பக்கங்கள்

சனி, 2 அக்டோபர், 2021

மனமது செம்மையானால்...!

 

'அகம் - புறம்என்ற சொற்றொடர்கள் தமிழில் எவ்வளவு அழகான சொற்கள்!

அழகான சொற்கள் மாத்திரமாஆழமானஅகலமானபொருள் பொதிந்த சொற்களும் ஆகும்!

தமிழ் இலக்கியத்தில் சங்ககால இலக்கியங் களில் அகநானூறுபுறநானூறு என்று புலவர்கள் பாடிய பாடல்களைத் தொகுத்த நிலையில்அழி யாப் புகழ் பெற்றவைகளாக - செம்மொழியான எம் மொழியாம் எம் தமிழ்மொழிக்கு அணி சேர்க்கின்றவைகளாக  உருவாக்கப்படுகின்றன. (இதிலேகூட ஊடுருவல்பண்பாட்டுப் படை யெடுப்புக்கு முந்தியவைபிந்தியவை என்று இனம் பிரித்து உண்மைகளை உணர வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழ் ஆர்வலர்களுக்கும் உண்டு)

அறிஞர் அண்ணாவுடன் கவிஞர் கண்ண தாசன் அவர்கள் மகிழுந்தில் பயணிக்கிறார்அப்போது கவிஞர் அறிஞரைப் பார்த்துக் கேட்கிறார்!

"என்ன அண்ணாஅகநானூறுக்கும் புற நானூறுக்கும் உள்ள வேறுபாடு பற்றி எப்படி எளிமையாகச் சொல்வதுஎன்று.

அண்ணா சிரித்துக் கொண்டே அமைதியாக பதிலளிக்கிறார்:

'புறம்', மற்ற பலருடன் பகிர்ந்து கொள்வது.

'அகம்மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள முடியாதது என்று!

இதை நாமும் பலமுறை கேட்டிருந்தாலும்கூட 'அகத்தைஅகநானூறு பாட்டுகள் காதல் சுவைபற்றிய பாட்டுகள் என்று பிரித்தும், 'புறம்என்பதை வீரத்தை விளக்கும் பாட்டுகள் என்று பிரித்தும் புரிந்து கொள்ளுகிறோம்.

ஆனால் மனித வாழ்வில் அதை இன்னும் ஆழங்கால் பதித்து ஆராய்வோம் எனில்அது வெளியில் உள்ள ஒரு மனிதனின் தோற்றம்நடைஉடைபாவனைசொல்செயல்கள் எல்லாவற்றையும் பற்றியது புறம் என்றும் பிரித்துப் பொருள் காணலாம்!

'அகம்என்பது அவனுடைய உள்ளம்மனம் மட்டுமல்ல ஆழ் மனம் - அடி மன ஓட்டம் - இவைகளை உள்ளே வைத்திருப்பது.

"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" - எளிமையான பழமொழிதான்;  அதனை ஆழ்ந்துப் படித்து அசை போட்டுச் சிந்தித்தால் - உளவியல் படி ஒரு மனிதன் என்னதான் தன் மன நிலையை மறைத்தாலும்கூடஅவனது முகம் அதனை மறைத்துக் கொள்வதற்கு முழு வாய்ப்புத் தரவே தராது என்பதே அந்தப் பழமொழியின் முழுப் பொருள் ஆகும்.

முகம் காட்டிக் கொடுத்துவிடும்முகத்துக்கு நேரே மனிதர்களைப் புகழ்வதைக் கேட்டு மயங்காதவர்களும்மகிழாதவர்களும் எத்தனை விழுக்காடு இருப்பர்?

'முகமன்' (Flattery) - (Cajolery) - ஆங்கிலத்தில் என்பதுகூட தமிழ்ச் சொல்லின் பளிச்சென்று 'முகமன்என்ற சொல் பொருள் உணர்த்துவது போல இல்லைஇருக்காது! 'அகநக நட்புஎன்பதே உயர்ந்த நட்புஅது பற்பல நேரங்களில் வெளிப்படுத்தாமல்கூட (Fixed Depositவங்கியில் செய்த முதலீடுபோல மனிதர்களின் நட்பு புகழில் உயர்ந்தோர் மாட்டு இருப்பது உண்டு.

"உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர்

உறவு கலவாதிருத்தல் வேண்டும்'

என்றார் வடலூர் வள்ளலார் பெருமான்இதன்படி மனித சமூகத்தில் உண்மையான நண்பர்களையோஉறவுகளையோகண்டறிந்து அவ்வளவு எளிதாக பழக முடிகிறதா?

மணமக்களை 'உற்ற நண்பர்களாக வாழுங்கள்என்று வாழ்த்துவார் தந்தை பெரியார்!

'ஒரு மனதாயினர் தோழி

இத்திருமண மக்கள் நன்கு வாழி!' என்ற புரட்சிக் கவிஞர் இரண்டு மனங்கள் இணைவதே உண்மை மகிழ்ச்சிக்குரிய இணையேற்பு என்று இலக்கணம் கூறிகளங்கமற்ற - கபடமற்ற ஒரே மனம் படைத்து வாழுவதே சிறந்த சீரிய வாழ்க்கை என்றார்!

உள்ளும் புறமும் ஒத்த வாழ்வே உயர்ந்த வாழ்வு என்பதையும்பூஜை புனஸ்கார மந்திரங்களால் அதனை அடைய முடியாது என்பதால்தான் அருமையான இரண்டு வரி கவிதையின் மூலம் சித்தர்கள் பாடியுள்ளனர்.

"மனமது செம்மையானால்

மந்திரம் ஜெபிக்க வேண்டாம்!"

எனவேமனமும் (அகமும்நடத்தையும் (புறம்ஒன்றினால் உயர்ந்த வாழ்க்கை - சிறந்த வாழ்க்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக