அமெரிக்காவில், இலியனாய் மாநிலத்தில் (சிகாகோ உள்ள மாநிலம்) பிரபல கல்வி வள்ளல்களில் ஒருவரும், மிகச் சிறந்த கொடையாளியுமான 104 வயது வரை வாழ்ந்தவர் டாக்டர் அர்னால்ட் பெக்மென் என்பவர். கருமான் என்ற கொல்லுப் பட்டறைத் தொழிலில் மிக எளிமையாகத் தன் வாழ்வைத் தொடங்கியவர்.
தெளிந்த சிந்தனை, தீர்க்கமான முடிவு, கடும் உழைப்பு - இவைகளாலும் அவரது கண்டு பிடிப்புகள் மூலம் தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்சாண்டர் பெல் - ஆகியோர் வரிசையில் வைத்து மிக உயர்வான அறிவியல் தொழில் நுட்ப மேதைகளில் ஒருவராக இன்றும் கருதப்படுகிறார்!
இலியனாய் மாநிலத்தில் சிறிய விவசாயப் பண்ணை ஒன்றைத் துவக்கினார். அதில் பல கருவிகளை தனது நுண்ணறிவின் திறத்தால் கண்டுபிடித்து, உலகம் பயன்படுத்திக் கொள்ளுமாறு செய்து புகழும் பொருளும் சம்பாதித்தார்!
ரசாயன அறிவியலில் பி.எச்.மீட்டர் என்ற ஒரு கருவியைப் பயன்படுத்திட Analytical chemistry -க்கு பெரிதும் உதவிடும் வாய்ப்பான கருவியை கண்ட றிந்து, ஏராளமான விருதுகளை அக்கண்டுபிடிப்பு களுக்காகப் பெற்றார்!
இவரது தொழில் திறமை, அறிவியல் தொழில் நுட்பச் சாதனைகளைத் தாண்டி, இவரது புகழ் நிலைத்த புகழாக வரலாற்றில் நிற்பதற்கு மற்றொரு மிக முக்கிய காரணம் இவர் ஒரு தலை சிறந்த கொடை வள்ளல் என்பதனால் ஆகும்!
டாக்டர் பெக்மென் அவர்களது தனித்த, படைப்பாற்றல், அறிவியல் நுண்மாண் நுழைபுலம் இவரது வாழ்வை வளப்படுத்தினால் மட்டும் போதாது: தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு, குடும்பம் என்ற சின்ன கடுகு உள்ளத்தை விரட்டிவிட்டே தொல்லுலக மக்கள் எல்லாம் எம்மால் பயன்பெற்று வாழ பணி செய்வதே தனது கடன் என்று எண்ணி, 1977-இல் இவர் சுமார் 40 கோடி டாலர்களை ஒதுக்கி தனது வாழ் விணையர் மேபல் என்ற அம்மையாரும் இணைந்த அர்னால்ட் அண்ட் மேபல் பெக்மேன் பவுண்டேஷன் என்ற ஒரு பொது அறக்கட்டளைத் துவக்கினார்.
இலியனாய் பல்கலைக் கழகத்திற்கு 4 கோடி டாலர் நன்கொடை அளித்து மிக பிரம்மாண்டமான 3,13,000 ச.அடி உள்ள மாபெரும் கட்டடம் ஒன்றை கட்டிடக் கொடுத்து, உலகம் முழுவதிலும் இருந்து ஆராய்ச்சி யாளர்கள் வந்து ஒன்றுக்கொன்று தொடர்புடைய அறிவியல் (Inter-disciplinary research) ஆராய்ச்சி நடைபெற உதவியுள்ளார்!
ஈதல் இசை பட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு! (குறள் - 231)
ஊதியம் இல்லை உயிர்க்கு! (குறள் - 231)
என்ற குறளுக்கேற்ப அவரது வாழ்க்கை அமைந்து விட்டது! நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதால் பெருமை வராது;
நாம் எவ்வளவு புகழ், பெருமைக்குரிய அறிவாளியாய் உயர்ந்துள்ளோம் என்பதாலும் உண்மையான சிறப்பு வராது; மாறாக, நாம் உலகத்திற்கும் சமுதாயத் தொண்டறத்திற்காகவும் எவ்வளவு உதவினோம் என்பதைப் பொறுத்ததே நிலைத்த புகழும் பெருமையும்!
அத்தகைய மாமனிதர்தம் வாழ்க்கையில் அவர் கையாண்டு உயர்ந்தமைக்குக் காரணமாக அமைந் தவை அவரால் கூறப்பட்ட ஏழு விதிகள்!
அத்தகைய மாமனிதர்தம் வாழ்க்கையில் அவர் கையாண்டு உயர்ந்தமைக்குக் காரணமாக அமைந் தவை அவரால் கூறப்பட்ட ஏழு விதிகள்!
நம்மைப் பொறுத்தவரை நமக்கு அவை ஏழிசைகளாகவே இன்பத்தைப் பாய்ச்சுகின்றன!
பெக்மேன் அவர்கள் கூறுகிறார்:
1. எந்தக் கால கட்டத்திலும் நேர்மையையே(integrity) கடைப்பிடித்து ஒழுகுதல்.
2. எந்தப் பணியை எடுத்துக் கொண்டு செய்தா லும், அரை மனதோடு அதில் ஈடுபடாமல், முழு விருப்பத்தோடு செய்யவே பழக வேண்டும்.
எதில் முழுதாய் ஈடுபட முடியாதோ அதை ஏற்காமல் வெளியேறிட வேண்டும்.
விருப்பத்துடன் உள்ளே அல்லது விருப்ப மில்லா விட்டால் வெளியே என்பதே தம் கொள்கையாக இருக்க வேண்டும்.
3. பிறருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய எதையும் செய்யாமல் இருப்பது முக்கியம்.
4. எந்தக் காரியத்தைச் செய்தாலும் பின்னால் அதனால் பிறகு அவமானம் ஏற்படக் கூடிய எதனையும் செய்ய முனையவே கூடாது.
5. எதையும் மிக நேர்த்தியுடன் (Excellence) (மற்றவர் மிக மிக விரும்புவதே நேர்த்தி) அதற்கு வேறு மாற்று கிடையவே கிடையாது!
6. எதிலும் தன்னடக்கமும் நிதானமும் கடைப் பிடித்தல் மிக நன்று.
(சிற்சில நேரங்களில் இது சற்று கூடுதல் ஆனாலும் பரவாயில்லை)
(சிற்சில நேரங்களில் இது சற்று கூடுதல் ஆனாலும் பரவாயில்லை)
7. உங்களை நீங்கள் எப்போதும் பெரிய ஆளாக எண்ணி இறுமாறாதீர்கள்!
இப்படி இந்த ஏழு இசைகளை இசைத்த இந்தப் பெருமகனாரின் படத்துடன் அக்கட்டடத்தில் அவரது வாழ்வு : பிறப்பு: 10.4.1900 மறைவு: 18.5.2004 என்று செதுக்கப்பட்டுள்ளது.
இவைகளை நாமும் பின்பற்றலாமே!
(சிகாகோவிலிருந்து இதை அனுப்பிய திருமதி அருள்பாலுவுக்கு என் நன்றி!)
- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
-விடுதலை,20.3.15