தொடர்ந்த சுற்றுப் பயணங்களில் - வழமையான கடமைகளைத் தாண்டி, நேரத்தை- வாழ்வியல் எழுத எண்ணி ஒதுக்கிடும் நேரத்தை - கண்டு பிடிப்பது பெரிய சவாலாக அமைந்து விடுகிறது!
தூக்கத்தைக் குறைத்தால் எழுத முடிய வில்லையே என்ற இந்த ஏக்கத்திலிருந்து விடு படலாம் என்றுகூட இப்போது படித்த - 'தோழர் பாலன்' என்று பலராலும் பாசத்தோடு அழைக்கப் படும் தோழர் கே.பாலதண்டாயுதம் அவர்களது சிறை வாசக் குறிப்புகள் தொகுப் பான "சிறையில் துளிர்த்த சிந்தனை அரும்புகள்"நூலைப் படித்தேன்.
இந்த நூலை சுற்றுப்பயணத்தில் எஸ்மா. ஏ.ஆர்.எஸ். என்ற ஆசிரியைத் தோழர் (ஆலாம் பாளையம் அந்தியூர் வட்டம் - ஈரோடு மாவட்டம்) அளித்தார்.
ஒப்பற்ற கொள்கை வீரனான தோழர் கே. பாலதண்டாயுதம் எதையும் மறைக்காமல் பேசும் பண்புள்ளவர் என்பதை அவர் சென்னையில் இருக்கும்போது சில நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று பழகியபோது நேரில் கண்டு வியந்து மகிழ்ந்துள்ளேன்!
அவரது தியாக வாழ்க்கை, கொண்ட கொள்கை லட்சியங்களுக்காகவே தனது வாலிபத்தை சிறைக் கொட்டடியில் கழித்தும், மேலும் உறுதியான எஃகு உள்ளத்தோடு விடுதலை அடைந்து வெளியே வந்த போதும் - மாபெரும் லட்சியப் பீரங்கியாக வாழ்ந்து - எதிர்பாராத மரணத்தால் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டவர்!
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1938இல் போராட்டம் நடத்திய மாணவத் தலைவர் என்று பிரபலமானவர் அவர்.
55 வயது வரை மட்டுமே வாழ்ந்த அவரது வாழ்க்கை, விமான விபத்தால் முடிவுற்ற சோகத்தின் அதிர்ச்சி, இன்று நினைத்தாலும் வேதனையின் வெளிப்பாடுதான்!
பதவிச் சண்டை என்ற மலிந்த அரசியல் சந்தைக் கூச்சல்கள் நிறைந்த பொது வாழ்வுச் சூழலில், தனது வாழ்வையே கொள்கை உலைக் களத்தில் வார்த்தெடுக்கப்பட்ட ஓர் லட்சியப் போர்க் கருவியாக்கி வாழ்ந்தவரின், சிறை வாழ்வுச் சிந்தனைகள் சுருக்க கேப்சூல்களாக இருந்தாலும், அறிவின் வெளிச்சமாக தகத்தாய ஒளி வீச்சாக உள்ளது.
இந்த புத்தகத்தினை வாசிப்பதைவிட கற்க வேண்டியது முக்கியம் - பொது வாழ்வில் உள்ளோ ருக்கு - என்ற பாடம் இந்நூலைப் படித்தவுடன் நமக்குக் கிடைக்கிறது!
தோழர் ப.பா. ரமணி தொகுத்த இந்த நூல் ஒரு சிறந்த சிறை இலக்கியமாகும்.
அரிய தொகுப்பு - ஓர் அருமையான சிந்தனை முத்துக் கோர்வை இது!
ஒரு பகுதி முன்பு தனி நூல்- இதில் புதிய இணைப்பும் தாங்கி, வெளியீட்டாளர்களான 'இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் (ISCUF) கோவை', 'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோவை' ஆகியவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
அந்த சிந்தனை அரும்புகளின் அழகுக்கும் - அறிவுக்கும் சில இதோ:
"19.02.1958, புதன்கிழமை
நாளையுடன் ரேடியோவிற்கு எழுதி ஒரு மாத காலமாகிறது; ஞாபகப்படுத்தி எழுத வேண்டும்.
மன உறுதியை பலப்படுத்த புதிது புதிதான வாதங்கள் தேவை என்று கூறப்படுகிறது. எனக்கு அவை தினசரி வந்து குவிந்த வண்ணமிருக்கின்றன.
சிறு தோணியில் உலகத்தைச் சுற்றிய கேப்டன் ஜான்வாசும் ஒரு மனிதன்தான்; சகாராவில் டஸ்ஸிலி மலையில் 16 மாத காலம் சித்திர வேலை களைப் படம் பிடித்த ஹென்றி லேயுட்டும் மனிதன் தான்; கியூரி தம்பதிகள் ரேடியம் கண்டுபிடிப்ப தற்காகப் பட்டபாடு (சினிமாவில் நான் பார்த்து பிரமித்தேன்) மனிதர்கள் பட்ட பாடுதானே; கிறித்துவ மதத்தைப் பரப்ப வந்த ராபின்சன் தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்தான் என்று பார்க்கும் பொழுது, எல்லாவற்றிக்கும் உயர்ந்த லட்சியத்தைக் கொண்ட நான், ஜென்ம தண்டனை பெற்று இருக்கும் பொழுது அவர்களைக் காட்டிலும் எத்துணை எத்துணை மடங்கு அதிக ஈடுபாட்டுடன், உழைப்புடன் விளங்க வேண்டும். இது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம்.
இன்னுமொரு கருத்தும் இதை பலப்படுத்திற்று. "வலியைத் தாங்குவது யுத்த வெற்றிக்குச் சமம்" என்று கார்க்கி கூறுகிறார். உடலைக் கிழிக்கிறோம்; அதனால் மனிதனைச் சுற்றிலும் மரக்க வைத்து ஆபரேஷன் செய்யும் பொழுது, கிழிக்கும் சப்தம் கூட கேட்கிறது. உடம்பை ஒன்றும் செய்வதில்லை. மரக்க வைக்காவிடில் அல்லது மயக்க மருந்து கொடுக்காவிடில் பொறுக்க முடியாத வேதனை ஏற்படுகிறது; இது உணர்ச்சி சம்பந்தப்பட்டது. வேதனையை சகித்துப் பழகிவிட்டால், உணர்ச்சியும் மரத்துப் போய்விடுகிறது.
வேதனையைப் பொறுக்க விரும்பாத நாமே உயிருக்கும், உடலுக்கும் தீமையான காரியங்களை இன்பத்திற்காகச் செய்கிறோம்.
இது மடமை என்பது தெளிவு. இதில் இன் னொன்றும் இருக்கிறது. வேதனையைச் சகிக்கப் பழகப் பழக உயர்ந்த மட்டத்தில், உயர் தரத்தில், நிலையான இன்பம் பெறுகிறோம்.
அளவு கடந்த உழைப்புச் சக்தியைச் செல விட்டவர்களே சமுதாயத்திற்குப் பெரும்பங்கு செலுத்துகின்றனர். நைட்ரஸ் ஆக்சைடு கண்டு பிடித்த பிரீஸ்ட்லி ஆனாலும் சரி, போர்முனையில் வெற்றி கண்ட சுபகோவ் ஆனாலும் சரி, சளைக்காமல் உழைத்தனர்; ஆகவே சளைக்காமல் உழைக்கக் கற்றுக் கொண்டால் அது மிகப் பெரிய சாதனை. அதற்குக் கொட்ட வேண்டிய கண்ணீரையும், செந்நீரையும் தங்கு தடையின்றி கொட்ட வேண்டும்; நிற்க.
ஹைட்ரஜன் குண்டின் பயங்கரத் தன்மையைப் பற்றி எவ்வளவோ எண்ணங்கள் உதித்தன; ஆனால் மக்கள் மனதில் என்ன பிரதிபலிப்பு ஏற்பட் டிருக்கிறது என்பதைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. அதி அற்புதமான விஞ்ஞான சாதனை மக்கள் மனதில் மூட நம்பிக்கையைத்தான் ஏற்படுத்தியிருக் கிறது; கடந்தகால மூடக்கருத்துக்களுக்கு புதிய ஊக்கம் கிடைத்திருக்கிறது. உதாரணம், பிரளயம் வரும் என்று சொன்னது சரியாகப் போயிற்று என்பார்கள் இந்தியாவில்.
இரண்டாவது அம்சம், "மனித ஜாதி அழியாது" என்ற குருட்டு நம்பிக்கைதான் இது வரையிலிருந்தது. ஆனால், சமூக வளர்ச்சியை வரலாற்று ரீதியில் பார்க்கும் பொழுது விசேஷ தன்னம்பிக்கை ஏற்படுகிறது; நெருப்பை மனிதன் கண்டுபிடித்தது மனித நாகரிக வளர்ச்சியில் எவ்வளவு, புரட்சி கரமான மாறுதலை உண்டாக்கிற்று. 'பிரோமோ தியஸ்' போன்ற காவியங்கள் செய்யப்பட்டன. அன்று "இது நல்லதுக்கு அல்ல, நெருப்பிலேயே மனிதன் அழியப் போகிறான்” என்று பலர் எண்ணியிருப்பார்கள். காலதேச வர்த்தமானப்படி, அணுசக்தி கண்டுபிடிப்பு இன்றைய நிலைக்கு அத்தகையது ஒன்றுதான்.
சிங்காரவேலு, சூர்யநாராயண ராஜூ, ஆறுமுகம், பொன்னு இவர்களை நினைந்து விட்டால் எதுவும் நிகரில்லை துணிச்சல் பிறக்கிறது.
புதுக்கோட்டை வாழ்க்கையை வெறுக்கத் தூண்டுகிறது.
என் கண்ணில் பாரதிக்கும், கார்க்கிக்கும் ஏதோ ஒப்புமை - என்னவென்று சுட்டிச் சொல்ல முடியவில்லை. தோற்றத்தில் பொன்னுவுக்கும், ஆஸ்ட்ரோவ்ஸ்கிக்கும் ஏதோ ஒரு ஒப்புமை என் மனதில் பட்டுக் கொண்டேயிருக்கிறது. எஸ்.ஆர்.கே.யுக்கும், பி.ஆர்.க்கும் இருப்பதைப் போல. துல்ஜாவுக்கும் பயில்வான் அருணாசலத்திற்கும், உத்தாண்டிக்கும் இருப்பது போல, மழுங்கின உணர்ச்சிகள்தான் என் மனதில் ஏற்படுகிறதே யல்லாமல் திட்டவட்டமான, தீர்க்கமான, குணாதி சயங்கள், அம்சங்கள் என் மனதில் பதியவில்லை. ஆகவே, இப்பொழுது பொன்னுவைப் பற்றி எழுதப் புகுந்தால் மூடுபனியைப் பார்ப்பது போல தெரிகிறது.
இனி பேனாவும் கையும்தான்; கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து, உயிர்ப்பித்து அவற்றை அழியாது பொக்கிஷமாக்க வேண்டும்.
இனி என் கண்ணில் பட்டது, காதில் கேட்டது பேனாவிற்குத் தப்பக்கூடாது. தப்பாது, உறுதி இது!
தினசரி பத்திரிகையினை குறிப்புடன் படிப்பதில் காலதாமதமாகி, பாக்கி விழுந்து விடுகிறது. ஒன்று கருத்தூன்றி வாசிப்பதில்லை; படிக்கும்பொழுது, முக்கியமானதைக் குறிக்கும் பயிற்சி இல்லை. மற்ற, நேரங்கால மாற்றத்துடன் படிக்கும் முறையிலும் மாற்றம் தேவை"
(நாளை வரும்)
சிறைச்சாலையில் தண்டனை அடைந்தவர்கள் அதற்காக வருந்தி வாடிக் கொண்டிருக்காமல் - கிரிமினல் குற்றவாளிகளைக் கூறவில்லை; (அவர்களிலும் கூட பலர் தங்களது அவசரப் புத்தி காரணமாகவோ அல்லது அடக்க முடியாத அறிவற்ற அசாத்திய கோபம் காரணமாகவோ தாங்கள் அதீதமாக நடந்து கொண்டு இன்று தண்டனையை அனுபவிப்பது பற்றி வருந்தியும், அதன் பிறகு திருந்தியும் வாழும் மனிதர்கள் பலரைப் பாராட்ட வேண்டும்).
அரசியல் காரணங்களுக்காக, கொண்ட கொள்கை லட்சியங் களுக்காக சிறைத் தண்ட னையை, கொள்கைக்குத் தர வேண்டிய கொள் முதல் விலையாகவே எண்ணி மகிழ்வுடன் ஏற்று வாழும் சிறை வாழ்வின்போது, சோம்பலை விரட்டி, சுறுசுறுப்புடன் சிந்தனை, செயலாக்கம், உடலும், உள்ளமும் நல்ல பயிற்சிகளோடுகூடிய கட்டுப்பாடு, வளர்ச்சி என்று - ஆனால் சிறைச்சாலை உண்மையாகவே அவர்களுக்கு "மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை"யாகவே திகழுவது உண்மை - இதற்குச் சரியான எடுத்துக்காட்டுதான் 'தோழர் பாலன்' என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்ட தோழர் கே. பாலதண்டாயுதத்தின் இந்த அரிய இலக்கியம் ஆகும்.
இலக்கு + இயம் = இலக்கியம் என்பதை ஏற்றால், இவரது கொள்கையான கம்யூனிச சித்தாந்த நடைமுறையே இவரது இலக்கு - அதற்கான கடுமையான போராட்ட வாழ்வை நடத்துவதே அவரது பாராட்டத்தக்க இந்தப் பங்களிப்பு ஆகும்!
படிக்க வேண்டும்; சிந்தித்தவற்றை தொகுக்க வேண்டும் என்ற திடசித்தத்துடன் அந்த தீரன் முடிவெடுத்த பின்னும், அவர் தொடர்ந்து தனது கருத்துகளை அன்றாடம் பதிவு செய்யத் தவற வில்லை!
இதோ மற்றொரு நாள் குறிப்பு:
23.08.1958, சனிக்கிழமை
“படிக்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். ஓயாமல் படிக்க வேண்டும்” என்ற கார்க்கியின் கருத்து இன்று என் மனதில் திடீரென்று பளிச்சிட்டது. இதற்கு இணையாக அவ்வைப்பாட்டி, “ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்” என்றாள். இந்த சிறந்த கருத்து எனக்குப் புதிதல்ல. ஆனால் சோம்பல் மோகினி இக்கருத்தையும் தன்வயப் படுத்தி விட்டாள். நாள் முழுதும் என்னால் படித்துக் கொண்டிருக்க முடியும், யாந்திரீகமாக. படித்து முடிந்ததும் என்ன படித்தாய் என்று கேட்டால் ஒன்றும் தெரியாது.
இதற்குப் பரிகாரம் கேட்டால், படிப்பதற்கெல்லாம் குறிப்பு எடுப்பது. குறிப்பு எடுத்து தான் படிப்பது. இதற்கு இரண்டு தடங்கல்கள். 1) மெத்தையில் சாய்ந்து கொண்டு குறிப்பு எடுக்க முடியாது. ஏனெனில் அதுதான் சுலபமாகத் தூக்கத்தில் வழுக்கி விழுவதற்கு மிக மிக வசதியான ஏற்பாடு 2) குறிப்பு எடுக்க அதிக நேரம் பிடிக்கிறது. இதற்கு முறையான பதில் என்னவாயிருக்க முடியும், படுக்கும் பொழுதுதான் மெத்தையில் சாய வேண்டும்; குறிப்பு எடுக்கும் பழக்கத்தைப் பெற முடியும். அப்படியானால் முடிவு தெளிவு; 1) படுக்கும் பொழுது தான் படுக்கை 2) அனைத்துக்கும் குறிப்பு 3) முடிவுகள் நடைமுறைக்கு.
வெளி உலகத்திலிருந்து தகவல் இல்லாமல் இருப்பது உற்சாகக் குறைவுக்குக் காரணமாயி ருக்கிறது. மாதம் நெடுகிலும் வெளித்தகவல் வந்து கொண்டிருக்க வழி செய்வது எப்படி ? அடுத்த மாதம் முடியாது. ஏனெனில் 1-ஆம் தேதி இந்த மாதம் வந்து குவிந்திருக்கும் கடிதங்கள் கொடுக்கப் படும். பின் அம்மாதக் கடைசிவரையில் பின் கடிதங்கள் இல்லை. இதைத் திருத்த வேண்டுமானால் இம்மாதக் கடிதங்களை இழக்கத் தயாராக வேண்டும். தியாகங்களின்றி எதையும் திட்டப்படி சாதிக்க முடியாது.
செர்வாண்டிஸ் அசகாய சூரன்; டான்குய்க் ஸாட்டுக்கு இணை குய்க்ஸாட்டுத்தான். அந்தக் காலத்தில் சின்னஞ்சிறு ஸ்பெயினில் இத்தகைய மாபெரும் அமர இலக்கிய சிருஷ்டிகர்த்தா இருந்தான் என்பது வியப்பைத் தருகிறது.
மனித சுபாவத்தை அப்படியே நமக்குப் படம் பிடித்துக் கொடுத்து விட்டார். அவ்வளவு பெரிய நவீனம். எங்கும் தங்கு தடையின்றி ஓடுகிறது. சரித்திரத்தின் திருப்பத்தைச் சுட்டுகிறது. மார்க்ஸ், செர்வாண்டிசை தலைசிறந்த Romantistஆக பால்சாக்குடன் இணைத்துக் கூறியது முற்றிலும் பொருந்தும்.
சிறைதான் சோம்பலின் உறைவிடம்; சோம் பலைப் போல் மனிதனுக்கு வேறு விபத்தே கிடையாது, எனலாம். எல்லா விஷயங்களிலும் அது ஊடுருவிப் பாய்ந்து உருக்குலைத்து விடுகிறது. எனக்கு சமீப காலத்தில் எழுந்துள்ள புதிய சபலங்கள் எல்லாம் சோம்பல் பிறப்பிப்பவை. ஆதலின் ஒவ்வொன்றிலும் சோம்பலின் கைத் திறனை துருவித் துருவி ஆராய்ந்து அறிந்து களைந்தெறிய வேண்டும். அதுவே, பழைமை யிலிருந்து முறித்துக் கொள்வதாகும். அடுத்தபடி ஏறுவதாகும்."
'அடுத்தபடி ஏறுவது' என்று அவர் குறித்ததைப் படித்தபோது, ஒரு சிந்தனை என்னுள் பளிச்சிட்டது! அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
"படிக்கட்டுகள் உயரே செல்வதற்குத்தானே ஒழிய - உட்கார்ந்து ஓய்வெடுப்பதற்கல்லவே" என்பதே அது!
எவர் படிக்கட்டில் கால் வைத்து உயரே செல்ல முனைகிறார்களோ அவர்கள் வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் ஆகிறார்கள். உட்கார்ந்து ஓய்வெ டுக்க முனைவோர் தாங்களும் உயராது, படிக் கட்டின் பயனையும் பாழடிக்கிறார்கள் - இல்லையா?
(நாளையும் வரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக