இலக்கியச் சந்தைக்குப் போகலாமா? (1)
• Viduthalaiஜப்பானின் "இச்சிகோ - இச்சியே" - பற்றி தெரிந்து கொள்ளுவது புதிதாக ஒன்றை நம் வாழ்க்கையில் கற்றுக் கொள்வதாகும்!
நாம் அறிந்தவைகளைவிட, அறியாதவைகள் வாழ்க்கையில் மிக அதிகம்.
அதிலும்கூட புரிந்தவைகளை விட நமக்குப் புரியாதவைகளே மிகவும் அதிகமாக உள்ளது.
சிலருக்குள்ள தன் முனைப்பு (Ego) காரணமாக புரியாதவைகளையும்கூட புரிந்ததாக போலித்தனமாகக் காட்டி தங்களையும் ஏமாற்றிக் கொண்டு, மற்றவர்களையும் ஏமாற்றுவார்கள்! இது உலகியல்!!
அந்த வகையில் முன்பு நான் "இக்கிகை" என்ற சுகமான வாழ்க்கைப் பயணத்தை ஜப்பானின் முதுகுடி மக்கள்கூட எப்படி அனுபவித்து மகிழ்கின்றனர் - நல வாழ்வு உடலுக்கும், உள்ளத்திற்கும் அதன் மூலம் எப்படி புத்தாக்க வாழ்க்கையாக அமைகிறது என்பதை ஓர் ஆறு கட்டுரைகளில் எழுதினேன்.
சிங்கப்பூரில் சில ஆண்டுகளுக்குமுன் வாங்கிப் படித்த ஆங்கில நூல். (அது இப்போது தமிழிலும் மொழியாக்கம் செய்து மஞ்சுள் பதிப்பகத்தினரால் நூல் வெளி வந்துள்ளது)
அதன் 'இச்சிகோ - இச்சியே' என்ற இந்நூல் எனக்கே புதிது.
மும்பையில் பல ஆங்கில நூல்களை தமிழாக்கம் செய்பவர் (அவர் செய்வது வெறும் மொழிபெயர்ப்பு மட்டும் அல்ல; தமிழாக்கமும் கூட) நண்பர் PSV குமாரசாமி அவர்கள்.
அவர் பல நூல்களை எனக்கு கற்க அனுப்பி யுள்ளார். அத்துணையும் தமிழ் மொழிக்கும், இலக்கியத்திற்கும்கூட கருவூலங்கள் போன்றன.
பல கோடி விற்பனையில் உலகின் பல்வேறு மொழிகளில் வரும் ஆங்கில நூல்களை தமிழாக்கம் செய்து வரும் நண்பர் PSV குமாரசாமி அவர்களைப் போலவே, திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்களது தமிழாக்க நூல்களும் வந்தன!
மஞ்சுள் பதிப்பகத்தின் சிறப்பான வெளி யீடுகள்.
வைக்க இடமும், படிக்க நேரமும் எனக்குப் பெரிதும் பிரச்சினைகளாகி விடுகின்றன.
என்றாலும் நான் விடுவதில்லை. பசியுள்ளவன் இடம், பொருள், சூழ்நிலை அந்தஸ்து என்றா பார்ப்பான்? இல்லையே!
கண்ட இடத்திலும், ஏன் தந்தை பெரியார் அவர்களே சாலை ஓரங்களில் நின்று சாப்பிட்டு விட்டுப் பயணங்களைத் தொடர்ந்த அனுபவத் தில் நானும் இடம் பெற்றதால்!
பார்த்தால் பசி தீரும் - பழமொழி
நமக்கோ படித்தால்தான் பசி தீரும்.
ருசி தெரியும்.
புசியுங்கள் என்று மற்றவருக்கும்
ஈந்து மகிழ முடியும்.
படித்தேன் இரவில் - தூக்கத்திடம் சில மணி விடுமுறை எடுத்துக் கொண்டு - மிகவும் சிறப்பானதாக இருந்தது.
ஜப்பானிய மக்கள் எதனையும் நேர்த்தியுடன் செய்வது, உழைப்பது, மென்மையாகப் பேசி அடக்கத்துடன் வாழ்வது என்பதைத் தாண்டி வாழ்க்கையை ஒரு கலையாகவே ஆக்கி தாங் களும் வாழ்ந்து பிறருக்கும் வழிகாட்டுகிறார்கள்!
"யாம்பெறும் இன்பத்தை இவ்வையகமும் பெறட்டும்" என்ற முறையில் மற்ற மக்களுக்கும் உழைப்பினாலும் அறிவுத் திறத்தினாலும் உயர்ந்து நிற்கிறார்கள்!
"இச்சிகோ - இச்சியே" என்ற நூலினை எழுதியுள்ள நூலாசிரியர் ஹெக்டர் கார்சியா ஸ்பெயினில் பிறந்தவர். இப்போது ஜப்பானில் குடியேறியுள்ளார்.
மற்றொருவர் பிரான்செஸ்க் மிராயியஸ் பன்னாட்டளவில் பல விருதுகளைப் பெற்றவர்.
இந்நூலைப் பற்றியும், இச்சிகோ - இச்சியே பற்றியும் அறிக்கைகள், நூலாசிரியர்கள் எழுதி யுள்ள முன்னுரையை (சரளமான நடையில் தமிழாக்கம் சிறப்புடன் உள்ளதை) அப்படியே தருகிறோம்.
நுழைவு வாயிலுக்குள் செல்லுமுன் இது ஒரு நல்ல அறிமுகம் என்பதால்.
(நாளையும் செல்வோம்)
• Viduthalaiமுன்னுரை
ஒரு தேநீர் விடுதியில் ஒரு சந்திப்பு
அது ஒரு மாலைப் பொழுது. இப்படியொரு புத்தகம் பிறக்கவிருந்தது அப்போது எங்களுக்குத் தெரியாது. ஜப்பானிலுள்ள கியோட்டோ நகரின் மய்யத்திலுள்ள ஜியோன் என்ற இடத்தில் நாங்கள் இருந்தோம். ஒரு புயல் அப்பகுதியிலிருந்த குறுகிய தெருக்களைப் பந்தாடிக் கொண்டிருந்தது. ஜப்பானின் பாரம்பரிய இசை மற்றும் நடனக் கலைஞர்களான கெய்ஷாக்கள் இன்றளவும் உலவுகின்ற அபூர்வமான ஒரு சில இடங்களில் கியோட்டோவும் ஒன்று. அப்போது நாங்கள் சாஷிட்சு என்றழைப்படும் ஜப்பானியப் பாரம் பரியத் தேநீர் விடுதி ஒன்றில் அமர்ந்திருந்தோம். புயல்மழை காரணமாக அவ்விடுதி காலியாக இருந்தது.
தாழ்வாக இருந்த ஒரு பெஞ்சில் நாங்கள் அமர்ந்திருந்தோம். அதன் அருகேயிருந்த சன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, அக் குறுகிய தெருக்களின் வழியாகக் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்த நீரில், ஜப்பானியச் செர்ரி மரப் பூக்களான சாகூரா மலர்கள் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம்.
அது வசந்தகாலம். அதையடுத்துக் கோடை வரும்போது, ஜப்பானியர்களைக் கொள்ளை கொண்டுள்ள அந்தச் செர்ரி மரங்களில் வெள்ளைப் பூக்கள் எதுவும் இருக்காது.
கிமோனோ உடையணிந்திருந்த ஒரு மூதாட்டி, எங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அந்த விடுதியின் மெனுவிலிருந்த தேநீர் வகைகளிலேயே சிறந்த தேநீரான ஜியோ குரோ தேநீரை நாங்கள் பருக விரும்பியதாக அவரிடம் கூறினோம். ஜியோகுரோ தேநீர் தெற்கு ஜப்பானிலுள்ள உரஷினோ என்ற இடத்தில் விளைகின்ற ஒன்று. உலகிலேயே மிகச் சிறந்த தேயிலை பயிரிடப்படுகின்ற இடம் அது என்று கருதப்படுகிறது.
தேநீர் வருவதற்காகக் காத்திருந்த வேளையில் நாங்கள் ஜப்பானின் முன்னாள் தலைநகரமான கியோட்டோவைப் பற்றிய எங்களுடைய அபிப் பிராயங்களைப் பகிர்ந்து கொண்டோம். அந்நக ரத்தைச் சுற்றியிருந்த குன்றுகளில் இரண்டாயிரம் கோவில்கள் இருந்தன என்பதைக் கேள்விப் பட்டபோது நாங்கள் மிகவும் வியப்படைந்தோம்.
பின் நாங்கள் எதுவும் பேசாமல், கூழாங்கற்கள் பதிக்கப்பட்டிருந்த சாலையில் மோதிக் கொண்டி ருந்த மழையின் சத்தத்தைச் செவிமடுத்துக் கொண்டிருந்தோம்.
தேநீர்க் கோப்பைகள் அடுக்கப்பட்டிருந்த ஒரு தாம்பாளத்துடன் அந்த மூதாட்டி திரும்பி வந்தபோது, அக்கோப்பைகளிலிருந்து வெளி வந்த நறுமணம் எங்களை எங்களுடைய இனிய கிறக்கத்திலிருந்து விழித்தெழ வைத்தது. நாங்கள் எங்களுடைய கோப்பைகளைக் கையிலெடுத்து, பிரகாசமான பச்சை வண்ணத்திலிருந்த அந்தத் தேநீரை ரசித்துப் பருகத் தொடங்கினோம். அது ஒரே சமயத்தில் இனிப்பாகவும் கசப்பாகவும் இருந்தது.
துல்லியமாக அக்கணத்தில் தெருவில் ஒரு கையில் ஒரு குடையைப் பிடித்தவாறு ஓர் இளம் பெண் ஒரு மிதிவண்டியில் அந்தத் தேநீர் விடுதியைக் கடந்து சென்றாள். வெட்கத்துடன் எங்களை நோக்கி ஒரு புன்முறுவலை உதிர்த்து விட்டு அவள் அந்தக் குறுகிய தெருவில் வேகமாக மறைந்துவிட்டாள்.
அப்போது நாங்கள் நிமிர்ந்து பார்த்தபோது எங்களுக்கு அருகேயிருந்த ஒரு பழுப்புத் தூணில் மாட்டப்பட்டிருந்த ஒரு பலகையைக் கண்டோம். அதில் ஜப்பானிய மொழியில் இவ் வாறு செதுக்கப்பட்டிருந்தது:
அதன் ஒலிபெயர்ப்பு: இச்சிகோ இச்சியே.
அதன் பொருளை அறிய நாங்கள் முயன்று கொண்டிருந் தோம். அக்கணத்தில் சுழற்றி யடித்த ஈரக்காற்று, வாசலருகே கூரையில் தாழ்வாகத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு மணியை இனிமையாக ஒலிக்கச் செய்தது.
இச்சிகோ இச்சியேயின் பொருளை இப்படி விவரிக்கலாம்: "கச்சிதமாக இக்கணத்தில் நாம் அனுபவித்துக் கொண்டிருப்பது மீண்டும் ஒருபோதும் நிகழப் போவதில்லை . அதனால் நாம் ஒவ்வொரு கணத்தையும் ஓர் அழகிய பொக்கிஷமாக மதிக்க வேண்டும்.”
கியோட்டோ நகரில் அன்று மாலையில் நாங்கள் அனுபவித்தவற்றை அந்தத் தகவல் துல்லியமாக விவரிக்கிறது.
மீண்டும் ஒருபோதும் கிடைக்கப் பெறாத அதைப் போன்ற தனித்துவமான அனுபவங்கள் குறித்து நாங்கள் பேசத் தொடங்கினோம். கடந்த காலம் அல்லது எதிர்காலம் குறித்து அதிகக் கவலை கொண்டிருந்ததாலோ அல்லது நிகழ்கால கவனச்சிதறல்களாலோ அத்தகைய அனுபவங் களை நாங்கள் கவனிக்காமல் போயிருக்கலாம்.
அப்போது அந்த மழையில் தன் முதுகில் ஒரு பையுடன் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு மாணவன் தன்னுடைய அலைபேசியில் எதையோ நோண்டியபடி சென்று கொண்டிருந் ததை நாங்கள் பார்த்தோம். அது நாங்கள் சற்று முன் விவரித்திருந்த நிகழ்கால கவனச்சிதறலுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது.
அந்த வசந்தகால மாலைப்பொழுதின்போது எங்களுக்குத் திடீரென்று கிடைத்த உத்வேகத்தால் நாங்கள் புரிந்து கொண்டிருந்த ஒரு விஷயம் அதற்குப் பிறகு வந்த பல மாதங்களுக்கு எங்க ளுடைய சிந்தனைக்கு விருந்தாக அமைந்தது.
முழுமையான கவனச்சிதறலும் உடனடித் திருப்திக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்ற கலாச் சாரமும் கோலோச்சுகின்ற இந்த யுகத்தில், நாம் பிறர் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்பதில்லை, சுற்றுச்சூழலுடன் ஒரு மேலோட்டமான உறவே நமக்கு இருக்கிறது. ஆனால் ஒருமித்த கவனக் குவிப்பைக் கொண்டிருப்பதற்கும், பிறருடன் ஒத்திசைவான உறவைப் பேணுவதற்கும், வாழ்க் கையைக் கொண்டாடுவதற்கும் ஓர் எளிய வழி இருக்கிறது.
அதுதான் 'இச்சிகோ இச்சியே'.
நீங்கள் எதிர்கொள்கின்ற ஒவ்வொரு கணத் தையும் உங்கள் வாழ்க்கையின் மிகச் சிறப்பான கணமாக மாற்றுவது எப்படி என்பதை அடுத்து வருகின்ற பக்கங்களில் நாங்கள் உங்களுக்கு விளக்கவிருக்கிறோம்.
- ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ்
(நாளையும் செல்வோம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக