மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள நம்ப முடியாத வளர்ச்சி மனித ஆயுளைப் பெருக்கும் மிகப் பெரிய உதவியைச் செய்கிறது மனித குலத்துக்கு!
மருத்துவ அறிவும், கணினி தொழில் நுட்பமும் இணைந்து செய்து வரும் அமைதிப் புரட்சி மிகவும் வியக்கத்தக்கதாக இருக்கிறது!
முன்பெல்லாம் அறுவை சிகிச்சை என்றால் பெரும் அளவுக்கு நம் உடலில் உள்ள ரத்தம் வெளியேறுவது தவிர்க்க இயலாததாகயிருந்தது. ஆனால், இப்போதோ, டிஜிட்டல் (கணினி) புரட்சி மூலம் - லேசர் என்ற ஒளிக் கற்றைத் தொழில் நுட்பம் மூலமும் எந்தப் பகுதியில் அறுவை சிகிச்சை தேவையோ, அதனைத் துல்லியமாய்க் கண்டறிந்து, அந்தப் புள்ளியையே அடையாளம் வைத்து மார்க் செய்து கொண்டு, அதனை நோக்கி அறுவை சிகிச்சை நடத்துகின்றனர், அறுவை சிகிச்சையாளர்களான மருத்துவர்கள். இதில் சிந்தும் ரத்தம் - முந்தைய நாட் களின் அளவோடு ஒப்பிட்டுப் பார்த் தால் வெகு வெகுக் குறைவு என்றே சொல்ல வேண்டும்! அது மட்டுமா? இங்கு அறுவை சிகிச்சை மேசைமீது நோயாளியைக் கிடத்தி வெளி நாடுகளில் உள்ள பிரிட்டன் - அமெரிக்காவின் பிரபல மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு, இங்கே அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக வீடியோ காட்சி உதவி யோடு - செய்து முடிக்கிறார்கள்!
இன்று வந்துள்ள ஒரு மகிழத்தக்க மனிதநேயச் செய்தி.
கடந்த இரண்டு மூன்று நாள்களுக்கு முன் திருச்சியில் நடைபெற்ற சாலை விபத்தில் விபத்துக்குள்ளானவர் திருச்சி காவேரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு பரிசோதனை செய்யப்பட்டார்; மூளைச் சாவு நிகழ்ந்துள்ளது என்பதை மருத்துவர்கள் கூறினர். இறந்தவரின் மனைவி, குழந்தைகள் - எல்லோரும் இவரது உடல் உறுப்புகளை மற்றவர்களுக் குப் பயன்படும் வகையில் கொடையாக அளிக்க விரும்பி ஒப்புதல் தந்தனர்!
மேற்கு வங்க மாநிலம் சிலுகுரி பகுதியிலிருந்து 56 வயதுள்ள நரேஷ் சர்மா என்ற நோயாளிக்கு கல்லீரல் கெட்டுப் போய் மதுரை அப்போலோ மருத்துவமனையில் வந்து கல்லீரல் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார்!
இவரது உடலில் கல்லீரல் மாற்று சிகிச்சை நடத்த முடிவு செய்தால் ஒழிய இவர் பிழைக்க வாய்ப்பில்லை என்று அப்போலோ மருத்துவர்கள் கருதி - அதற்கான ஏற்பாட்டை செய்த நிலையில், திருச்சியிலிருந்து கல்லீரல் (Liver) உறுப்புக் கொடை அந்த நோயாளிக்குக் கிடைத்தது!
அந்நாள் அவரது வாழ்வின் பொன் னாள். திருச்சி காவேரி மருத்துவமனையில் இந்த நோயாளியின் கல்லீரல் (Organ Harvesting) உறுப்புக்கள் அறுவடை தொடங்கியது!
காலை 5 மணிக்கு அவரது கல்லீரல் உறுப்பு எடுக்கப்பட்டு, உடனடியாக திருச்சி மருத்துவமனையிலிருந்து 90 நிமிடங்களில் காவல்துறையினரின், சாலை ஒத்துழைப்போடும் ஒருங்கிணைப் போடும் மதுரைக்குக் கொண்டு செல்லப் பட்டு காலை 9.45 மணிக்கு அறுவைச் சிகிச்சை தொடங்கி பிற்பகல் 3.30 மணிக்கு முடிந்தது!
இந்த கல்லீரல் மாற்று உறுப்பு பொருத்தப்பட்ட மேற்கு வங்க சர்மாவை தமிழ்நாடு காப்பாற்றியுள்ளது!
இறந்தவர்களின் உறுப்புகள் எப்படி பயன்பட்டுள்ளன பார்த்தீர்களா? - செத்தவர் வாழுகிறார்!
இதில் உறுப்புக் கொடை வள்ளல் களும், மருத்துவர்களும், காவல்துறை யினரும் - அனைவரும் நம் பாராட்டுக் குரியவர்கள் ஆவார்கள்!
எல்லாவற்றையும் விட இதில் பொதிந்துள்ள மற்ற சில முக்கிய அம் சங்களும் - மனிதநேயக் குறிப்புகளும் சுட்டிக் காட்டப்பட வேண்டியவை களாகும்!
மேற்குவங்கமும் தமிழ்நாடும் - மனிதநேயத்தினால் ஒன்றாகி உள்ளது!
ஜாதி, மதம், மாநிலம் - எந்தப் பேதங்களும் குறுக்கிடவில்லையே!
கவுரவக் கொலை காட்டு மனி தர்கள் இதனைக் கண்ட பிறகாவது புத்தி பெறுவார்களா?
மனிதம் வெல்லட்டும்! காட்டுமிராண்டி மனப்பான்மை செல்லட்டும்!
-விடுதலை,24.10.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக