பக்கங்கள்

சனி, 26 அக்டோபர், 2019

சேர்த்திடும் செல்வமும் 6 விதிமுறைகளும்! (2)

3. மூன்றாவது விதி:

செல்வத்தைச் சேர்ப்பதுடன் தவிர்க்க முடியாத நிலையும், தேவையும் ஏற்பட்டால் ஒழிய, கடன் வாங்கவே கூடாது; கடன் உயிருக்கு உயிராக நாம் பழகி, நேசித்த நண்பர்களைக்கூட, பகைவர்களாக் கும் வாய்ப்பினை - நாம் விரும்பாவிட்டாலும் நம்மீது திணிக்கக் கூடும்.

கடன் வாங்குகிறவர்கள் வட்டிக் கணக்கைப் பற்றியோ, அதனால் தனது உழைப்பு, வீணே விழலுக்கு இறைத்த நீராகிப் போவதுபற்றியோ சிந்திப்பதே இல்லை!

ஒரு அனுபவத்தில் கனிந்த முதியவர் ஒருவர் ஒரு அரிய செய்தியைச் சொன்னார்: "நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகத்தவர்கள் முன்பு, பர்மாவில், மலேயாவில் பலர் வட்டித் தொழில் நடத்தி வந்தனர்.

(நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சிவாழ் பார்ப்பனர்களில் பலரும் வட்டித் தொழில் செய்து வந்தனர்) அவர்களது வட்டி விகிதம் பெரும் அளவு நியாயமாகவே இருக்கும்; என்றாலும் கடன் கேட்க வருபவரிடம் என்னங்க பணம் கேக்கிறீங்க வட்டி கட்ட முடியுமா - வட்டி சற்று தூக்கலா இருக்குமே என்று கூறும்போது, கடன் வாங்க வந்தவர், பரவாயில்லை. எத்தனை சதவிகிதம் என்றாலும் தாருங்கள் என்று தலை யாட்டுவார். அவரது திருப்பிக் கொடுக்கும் எண்ணம் சந்தேகத்திற்குரியது என்று மனதில் புள்ளியை வைத்து பிறகு பார்க்கலாம் என்று அனுப்பி விடுவார்களாம்!"

ஆனால், அந்தப் படிக்கு இல்லாமல் மற்றொரு கடன் வாங்க வருவோர், "அய்யா வட்டியை கொஞ்சம் குறைத்து எனக்கு சலுகை தாருங்கள் அய்யா. நான் புள்ளை குட்டிக்காரன், நாணயமாக திருப்பிக் கட்ட வேண்டும் அல்லவா? அதற்காகத் தான் உங்களுடன் வாதாடும் நிலை உள்ளது. தவறாக எண்ண வேண்டாம்" என்று கெஞ்சுவாராம்!

பின் நபர் நல்லெண்ணத்துடன் வாங்கிய கடனைத் திருப்பித் தருவது நிச்சயம் என்று மனதில் மதிப்பீடு செய்து கொண்டு தவறாது உடனே கடன் தொகையைத் தந்து வட்டிச் சலுகையும் தருவார்களாம்!

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. "ஏழைகள் வட்டியைத் தருகிறார்கள். வட்டியை சொந்தமாக்கி கொள்ளுவது பெரும் பணக் காரர்களே!" என்பதே அப்பழமொழி! (பணக்காரர் களுக்கு அது நிதியாகிறது)

தந்தை பெரியாரின் சிக்கனம் உலகறிந்த ஒன்றுதானே!

அவர் யாரிடமும் கடன் வாங்கவேமாட்டார்; யாருக்கும் கடன் கொடுக்கவும் மாட்டார் கடன் கேட்டு வருவோருக்கு ஒரு சிறு தொகையை 'நன்கொடை'யாகவே தந்து விட்டு, கடன் தர இயலாது என்று கண்டிப்புடனும், கறார் குரலிலும் கூறி விடுவார்!

அந்தக் கால ஈரோட்டில் மண்டி  வியாபாரத்தின் போது இவரது தமையனார் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்கள் மூவாயிரம் ரூபாயை அவர் தந்தைக்குத் தெரியாமல் வாங்கியதை அறிந்து கடனைத் திருப்பித் தர கடன் கொடுத்தவரையும் இவர் தந்தை முன்னிலையில் தனது தமையனாரையும் அமர வைத்து, 3000 ரூபாயை ஒரு ரூபாய் நாணயமாய் வரிசையாக நீளமாக அடுக்கி வைத்து எவ்வளவு கடன் வாங்கி "ஊதாரிச் செலவு" செய் துள்ளார் என்று காட்சிப்படுத்தியதாக அய்யாவே எங்களிடம் கூறியுள்ளார்!

எனவே கடன் வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும். அதிலும் இப்போது வட்டி, தொடர் வட்டி, மீட்டர் வட்டி என்றெல்லாம் வந்து விட்ட நிலையில் அது கடன் வாங்கியவரின் உயிரையே பலி வாங்கி விடுகிறதே!

4. நான்காவது விதி:

பணத்தைப் பெருக்க வேண்டும் என்று பேராசையில் இறங்கி - பல மடங்கு பணம் வளரும் என நம்பி, Speculation கூட இறங்கி சூதாட்டம் போன்ற யூக வியாபாரத்திலும் ஈடுபடுகின்றனர். அதைத் தவிர்த்து, உருப்படியான நல்ல வழி முறைகளை ஆராய்ந்து சிறந்த முறையில் முதலீடு செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

'பேராசை பெரு நஷ்டம்' என்பதை மறந்து விடாமல் இருப்பது அவசியம் ஆகும்.

(மீண்டும் திங்களில்....)

- விடுதலை நாளேடு 26 10 19

வெள்ளி, 25 அக்டோபர், 2019

சேர்த்திடும் செல்வமும் 6 விதிமுறைகளும்! (1)

மனித வாழ்வுக்கும், வளத்திற்கும் செல்வம் (ஓரளவு) தேவையே; ஆனால் செல்வத்தை மாய்ந்து, மாய்ந்து அலுப்பு சலிப்பின்றி, நேர் வழியில் மட்டுமல்லாது; குறுக்கு வழிகளிலும், கோணல் புத்தியைத் துணைக் கொண்டும் அளவுக்கு மீறி செல்வம் சேர்த்திடுவோரின் இறுதிக் கால வாழ்வு எப்படி துன்பக் கடலில் தத் தளிக்கும் துயர்தரு வாழ்வாக உள்ளது என்பதை அன்றாட வாழ்வில் ஆயிரம் பேர்களின் அவதிக் கதைகளைக் கேட்டும், பார்த்தும் தானே வருகிறோம்! என்றாலும் பலரும் படிப்பினை பெறுவதில்லை.

"குறைவற்ற செல்வம்" எது தெரியுமா? வங்கிகளில் உள்ள சேமிப்பு  - டெப்பாசிட் அல்ல. 'மறை - பொருள்' என்ற புது சொற்றொடருக்கு வருமான வரித்துறை மூலம் பதவுரை, பொழிப் புரை எழுதுவதல்ல நண்பர்களே!

நீண்ட காலம் முன்பே நமக்கு எளிதில் கிடைத்த ஒரு மூதுரை.

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" எவ்வளவு எளிமையான வாக்கியம் பார்த்தீர்களா?

நல்ல உடல் நலம் தான் குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து கொள்ளாத பல பெரிய மனிதர்கள், அரசியல் தலைவர்கள், மேதைகள் எல்லாம் அதற்கான விலையை - விளைவாகக் கொடுத்துக் கொண்டு இருப்பதை நாம் கண் கூடாகப் பார்க்கத்தானே செய்கிறோம்.

செல்வத்தை சம்பாதிப்பதில் தவறு இல்லை. பணம் - செல்வம் இல்லாமல் 'வாழ்வில்லை' இன்றைய சமூகத்தில்...! புரிந்துள்ளோம் என்றாலும் ஓடிவரும் காட்டாற்று ஆசைகளை ஒழுங்குபடுத்தி அணை கட்டி, அதில் நீரைத் தேக்கி, புனல் மூலம் பசுமை, அனல் மூலம் மின்சாரம் என்றுகூட சமூகத்தை வாழ்விக்கலாம் அல்லவா?

அதுபற்றி ஏன் பெரும்பாலான செல்வத்தை வழிபடும் சிந்தனையற்ற சிறுமதியாளர்கள் நினைப்பதில்லை. காட்டாறு வெள்ளம் காட்சியாக கரையிலிருந்து பார்க்கும்போது களிப்புதரும் கவின்மிகு காட்சிதான். அட்டியில்லை! ஆனால் பயன் ஏதுமின்றிக் கடலில் கலக்கும் முன், மக்களை வெள்ளத்தின் மூலம் அழிவையும் ஏற்படுத்தி பாடத்தை எடுக்கிறதே - அதுபோலத்தான் செல்வத் தேடிகள் ஏனோ புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்!

செல்வம் நமது பணியாளராக இருக்கும்வரை அதன்பயன் விழுமியதுதான்! ஆனால் அது நமக்கு  - மனிதர்களுக்கு - எஜமானன்  - "முதலாளி" ஆகும் போது தான் ஆபத்துக்கு அச்சாரம் பெற்று விட்டோம் என்ற நிலை உருவாகிறது!

செல்வம் சேர்க்கப்படுவதற்கும், அதனைத் துய்த்து மகிழுவதற்கும் அடிப்படையான ஆறு (6) விதிகளைக் கடைப்பிடித்தால் நேரிய வழியை விட்டு விலகாமல் என்றும் மகிழ்ச்சி குன்றா மக்களாகவே நாம் வாழ முடியும்!

1. முதல்விதி:

சம்பாதிப்பதில் ஒரு பகுதியை சேமிப்புக்காக ஒதுக்கி விடுங்கள்.

வருமானத்தில் 10 விழுக்காட்டையாவது குறைந்த பட்சம் மிச்சப்படுத்தி, சேமிப்பது அவசிய, அவசரமாகும். நாம் எதிர்பாராத திடீர்ச் செலவுகள் வரலாம் அன்றோ! அப்போது எவரிடமாவது போய் கையை நீட்டுவதா? தேவையில்லையே!

2. இரண்டாம் விதி:

சேமித்ததை சரியான வகையில் பாதுகாப்புடன் அது பெருகும் அளவுக்கு முதலீடு (Invest) செய்தல் மிகவும் முக்கியம். சேமிப்பு நியாயமாகப் பெருக வேண்டும். உடல் முழுவதும் பலமானால் அது வளர்ச்சி! குறிப்பிட்ட ஒரு பகுதி உடல் மட்டும் திடீர் என வளர்ந்தால் அதற்குப் பெயர் வளர்ச்சி அல்ல; வீக்கம். நோயின் அறிகுறி என்றே பொருள்! சேமிப்பதில் 'திடீர் பெருக்கம்' என்ற அதிக வட்டி, என்றெல்லாம் வரும் பெரிய விளம்பரத்தைக் கண்டு, ஓய்வு பெற்ற பெரிய அதிகாரிகளாக இருந்தவர்கள்கூட பேராசை யினால் கைப் பொருளை இழந்து, "டெப்பாசிட் இழந்தவர்கள்" சங்கத்தில் உறுப்பினர்களாகி, இழந்த பணத்திற்கு வட்டி கட்டுவதுபோல அல்ல, கூடுதலாகவும் செலவு செய்த மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளது! எனவே, சரியான வகையில் முதலீடுகள் (Invest) செய்தல் மிகவும் அவசியம். இதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டாக வேண்டும்.

(மற்றவை நாளை)

- விடுதலை நாளேடு 25 10 19

திங்கள், 21 அக்டோபர், 2019

நொறுக்குத் தீனி தேவையே - ஆனால்...!

நமது  நல்வாழ்வுக்கான அறிவுரை கூறுவோர் பலரும் உணவு எடுத்துக் கொள்ளுவது குறிப் பிட்ட நேரத்தில் என்பதை ஒரு முக்கிய பழக்கமாக்கிக் கொள்ளுவது அவசியம் என்று அறிவுரை கூறுவார்கள்.

எனது (மறைந்த) நண்பர் புலவர் பேராசிரியர்

ந. இராமநாதன் கையில் குடையோடு திடலிலிருந்து மதிய உணவுக்குச் செல்லுகிறார் எனில் பகல் மணி 12 என்று பொருள்.

அதுபோலவே தலைமைப் பொறியாளராக இருந்து (நெடுஞ்சாலைத்துறையில்) ஓய்வு பெற்று அதன்பின் பெரியார் திடலில் மூதறிஞர் குழுவின் செயலாளராக நீண்ட  காலம் தொண்டாற்றி, நமக்குப் பெரிதும்  தோன்றாத் துணையாக இருந்த பேராசிரியர் அய்யாசாமி அவர்கள் சரியாக மணி 12.40க்குப் புறப்பட்டு, வீட்டில் சரியாக 1 மணிக்கெல்லாம் மதிய உணவு சாப்பிடுவார்.

அதிகாரிகளாக இருக்கும் பெருமக்களுக்கு அது எளிதாக அமையக் கூடும்; ஆனால் பொது வாழ்வில் இருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கு அது அவ்வளவு சாத்தியமாகாது; காரணம் பலரும் நம்மைச் சந்திக்க வரும்போது நம்மைப் போன்ற பொதுத் தொண்டர்கள் கடிகார முள் ளினைக் காட்டிவிட்டு கிளம்பிவிட முடிய தல்லவா? 'குடி செய்வார்க்கில்லை பருவம்'  - இல்லையா?

இந்த உணவு நேரங்களுக்கு இடையில் - காலைச் சிற்றுண்டி, பகல் உணவு, மாலைத் தேநீர், இரவு உணவு - இவைகளுக்கு இடையே சிறு தீனி கூடாது; அது உடலைப் பருக்க வைத்து, நோய்த் துன்பங்களுக்கு ஆட்படுத்துகிறது என்று கூறுகிறார்கள்.

ஆனால் அண்மைக் காலத்தில் இடை நேரங்களில் பசியுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை; சிறு தீனிகள்  - நொறுக்குத் தீனிகள் (Snacks) சாப்பிடுவது உடல் நலத்தைக் கெடுக்காது; மாறாக பாதுகாக்கவும், வளர்க் கவுமே செய்யும் என்ற கருத்தை வலியுறுத்தி பிரபல மாத ஏடான 'ரீடர்ஸ் டைஜெஸ்ட்'  (Reader's Digest) ஏட்டில் ஒரு கட்டுரையை அமெரிக்காவில் டாக்டர் சோம இளங்கோவன் - சரோஜா வாழ்விணையரின் இல்லத்தில் படித்தேன். சுவைத்தேன்.

'பேலியோ டையட்'  ('Paleo diet') என்றெல் லாம் - கார்ப்போ அய்ட்ரேட் என்ற மாவுச் சத்து தவிர்க்கும் உணவெல்லாம்கூட இப்போது பிரபலமாகி வருவதோடு, நமது தோழர்களில்கூட பலர் அதனைக் கடைப்பிடித்து, தங்களது எடையைக் குறைத்து நலமாக வாழுகிறார்கள்.

உணவுமுறை அவரவர்கள் உடல் நலம், வசதி வாய்ப்பு, எண்ணத் தெளிவு, துணிவினைப் பொறுத்தது. எனவே மருத்துவர்களைக் கேட்பது முக்கியம்தான் என்றாலும் உங்கள் உடலுக்கேற்றவாறு அவை ஏற்கிறதா மாற்றங்களை - ஆம் என்றால் சரி. இல்லை என்றால் உங்கள் முடிவு எப்படியோ அப்படி + மருத்துவ ஆலோசனை!

சிறு தீனி - நொறுக்குத் தீனி - நமது எடையைக் குறைக்கவும்கூட உதவுகிறது என்கிறார் கட்டுரையாளர் டான்யேனேக்.

உங்கள் உடலைக் கேளுங்கள் என்கிறார் பிரபல மருத்துவ நிபுணர் ராபர்ட் கிரஹாம் MD., MPH.

இந்த மருத்துவர் கூறுகிறார்.

மூன்று தடவை உணவும், இடைவேளைகளில் இரண்டு முறை நொறுக்குத் தீனிகளும் (Snacks) எடுத்துக் கொள்ளுவது உடல் நலத்தைப் பலப் படுத்தும் என்கிறார் இந்த மருத்துவ நிபுணர்.

பழைய சிறு தீனி களை, சிப்ஸ் (Chips), குக்கீஸ் (Cookies) என்ற கேக்குகள் வகை ரத்தச் சர்க்கரையை அவை கூட்டும் என்ப தால் அவற்றைத் தவிர்த்து விடுங்கள்.

Fibre - rich foods  என்ற நார்ச்சத்து கலந்த தீனி வகையறாக்கள் நமக்குப் பெரிதும் உடல் நலத்திற்குத் துணை நிற்கின்றன. இதில் புரதச்சத்து, மெக்னீஷியம், கால்சியம் போன்றவைகளும் கூட கிடைக் கின்றன. நல்ல கொலஸ்ட்ரால் (Good Cholesterol) இதனால் கூட வாய்ப்பு உண்டு. தயிர் நல்ல சத்துணவு; Greek Yogurt, Cheese  வகைகள்  மறதி நோயினைத் (Alzheimer's) தடுக்க உதவுகின்றன. புது வகை காய்கறிகள், அவகேடோ, அவித்த முட்டை, பிளாக் பெர்ரிஸ்,   பாதாம் கொட்டைகள் வால்நட்ஸ் போன்ற வகையறாக்களை இடைத் தீனியாகப் பயன் படுத்துங்கள். ஆனால் ஒன்றை மறந்துவிடா தீர்கள்; அதுவும் அளவோடுதான் இருக்க வேண்டும்!  அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதானே!

நடு இரவில், பிரிட்ஜ்ஜைத் திறந்து சிறு தீனிகளைத் தேடி உண்ணும் பழக்கம் இருந்தால் அதை மட்டும் நிறுத்திக் கொள்ளுங்கள். கூடுமான வரை இரவில் எழுந்து சிறுநீர் கழிக்க கழிப்பறை சென்று திரும்புகையில், பிரிட்ஜ்  - குளிர் சாதனப் பெட்டி பக்கம் திரும்பாமல், தண்ணீர் - வெந்நீரை - படுக்கை பக்கத்தில் வைத்துக் கொண்டு குடித்து விட்டு மீண்டும் படுத்து உறங்கி எழுந்திருக்கும்போது உடல் லேசாக இருக்கும். அது மலங் கழிவதற்கு துணை நிற்கும்.

மலச்சிக்கல் இல்லையானால் மனச் சிக்கலும் இல்லைதானே! என்ன...?!