பக்கங்கள்

உணவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உணவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 அக்டோபர், 2021

உணவு - நெருப்பு - பெண்கள் : தெரிந்து கொள்ள வேண்டியவை!

 

நம் உணவு முறையில் உட்கொள்ளப்படும் உணவுகளை வைத்து, காய்கறி உணவு உண்ப வர்கள்  (Vegetarian),  இறைச்சி உணவு உண்ப வர்கள் (Non-Vegetarian) என்று பிரித்துக் கூறு கிறோம்.

நம் நாட்டில் 'சைவ உணவு', 'அசைவ உணவு' என்று குறிப்பிட்ட பிரிவினர் ஏற்றுக் கொண்ட - மதம், ஜாதி அடிப்படையிலான பெயர்களாக பின்னாளில் புழக்கத்தில் வந்துவிட்டது!

ராணுவத்தில் பணிபுரிவோருக்கு காய்கறி உணவு போதிய சத்தையும், உடல் பலத்தையும் தராது என்பதால் அவர்களுக்கு இறைச்சி உணவு களாகவே அவர்களது உணவுக் கூடங்களில் தரப்படும். அதனால் இறைச்சி உணவு விற்கும் உணவுச்சாலை - ஓட்டல்களுக்கு "மிலிட்டரி ஓட்டல்" என்று பெயர்ப் பலகைகளில் பாமர மக்களுக்கும் இந்த உணவுக் கடையைப்பற்றி புரிந்துகொள்ளும் வகையில் விளம்பரப்படுத்து கின்றனர் போலும்!

இந்த இரு வகை உணவு முறை மனித குல வரலாற்றில் எப்படி உருவாகியது என்பதை "பெண்களும் சமூகமும்" என்ற (திராவிடர் கழகம் 2018இல் வெளியிட்ட) ஈழத்து ஆய்வறிஞர் ந.சி. கந்தையா அவர்கள் எழுதிய நூலில் எளிமையாக தெளிவுற விளக்குகிறார்!

"கொரில்லாக்களிடையே காணப்பட்ட இவ் வகை வாழ்க்கையை நாம் இன்றும் தாழ்நிலையில் உள்ள மக்களிடையேயும் காணலாம்.

மக்களின் உடல் அமைப்பும், பற்களும் தாவரம், ஊன் என்று இரு வகை உணவுகளையும் கொள்வதற்கேற்றவை (இதுபற்றி சிலர் காய்கறி - தாவர உணவுகளைச் சாப்பிடும் வகையில்தான் நம் பற்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளை  காய்கறி உணவைப் 'பிரபலப்படுத்த' இப்படி ஒரு தவறான கருத்தைப் பரப்புகின்றனர்." - ஆ-ர்).

ஆகவே முற்காலத்தில் உணவு தேடும் வேலைகளில் ஆண் - பெண் என்று இருபாலி னரிடையே பிரிவு உண்டாயிருத்தல் வேண்டும்.

ஆண்கள் வேட்டையாடி, ஊன் உண்ணவும், பெண்கள், சிறுவர்கள், வயது முதிர்ந்தவர், வேட் டையாட மாட்டாதவர்கள் என்போர், பழங்கள், கிழங்குகள் போன்றவற்றையும் தேடினார்கள்.

ஆடவர் தாம் வேட்டையாடிய உணவை தாமே வேட்டையாடிய இடத்தில் பச்சையாக உண்பார்கள்! உறைவிடத்துக்குச் சென்று, பெண்கள் சேகரித்த தாவர உணவின் பங்கையும் பெற்றார்கள். இறைச்சியை பக்குவம் செய்வ தெப்படி என்று அறியாத பழங்காலத்தில் ஊன் உணவு அதிகம் கிடைத்தமையால் ஆண்களும், பெண்களும் உணவுப் பொருள்களை மாற்றிக் கொண்டார்கள்!

இது ஆண் - பெண் என்ற இருபாலரும் ஒருவர்மீது ஒருவர் கொண்ட விருப்பினாலும், இரக்கம், தருமம் என்னும் உணர்ச்சிகளாலும் நடைபெற்றதாகலாம்!

ஆடவனுக்குத் தாவர உணவு வேண்டியிருந்தது. இதனை அவன் பெண்ணிடம் பெற் றான். இதனால் ஆடவருக்கும், மகளிருக்குமி டையில் ஒரு வகைத் தொடர்பு உண்டாயிற்று! இத்தொடர்பு பெண்ணுக்கு வாய்ப்புடையதாயிருந்தது.

மனிதன் நெருப்பை உண்டாக்க அறிந்து அது அணைந்து போகாதபடி காப்பாற்ற வேண்டிய போது இவ்வாய்ப்பு மேலும் பலமடைந்தது.

உறை பனிக்கால மனிதன் நெருப்பைக் குளிர் காயவும், அக்காலத்தில் நடமாடிய பெரிய காட்டு விலங்குகள் தம்மைத் தாக்குவதினின்று பிழைக் கவும், இறைச்சியைச் சுடவும் பயன்படுத்தினான்.

முற்காலத்தில் நெருப்பை அணையாதபடி பாதுகாத்தல் பெண்ணின் கடமையாக இருந்தது! வேட்டையாடச் செல்லும் ஆடவன் நெருப் பையும் உடன் கொண்டு செல்லுதல் ஆபத்தாயும், முடியாததாயும் இருந்தது.

பெண்கள் நெருப்பை ஓரிடத்தில் வைத்துக் காக்க வேண்டியிருந்தமையின் காரணமாக உறைவிடங்களை அடிக்கடி மாற்றுதல் முடியா திருந்தது.

முற்காலத்தில் ஆடவன் பெண்ணிடம் கொண்ட கவர்ச்சியினால் உறைவிடத்துக்குச் சென்றான். பிறகு இடையிடையே வந்து போனான்!

நெருப்பு அவர்களின் தோழமையை வலுவுள்ளதாக்கிய கதை எப்படி பார்த்தீர்களா!

முற்காலத்தில் குறிக்கப்பட்ட சில காலத் திலேயே ஆடவன் பெண்ணின் தோழமையுடை யவனாக இருந்தான். இப்பொழுது அவன் நெருப்பின் பொருட்டு அவளிடம் எப்பொழுதும் சென்றான். அவன் நெருப்பின் பொருட்டு அவளிடம் தங்கியிருந்தான். தான் வேட்டையாடிப் பெற்ற ஊன் உணவைச் சமைத்து உண்ணும் பொருட்டு உறைவிடத்துக்கு வந்தான்!

தான் செய்யும் வேலைக்காக உணவில் ஒரு பங்கைக் கேட்கக் கூடிய நிலையைப் பெண் அடைந்தாள். இது பெண்ணின் நிலையை சிறிது உயர்த்திற்று.

பழைய ரோமில் பரிசுத்த நெருப்பை அணையாமல் காப்பதற்கு கன்னிப் பெண்கள் நியமிக்கப்பட்டார்கள்!"

- இவ்வாறு அழகாக மனிதகுலம்  எப்படி பெண், நெருப்பு, உணவு முறையை அணுகி இதில் பிறகுதான் கடவுளும், மதங்களும் நுழைக்கப்பட்டன என்பதை இதன் மூலமே எவரும் புரிந்து கொள்ளலாம்.

வாழ்வியலில் மூடத்தனம் முளை விட்டுக் கிளம்பியது -  எப்படி புரிகிறதல்லவா?

திங்கள், 21 அக்டோபர், 2019

நொறுக்குத் தீனி தேவையே - ஆனால்...!

நமது  நல்வாழ்வுக்கான அறிவுரை கூறுவோர் பலரும் உணவு எடுத்துக் கொள்ளுவது குறிப் பிட்ட நேரத்தில் என்பதை ஒரு முக்கிய பழக்கமாக்கிக் கொள்ளுவது அவசியம் என்று அறிவுரை கூறுவார்கள்.

எனது (மறைந்த) நண்பர் புலவர் பேராசிரியர்

ந. இராமநாதன் கையில் குடையோடு திடலிலிருந்து மதிய உணவுக்குச் செல்லுகிறார் எனில் பகல் மணி 12 என்று பொருள்.

அதுபோலவே தலைமைப் பொறியாளராக இருந்து (நெடுஞ்சாலைத்துறையில்) ஓய்வு பெற்று அதன்பின் பெரியார் திடலில் மூதறிஞர் குழுவின் செயலாளராக நீண்ட  காலம் தொண்டாற்றி, நமக்குப் பெரிதும்  தோன்றாத் துணையாக இருந்த பேராசிரியர் அய்யாசாமி அவர்கள் சரியாக மணி 12.40க்குப் புறப்பட்டு, வீட்டில் சரியாக 1 மணிக்கெல்லாம் மதிய உணவு சாப்பிடுவார்.

அதிகாரிகளாக இருக்கும் பெருமக்களுக்கு அது எளிதாக அமையக் கூடும்; ஆனால் பொது வாழ்வில் இருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கு அது அவ்வளவு சாத்தியமாகாது; காரணம் பலரும் நம்மைச் சந்திக்க வரும்போது நம்மைப் போன்ற பொதுத் தொண்டர்கள் கடிகார முள் ளினைக் காட்டிவிட்டு கிளம்பிவிட முடிய தல்லவா? 'குடி செய்வார்க்கில்லை பருவம்'  - இல்லையா?

இந்த உணவு நேரங்களுக்கு இடையில் - காலைச் சிற்றுண்டி, பகல் உணவு, மாலைத் தேநீர், இரவு உணவு - இவைகளுக்கு இடையே சிறு தீனி கூடாது; அது உடலைப் பருக்க வைத்து, நோய்த் துன்பங்களுக்கு ஆட்படுத்துகிறது என்று கூறுகிறார்கள்.

ஆனால் அண்மைக் காலத்தில் இடை நேரங்களில் பசியுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை; சிறு தீனிகள்  - நொறுக்குத் தீனிகள் (Snacks) சாப்பிடுவது உடல் நலத்தைக் கெடுக்காது; மாறாக பாதுகாக்கவும், வளர்க் கவுமே செய்யும் என்ற கருத்தை வலியுறுத்தி பிரபல மாத ஏடான 'ரீடர்ஸ் டைஜெஸ்ட்'  (Reader's Digest) ஏட்டில் ஒரு கட்டுரையை அமெரிக்காவில் டாக்டர் சோம இளங்கோவன் - சரோஜா வாழ்விணையரின் இல்லத்தில் படித்தேன். சுவைத்தேன்.

'பேலியோ டையட்'  ('Paleo diet') என்றெல் லாம் - கார்ப்போ அய்ட்ரேட் என்ற மாவுச் சத்து தவிர்க்கும் உணவெல்லாம்கூட இப்போது பிரபலமாகி வருவதோடு, நமது தோழர்களில்கூட பலர் அதனைக் கடைப்பிடித்து, தங்களது எடையைக் குறைத்து நலமாக வாழுகிறார்கள்.

உணவுமுறை அவரவர்கள் உடல் நலம், வசதி வாய்ப்பு, எண்ணத் தெளிவு, துணிவினைப் பொறுத்தது. எனவே மருத்துவர்களைக் கேட்பது முக்கியம்தான் என்றாலும் உங்கள் உடலுக்கேற்றவாறு அவை ஏற்கிறதா மாற்றங்களை - ஆம் என்றால் சரி. இல்லை என்றால் உங்கள் முடிவு எப்படியோ அப்படி + மருத்துவ ஆலோசனை!

சிறு தீனி - நொறுக்குத் தீனி - நமது எடையைக் குறைக்கவும்கூட உதவுகிறது என்கிறார் கட்டுரையாளர் டான்யேனேக்.

உங்கள் உடலைக் கேளுங்கள் என்கிறார் பிரபல மருத்துவ நிபுணர் ராபர்ட் கிரஹாம் MD., MPH.

இந்த மருத்துவர் கூறுகிறார்.

மூன்று தடவை உணவும், இடைவேளைகளில் இரண்டு முறை நொறுக்குத் தீனிகளும் (Snacks) எடுத்துக் கொள்ளுவது உடல் நலத்தைப் பலப் படுத்தும் என்கிறார் இந்த மருத்துவ நிபுணர்.

பழைய சிறு தீனி களை, சிப்ஸ் (Chips), குக்கீஸ் (Cookies) என்ற கேக்குகள் வகை ரத்தச் சர்க்கரையை அவை கூட்டும் என்ப தால் அவற்றைத் தவிர்த்து விடுங்கள்.

Fibre - rich foods  என்ற நார்ச்சத்து கலந்த தீனி வகையறாக்கள் நமக்குப் பெரிதும் உடல் நலத்திற்குத் துணை நிற்கின்றன. இதில் புரதச்சத்து, மெக்னீஷியம், கால்சியம் போன்றவைகளும் கூட கிடைக் கின்றன. நல்ல கொலஸ்ட்ரால் (Good Cholesterol) இதனால் கூட வாய்ப்பு உண்டு. தயிர் நல்ல சத்துணவு; Greek Yogurt, Cheese  வகைகள்  மறதி நோயினைத் (Alzheimer's) தடுக்க உதவுகின்றன. புது வகை காய்கறிகள், அவகேடோ, அவித்த முட்டை, பிளாக் பெர்ரிஸ்,   பாதாம் கொட்டைகள் வால்நட்ஸ் போன்ற வகையறாக்களை இடைத் தீனியாகப் பயன் படுத்துங்கள். ஆனால் ஒன்றை மறந்துவிடா தீர்கள்; அதுவும் அளவோடுதான் இருக்க வேண்டும்!  அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதானே!

நடு இரவில், பிரிட்ஜ்ஜைத் திறந்து சிறு தீனிகளைத் தேடி உண்ணும் பழக்கம் இருந்தால் அதை மட்டும் நிறுத்திக் கொள்ளுங்கள். கூடுமான வரை இரவில் எழுந்து சிறுநீர் கழிக்க கழிப்பறை சென்று திரும்புகையில், பிரிட்ஜ்  - குளிர் சாதனப் பெட்டி பக்கம் திரும்பாமல், தண்ணீர் - வெந்நீரை - படுக்கை பக்கத்தில் வைத்துக் கொண்டு குடித்து விட்டு மீண்டும் படுத்து உறங்கி எழுந்திருக்கும்போது உடல் லேசாக இருக்கும். அது மலங் கழிவதற்கு துணை நிற்கும்.

மலச்சிக்கல் இல்லையானால் மனச் சிக்கலும் இல்லைதானே! என்ன...?!