பக்கங்கள்

இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 அக்டோபர், 2021

மனமது செம்மையானால்...!

 

'அகம் - புறம்' என்ற சொற்றொடர்கள் தமிழில் எவ்வளவு அழகான சொற்கள்!

அழகான சொற்கள் மாத்திரமா? ஆழமான, அகலமான, பொருள் பொதிந்த சொற்களும் ஆகும்!

தமிழ் இலக்கியத்தில் சங்ககால இலக்கியங் களில் அகநானூறு, புறநானூறு என்று புலவர்கள் பாடிய பாடல்களைத் தொகுத்த நிலையில், அழி யாப் புகழ் பெற்றவைகளாக - செம்மொழியான எம் மொழியாம் எம் தமிழ்மொழிக்கு அணி சேர்க்கின்றவைகளாக  உருவாக்கப்படுகின்றன. (இதிலேகூட ஊடுருவல், பண்பாட்டுப் படை யெடுப்புக்கு முந்தியவை, பிந்தியவை என்று இனம் பிரித்து உண்மைகளை உணர வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழ் ஆர்வலர்களுக்கும் உண்டு)

அறிஞர் அண்ணாவுடன் கவிஞர் கண்ண தாசன் அவர்கள் மகிழுந்தில் பயணிக்கிறார்: அப்போது கவிஞர் அறிஞரைப் பார்த்துக் கேட்கிறார்!

"என்ன அண்ணா? அகநானூறுக்கும் புற நானூறுக்கும் உள்ள வேறுபாடு பற்றி எப்படி எளிமையாகச் சொல்வது" என்று.

அண்ணா சிரித்துக் கொண்டே அமைதியாக பதிலளிக்கிறார்:

'புறம்', மற்ற பலருடன் பகிர்ந்து கொள்வது.

'அகம்' மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள முடியாதது என்று!

இதை நாமும் பலமுறை கேட்டிருந்தாலும்கூட 'அகத்தை' அகநானூறு பாட்டுகள் காதல் சுவைபற்றிய பாட்டுகள் என்று பிரித்தும், 'புறம்' என்பதை வீரத்தை விளக்கும் பாட்டுகள் என்று பிரித்தும் புரிந்து கொள்ளுகிறோம்.

ஆனால் மனித வாழ்வில் அதை இன்னும் ஆழங்கால் பதித்து ஆராய்வோம் எனில், அது வெளியில் உள்ள ஒரு மனிதனின் தோற்றம், நடை, உடை, பாவனை, சொல், செயல்கள் எல்லாவற்றையும் பற்றியது புறம் என்றும் பிரித்துப் பொருள் காணலாம்!

'அகம்' என்பது அவனுடைய உள்ளம், மனம் மட்டுமல்ல ஆழ் மனம் - அடி மன ஓட்டம் - இவைகளை உள்ளே வைத்திருப்பது.

"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" - எளிமையான பழமொழிதான்;  அதனை ஆழ்ந்துப் படித்து அசை போட்டுச் சிந்தித்தால் - உளவியல் படி ஒரு மனிதன் என்னதான் தன் மன நிலையை மறைத்தாலும்கூட, அவனது முகம் அதனை மறைத்துக் கொள்வதற்கு முழு வாய்ப்புத் தரவே தராது என்பதே அந்தப் பழமொழியின் முழுப் பொருள் ஆகும்.

முகம் காட்டிக் கொடுத்துவிடும்; முகத்துக்கு நேரே மனிதர்களைப் புகழ்வதைக் கேட்டு மயங்காதவர்களும், மகிழாதவர்களும் எத்தனை விழுக்காடு இருப்பர்?

'முகமன்' (Flattery) - (Cajolery) - ஆங்கிலத்தில் என்பதுகூட தமிழ்ச் சொல்லின் பளிச்சென்று 'முகமன்' என்ற சொல் பொருள் உணர்த்துவது போல இல்லை; இருக்காது! 'அகநக நட்பு' என்பதே உயர்ந்த நட்பு, அது பற்பல நேரங்களில் வெளிப்படுத்தாமல்கூட (Fixed Deposit) வங்கியில் செய்த முதலீடுபோல மனிதர்களின் நட்பு புகழில் உயர்ந்தோர் மாட்டு இருப்பது உண்டு.

"உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர்

உறவு கலவாதிருத்தல் வேண்டும்'

என்றார் வடலூர் வள்ளலார் பெருமான்! இதன்படி மனித சமூகத்தில் உண்மையான நண்பர்களையோ, உறவுகளையோ, கண்டறிந்து அவ்வளவு எளிதாக பழக முடிகிறதா?

மணமக்களை 'உற்ற நண்பர்களாக வாழுங்கள்' என்று வாழ்த்துவார் தந்தை பெரியார்!

'ஒரு மனதாயினர் தோழி

இத்திருமண மக்கள் நன்கு வாழி!' என்ற புரட்சிக் கவிஞர் இரண்டு மனங்கள் இணைவதே உண்மை மகிழ்ச்சிக்குரிய இணையேற்பு என்று இலக்கணம் கூறி, களங்கமற்ற - கபடமற்ற ஒரே மனம் படைத்து வாழுவதே சிறந்த சீரிய வாழ்க்கை என்றார்!

உள்ளும் புறமும் ஒத்த வாழ்வே உயர்ந்த வாழ்வு என்பதையும், பூஜை புனஸ்கார மந்திரங்களால் அதனை அடைய முடியாது என்பதால்தான் அருமையான இரண்டு வரி கவிதையின் மூலம் சித்தர்கள் பாடியுள்ளனர்.

"மனமது செம்மையானால்

மந்திரம் ஜெபிக்க வேண்டாம்!"

எனவே, மனமும் (அகமும்) நடத்தையும் (புறம்) ஒன்றினால் உயர்ந்த வாழ்க்கை - சிறந்த வாழ்க்கை.

அக்கிரகாரத்து அதிசய மனிதர் வ.ரா.வின் கேள்விக் கணைகள்

 

"பெண்ணை இந்த தேசத் திலே  மனித ஜென்மம் கொண்ட வளாகவே கருதவில்லை. அவள் ஆண் பிள்ளையின் சொத் தாகத்தான் பாவிக்கப்பட்டு வந்திருக்கிறாள்.

ஓர் அரசன், தன் மனைவி யையே, விலைக்கு விற்றான். இன்னொருவன், தன் மகனுக்குப் பேசிய பெண்ணைத் தானே மணந்து கொண்டான்;  ஒரு பேர் வழி, தன் தகப்பன் கட்டளைக் கிணங்கி தாயைக் கொன்றான். ஓர் அரசன் நாட்டியம் ஆடிய பெண்ணின் மேலே மோகம் கொண்டு, அவளை பட்டமகிஷி ஸ்தானத்தில் வைத்து, பட்ட மகிஷியைத் துரத்தி விட்டான்.

ஒருவன் எத்தனையோ தாரங்களை மணந்து கொண்டான். ஒருவன் தன் மனைவியின் கற்பைச் சோதிக்க எண்ணி, அவளைத் தீயில் குதித்து எழு என்று கட்டளை இட்டான். அரசன் எவ்வழி - குடிகள் அவ்வழி! பெண்ணின் கதியைப் பற்றி என்ன சொல்வது?"

***

"பெண்ணைத் தேவதாசியாக்கினார்கள். பெண்ணுக்கு நேர்ந்த அவமானங்களுக்குள், இதைக் காட்டிலும் பயங்கரமானதும், கேவலமான தும் வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த ஆபாசமான வழக்கத்தைச் சிலர் சாஸ்திர மேற் கோள்களுடன் ஆதரிப்பதை பார்க்கும் பொழுது, அவர்களை அப்படியே சித்திரவதை செய்யலாம் போல - அவ்வளவு ஆத்திரம் உண்டாகின்றது. பெண்களை இதைக் காட்டிலும் கொடுமையாகக் கேவலப்படுத்த முடியுமா?"

"அக்கிரகாரத்து அதிசய மனிதர்" என்று அறிஞர் அண்ணாவால் வர்ணிக்கப் பட்ட வ.ரா. என்ற

வ.இராமசாமி அய்யங்கார் என்ற முற்போக்கு எழுத் தாளர் 1945இல் அதாவது சுமார் 76 ஆண்டுகளுக்கு முன் எழுதிய 'கோதைத்தீவு' புதினத்தில் மேற்காட்டிய கருத்துகளை தனது பாத் திரங்கள் வாயிலாகப் பேச வைத்தவர்.

தந்தை பெரியார், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் போன்ற பெருமக்களை அக்காலத் திலேயே அடையாளம் கண்டு "தமிழ்நாட்டுப் பெரியார்கள்" என்ற  நூல் எழுதி பெருமைப்படுத் திய பெரு உள்ளத்திற்குச் சொந்தக்காரர்!

தேசியவாதி - விடுதலைப் போராட்டத்தில் உப்பு சத்தியாகிரகத்தில்  6 மாத தண்டனை அடைந்து அலிப்பூர் ஜெயிலில் இருந்தவர்!

'மணிக்கொடி' ஏட்டின் ஆசிரியராக, ஏராள மான புதுமை எழுத்தாளர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்தவர்!

எனது பல்கலைக் கழக மாணவப் பருவத்தில் நான் விரும்பி சேகரித்த நூல்களில், 'வ.ரா.'வின் நூல்களும், மராத்திய வி.ஸி. காண்டேகரின் புதினங்களும்தான் - தமிழில் இலக்கிய ரீதியாக இளைப்பாற்றிக் கொள்ள!

1919களில் 'சுந்தரி' என்ற அக்கிரகார இளம் விதவைபற்றிய - புதினம் சமூகக் கொடுமைகளை அப்படியே 'ஸ்கேன்' செய்துகாட்டும் யதார்த்த நாவல்!

சமூகத்தில் எதிர்நீச்சல் எழுத்தாளர் இவர்! பாராட்டைப் பற்றி கவலைப்படாத யதார்த்த எழுத்தாளர். மற்றவர்கள் போற்றிய இராமாயணப் பாத்திரங்களை கடுமையாக விமர்சித்து, தன் நெஞ்சுக்கு நீதி சொன்ன நேர்மையாளர்!

இதே 'கோதைத் தீவு' புதினத்தில் "விபீஷணனோ லங்கா பட்டணத்தின் மகுடத்தை இராமனிடமிருந்து பெற்றுக் கொண்டான். இந்த மகுடம் அண்ணன் இராவணனைக் காட்டிக் கொடுத்ததற்குப் பரிசு என்று ஏன் சொல்லக் கூடாது!"

"பரதனுடைய பக்தியை விபீஷணனிடம் காண முடியவில்லை! அண்ணனுடைய மகு டத்தை தம்பி கூச்சமில்லாமல் வாங்கிக் கொண் டானே என்று லோகா பவிதம் ஏற்படுமே என்பதற்குக்கூட, விபீஷணன் பயப்படாமல் காரியம் செய்ததைப் பார்த்தால் அவன் மறுக்கலப்பில்லாத பக்தன் என்று திட்டமாகச் சொல்ல முடியாது. அண்ணனைக் காட்டிக் கொடுத்துப் பட்டத்தைப் பெறும் தம்பியை பக்தன் என்று சொல்ல முடியுமா?"

"விபீஷணனுடைய செயலை பக்தியாகக் கொண்டாடும் தேசத்திலே தங்களை அறியாமலே ஆயிரக்கணக்கானவர்கள் தேசத் துரோகிகள்  ஆகிவிட்டார்கள்"

-அருமையான நெத்தியடி பார்த்தீர்களா? பதில் எவரால் கூற முடியும்!

அவரது நினைவு நாள் (23.8.2021) இன்று. 17.9.1889இல் பிறந்தார். 23.8.1951இல் மறைந்தார்.

என்றாலும் புதுமை இலக்கிய உலகில் என்றும் வாழுகிறார் - இந்த அக்கிரகாரத்து அதிசய மனிதர்! இல்லையா?

இலக்கியச் சந்தைக்குப் போகலாமா? (1) & (2)

 இலக்கியச் சந்தைக்குப் போகலாமா? (1)

ஜப்பானின் "இச்சிகோ - இச்சியே" - பற்றி தெரிந்து கொள்ளுவது புதிதாக ஒன்றை நம் வாழ்க்கையில் கற்றுக் கொள்வதாகும்!

நாம் அறிந்தவைகளைவிட, அறியாதவைகள் வாழ்க்கையில் மிக அதிகம்.

அதிலும்கூட புரிந்தவைகளை விட நமக்குப் புரியாதவைகளே மிகவும் அதிகமாக உள்ளது.

சிலருக்குள்ள தன் முனைப்பு (Ego) காரணமாக புரியாதவைகளையும்கூட புரிந்ததாக போலித்தனமாகக் காட்டி தங்களையும் ஏமாற்றிக் கொண்டு, மற்றவர்களையும் ஏமாற்றுவார்கள்! இது உலகியல்!!

அந்த வகையில் முன்பு நான் "இக்கிகை" என்ற சுகமான வாழ்க்கைப் பயணத்தை ஜப்பானின் முதுகுடி மக்கள்கூட எப்படி அனுபவித்து மகிழ்கின்றனர் -  நல வாழ்வு உடலுக்கும், உள்ளத்திற்கும் அதன் மூலம் எப்படி புத்தாக்க வாழ்க்கையாக அமைகிறது என்பதை ஓர் ஆறு கட்டுரைகளில் எழுதினேன்.

சிங்கப்பூரில் சில ஆண்டுகளுக்குமுன் வாங்கிப் படித்த ஆங்கில நூல். (அது இப்போது தமிழிலும் மொழியாக்கம் செய்து மஞ்சுள் பதிப்பகத்தினரால் நூல் வெளி வந்துள்ளது)

அதன் 'இச்சிகோ - இச்சியே' என்ற இந்நூல் எனக்கே புதிது.

மும்பையில் பல ஆங்கில நூல்களை தமிழாக்கம் செய்பவர் (அவர் செய்வது வெறும் மொழிபெயர்ப்பு மட்டும் அல்ல; தமிழாக்கமும் கூட) நண்பர் PSV குமாரசாமி அவர்கள்.

அவர் பல நூல்களை எனக்கு கற்க அனுப்பி யுள்ளார். அத்துணையும் தமிழ் மொழிக்கும், இலக்கியத்திற்கும்கூட கருவூலங்கள் போன்றன.

பல கோடி விற்பனையில் உலகின் பல்வேறு மொழிகளில் வரும் ஆங்கில நூல்களை தமிழாக்கம் செய்து வரும் நண்பர் PSV குமாரசாமி அவர்களைப் போலவே, திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்களது தமிழாக்க நூல்களும் வந்தன!

மஞ்சுள் பதிப்பகத்தின் சிறப்பான வெளி யீடுகள்.

வைக்க இடமும், படிக்க நேரமும் எனக்குப் பெரிதும் பிரச்சினைகளாகி விடுகின்றன.

என்றாலும் நான் விடுவதில்லை. பசியுள்ளவன் இடம், பொருள், சூழ்நிலை அந்தஸ்து என்றா பார்ப்பான்? இல்லையே!

கண்ட இடத்திலும், ஏன் தந்தை பெரியார் அவர்களே சாலை ஓரங்களில் நின்று சாப்பிட்டு விட்டுப் பயணங்களைத் தொடர்ந்த அனுபவத் தில் நானும் இடம் பெற்றதால்!

பார்த்தால் பசி தீரும் - பழமொழி

நமக்கோ படித்தால்தான் பசி தீரும்.

ருசி தெரியும்.

புசியுங்கள் என்று மற்றவருக்கும்

ஈந்து மகிழ முடியும்.

படித்தேன் இரவில் - தூக்கத்திடம் சில மணி விடுமுறை எடுத்துக் கொண்டு - மிகவும் சிறப்பானதாக இருந்தது.

ஜப்பானிய மக்கள் எதனையும் நேர்த்தியுடன் செய்வது, உழைப்பது, மென்மையாகப் பேசி அடக்கத்துடன் வாழ்வது என்பதைத் தாண்டி வாழ்க்கையை ஒரு கலையாகவே ஆக்கி தாங் களும் வாழ்ந்து பிறருக்கும் வழிகாட்டுகிறார்கள்!

"யாம்பெறும் இன்பத்தை இவ்வையகமும் பெறட்டும்" என்ற முறையில் மற்ற மக்களுக்கும் உழைப்பினாலும் அறிவுத் திறத்தினாலும் உயர்ந்து நிற்கிறார்கள்!

"இச்சிகோ - இச்சியே" என்ற நூலினை எழுதியுள்ள நூலாசிரியர்  ஹெக்டர் கார்சியா  ஸ்பெயினில் பிறந்தவர். இப்போது ஜப்பானில் குடியேறியுள்ளார்.

மற்றொருவர் பிரான்செஸ்க் மிராயியஸ் பன்னாட்டளவில் பல விருதுகளைப் பெற்றவர்.

இந்நூலைப் பற்றியும், இச்சிகோ - இச்சியே பற்றியும் அறிக்கைகள், நூலாசிரியர்கள் எழுதி யுள்ள முன்னுரையை (சரளமான நடையில் தமிழாக்கம் சிறப்புடன் உள்ளதை) அப்படியே தருகிறோம்.

நுழைவு வாயிலுக்குள் செல்லுமுன் இது ஒரு நல்ல அறிமுகம் என்பதால்.

(நாளையும் செல்வோம்)

இலக்கியச் சந்தைக்குப் போகலாமா? (2)

முன்னுரை

ஒரு தேநீர் விடுதியில் ஒரு சந்திப்பு

அது ஒரு மாலைப் பொழுது. இப்படியொரு புத்தகம் பிறக்கவிருந்தது அப்போது எங்களுக்குத் தெரியாது. ஜப்பானிலுள்ள கியோட்டோ நகரின் மய்யத்திலுள்ள ஜியோன் என்ற இடத்தில் நாங்கள் இருந்தோம். ஒரு புயல் அப்பகுதியிலிருந்த குறுகிய தெருக்களைப் பந்தாடிக் கொண்டிருந்தது. ஜப்பானின் பாரம்பரிய இசை மற்றும் நடனக் கலைஞர்களான கெய்ஷாக்கள் இன்றளவும் உலவுகின்ற அபூர்வமான ஒரு சில இடங்களில் கியோட்டோவும் ஒன்று. அப்போது நாங்கள் சாஷிட்சு என்றழைப்படும் ஜப்பானியப் பாரம் பரியத் தேநீர் விடுதி ஒன்றில் அமர்ந்திருந்தோம். புயல்மழை காரணமாக அவ்விடுதி காலியாக இருந்தது.

தாழ்வாக இருந்த ஒரு பெஞ்சில் நாங்கள் அமர்ந்திருந்தோம். அதன் அருகேயிருந்த சன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, அக் குறுகிய தெருக்களின் வழியாகக் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்த நீரில், ஜப்பானியச் செர்ரி மரப் பூக்களான சாகூரா மலர்கள் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம்.

அது வசந்தகாலம். அதையடுத்துக் கோடை வரும்போது, ஜப்பானியர்களைக் கொள்ளை கொண்டுள்ள அந்தச் செர்ரி மரங்களில் வெள்ளைப் பூக்கள் எதுவும் இருக்காது.

கிமோனோ உடையணிந்திருந்த ஒரு மூதாட்டி, எங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அந்த விடுதியின் மெனுவிலிருந்த தேநீர் வகைகளிலேயே சிறந்த தேநீரான ஜியோ குரோ தேநீரை நாங்கள் பருக விரும்பியதாக அவரிடம் கூறினோம். ஜியோகுரோ தேநீர் தெற்கு ஜப்பானிலுள்ள உரஷினோ என்ற இடத்தில் விளைகின்ற ஒன்று. உலகிலேயே மிகச் சிறந்த தேயிலை பயிரிடப்படுகின்ற இடம் அது என்று கருதப்படுகிறது.

தேநீர் வருவதற்காகக் காத்திருந்த வேளையில் நாங்கள் ஜப்பானின் முன்னாள் தலைநகரமான கியோட்டோவைப் பற்றிய எங்களுடைய அபிப் பிராயங்களைப் பகிர்ந்து கொண்டோம். அந்நக ரத்தைச் சுற்றியிருந்த குன்றுகளில் இரண்டாயிரம் கோவில்கள் இருந்தன என்பதைக் கேள்விப் பட்டபோது நாங்கள் மிகவும் வியப்படைந்தோம்.

பின் நாங்கள் எதுவும் பேசாமல், கூழாங்கற்கள் பதிக்கப்பட்டிருந்த சாலையில் மோதிக் கொண்டி ருந்த மழையின் சத்தத்தைச் செவிமடுத்துக் கொண்டிருந்தோம்.

தேநீர்க் கோப்பைகள் அடுக்கப்பட்டிருந்த ஒரு தாம்பாளத்துடன் அந்த மூதாட்டி திரும்பி வந்தபோது, அக்கோப்பைகளிலிருந்து வெளி வந்த நறுமணம் எங்களை எங்களுடைய இனிய கிறக்கத்திலிருந்து விழித்தெழ வைத்தது. நாங்கள் எங்களுடைய கோப்பைகளைக் கையிலெடுத்து, பிரகாசமான பச்சை வண்ணத்திலிருந்த அந்தத் தேநீரை ரசித்துப் பருகத் தொடங்கினோம். அது ஒரே சமயத்தில் இனிப்பாகவும் கசப்பாகவும் இருந்தது.

துல்லியமாக அக்கணத்தில் தெருவில் ஒரு கையில் ஒரு குடையைப் பிடித்தவாறு ஓர் இளம் பெண் ஒரு மிதிவண்டியில் அந்தத் தேநீர் விடுதியைக் கடந்து சென்றாள். வெட்கத்துடன் எங்களை நோக்கி ஒரு புன்முறுவலை உதிர்த்து விட்டு அவள் அந்தக் குறுகிய தெருவில் வேகமாக மறைந்துவிட்டாள்.

அப்போது நாங்கள் நிமிர்ந்து பார்த்தபோது எங்களுக்கு அருகேயிருந்த ஒரு பழுப்புத் தூணில் மாட்டப்பட்டிருந்த ஒரு பலகையைக் கண்டோம். அதில் ஜப்பானிய மொழியில் இவ் வாறு செதுக்கப்பட்டிருந்தது:

அதன் ஒலிபெயர்ப்பு: இச்சிகோ இச்சியே.

அதன் பொருளை அறிய நாங்கள் முயன்று கொண்டிருந் தோம். அக்கணத்தில் சுழற்றி யடித்த ஈரக்காற்று, வாசலருகே கூரையில் தாழ்வாகத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு மணியை இனிமையாக ஒலிக்கச் செய்தது.

இச்சிகோ இச்சியேயின் பொருளை இப்படி விவரிக்கலாம்: "கச்சிதமாக இக்கணத்தில் நாம் அனுபவித்துக் கொண்டிருப்பது மீண்டும் ஒருபோதும் நிகழப் போவதில்லை . அதனால் நாம் ஒவ்வொரு கணத்தையும் ஓர் அழகிய பொக்கிஷமாக மதிக்க வேண்டும்.”

கியோட்டோ நகரில் அன்று மாலையில் நாங்கள் அனுபவித்தவற்றை அந்தத் தகவல் துல்லியமாக விவரிக்கிறது.

மீண்டும் ஒருபோதும் கிடைக்கப் பெறாத அதைப் போன்ற தனித்துவமான அனுபவங்கள் குறித்து நாங்கள் பேசத் தொடங்கினோம். கடந்த காலம் அல்லது எதிர்காலம் குறித்து அதிகக் கவலை கொண்டிருந்ததாலோ அல்லது நிகழ்கால கவனச்சிதறல்களாலோ அத்தகைய அனுபவங் களை நாங்கள் கவனிக்காமல் போயிருக்கலாம்.

அப்போது அந்த மழையில் தன் முதுகில் ஒரு பையுடன் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு மாணவன் தன்னுடைய அலைபேசியில் எதையோ நோண்டியபடி சென்று கொண்டிருந் ததை நாங்கள் பார்த்தோம். அது நாங்கள் சற்று முன் விவரித்திருந்த நிகழ்கால கவனச்சிதறலுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது.

அந்த வசந்தகால மாலைப்பொழுதின்போது எங்களுக்குத் திடீரென்று கிடைத்த உத்வேகத்தால் நாங்கள் புரிந்து கொண்டிருந்த ஒரு விஷயம் அதற்குப் பிறகு வந்த பல மாதங்களுக்கு எங்க ளுடைய சிந்தனைக்கு விருந்தாக அமைந்தது.

முழுமையான கவனச்சிதறலும் உடனடித் திருப்திக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்ற கலாச் சாரமும் கோலோச்சுகின்ற இந்த யுகத்தில், நாம் பிறர் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்பதில்லை, சுற்றுச்சூழலுடன் ஒரு மேலோட்டமான உறவே நமக்கு இருக்கிறது. ஆனால் ஒருமித்த கவனக் குவிப்பைக் கொண்டிருப்பதற்கும், பிறருடன் ஒத்திசைவான உறவைப் பேணுவதற்கும், வாழ்க் கையைக் கொண்டாடுவதற்கும் ஓர் எளிய வழி இருக்கிறது.

அதுதான் 'இச்சிகோ இச்சியே'.

நீங்கள் எதிர்கொள்கின்ற ஒவ்வொரு கணத் தையும் உங்கள் வாழ்க்கையின் மிகச் சிறப்பான கணமாக மாற்றுவது எப்படி என்பதை அடுத்து வருகின்ற பக்கங்களில் நாங்கள் உங்களுக்கு விளக்கவிருக்கிறோம்.

- ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ்

(நாளையும் செல்வோம்)