"உலக மகளிர் நாளாக" மார்ச் 8ஆம் தேதியை உலகம் முழுவதும் கொண்டாடு கிறார்கள்- வரவேற்கத்தக்கது.
அதுபோது, அவர்களது பெருமைகள், உரிமைகளைப் பற்றியும் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்துவது பாராட்டத்தக்கதுதான்.
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற எளிய மூதுரையினுள்ளே உள்ள ஆழ்ந்த கருத்தினை எத்துணை மகளிர் செயல்படுத்துகின்றனர் என்ற தன்னாய்வினை மகளிர் தோழர்களும், சகோதரிகளும் செய்து கொள்வது மிக மிகத் தேவை.
அவர்கள் தாயாக இருந்து தங்களது பிள்ளைகளின் உடல் நலத்தில் செலுத்தும் அக்கறை, துணைவியாக இருந்து தங்களது துணைவர் உடல் நலம் பற்றிக் காட்டும் ஆர்வம், அது போல - கூட்டுக் குடும்பமாக இருப்பின் - தங்களது மூத்த உறுப்பினர்களின் நலவாழ்வு பற்றி எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் - உதவிகள் சிறப்பானவைதான்.
ஆனால், குடும்பத்தில் உழைத்துக் கொண்டே இருக்கும் மகளிர், தாய்மார்கள், சகோதரிகள் தங்கள் நலத்தில் போதிய அக்கறை காட்டுவதில்லை; என்றோ ஒரு நாள் நோயின் உக்கிரம் அதிகமான பிறகு - தவிர்க்க முடியாத அளவுக்கு வலி, மற்ற உபாதைகள் அதிகமான பின்பே மருத்துவரை நாடிச் செல்வது சிகிச்சை பெறுவது என்பதுதான் நடைமுறையில் நாம் காணும் அன்றாட வாடிக்கை பல குடும்பங்களில்.
ஆண் வர்க்கம்கூட சுரண்டும் முதலாளி போல் மகளிரின் உழைப்பைப் பயன்படுத்திக் கொள்ளுவதில் காட்டும் ஆர்வத்தை அவர்களது நலத்தில் அக்கறையோடு காட்ட ஏனோ தவறி விடுகிறார்கள்!
பெண்களைப் படிக்க வைத்து, வேலைக்கு அனுப்பியதையெல்லாம் 'புரட்சி' என்று ஒரு பக்கம் சொன்னாலும், அதன் மறு பக்கத்தில் உள்ள கசப்பான உண்மையை ஆண் வர்க்கம் ஆகிய நாம் கவனிக்க ஏனோ வசதியாக மறந்து விடுகிறோம்!
படித்த பெண்களுக்கு குடும்பப் பொறுப் புகள் குறிப்பாக சமையல், வீட்டினைப் பாதுகாத்தல் என்று கூடுதல் பொறுப்பு, அவர்கள் முதுகில் ஏற்றப்பட்டு கூடுதலாக அவர்கள் தூக்கி சுமந்தாக வேண்டிய எக்ஸ்ட்ராலக்கேஜ் (Extra Luggage) ஆக அல்லவா இருக்கிறது!
வீட்டில் உள்ள ஆண்கள் துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல், உழைத்து அறுவடை செய்து நெல் மூட்டைகளை கொண்டு வந்து அடுக்கும் விவரக் கணக்குப் போடும் கேள்வி கேட்கும் மிராசுதாரர் மாதிரி தானே!
சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து நாம் உப்பு சற்று குறைந்தாலும் முகம் சுளித்து, அவர்களை நோக்கி சுடு சொல் வீசுகிறோம். அவர்களது கடும் உழைப்பும், கூடுதல் சுமையும் பற்றி ஆண் வர்க்கம் எண்ணுவது இல்லை என்பதைவிட, குறை கூறி முகஞ் சிவக்க வைத்து மனத்தை நோகடிக்காமலாவது இருக்கிறோமா? இல்லையே! (இதில் சில விலக்குகள் இருக்கலாம்; ஆனால் விலக்குகள் ஒரு போதும் விதியாகி விடாதே)
'House Wife' என்ற வார்த்தைத் தகுதி பெற்ற படிக்காத - வேலைக்குப் போகாத மகளிர், இதில் படித்தவர்கள் வேலைக்குப் போகும் மகளிரைவிட சற்று வாய்ப்பானவர்களே!
அடிமையாக இருப்பதற்கு அந்த வாய்ப்பு - கொடுக்கப்படாத கூலி போன்றதுதான். கரோனா காலத்தில் ஊர் அடங்கல், வீட்டில் முடங்கல் காலத்தில் சில ஆண்கள் சமையல் நளபாக நாயகர்களாகியுள்ளனர் என்பதும் விலக்குகள் போன்றதேயாகும்?
இது எளிதில் தீராதப் பிரச்சினை - தந்தை பெரியார் - சோவியத் யூனியனின் உதாரணத்திற்கு ஏற்றபடி பொது சமையல் - அந்தந்த பகுதிக்குள் என்றால் - அப்படி ஒரு ஏற்பாடு பேட்டைக்குப்பேட்டை வரும் நிலை உண்மை சமதர்ம ஆட்சியில் ஏற்பட்டால் உழைப்பு, பொருள், எல்லாம் மிச்சமாகும்!
ஆனால் பழைய ஏற்பாட்டிலிருந்து வெளியே வந்தால் மட்டுமே அது முடியும்!
இவற்றை சமமாக்குவது ஒருபுறம் இருந்தாலும், பன்னாட்டு மகளிர் நாளுக்கு அடுத்த நாளேகூட "உலக மகளிர் நல ஆய்வு நாள்" என்ற ஒன்றை அறிவித்து, அன்றிலிருந்து ஒரு வாரம், இரு வாரம் மகளிர் உடற்பரிசோதனை செய்து நலவாழ்வை உறுதி செய்யும் ஏற்பாட்டை நிகழ்த்தலாம்.
மற்றவர் செய்வதைவிட - திராவிட மாடல் ஆட்சி இதற்கு வழிகாட்டலாம்! யோசியுங்கள்.
(தொடரும்)
மகளிரே, மருத்துவத்தை மறக்கலாமா? (2)
மகளிர் மருத்துவப் பரிசோதனைகளை ஆண்டிற்கு ஒரு முறையோ, இரு முறையோ - வயதுக்கும், உடல் நலத்திற்கும் ஏற்ப செய்து கொள்ள தவறாது முன் வர வேண்டும்.
'எஜமான' ஆண்கள் அதற்கு "தடையில்லா சான்றிதழ்" (NOC) வழங்கவில்லையே என்று கவலைப்படாதீர்கள். உங்கள் நோய்க்கு நீங்கள்தானே மருந்து சாப்பிடவேண்டும். உங்கள் வீட்டுக்காரரா சாப்பிட முடியும் - அவர் எவ்வளவுதான் இணை பிரியாதவராக இருந் தாலும்கூட!
பட்டுப்புடவை முதல் புதுப்புது துணிகளை வாங்குவதில் நீங்கள் காட்டும் ஆர்வம் - புதிய திரைப்படங்களுக்கு முந்திக் கொண்டு செல்ல நீங்கள் உங்கள் குடும்பத்தவரையோ, அல்லது உங்கள் நட்பு வட்டத் தோழர்களையோ அழைத்துச் செல்லத் தயங்குவதில்லையே! அதே போன்று விதவிதமான சமையல் 'நளபாகங்களை' செய்யக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை, உங்கள் உடல் நலத்தைப் பேணுவதில் காட்ட ஏனோ தயங்கித் தயங்கித் தள்ளிப் போடுகிறீர்கள்.
மற்ற நாட்டுப் பெண்கள்- குறிப்பாக மேலை நாட்டு மகளிர் தங்களது உடலில் நோய் குறிகள் தென்பட்டால், கொஞ்சம்கூடத் தயங்காது மருத்துவர்களிடம் சென்று, ஆலோசனை பெறத் தயங்குவதே இல்லை. அதனால் முளையிலேயே விளையும் நோயைக் கண்டறிந்து, குணப்படுத்தி தங்களைக் காத்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.
நோய்களிலேயே மிகவும் கொடிய நோய் என்று மக்களை அச்சுறுத்தும் நோய்- புற்று நோயாகும். அதுபற்றி நான் விளம்பரம் ஒன்றைப் படித்துக் கொண்டே பயணம் செய்கிறேன்.
"புற்று நோய் தீர்க்கப்பட முடியாத நோய் அல்ல" (தொற்று நோய் அல்ல என்பது பலருக்கும் தெரிந்ததே) அதில் தாமதம் என்பதுதான் ஆபத் தானது என்று கருத்துப் பட வாசகங்கள் எழுதப்பட்டு மக்களுக்கு அறிவுறுத்துகிறார்கள்.
பல சகோதரிகளும் தாய்மார்களும் குளிக்கும் போது உடலை நன்றாக பரிசோதனை செய்து - உடல் முழுவதையும் அழுக்குப் போக குளிப்பதில், அழுத்தி உடலைத் தேய்ப்பது போல் குளிப்பார்கள் - அப்போது உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் உடனே எங்களை அணுகி அதுபற்றி பரிசோதனை செய்து கொள்ளத் தயங்காதீர்கள் என்று புற்றுநோய் சிகிச்சை மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
நம் மகளிரில் பலர் பரிசோதனைகளுக்குத் தயங்குவதோடு, தனக்கு ஏற்படும் சந்தேகத்தை மருத்துவ ரீதியாகப் போக்கிக் கொள்ளாமல் மனதிற்குள் போட்டு - நோயைத் தீர்க்காமல் தள்ளிப்போட்டு - கடும் விலை தருவது எவ்வளவு ஆபத்தானது? புரிந்து கொள்க.
தங்களுக்கு மிகவும் நெருங்கியவர்களிடம்கூட இதை மறைப்பது, கருத்தைப் பகிர்ந்து பேசத் தயங்கி உள்ளுக்குள்ளேயே வருந்தி கடைசியில் உறைந்து போவது தேவைதானா?
இன்றைய கால கட்டத்தில் நோய்கள் பல ரூபங்களில் வந்து கொண்டே இருப்பது உண்மை தான்; ஆனால் சிகிச்சைகளும் அறிவியல் அற் புதங்களாக புதிது புதிதாக வந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதை மறந்து விடலாமா?
நல்ல மருத்துவ வசதிகள் கிராம அளவில்கூட வந்து விட்டன. அதுவும் இன்றைய ஆட்சியில் வீடு தேடி மருத்துவம், வருமுன்னர் காக்கும் மருத்துவம் எல்லாம் வந்து உங்கள் கதவுகளைத் தட்டுகின்றன.
இவற்றைக்கூட நன்கு பயன்படுத்திக் கொண்டு நலமுடன் வாழ வேண்டாமா?
இறுதியாக ஒன்று; உங்கள் மனம்தான் உடல் நலத்திற்கு முழு முதற் காரணம். மனதை தூய்மையுடன் வைத்துக் கொள்ளும்(Healthy mind is Essential for healthy body) ஆரோக்கிய மான மனமே, ஆரோக்கியமான உடலுக்கு மிகவும் இன்றியமையாதது!
உங்களது உறுதி - உடனடியாக உடல் நலப் பாதுகாப்புக்கு ஓடோடி மருத்துவம் பார்த்துக் கொள்வதில் உங்களுக்கு மட்டுமா நிம்மதி? குடும்பத்தாருக்கும் கூடத்தானே!
எனவே சுயநலம் கலந்த பொதுநலம் தங்க ளுக்கு அருமையான கூட்டாக அமைந்துள்ளது என்பதை மறவாதீர்!
அலட்சியப்படுத்தாமல் உடல் நலப் பாதுகாப் பில் ஆர்வம் காட்டுங்கள் - சகோதரிகளே, தாய்மார்களே, இளையர்களே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக