பக்கங்கள்

வியாழன், 26 அக்டோபர், 2017

அம்பேத்கர் - ‘புத்தப் பிரியர்’ மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட! (1)&(2)

அம்பேத்கர் - ‘புத்தப் பிரியர்’ மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட! (1)

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ‘நூற்களை விழுங்கிய நுண்ணறிவாளர்’; அவரின் புத்தகக் காதல் என்றும் தணியாத காதல்.

அவரது இல்லத்தில் புத்தகங்கள் ‘ஆக்கிரமிக்காத’ இடங்களே இல்லை; ஆம்! ‘ராஜகிரகா’வின் நூலகம் - தலைசிறந்த எடுத்துக்காட்டான தனியார் நூலகம் (Private Library).

அந்தக் காலகட்டத்திலேயே அந்நூலகத்தில் இடம்பெற்ற நூல்களின் எண்ணிக்கை 69,000 ஆகும்!

பெரும்பாலான அவரது நூல்களை - சேகரிப்புகளை அவர் உருவாக்கிய கல்வி அறக்கட்டளையான மக்கள் கல்விக் கழகத்திற்கே (People’s Educational Society) (நிறுவிய ஆண்டு 8.7.1945) அளித்துள்ளார்! அக்கல்விக் கழகம் என்ற அறக்கட்டளை அமைப்பு - பல கல்லூரிகளை மும்பையில் நடத்துகிறது. இது பாபா சாகேப் அவர்களது இறுதிக்கால ஏற்பாடு.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய நூல்களை வெளியிடும் பொறுப்பை ‘தாக்கர் அன்ட் கோ’ என்ற வெளியீட்டகம் ஏற்று, அவரது நூல்களைக் கொண்டு வந்தது.

அதில் நூல்களைப் பதிப்பிக்கும் மேலாளராக, நூற்களைப் படித்து, வாசகர்கள் தேவைக்கு ஏற்ப சில பகுதிகளை மாற்றியோ, சுருக்கியோ, பெருக்கியோ, வரிசையை மாற்றியோ வெளிவர ஏற்பாடு செய்யும் பணியில் இருந்தவர் யு.ஆர்.ராவ் என்பவராவார்.

அம்பேத்கரின் புத்தகக் காதல், அளவற்ற ‘மோகம்' பற்றி அவர் பல அரிய தகவல்களைக் கூறியுள்ளார்.

அம்பேத்கரின் நூற்களை பதிப்பிக்கவும், மேற்பார்வையிட்டு செப்பனிட்டுத் தரும் கடமையும், உரிமையும் உள்ளவராக இந்த யு.ஆர்.ராவ் அக்கம் பெனியாரால் நியமிக்கப்பட்டு, பணியாற்றியவர். அவர் டாக்டர் அம்பேத்கருடன் நெருங்கிப் பழகிடும் வாய்ப்புகளை நிரம்பப் பெற்றவர். இவர் 1945 முதல் 1949 வரை அப்பதிப்பகத்தில் பொறுப்பேற்று பணி யாற்றிய நிலையில், அவர் கூறும் பல்வேறு செய்திகள் மிகவும் ஈர்ப்பானவை.

பழைய பம்பாய் நகரில் டாக்டர் (அம்பேத்கர்) இருக்கிறார் என்றால், அவர் இவர்களது பதிப்பகம் - விற்பனையகத்திற்கு வராமல் இருக்கவேமாட்டாராம். தாக்கர் அன்ட் கோவிற்கு வந்து, அவர்களது பிற வெளியீடுகள், நூல்களையும் பார்த்து, விலை கொடுத்து வாங்கிக் கொண்டே செல்வார் என்கிறார் யு.ஆர்.ராவ்.

புத்தகங்கள்மேல் அவருக்கு எவ்வளவு தீராத ஆசை - ‘மோகம்‘ தணியாத ஒன்றோ அதேபோன்ற இன்னொரு ஆசை - சிறுபிள்ளைகளுக்குப் புதுப்புது பொம்மைகளைக் கண்டால் எப்படியோ, அப்படி - அக்கம்பெனியின் விற்பனைப் பிரிவான ‘ஸ்டேஷனரி’ பிரிவில் பல்வகையாக - நீளம், குட்டை, பல வண்ணங்கள் என்ற பல மாதிரி புத்தம் புதிய பேனாக்கள், எழுதுகோல்களைப் பார்த்து, எழுதி எழுதிப் பார்த்து ஏராளமானவற்றை விலைக்கு வாங்கிக் கொள்ளத் தயங்கவே மாட்டார்! ஒரு அரை டஜனுக்குக் குறையாமல் வாங்கி தனது கோட் பாக்கெட்டில் அடைத்துக் கொள்வாராம்.

தந்தை பெரியாருக்கும் சரி, நமது கலைஞருக்கும் சரி - அம்பேத்கருக்கும் இதில் உள்ள ஒற்றுமை - பலவகை பேனாக்களை வாங்கிப் பயன்படுத்துவது (நீளமானது, தடித்தது, பெரிய அளவு), எல்லாவற்றின் மீதும் இந்தத் தலைவர்களுக்கு அப்படி ஒரு தீராத கொள்ளை ஆசையாம்!

இந்த வெளியீட்டகத்தில் அவருக்கு அவரது புத்தக விற்பனையின்மூலம் கிடைக்கும் உரிமத் தொகை - ராயல்டியை ரொக்கமாகவோ, காசோலை மூலமோ எடுத்துச் செல்வதே அரிது; அபூர்வம்; காரணம், அத்தொகை முழுவதற்குமோ அல்லது பெரும் அளவுக்கோ அவர்கள் அக்கம்பெனியில் விற்கப்படும் பல புதிய வெளியீட்டு நூல்களையே விலை கொடுத்து வாங்கிப் போவாராம்! அவரது பொருளாதார நெருக்கடிபற்றி அப்போது அவர் சிந்திப்பதே கிடையாதாம்!

பழைய புத்தகங்கள் விற்பனை நிலையங்களைக் கூட டாக்டர் விட்டு வைப்பதே இல்லை.

அவைபற்றி பல சுவையான தகவல்களை நாளை படிப்போம்!''                                                                                                                               --------------புதன், 25 அக்டோபர் 2017      
                                                                                                                                                                                     அம்பேத்கர் - ‘புத்தப் பிரியர்’ மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட! (2)

‘தாக்கர் அன்ட் கோ’வின் முக்கிய பொறுப்பாசிரி யரான யு..ஆர்.இராவ் அவர்கள் அம்பேத்கர் புத்தக வெளியீட்டகத்திற்கு வரும்போது, அவருடைய நூல்களை வெளியிடுமுன் சில மாற்றங்கள் செய்தால் சிறப்பாக இருக்கும் என்ற தனது கருத்தை டாக்டரிடம் கூறி, அவரைக் கேட்க விரும்புவதாக அதன் தலைமை நிர்வாகியிடம் சொன்னார்.

அவர் இதைக் கேட்டு அதிர்ந்து போய், ‘யோவ், அவரிடம் போய் அவர் எழுதியுள்ள புத்தகத்தில் மாற்றம் செய்யுங்கள் என்று கேட்கப் போகிறீர்களா? டாக்டர் அதை எப்படி எடுத்துக்கொள்வாரோ தெரியவில்லை; ஏன் உங்களுக்கு இந்த வீண்வம்பு? அவர் எழுதிக் கொடுத்ததை அப்படியே வெளியிட்டு விடக்கூடாதா?’ என்று தயக்கத்துடன் கேட்டார்.

யு.ஆர்.ராவ், ‘இல்லை இந்த மாற்றம் செய்தால் வாசிப்பதற்கு மேலும் சுவையைக்கூட்டி விறுவிறுப்பு டன் அமையும் என்றுதான் கூறலாம்‘ என்று, டாக்டர் அம்பேத்கரிடம் சொன்னபோது, அவர் இசைவு தந்தார், எந்த மறுமொழியும் சொல்லாமல் என்பது இவருக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது! புத்தகம் சிறப்பாக அமைந்தது!

டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, டாக்டர் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களே, (1950 இல் இந் நிகழ்வு) டி.ஏ.தலாங் (ஞி.கி.ஜிணீறீணீஸீரீ) என்ற பிரபல கல்வி யாளர் சேர்த்து வைத்திருந்த ஏராளமான புத்தகங் களைக் கொண்ட தனியார் நூலகம் பம்பாய் மட்டுங்கா பகுதியில் இருந்தது; அவர் இறந்தவுடன், அவரது சொந்தக்காரர்கள் அந்த நூல்களை விற்றுவிடுவதாக உள்ளார்கள் என்று, அவரது பக்கத்து வீட்டுக்கார நண்பர் ஆர்.கே. என்பவர் கூறுகிறார் என்று கூறி, அப்புத்தகங்களின் நீண்ட பட்டியலைக் கொடுத்தார். தனித்தனியே இவைகளை விற்பதாக உள்ளார்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால், அதனை அப்படியே பெற்றுக்கொள்ளலாம் என்றவுடன், தலாங்கின் வீட்டு நூலகமாக ஆக்கினால், நிச்சயம் அது சிறப்பானதாக இருக்கும். எனவே, பெரும் புத்தகப் பிரியரான அந்த மனிதரின் நூல்களை வாங்கலாம்; விலை எவ்வளவு சொல்கிறார்கள் என்று விசாரியுங்கள் என்றார் அம்பேத்கர்.

நான் புத்தகம் ஒன்றுக்கு ஆறு ரூபாய் விலை போட்டு எடுத்துக் கொள்ளச் சொல்லுகிறார்கள் என்று, விசாரித்துவிட்டுச் சொன்னேன்.

உடனே டாக்டரிடமிருந்து ஒரு ‘புயல்’ அடித்தது!

‘என்ன நான் என்ன கோடீசுவரனா? அவ்வளவுப் பணம் என்னால் கொடுக்க முடியுமா? இந்தப் பணம் எங்கேயிருந்து கொடுக்கப்படுகிறது தெரியுமா? றிமீஷீஜீறீமீ’s ணிபீuநீணீtவீஷீஸீணீறீ ஷிஷீநீவீமீtஹ்  யிலிருந்து. அதனிடம் உள்ள நிதியே குறிப்பிட்ட அளவுதான்.

அந்த  தலாங் உறவினர்களிடம் சொல்லுங்கள். அவர்களுடைய அத்துணை நூல்களையும் அது பெரியதோ, சிறியதோ, பவுண்ட் அட்டையோ, மெல்லிய சிறு வெளியீடோ சகட்டுமேனிக்கு புத்தகம் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் என்று போட்டுத் தரலாம்; அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டால், கேட்டுச் சொல்லுங்கள், வாங்கலாம்‘ என்று கூறி, பேரம் செய்தார்! அவர்களும் ஒப்புக்கொண்டு வாங்கினார். ஒரு லாரி லோடு அளவுக்கு வாங்கி அவரது கல்லூரி நூலகத்திற்கு அனுப்பினார்.

இவருடைய தனிப்பட்ட வீட்டு நூலகப் புத்தகங் களையெல்லாம் - அரிய நூல்கள் சேகரிப்பு ஆகும்; அவற்றை அவர் துவக்கிய சித்தார்த்தா கல்லூரியே அவரது நூலகத்தைப் பாதுகாத்து வந்தது. அவர் மறைந்த பிறகு இதுபற்றியும் யாருடைய பொறுப்பில் அவரது வீட்டு நூலகம் பராமரிப்புக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என்பதற்கும் வழக்குகள் நடந்தன.

டில்லி உயர்கல்வி நூலகத்திற்கு இதை அளித்தால் பயனுள்ளதாக இருக்கும். அது முடியுமா? என்று நாங்கள் ஆராய்ந்தோம். அப்புத்தகங்கள் பண்டல் பண்டல்களாக - பார்சல் மூட்டைகளாக்கப்பட்டதால், அவர்கள் எடுத்துக்கொள்ள முன்வரவில்லை என்பது தான் துயரமானது!

                                   ----------------------------------------------- கி.வீரமணி ---’விடுதலை’ 26-10-2017

வியாழன், 12 அக்டோபர், 2017

ஈரோட்டுக் கவிஞரின் தேரோட்டத்தில்....!


நேற்று, புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் மாணவர் ‘பாரதிதாசன் பரம்பரை' என்பதன் முன்னோடிக் கவிஞர் தமிழ்ஒளியின் நூற்களை வெளியிட ‘‘அவரது தமிழுற வான'' புரவலர் அய்யா முதியவர் சஞ்சீவி அவர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், இந் நூற்றாண்டின் இணையற்ற இனமானக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் ஒரு புது நூலைத் தந்தார்!

படித்தேன்  - சுவைத்தேன்!

‘மாற்று மனிதம்‘ என்ற தலைப்பில், பல ஏடுகளில், பற்பல வாய்ப்புகளில் வார்த்தெடுக்கப்பட்ட சிந்தனைச் சாட்டையின் சொடுக்குகள் அவை! அவற்றில்தான் எத்தனை மிடுக்குகள்! எளிதில் விடை காண முடியாத கேள்வி அடுக்குகள்கூட!

மனிதர்கள் நாளும் பெருகி வருகிறார்கள். ஆனால், ‘‘மனிதம்‘’ குறைந்தே வருகிற நிலையில், அந்த மனிதம்கூட லாப, நட்டக் கணக்கின் அடிப்படையில் இயங்கும் தரம் தாழ்ந்த நிலைக்கு சமூகம் அதனை வலுக்கட்டாயமாக இழுத்தே செல்லுகிறது.

நீதித்துறை என்ற உலகத்திலும்,  இதனை உயர்த்திட வேண்டிய, ஊடக உலகமாயினும் ‘‘மாற்று மனி தத்தின்’’ தேவை நாளும் அதிகமாகியே வருகிறது என்பதனை பல கவிதைகள் மூலம் படம் பிடித்துக் காட்டும் பாங்கு வியக்கத்தக்கவை; போற்றத்தக்கவை.

‘‘விரல்கள்'' என்ற தலைப்பில்,

‘‘பொய்க் கையெழுத்துப் போடாத

காந்தளின் அழகிய விரல்களை

இயற்கையே

தன் கையில் ஏந்திக் கொள்கிறது.

ஊரார் கையெழுத்தைப்

போடுவதற்காகவே

எழுதக் கற்றவன் விரல்கள்

கழுக் கம்பங்களின்

முழுப் பிம்பங்களே! வேறு என்ன?

அடையாள மையிடப்பட்ட விரல்கள் யாவும்

தேர்தல் ஆணையத்தின் தணிக்கைக்காகக்

கொண்டு செல்லப்பட்டுள்ளன

இலவச விரல்களை நிவாரண அடிப்படையில்

அரசு வழங்கவேண்டும் என்று

எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன

தீப்பெட்டித் தொழிற்சாலைகளும்

பட்டாசுத் தொழிற்சாலைகளும்

சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புக்கு அஞ்சி

இனிமேல்

விரல்கள் உள்ள குழந்தைகளுக்குப் பதிலாகக்

குழந்தைகள் இல்லாத

விரல்கள் வேலைக்கு அமர்த்தப்படும் என்று

அறிக்கை வெளியிட்டன

ஏகலைவர்களிடம் மிகைக்கட்டை

விரல்கள் இருப்பில் இருப்பது

தெரிந்த

துரோணர்கள்

குருகுலங்களை மூடிவிட்டனர்

உச்சநீதிமன்றமும்

ஓர் அவசர உத்தரவு போட்டது

போலி ஆவணங்கள்

தயாரிப்பதைத் தடுப்பதற்காக

இறந்தவர்கள் கட்டை விரல்களைத்

தாமதமின்றி இறப்பதற்குச்

சற்று முன்பாகவே

உச்சநீதிமன்றத்தில்

ஒப்படைக்க வேண்டுமாம்.''

மாற்று மனிதம் - ஏமாற்றும் மனிதத்திற்கு மாற்றாக இப்போது தேவைதானே!

‘‘வெறுங்கை என்பது மூடத்தனம் -

விரல்கள் பத்து என்பது மூலதனம்''

என்ற கவிஞர் தாரா பாரதியினையும் நினைக்க வைத்தது இக்கவிதை!
-விடுதலை நாளேடு, 26.9.17

மாரடைப்பு என்ற இதயக்கொல்லி நோய் - அறிந்துகொள்வீர்!

இதய நோயுடன் இந்தியாவில் 5.4 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம் ஆகும்) அதாவது 54 லட்சம் பேர்கள் இதய நோயுடன் - அதாவது இதய தசைகள் பலவீனமடைந்தும், தடித்தும், இருதயத்திற்குள் சென்று திரும்பும் ரத்த ஓட்டக் குழாய்களில் அவ்வப்போது அடைப்பும் கொண்ட நிலையிலேயே உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மேலே கூறியது.

நம் நாட்டில் 59 வயதில் சராசரியாக இதயநோய்த்தாக்குதல் ஏற்படுவதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது!

அறிகுறிகள்:

படபடப்புடன் கூடிய இதயத் துடிப்பு

மூச்சுத் திணறல்

திடீரென்று எடை கூடுதல்

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு கோடியே 75 லட்சம் பேர்களை இந்த இதய நோய் பலி கொள்ளுகிறது!

இது 2030 ஆம் ஆண்டு - நம் நாட் டில் 2 கோடியே 30 லட்சமாக உயரக் கூடிய அபாயம் உண்டு என்று கணக் கிடப்பட்டுள்ளது!!

உலக இதய காப்பு நாளில் இப்படிப் பட்ட பல சிந்தனைகளும், தகவல்களும் நம் அனைவரையும் ‘வருமுன்னர் காப் பவர்களாக ஆக்கிடுதல்’ விரும்பத் தக்கது!

குடும்பப் பாரம்பரிய வரலாறு,

புகை பிடித்தல்,

மது அருந்துதல்,

துரித உணவு என்ற கொழுப்பு உண வுகள்

அதிகமாக எண்ணெய் வறுவல் செய்த உணவுகள்

- இவை இதய நோய் தூண்டும் கரணிகள் ஆகும்!

அதிக உடலுழைப்பின்றி,  சதா அமர்ந்தே இருப்பது, ஓடி ஆடி, நட மாடாமல், ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்தே இருக்கும் நிலை இவை இதய நோய்க்கான அழைப்பு களாகக் கருதப்படுகின்றன.

அன்றாடம் எளிய உடற்பயிற்சி களைச் செய்து, கூடுதலாக சதை விழா மல் கவனஞ்செலுத்தல் போன்றவை களால் நாம் இந்நோயைத் தடுத்தாட் கொள்ள முடியும்.

குடும்பத்தின் வரலாற்றில் பாரம்பரிய மாரடைப்பு, இதயநோய் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக இருப்பின்,  இப்போது அதுபற்றி ஆய்வு செய்து புள்ளி விவரங்களைச் சேகரிப்பதும், அது சரி என்று தெரிந்தால், குடும்ப உறுப்பினர் கள் உள்பட பலருக்கும் சிகிச்சை அளிப் பதும்கூட மிக முக்கிய தேவையாகும். (Genetics to aid at risk Cardiac Patients)

மேலே காட்டிய அறிகுறிகள் மட்டு மல்லாது. வெளிப்படையாக அதன் தாக்குதல் ஏற்படும்போது,

பின்னால் கழுத்து வலி (Back Neck Pain)

தாடை  (Jaw Pain)

திடீரென்று வியர்த்துக் கொட்டுதல் (Suddenly Sweating)

வயிற்றுப் போக்கு மலங்கழித்து - மயக்கமும்!

இடது கை வலி பரவுதல்

இவைகள் உடனடி அறிகுறிகளாகும்!

சில சம்பவங்கள் - Silent Attack - - மவுனத் தாக்குதல்களாக நிகழ்வதும் உண்டு. வியர்க்காதுகூட இந்த நோய் தாக்குதல் நடைபெறுவதும் உண்டு.

இப்படி உணர்ந்தால், உடனடியாக உங்களிடத்தில் உடல்நலத்திற்கு ஊறு செய்யா ஒரு ஆஸ்பிரின் மாத்திரையை விழுங்கினால், அது ரத்த ஓட்டத்தை மென்மையாக்கி (Blood thinner)
ஒரு உடனடி நிவாரணம் தரும். உடனே நடக்காமல், மருத்துவமனைக்குச் செல் லுதல் அவசரம், அவசியம் என்று மருத் துவ நண்பர்கள் வழிகாட்டுகிறார்கள்!

முன்பு வயதானால் மாரடைப்பு, இதய நோய் வரும் என்ற நிலை இருந்தது; இப்போது 25, 30 வயது இளைஞர்களைக்கூட இந்நோய் தாக்கி மரணமடையச் செய்வது வேதனைக் கும், துயரத்திற்கும் உரிய செய்தியாகும்!

பயன் பெறுக!

வேறு அறிகுறிகளாக இருப்பினும் அலட்சியப்படுத்தத் தேவையில்லை.

-விடுதலை நாளேடு, 29.9.17

செவ்வாய், 10 அக்டோபர், 2017

கற்க - நிற்க - இதற்குத் தக!
சீரிய பகுத்தறிவாளர் மானமிகு க. ஜெயகிருட்டிணன் ‘வளர்தொழில்’ என்ற வணிகச் செய்தி ஏட்டினை மிகச் சிறப்பாக நடத்தி வருவதோடு, தமிழில் முதன்முதலாக 'தமிழ் கம்ப்யூட்டர்’ மாதமிருமுறை இதழினையும்

23 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்துகிறார்!

பல ஏடுகள் - உருப்படியான எதையும் தராமல், வெறும் அக்கப்போர், அல்லது சினிமா ‘கிசு கிசு’ குப்பைகளையே வைத்து செழிப்பான வியாபாரம் செய்து வருகிறபோது, இதுபோன்ற முயற்சிகள் பாராட்டி வரவேற்கத் தகுந்தவையாகும்.

2017, அக்டோபர் - 1-15 இதழில் உள்ள இளையருக்குப் பயனுள்ள ஒரு கட்டுரை - சமூக வலைதளங்களில் தங்கள் நேரத்தை வீணாக்கிடும் கொடுமையிலிருந்து அவர்களைக் காப்பாற்றிட, பயனுறு வகையில், நமது கால முன்னுரிமை, அளவீடுகள், ஒதுக்கல்கள் பற்றிய தெளிவுரையாக, வழிகாட்டும் நெறியாக உள்ளது!

அதனை அப்படியே தருகிறோம் கற்க - நிற்க - இதற்குத்தக!

சமூக வலைத் தளங்களை தேவைக்கேற்ப பயன்படுத்துவது எப்படி?

சமூகவலைத் தளங்கள் இன்றைக்கு மக்களின் பலவிதமான கருத்துகளை தெரிந்து கொள்ளும் பெரிய களமாக இருக்கின்றன. ஓரளவுக்கு நம்மைப் போலவே சிந்திப்பவர்கள், மாறுபட்டு சிந்திப்பவர்கள், தங்கள் சிந்தனைகளை மற்றவர்களை  காயப்படுத்தாமல் மென்மையாக வெளிப்படுத்துபவர்கள், தங்கள் கருத்துக்கு மாறுபடுபவர்கள் எல்லோரையும்  தங்கள் தனிப்பட்ட எதிரிகள் போல  பாவித்து கடுமையான சொற்களைப் பயன்படுத்துபவர்கள், பெண்களை மதித்து பதிவு இடுபவர்கள், தங்களுக்கு பிடிக்காத கருத்துகளை சொல்கிறார்கள் என்பதற்காகவே அவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டுபவர்கள் என்று முகநூல் நமக்கு அத்தனை பேரையும் அடை யாளம் காட்டுகிறது.

அவ்வப்போது சந்திக்க முடியாத நண்பர்களை முகநூல் வாயிலாக சந்தித்து அவர்கள் பதிவிடும் கருத்துகளை அறிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் கருத்தில் உடன்பாடு இருந்தால் லைக் பட்டனை அழுத்தி நம் ஆதரவைத் தெரிவிக்க முடிகிறது. அந்த கருத்துகளில் மாறுபடுகிறோம் என்றால் நம் நிலைப் பாட்டை தெரிவிக்க முடிகிறது.

பிறந்த நாள் வாழ்த்து கூற முடிகிறது. நம் நட்பு வட்டங்களில் உள்ளவர்களுக்கு குழந்தை பிறந்தால், அந்த மழலையின் படத்துடன் பதிவிடுகிறார்கள். நாம் பார்த்து மகிழ முடிகிறது.

சிலர் தங்கள் வாழ்வியல் அனுபவத்தை  பகிர்ந்து கொள்கிறார்கள். "தீக்கதிர்" பொறுப்பாசிரியர் திரு. அ. குமரேசன், தன்  அரசியல், சமுதாயக் கருத்துகளை நாகரிகமாக உறுதிபடத் தெரிவிப்பதில் பலரின் பாராட்டுகளையும் பெற்றவர். அவர் தன் பேரனைப் பார்க்க எப்படி விரைகிறார் என்பதை அவர் எழுத்துகளில் படிக்கும்  போது அவர் அடையும் மகிழ்ச்சியை நாமும் அடைய முடிகிறது. சில பதிவுகளில் கணவன்-மனைவி உறவுகளை சிறப்பாக கையாளும் வழி முறைகள் வெளிப்படுகின்றன. குழந்தைகள் வளர்ப்பு தொடர்பான செய்திகள் கிடைக்கின்றன.

ஒரு நிகழ்வு அல்லது கருத்து தொடர்பாக பல கட்சிகளை சார்ந்தவர்களும் எப்படி மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள்  என்பதை  இருந்த   இடத்தில்   இருந்தே அறிய முடிகிறது. நம் கருத்து களையும் நூற்றுக்கணக்கான பேர்களுக்குத் தெரிவிக்க முடிகிறது. ஒரு பொதுக்கூட்டம் அல்லது கருத்தரங்கம் நடத்தி தெரிவிக்க வேண்டியதை எந்த செலவும் இல்லாமல் நம்மால் தெரிவித்து விட முடிகிறது. நடை பெற இருக்கும் நிகழ்ச்சிகள் தொடர்பான அழைப் பிதழ்களை அனுப்ப, பெற முடிகிறது. இப்படி முகநூலால் கிடைக்கும் பயன்கள் பற்றி பட்டியல் இட்டுக் கொண்டே இருக்கலாம்.

அதைப் போலவே வாட்ஸ் அப் பயன்களும்!

மின்னஞ்சல் போல  இப்போது பலர் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகிறார்கள். ஒரு பொருளை வாங்கப் போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  அந்த பொருளை வாங்கலாமா என்று யாரிடமாவது அனுமதி வாங்க வேண்டி இருந்தால் உடனே செல்பேசியில் அந்த பொருளை ஒரு படம் எடுத்து வாட்ஸ் அப் வாயிலாக நொடிகளில் அனுப்பி அவரின் கருத்தை அறிந்து கொள்கிறார்கள். அவசரமாக படிக்க வேண்டி இருக்கும் ஆவணங்களை படம் எடுத்து உடனுக்கு உடன் அனுப்புகிறார்கள். சங்கங்கள் அமைப்பதைப்போல் குழுக்களை அமைத்துக் கொள்ள முடிகிறது. அவர்கள் தங்களுக்குள் செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தங்களுக்குப் பிடித்த செய்திகளை நகல் எடுத்து தங்கள் குழுவினருடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இப்படி கிடைக்கும் பயன்கள் குறித்த தெளிவான புரிதலோடு முகநூலை, வாட்ஸ் அப்பை பயன்படுத்து வதில்தான் நம் திறமை வெளிப்பட வேண்டும்.

முகநூலைப் பயன்படுத்துபவர்களில் சிலர், எப்படி சிகரெட் பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளானவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு சிகரெட்டைப் பற்ற வைப்பார்களோ அப்படி சிலர் முகநூலைத் திறக்கிறார்கள். சிலர் இந்த விஷயத்தில் செயின் ஸ்மோக்கர்கள் போல, மற்ற முதன்மையான பணிகளைக் கூட மறந்து விட்டு முகநூலில் மூழ்கிக் கிடப்பார்கள். இங்கேதான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நம் படிப்பு சார்ந்த, வேலை சார்ந்த, தொழில் சார்ந்த முதன்மையான பணிகளைக் காட்டிலும் சிறந்த பணி முகநூலைப் பார்ப்பது என்று யாராலும் சொல்ல முடியாது. திட்டமிட்டு தங்கள் கட்சி சார்ந்த மனப் போக்கை மக்களிடம் உருவாக்க வேண்டும் என்று அதற்கென சம்பளம் கொடுத்து ஆட்களை நியமித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டுமானால் இது முதன்மையான பணியாக இருக்கலாம். நம்மைப் போன்றவர்கள் முதன்மையான பணிகள் பட்டியலில் முகநூலை வைத்து இருக்கக் கூடாது. எனவே படிக்கும் நேரங்களில், அலுவலக நேரங்களில் முகநூல் நினைப்பே வரக்கூடாது. எப்போதாவது முதன்மையான பணிகள் இல்லாத நேரமாகப் பார்த்து முகநூலை திறக்கலாம். அதிக அளவாக ஒரு அரை மணி நேரம் செலவிட்டு விட்டு அதில் இருந்து மீண்டு விட வேண்டும்.

ஏதாவது ஒரு பதிவைப் போட்டு விட்டு நமக்கு எத்தனை லைக் வந்து இருக்கிறது என்பதைப் பார்ப்பது பலருக்கு ஒரு போதை போல ஆகி விடுகிறது. எந்த பணியைப் பார்த்துக் கொண்டு இருந்தாலும் இடை இடையே முகநூலைத் திறந்து யார் யாரெல்லாம் லைக் போட்டு இருக்கிறார்கள், எத்தனை லைக்குகள் வந்து இருக்கின்றன  என்பதைப் பார்ப்பதன் மூலம் தேவை யற்ற வகையில் பொன்னான நேரத்தை இழப்பார்கள். அற்ப மகிழ்ச்சி தரும் இந்த போதைக்கு நாம் ஆளாகக் கூடாது.

நம்முடைய இன்றியமையாத பணிகளை முடித்து விட்டு, மாலையில் அல்லது இரவில் சற்று ஓய்வாக இருக்கும்போது முகநூலைத் திறக்கலாம். ஒரு அரை மணி நேரம் அளவுக்கு உலவி விட்டு வெளியேறி விடலாம். அவ்வாறே வாட்ஸ் அப் செய்திகளையும் சற்று நேரம் பார்வை இடலாம். தொழில் சார்ந்த, பணி சார்ந்த தகவல் பரிமாற்றம் எனில் வாட்ஸ் அப்பை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

உளவியல் சார்ந்து சிந்திக்கும்போது இன்னொரு சிக்கலும்  நமக்கு புலப்படும். தேவையற்ற மன உளைச்சலைத் தரும் செய்திகள் நம் விழிகளில் பட்டு மன அமைதியைக் கெடுப்பதும் உண்டு.

மேலும் தேவையற்ற செய்திக் குவியல் நம் மூளைக்குள் இடம் பிடித்து மனச் சோர்வை அதிகரிப்பதையும் நம்மால் உணர முடியும். நமக்கு பயன்படக் கூடிய செய்திகள் எனில் எவ்வளவு வேண்டுமானாலும் மூளைக்குள் ஏற்றிக் கொள்ளலாம். நமக்கு சற்றும் பயன்படாத தக வல்களை தொடர்ந்து படித்துக் கொண்டே இருப்பதால் என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது? குப்பைகளைச் சேர்த்து வைப்பது போலத்தான் இருக்கும்.

முகநூலையும், வாட்ஸ் அப்பையும் நிச்சயமாக நம்மால் முழுவதும் புறக்கணித்து விட்டு இருக்க முடியாது. ஆனால் நமக்கு நேர இழப்பையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தாத அளவுக்கு அளவோடு, திறமையோடு  அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

- கி.வீரமணி

- விடுதலை நாளேடு,7.10.17