நாம் நாள்தோறும் பல வகையான நூல்களைப் படித்துப் பயன் பெறுகிறோம்; மற்றவர்களுக்கும் பயனுறு வகையில் அந்த 'புத்தக நுகர்வு' - புத்தாக்கத்தை நம்முள் ஏற்படுத்துகிறது!
ஆனால் ஆசிரியர் வேலு அவர்கள் அண்மையில் எழுதி வெளியிட்ட ஒரு சிறப்பான ஆய்வு - வரலாறு - சமூக, பொருளியல், புவியியல் என்பது போன்ற பல்வேறு கோணங்களில், தான் பிறந்த மண்ணான நெடுவாசல் கிராமம் பற்றிய ஓர் 'கிராம சமுதாய வரலாறு' நூல் நமது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இதுவே முதல் போல் தோன்றுகிறது!
"நெடுவாசல்- கிராம சமுதாய வரலாறு" என்ற தலைப்பில் தான் எழுதிய அரிய நூலை கடந்த 25.6.2022 அன்று மதுரையில் என்னிடம் நேரில் அளித்து மகிழ்ந்தார்;
பல்வேறு பணிச்சுமை அழுத்தங்கள் இடையிலும் எனது 'இளைப்பாறுதல்' (Relaxation) புத்தக வாசிப்பு என்ற சுவாசிப்புக்கு அடுத்த பணியாகும்.
எனது வேனில் பயணம் செய்யும்போதும், காரில் அலுவலகம் செல்லும் போதும்கூட எழுதிக் கொண்டே செல்லும் பழக்கம் எனக்கு வழக்கம் ஆகி விட்டது; அதுபோலவே படிப்பதற்குப் பயணங்களில் கிடைக்கும் 'சந்திப்புக்கள்' என்ற 'அன்புத் தொல்லை' இல்லாத வாய்ப்புக்கிட்டும் என்பதால் பல நூல்களை ரயிலில் செல்லும்போதும் சரி, வேனில் போகும்போதும் சரி படித்துக் கொண்டே செல்லும் பழக்கமும் உடையவன்.
ஆசிரியர் வேலு, கடும் உழைப்புக்குப் பின்னர் உருவாக்கிய இந்த அரிய கிராம சமுதாய வரலாற்று நூலைப் படிக்கத் துவங்கி வியந்து படித்து மகிழ்ந்தேன்;
ஒரு ஆசிரியர் அதுவும் ஒரு இடைநிலை ஆசிரியராக பல்வேறு மாணவச் செல்வங்களை பகுத்தறிவுச் செல்வங்களாக மாற்றி வாழ்வில் அவர்களை உயர்த்திவிட கல்வி ஏணியான இந்த ஆசிரியர் அவர்தம் கிராம சமுதாய வரலாற்றினை எழுதிட உறுதி எடுத்துக் கொண்டு எழுதி முடித்துப் புத்தகமாக்கித் தந்துள்ளதை நினைக்கும்போது, ஆற்றலும், அறிவும், திறமையும் ஒவ்வொருவருள்ளும் எப்படியெல்லாம் ஒளிந்து வெளியே வர வாய்ப்புக்கிட்டும்போது அறிவு ஊற்றாக, அனுபவப் பாடமாகத் தழைக்கிறது என்பதற்கு இந்நூல் தக்கதொரு சான்றாகும். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய ஊரான நெடுவாசல் பற்றிய வரலாற்று நூலில் இவர் திரட்டித் தரும் தகவல்கள் - பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி. என்ற 'டாக்டர்' பட்டத் தலைப்புக்குரிய கருத்தாக்கம் அடங்கியதோர் அரிய தகவல் தொகுப்பு ஆய்வுக் களஞ்சியமாக, கருவூலமாகத் திகழ்கிறது!
100 வயது தாண்டிய ஊர்ப் பெரியவர் முதல் பல்துறை சான்றோர்கள், பல்வேறு நூல்கள் தரும் தகவல் திரட்டுகள் - இப்படி பலப்பல முயற்சிகளையும் சளைக்காது, சலிக்காது செய்து சரித்திரம் படைத்துள்ளார்!
பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் என்ற அளவில் அவரைப் பலகாலம் அறிவோம்; ஆனால் அவர் ஒரு ஆய்வாளர், கருத்தாளர், வெறும் அறப்போராளி மட்டுமல்ல என்று அகிலத்திற்கு அவரது அபாரத் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த நூல்.
423 பக்கங்கள். சான்றாவணங்களின் தொகுப்பு - சுவையானதாகவே உள்ளது. படித்தேன், சுவைத்தேன், மலைத்தேன்!
பல பல்கலைக் கழகப் பேராசிரியப் பெரு மக்கள் மட்டுமே இப்படிப்பட்ட ஆய்வுகளை நடத்தி, பெரிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆய்வுப் பட்டமான டாக்டர் முனைவர் பட்டத் திற்கெனத் தர முடியும் என்ற 'மாயை'யை இந்த எளிய, பள்ளி ஆசிரியர் உடைத்து உயர்ந்து நிற்கிறார்!
இன்னும் முழுமையாக முடிக்கவில்லை. பகுத் தறிவாளர்; இடதுசாரி சிந்தனையாளர் என்றாலும் கிராம வரலாற்றுக் குறிப்பில் எதனையும் அவர் மறைக்காமல் ஜாதி, திருவிழாக்கள் முதலிய பலவற்றையும்கூட கிராமத்தோடு ஒட்டியவை என்ற முறையில் தருவதில் தயக்கம் காட்ட வில்லை - நெடுவாசலை - நடு வாசலில் நின்று சுட்டிடத் தவறவில்லை.
"எங்கள் கிராம மக்கள் வாழ்ந்த கடந்த கால வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ளச் சில சான்றாதாரங்கள் உள்ளன. அவை மவுனத் தொல் சாட்சியங்களாக விளங்குகின்றன; அவற்றைக் கொண்டு எங்கள் கிராம சமுதாய வரலாற்றை எழுதத் துணிந்தேன்.
மவுனத் தொல் சாட்சியங்கள் பின்வருமாறு:
1. தாய் வழிச் சமூகம்
2. தந்தை வழிச் சமூகம்
3. முதுமக்கள் தாழிகள்
4. தேவாரப் பாடல் பெற்ற சிவாலயம்
5. அரண்மனைத் தோப்பு
6. அம்பலப்புளி"
படியுங்கள், பயன் பெறுங்கள்.
பரிசு பெற வேண்டிய அரிய தமிழ் நூல் இது! நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளை வழங்குவதோடு - உழைத்த ஆசிரியருக்கு வாழ்த்துகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக