மனித வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெரிதும் தேவை - கடும் உழைப்பும், புத்திக் கூர்மையோடு கூடிய நுண்ணறிவு அணுகுமுறையாகும்!
நாம் நமது தவறுகளிலிருந்து தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவசியமல்ல; நம்முடன் இருப்பவர்கள், நல்ல நண்பர்கள் அவர்களது தவறுகளும் கூட நமக்குச் சரியான பாடங்கள் - எச்சரிக்கை மணிதான்!
வெறும் பாட திட்டங்களைப் புரட்டுவது மட்டும் 'கற்பதா'காது; உலகின் மனிதகுலச் செயல்களின் ஒவ்வொரு துகள்களும் நமக்கு நல்லாசான்களாக இருந்து, இப்படித் தவறு செய்தவர்கள் இறுதியில் எப்படி ஆனார்கள் பார்த்தீர்களா? என்று சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பு களும் ஏராளம் உண்டே!
அண்மையில் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தபோது பிரபல புத்தகக் கடைகளில் தேடிப் பார்த்து வாங்கிய, ஒரு அற்புதமான அறிவுக் கருத்தை அழகாக நமக்குச் சொல்லிக் கொடுக்கும் ஒரு நூல் Ryan Holiday என்ற நிர்வாகத்துறை நிபுணர் ஒருவர் எழுதிய 'Ego is the Enemy' என்ற புத்தகம்.
நோயாளிகள் டாக்டரிடம் சொல் லும்போது அவர் எழுதிக் கொடுக் கும் மருந்துச் சீட்டு (Prescription) போன்றதே 226 பக்கங்கள் கொண்ட அந்த வாழ்வியல் நூல் (ஆங்கி லத்தில்).
Humility - தன்னடக்கம் தான் இந்நூலில் அவர் தந்துள்ள மாமருந்து! இதனை கடைகளில் தேடி வாங்கவே முடியாது! செலவழிக்காமல் நம்முள் தேடினால், உணர்ந்தால் உடனே இமை மூடித் திறப்பதற்கு முன்னே மருந்து கிடைக்கக்கூடியது தான் - அதற்கு நாம் மனம் வைத்தால் மட்டுமே கிட்டும்.
அடக்கம் என்றும் வாழ வைக்கும்; மனிதர்களை வளர வைக்கும்.
உரையாடலில்கூட மிகப் பலர், அவர்களது பெருமைகளையே தம்பட்டம் அடித்து, மற்றவர்களை வெறும் 'கேட்பாளர்களாக்கி' சலிப்புடன் உட்கார வைத்து விடும் காட்சி சர்வ சாதாரணம்தானே!
மேடைப் பேச்சுகளிலும் சரி, தனி உரையாடல்களிலும் சரி இந்த 'நான்' - இத்தகைய பேர்வழிகளிடம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி திக்குமுக்காடிடும் சொல்லாகவே அவர்களால் கையாளப்பட்டு அவர்களே அச்சிறைக் குள் தங்களை கைதிகளாக வைத்து பூட்டிக் கொள் கின்றனர்.
என்னே கொடுமை!, என்னே பரிதாபம்!
இந்த புத்தகத்தில் ரயான் ஹாலிடே அவர்கள் 'நம்முடைய ஆற்றல்கள், அறிவுடைமை எல்லாவற் றையும் தூக்கி விழுங்கிடும் அபாயம் மிக்க எதிரி, நம் வெற்றிக்கும் தொடர் வளர்ச்சிக்கும் மிகப் பெரிய ஆபத்தான எதிரி இந்த 'தன்முனைப்பு' (EGO) தான்!' என்று குறிப்பிடுகிறார்.
இந்த மிருகம் நம்முள் அதிவேகமாக எழுந்து ஆட்டம் போடும்; பெரிய அறிவாளிகள், கல்வியாளர்கள், சாதனை சரித்திரத்திற்குச் சொந்தக்காரர்கள் எல்லோரை யும்விட வீழ்த்திடும் விபரீத மிருகம் ஆகும்; இது நம்முள் அடக்க முடியாமல் கட்டவிழ்த்து விடப்பட்டு விட்டால், நமது தோல்விகளும், நட்டங்களும், பின்னடைவுகளும் வரிசையாக வந்து நின்று நம்மைக் கொன்று குழி தோண்டிப் புதைத்து விடும்!
இயலாதவர்களாக இருந்தால்கூட தவறில்லை; இமய உச்சிக்கே சென்று விட்டதாகச் செருக்குக் கொள்ளும் தன் முனைப்பு என்ற உள் எதிரி எப்போதும் நம்மை அணுகாமல் ஓட ஓட விரட்டுங்கள்; பிறகு தானே நீங்கள் உயருவீர்கள்! உன்னதத்தின் ஊற்று என்றும் குறையாமல் நமக்கு வெற்றியைத் தந்து கொண்டே இருக்கும்!
இந்தப் புத்தகம் ஒரு மாமருந்து, படித்து முன்னேறுங்கள்!
- விடுதலை நாளேடு, 11.5.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக