பக்கங்கள்

புதன், 26 மே, 2021

நில்லாத மழை இல்லை; வெல்லாத போரில்லை!


‘‘கரோனா கொடுந்தொற்று - இரண்டாம் அலையின் வீச்சு உச்சக்கட்டத்தை 30 ஆம் தேதிக்குள் தொடும்; அதன் பிறகு படிப்படியாக குறையலாம்'' என்று ஒரு சாராரும், ‘‘மூன்றாம் அலை வீச்சுக்கும் நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும்'' என்று பரவலாகப் பலர் கூறுவதும், ‘‘நீரிழிவு நோயாளிகள் கரோனா கொடுந் தொற்றுக்குள்ளான பிறகு, சர்க் கரை அளவு கட்டுக்குள் வரா விட்டால், கண்களில் ‘கரும்பூஞ்சை'  (Mucormycosis) வந்து, உயிர்க்கொல்லியாகும்'' என்றும் வரும் செய்திகளை மிகவும் பயத்தையும், பதற்றத்தையும் பல ருக்கும் ஏற்படுத்தக் கூடியதாகும்.

தொலைக்காட்சிகளைத் தொடர்ந்து பார்த்துவரும் இல்லத் தரசிகள், வீட்டில் முடங்கியுள்ளவர்கள் மிகுந்த கவலை - பயத்தால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிடும் நிலையும் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவலாகக் காணப்படுகிறது!

இதுபற்றி அளவுக்கு மீறி பயப்படாமல், அறிவுப்பூர்வமாக, துணிவுடன் எதிர்கொள்ள முனையவேண்டுமே தவிர, அளவுக்கு மீறிய பயத்தால் - பதற்றத்தால் - நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துக் கொள்ள முயலவேண்டாம்.

இயற்கை நியதி - இயற்கை சட்டம் என்கிற தத்துவப்படி, எந்தத் தொடக்கத்திற்கும் ஒரு முடிவு உண்டு. ஆக்கப்பூர்வ சிந்தனையும், நம்முடைய துணிவும் பெரிதும் துணை நிற்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அவை பெருக்கும் - உளவியல் ரீதியாக.

நாம் ஒழுங்காக சில நியதிகளைத் தவறாமல் கடைப்பிடித்து, ஒழுகினால், அச்சத்தை விரட்ட லாம்; நிம்மதியுடன் நித்தம் நித்தம் வாழலாம். “தீதும் நன்றும் பிறர் தர வாரா”. இன்பமும், துன்பமும் எல்லாம் நம் கையில்தான் - நம் அணுகுமுறையிலும், பிரச்சினைகளை எதிர் கொள்ளுவதிலும் தான் உள்ளது!

சாவு எண்ணிக்கையை கண்டு பயப்படு வதைவிட, குணமாகி வாழும் பலரது எண் ணிக்கை கூடுதல்; அதைக் கண்டு ஏன் நாம் துணிவுடன் வாழக் கூடாது?

முகக்கவசம் அணிதல், கிருமி நாசினியைப் பயன்படுத்துதல், அடிக்கடி சோப்புப் போட்டுக் கைகழுவுதல், போதிய உடற்பயிற்சி - தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயங்காது ஊசிகளைச் செலுத்திக் கொள்ளுதல், தனி நபர் இடைவெளி காத்தல், அவசியமற்று எங்கும் செல்லாமல் தனித்திருப்பது, அடிக்கடி சோதித்துக் கொள் ளுதல், ஊட்டச் சத்து உணவுகளை எடுத்தல், நீரிழிவு போன்ற நோயாளிகள் மிகுந்த கவனத்துடன் ரத்தச் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பதை அடிக்கடி கண்காணித்து வருதல் - ஆக்கப்பூர்வ சிந்தனை - மனதிற்குப் பிடித்த பாடல்களைக் கேட்டு இசையின்பம் பெறுதல், படிக்க விரும்பும் நூல்களைப் படித்தல், வீட்டில் விளையாட்டுகளில் ஈடுபடுதல், நிகழ்த்தப்படும் காணொலிகளில் கலந்துகொண்டு மன உளைச்சலுக்கு விடைகொடுத்தல், வீட்டில் இருந்தாலும், தூங்கும் நேரம் தவிர, மற்றபடி எப்போதும் மிகுந்த சுறுசுறுப்புடன் இருப்பதுமான பலவற்றில் நம்மை நாம் ஈடு படுத்திக் கொண்டால், விடி யலைக் காணலாம்! உடலுக்கு ஓய்வு - மனதிற்கு வேலை கொடுங்கள்.

நம்பிக்கையை ஒருபோதும் இழக்கவே கூடாது; அலட்சியமாக இருக்கவும் கூடாது; அஞ்சுவதும், கெஞ்சுவதும், மிஞ்சுவதும் எல்லா முமே கூடாது.

‘‘நில்லாத மழையில்லை - 

வெல்லாத போரில்லை''

என்பதை மறவாதீர்!

கட்டுப்பாட்டுடன் வாழத் தெரிந்தவர்களுக்கு ‘கவலை' என்பது, தானே விடைபெற்றுக் கொண்டு ஓடக் கூடியதுதானே!

மேலும், உளவியல் ரீதியாக எண்ணிப் பாருங்கள். கவலைப் பட்டால்  பிரச்சினைகள் தீருமா? நோய்தான் வரும் - உடல்நிலை தான் வெகுவாகக் கெட்டுப் போகக் கூடுமே தவிர - உருப்படியான பலன் ஏதும் விளையாது!

எந்த நோய்க்கும் சிகிச்சை உண்டு - மறவாதீர்!

எந்த சிகிச்சையும் வெற்றியளிக்க நாளும் ஆய்வு செய்து மக்களைக் காப்பாற்றிக் கரை சேர்ப்பதில் 24 மணிநேரமும் ஆட்சியாளர்கள், மக்கள் நல களப்பணியாளர்களும் உழைக்கின் றனர். அவர்தம் ஈகத்தைக் கண்டு தன்னம்பிக்கை கொள்ளுங்கள்!

அவர்கள் இருக்கப் பயம் ஏன்?

அறிவியலால் முடியாதது எதுவுமில்லை. ஓராண்டுக்கு முன் தடுப்பூசியில்லை; இப்போது நம் கைகளில் கிடைத்துவிட்டதல்லவா? அது போலத்தான் எந்தக் கொடுந்தொற்றும் முடியவே செய்யும்.

முடிவற்ற நிலை எதற்குமில்லை - இது இயல்பான அறிவியல் - அறவியல் நிலை - தீர்வுகள் எட்டாக் கனிகள் அல்ல!

தெளிவுடன் இருங்கள் - துணிவுடன் செயல்படுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக