்த்தீர்களா? கரோனா அச்சுறுத்தல் உள்ள இன்றைய உலகச் சூழலில், நம்முடைய சிறு பங்குதான் என்ன - மற்றவர்கள் சுகத்துக்கு என்று எண்ணுங்கள் - முடிந்ததைச் செய்து மனிதம் மறையாத மனிதர்கள் நாம் என்று வாழ்ந்து காட்டுங்கள்.

அரிய வாய்ப்பு இப்போது!
- விடுதலை நாளேடு, 4.5.20

திங்கள், 13 ஏப்ரல், 2020

பாதுகாப்பான முகக்கவசமும் - கரோனா தடுப்பும்!

முதுபெரும் மருத்துவ வல்லுநரும், மூத்த மருத்துவருமான டாக்டர் எம்.எஸ்.ராமச்சந்திரன் (MSR)  அவர்கள் அனுப்பியுள்ள கரோனாவைத் தடுத்துக்கொள்ள முகக்கவசம் (Mask) அணிந்து கொள்வது பற்றிய சில அரிய தகவல்களை உங்கள் அனைவருடன் பகிர்ந்துகொள்வதில் மன நிறைவு அடைவதால், ஆங்கிலத்தில் அனுப்பியதை அப்படியே தமிழில் தருகிறேன் - பயன் பெறுக - பகிர்ந்து கொள்வதோடு, பரப்பவும்கூடச் செய்து, நம்மாலான எளிய மிகச் சிறிய இந்தத் தகவல்மூலம் பிறருக்கு உதவலாம்.

கேள்வி 1: நாம் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியமா?

பதில்: ஆம்! மிக அவசியம்தான். காரணம், கரோனா வைரஸ் (கோவிட் 19) என்ற தொற்று நோய்த் தடுப்புக்கு இந்த முகக் கவசம் 5 மடங்கு பாதுகாப்பைத் (வெறும் நிலையிலிருந்து) தருகிறது. இருமும்போதும், தும்மும்போதும், பேசும்போதும் மூக்கில், வாயிலிருந்து வெளிவரும் துகள்களி லிருந்து நம்மை முகக்கவசம் பாதுகாக்கிறது. அதனால்தான், மத்திய அரசு, குடிமக்கள் இதனை வெளியே செல்லும்போது கட்டாயம் முகத்தில் அணிந்துகொள்ளுவது மிக அவசியம் என்று கூறியுள்ளது.

கேள்வி 2: நான் முகக்கவசம் N-95 என்பதை அணியவேண்டுமா?

பதில்: தேவையில்லை. N-95 என்ற முகக்கவசம் அதிகமாகக் கிடைப்பதில்லை. தேவைகள் அதிகம் - அது மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் அறுவைச் சிகிச்சையின்போது முகத்தில் அணிய வேண்டிய தேவையாக - மருத்துவமனைகளில்கூட குறைந்தபட்ச ரிஸ்க் இருக்கும் கேசுகளில், மற்ற முகக் கவசங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள், N-95 என்பதை அல்ல. N-95 முகக்கவசம் மிகவும் இறுக்கமானதும்கூட - 24 மணிநேரமும் அதை அணிந்துகொண்டே இருப்பது - மூச்சை ஒழுங்குபடுத்துவதற்கு அவசியமில்லை. சுகாதாரப் பணியாளர்களுக்குத்தான் இது இன்றியமையாத தேவையாகும். (எல்லோரும் அதைத் தேடி, நாடிப் போய் பயன்படுத்த எண்ணாதீர்).

கேள்வி 3: முகக்கவசம் SS99என்பதனால் ஏற்படும் நற்பலன்கள் என்ன?

பதில்: முகக்கவசம்  SS99 என்பது முகக்கவசம் N-95 என்பது போலவே நமக்கு கரோனா தொற் றிலிருந்து பாதுகாப்புத் தருவதுதான். ஆனால், இது சுவாசிப்பதற்கு லகுவாகவும், எளிதாகவும் இருக்க உதவும் ஒன்று. காரணம், இது ஆர்கானிக் பருத்தி யினால் மிகவும் மென்மையான நூலில் தயாரிக்கப்படுகிறது. நாள் முழுவதும் அணிந்துகொண்டே இருந்து பயன்பெற இது பெரிதும் வசதியாக இருக்கும். இது கிருமிகள் நுழையாதவாறு 99 விழுக்காடு தடுப்பு வடிகட்டலைச் செய்துவிடக் கூடியதாகும். Bacterial Filtration Efficiency (BFE).

(Viral bravulz) இது Sitra என்பதால், நற்சான்று அளிக்கப்பட்ட ஒன்றாகும். இது நீர்த்தி வலைகள் உள்ளே நுழையாதவாறு, நுழைந்தாலும் ஈர்த்துக் கொள்ளும் தன்மையதும்கூட.

கேள்வி 4: மறுபயன் (Reusable) முகக்கவசம் ஏன் தேர்வு செய்யப்படுகிறது?

பதில்: இத்தகைய மறுபயன் - மீண்டும் பயன்படுத்தும் வசதியுள்ள முகக்கவசம் (பரிந்து ரைக்க) என்பது சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் அதனுடன் ஒத்துப்போகும் ஒன்று. (Environmental Friendly) விலையும் மலிவு - மற்ற முகக் கவசங்களை ஒப்பிடும்போது!

SS99  முகக்கவசங்களை 25 தடவை பயன் படுத்தலாம் - பாதுகாப்பாக என்று SITRA (பஞ்சு மில்கள் நூல் ஆய்வமைப்பு) நற்சான்று வழங்கி யுள்ளதால், நீங்கள் வெளியே செல்லும்போது அணிவதற்கு இதுவே வசதியான ஒன்று அல்லவா? (தூக்கி எறியும் முகக்கவசம் ஒரே ஒரு தடவைதான் பயன்படுத்த முடியும்).

சிங்கப்பூர் அரசு அதன் குடிமக்களுக்கு இந்த SS99 முகக் கவசத்தைத்தான் (மூன்று முகக் கவசங்கள்) தருகிறது.

கேள்வி 5: இதன் (முகக்கவசம் SS99 என்பதன்) விலை எவ்வளவு?

பதில்: SS99  என்பது நம் நாட்டில் 30 ரூபாய் விலையில் உள்ளது. சமூகப் பொறுப்பான விலை தான் இது; இதை 25 முறை பயன்படுத்தலாம் என்று சொல்லும்பொழுது, கணக்குப் போட்டுப் பார்த்தால்,  ஒரு தடவை பயனுக்கு SS99  முகக் கவசத்திற்கு நாம் செலவழிக்கும் தொகை 1.2 ரூபாய்தானே!

உயர்ந்த பருத்திப் பஞ்சால் சிறந்த தொழில் நுட்பத்துடன் வரும் அதை அனைவரும் பயன் படுத்தலாமே!

சரியானதைத் தேர்வு செய்தால் முறையான பலன் கிடைக்கும் - இல்லையா?

- விடுதலை நாளேடு, 13.4.20

சனி, 28 மார்ச், 2020

"21 நாள்கள்" - வீட்டுக்குள் - எப்படி? எப்படி?

21 நாட்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பது - மிக வேகமாக உலகெங்கும் பரவிவரும் கரோனா வைரஸ் நம்மைத் தாக்குவதைத் தடுக்கவேயாகும். தனிமைப்படுதல், ஒதுங்கி வாழ்தல், சுயக்கட்டுப்பாடு மூலம் தொற்று பரவாமல் இருக்க முடியும்; இல்லை யெனில் அது மிகவும் வேகமாகப் பல மடங்குப் பெருகி நம் மக்களை அழித்து "அல்லற்பட்டு ஆற்றாது அழுது கண்ணீர் வடிக்கும்" அவலத்திற்கு ஆளாக்கி விடக் கூடும்!

முன்கூட்டியேகூட, ஒரு மாதம் முன்னால்கூட இதைச் செய்திருக்க வேண்டும் என்பது மருத்துவ அறிவியலாளர்களின் கருத்து. என்றாலும் "Better Late than Never" என்பதுபோல, இப்போது நாம் தடுக்காவிட்டால் - இந்த முறையில் நம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டு  இருப்பதைத் தவிர விடியலுக்கு வழியே இல்லை.

இதனை மத்திய அரசோ, மாநில அரசோ அவர்களுக்காகச் செய்யவில்லை; நம் பாதுகாப்புக்கு, நமது நலத்திற்கு - மறந்து விட வேண்டாம்!

எத்தனையோ ஜோதிட சக்ரவர்த்திகள் இருந்தும் கரோனா வைரஸ் வரும் என்று எவராவது சொன்னார்களா?  எல்லாரும் இவ்வாண்டு சுபீட்சம் பொங்கும் - வழியும் ஆண்டு என்றுதான் அளந் தார்கள்! சமூக வலைத்தளங்கள் இதனை நன்கு ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளார்கள். என்றாலும் நம்மாட்களுக்கு ஜோதிடப் பைத்தியம் எளிதில் தீராது; ராசி  பலன் போட்டு, காசு பலன் தேடும் ஏடுகளுக்கு நாட்டில் பஞ்சமே இல்லை!

"நாய் விற்ற காசு குரைக்காது!

கருவாடு விற்ற காசு நாறாது!"

என்பதுபோல - ஜோதிடம் வேண்டும்; இப்படி ஒரு பிரமை!

வானவியல் (Astronomy) என்பதும், ஜோதிடம் என்பதும் (Astrology)  வெவ்வேறு; நேர் எதிர்துருவங்கள்.

ஒன்று விஞ்ஞானம் - அறிவியல்; மற்றொன்று போலி விஞ்ஞானம் - போலி அறிவியல்.

21 நாட்கள் வீட்டுக்குள் இருப்பதை, குடும்ப உறுப்பினர்களோடு இருக்கும் நல் வாய்ப்பாகக் கருதுங்கள்.

எது தவிர்க்க முடியாததோ அதை ஏற்கப் பழகுதல் இனிமை தரும்!

பலவீனத்தையே பலமாக்குவதும், எதையும் நம் பக்கம் சார்பாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் தான் முழுப் பகுத்தறிவு.

தந்தைபெரியாருக்கு 'பல்செட்' கட்டினார்கள். சிறீரங்கம் (திராவிட) முத்து இன்னும் இருக்கிறார். கருப்புச் சட்டைக்காரரான அவரும், மற்ற பல் டாக்டர்களும் உயர்ந்த பல் செட்டைத் தயாரித்துத் தந்தை பெரியாருக்கு தந்தார்கள் - பொருத்தி பார்த்தனர்.

தந்தை பெரியாருக்குப் பிடிக்கவில்லை. தூக்கி வைத்து விட்டார்!

பல்லில்லாமலே பேசினார் - பல ஆண்டுகளாக வெண்கல நாதக் குரலில்!

'பல்லுபோனால் சொல்லுப்போச்சு'

பொய்யாகியது பெரியார் விஷயத்தில் - அது மட்டுமா?

ஆட்டுக்கறி - மிளகு அரைத்து பக்குவமான 'கருப்புக்கறி'  - அன்னை ஈ.வெ.ரா. மணியம்மை என்ற செவிலித்தாயின் அன்றாடத் தயாரிப்பை சுவைத்து - மென்று சுவைத்துச் சாப்பிட்டார். அய்யா எப்படி தனது ஈறுகளை (Gums) யே பற்களாக்கிக் கொண்டார்!

"அதுபோல இந்த 21 நாள்களை நமது பல 'பாக்கிகளை' தீர்த்து வைக்கப் பயன்படுத்தி மகிழுங்கள். எதற்கும் மறுபயன்  - Recycling உண்டு. இதற்கும் கூடத்தான் - யோசியுங்கள்.

நான் எனது நீண்ட நாள் பாக்கியான முக்கியமாகச் சேர்த்த வீட்டு நூலகப் புத்தகங்களை ஒழுங்குபடுத்தி பேரப் பிள்ளைகளின் உதவியால் கணினிமயப்படுத்தி வரிசைப்படுத்தும் பணி பயனுள்ளதாக அமைந்தது!

அடுத்து "பெரியார்தம் டைரிக் குறிப்பு" என்ற ஆழ் கடலுள் மூழ்கி மூழ்கி முத்துக்களை எடுத்து சேகரித்து வருகின்றேன் - "உங்களுக்காக - வருங்கால வாசக சந்ததிக்காக!"

மறுபயன் - Recycling, 21 நாளும் தேவைதான் - ஓய்வு, இளைப்பாறுதல் என்பது வேறு பணிக்கு நம்மை மாற்றுவதே தவிர, தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது அல்ல. அதற்காக தூக்க நேரத்தையும் குறைக்க வேண்டாமே!

- விடுதலை நாளேடு, 26.3.20