பக்கங்கள்

மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 ஜூலை, 2022

மகளிரே, மருத்துவத்தை மறக்கலாமா? (1)(2)

செவ்வாய், 2 ஜூலை, 2019

மருத்துவம் - தொழில் அல்ல; ஓர் அரிய தொண்டு!



ஜூலை 1 - உலக டாக்டர்கள் - மருத்துவர்கள் நாள்!

டாக்டர்களின் பணி அறப் பணி- தொண்டூழியம். மனிதர்களின் நலவாழ்வு - உயிர்காப்பு போன்ற அரிய பணிகளைக் கடமையாகக் கொண்ட அரும் பணி!

மருத்துவமனைகள் அனைத்தும், அரசு மருத்துவமனைகளாக்கப்பட்டு, தனிப்பட்ட தொழில் முறை (Private Practice) இன்றி, அனைத்தும் அரசு மருத்துவர்கள், அரசு மருத்துவமனை மூலமே என்று நம்  நாட்டில் ஆவதற்கு இன்னும் பல ஆண்டுகாலம் ஆகும்!

கல்வியும் சுகாதாரமும் அரசுகளின் மிக முக்கிய இரண்டு முன்னுரிமைகளாக்கி, நேற்று முன்னாள் (29.6.2019) திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட ஒரு முக்கிய தீர்மானம்.

ஒவ்வொரு இந்தியக் குடிமக்களுக்கும் சுகாதார உரிமையை - நோய் தீர்த்து நல்ல உடல் நலத்துடன் வாழும் உரிமையை, மக்களின் அடிப்படை உரிமையாக்கும் அரசுகள் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

உடல் நலக் காப்பீடு திட்டத்தின் (Insurance) கீழ் சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவ மனைகளில் கண்ணை மூடிக் கொண்டு பில்களை போடுவது சற்றும் நியாயப்படுத்த முடியாத பகற் கொள்ளைக்கு ஒப்பாகும்!

தக்க அனுபவம் வாய்ந்த ஓய்வு பெற்ற மருத்துவப் பேராசிரியர்கள், நிதித்துறை நிபுணர்கள், ஆயுள் காப்பீட்டுத் துறை வல்லு நர்களைக் கொண்ட முத்தரப்பு ஆலோசனைக் குழு போட்டு பரிந்துரைகளைப் பெற்று செயல்படுத்தினால் வரிப் பணத்தை அரசுகள் நியாயமான அளவுக்கு ஒதுக்கியது சரியான பலனைத் தரும் வகையில் நோய் தீர்ப்புக்கு வழி கிட்டும்!

'கார்ப்பரேட் முதலாளிகளான' கனவான் களின் தயவில் நடைபெறும் ஆட்சிகளால் இது சாத்தியப்படாது.

மாறாக, சமதர்ம சிந்தனை கொள்கையுடன் கூடிய உண்மையான மக்கள் நலம் பேணும் அரசுகளால் மட்டுமே முடியும்!

அரசு டாக்டர்களுக்கு, அவர்களுக்கு போதிய அளவு சம்பளம் தந்து, தனிப்பட்ட தொழில் நடத்த அனுமதிக்கவே கூடாது!

சிகிச்சை அளிக்கும் டாக்டர்களின் இனிய இரக்க சுபாவமே நோயாளிகளின் பாதி நோயைத் தீர்த்துவிடக் கூடிய - வலியைப் போக்கிவிடக் கூடிய மனநிலையை நோயாளி களுக்கு உண்டாக்கி விடக் கூடும். எனவே இன்சொல் - இதமான பொறுமை,  வருவாயைப் பின்னுக்குத் தள்ளி மனிதாபிமானத்தை முன்னே நிறுத்தக் கூடியதாக டாக்டர்களின் நோய் தீர்க்கும் முறை அமைந்தால் சிறப்பு.

சிடுசிடு மூஞ்சி, கடுகடு முகம் கொண்ட டாக்டர்களை எந்த நோயாளியும் விரும்பார்; அத்தகையவர்களிடம் போவதற்கே தயங்குவர்; அஞ்சுவர் - தவிர்க்கவே முயல்வர்.

ஸ்டெதாஸ்கோப்பும், B.P. Apparatus-ம் எவ்வளவு  முக்கியமோ அதைவிட நோயாளி களை அரவணைத்து, நம்பிக்கையூட்டும் சிகிச்சையாளராக நோயாளிகளின் நெஞ்சில் பதிய வைப்பதே நோயின் வலியையும் வலிமையையும் பெரிதும் குறைத்து விடுமே! இல்லையா?

முன்பு அமைச்சர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் பிரபல டாக்டர் செந்தில்நாதன் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் ஒருகதை சொன்னார்!

"இரவு நடுநசி 1 மணி அளவில் வெளியேயிருந்து வீட்டுக்கு வந்தபோது தெரு நாய் ஒன்று ஒருவரைப் பாய்ந்து கடித்து குதறிவிட்டது.

இரத்தம் சொட்டச் சொட்ட பக்கத்துத் தெரு டாக்டர் வீட்டில் 'காலிங் பெல்லை' அழுத்தி அடித்து, டாக்டரை எழுப்பி வெளியே வரச் சொன்னார். அவரும் எழுந்து வந்து என்னவென்று கேட்டார்.

உடனே ஊசி போடாமல், சிகிச்சையை துவக்காமல், கோபத்துடன் வெளியே  (Consulting hours) மருத்துவரை கலந்தா லோசிக்கும் நேரம் என்பது மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை என்று போட்டிருக்கும் போர்டைப் பார்த்தீர்களா?"

"பின் ஏன் இப்போது வந்து தொல்லை தருகிறீர்கள்?" என்று கடுகடுத்த முறையில் எரிந்து விழுந்தார் டாக்டர். 'நோயாளி சொல்லொணாத வலியால் துடித்த நிலையில்... நான் அந்த போர்டைப் படித்தேன். ஆனால் அதன்படி அந்த கடித்த நாய் அந்நேரத்திற்குள் கடிக்கவில்லையே டாக்டர்; அதற்கு நான் (நோயாளி) எப்படி பொறுப்பாவேன் டாக்டர்? என்று கேட்டாராம்!

பல டாக்டர்கள் மனம் இரங்கி நோயாளி களுக்கு இலவச மருந்து, வெகுக் குறைந்த கட்டணம், அதிக பரிசோதனைகள் செலவு Tests எழுதித் தராமல், கேள்விகள் மூலமே கேட்டுத் தெளிந்து நோயாளிகளை குணப் படுத்துவோரும் உண்டு!

அதைவிட மிகப் பெரிய ஆதங்கம் ஒன்று நமக்கு உண்டு.

கிராமப்புறங்களிலிருந்து வரக்கூடிய, மருத்துவர்களாகி "தொழிலில்" (தொண்டில் அல்ல) ஈடுபட்டுள்ள பல இளம் டாக்டர்கள்கூட கிராம மக்களுக்குச் சேவை செய்ய ஏனோ வரத் தயங்குகின்றனர்!

மிஷனரி டாக்டர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து, மொழி கற்று சிகிச்சை தருகிறார்களே, அதையெல்லாம் நமது இளம் டாக்டர்கள் சிந்திப்பதுண்டா?

பலரும் தொண்டறச் செம்மல்களாக மாற  வேண்டும். மனிதர்களில் பலவகை உண்டு. நல்லவர்கள் பொறுப்பு அதிகம் உள்ளதே நமக்கு நல்லது!

-  விடுதலை நாளேடு, 1.7.19

புதன், 1 மே, 2019

இதோ ஒரு பயனுறு நல வாழ்வு அறிவுரை!

உலகப் புத்தக நாளில் உங்களுக்கு ஒரு அரிய புத்தகத்தை  - வாழ்வைப் பாதுகாக்கும் பயனுள்ள மருத்துவ அறிஞர் தரும் நூல் ஒன்றை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மறைந்தும் மறையாத மாபெரும் மனிதநேய மருத்துவ மாமணி பேராசிரியர்  டாக்டர் செ.நெ. தெய்வ நாயகம் அவர்கள் எழுதிய "ஊட்ட மளிக்கும் உன்னத உணவுகள்" என்ற ஒரு குறுகத்தரித்த குறள் போன்ற நவில்தரும் நூலைப் பற்றிய சில செய்திகள்.
122 பக்கங்கள் கொண்ட நூலை "பாவைப் பப்ளிகேஷன்ஸ்" வெளியிட்டுள்ளனர். 15 பகுதிகள்:
1). உன்னத உணவு, 2). உணவின் அடிப்படை மற்றும் அடித்தளம், 3) சித்த மருத்துவ உணவியல் கொள்கை, 4) ஏழு உடற்கட்டுக்களுக்கான உணவுகள், 5) உடலுக்கேற்ற உணவுகள், 6) காலத்திற்கேற்ற உணவு 7) நோய்க்கேற்ற உணவு, 8) நலவாழ்வும் உணவும், 9) ஊட்டச்சத்து மருத்துவம் நவீன மருத்துவப் பார்வை, 10) கோடைக்கேற்ற சிறப்புடைய குளிர்ச்சியூட்டும் பருகு உணவுகள் (பானங்கள்), 11) தேன், 12) சமையல் கலன்களின் பயன்பாடுகள், 13) வீட்டுக்குள் கல்பாக்கமா?, 14) அரிசி என்னும் அவிழ்தரு, 15) சில உன்னத  உணவுகள்.
இந்நூலுக்கு அணிந்துரை தந்த தமிழ்ப் பேரறிஞரும், முன்னாள் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தருமான தமிழ்த்திரு. அவ்வை நட ராசனார் அவர்கள் சுட்டிக் காட்டியதைப்போல,
"ஊதியத்தைப் பெரிதாகக் கருதாமல், உழைப் பையும், ஒழுக்கத்தையும்  அணிகலனாகக் கொண்டு வாழும் உயரிய மருத்துவ மாமணி என்று மருத்துவப் பேரறிஞர் பேராசிரியர் செ.ந. தெய்வநாயகம் அவர்களை மருத்துவ உலகமே கொண்டாடுகிறது" என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
டாக்டர் தெய்வநாயகம் அவர் களின் தொண்டறம் வியந்து போற்றத்தக்கது. அவர் லண்டனில் படித்துப் பட்டம் பெற்று, தந்தை பெரியாரைக் கண்டு (சென்னை பொது மருத்துவமனையில் அய்யா  அவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்ற காலை) வணக்கம் செலுத்தி, இன உணர்வாளர் சுயமரியாதை வீரர் செ.தே. நாயகம் அவர்கள் வழிவந்த பேரன் என்பதை  தந்தை பெரியார்அறிந்து எல்லையற்ற மகிழ்ச்சியுடன் இளைஞர் - மருத்துவரை அன்று பாராட்டி வாழ்த்தினார். அருகில் இருந்து அக்காட்சியை - இன்பத்தை நேரில் அனுப வித்தவர்கள் நாங்கள்.
தாம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தேய்வு நோயால் (எயிட்ஸ்) அவதிப்பட்ட நோயாளிகளுக்கு மருந்து மட்டு மின்றி உணவில் கூடுதல் இட்லி, பருப்பு, பால் முதலிய சத்துணவு களையும் அளிக்கும் நடைமுறை இவரது தலைமைக் காலத்தில் செயலுக்கு வர, தமிழக அரசினை வற்புறுத்தி வெற்றி கண்ட மனிதநேயரின் நூல் - இந்த கருத்துக் கருவூலம்.
நாள் ஒன்றுக்கு ஒருவருக்குத் தேவைப்படும் உணவுகள் பற்றியும், சாப்பிடக் கூடாத உணவுகள் பற்றியும் விளக்குவதோடு, நீரிழிவு நோய், காசநோய், புற்று நோய் மற்றும் கடுமையான நோய்களால் (இரத்தக் கொதிப்பு, மூல நோய் முதலியன) பாதிக்கப்பட்டவர்கள் மருந்துகளை எடுத்துக் கொள்வதோடு, எத்தகைய உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்பதையும் பட்டியலிடுகிறது! குழந்தைகள் பெற்ற தாய்மார் களுக்கும், குழந்தைகளுக்கும் தேவைப்படும் சிறப்பு  உணவுகள் பற்றியும் இந்நூல் எடுத்துக் கூறுகிறது!
ஆங்கில மருத்துவ நுணுக்கத்தோடு, சித்த மருத்துவத்தின் சிறப்புக்களையும் உடன் இணைத்து, ஆராயும் நெறியில் தலைப்பட்டு, சில முடிவுகளைக் கண்டறிந்தவர் மருத்துவர் தெய்வநாயகம் அவர்கள்!
"அரிசி எனும் அவிழ்தரு" என்ற தலைப்பில்... ஒரு செய்தி! நூலாசிரியர் மருத்துவர் கூறுகிறார்.
"கலாச்சாரக் கலப்படம், வியர்வை இல்லா உடலுழைப்பு, பெருகி வரும் மனப்பளு, இவற்றால் பெருகி விட்ட நீரிழிவு போன்ற நோய்களால், அதி சர்க்கரை உணவு என அரிசி கருதப்படுவதால் மருத்து வர்களும் அதைக் கொஞ்சம் உணவில் குறைக்கச் சொல்ல, சிலர் அரிசி உடல் நலத்திற்காகதென்றே விலக்கிட ஆரம்பித்தனர். உண்மையில் அரிசி தமிழனுக்கேற்ற தலை சிறந்த உணவு. வெயில் காலம் அதிகமுடைய, உடற் சூட்டை தரக்கூடிய இத்தென் னாட்டிற்கு அரிசியே ஏற்புடைய உணவு!
இப்படிப்பல புதிய, புதுமை விளக்கங்கள் படித்துப் பயன் பெறுக! நூலைப் படியுங்கள்! காலை, மாலை கடும் பகல் எல்லா நேரத்திலும் படிக்கா விட்டாலும் இரவிலாவது படுக்குமுன் நல்ல நூல்களைப் படியுங்கள் - சிந்தியுங்கள் - செயலாற்றுங்கள்!
- விடுதலை நாளேடு, 23.4.19

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

"உங்கள் நாடித் துடிப்பு - இதயத் துடிப்பு அறிவீர்" (2)

"உங்கள் நாடித் துடிப்பு - இதயத் துடிப்பு அறிவீர்" (2) முக்கிய தலைப்பு: டாக்டர் ஏ.எம். கார்த்திகேசன் அவர்கள் பேசிய தலைப்பு. "உங்கள் நாடித்துடிப்பை அறிவீர்



இதயத் துடிப்பில் மாறுபாடுகள்" என்பதாகும்.

மிக அருமையான உரை; சிக்கலான பொருள் - மருத்துவர்கள் சிகிச்சையில் நிபுணர்களாக இருப்ப வர்கள்கூட, மற்றவர்களுக்கு விளங்கும் வகையில் உரைகள் மூலம் விளக்குவது  அவ்வளவு எளிதானதல்ல; அதில் டாக்டர் அவர்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார் இந்த அரங்கத்தில் அவர் விளக்கிய முறை - உரை மூலம்!

வந்திருந்தோர் கேட்போர் நன்றாக உள்வாங்கி, புரிந்துகொள்ளும் வகையில் அமைந்திருந்தது; அவர் படங்களை போட்டு, ஓவியம் வரைந்து விளக்கிய சிறந்த முறை அருமை.

'டாக்டர்' என்றால் teacher (கற்றுத் தருபவர்) என்று பொருள் என்று டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன் அவர்கள் தலைமை உரையில் குறிப்பிட்டது. இவரது உரை மூலம் மிகவும் துல்லியமாக விளங்கியது!

உரையின் முக்கிய சுருக்கிய பகுதிகள் இதோ:

"இந்தியா வெகு விரைவில் உலகின் சர்க்கரை நோயின் தலைமை இடமாகி விடக் கூடிய அபாயம் இருக்கிறது. எனவே இதயத் துடிப்பு - நாடித் துடிப்பு என்றால் சர்க்கரை நோய் - இரத்த அழுத்தம் (B.P) போன்றவைகளில் அலட்சியம் காட்டுவதே இந்த இதயத் நோய் துடிப்புகளில் மாறுபாடுகள் ஏற்படுவதற்கு மூல காரணம் ஆகும்.

இதயத் துடிப்பு என்றால் எல்லோரது மனதில் டாக்டர்களில் பதிய வைத்திருக்கும் ஒன்று 72 துடிப்பு நிமிடத்திற்கு இருக்க வேண்டும். அது கூடினாலும் குறைந்தாலும் உடனே பலர் மிகுந்த கவலை யடைகின்றனர்.

60 முதல் 100 வரை கீழும் மேலும் சென்றாலும் அதுபற்றி உடனே பயம் கொள்ளத் தேவையில்லை. ஏற்றத் தாழ்வுகள் ஏற்ற இறக்கம் பல காரணங்களால் இருக்கலாம் - நரம்புகளில் ஏற்படும் சுருங்கி விரிதல். எனவே நாடித் துடிப்பு -இப்போதே நீங்கள் பார்க்க பழகுங்கள் அல்லது உங்கள் கைத் தொலைபேசியில்  ((Mobile) Pulse Heart Rate Monitor ஒரு App மூலம் பின்னால் விரலை அழுத்தி வைத்தால் தெரிந்து கொள்ளலாம். உடனே பயப்பட்டு விட வேண்டாம்!

1. பல அறிகுறிகள் பற்றி அறிந்து கொள்ள நெஞ்சு படபடப்பு, தலை சுற்றல், மயக்கம் - இவை மூளைக்குச் சரியான இரத்த ஓட்டம் இல்லாததால் ஏற்படும் மாறுதல்கள் ஆகும்.

2. உணர்ச்சி பூர்வ பாதிப்புகள் Emotional Disturbances) வயது காரணம் அல்லது  துக்கச் செய்தி அதிர்ச்சி செய்திகளால்கூட அந்த மயக்கம்.

3. களைப்பு (Fatigue) காரணமாகவும் இருக்கலாம்.

இதயத் துடிப்பு  பல விளையாட்டு வீரர்களுக்கு. 45-50 தான் இருக்கும். அது அவர்களது நரம்பு - விளையாட்டுப் பயிற்சி காரணமாக இருக்கும். அதை கண்டு பயப்படுதல் தேவை இல்லை. அது அவரது விளையாட்டுக் காரணமாகவே அமைந்த ஒன்றாக இருக்கக் கூடும். மயக்கம் வந்தவுடன் பலரும் உடனே நரம்பியல் நிபுணரான டாக்டரிடம் (Neuro) தான் காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். மயக்கம் முதுமை யினால்கூட இருக்கும் - இதயத்திற்கு தேவையான ரத்தம் செல்லாமலும், அசுத்த ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, தூய்மையற்ற இரத்தம் ஒரு புறம் வெளியேற்றப்பட்டு, தூய்மையான இரத்தத்தை உடல் முழுவதும் ஓடச் செய்யும் வேலையை இதயம் இடைவிடாமல் செய்கிறது.

இதை மாற்றிட மருந்து மாத்திரை என்று உடனே செலுத்தி குணப்படுத்தி விட முயலுவதை விட, இதய நோய் சம்பந்தப்பட்டவர்களிடம் காட்டி இதய படபடப்பு அதி வேகத் துடிப்பு இதனையொட்டி கண்டறிய முயற்சிக்க வேண்டும்.

கருவில் வளரும் குழந்தையின் இருதயம்கூட சரியாக இயங்குகிறதா இல்லையா என்பதை  Ultrasonic Scan 
மூலம் - கருவிகள் மூலம் - கண்டறிந்து சரி செய்து, பிறந்த பிறகும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் சரி செய்யலாம். அந்த அளவுக்கு மருத்துவத் தொழில் நுட்பம் இப்போது வளர்ந்து விட்டது.

'பேஸ் மேக்கர்' (Pace Maker) என்ற கருவி மூலம் இதயத் துடிப்புகளை ஒழுங்குபடுத்திட முடியும்; அதைப் பொருத்தி விட்டால், அது இதயத் துடிப்பை ஒழுங்கு படுத்தும் வேலையைச் செய்கிறது. பல காரணங்களால் இதயம் சுருங்கி விரியும், துடிப்புகளில் வேறுபாடுகள் வரக்கூடும். அக்கருவி எப்போது கூடுகிறதோ அதைக் குறைத்து ஒழுங்குபடுத்த, எப்போது குறைகிறதோ அதை போதிய அளவுக்கு ஒழுங்குபடுத்தி Balance மூலமாக ஒழுங்குபடுத்துகிறது.

இதயத் துடிப்புகள் உடலில் உள்ள மின்சக்தியைத் தூண்டி, ஒழுங்குபடுத்தி, இப்பணிகள் நடத்திட கருவிகள் உதவுகின்றன.

AV Nodel Reentrant TachyCardia (AVNRT)  என்பதை சிகிச்சை முறை மூலம் ElectroPhisology என்பதன் மூலம் Radio Freqeuncy (R.F.) சிகிச்சை முறை (Ablation) உடனடியாக இரத்த ஓட்டத்தில் உறைதல் (Clot) ஏற்படாமல் தடுக்கும் பல வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும்.

ரத்தம் உறைந்தால் ரத்த ஓட்டத்தில் (Clot) ஏற்பட்டால் உடனே (stoke) பக்கவாதம் வர வாய்ப்பு உண்டு. அதைத் தடுத்து மேற்கண்ட சிகிச்சை மூலம் சரி செய்துவிட முடியும்.

இதையும் தாண்டி (பேஸ்மேக்கர் கருவியையும் தாண்டி) மேலும் சக்தி வாய்ந்த இன்னொரு கருவி CRT முறைமூலம் இதயத்திற்குள் பொருத்தி, துடிப்பை ஒழுங்குபடுத்தவும் Chips sகளைப் பயன்படுத்தி - நமக்கே - டாக்டர்களுக்கேகூட நோயாளியின் இதயத் துடிப்புக் குறைந்தால் அறிவிக்கும் நிலையும்கூட, இன்று வளர்ந்துள்ளது.

இந்தக் கருவி, வீட்டில் மின்சாரம் நின்றவுடன்  எப்படி இன்வெர்ட்டர் உடனே இயங்கி, வெளிச்சம் தருகிறதோ, மின்சாரம் மீண்டும் வந்துவிட்டால் தானே இயங்காமல் நின்று விடுகிறதோ அது போல் இக்கருவி வேலை செய்யும்" என்று விளக்கினார் டாக்டர் கார்த்திகேசன் - பலரும் புரிந்து கொள்ளும் வகையில்.

இதன் மூலம் இதயத்தில் இதய வலி, மாரடைப்பு வந்தவர்கள், தக்க சிகிச்சை எடுத்துக் கொண்டு நன்றாக வாழவும் வாய்ப்பு உண்டு என்பதை விளக்கிக் கூடியிருந்தவர்கள் பலரின் அய்யங்களை கேள்விகள் மூலம் கேட்டபோதும், எல்லாவற்றையும் தெளிவாக விளக்கினார், சரியாகத் தந்துள்ளார்.

நமது பெரியார் வலைக்காட்சியில் (கணினி மூலம்) திரும்பத் திரும்ப அவர்கள் ஒளிபரப்பும்போது அதைக் கேட்டும், பார்த்தும் கூட்டத்திற்கு வராதவர்கள்கூட பயன் பெறலாம்.

இந்த நிகழ்ச்சி - ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்ச்சியாகும். என்றாலும் வருமுன்னர் காக்கும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரு முறை முழு உடற்பரிசோதனை செய்து கொள்ளுவதில் யாரும் அலட்சியம் காட்டாமல், முறையாக செய்தால் நல வாழ்வு பெறலாம்.

'நோயற்ற வாழ்வு தானே குறைவற்ற செல்வம்' - அதனைச் சேமிக்க அனைவரும் முயற்சிப்பது நல்லது.

(நாளையும் தொடரும்)

- விடுதலை நாளேடு 17. 8. 18

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

"உங்கள் நாடித் துடிப்பு - இதயத் துடிப்பு அறிவீர்" (1)



பெரியார் மெடிக்கல்மிஷன் என்ற அமைப்பினை, ஓய்வு பெற்ற பல் மருத்துவர் டாக்டர் இரா. கவுதமன், ஓய்வு பெற்ற மருத்துவ நலத்துறை இணை இயக்குநர் டாக்டர் பிறைநுதல்செல்வி மற்றும் பல மருத்துவர்கள் பெரியார் மருத்துவ சேவை அணியுடன் இணைந்தும், பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக் கழக கிராமப்புற வளர்ச்சித் துறையின்கீழ் இயங்கும் "புரா" கிராமங்களிலும் நல்ல மருத்துவ முகாம்களும், மகளிருக்குப் புற்று நோய் ஆய்வுப் பரிசோதனை களையும், திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி - திருச்சி ஹர்ஷமித்ரா புற்று நோய் தடுப்புமனையின் டாக்டர்கள் க. கோவிந்தராஜ், சசிபிரியா கோவிந்தராஜ் அவர்களுடன் இணைந்தும் மாநிலம் தழுவிய முகாம்களையும், தொண்டறத்தையும் மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

பெரியார் உடல் உறுப்புக் கொடைக் கழகம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப் பெற்று, குருதிக்கொடை, விழிக்கொடை  மற்றும் இறந்தபின் உடலை மருத்துவக் கல்லூரிகளுக்கே அளித்த 'செத்தும் சாகாத' மனிதநேயர்களாக பகுத்தறிவாளர்கள் பலரும் வாழ்ந்து காட்டுகிறார்கள் என்பதை, விளம்பரங்கள் அதிகம் செய்யாமலேயே தன்னடக்கத்துடன் தகை சான்ற இந்த ஈகையைச் செய்து வருகின்றனர்.

சென்னை பெரியார் திடலில், 'வருமுன்னர் காப்பதே உண்மையான உடல் நலப் பாதுகாப்பின் தலை சிறந்த முறை' என்பதை மனதிற் கொண்டு, பிரபலமான பல்துறை டாக்டர்களை அவ்வப்போது அழைத்து, நலவாழ்வின் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு உடல் உறுப்புகளில் சிறந்த அனுபவமும், ஆராய்ச்சிப் பட்டமும் பெற்று பணிபுரியும் அல்லது பணி ஒய்வு பெற்றும் மருத்துவ சிகிச்சையில் மேலோங்கியுள்ள மருத்துவ அறிஞர்களின் விளக்கவுரை, தெளிவுரை களுக்கு ஏற்பாடு  செய்து எளிய பாமர மக்கள் தொடங்கி, நல்ல பெரும் பதவி, நற்கல்வி பெற்றோர் வரை அனைவரும் கேட்டுப் பயன் பெறும் வண்ணம் பல சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்து (3-4 மாத இடைவெளிகளில்) வருகிறார்கள் பெரியார் மெடிக்கல் மிஷன், தமிழ்நாடு முதறிஞர் குழு, பெரியார் நூலக வாசகர் வட்டத்துப் பெரு மக்கள் குழு ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்


பேரறி வாளன் திரு.           (குறள் 215)


இதன் பொருள்: மக்களால் விரும்பப்படும் பேரறி வாளன் செல்வமானது மக்கள் விரும்பும் ஊரின் குடிநீர் கிணறு நிறைந்தது போலாகும்.

- இதில் 'செல்வம்' என்பதை வெறும் பணத்தோடு மட்டும் என்ற பொருள் கொள்ளுவதைவிட அறிவுச் செல்வம், கல்விச் செல்வம், ஆற்றல் - தலைமைச் செல்வம் என்பதையும் இணைத்து விரிவாக்கிக் கொள்ளல் வேண்டும். அது - 'அறிவை விரிவு செய்' - 'அகண்டமாக்கு

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை' என புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் அறிவுரையை செயலாக்கிக் காட்டுவதாகும் எனலாம். தாகம் எடுத்தவர் களுக்கு தரும் தண்ணீர் பந்தல் போல இப்பணிகள் நடப்பதும், பலரும் அதில் பங்கேற்று மனிதநேயத் தொண்டறம் புரிதலும் மிகவும் போற்றத்தக்க ஒன்றல்லவா?

நேற்று (15.8.2018) மாலை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் பெரியார் மெடிக்கல் மிஷன் நடத்திய நலவாழ்வுச் சிறப்புச் சொற் பொழிவினை, பிரபல இதய நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் ஏ.எம். கார்த்திகேசன் MBBS, MD, DNB (Gen), DNB [Card), FHRS, Fellowship in Electrophysiology, Certified Electrophysiology Specialist [IBHRE, USA), Certified Cardiac Device Specialist (IBHRE, USA]   அவர்கள் மிக அருமையாக  நிகழ்த்தினார்.

அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையின் இதய நோய் நிபுணர் ஆவார்!

அரங்கம் நிரம்பி, பக்கத்து ஹாலிலும் T.V. Screen ஏற்பாடு செய்யப்பட்டு பலர் அங்கிருந்தே பார்த்து கேட்டு மகிழும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்ததும், கணினி மூலம் விளக்கப் படங்கள், அவரே வகுப்பறைகளில் விளக்குவது போல வெள்ளைப் பலகையில் வரைபடங்களாக இதயத்தைப் போட்டு, அதில், இதயத் துடிப்பை எப்படியெல்லாம் சரி செய்து நலவாழ்வு வாழலாம் என்ற விளக்கவுரையினை வந்திருந்த அனைத்து தரப்பும், படித்த பட்டதாரிகள் மருத்துவர்கள், மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள், இல்லறவாசிகள், மகளிர், முதியோர், இதய நோய் தாக்கி, சிகிச்சை பெற்று மீண்டோர், அறிவார்ந்த முதியவர்கள், ஓய்வு பெற்ற அறிஞர்கள் முதல் ஒரு பொதுமை நிறைந்த மக்கள்  (A Good Group Section & Society)  கொண்டதாக இருந்த அனைத்து தரப்பினர் அறிவார்ந்த விளக்கவுரையினை அள்ளிப் பருகிப் பயன் அடைந்தனர்.

ஆடிட்டர் ஆர். இராமச்சந்திரன், இணைப்புரை நிகழ்த்திய தோழர் வீ. குமரேசன், துவங்கி, தலைமை யேற்ற மூத்த புகழ் பெற்ற டாக்டர் எம்.எஸ். ராமச்சந்திரன், முன்னிலையேற்ற மூதறிஞர் குழத் தலைவர் டாக்டர் ஜஸ்டீஸ் ஏ.கே. ராஜன், பேராசிரியரும் முன்னாள் நேஷனல் மெடிக்கல் போர்டு தலைவருமான டாக்டர் ஏ. ராஜசேகரன் நன்றி உரையாற்றிய, தோழர் இரா. பரஞ்சோதி, ஆகிய அனைவரும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்த அரிய உரைகளை நிகழ்த்தினர்.

இறுதியில் சில வார்த்தைகளைச் சொல்ல எனக்கும் வாய்ப்புத் தந்தார்கள்.

என்னைப் பொறுத்தவரை அறிவுரை கேட்டு மகிழ்ந்த - மற்ற நண்பர்களைப் போல - கற்றலின் கேட்டலே நன்று - மிகு பயன் தருவது என்பதாக அமைந்திருந்தது - மகிழ்ச்சியைத் தந்தது!

சரியாக 6 மணிக்குத் துவங்கி - கேள்வி பதில் விளக்கம் எல்லாவற்றையும் உள்ளடக்கி சரியாக இரவு 8 மணிக்கெல்லாம் முடிவடைந்து, மன நிறைவுடன் வந்தோர் அனைவரும் திரும்பினர்.

(மேலும் வரும்)
- விடுதலை நாளேடு, 16.8.18

செவ்வாய், 6 மார்ச், 2018

சிறுநீரகப் பாதுகாப்பான 6 கட்டளைகள்!



நமது உடலின் ஒவ்வொரு உறுப்பும் தக்க முறையில் பாதுகாக்கப் பட வேண்டியதே.  என்றாலும் அடிப் படையானது இருதயம்; (Heart) தான் ஓய்வெடுக்காமல், உறங்காமல் சலிப் பின்றி தனது கடமையைச் செய்யும் முக்கிய உடல் உறுப்பு அது!

அதுபோலவே மூளையும் முக்கியம். அதன் செயலாக்கம்தான் நமது வாழ்வை பொருள் உள்ள (பணமல்ல - அர்த்த முள்ள வாழ்வு) வாழ்வாக ஆக்கிட உதவும். அது செத்துப்போனால் நாம் வாழ்வது பயனற்ற வாழ்க்கை அல்லவா? அதனால் மூளைச் சாவு ஏற்பட்ட வர்களின் உடல் உறுப்புக் கொடைமூலம், பலரையும் வாழ வைக்கும் அருமையான தொண்டறம் நடை பெறுகிறது. வாழு, வாழ விடு என்பதை சற்று மாற்றி, 'வாழு, முடியாவிட்டால் பிறர் வாழ வகை செய்ய நீ உதவிடு' என்பதற்காகவே இந்த உடல் உறுப்புக் கொடை. என்பது பரந்து விரிந்த மனிதநேயம்! இல்லையா?

கல்லீரல், கணையம் என்பதுடன் சிறுநீரகம் (Kidney) என்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்து பாதுகாத்தால் தான் நமது உடல் நலம், கவலைகள் அற்றதாக இருக்க முடியும்.

நமது சிறுநீரகம் (Kidney)) அதுவும் சலிப்பின்றி பணி செய்து நம்மை வாழ வைக்கிறது. இரண்டில் ஒன்று பழுதானால்கூட மற்றொன்று அதன் கடமையைத் தவறாமல் செய்து நமது ஆயுளை வளர்க்க உதவுகிறது.

ஆனால் நம்மில் பலர் அதனை சரிவர கடமையாற்ற விடாமல் நமது தவறான பழக்க வழக்கங்களால் செய்து விடுகிறோம். எப்படிப்பட்ட கவலையும், கவனமும் சிறுநீரகத் நோய்த் தொல்லையிலிருந்து நாம் நம்மைக் காத்துக் கொள்ள முடியும் என்பதுபற்றி, நமது மருத்துவ நண்பர் அனுப்பிய ஒரு செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நமக்கு ஒரு தனி மகிழ்ச்சியே!

1. அதிகமாக மது அருந்துவோர் தங்களது சிறுநீரகம் கெடுவதற்கு விதை தூவி, உரம் போட்டு வருகிறார்கள். அது சிறுநீரகத்தை பாதிக்கிறது. குடிகாரர்கள்கூட (ஒரு தடவை) அளவுடன் குடித்தால் அது பெரிய அளவில் பாதிப்பதில்லை! மொடாக் குடியர்கள் என்றால் கல்லீரல் முதல் சிறுநீரகம் வரை நிச்சயம் பாதிக்கவே செய்யும் என்பது ஓர் எச்சரிக்கையாகும்.

2. நமது நாட்டில் வழங்கப்படும் எளிய பழமொழி ஒன்று உண்டு.

'ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம் மூத்திரத்தை அடக்கக் கூடாது' என்பதே சரியான அறி வுரை. அவ்வப்போது மூத்திரப் பையை (Bladder) 
காலி செய்யத் தயங்கக் கூடாது. இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியவர்கள் சர்க்கரை நோய் உள்ளவர்கள்.

சிறுநீர் வெளியேற்றப்படாமல் அடக்கி அடக்கி வைத்தால் அதனால் மூத்திரப் பையில் கற்கள் உருவாகி, பிறகு அது பெரும் வலியைத் தந்து உயிர்க் கொல்லி யாகவும்கூட சிற்சில நேரங்களில் ஆகும் ஆபத்தை உண்டாக்கி விடக் கூடும். எனவே சிறுநீரை அடக்கா தீர்கள்!

வயது முதிர்ந்தவர்கள் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  இளைஞர்கள் கூச்சப்பட்டோ, சோம்பல் காரணமாக சிறுநீர் கழிப்பதைத் தள்ளி போட்டால், சிறுநீரகக் கற்களை அவர்களே உற்பத்திக் கான ஆயத்தம் செய்கிறார்கள் என்று பொருள்.

3. தேவைப்படும் அளவு தண்ணீர் குடிப்பது அவசியம் ஆகும்.

போதிய தண்ணீர் குடிக்காவிட்டால் அதன் விளைவு நமது உறுப்புகள் செயலற்றுப் போக இந்தத் தண்ணீர் இன்மை (Dehydrate) காரணமாகிவிடும்!

நீரின்றி அமையாது உடம்பு என்று கவனமாக இருந்து அவ்வப்போது நீர் அருந்தினால் தான் நமது உடலின் கழிவுப் பொருள்கள் வெளியேற அது உதவி செய்யக் கடமை ஆற்றிடும், அதற்குப் போதுமான நீர் இல்லா விட்டால், அந்த சிறுநீரகம், - எண்ணெய் போடாத என்ஜின்  துருப்பிடிப்பதைபோல, இதுவும் கெட்டுப் போய் தட்டுத் தடுமாறிடும் நிலை ஏற்பட்டு டாக்சின் (Toxin)  என்ற விஷப் பொருள் உடம்பில் உற்பத்தியாகும். எனவே, போதிய  நீர் குடிப்பது மிகவும் தேவையாகும்.

4. உணவில் அதிக உப்பு ரொம்பவும் தப்பு - புரிந்து செயல்படுங்கள். சிறுநீரக பரிசோதனையில் உப்பு (Sodium) எவ்வளவு என்பதுபற்றியும் கிரியாட்டின் (Creatinine) 
அளவு சோதனை போலவே கவனிப்பார்கள். அதிக உப்பு, சிறுநீரகங்களை செயலிழக்கச் செய்ய முக்கிய காரணியாகச் செயல்படும். எனவே உடலில் உப்புச்சத்து குறைந்து விடவும் கூடாது; கூடியும் விடக் கூடாது என்பதில் விழிப்புடன் இருங்கள்.

உப்புச் சத்து அதிகம் உள்ள ஊறுகாய், கருவாடு இவைகளை அதிகம் எடுப்பவர்கள் கவனமாக இருங்கள்.

(ஊறுகாய்ப் பிரியனான நான் அதை குறைத்து வருகிறேன் - பிறகு நிறுத்தியும் விடுவேன்)

5. அளவுக்கு அதிகமாக ஒரு நாளில் பல முறை காப்பி (Coffee) 
) குடித்துக் கொண்டே இருந்தால் அது சிறு நீரகத்தை பாதிப்பது நிச்சயம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே!

எனவே அளவோடு, ஒன்று, இரண்டு முறையோடு காப்பியை நிறுத்திக் கொள்க.

6. தூக்கமின்மை: உணவு, விளையாட்டு, உடற்பயிற்சி இவையெல்லாம் நமது உடல் நலம் பேண எவ்வளவு முக்கியமோ அதுபோல தூக்கம் என்பதும் முக்கியமாகும்! குறிப்பிட்டநேரம் தூங்குவது எழுவது உடல் கடிகாரத் தினை ஒழுங்குபடுத்துவதோடு, நமது உடல்  நலத்தையும் பாதுகாக்கப் பயன்படும்!

தூக்கமின்மை என்பது பல நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது!

அண்மையில் படித்த ஒரு வாக்கியம் - பிடித்த சொற்களும்கூட!

"பகலில் தூங்கினால் அது உடல் சோர்வைக் குறிக்கிறது. இரவில் தூக்கம் வராமல் இருந்தால் அது மனச் சோர்வை - மன உளைச்சலைக் குறிக்கிறது என்று அது எவ்வளவு சரியான உண்மை!

வயது முதிந்தவர்களுக்குக்கூட குறைந்தது 8 மணி நேரம் அல்லது 7 மணி நேரம் தூக்கம் அவசியம் என்கிறார்கள் தூக்கம் பற்றி ஆய்வு செய்த அறிஞர்கள்.

எனவே, தூங்குவது அவசியம். குறிப்பாக இரவு 12 மணி முதல் விடியற்காலை 4 மணி வரை உள்ள நேரத்தில் கண் விழித்திருப்பதை தவிர்த்து தூங்கினால் அது உடல் நலப் பாதுகாப்புக்கு பொதுவாக நல்லது என்பது மருத்துவ ஆய்வியல் கூற்றாகும்.

எனவே இந்த ஆறு கட்டளைகளை தவறாது ஏற்று வாழக் கற்றுக் கொண்டு, சிறுநீரகம் சீராக இயங்க உதவி, நோயற்ற வாழ்வைப் பெறுவோமாக.

- விடுதலை நாளேடு, 6.3.18